விலங்குகள்

1421420841644மீண்டும் நிர்வாகத்திடமிருந்து அதே மின்னஞ்சல் வந்திருந்தது. இம்முறை, பல்கலைக்கழக வளாகத்தில் திரியும் விலங்குகளுக்குத் தீனி போடக்கூடாது என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பல்கலைக்கழகம் அமைந்திருந்த பெரிய நிலப்பரப்பில் விலங்குகள் திரிவது நிர்வாகத்திற்கு நெருடலாக இருந்தது. அவை ஆதியிலிருந்து அங்குதான் திரிந்து கொண்டிருந்தன. இப்போதும் அங்குதான் திரிந்து கொண்டிருக்கின்றன. பதினான்கு வருடங்கள் முன்பாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு அது சிக்கலாக இருக்கின்றது. மாணவர்களுக்கு விலங்குகளால் ஆபத்து ஏற்படுமென நிர்வாகம் கருதியிருக்கலாம். அதற்கான நடவடிக்கைகளில் ஒன்றுதான் மேற்கண்ட மின்னஞ்சல்.

பல்கலைக்கழக வளாகத்தில் விலங்குகளா? என நீங்கள் யோசிக்கலாம். ஆம், விலங்குகள் இருக்கின்றன. ஆனால் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்த விலங்குகள் பூனைகளும் நாய்களும்தான். இவற்றுக்கு உணவளிப்பதை நிர்வாகம் சாடியது. சில நல்ல உள்ளங்கள் அவற்றுக்கு உணவளிப்பது அவற்றின் பெருக்கத்திற்குக் காரணமாக இருந்தது. நாய்கள், வளாகத்தில் அங்குமிங்குமாக திரிந்துகொண்டிருந்தன. குறிப்பாகப் பூனைகள் சிற்றுண்டிச்சாலைகளில் அதிகம் திரிந்தன. அது சுகாதாரத்தை மட்டுமன்றி பல்கலைக்கழகத்தின் தோற்றத்தையும் பாதிக்குமென கருதப்பட்டது. நாய்கள் மட்டும் அதிரடியாக காணாமல் போயிருந்தன. பூனைகள் மறைந்து வாழப் பழகியிருந்தன. மறைந்து வாழும் பூனைகளுக்கு மறைமுகமாக உணவளிப்பது யார் மூலமோ நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதை அறிந்துதான் நிர்வாகம் மீண்டும் ஒருமுறை எல்லோருக்குமாக அம்மின்னஞ்சலை அனுப்பியிருந்தது.

பூனைகளும் நாய்களும் தவிர்த்து வளாகத்தின் வெளியே எருமைகள் மேய்வதுண்டு. சில எருமைகள் உள்ளேயும் மேய்வதுண்டு. ஆனால் இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அவற்றுள் ஒன்று, வெளியில் மேயும் எருமைகளினால் நமக்கு எந்தச் சிக்கலும் இல்லை. மாறாக உள்ளே இருக்கின்ற எருமைகளால் ஏக சிக்கல்கள் ஏற்படும். உஷாராக இரவு வேளைகளில் மட்டுமே வெளியில் திரிந்துகொண்டிருந்த காட்டுப்பன்றிகள் துரதிஷ்டவசமாக சிலமுறை மாணவர்களின் கண்களுக்குத் தென்பட்டுவிட்டது. இப்படியாக விலங்குகள் சுற்றித் திரிவது நிர்வாகத்தின் காதுக்குப் போய்ச் சேர, வளாகம் சுற்றிலும் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட்டிருந்தது. அதில் ‘விலங்குகள் ஜாக்கிரதை’ என வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது உடலைத் தூக்கிக்கொண்டு நடக்கும் நீர் உடும்புகள் மனிதர்களைக் கண்டதும் தலைதெறிக்க ஓடி மறைந்தபோது, எச்சரிக்கைப் பலகை யாருக்கானது என்பதில் சற்று குழப்பம் ஏற்பட்டது.

‘விலங்குகள்’ என்பதில் பறவைகளும் அடங்கியிருந்தன.  நான்கு திசைகளிலும் ஏரிகள் சூழ்ந்திருக்க அதன் நடுவே அமையப்பெற்ற பல்கலைக்கழக வளாகம் அழகிய மரங்களால் நிறைந்திருக்கும். அதில் வகை வகையான பறவைகளைக் காணலாம். மலைக்குருவி, மாடப்புறா, மணிப்புறா, பச்சைப்புறா இன்னும் பல. அதைத் தவிர்த்து ஏரிப்பகுதிகளில் நாரை, கொக்கு என ஆக்கிரமித்திருக்கும். பொதுவாக நாரையும் கொக்கும் யாரையும் அண்டாது. அவை எப்போதும் தனித்தே இருக்கும். அவை யாருக்கும் சிக்கலாக இருந்ததில்லை. ஆக நிர்வாகத்திற்கும் அவற்றால் எந்த சிக்கலும் இல்லை. மாறாக, சிறு பறவை, குருவி வகைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் செலவினங்களை அதிகரித்துக் கொண்டிருந்தன. அலுவலகம் சுற்றிலும் ஆலம் வகையிலான மரங்கள் இருந்தன. அவற்றில் விழுதுகள் விட்டிருக்கும். பழம்போன்று விதைகள் காய்த்திருக்கும். அவற்றைத் தின்னும் பறவைகள் அலுவலகக் கட்டிடத்தின் மீது எச்சங்களை நிறைத்திருந்தன. அதுவொரு புறமிருக்க மாடப்புறாக்கள் கட்டிடத்தின் இடைவெளிகளில் கூடுகட்டி அடைகாத்துக் கொண்டிருந்தன. சிலசமயம் உயரத்திலிருந்து விழும் அதன் முட்டைகள் நடைபாதையில் தெறித்து விழுந்திருக்கும். அது ஒரு மாதிரியான கவிச்சி வாடையை வீசிற்று.

பறவைகளின் எச்சத்தைக் கழுவியெடுப்பது துப்பரவு பணியாளர்களுக்குக் கூடுதல் வேலையாக மாறியது. துப்புரவு பணியாளர்களுக்குப் பறவைகளின் எச்சத்தைக் கழுவியெடுப்பதைக் காட்டிலும் நாங்கள் பயன்படுத்தும் கழிவறையைக் கழுவியெடுப்பது பெருங்கொடுமையாக இருப்பதாக பலமுறை நொந்துகொண்டுள்ளனர். துர்நாற்றம் வீசுவதாக எழுந்த தொடர் புகார்களினால் நிர்வாகம் அதிரடி முடிவை எடுத்தது. முடிவின் விளைவாக, கன்றுகளாக நடப்பட்டவை மரங்களாக வெட்டியெறியப்பட்டன. மரங்கள் இல்லாது அலுவலக வளாகம் மொட்டையாகத் தெரிந்தது. மரங்களை இழந்த பறவைகள் வாகன நிறுத்துமிடத்திற்கு மாற்றலாகி இருந்தன. விருப்பமில்லாத குடிப்பெயர்வில் பறவைகள் விரக்தி அடைந்திருந்தன. அவை தங்களின் எதிர்ப்பை வாகனங்களின் மீது எச்சங்களாகக் கொட்டித் தீர்த்திருந்தன.  பறவைகள் குறைந்திருந்தாலும் மாடப்புறாக்களுக்கு என்ன வழி என யோசித்தபோது, வெளியாட்கள் வரவழைக்கப்பட்டு கட்டிடடத்தின் இடைவெளிகளில் வலைக்கம்பிகள் பொருத்தப்பட்டன. அது நிர்வாகத்திற்கு நல்ல பலனை அளித்திருந்தது.

மிகச் சிறந்த நிர்வாகத் திறமையால் விலங்குகளின் நடமாட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டம் கட்டமாக குறைக்கப்பட்டது குறித்து சந்திப்பு கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இனி பல்கலைக்கழக வளாகம், விலங்குகளிடத்திலிருந்து எல்லோருக்கும் பாதுகாப்பானது என நிம்மதியாக நடமாட ஆரம்பித்தோம் மனிதர்களாக.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...