இன்னும் பேசுவதற்கு…

shanavas“இந்த பூமி பாரதீஸாக மாறும் காலம் வரும்போது காது கேளாதோரின் செவிகள் கேட்கும். (ஏசய்யா 35.5, பொது மொழிபெயர்ப்பு)

நாங்கள் உரையாட ஆரம்பித்தோம், இருவரும் மாறிமாறி சைகையால் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பக்கத்து இருக்கையில் இருந்த நபருக்கு இதில் யார் வாய்பேச முடியாதவர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. உரையாடல் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருக்கும்போது இன்னொருவரும் எங்களைக் கவனிக்க ஆரம்பித்தார். கலிமுல்லாவின் தொடைகளில் தட்டி, மணி என்ன? என்று கேட்பதுபோல் பாவனை செய்தார். கலிமுல்லாவுக்கு என்னுடன் பேசும்போது இம்மாதிரி யாராவது குழப்பம் அடைவது விருப்பமாக இருப்பதை நான் அறிந்திருக்கிறேன் அதனால் நான் அப்போது அமைதியாக இருந்து விட்டேன். இருவருமே ஊமைகள்தான் என்று அப்போதைக்கு அவர்கள் முடிவுக்கு வந்து எங்களை பச்சாதாபத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

கலிமுல்லா என் தூரத்து உறவினர்; வாய், காது குறையுள்ளவர். சுத்தமாக பேசவும், கேட்கவும் இயலாது. நான்  சிறுவயதிலிருந்து அவர் சைகை மொழியை பொறுமையாகக் கேட்க ஆரம்பித்து, அவர் சொல்லவருவதை துல்லியமாக அவர் குடும்பத்துக்கே தெரிவிக்கும் தூதனாக மாறிவிட்டேன். காதுகேளாதோர் பள்ளியில் தொடக்கப்பள்ளியை முடித்துவிட்டு தொழிற்கல்வியில் சேர இருந்தநாட்களில் கலிமுல்லா, தான் பள்ளியில் கற்ற குறியீட்டு மொழியை எனக்கும் கற்றுத்தர ஆரம்பித்தார். முதலில் எண்கள். அத்தனை எண்களையும் கால், கைகளில் உள்ள விரல்களின் அடையாளத்தில் அடக்கிவிடலாம்.

நாட்கள் செல்லச்செல்ல அவருடன் நான் பேசஆரம்பித்தபோது கைகளே மொத்த எண்களுக்கும் போதுமானதாக இருந்தது. 20 எனில் இரண்டு விரல்களைக் காண்பித்து பக்கவாட்டில் இழுத்து விடவேண்டும். 21 என்றால் பக்கவாட்டில் இழுத்தது போக ஒற்றை விரலையும் சேர்த்துக் காண்பிக்க வேண்டும். 99 வரை இதேமுறைதான். 100 என்றால் “சீவிடுவேன்” என்று சொல்வது மாதிரி ஒற்றை விரலைக் கீழ்நோக்கி இழுக்கவேண்டும். இது 9000 வரைக்கும் ஓக்கே. பத்தாயிரம் என்றால் ஒரு விரலைச் சுட்டி செவ்வாய்மேட்டில் கட்டைவிரலைத் தொடவேண்டும். கலிமுல்லாவின் அருகில் நான் இல்லாதபோது அவருடைய குடும்பத்துக்கே தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார். அவர் இன்னும் ஆங்கில எழுத்துகளின் குறியீட்டு முறைகளைச் சொல்ல ஆரம்பித்தபோது எனக்கு அதில் சிரமம் இருந்தது. அதன்பிறகு எழுதிக் காண்பிக்க ஆரம்பித்தபோது அவர் எழுத்துகளை விரல் சைகையால் கொண்டு வருவதற்குத் தேவையில்லை என்று கலிமுல்லாவே முடிவு செய்துகொண்டு எனக்குப் பயிற்சியை முடித்துக்கொண்டார். சார்லஸ் மைக்கேல் அப்பிதே லெஃபீ (1712-1789) என்பவர்தான் காது கேளாதோருக்கான முதல் சைகை மொழியை உருவாக்கியவர். அவருடைய பிரான்சின் சைகை மொழி (FSL) இன்னும் சிலநாடுகளில் புழக்கத்தில் உள்ளது. வழக்கம்போல் அமெரிக்கர்கள் சும்மா இருப்பார்களா  என்ன? 1816-ல் தாமஸ் கலாவெஸ் என்பவரால் அது கொஞ்சம் நவீனமாக்கப்பட்டு அமெரிக்க சைகை மொழி (ASl) ஆனது.

குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளமுடியாத மொழிகளைப் பேசுபவரிடம் கூட நெடுங்காலமாக சைகை மொழியில்தான் உரையாடல் நடந்திருக்கிறது. வட அமெரிக்காவில் பல்வேறு வம்சாவழி இந்தியப் பழங்குடியினர் சைகை மொழியிலேயே 19ஆம் நூற்றாண்டு வரை உரையாடி வந்திருக்கின்றனர் சைகை மொழி பிரபலமானவர்களின் மேனரிசத்திலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

கலிமுல்லாவுக்கும் எனக்கும் நட்புக்காலம் 80களில் ஆரம்பித்தது அவர் அப்போதைக்கு இருந்த நடிகர்,shanavas நடிகைகளுக்கு ஒரு சைகை  அடையாளத்தை  தானே உருவாக்கி வைத்திருந்தார். அது ஒருவேளை அவர்கள் பொதுவில் பேசிக்கொள்ளும் ஒருங்குகுறியாகவும் இருந்திருக்கலாம். MGR-க்கு இரட்டைநாடி, ஆள்காட்டி விரலை தாடையில் வைத்து  கீழ்நோக்கி இழுக்க வேண்டும். சிவாஜிக்கு ஒற்றைநாடி, ஆள்காட்டி விரலை தாடையில் மடக்கி வைத்து காண்பிக்க வேண்டும், ஜெமினி கணேசனுக்கு கன்னத்தில் இட்லி போன்று வைத்து காண்பிக்கவேண்டும், ரவிந்திரனுக்கு தலையை முன்னால் இழுத்து விடுவது மாதிரி (ரஜினி இதைத்தான்  காப்பி பேஸ்ட் பண்ணியிருக்க வேண்டும்), கே.ஆர்.விஜயாவுக்கு காதில் ஜிமிக்கி  ஆடுவது போல், ஜெயலலிதாவுக்கு நெற்றியில் பொட்டு வைத்து கன்னத்தில் வழுவழுப்பு காட்ட வேண்டும். சந்திரபாபு, நம்பியார், மனோகர், கிட்டத்தட்ட துறை குணச்சித்திர நடிகர்கள்வரை எனக்கு அத்துப்படி.

காந்திக்கு வயிற்றில் குண்டுபாய்ந்த அடையாளத்தைக் காண்பித்து வயதானோரைப்போல் நடித்துக்காட்ட வேண்டும். சில நாட்களில் காந்தியின் வயிற்றில் குண்டுதுளைத்த குறியீடு அல்ல, வயிற்றில் அவர் கட்டியிருக்கும் கைக்கடிகாரம் என்று என்னைத் திருத்தினார். கருணாநிதிக்குக் கண்ணாடி, நரசிம்மராவுக்கு வாயைத்திறக்காத பூட்டு என்று அவர் குறியீடுகள்  அரசியல்வாதிகளை அதிகாரத்தில் இருந்தபோது ஒருவிதமாகவும் அதிகாரத்தில் இல்லாதபோது வேறு மாதிரியும் மாறிக் கொண்டிருந்தது. சினிமாவைப்பற்றி உரையாடினால் மிகுந்த உற்சாகம் அடைந்துவிடுவார் கலிமுல்லா.

‘கோஷிஷ்’  இந்திப்படத்தில் சஞ்சீவ் குமார் மற்றும் ஜெயா பச்சன் மிகவும் தத்ரூபமாகக் காது கேளாத, வாய் பேசாத கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். அதன்  தழுவல் தமிழில் கமலஹாசன், சுஜாதா நடிப்பில் வந்தது.  அதன்பிறகு வந்த ‘மொழி’ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு மாற்றுத்திறனாளிகளின் உலகை அப்போதுதான் சிலர் புரிந்துகொண்டது போல் நடிப்பார்கள். ‘பர்ஃபி’  சினிமாவை கலிமுல்லா பலதடவைகள் திரும்பத் திரும்பப் பார்த்து அந்தக்கதையை என்னிடம் சொன்ன நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளது. காது கேட்காத, வாய்பேச இயலாத ஒரு மாற்றுத்திறனாளியான இளைஞன் அதேபோன்ற ஒரு இளம்பெண்ணைக் கடத்தி மணக்கும் கதை அது. சிலநேரங்களில் அவருடன் நான் உரையாட ஆரம்பித்து அது ஏதாவது புரியாத புள்ளியில் மாட்டிக்கொள்ளும். அதேபோன்ற நிலை மற்ற நண்பர்களின் உரையாடல்களிலும் சிலசமயங்களில் ஏற்படத்தானே செய்கிறது.

ஊமை விழிகள், ஊமைப் பட்டாசு, ஊமை உள்ளம் என்று புனைவுலக ஜாம்பவான்கள் எது வேண்டுமானாலும் பெயர் வைத்துவிட்டுப் போங்கள் ஆனால், ‘ஊமை கனவு கண்டால்’ என்ற சொலவடை மிகவும் கொடுமையானது. ஏன் அவர்களால் கனவை வெளிப்படுத்தவோ நனவாக்கவோ முடியாதா என்ன? பலதடவைகள் அவரின் கனவுகளை என் முன்னால் காட்சியாக்கி இருக்கிறார். கிண்டியில் ஒரு பெரியநிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்று பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

உணர்ச்சிகரமாக, ஆனால் எந்தச் சொற்சிக்கலும் இல்லாமல் மயக்கும் மொழியில்லாமல்  பேச இயலும் அல்லது நான் பேசவிரும்பும் நண்பனாக கலிமுல்லா இன்னும் இருக்கிறார்.

அவரைப் போன்றவர்களுக்குத்தானே மானுடத்தை நோக்கிப்பேசும் குரல் வாய்த்துவிட்டிருக்கிறது. நாம் அறிந்தும் அறியாமலும் தத்தளிக்கும் சத்தியம் அவர்களின் குரலில் ஒலிப்பதாகவே நான் நினைத்துக்கொள்வேன்.

1 comment for “இன்னும் பேசுவதற்கு…

  1. August 3, 2016 at 12:24 am

    2012 டில் நான் ஒரு சிறுகதை எழுதினேன்
    அது பிரிக்பீல்ட்ஸ் (ஜாலான் துன் சம்பந்தன்) லீடோ தியேட்டருக்கு பின் புறம் உள்ள உணவகத்தில் சனிக்கிழமைகளில் காது கேளாதோர்
    வாய் பேசாதோர் ஒன்று கூடுவார்கள்.
    அவர்களின் சைகளைப்பார்ப்பதற்கே அங்கே போவேன். ஒருசீனப்பெண்ணும்
    தமிழனும் தனியாக அமர்ந்திருப்பார்கள். இருவரும் காதலர்கள். அவன் காட்டும்
    சைகைகளில் அவளின் முகம் தாமரைபோல் சிவக்கும். சில நேரங்களில் அவனின் வேகமான சைகைகளை அவள் அதிசயமாக விழி
    மலர பார்த்துக்கொண்டிருப்பாள். அவனின் சைகை நின்றவுடன் அவள்
    பலமாக கைதட்டுவாள். ஏதும் காதல் கவிதையைச் சொல்லியிருப்பானோ?
    அந்த இருவரையும் வைத்துத்துத்தான்
    அந்த கதையை எழுதியிருந்தேன. அந்த
    உணவகத்தைச்சுற்றிதான் கண்பார்வையற்றோர்களுக்கான நிறுவனமும் உள்ளது. காதுகேளாதோர்
    வாய் பேசமுடியாதவர்களின் பள்ளிக்கூடமும் அங்கே தான் உள்ளது.
    ஒருநாள் நானும் ரெ.சண்முகமும் அங்கே
    போயிருந்த பொழுது எங்களோடு நண்பர்களும் வந்திருந்தார்கள். பொதுவாக. ரெ.ச .இப்படியான இடங்களில் எவ்வளவு கேட்டுக்கொண்டாலும் பாட மாட்டார்.
    நாங்கள் போயிருந்த நேரம் பக்கத்து மேசையில் ஒரு இளைஞர் அமர்ந்து
    ரெ.சாவையே பார்த்துக்கொண்டிருந்தார்.
    பிறகு ரெ.சாவிடம் ஒரு துண்டுத்தாளை
    நீட்டினார். தனக்கு பேச வராது என்றும்
    காது கேட்குமென்றும் சைகையில் காட்டினார்.அந்தத்துண்டுத்தாளில்
    A.M .RAJA பாடிய ‘கண்ணிழந்த மனிதனிதர் முன்னே ஓவியம் வைத்தார் ‘
    என்ற பாடலை பாடும்படி கெட்டிருந்தார்.
    அவருக்காக ரெ.ச .அந்தப்பாடலை பாடினார்.வாய்பேசமுடியாத அந்த இளைஞர் தேம்பித்தேம்பி அழுதவாறு
    ரெ.ச. வின் கால்களைக்கட்டிக்கொண்டு
    விடாமல் கீழே உட்கார்ந்து விட்டார்.
    அவரை சமாதானப்படுத்துவது படு சிரமமாகிவிட்டது. என் வாழ்க்கையில்
    இது 30ஆண்டுகள் ஆகியும் மறக்கவே முடியாத அழியா நினைவு.
    சை.பீர்முகம்மது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...