திறவுகோல்1 : நாடு விட்டு நாடு

azhagunilaகடந்த மாதம் முப்பத்தொன்பதாவது சென்னைப் புத்தக கண்காட்சிக்குச் சென்றபோது பேராசிரியர் வீ.அரசு அவர்களின் வீட்டிற்குச் செல்லும் அரியவாய்ப்பு கிட்டியது. அவரது வீட்டில் உள்ள நூலகத்தைப் பார்வையிட்டபோது “கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை மறக்காமல் வாங்குங்கள். உங்கள் ஊர்க்காரர் எழுதியது” என்று கூறி ஒரு புத்தகத்தைக் காண்பித்தார். அந்த நூலின் பெயர் ‘நாடு விட்டு நாடு’. தமிழினி பதிப்பகத்தின் வெளியீடான இப்புத்தகத்தை எழுதியவர் மலேசியரான திருமதி முத்தம்மாள் பழனிசாமி. ‘From Shore to Shore’ என்ற தலைப்பில் முதலில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.

சிங்கப்பூர், மலேசியா என்ற பிரிவெல்லாம் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத்தானே? அதற்கு முன்னால் மலாயா மட்டும்தானே! அதனால்தான் ஊர்க்காரர் எனச் சொல்லியிருப்பார் போலும். மனதில் இன்னொரு கேள்வியும் உதித்தது. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் என்னை ‘சிங்கப்பூரர்’ என்கின்றனர். சிங்கையில் இருப்பவர்கள் என்னை ‘ஊரிலிருந்து வந்தவள்’ என்கின்றனர். உண்மையில் என் ஊர் எது? என் நிலம் எது? தமிழர், நிலத்தை ஐந்து திணைகளாக வகுத்துள்ளனர். சிங்கை வாசகர் வட்ட நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் திரு ஜோ-டீ-குரூஸ் வந்தபோது நடந்த கலந்துரையாடலில் ஒருவர் (பெயர் நினைவில்லை), நாங்கள் பணமும் பணம் சார்ந்த நிலத்தில் வாழ்கிறோம் என்று குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. பொருளாதார காரணத்திற்காக புலம்பெயர்பவர்களுக்கு ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் நானும் எதிர்கொண்டுதான் வருகிறேன். அப்போதெல்லாம் பல கேள்விகள் மனதில் எழுவதும் அக்கேள்விகளுக்குப் பதில் தெரிந்தும் தெரியாதது போல மனம் கண்ணாமூச்சி ஆடும் நேரங்களில் கவலை எழுந்து அடங்குவதும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால் ‘நாடு விட்டு நாடு’ புத்தகத்தை வாசித்து முடித்த பின்பு என் கவலை தூசுக்குச் சமம் என்று தோன்றியது.

போனமாதம் வல்லினம் இதழில் ‘புலம்பெயர்ந்தவர்களுடைய தன் வரலாற்றுக் கதைகள்’ என்ற கட்டுரையில் எழுத்தாளர் திரு இமையம் ‘நாடு விட்டு நாடு’ நூலடக்கத்தைப் பற்றி சிறப்பாக எழுதியிருந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் கொங்கு வட்டாரத்திலிருந்து மலாயாவுக்குச் சஞ்சிக்கூலியாகச் (ஒப்பந்தக்கூலி) சென்ற தனது தந்தையின் கதையில் தொடங்கி பேரப்பிள்ளைகள் வரை தனது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் நினைவடுக்கிலிருந்து பெயர்த்து எடுத்து எழுதியுள்ளார் எழுபது வயதைத் தாண்டிய திருமதி முத்தம்மாள்.

கொங்கு வட்டாரம், மலாயா என்ற இருவேறு நிலப்பரப்பை, அங்கு வாழ்ந்த மக்களை, அவர்களின் குணாதிசியங்களை, கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை, அவர்களது வாழ்வியல் சிக்கல்களை, அவலங்களை இந்நூல் மிக இயல்பாக பேசி செல்கிறது. ‘தன் வரலாறு’ என்ற போர்வையில் தன்னைப்பற்றி மட்டும் பேசாமல் தன்னைச் சுற்றி சமூகத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் தான் ஒரு சாட்சியாக நின்றதை இந்நூலாசிரியர் மிக நேர்மையாக எந்தவித போலித்தனமும் இன்றி பதிவு செய்திருக்கிறார்.

கொங்கு வட்டாரத்தைப் பற்றிய பல செய்திகளை இந்நூல் சொன்னாலும் நான் வாசிக்கும்போது என் ஆர்வம் மலாயா தோட்டவாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்வதில்தான் இருந்தது. தமிழர்கள் மலாயாவுக்கு ரப்பர் தோட்டத்தில் வேலை செய்ய கூலிகளாக வந்தவர்கள் என்ற ஒற்றை வரி செய்தியை மட்டுமே அறிந்த எனக்கு அவர்கள் எப்படி வந்தார்கள், எது அவர்களை வரவைத்தது, வந்த இடத்தில் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலை எப்படி இருந்தது என்பதை இந்நூல் கண்முன் கொண்டு வந்து காட்டியது.

1887 ஆம் ஆண்டில் சர் பிரெடெரிக் வெல்டு என்பவர் தமிழர்களை ‘அமைதியானவர்கள். இவர்களை எளிதில் அடிமைப்படுத்திவிடலாம்’ என்று வர்ணித்தாராம். பணிவு, விசுவாசம், அடக்கம், தன்னம்பிக்கை இல்லாமை இப்படியாக தமிழர்களின் குணங்களை அடையாளம் கண்ட வெள்ளைக்காரர்கள் கூலிகளாக வேலை செய்ய இவர்கள்தான் சரியானவர்கள் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

காலையிலிருந்து மதியம் வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பால் எடுக்கும் வேலை. மதியத்திற்குப்azhagunila1 பின்பு பெண்கள் வீட்டு வேலையைச் செய்ய ஆண்கள் அதிக வருமானத்திற்காக காடு வெட்டுவது, கால்வாய் வெட்டுவது, புல் வெட்டுவது போன்ற இதர வேலைகளைச் செய்திருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் வேலை முடிந்தவுடன் நேராக கள்ளுக்கடைக்குச் சென்று உழைத்து சம்பாதித்த பணத்தை ஊதாரித்தனமாக செலவழிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இதுவும் ஆங்கிலேயர்களின் தந்திரம். தமிழ்ப்பள்ளி, கோவில், கூத்துமேடை, கள்ளுக்கடை இவை தமிழர்களுக்குப் போதுமானதாக இருந்ததாம். தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவர்கள் தோட்டத்தில் வேலை செய்ய தொடங்குவார்கள். வெளியில் சென்று படிப்பைத் தொடர வசதியில்லை. அவர்கள் படித்தால் பால்மரம் வெட்ட ஆள் இல்லாமல் போய்விடும் அல்லவா?

கூலியாக நாகப்பட்டினத்தில் கப்பல் ஏறும் ஒருவர் இறுதிவரை குடும்பத்தோடு வாழ்கிறாரோ இல்லையோ கடனோடு வாழவேண்டிய சூழல். கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி என்று வாழ்நாள் முழுதும் அது படமெடுத்த பாம்பாக சீறிக்கொண்டே அவர்களைத் தொடர்ந்துள்ளது. கடனை அடைக்கும்வரை அவர்கள் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்படியாக அவர்களது பணமும் உழைப்பும் ஆங்கிலேயர்களால் மிக சாமர்த்தியமாக திருடப்பட்டுள்ளது.

வேட்டுவ நாவிதன்தான் உயர் சாதி, கொங்கு நாவிதன்தான் உயர் சாதி என்று இரண்டு நாவிதர்களுக்கு இடையே நடந்த சண்டையை நூலாசிரியர் விவரிக்கும்போது தமிழர்கள் நாடு விட்டு நாடு வந்தாலும் சாதியை எவ்வளவு இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்தார்கள் என்பதை உணரமுடிகிறது. இதை நன்கு அறிந்த ஆங்கிலேயர்கள் தொழிலாளர்களைச் சாதி வாரியாக பிரித்து தனித்தனி லயங்களில் (ஒட்டிக் கட்டின சிறு சிறு வீடுகள், லயன் வீடுகள்) வசிக்கச் செய்துள்ளார்கள். தமிழரின் அனைத்து பலவீனங்களையும்  ஆங்கிலேயர்கள் தங்களுக்குச் சாதகமாக மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நூலில் காட்டப்படும் பெண்கள்தான் எத்தனை வகை! கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து மறைபவர், கட்டியவனோடு வாழ பிடிக்காமல் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு வேறு ஒருவருடன் தாலி கட்டாமல் வாழ்ந்தவர் (நூலாசரியிரின் தாயார்), கணவரைப் பிடிக்காமல் கணவரின் சகோதரருடன் மலாயாவுக்கு ஓடிவந்தவர், ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் கணவரை விட்டுப்பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து குழந்தைகளைப் பெற்று மீண்டும் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தவர், ஆங்கிலேயர்களால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்கள், பெற்ற தகப்பனால் சீரழிக்கப்பட்டு அவனது குழந்தையைப் பெற்றெடுத்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண், தவறான நோக்கத்துடன் அணுகும் ஆண்களுக்குச் சரியான பாடம் புகட்டி அனுப்பிய பெண்கள், மாடு போல உழைக்கச் சலிக்காத பெண்கள் என்று அடுக்கிகொண்டே போகலாம்.

முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் போன்ற பல அரசியல் நிகழ்வுகள் சாதாரண குடிமக்களை எவ்வாறு புரட்டிப்போட்டது என்பதை இந்த நூல் போகிற போக்கில் சொல்லிக்கொண்டு செல்கிறது. 1946 ஆம் ஆண்டில் ஜப்பானியர் ஆட்சிக்கும் வெள்ளையர் ஆட்சிக்கும் இடைப்பட்ட காலத்தில் Malayan People’s Anti Japanese Army ஆட்சியைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி உள்ளது. அப்போது சீனர்களால் கடத்தப்பட்ட நூலாசிரியரின் தாய்மாமா கடைசிவரை திரும்பவே இல்லை என்று அறிந்தபோது போரின் போதும் போருக்குப் பின்பும் காணாமல் போனவர்கள் திரும்ப வந்து தங்கள் கதைகளைச் சொன்னால் உலக வரலாற்றையே திருத்தி எழுத நேரிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் மக்கள் வாழ்வில் பல மாற்றங்கள் வந்துள்ளன. கல்வியின் முக்கியத்துவத்தை மக்கள் உணரத் தொடங்கிய காலகட்டம். வியாபாரத்தில் அதிக அளவில் ஈடுபட்டதால் பெரும்பாலான சீனர்கள் பட்டணங்களில் வாழ்ந்துள்ளனர். சீனர்களில் சிலர் பன்றி வளர்த்தல், கோழி, வாத்து வளர்த்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார்கள். மலாய் மக்கள் மீன் பிடித்தல், நெல் பயிரிடுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மலாய் கம்பங்களில் வாழ்ந்துள்ளனர். இந்தியர்கள் ரப்பர் தோட்டங்களில் வசித்துள்ளனர்.

பொருளாதார நிலையில் பின்தங்கியிருந்தாலும், ஒரு சாண் வயிற்றுக்காக அடிமாடாய் உழைத்தாலும் எளிமையான வாழ்வு, நச்சு கலக்காத இயற்கை உணவுகள், மற்ற இன மக்களோடு ஒற்றுமையாக வாழ்ந்த கம்பங்கள், சமய நம்பிக்கைகள், சில குருட்டு மூடநம்பிக்கைகள், பிறந்த மண்ணிலிருந்து கொண்டுவந்த நாட்டுப்புறப் பாடல்கள், வாய்வழிக் கதைகள், கூத்துகள் இவற்றோடு வாழ்க்கையை மகிழ்வோடும் நம்பிக்கையோடும் எதிர்கொண்ட இம்மனிதர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நான் பிறந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் மனதில் ஒரு மூலையில் எட்டிப்பார்த்துவிட்டுச் செல்கிறது.

அம்மை போட்டவர்களை, ஐந்தாவதுநாள் விதவைகள் குளிப்பாட்டுவார்கள் என்றும் ஆனால் அதற்கான காரணம் தனக்குத் தெரியவில்லை என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் படித்தவுடன் காரணத்தை அறிந்துகொள்ள நண்பர்கள் திரு கணேஷ்பாபு, திரு சசிகுமார் இருவரையும் தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் சொன்ன தகவல் வியப்பளித்தது. அவர்கள் ஊர்ப்பக்கங்களில் விதவைகளை மாரி அம்மனின் அம்சமாக நினைக்கும் ஒரு வழக்கம் இருக்கிறதாம்.

இன்னொரு தகவலும் வியப்பாக இருந்தது. மலேசியர்களின் தேசிய கீதத்தில் ‘என் ரத்தம் சிந்திய மண்ணே’ என்று ஒருவரி உள்ளதாம். எந்தப் பெரிய போர்களையும் சந்திக்காத நாடு மலாயா. இந்தவரிக்கு சரியான விளக்கத்தை மலாய் ஆசிரியர் ஒருவர் கூறினாராம். மலாய்காரர்கள் வீட்டில் (உயரமான மரத்தூண்களில் கட்டப்பட்டவை)  குழந்தை பிறந்தால் சந்துகள் நிறைந்த மரத்தரையின் வழியாக குழந்தையின் ரத்தம் சிந்துவதால்தான் இந்த வரி என்றாராம். ஆனால் எனக்கு, தமிழர் தங்கள் இரத்தத்தை வியர்வையாக சிந்தியதுதான் இந்த வரிக்குக் காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

கொங்குநாட்டில் வாழ்ந்த குறவர் இனத்தைப்பற்றிய குறிப்பு ஒன்று இந்நூலில் காணப்படுகிறது. கிராமத்தில் நடக்கும் சிறுசிறு திருட்டுக்களை குறவர்கள்தான் செய்வதாக நம்பியிருக்கிறார்கள். கையும் களவுமாகப் பிடிபட்டால் பஞ்சாயத்தில் கடுமையான தண்டனை வழங்கியிருக்கிறார்கள். தங்கள் வீட்டின் அருகே வாழ்ந்த ஒரு குறவனைப் பற்றி எழுதியுள்ள நூலாசிரியர் ஒவ்வொரு நாளும் அக்குறவன் இரவில் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று கையொப்பம் வைத்துவிட்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ‘குற்றப்பரம்பரை’ நாவல் எழுதிய எழுத்தாளர் திரு.வேல. ராமமூர்த்தி சிங்கை வந்திருந்தார். அவருடன் நடந்த கலந்துரையாடலில் ரேகை அல்லது குற்றப்பரம்பரை சட்டத்தைப் பற்றி பேசியது நினைவுக்கு வந்தது. தமிழகத்தில் 1914 ஆம் ஆண்டு முதல்முறையாக பிரயோகிக்கப்பட்ட இந்தச் சட்டம் தமிழகத்தில் 79 சாதிகளுக்கு எதிராக ஏவப்பட்டுள்ளது. குற்றப்பரம்பரை நாவலில் பாதிக்கப்பட்ட இனத்தவர் கள்ளர்.

நீலகிரியில் கற்பூரத் தைலம் காய்ச்சுபவர்கள் ‘மலையாளிகள்’ என்றும் அவர்களைத் ‘தைலக்காரர்கள்’ என்றும் சொல்வார்கள் என்ற செய்தியை இந்நூலின் வழியாக அறிந்தேன். தலையை வாரி ஒரு பக்கமாக இழுத்து காதுக்கருகில் குடுமியாக முடிந்திருப்பார்களாம். சமீபத்தில் ‘மலைகள்’ இதழில் நண்பர் திரு சிபிச்செல்வன் எழுதிய ‘அது ஒரு மலைக்கிராமம்’ என்ற கட்டுரையில் மலையாளிகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள். மலைகளில் வசிப்பதால் மலையாளிகள் என்ற பெயர் வந்ததாம்.

நான் சிலவற்றைத்தான் இங்கே எழுதியிருக்கிறேன். தோட்ட வாழ்க்கையைப் பற்றிய பல அரிய தகவல்களும் இந்நூலில் கிடைக்கின்றன.  எந்த ஒரு  புத்தகத்தையும் படித்தவுடன் அதிலிருந்து பல கேள்விகள் பிறப்பதும் அந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடி அலைந்து கண்டுகொள்வதும் வாசிப்பு தரும் பெரும் சுகம். அப்படியான சுகத்தை அளிக்ககூடிய நூல் இது.

இத்தனை வெளிப்படையாக தனது சாதியின் பலவீனங்களை எழுதியுள்ள இவர் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்நூல் வெளிவந்து நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு எப்படியாவது தடை செய்யப்பட்டிருக்கும். நல்லவேளை நூலாசிரியர் மலேசியராக இருந்ததால் தப்பித்தார்.

“நல்ல  தன்வரலாறு, ஓர் ஆளுமை தன் வாழ்க்கையைப் பற்றி எழுதும் போக்கில் வரலாற்றின், பண்பாட்டின் ஒரு காலகட்டத்தையே எழுதிவிடுபவைதான். தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை நுட்பமாகப் பார்த்துச்சொல்லும்  ஒருவராலேயே அது சாத்தியமாகிறது” என்று எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் பார்த்தால் திருமதி முத்தம்மாள் பழனிசாமியின் ‘நாடு விட்டு நாடு நூல்’ ஒரு சிறந்த தன்வரலாற்று நூலாகும்.

 – அழகுநிலா

 

1 comment for “திறவுகோல்1 : நாடு விட்டு நாடு

  1. சசி குமார்
    August 2, 2016 at 1:54 pm

    மன்னன் கெட்டால் மக்கள் எவ்வாறு கெடுவர் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த நூல்.. எப்படியெல்லாம் ஒரு தலைமுறை சீரழிந்தது என்பதை கண்ணீரோடு சிந்தித்துப் பார்க்கலாம். வெள்ளையர்களுக்கு துணைபோன கொங்கு மண்டல பட்டகாரர்கள் மக்களையும் மண்ணையும் சிந்திக்காது வாழ்ந்த வாழ்வு இந்த விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.. “காட்டு எருமைகள்” என்று கோவை ராமசந்திரன் செட்டியார் எழுதிய நூலைப் படிக்கவும். நீராதாரங்கள் விவசாயம் எல்லாம் புறக்கணித்து தாது வருஷ பஞ்ச காலங்கள் வந்து மக்களும் வாழ்வும் பெரும் அழிவை சந்தித்தது. இந்த பட்டக்காரர்கள் ஜமீன்கள் எல்லாரும்தான் பின்னாளில் தீவிர இடதுசாரி, முற்போக்கு, திராவிட அரசியல்கு தூண்கள்.. கொங்கு மண்டலத்தின் பண்பாட்டு வரலாற்றை வெள்ளையர் வருகைக்கு முன் பின் என்று பகுத்துப் படிப்பதே சிறந்தது.. அவ்வளவு தலைகீழ் மாற்றங்கள.. அந்த வகையில்தான் திருமதி முத்தம்மாள் சந்தித்த சிதைந்த கொங்கு சமுதாயத்தின் வாழ்வுகளை மதிப்பிட செய்கிறது. அவரகளது முன்னோர்களுக்கு எனது அஞ்சலிகள்.. மண்ணைத் தாண்டி சென்றவர்கள் புதிய சூழலில் தங்களை பொருத்திக் கொண்டவர்கள் பூர்வீக கொங்கின் பிரதிநிதிகளாக முடியாது. பிற்காலத்தில் பஞ்ச காலங்கள் கொஞ்சம் மாற துவங்கியதும், மழைவிட்டும் தூவானம் விடாதபடி இருந்த திராவிட வீச்சமும் சமுதாயத்தில் சீர்கேடுகளை முழுவதும் கலையவிடாதவாறு, ஓரளவு மட்டுமே சீர் செய்து அனுசரித்து செல்ல வேண்டியதாக செய்கிறது. எப்படியோ, புலம்பெயர்ந்த சிலர் கொங்கு பண்பாட்டு நீரோட்டத்தில் இருந்து ஒதுங்கிவிட்டாலும் இப்போது மலேசியாவில் தங்கிய கொங்கு மக்கள் தங்கள் பாரம்பரியம் கலாசாரம் சார்ந்து வாழ்கிறார்கள்; அதையே விரும்பயுகிரார்கள் என்பதை நேரில் கண்ட வகையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...