சண்டை

iswaryaவியர்வை வழிந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு பெண் வெள்ளை நிற கராத்தே உடை அணிந்து குறி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது. அவளின் திடமான கரங்களும், தோளும் அவளை உறுதியுடையவளாகக் காட்டுகிறது என்றே நினைக்கின்றேன்.மேலும்,அந்தக் கராத்தே உடையில் அவள் இன்னும் கட்டுமஸ்தாகவே காட்சியளித்தாள். அந்த பெரிய உருவத்துடன் கராத்தே சண்டைப்போட பரிதாபமாக டோஜோவின் மறுபக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தது, வேறு யாருமல்ல…

நான்தான்.

இதை சொல்லும்போதே என் உடம்பு முழுவதும் கிடு கிடு வென நடுங்குகிறது. இந்த நடுக்கத்திலும் அவளுடன் சண்டைப்போட்டு ஜெயிப்பது எல்லாம் நடக்கும் காரியமா என்ன? மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்துச் சிரித்தேன். அவள் முகத்தில் மாற்றமில்லை. பார்வையை வேறு இடத்திற்கு மாற்றுவதைத் தவிர என்னிடமும் வேறு வழியில்லை. பின்னர் சுதாரித்துக் கொண்டு கொஞ்சம் கடினமாக முயற்சியெடுத்து ஒரு கோபமான முகத்தை உருவாக்கினேன்.அந்த முகத்தை அவளிடம் காட்டினேன். ஆனால், அது வேலைக்கு ஆகவில்லை.அவள் என்னை பார்த்துக் கேவலமாகச் சிரித்தாள்.வெட்கமாக இருந்தது. சட்டென, தலையைக் கீழே தொங்கப் போட்டேன்.

“எதற்காக இந்த முறைப்பெல்லாம்? நாங்கள் இருவரும் ஏன் ஒருவருக்கொருவர் பகைத்துக் கொள்ள வேண்டும்? இந்தக் கராத்தே சண்டையின் நோக்கம்தான் என்ன?” என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் மனதில் உதித்தது. கீதையில் அர்ஜுனன் கிருஷ்ணரிடம் ஏன் நான் இவர்களை கொல்ல வேண்டும் எனப் போர்களதில் கேட்பது போல, என்னை வற்புறுத்தி அழைத்து வந்து கராத்தே சண்டைபோடச் சொன்ன அப்பாவிடம் கேட்டால் அடிதான் விழும். சென்ற மூன்று வாரங்களாக மாஸ்டர் சொல்லிக் கொடுத்த எந்தத் தற்காப்பு முறையும் என் நினைவில் இல்லை. என்னைச் சுற்றிலும் ஒரே சத்தமாக இருந்தது. ஒரு தரம் தலையை நிமிர்த்தி சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு சிலர் பக்கத்து டோஜோவில் நடந்து கொண்டிருந்த பெரியவர்களின் கராத்தே ஸ்பாரிங்ஙை பார்த்து இரசித்துக் கொண்டிருந்தனர். மற்றும் சிலரோ அவர்களின் குழுவிலுள்ள கராத்தே வீராங்கனைக்குக் கைத்தட்டி ஆதரவு கொடுத்தனர்.

பக்கத்தில் “கோ சுபா, கோ! நம்மால முடியாதது எதுவுமில்ல! தாத்தாவ நினைச்சிக்கிட்டு களத்தினுள்ள இறங்கு!” என்று அப்பா ஒரு பக்கம். “சுபா,போ! ஜெயிச்சிட்டுதான் வீட்டுக்கு வரணும்!” என்று அண்ணன் மறுபக்கம்.அவர்களின் வார்த்தைகள் உள்ளே இருக்கும் பயத்தை மென்மேலும் அதிகரித்தது. இது போதாது என்று, எதிரே நின்று கொண்டிருந்த கராத்தே வீராங்கனையின் குழுவின் கூச்சல்கள் வேறு.

எங்களின் மேட்சை எடுத்து நடத்தும் மாஸ்டர் சைகைமுறையால் இருவரையும் உள்ளே வரச் சொல்லி கட்டளையிட்டார். எதிரே நின்று கொண்டிருந்த பெண் விறு விறு வென நடந்து களத்தினுள் இறங்கினாள்.அவள் நடக்கும் விதம் என்னை பயமுறுத்தியது. என் பள்ளியில் ‘ஹரிமாவ் மலாயா’ என பல மாணவர்களால் செல்லமாக அழைக்கப்படும் கட்டொழுங்கு ஆசிரியரின் நடைப்போல இருந்தது அவளின் கம்பீரமான தோற்றம்.

அப்பாவின் குரல் கேட்டது.”எதற்காக இன்னும் காத்திருக்கே?சீ்க்கிரம்” என்றார் கோபத்தோடு.நுணிக்கண்ணால் அவளைப் பார்த்தேன்.கை கொடுக்க நெருங்கினேன்.அவளின் கைப்பிடி இறுக்கமாக இருந்தது.போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னவே நான் மனதளவில் தோற்றுப் போய்விட்டேன்.

அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் மாஸ்டரின் வார்த்தைக்காகக் காத்திருந்தனர். டோஜோவின் வெளியே பார்வையாளர்கள் போடும் கூச்சலில் எனக்கு ஆந்த வார்த்தைகள் கேட்குமா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. இதனால், என் முழு கவனத்தையும் காதுகளுக்குத் திருப்பினேன். ஏற்கனவே சென்ற வாரம் நடந்த சிலாங்கூர் ஓப்பன் போட்டியில் ஒரு பெண் என் வலப்பக்க காதில் பேஸ் கிக் விட்டாள். அன்றிலிருந்து இன்றுவரை என் காதுகளில் எலி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அப்பா மற்றும் அண்ணனின் வார்த்தைகள் பழைய கேசட் போல மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்தன. செய்வதறியாது டோஜோவுக்குள் திரு திருவென விழித்துக் கொண்டிருந்தேன். அந்நிலையில் மாஸ்டர் ‘ஸ்குதி அஜ்மி’ என்று கூறினார். அது ஜப்பான் மொழியில் மேட்சை ஆரம்பிப்பதற்கான குறிப்புச்சொல் என்றே நினைக்கின்றேன். அப்போதுதான் கையை பலப்படுத்திக் கொண்டு குத்தலாம் என்று எண்ணினேன்.  அதற்குள் மின்னல் வேகத்தில் என் எதிரே நின்றுக் கொண்டிருந்தப் பெண், வயிற்றில் ஓங்கி ஒரு சூடான் கிக் விட்டாள். டோஜோவின் ஓரத்தில் சுருண்டு விழுந்தேன்.

* * *

நீங்கள் நினைப்பதுபோல நான் ஒரு கராத்தே வீராங்கனையல்ல. பலர் அப்படிதான் கூறுகின்றனர். ஆனால், உண்மையிலேயே எனக்கும் கராத்தேவிற்கும் ரொம்ப தூரம். என் தாத்தாவிலிருந்து அப்பா,அண்ணன் மற்றும் தம்பி கருப்பு பெல்ட் அணிந்து கொண்டு பயங்கரமாக காட்சியளிப்பார்கள். அந்த வரிசையில் என்னையும் பல கோப்பைகளுடன் படம் பிடித்து மாட்டி வைக்க வேண்டும் என்பது அப்பாவின் நீண்ட நாள் அவா. முன்பு, என் பூட்டன் ஒரு மல்யுத்த வீரர் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஜப்பான் காரர்களுடன் மல்யுத்தம் போட்டு என் பூட்டன் பலமுறை ஜெய்த்திருக்கிறார். இவர்களுக்கு எல்லாம் அந்த கராத்தே மேலுல்ல வெறியும் பற்றும் எனக்கு இதுவரை இருந்ததில்லை; இனிமேலும் வராது… ஆனாலும், அப்பாவின் பிடிவாதத்தில்தான் நான் இந்த கலையில் சேர்ந்தேன்.

“என்னைப்போல ஒரு சிங்கம் ஆகாவிட்டாலும், புலியாவது ஆகிவிட வேண்டும், சுபா” என்று அப்பா ஒவ்வொரு காலையிலும் சொல்லுவது உண்டு.நான் கராத்தே உடைக்குள் புகுந்தவுடன், நான் ஒரு பெண் என்பதையே மறந்துவிட வேண்டும் என்ற அப்பாவின் வார்தைகள் ஒவ்வொரு முறையும் என்னை தீண்டிச் செல்லும். அவ்வாடையைப் போட்டுக் கொண்டு என் நண்பர்களிடம் சிரித்துப் பேசினால்கூட ஏசு விழும். இந்த உடைக்கு ஒரு தனி மரியாதை உண்டு என்று என் கோபமாக அப்பா கூறியது உண்டு.

ஆனால், எனக்கு கராத்தேவின்மேல் கொஞ்சம்கூட ஆர்வமில்லை. எனக்கு ஓவியம்தான் பிடிக்கும்.

நான்கு வயதாக இருக்கும் போது நான் என் ஓவியங்களை வீட்டின் சுவற்றுகளில் பதிவு செய்துள்ளேன். அப்பா என் ஓவியங்கள் அனைத்தும் கிறுக்கல்கள் என பலமுறை என்னை கண்டித்துள்ளார். எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. இப்படித்தான் ஒரு நாள் சுவற்றில் பொம்மைப்படம் வரைந்தால் அப்பா என்னை அறைந்துவிட்டார். விழுந்த அறையை இப்போது நினைத்துப் பார்த்தால்கூட தலை சுற்றுவதுப்போல ஒரு பிரம்மை. கன்னத்தில் கைவைத்தப்படியே அழுதுக்கொண்டு அறைக்குள் ஓடி கதவை டமார் என சாத்தினேன். பிறகு, அம்மா வந்து என்னை சமாதானப்படுத்தினார். அவர் எனக்கு வாங்கிக் கொடுத்த சதுரக் காகிதத்தில் வரைந்து வர்ணம் தீட்ட ஆரம்பித்தேன்.

அம்மா மிகவும் நல்லவர். வீட்டிலேயே அம்மா ஒருவர்தான் நான் வரைவதற்காக தூண்டுகோளாக இருந்தார். சுவற்றில் கிறுக்கியதற்காக,அப்பா ஒவ்வோரு முறையும் கை ஓங்கும்போதெல்லாம் தடுத்து அவரை சமாதானப்படுத்துவார்.நான் வரைவதற்காக பல கலர் பென்சில்களை வாங்கித் தருவார். நான் ஓரளவு வரைந்திருந்தாலும், “ரொம்ப, அழகா வரைஞ்சுயிருக்கிய, சுபா” என்று சொல்லிப் பாராட்டுவார். அம்மாவின் பாராட்டுகள்தான் எனக்கு மென்மேலும் ஊக்கம் கொடுத்தது. நான் அன்றாடம் வரையத் தொடங்கினேன்.

சாப்பிட்டு முடித்தவுடன் எஞ்சியிருக்கும் எண்ணைப்பிசுக்கில் பொம்மையின் முகம் வரைவேன். அப்பா நாகரிகம் தெரியாத என திட்டுவார். அம்மாவோ என்னைப் பார்த்து புண்சிரிப்பு சிரித்துவிட்டு அப்பாவுக்கு பயந்து ஒன்றும் பேசாமல் செல்வார். திடலில் இருக்கும்போதுக்கூட நான் காய்ந்த சுள்ளிகளைப் பயன்படுத்தி உருவங்களை உருவாக்குவேன். என் நண்பர்களில் சிலர் என்னைப் பாராட்டுவர். அவர்களின் பாராட்டுகளைக் கேட்டு நான் பெருமைப்பட்டிருக்கிறேன்.நான் உண்மையிலேயே ஓவியம் வரைவதில் மாஸ்டர்தான் என்று நினைத்துக் கொள்வேன். அதேபோல கடற்கரைக்குச் சென்றால் மணலைக் குவித்து வீடு கட்டுவேன். எண்ணைப்பிசுக்கில் வரைந்ததாக இருக்கட்டும்,காய்ந்த சுள்ளிகளைப் பயன்படுத்தியதாகட்டும் அல்லது மணலால் ஆனதான இருக்கட்டும்,எந்த ஓவியமுமே இதுவரை நிலைத்ததில்லை.எல்லாமே இயற்கையால் அழிக்கப்பட்டுவிட்டது. தண்ணீரால் அம்மா தட்டை அலசும்போதும், மழையால் திடல் நனையும்போதும், அல்லது கடல் அலையால் மணல் இழுத்துச் செல்லப்படும்போது,என் ஓவியங்கள் அழிகின்றன.

இந்த உலகத்தில் அம்மாவைத்தவிர இயற்கையே என் ஓவியத்திற்கு எதிராக இருந்த நேரத்தில்தான் செந்தில் அண்ணன் எனக்குப் பழக்கமானார்.

அம்மாவைத்தவிர என் ஓவியங்களைப் போற்றும் இன்னோரு நபர் என்றால் அது செந்தில் அண்ணனாகத்தான் இருக்க முடியும். அவரும் அம்மாவைப்போலவே எனக்கு ஓவியம் வரைவதற்கு ரொம்ப உதவியாக இருப்பார். இதுவரை அழுத்தமான வர்ணங்களைக் கொண்டு மட்டும் வரைந்து கொண்டிரு்த எனக்கு கறுப்பு வெள்ளையும் வர்ணம்தான் என்று புரிய வைத்தது செந்தில் அண்ணன்தான். அவர் “இவ்வுலத்திலேயே மனதுக்குள் இருப்பதை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு சிறந்த கருவியே ஓவியம்”, என்றார். அதுமட்டுமல்லாமல், ஓவியங்களில் பல வகை இருக்கிறதாம். பென்சிலில் மட்டுமே வரைந்து கொண்டிருந்த எனக்கு தண்ணீர் தெளித்தல், உறிஞ்சியை கொண்டு ஊதுதல், பழங்களின் அச்சுகளைப் பயன்படுத்தி ஓவியம் உருவாக்குதல் என நிறைய சொல்லிக் கொடுத்தார். ஓவியங்களைப் பற்றிய என் குறுகிய சிந்தனையை பரவலாக்கியது செந்தில் அண்ணன்தான். ஓய்வு நேரங்களில் நானும் அண்ணனும் பல தலைசிறந்த ஓவியர்களையும் அவர்களின் ஓவியங்களையும் பற்றி பேசியதுண்டு. அந்த ஓவியர்களின் பட்டியலில் நானும் ஓராளாக இருக்க வேண்டும் என்பது என் கனவு. அண்ணன் எனக்கு வழிகட்டியாக இருந்து எனக்குள் இருந்த திறமையை மெம்மேலும் வளர்த்து வைத்தார். அண்ணன் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் பல போட்டிகளில் முதல் பரிசைத் தட்டிச் செல்வதைக் கண்டு நான் மெய்சிலிர்த்து போனேன். ஓவியத்துறையில் அண்ணனுக்கு இருக்கும் திறமையைக் கண்டு நான் பிரமித்துக்கூட போயிருக்கிறேன்.

* * *

தண்ணீர் துளிகள் பட்டதும் எழுந்தேன். அப்போதுதான் இதற்கு முன்பு கராத்தே அடிபட்டு மயங்கி விழுந்ததை உணர்ந்தேன். “சுபா எழுந்திரு!உன்ன அடிச்ச அவள திருப்பி போய் அடி!போ!”, என்ற சத்தம் என்னைச் சுற்றிக் கேட்டது. “ஐயோ…இதற்குப் பேசாமல் இன்னும் கொஞ்சநேரம் மயங்கி விழுந்திருக்கலாம்…”, என்று நினைத்து பொய்யாக மயங்கினேன். இது பிடிக்காமல் அப்பா என் முகத்தில் மீண்டும் மீண்டும் தண்ணீர் தெளித்து முதுகைத் தட்டி நிலமையை இன்னும் மோசமாக்கினார். செய்வதறியாது கண்விழித்துப் பார்த்தேன். சுற்றி கூட்டமாக நின்றுக்கொண்டிருந்தனர். மூச்சுவிடுவதற்குக் கூட இடமில்லை.பத்து மலையில் முருகனுக்கு பால் ஊற்றுவதைப் பார்ப்பதைப்போல அனைவரும் என்னை சுற்றி குவிந்திருந்தனர். “என்னை இந்த நிலமையில் பார்ப்பதில் இவர்களுக்கு என்ன சந்தோசம்? இதுவரை ஒரு பெண் கராத்தே அடி வாங்கி மயங்கி விழுந்ததைப் பார்த்ததில்லைபோலும்”, என்று அந்த கூட்டத்தின்மேல் எறிந்து விழுந்தேன்.

பாரத்தையெல்லாம் கடவுளின்மீது போட்டுவிட்டு எழுந்து நின்றேன்.அப்பா கைப்பிடித்து களத்தினுள் தள்ளிவிட்டார். எந்த அப்பாவாவது பாழுங் கிணற்றில் தன் மகளைத் தள்ளி விடுவாரா?ஆனால், எங்கப்பா செய்வார். உள்ளே பயந்தாலும் வெளியே தைரியமாக நிற்பதுப்போலக் காட்டிக் கொண்டேன். மாஸ்டர் என்முன் வந்து நின்று “உன்னால இன்னும் போட்டிப்போட முடியுமா?”,என்றுக் கேட்டார். நான் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அப்பாவின் கண்கள் என்னை பயமுறுத்தியது. ‘முடியும்’, என்று சொல்லச் சொல்லி மிரட்டியது. பயத்துடன் மாஸ்டரைப் பார்த்து தலையாட்டினேன்.

இம்முறை இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஸ்பாரிங் போட தயாரானேன். மாஸ்டர் ‘ஸ்குதி அஜ்மி’ என்று சொல்லிய வார்த்தைகள் எனக்கு சங்கு ஊதுவதைப்போலக் கேட்டது. என் முன் நின்று கொண்டிருந்தப் பெண் என்னை வெறியுடன் பார்த்தாள். பிறகு, வேகமாக வந்து என் முகத்திலேயே வந்து குத்தினாள். மறுபடியும் டோஜோவின் ஓரத்தில் விழுந்தேன். இரண்டாம் முறை விழும்போது எனக்கு அது அவ்வளவு அவமானமாகத் தெரியவில்லை.ஏற்கனவே பழக்கமான ஒன்றைப்போல உணர்ந்தேன். டோஜோவுக்குள் அடிபட்டு சாவதைவிட இப்படி சுருண்டு விழுவது மேல் என நினைத்தேன். திடிரென, என் மூக்கிலிருந்து சொட்டு சொட்டாக ரத்தம் விழத் தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் நான் விழுந்த இடத்தில் இருந்த மேட் ரத்த கரையானது.என் நிலமையைக் கண்ட மாஸ்டர் இனிமேல் என்னால் மேட்சை தொடர முடியாது என்று முடிவு எடுத்து என்னுடன் சண்டைப்போட்ட வீராங்கனையை ‘கச்’ என்று கூறி அவள் ஜெயித்ததை அறிவிப்பு செய்தார். அவள் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகினாள். உள்ளுக்குள்ளே இதற்கு அப்புறம் சண்டைப்போட வேண்டாம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் வெளியே கண்ணிலிருந்து கண்ணீர் துளிகள் வருவதைப்போல நடித்தேன். பிறகென்ன சிரிக்கவா முடியும்? அப்பா பார்த்தாரென்றால் அவ்வளவுதான்…

வெள்ளை நிற ஆடை அணிந்த சிலர் என்னை தூக்கி டோஜோவின் வெளியில் படுக்க வைத்தனர். என் உடையெல்லாம் இரத்த கரையாகின. சிலர் என் உடையை சுத்தம் செய்து மூக்குக்கு கட்டு போட்டனர். சுற்றும் முற்றும் பார்த்தேன். அரங்கத்திலுள்ள அனைவரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். அது எதற்கு அடையாலம் என்று எனக்குத் தெரியவில்லை. என் கண்கள் அப்பாவைத் தேட ஆரம்பித்தது. அங்கு என் குடும்பத்தின் முக்கியமான கருப்பு பெல்ட் மாஸ்டர்கள் கோபமாக நின்று கொண்டிருந்தனர். மனதுக்குள் “பிள்ளைக்கு அடிப்பட்டா எல்லா அப்பாவும் ஆறுதல் சொல்லுவாங்க, ஆனா,எங்கப்பா மட்டும்தான் உலகத்திலேயே அடிபட்டதுக்கு ஏசுவாரு…….. எல்லாம் விதி!” என்று நினைத்துக்கொண்டு எழுந்து அருகில் சென்றேன். அப்பா என்னை அறையக் காத்திருப்பது போல நான் நடந்து வருவதைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். யாருமே ஒன்றும் பேசவில்லை. அப்பா மட்டும் நெருங்கி வந்தார். அவரின் கண்கள் மட்டும் என்னிடம் பேசியது. “இதற்காகவா நான் உன்னை பெத்து வளர்த்தேன், சுபா! நம்ம குடும்பத்தோடு மானத்தை வாங்கிட்டியே”, என்று அவரின் கண்கள் கண்ணீர் விட்டுக் கொண்டு பேசியது போல ஒரு பிரம்மை. அப்பா அரங்கத்தை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அம்மா, அண்ணன், தம்பி, தாத்தா அனைவரும் வெளியே சென்றனர்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதற்கு அப்புறம் சண்டை போட வேண்டாம் என்ற சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும் அப்பாவின் கனவில் நான் மண் அள்ளி கொட்டினேன் என்று துக்கம் ஒரு பக்கம். நானே என்னை அறைந்து கொள்ளலாமா என்று நினைத்தேன். அப்பா பேசாமல் போனது நான் அப்பாவின் மனதை மிகவும் காயப்படுத்தியதனால்தான் என்று என் மனம் கூறியது. ஆனால், “அதற்கு நான் என்ன செய்வேன்? பிடிக்காத ஒன்றை செய்..! செய்..! என்றால் யாரால்தான் அதை முழுமனதுடன் செய்ய முடியும்?”, என்று மூளை வாதாடியது. சுற்றும் முற்றும் பார்த்தேன். அனைவரும் டோஜோவில் ஓடிக்கொண்டிருந்த ‘பைனல்’ மேட்சை மும்முறமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சில நிமிடங்கள் கழித்து, என் மூக்கு நனைந்திருப்பதுப்போல உணர்ந்தேன். விரலால் மூக்கின் துளையைத் தொட்டுப் பார்த்தேன். விரலில் சிகப்பாக ஏதோ இருந்தது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, அது என் ரத்தம் என்பதை புரிந்துக் கொண்டேன்.

எனக்கு அவமானமாகவும் வெறுமையாகவும் இருந்தது. அப்பாவின் அந்தச் செயல் என்னை ஆழமான வருத்ததிற்குள் தள்ளி விட்டது. கண்ணிலிருந்து சொட்டு சொட்டாக கண்ணீர் வழிந்தது. கீழே குனிந்துப் பார்த்தேன். கண்ணீரோடு கட்டுப்போட்ட மூக்கிலிருந்து வந்த இரத்தமும் இருந்தது. சில வினாடிகள், அந்த இரத்தத்தோடு கண்ணீரும் கலந்திருந்தக் குளத்தை உற்றுப் பார்த்தேன். என் கண்கள் அதை நோக்கி இருந்தாலும் என் சிந்தனைகள் அலைப்போல பாயத் தொடங்கியது. எல்லாம் அப்பாவைப்பற்றிதான். “அவர்… அவர்… என்னை அறை.. அறைந்திருக்கலாம் அல்லவா? ஏன் அறையவில்லை? அப்பாவுக்கு… என்மேல அவ்வளவு கோபமா?”, என்று தேம்பிக் கொண்டே பேசத் தொடங்கினேன்.

திடீரென, என்னை அறியமாலேயே என் கையின் விரல் கீழேயிருந்த இரத்தத்தில் கிறுக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் அந்த கிறுக்கல் ஓவியமாக மாறத் தொடங்கியது.கொஞ்ச நேரம் கழித்துதான் நான் அந்த ஓவியத்தைப் பார்த்து புரிந்து கொண்டேன்.

அது என் அப்பா.

இதுவரை என் ஓவியங்களைப் பார்த்து திட்டிய அப்பா… கராத்தேவை எனக்கு அறிமுகப்படுத்திய அப்பா… அவரின் முகம். எனக்கே ஆச்சிரியமாக இருந்தது. எப்பொழுதும் என்னிடம் கோபமான முகத்தை வைத்துக் கொண்டு பேசும் அப்பா, என் ஓவியத்தில் மட்டும் சிரித்துக் கொண்டிருக்கிறார்.பதிலுக்கு நானும் சிரித்தேன்.மனதுக்குள் ஓரிடத்தில், “ஓவியத்தில் மட்டும்தான் நான் அப்பாவிடம் சிரித்துப் பேச முடியுமா? எனக்கு எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருக்கும் அப்பா கிடைக்கமாட்டாரா?”, என்ற ஏக்கம் இருந்தது. திடீரென, ஒரு குரல் கேட்டது. “ரொம்ப அழகா வரைஞ்சிருக்கியே, பாப்பா!”, என்று ஒலித்தது. அந்த அரங்கத்தை சுத்தம் செய்ய வந்த ஒரு மாது அவர். அவரது வார்த்தைகள் என் காதுகளில் தேனாகப் பாய்ந்தது. செந்தில் அண்ணனையும் அம்மாவையும் தவிர முதல் தடவை வெளி ஆள் என்னைப் பாராட்டுவது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நான் இதுவரை சாதிக்க நினைத்ததை சாதித்து முடித்து விட்டதைப்போல உணர்ந்தேன்.

எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நான் இன்று இந்த கராத்தே போட்டிக்கு வந்ததால் என் சக்தி, நேரம் எல்லாமே வீணாகிவிட்டது. ஆனால், எனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் எனக்கு கிடைத்துவிட்டது. அப்போது நான் முதல் முதலாக என்னையும் பல தலைச்சிறந்த ஓவியர்களின் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன்.

அந்த வயதானவரைப்பார்த்து சிரித்தேன். அவரும் சிரித்துவிட்டு ஒரு அழுக்குத் துணியால் என் ஓவியத்தைத துடைத்தார்.

3 கருத்துகள் for “சண்டை

 1. நேத்திரா
  June 1, 2013 at 6:06 pm

  gOod story. Yaame endraall japan mozhiyil stop. Karate aaraaitchi sirappu. Well done.

 2. June 13, 2013 at 3:58 pm

  wow..doesn’t look like you are 16..awesome talent girl!l:)

 3. July 13, 2014 at 11:43 am

  நல்ல கற்பனை திறன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...