துணைக்கால் தன்மை கொண்ட கட்டுரைகள்

vijaya cover copyதமிழ் எழுத்துகளில் துணைக்காலுக்கென தனித்த மரியாதை இருப்பதில்லை. அவ்வெழுத்து இன்னொரு எழுத்தைச் சார்ந்தது. ஆனால் அது இல்லாமல் போகுமானால் மொழியைக் குறில் நெடிலுடன் எழுதுவது சாத்தியமே இல்லாமல் தவிக்கும். ஒருவகையில் நான் எழுதியுள்ள கட்டுரைகள் அணைத்தும் துணைக்கால் தன்மை கொண்டவைதான். இத்தலைப்புகளைக் குறித்து அறிமுகமும் புரிதலும் இல்லாமல் அது தொடர்பான அனைத்து துறைகளும் இயங்கும். ஆனால் முழுமை அடையாது.

இணையத்தளமும் பல ஆயிரம் புத்தகங்களும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பேசிக் கொண்டிருக்கும் இத்தலைப்புகள் குறித்து தமிழில் எழுதுவதற்கான தேவை இருப்பதை நூலகத்தில் நான் சந்தித்த ஆய்வாளர்கள், பதிப்பகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள்வழி உணர முடிந்தது. அவர்களிடம் காணப்பட்ட போதாமைகளும் அறியாமைகளும் என்னை இத்தலைப்புகளில் கட்டுரை எழுதத் தூண்டியது.

ஒவ்வொரு தலைப்பும் மிக விசாலமான செய்திகளையும் விளக்கங்களையும் உள்ளடக்கியவை. அவற்றை முதல்முறையாக வாசிக்கும் ஒருவருக்கு எளிமையாகப் புரியும் வகையிலும், ஓரளவு முழுமைபெற்ற விபரங்களை கொடுக்கும் வகையிலும் எழுத முயன்றது மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. எல்லா கட்டுரைகளையும் படித்து செரிவு செய்ய உதவிய ம. நவீன் மற்றும் ஸ்ரீதர்ரங்கராஜ் ஆகியோருக்கு எனது நன்றிகள்.

2014ஆம் ஆண்டு தொடங்கி வல்லினம் இணைய இதழில் பதிவேற்றம் கண்ட இக்கட்டுரைகளை மலேசியா மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர்களும் படித்து கருத்து பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், இக்கட்டுரைகளை புத்தக வடிவத்தில் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அறிந்து எல்லா வகையிலும் துணைநின்ற நண்பர் ம. நவீன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த நூல் 1.11.2015ல் நடைப்பெறும் கலை இலக்கிய விழாவில் வெளியீடு காணும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...