சலமண்டர்

pandiyan 1[ஜப்பானிய நவீன எழுத்தாளர்களின் முன்னோடி, மசுஜி ஈபுசே 1919ல் – எழுதி மிகவும் புகழ்பெற்ற கதை ‘சலமண்டர்’. உலகின் பல மொழிகளில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனிதர்களற்ற கதாபாத்திரங்களின் வழியும் சூழல்களின் வழியும் மனித வாழ்வின் அழுத்தங்களையும் உணர்வு போராட்டங்களையும் ‘சலமண்டர்’ எள்ளலோடு வெளிப்படுத்துகிறது.]  

சலமண்டர் கடுஞ் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. அது தன் வசிப்பிடத்தில் இருந்து வெளியேர முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. அதன் தலை அந்த சிறிய குகை வாயிலில் மாட்டிக்கொள்வதால் அதன் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. நீண்ட காலமாக அதன் நிரந்தர வசிப்பிடமாக இருந்த குகை இப்போது மகிழ்ச்சி தருவதாக இல்லை. ஒவ்வொரு முறையும் அந்த சிறிய குகையில் இருந்து வெளியேர முயலும் போதும், புட்டியில் திணிக்கப்பட்ட தக்கையைப் போன்று அதன் தலை அந்த சிறிய குகை வாயிலில் மாட்டிக் கொள்கிறது. தொடர் தோல்விகள் சலமண்டரை நம்பிக்கை இல்லா எதிர்கால சோகத்தில் விழச்செய்து கொண்டிருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் சலமண்டரின் உடல் வெகுவாக வளர்ந்து விட்டது என்பதை இச்சூழல் உறுதி படுத்தினாலும், அது இப்போது முக்கிய சங்கதி இல்லை.

“நான் ஒரு மடையன் !” சலமண்டர் தன்னைத்தானே குறை சொல்லிக் கொண்டது.

அது அந்த சிறிய குகை அனுமதித்த அளவில் தன் உடலை அசைத்து நீந்தப் பார்த்தது. பல பிரச்சனைகளில் மூழ்கி இருக்கும் மனிதர்கள் தங்கள் அறையில் முன்னும் பின்னுமாக உலாவுவார்களே, அதே போன்றுதான் சலமண்டரும் உலாவ முயன்றது. ஆனால் பாவம் சலமண்டரின் வசிப்பிடம் அது உலவும் அளவுக்கு பெரியது இல்லையே. உண்மையில் அது தன் உடலை கொஞ்சம் முன்னும் பின்னுமாகவும் இடதும் வலதுமாகத்தான் அசைக்க முடிந்தது. இதனால் குகையின் உட்சுவர்கள் பிசுசிசுத்தும் வழவழப்பாகவும் மாறிக்கொண்டிருந்தன. இன்னும் சிறிது நாளில் தன் வாலிலும் முதுகிலும் வயிற்றுப் பகுதியிலும் கடல் பாசிகள் வளர தொடங்கி விடும் என்று அது நம்பியது. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தது போல் சலமண்டர் நீண்ட பெருமூச்சுடன் முனகிக் கொண்டது.

“சரி! என்னால் வெளியேற முடியாவிட்டாலும் என்னிடம் வேறு ஒரு திட்டம் இருக்கிறது”.

ஆனால் உண்மையில் அதனிடம் எந்தவித ஏற்புடைய திட்டமும் இல்லை என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

வித விதமான கடல்பாசிகளும் தாவரங்களும் குகையின் உட்கூரையில் செழித்து வளர்ந்தன. ‘லீவர்வோத்’ பாசியின் வேர் கற்களுக்கு இடையில் ஊடுருவி படர்ந்து கொண்டிருந்தது. இன்னொருவகை கடல்தாவரத்தின் மெல்லிய தளிர்களின் நுனியில் செந்நிறப் பூக்கள் பூத்துக் கிடந்தன. சிறிது காலத்தில் அந்தப் பூக்கள் காய்களாவதும் பின் அவற்றில் இருந்து மகரந்தப் பொடி சிதறி பரவுவதும் இயற்கையின் இனப்பெருக்க விதிகளை மீறாமல் நடந்து கொண்டிருந்தது.

சலமண்டருக்கு இந்த கடல் தாவரங்களைப் பார்ப்பதில் ஆர்வமில்லை. உண்மையில், பூக்களோடு இருக்கும் அந்த கடல் தாவரத்தை சலமண்டர் சுத்தமாக வெறுத்தது. அந்த தாவரம் வெளிப்படுத்தும் மகரந்தம் குகைக்குள் நீரின் பல இடங்களிலும் விழுந்து கொண்டிருந்தது. அந்த மகரந்தத் துகள்களால் ஒருநாள் தனது வசிப்பிடம் மாசு அடைந்து விடும் என்று அது பயந்தது. குகை பாறைகளின் இடைவெளிகளில் பத்தை பத்தையாக வளர்ந்திருந்த பூஞ்சைகள்வேறு அதன் வசிப்பிட தோற்றத்தை மேலும் மோசமாக்கிக் கொண்டிருந்தன. என்ன மடத்தனமான பழக்கம் இந்த பூஞ்சைகளுக்கு! சில காலம் காணாமல் போவதும் பின்னர் மீண்டும் வருவதும்,…..தன் சந்ததியை பெருக்குவதில் உறுதியின்றி இருப்பதை வெளிப்படுத்திக் காட்டிக் கொள்வதை போல…..

சலமண்டருக்கு தன் முகத்தை குகை நுழைவாயிலில் வைத்துக் கொண்டு வெளிக்காட்சிகளை ரசித்துக் கொண்டிருப்பதில் அலாதி ஆனந்தம். வெளிச்சம் பரவிய வெளிப்புற அழகை இருள் சூழ்ந்த பொந்திலிருந்து பார்ப்பது பரவசமூட்டும் நிலைதானே? தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் பல்வேறு வெளிக் காட்சிகளின் விந்தையை நாம் எத்தனையோ முறை நம் வீட்டு சன்னல்களின் வழி வெறித்துக் கொண்டிருந்ததில்லையா?

அந்த மலைச்சாரலில் பயணிக்கும் ஆறு, பொங்கும் நுரையோடு தெறித்து விழும் நீரை சுமந்து கொண்டு பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. ஆற்றுக்கு அடியில் pandiyan 2ஆங்காங்கே பெருங்குழிகளை தோற்றுவித்துவிட்டு எதிர்பாராத ஓரிடத்தில் திடீர் என்று சலனமற்று நிதானமாக ஓடியது. தன் குகை வாயிலிலிருந்து சலமண்டர் அது போன்ற பெருங்குழியொன்றை நன்றாக பார்க்க முடிந்தது. அங்கே ஆற்றின் அடியில் ‘டாக்வீட்’ புற்கள் செழித்து வளர்ந்திருந்தன. ஆற்றின் அடியிலிருந்து மேற்பரப்பு வரை அதன் மெல்லிய தண்டுகள் நீண்டு வளர்ந்திருந்தன. ஆற்றின் மேல்மட்டத்தை அடைந்ததும் அவை தொடர்ந்து வளர்வதை திடீர் என்று நிறுத்தி விட்டு “டாக்வீட்’ பூங்கொத்துக்களை வெளிப்படுத்தி காற்றில் அசையவிட்டுக் கொண்டிருந்தன. அடியில், பெருங்கூட்டமாக ‘கேலிஃபீஸ்’ மீன்கள் ஆர்வத்துடன் அந்த ‘டாக்வீட்’ தண்டுகளுக்கிடையில் புகுந்து போவதும் வருவதுமாக நீந்திக் கொண்டிருந்தன. அவை மொத்தமாக ஆற்றோடு அடித்துச் செல்லப்படாமல் இருக்கும் பொருட்டு நீரோட்டத்தை எதிர்த்து நீந்திக் கொண்டிருந்தன. அவை கூட்டமாக வலது பக்கம் வளைந்தன பிறகு இடதுபக்கம் திரும்பின. அவற்றில் ஏதாவது ஒன்று தவறாக இடது பக்கம் வளைந்து விட்டால், அந்த ஒன்று வழிதவறி போகாமல் இருக்க, மொத்தக்கூட்டமும் இடதுபக்கமே திரும்பின. அவற்றில் ஏதாவது ஒரு மீன் ‘டாக்வீட்’ தண்டுகளின் குறுக்கீட்டால் வலதுபக்கம் வளைய வேண்டிய கட்டாயம் நேர்ந்தாலும் அந்த சின்னஞ்சிறு மீன்கூட்டம் மொத்தமும் வலது பக்கமே திரும்பி முன்னதைப் பின்பற்றின. ஆகவே அவற்றில் எந்த மீனும் தனித்துச் செல்வதென்பது இயலாத காரியமாகும்.

அந்தச் சின்னஞ்சிறிய மீன் கூட்டத்தைப் பார்த்ததும் சலமண்டரால் தன் நையாண்டியை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

‘உண்மையில் குறுகிய சிந்தனை உடைய ஜீவன்கள்’ என்று மனதுக்குள் நகைத்துக் கொண்டது.

குளத்தின் மேல்மட்ட நீர் ஓயாது சுழன்று கொண்டிருந்தது. நீர் பரப்பின் மேல் விழும் வெள்ளை இதழ்களை கூர்ந்து கவனித்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். வெள்ளை இதழ்கள் பெரியவட்டங்களில் சுற்றத் தொடங்கும். பின்னர் அவை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிச் சின்னவட்டங்கள் அடித்து இறுதியில் சுழற்சியின் மையம் வெள்ளை இதழ்களின் மீது படியும்போது அவை நீர்சுழற்சியில் மூழ்கிப் போய்விடுவதையும் காணலாம்.

சலமண்டர் நொந்துகொண்டது..”எனக்குத் தலை சுற்றுகிறது”

ஒருநாள் மாலை, சிறிய இறால் ஒன்று குகைக்குள் புகுந்து சுற்றித்திரியத் தொடங்கியது. தினையளவு சிறிய முட்டைகளை மெல்லிய வயிற்றுப்பையில் சுமந்தபடி இருந்தது. முட்டை இடும் காலமாதலால் அந்தச் சிறிய ஜீவன் தன் உடம்பை குகையின் சுவரோடு ஒட்டிக்கொண்டது. சற்று நேரம் அடி முடி காணமுடியாதபடி நீண்டு கிடந்த தன் மெல்லிய உணர்சிக் கொம்புகளை மட்டும் அசைத்துக் கொண்டு சிலையாக நின்றது. பிறகு, திடீர் என்று எந்த காரணமும் இன்றி அந்த இறால் குகை சுவரில் இருந்து துள்ளி குதித்தது. காற்றில் இரண்டு மூன்று முறை வெற்றிகரமாகக் கரணம் அடித்து இறுதியில் சலமண்டரின் விலா பக்கம் வந்து விழுந்தது.

சலமண்டருக்கு கொஞ்சமாக திரும்பி அந்த இறால் அங்கு என்ன செய்கிறது என்று பார்க்க ஆவலாக இருந்தது. ஆனால் அது தன் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டது. தன் உடலை சலமண்டர் சிறிது அசைத்தாலும் அந்த சின்ன ஜீவன் அஞ்சி ஓடிவிடக்கூடும்.

“சினையாக இருக்கும் இந்தச் சின்னப்பிராணி என் விலாப்பக்கம் அமர்ந்து கொண்டு என்ன செய்துகொண்டிருக்கிறது. ஒன்றுக்கும் உதவாத இந்த அற்பப்பிராணிக்கு இங்கு என்ன வேலை”

ஒருவேளை அது செலமண்டரின் உடலை குகைச்சுவர் என்று எண்ணிக்கொண்டு அங்கே முட்டையிட முயற்சிக்கலாம். அல்லது வெறுமனே ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கிப்போய் கிடக்கலாம்.

“எதை எதையோ நினைத்து அஞ்சுபவர்களும் எப்போதும் தீவிர சிந்தனையிலேயே மூழ்கி கிடப்பவர்களும் சரியான உதவாக்கரைகள் “ செலமண்டர் அழுத்தமாக சொல்லிக்கொண்டது.

அது ஒரு முடிவுக்கு வந்தது. எப்படியாவது அந்தக்குகையில் இருந்து வெளியேறி விட வேண்டும். மனக்குழப்பத்தில் மூழ்கி கிடப்பதை விட வேறு முட்டாள்தனம் இல்லை. ஏனோ தானோவென்று இருக்க இது நேரம் இல்லை.

சலமண்டர் தன் முழு பலத்தையும் திரட்டிக்கொண்டு குகை வாயிலை நோக்கிப்பாய்ந்தது. ஆனாலும் ஒரே ஒரு பயன்தான் விளைந்தது. செலமண்டரின் தலை புட்டியில் அடைத்த தக்கையைப் போன்று குகை வாயிலில் இறுக்கமாக மாட்டிக்கொண்டது. ஆகவே அது மீண்டும் முழு பலத்தையும் திரட்டித் தன் உடலை இழுத்து குகை வாயிலில் மாட்டிக் கொண்ட தலையை மீட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று.

இந்த குளறுபடிகளால் குகைக்குள் தேங்கியிருந்த நீர் கலங்கிப் போனது. இறால் மிகுந்த சோகத்தில் மூழ்கியது. ஆனாலும் அதுவரை குழவிக்கல் போல அசைவற்றுக் கிடந்த ஒரு பொருள் திடீர் என்று முன்னும் பின்னுமாக ஆர்ப்பாட்டமாக நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து கலகலத்துச் சிரித்தது. அந்த சேற்று நீருக்குள் நின்று கொண்டும் சிரிக்க கூடிய உயிரினம் அந்த இறால் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

சலமண்டர் மீண்டும் முயன்றது. தோல்வியே மிஞ்சியது. அதன் தலை குகை வாயிலில் மீண்டும் சிக்கிக் கொண்டது.

அதன் கண்களில் இருந்து தெளிந்த நீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.

ஓ கடவுளே! நீ கொடுமைக்காரன்! இரண்டு வருட காலங்கள் நான் சுற்றுப்புற மாற்றங்களை உணராது இருந்து விட்டதற்கு தண்டனையாக என்னை இந்த குகைக்குள் வாழ்நாள் முழுவதும் சிறைபிடித்து வைக்க முடிவுசெய்து விட்டாயா? இது கொடுமை இல்லையா? எனக்குத் தெரியும்….இன்னும் சிறிது காலத்தில் எனக்கு சித்தம் பேதலித்து விடும்…

வாசகர்கள் பெரும்பாலும் பைத்தியம் பிடித்த சலமண்டரைப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் அப்படி ஒரு சாத்தியக்கூறு இருப்பதையும் அவசரப்பட்டு மறுத்து விடாதீர்கள். வாசகர்கள் நமது சலமண்டரை நையாண்டி செய்யலாகாது. இத்தனைநாள் அது ஓரிடத்திலேயே மூழ்கிக் கிடந்து விட்டதில் வெறுப்புற்று, தன் நிலை உணர்ந்து, இப்போது அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்ததற்கு அதனை நாம் பாராட்ட வேண்டும். மிகப்பெரிய பைத்தியக்காரன் கூட, தான் அடைபட்டுக் கிடக்கும் சிறையில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ளவே விரும்புவான் இல்லையா? அதிகமாக வெறுக்கப்படும் சிறைக்கைதி கூட அவ்வாறே ஆசைப்படுவான்தானே?

“ஆண்டவா! உலகில் இத்தனை கோடி உயிர்கள் இருக்கும்போது என் விதி மட்டும் ஏன் இவ்வாறு இருக்கிறது ”

குகைக்கு வெளியே நீர்மட்டத்தின் மேல் இரண்டு சிலந்திகள் ஒய்யாரமாக விளையாடிக் கொண்டிருந்தன. ஒன்று பெரியது மற்றது சற்று சிறியது. சிறிய சிலந்தி பெரியதின் முதுகில் தொற்றிக் கொண்டிருந்தது. அவற்றின் உல்லாச விளையாட்டு திடீர் என்று அங்கு தோன்றிய தவளையின் வருகையால் நிலைகுலைந்து போனது. இடமும் வலமுமாக வளைந்து வளைந்து தலை தெறிக்க ஓடின. தவளை நீருக்குள் முக்குளித்து மீண்டும் நீர்மட்டத்தை அடைந்தது. தனது மென்மையான முக்கோண வடிவிலான, முகத்தின் முன்பகுதியை காற்றுப்பட வைத்துக் கொண்டு ராகம் பாட ஆரம்பித்தது. பிறகு மீண்டும் நீருக்குள் முக்குளித்து மீண்டது.

இந்தக் கொண்டாட்டமான நிகழ்ச்சிகளை குழப்பமான சிந்தனையுடன் சலமண்டர் பார்த்துக் கொண்டிருந்தது. பிறகு, மனக்கவலையை பெருக்கும் இந்தக் காட்சிகளைப் பார்க்காமல் இருப்பதே மேல் என்று முடிவு செய்து கண்களை மூடிக் கொண்டது. பரிதாபம்! மனதுக்குள் அது தன்னை ஒரு உலோக துண்டாக கற்பனை செய்து கொண்டது.

எனக்குத் தெரிந்து, தன்னை யாருமே மற்ற பொருள்களுடன் கிறுக்குத்தனமாக ஒப்பிட்டுக் கொள்ள மாட்டார்கள். மனம் வெறுத்து சோகத்தில் மூழ்கிக் கிடப்பவர்கள்தான் தன்னை ஒரு உலகத்துண்டோடு ஒப்பிட்டுக் கொள்வார்கள்.

சலமண்டர் கண் இமைகளை திறக்க முயற்சிக்கவில்லை. காரணம் கண்களை மூடித் திறப்பது மட்டும்தான் இப்போதைய அதன் சுதந்திரத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது. கண்களை மூடிய பின்னர் சட்டென தோன்றும் காட்சிகள் வியப்பானவை. கண்களை மூடிக் கொள்ளும் மிகச் சாதாரண சூத்திரத்தின் வழி அது கறுமை அப்பிக்கிடக்கும் இருட்டை ஆள முடிந்தது. முடிவின்றி பரந்து கிடக்கும் இருள். அந்த இருளின் ஆழத்தையும் பரப்பையும் விளக்கக் கூடிய சொற்களைக் கண்டறிந்து சொல்வார் யார்?

நான் வாசகர்களிடம் மீண்டும் இறைஞ்சுகிறேன். இந்த முரட்டுக்குணம் உடைய சலமண்டரை யாரும் வெறுத்துவிட வேண்டாம். சிறை அதிகாரிகள் கூடி ஏதோதோ உளறிக் கொண்டும் புலம்பிக்கொண்டுமிருக்கும் ஆயுள் கைதிகளை, அவர்கள் குழப்பத்தில் இருந்தால் ஒழிய, கண்டிப்பது இல்லை.

“ஆ! கடுங்குளிர் வளர்ந்து கொண்டு செல்கிறது; எனது சூனியம் பெருகிக்கொண்டு செல்கிறது”

பரிவுமனம் கொண்ட யாருக்கும் குகைக்குள்ளிருந்து வரும் சலமண்டரின் ஓலம் கேட்காமல் போகாது.

ஒரு மனிதனை அவனது முடிவற்ற சோகங்களுடன் மூழ்கவிட்டு வேடிக்கை பார்ப்பது ஐயத்திற்குரிய கொள்கையாகும். சலமண்டர் தனது பொல்லா குணத்தால் ஒருமுறை வழி தவறி தன் குகைக்குள் வந்துவிட்ட தவளை ஒன்றை வெளியேறவிடாமல் தடுத்துவிட்டது. சலமண்டரின் தலை குகை வாயிலை தக்கைபோல் அடைத்துக் கொண்டுவிட்டதைக் கண்ட தவளை அச்சத்தால் அங்கும் இங்கும் தாவி இறுதியில் ஒரு லிவெர் வார்ட் செடியின் தண்டில் தொத்திக்கொண்டு நின்றது. அந்த தவளைதான் சற்றுமுன்னர், குளத்தின் மேலும் கீழுமாக முக்குளித்து நீந்தி விளையாடி செலமண்டரின் மனதில் பொறாமைத் தீயை சுடர்விட்டு எரியச்செய்தது. எப்படியோ ஏற்பட்ட கவனக்குறைவால் அது காலிடறி குளத்துக்குள் விழுந்துவிட்டது. வன்மத்தோடு சலமண்டர் அங்கே காத்திருந்தது.

மற்ற பிராணியையும் தன் நிலை ஒத்த இக்கட்டான நிலையில் வைத்துப் பார்ப்பதில் சலமண்டருக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி.

“இங்கே நான் அதை அதன் வாழ்நாள் முழுவதும் சிறை வைப்பேன்!”

ஆனால் சலமண்டரின் குரோதம் மிகுந்த திட்டம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தவளை கவனமாக குகையின் மேற்கூரையில் தெரிந்த சிறுசந்தில் நுழைந்தது. பிறகு மிகுந்த பாதுகாப்பு உணர்வுடன் தலையை வெளியே நீட்டிபடி கூறியது

“எனக்குக் கவலை இல்லை”

“வெளியே போய்த் தொலை!” சலமண்டர் இறைந்து கத்தியது. உடனே, அந்த இரண்டு பிராணிகளுக்கும் இடையில் மிகப்பெரிய வாய்ப் போர் உண்டானது.

“வெளியே போவதா இல்லையா என்பது என் விருப்பம்”

“ சரி, உனக்கு பிடித்த ஏதாவதொன்றை செய்து கொண்டே இரு”

“முட்டாள்”

“முட்டாள்”

பலமுறை அவை தமக்குள் சாபமிட்டுக் கொண்டன. மறுநாளும் அவை அதே போன்ற சொற்களால் திட்டிக் கொண்டன. அவை தோல்வியை ஒப்புக்கொள்ள ஒருபோதும் தயாராக இல்லை.

ஒரு ஆண்டு கடந்தது,

நீரில் பரவிய வெப்பம், குகைக்குள் சிறைபட்டு குளிரில் உறைந்து இறுகிக் கனிமமாகக் கிடந்த உருவத்தை மீண்டும் சதையும் ரத்தமும் உள்ள பிராணியாக மாற்றியது. அந்த இரண்டு பிராணிகளும் தங்களுக்குள் தொடர்ந்து சண்டையிட்டபடி அந்த கோடை காலத்தை கடத்தின. (சலமண்டரின் ‘தோழமைக்கு’ இப்போது சலமண்டரின் பெருத்துக் கிடந்த தலையினால்தான் தான் குகைக்குள் இருந்து வெளியேற முடியவில்லை என்கிற உண்மை மெல்ல புரிந்திருந்தது.)

“உன் பெருத்த தலை கதவை அடைத்துக் கொண்டிருப்பதால்தான் உன்னால் இங்கிருந்து வெளியேற முடியவில்லை, சரிதானே?”

“ உன்னாலும் உன் இடத்தில் இருந்து வெளியேற முடியவில்லைதானே!”

“அப்படியானால் நீ முதலில் வெளியேற வேண்டியதுதானே?”

“இல்லை, நீ முதலில் மேலிருந்து இறங்கு”

மேலும் ஒரு வருடம் உருண்டோடியது. மீண்டும் இரண்டு கனிம உருண்டைகள் உயிருள்ள ஜீவன்களாக மாறின. ஆனால் இந்தக் கோடைகாலத்தில் இரண்டுமே அமைதியாக இருந்தன. தங்களின் சொந்தப் புலம்பல்கள் அடுத்தவருக்கு கேட்காவண்ணம் கவனமாக இருந்தன.

வழக்கம்போல, சலமண்டரை விட அதன் “தோழமை’யே தன்னையும் அறியாமல் புலம்பத் தொடங்கியது. “”ஓ ஓ ஓ ஓ…..! அதன் புலம்பல்கள் பெருமூச்சாக மாறி, கோடைகாலத்து வெப்பக்காற்றாக நகர்ந்தது. கடந்த ஆண்டுகளைப் போலவே, நீர்த்தாவரங்கள் தங்கள் மகரந்தத் தூளை நீர்மட்டத்தில் படரவிட்டவண்ணம் இருந்தன.

சலமண்டரால் அந்தப் புலம்பலைத் தெளிவாகக் கேட்க முடிந்தது. கண்களில் வழிந்தோடும் நட்புணர்வோடு தலையை மெல்ல மேல்நோக்கி தூக்கி, தவளையை நோக்கி கேட்டது

“நீ சற்று முன் புலம்பினாய் தானே”

“இருக்கட்டுமே, நான் புலம்பினால் உனக்கு என்ன?”

“அப்படியெல்லாம் பேசாதே!,நீ இப்போது கீழே இறங்கலாம்”

“எனக்கு அதிகமாக பசிக்கிறது, நகர சிரமமாக இருக்கிறது”

“ம்ம்ம்ம், உன் காலம் நெருங்கிவிட்டது என்று சொல்ல வருகிறாயா?”

“ஆமாம், என் காலம் நெருங்கிவிட்டதாகத்தான் உணர்கிறேன்”

நீண்ட நேர அமைதிக்குப் பிறகு சலமண்டர் நிதானமாக கேட்டது.

“இப்போது நீ என்ன நினைக்கிறாய்?”

தவளை பெருகி ஓடும் நாணத்தோடு சொன்னது “இப்போது கூட, எனக்கு உன் மேல் பெரிய கோபமெல்லாம் இல்லை”

மசுஜி ஈபுசே (Masuji Ibuse ) 1898 -1993

மொழியாக்கம்: அ.பாண்டியன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...