ஃபெர்னான்டோ சொரன்டினோ சிறுகதைகள்

images

தலைப்பு : பீடை

ஆங்கில மொழியாக்கம் : மிஸ்ஸேல் மிக்கேய் எயின்ஸ்வெர்த்

நவம்பர் எட்டு என் பிறந்தநாள். முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் உரையாடி என் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவதாக திட்டமிருந்தது.

இது நடக்கும்போது காலை பத்து மணி இருக்கும்.

புளோரிடாவுக்கும் கோர்டோபாவுக்குமான மூலையில், அறுபது வயதுக்குட்பட்ட ஒருவரை நிறுத்தினேன். வலதுகையில் ஒரு பெட்டியுடன் மிக நேர்த்தியாக உடையணிந்து வழக்கறிஞரைப் போலவோ பத்திரங்களுக்கு அதிகாரப்பூர்வ சான்று வழங்கும் அலுவலர் போலவோ, முக்கியமானவர் போன்ற தோரணையில் அவர் காட்சியளித்தார்.

“ஐயா,” நான் கேட்கத் தொடங்கினேன், “பிளாசா டி மயோவுக்கு எப்படி செல்வதென்று தயவு செய்து சொல்ல முடியுமா?”.

நின்ற வேகத்தில் சட்டென ஒரு பார்வை வீசி “நீங்க பிளாசா டி மயோவுக்கு போகணுமா இல்லை அவனிடா டி மயோவுக்கு போகணுமா?” என சற்றும் பிரயோசனமற்ற கேள்வியொன்றைக் கேட்டார் அம்மனிதர்.

“நான் பிளாசா டி மயோவுக்குச் செல்லவே விரும்புகிறேன், ஆனால் அது சாத்தியமில்லை என்றால் வேறெங்காவது செல்வதென்றாலும் எனக்கு சிக்கல் இல்லை.”

“அப்படினா சரி,” என்று கூறியவர் என்னைக் கொஞ்சமும் கவனிக்காமல் ஆர்வமாக எனக்குப் பாதை சொல்ல ஆரம்பித்தார். “அந்த வழியே போங்க..” – தெற்கு நோக்கி சுட்டிக்காட்டி – வியாமொந்தெ, துக்குமன், லவேல் எல்லாத்தையும் கடந்து”

இப்படியே எட்டு தெருக்களை நான் கடந்து செல்ல வேண்டியிருப்பதாகக் கூறி என்னை எரிச்சலடைய வைப்பதில் அவர் மகிழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். அவர் பேச்சில் குறுக்கிடத் தீர்மானித்தேன்.

“நீங்க சரியாதான் பாதையைச் சொல்றீங்களா?”

“ஆமாம்”.

“நீங்க சொல்வதைச் சந்தேகப்படுவதற்காக மன்னிச்சிடுங்க” நான் விளக்கினேன். “ஆனால் கொஞ்ச நேரத்துக்கு முன்பு ரொம்ப புத்திசாலித்தனமான முகத்தோற்றத்தில் இருந்த ஒருவர் பிளாசா டி மயோவுக்குப் போக வேறொரு பாதையைச் சொன்னார்.” நான் பிளாச சான் – மார்ட்டினை நோக்கி சுட்டிக்காட்டினேன்.

“இந்த நகரம் குறித்த அறிமுகமில்லாத ஒருவராகத்தான் இருக்க வேண்டும்” என மட்டும் பதிலளித்தார்.

“இருந்தாலும், நான் முன்பே சொன்னதுபோல அவர் பார்ப்பதற்கு ரொம்ப புத்திசாலியா இருந்தார். உங்களை விடவும் அவர் சொன்னதைத்தான் என்னால் நம்ப முடியிது.”

என்னை முறைத்து பார்த்துவிட்டு, “ஏன் என்னைக் காட்டிலும் அவரைத்தான் உங்களால் நம்ப முடியிது? சொல்லுங்க?”.

“உங்களுக்கு பதிலாக நான் அவரைத்தான் நம்புகிறேன் என்று இல்லை. ஆனா நான் சொன்ன மாதிரி அவருக்கு புத்திசாலி மாதிரியான தோற்றம் இருந்தது.”

“அப்படினா என்னைப் பார்க்க முட்டாள் மாதிரி தெரியிதா உங்களுக்கு?”

“இல்லை, இல்லை!” நான் அதிர்ந்தேன். “யார் உங்களை அப்படிச் சொன்னது”

“நீங்கதானே அவரது முகத்தைப் பார்க்க புத்திசாலி மாதிரித் தெரிந்தது என்று சொன்னீங்க…”

“உண்மையாகவே அவருக்கு புத்திசாலி போன்ற தோற்றம் இருந்தது.”

என்னிடம் சச்சரவுக்கு உட்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்து கொண்டிருந்தார்.

“நல்லது ஐயா,” என்றவர், “நான் அவசரகதியில் இருக்கிறேன். அதனால் உங்களிடம் விடைபெற்று என் வழியில் செல்கிறேன்.”

“சரி, ஆனால் நான் எப்படி பிளாசா சான் மார்டினுக்குப் போவது?”

கிளறியெழுந்த கடும் எரிச்சலை சட்டென சுறுங்கிய அவரது முக தசைகள் அப்படியே காட்டிக்கொடுத்தன.

“நீங்கள் பிளாசா டி மயோவுக்கு போகப் போவதாகத் தானே சொன்னீங்க?”

“இல்ல, பிளாசா டி மயோ இல்ல. நான் பிளாசா சான் மார்டினுக்குப் போகனும். நான் பிளாசா டி மயோவைப் பற்றி எதுவுமே சொல்லலியே.”

“அப்படினா,” இப்போது அவர் வடக்கு நோக்கி சுட்டிக் காட்டினார். “கேல் புளோரிடாவிலிருந்து பராகுவேவை கடந்து…..”

“என்னைப் பைத்தியம் ஆக்குறீங்க!” என் எதிர்ப்பைத் தெரிவித்தேன். “முதலில் நீங்க என்னை எதிர்திசை நோக்கிதானே போகச் சொன்னீங்க?”

“நீங்க பிளாசா டி மயோவுக்கு போகணும்னு சொன்னதால அதற்கான பாதையைக் காட்டினேன்!”

“நான் பிளாசா டி மயோ பற்றி எதுவுமே கேட்கல! எப்படி நான் அந்த இடத்தைப்பற்றி கேட்டிருக்க முடியும்? ஒன்று உங்களுக்கு இந்த மொழி தெரியல, அல்லது நீங்கள் இன்னும் அரை தூக்கத்தில் இருக்கறீங்க.”

இப்போது அவர் மொத்தமாய் சிவக்கத் தொடங்கினார். அவரது வலது கை பெட்டியின் பிடியை இறுக்கியதைப் பார்த்தேன். மீண்டும் சொல்லிப் பார்க்க முடியாத வார்த்தைகளைச் சொல்லிவிட்டு ஆக்கிரோஷமான நடையை மேலும் துரிதப்படுத்தி அங்கிருந்து பரபரத்தார்.

அவர் கொஞ்சம் மன அமைதி இழந்திருப்பதை நான் உள்ளூர உணர்ந்தேன்.

 

தலைப்பு : இயல்பும் கற்பிதமும்

ஆங்கில மொழியாக்கம் : கிளார்க் எம் ஸ்லோச்சியு

ஜூலை 25ஆம் தேதி, நான் Aவை தட்டச்சு செய்ய முயலும்போது, என் இடதுகை சுண்டுவிரலில் இலேசான கரணை ஒன்றைக் கவனித்தேன்.  27ஆம் தேதி அது கணிசமாகப் பெரிதாகியிருந்தது. ஆகஸ்ட் மூன்றாவது நாள், நகைக்கடை ஒன்றிலிருந்த சிறு உருபெருக்கியின் உதவியுடன் என்னால் அதன் வடிவத்தைக் கண்டுகொள்ள முடிந்தது. அது மிகச் சிறிய வகை யானை: உலகின் மிகச்சிறிய யானை, ஆம், ஒரு யானையின் மிகச்சிறிய உருவம் அது. அதன் சிறிய வாலின் முடிவில் என் விரல் இணைக்கப்பட்டிருந்தது. என் சுண்டுவிரலின் கைதியாக இருந்ததால், அக்குட்டி யானையால் மிகச் சுதந்திரமாக இயங்க முடிந்தது. ஆனால் அதன் மொத்த நகர்ச்சியும் என் விருப்பத்தைச் சார்ந்தே இருந்தது.

மிகுந்த பெருமிதத்துடனும் பிரமிப்புடனும் சற்று தயங்கியபடியே முதல் முதலாக என் நண்பர்களுக்கு அதைக் காட்டினேன்.  அவர்கள் அதனை எதிர்க்கத் தொடங்கினார்கள். கைச்சுண்டுவிரலில் யானையெல்லாம் இருக்கக் கூடாதென்றும் உடனடியாக தோல் மருத்துவரை பார்க்கும்படியும் அறிவுரை கூறினார்கள். நான் அவர்களது அறிவுரைகளைக் கடுமையாக எதிர்த்தேன். யாருடைய ஆலோசனையையும் கேட்க மறுத்தேன். மேற்கொண்டு யாரிடமும் எதுகுறித்தும் பேசாமல் முற்றிலும் அந்த யானையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

ஆகஸ்டு மாத இறுதியில் அது அழகான சிறிய சாம்பல் யானையாகி இருந்தது. என் சுண்டுவிரல்வரை நீண்டும் தடிமனாகியும் விட்டிருந்தது. எல்லா நேரமும் நான் அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். சமயங்களில் அதைத் தொந்தரவு செய்தும், கிலுகிலுப்பூட்டியும் மகிழ்ந்திருந்தேன். தீப்பெட்டி, பென்சில் தீட்டி, அழிப்பான் போன்ற சிறுசிறு தடைகளைத் தாண்டி  குட்டிக்கரணங்கள் செய்ய அதற்குக் கற்றுக் கொடுத்தேன்.

சிலநாட்களில் அதற்கு ஞானஸ்தானம் செய்வது பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது. ஒரு யானைக்கு உரிய நேர்த்தியான பெயரை யோசிக்கத் தொடங்கினேன். டம்போ, ஜம்போ, யம்போ…. என சில வேடிக்கையான பெயர்களையெல்லாம் யோசித்து இறுதியில் மிகுந்த கலையுணர்வுடன் அதனை யானை என்று மட்டுமே அழைக்க முடிவும் செய்தேன்.

ஒவ்வொரு முறையும் யானைக்கு உணவு கொடுப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கீரைகள், ரொட்டித் துண்டுகள், புற்களை மேசைமீது சிதறிவிட்டேன். ஏதாவதொரு விளிம்பில் ஒரு சிறு சாக்லெட் துண்டையும் போட்டு வைத்தேன். உடனே யானை தன் உணவுக்காகப் போராடத் தொடங்கும். நான் என் கையை இறுகப் பிடிக்கும்போது யானையால் உணவை நெருங்கக்கூட முடியாமல் போகும். இப்படியான தருணங்களிலெல்லாம் யானை என் உடலின் ஒரு பகுதி – என்னுடைய மிக பலவீனமான பகுதி – என்பதை மீளுறுதி செய்துகொள்வேன்.

மிகக் குறுகிய காலத்திற்குப்பின் – யானை ஒரு எலி அளவுக்கான வளர்ச்சியை அடைந்த பிறகு என்று வைத்துக்கொள்வோமே – என்னால் யானையை அவ்வளவு எளிதாக என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போனது. என் சுண்டுவிரலால் அதன் கட்டுக்கடங்காத சேட்டைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் போனது.

அப்போதுவரை யானையின் வளர்ச்சி குறித்து நான் தவறான எண்ணத்தில் இருந்தேன். யானை ஒரு ஆட்டுக்குட்டியின் அளவினை அடைந்தபோது என் கணிப்பு தவறானது: அந்த நாளில் நான் கூட ஒரு ஆட்டுக்குட்டி அளவில்தான் இருந்தேன்.

அந்த இரவு – மற்றும் சில இரவுகளில் – நான் கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்தேன். என் இடது கை கட்டிலிலிருந்து துருத்திக்கொண்டு தொங்கியது; தரையில் என் மிக அருகில் யானை உறங்கியது.  அதன் பிறகு, யானை மேல் – முகம் கீழே தொங்கியபடி, அதன் முதுகில் என் தலை வைத்து, கால்களை அதன் பின்புறத்திலும் கிடத்திதான் நான் தூங்கவேண்டியிருந்தது. மிக விரைவிலேயே அதன் இடுப்புப் பகுதி மட்டும் நான் படுப்பதற்கு போதுமானதாக இருந்தது. பிறகு அதனுடைய வால். அதன்பிறகு அதன் வாலின் மிகச் சிறு புள்ளியாக, ஒரு சிறிய கரணையாகி, முற்றிலும் கண்ணுக்குப் புலப்படாமல் போனேன்.

அந்தக் கணத்தில், நான் மறைந்து, நானாக இருப்பது முடிந்துபோய், யானை வாலின் ஒரு மில்லிமீட்டராகி விடக்கூடும் என பயம் வர ஆரம்பித்தது. பின்னர் என் கலக்கம் நீங்கி, நன்றாகச் சாப்பிடத் தொடங்கி விட்டிருந்தேன். எஞ்சிய துணிக்கைகள், பறவை தானியங்கள், மிஞ்சியப் புற்கள், நுண்ணிய பூச்சிகள் என அனைத்தையும் சாப்பிடப் பழகிக் கொண்டேன்.

உண்மையில் இதுவெல்லாம் என் முந்தைய நிலைதான். இப்போது நான் மீண்டும் யானை வாலில் ஒரு மதிப்பார்ந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கிறேன். நான் வாழ்வாதாரத்திற்காக இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன், அதுவும் உண்மைதான். இருந்தபோதும் இப்போதும்கூட முழு ரொட்டித் துண்டுடன் – கண்களுக்குப் புலப்படாமல் – வெற்றிக்கொள்ள முடியாதபடி – மிருகக்காட்சி சாலைக்கு வருபவர்களை கண்காணித்துக்கொண்டேதான் இருக்கிறேன்.

விளையாட்டின் இந்தக் கட்டம்வரை நான் மிகவும் நம்பிக்கையுடன்தான் இருக்கிறேன்.  யானை சுருங்கத் தொடங்கியுள்ளதைக்கூட நான் அறிவேன். விளைவாக, என் மேன்மைகள் குறித்த உணர்வினை எங்கள் முன் ரொட்டித் துண்டுகளை வீசி எறியும் அந்த பொறுப்பற்ற வழிப்போக்கர்களிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  தங்களுக்கு முன் வெளிப்படையாகத் தெரிவதாலதை நம்புகிறார்களே ஒழிய அந்த யானை அதன் உள்ளுறைந்தபடி பொறுமையாகக் காத்திருக்கும் ஒரு சாரத்தின் வெறும் எதிர்கால கற்பிதமன்றி வேறொன்றுமில்லை என்பதை மட்டும் ஏனோ அவர்கள் சந்தேகிக்கவேயில்லை.

தமிழில் மொழியாக்கம் : விஜயலட்சுமி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...