சொற்களைச் சேமிப்பதும் செதுக்குவதும் கலை

navin pixஆத்தா சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவன் நான்.

ஆத்தா அம்மாவின் அம்மா. அவர் கதைகள் சொல்லும் விதம் நூதனமானது. கதைகளில் வரும் கொடூர விலங்காக அவ்வப்போது அவரே மாறிவிடுவார். திடீரென முட்டிபோட்டு நடந்து பயங்காட்டுவார். ஆத்தா சொல்லும் கதைகளை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும். என் உணர்வு நிலைக்கு ஏற்ப ஆத்தா கதைகளின் முடிவையும் அவ்வப்போது மாற்றியமைப்பார். பெரும்பாலும் அவர் சொல்லும் கதைகளில் நன்னெறிப்பண்புகள் இருக்காது. எல்லா பாத்திரங்களும் அதனதன் போக்கில் வரும் – போகும்.
நான் கதைகள் எழுதத்தொடங்கிய ஆரம்ப நாட்களில் எம்.ஏ.இளஞ்செல்வன்தான் என்னை ஊக்கப்படுத்தினார். என் கதைகள் பலவீனமாய் இருப்பதையும் வாசிப்பதன் தேவையையும் உணர்த்தியவர் அவர்தான். சிறுகதை என்பதை ஒரு கலைவடிவமாக அவர் மூலமே அறிந்துகொண்டேன். பள்ளிக்கூடத்திலும் மலேசியப் பத்திரிகைகளிலும் வாசித்த கதைகளாலும் கருத்துச் சொல்வதே சிறுகதையின் முக்கியமான நோக்கம் என நம்பியிருந்த எனக்கு, நவீன இலக்கியம் குறித்து அறிமுகம் செய்து வைத்ததும் அவர்தான். மா.சண்முகசிவாவின் தோழமை அப்பார்வையை மேலும் தீவிரப்படுத்தியது. மார்க்ஸிய, தலித்திய எழுத்துகள் அவர்மூலமே அறிமுகமாயின.11873758_1041742255838852_3368109114859042634_n

ஷோபாசக்தி மற்றும் சுகனின் சந்திப்பும் இலக்கியம் குறித்து புதிய புரிதலைக் கொடுத்தன. கலை என்பது மொழியின் மூலம் ஒருவருக்கு மயக்கத்தை மட்டுமே கொடுக்கிறதென்றால் அது வெறும் போதை வஸ்து மட்டுமே என அறிய வைத்தனர். இலக்கியம் என்பதை அரசியல் செயல்பாடாகவே அதற்குப்பின் என்னால் பார்க்க முடிந்தது. ஆதவன் தீட்சண்யாவின் உரையாடல்கள் இலக்கியம் மீது வலிந்து கட்டிவைக்கப்பட்டிருக்கும் புனித பிம்பங்களை உடைத்துத் தள்ளின. எழுத்தாளன் என்பவன் சமூகத்தில் ஒரு கதை சொல்லியாகவும் அவன் சொல்லும் கதை யாருடையதாய் இருக்கிறது என்பதையும் யாராக அவன் நின்று இச்சமூகத்தைப் பார்க்கிறான் என்பதையும் அவர்மூலமே பார்க்கப்பழகினேன். ஈழப்பயணமும் அங்குச் சமகாலத்தில் இயங்கும் தோழர்களின் நட்பும் கதை சொல்வதின் தேவையை எனக்கு அரசியல் ரீதியாகத் தெளிவுபடுத்தின.

எழுத்தாளர் இமையத்தின் நட்பு சிறுகதைகளுக்கான நுட்பத்தையும் மொழியின் நுட்பத்தையும் மேலும் எனக்குள் கூர்மைப்படுத்தின. அவர் எனது எழுத்துகளைச் செறிவுபடுத்தினார். ஒரு படைப்பு செறிவு செய்யப்பட்ட பிறகே பிரசுரமாக வேண்டும் என விருப்பம் கொண்டவன் நான். அவ்வகையில் இத்தொகுப்பில் உள்ள எட்டு சிறுகதைகளுமே இமையத்தில் செறிவாக்கலில் கிடைத்த இறுதி வடிவமே.

தொகுப்பிற்காக வைத்திருந்த சில கதைகளை எவ்வித சமரசமும் இல்லாமல் நீக்கியிருப்பதே நான் முதிர்ச்சி அடைந்திருப்பதற்கான சான்று.

இலக்கியம் என்பது சொற்களை செலவிடுவதில் இல்லை. சேமிப்பதிலும் செதுக்குவதிலும் இருக்கிறது.

1.11.2015ல் நடைப்பெறும் கலை இலக்கிய விழாவில் இந்த நூல் வெளியீடு காண்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...