நீயின்றி அமையாது உலகு – 6

TayaG1மீண்டும் பார்க்க விரும்பும் முகங்களில் ஒன்றுதான் அவளுடையது. முதன் முதலில் அவளைப் பார்த்த பிறகுதான் என் பெரியமூக்கின் கீழ் சில உரோமப்புள்ளிகள் உருவாகியிருந்ததை முழுமையாக உணர்ந்திருந்தேன். லேசாக அதனைக் கிள்ளியும் பார்த்தேன். அவை மூக்கின் கீழ், உதட்டின் மேல் முட்டிக்கொண்டு இருந்தன. இன்னும் சில நாட்கள் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போதுதான் கவனித்தேன். இனி நானும்கூட வெள்ளி சனிக்கிழமைகளில் மீசையினை முறுக்கிக்காட்டி, சனிக்கிழமை இரவில் மீசையை மழித்துவிட்டு பள்ளியில் நல்ல பிள்ளையாக இருப்பேன்.

காதல் ஹார்மோன்களுக்கும் உரோம ஹார்மோன்களுக்கும் ஏதோவொரு மர்ம முடிச்சு இருக்கவேண்டும். காதலின் அடையாளம் சிலருக்கு உரோமங்களாகவும் சிலருக்கு முகப்பருவாகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்கின்றன. பொதுவாகவே மாணவர்களின் மீசையைப் பார்த்தும் மாணவிகளின் முகப்பருவை பார்த்தும் ஆசிரியர்கள் திட்டும் ஒரே வார்த்தை:

“படிப்புல ஒன்னையும் காணோம் லவ்வு ஒரு கேடா உனக்கு”.

இப்படிச் சொல்லிச்சொல்லியே காய்ந்து போயிருக்கும் காதல் விதிகள் உயிர் பெற அவர்கள் காரணமாகிவிடுவார்கள்.

எல்லோரும் சொல்வதுபோல முதல் காதல் மறக்க முடியாததுதான். ஆனால் எப்போது தோன்றிய காதல் ‘முதல் காதல்’ என்பதிலும் எதுவெல்லாம் முதல் காதல் என்பதிலும் குழப்பம் எல்லாருக்கும் மன இடைவெளியில் மறைந்திருக்கிறது.

எனக்கு ஏற்பட்ட, இதுதான் காதலோ என நானே என்னை சந்தேகித்த தருணம் ஒன்று என் வாழ்வில் உள்ளது.

இடைநிலைப் பள்ளியில் மூன்று பிரிவுகளாக மாணவர்கள் தங்களை அடையாளம் காண்பார்கள். ஒன்று நன்றாக படிக்கிறவர்கள். இன்னொன்று திமிராக நடந்துகொள்கிறவர்கள். மூன்றாவது ரொமான்டிக் ஹீரோக்கள்.

என்னைப்போன்றவர்கள் ரொமான்டிக் ஹீரோக்களாகவும் இல்லாமல், திமிரானவர்களாகவும் இல்லாமல், படிக்கின்ற மாணவர்களாகவும் இல்லாமல் இருப்போம். ஆனால், மூன்றையுமே முயற்சி செய்துகொண்டு இருந்தோம். நல்ல தேர்ச்சி பெற்ற மாணவனைப் பார்த்து நாளை முதல் படிக்க வேண்டுமென சபதமெடுப்போம். திமிரான மாணவர்களின் தைரியத்தைப் பார்த்து சட்டைக் காலரை தூக்கிக்கொள்வோம். பள்ளிகளில் ஒன்றாகவேச் சுற்றித்திரியும் காதலர்களைப் பார்த்து எங்களுக்கான ஜோடியை ஒவ்வொரு வகுப்பாக தேடக் கிளம்புவோம்.

வகுப்பிலும் பள்ளியிலும் காதலிக்கிறவர்களுக்கும் காதலிக்கப்படுகின்றவர்களுக்கும் மற்ற மாணவர்களால் சிறப்புச் சலுகைகள் கொடுக்கப்பட்டது. காதலி குறித்த தகவல்களைக் காதலனுக்கு யார் யாரோவெல்லாம் வந்து கொடுப்பார்கள். காதலிக்கும் அப்படித்தான். இன்னும் சொல்லப்போனால்,

“அண்ணே, அண்ணி அங்க காத்திருக்காங்க”

“என்ன தம்பி உன்னோட கேர்ல் பிரண்டு அந்தப் பையன்கிட்ட சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டு இருக்கு.”

மண்டையில் படிப்பு ஏறுகிறதோ இல்லையோ மனதில் காதல் பூப்பதுதான் அப்போதைய பருவத்தைப் பூர்த்தி செய்தது.

எத்தனை காலம் என்னை முன்னோக்கி நகர்த்திக்கொண்டே இருந்தாலும்  அவள் ஏற்படுத்திய தருணத்தை என்றென்றைக்கும் என்னால் மறக்க இயலாது. எழுத்தாளனின் காதலிகள் கொடுத்து வைத்தவர்கள் என்பார்கள். அவனது எழுத்துகளில்தான் காதலிகள் காலாகாலத்துக்கும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

அன்று கோவிலில் அன்னதானம் என்று பள்ளியிலேயே எங்களுக்குத் தெரிந்துவிட்டது. அன்றைய மதிய வகுப்புக்கு மட்டம் போட்டோம். நண்பர்கள் நான்கு பேர் மூன்று மிதிவண்டிகளில் கோவிலுக்குப் புறப்பட்டோம்.

கோவில் வாசலில் இருந்த காலணிகளின் எண்ணிக்கை அன்னதானம் கொஞ்சமாவது மிச்சம் இருக்குமா என பீதிக்குள்ளாக்கியது. ஆனால், தோட்டத்துக் கோவில் என்பதால் பசித்தவர்களுக்குச் சோறு கிடைக்காமல் போகாது.

அன்னதான வரிசையில் இடம் பிடித்துவிட்டோம். ஆளுக்கு ஆள் சோறுக்கும், சாம்பாருக்கும் குரல்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வரிசை வெள்ளைச்சோறோடு நின்றுவிட்டது. பசி ஒருபக்கம் என்றால், பின்னால் இருந்து சாப்பிடுகின்றவர்களின் எரிச்சல் தரும் சத்தம் இன்னொரு பக்கம். என் பங்குக்கு நானும் குரல் கொடுக்க நிமிர்ந்தேன். வாயடைத்துப்போனேன்.

அதுவரை அப்படியொரு பிரகாசத்தைப் பார்த்தது இல்லை. என் எதிரில் அவள் அமர்ந்திருந்தாள். நெற்றியில் இருந்து சரிந்த முடியை இடது கையால் மேல் தள்ளி ஒருநொடி என்னைப் பார்த்தாள். மீண்டும் சாப்பிடத் தொடங்கிவிட்டாள். நான், இன்னமும் சாம்பார் ஊற்றப்படாத வெறும் சோற்றை தின்றுகொண்டிருந்தேன். அந்த சோறு பிறகெப்போதும் அப்படி இனிக்காமல் போனது.

அன்றைய இரவு எனக்கு என்னென்னமோ ஆனது. மீண்டும் மீண்டும் அவளின் கண்களையேTayag நினைத்துப்பார்த்தேன். எப்படிப் புரண்டு படுத்தாலும் அவளின் கண்களே தெரிந்தன. தூக்கம் தெரியவே இல்லை. இதுவரை அவளை அந்த வட்டாரத்தில் பார்த்தது இல்லை. ஒருவேளை அன்னதானம் என்பதால் வந்திருக்கிறாளோ என்னமோ என என்னைச் சமாதானம் செய்துகொண்டேன். ஆனால் அவளும் பள்ளிச்சீருடையை அணிந்திருந்தாள். இங்குள்ள பள்ளிகளில் ஏதாவதொன்றில்தான் அவள் இருக்க வேண்டும். இப்போது விடிந்துவிட்டது.

மறுநாள் நண்பர்களுடன் அவள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். ஆளுக்கு ஆள் ஒரு பெண்ணைப் பார்த்திருந்தார்கள். நல்லவேளையாக நான் சொல்லும் அடையாளங்களில்  எந்தப் பெண்ணையும்  அவர்கள் சொல்லவில்லை. சிவந்த முகம், மெல்லிய சுருண்ட கூந்தல், கூரான மூக்கு,  தெளிவான பார்வை என மனம் அப்படியே அச்சு அசலாகப் படியெடுத்திருந்தது.

காலை, வகுப்புக்குச் செல்வதற்கு முன்பாக நண்பர்களிடம் பேசி முடிக்கக்கூடவில்லை, மீண்டும் அவள். அவளேதான்! என்னைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறாள். அவள்தான் என நண்பர்களுக்கு அடையாளம் காட்டினேன். ஆர்ப்பாட்ட ஆரவாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள். அது எனக்குள் அச்சத்தைக் கொடுத்தாலும் அந்த உந்துதல் மனதுக்குப் பிடித்துதான் இருந்தது.

உடல் உரோமங்களின் சிலிர்ப்பை இப்போது நினைத்தாலும் உணர முடிகிறது. நம்மையறியாமல் ஒரு பக்கம் உதடு தன்னை சிரித்துக்காட்டும். கண்கள் பாதியாக மூடிக்கொள்ளும். தரையிலிருந்து கால்கள் சில சாண்கள் உயரத்தில் மிதக்கும். கைவிரல்கள் நடுங்கும். சம்பந்தமே இல்லாமல் அங்கும் இங்கும் கழுத்து நம் தலையைச் சுற்றிக்காட்டும்.

அவள் என்னைவிட இரண்டு வயது குறைந்தவள். அவ்வப்போது அவளது வகுப்பின் வழியே நண்பர்களுடன் தேவையே இல்லாமல் நடந்து போவோம், வருவோம். எல்லாக் கூட்டத்திலும் ஒருவன் இருப்பான். ரகசியங்களை தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதனைப் பொதுவில் போட்டு உடைப்பதில் அவனுக்கு இருக்கும் ஆர்வம் சொல்லில் அடங்காது.

அப்படித்தான் அன்று,  அவளின் வகுப்பைக் கடந்துசெல்லும் போது அவளை கூப்பிட்டே சொல்லிவிட்டான். அவ்வளவுதான் நாங்கள் யாரும் அப்போது நடக்கவில்லை. ஒரே ஓட்டம். காட்டிக்கொடுத்தவனும் எங்களுடன் ஓடி வந்துகொண்டிருந்தான்.

அதோடு இரண்டு நாட்கள் அவள் கண்ணுக்குத் தெரியாமலேயே ஓடி மறைந்து கொண்டிருந்தேன். ஆனால், எப்படியும் ஒரு முடிவு தெரியவேண்டும் என நண்பர்களின் உந்துதலால் அவளைச் சந்திக்கத் தயாரானேன்.

காலைவகுப்புக்கு மாணவர்கள் ஒவ்வொருவராக படியில் ஏறிக்கொண்டிருந்தார்கள். அவள் வகுப்பு மாணவர்களும் படி ஏறிக்கொண்டிருந்தார்கள். இப்போது வேண்டாம் ஓய்வுநேரத்தில் கேட்கலாம் என நண்பர்களிடம் பேசி முடிவெடுத்தேன். அவள் ஒவ்வொரு அடியாக படியில் ஏறிக்கொண்டிருந்தாள். சட்டென, சில நொடிகள் நின்றவள் பின்னால் இருப்பவர்களுக்கு வழிவிட்டு அங்கிருந்து என்னைத் திரும்பிப் பார்த்தாள்.

மீண்டும் நான் மிதக்க ஆரம்பித்தேன். அவளை சுற்றி எதுவுமே இல்லாமல் போனது. அவள் மட்டும். அந்த வெளிச்ச முகம் மட்டும் என்னை நோக்கியிருந்தது. மறுபடியும் இடது கையால் தன் காதோர முடியைச் சரி செய்துகொண்டாள்.

நாங்கள் காதலித்தோம்.

பள்ளி ஆரம்பிக்கும் முன்பான சில நிமிடங்களும், பள்ளி முடிந்த பிறகு அவளின் பேருந்துக்காகக் காத்திருக்கும் சில நிமிடங்களும் நாங்கள் பார்த்துக்கொண்டோம். அதுதான் எங்களுக்குக் காதலாக தெரிந்தது. இப்படி பார்த்துக்கொண்டே இருந்த நாங்கள் சில வார்த்தைகள் மட்டுமே பேசினோம். ஆனால் அவள் என் அருகில் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்தேன். அவளும் அப்படித்தான் ரசித்திருக்க வேண்டும்.

இப்படியே பார்த்துப்பார்த்து ரசித்த நாங்கள் பள்ளியின் இறுதி நாளுக்கும் வந்தோம். மாணவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக அதனைக் கொண்டாடினோம். சட்டென மெல்லிய காற்று என் கன்னத்தை தட்டியதாய் தெரிந்தது. அவள்தான்! அவளேதான்! ஜிகினாக்களை கையில் வைத்து என் கன்னத்தைத் தட்டினாள்.

அவளின் தொடுதலில் இதயம் ஒருமுறை நின்று வேகமாகத் துடிப்பதை உணர்ந்தேன். பலமுறை வீட்டிலும் பள்ளியிலும் அறைவாங்கி வலித்த கன்னம் முதன்முறையாக இனித்தது. அந்தத்தொடுதல் என் வாழ்வின் புதிய அத்தியாயங்களைத் திறக்கப்போவதாக தெரிந்தது.

அவளின் மென்மையான கரங்கள் என் கன்னத்தில் பாய்ச்சிய மின்சாரம் உள்ளங்கால் வரை சென்று பின் உச்சந்தலையைத் தொட்டது. என்னையறியாமல் என் உதடுகள் துடிக்கத்தொடங்கின. கொஞ்சநேரத்தில் நண்பர்கள் அவ்விடத்தை காலிசெய்தார்கள்.

இப்போது அங்கு நானும் அவளும் மட்டும். மிக அருகில் என்னால் அவளின் மூச்சுக்காற்றின் சூட்டை சுவாசிக்க முடிந்தது. சட்டென்று என் கன்னங்களை பிடித்து இன்னும் நெருக்கமாக்கி அவளின் கூர்மையான மூக்கால் என் தடித்த மூக்கை உரசிவிட்டு என்னைத் தள்ளிவிட்டாள். விழுந்திருக்க வேண்டியவன் பறக்க ஆரம்பித்தேன். ஆனால் இன்றுதான் பள்ளி வாழ்க்கை எனக்குக் கடைசி என்பதால் மேற்கொண்டு பறக்க வழியின்றி தரைக்குரியவனானேன்.

அவள் அப்பாவின் கைபேசி எண்ணைக் கொடுத்தாள். எப்போது அழைப்பது என்ன பெயரில் அழைப்பது என எந்த திட்டமிடலும் இல்லை. எங்களிடம் கைபேசி இல்லாததால் பள்ளியிலேயே ஆளுக்கொரு மின்னஞ்சல் உருவாக்கினோம். மறக்காமல் இருக்க இருவர் பெயரையும் சேர்த்து ஆளுக்கு ஒரு மின்னஞ்சல் வைத்துக்கொண்டோம். வீட்டு முகவரிகளையும் பறிமாறிக்கொண்டோம். ஆளுக்கு ஒரு வழிகாட்டி மேப்பை வரைந்துகொடுத்தோம்.

விடுமுறை ஆரம்பமானது. பல முறை பொதுத் தொலைபேசியில் நின்று அவளின் அப்பாவின் கைபேசிக்கு அழைக்க முயன்று பயந்து திரும்ப வந்துவிட்டேன். ஆனால் அன்று அவளுடன் பேசியே ஆகவேண்டும் எனத் தீர்மானம் எடுத்துக்கொண்டேன்.

அவளின் அப்பாவை அழைத்து அவளது வகுப்பு மாணவன் போல ஏதாவது பேசவேண்டும். என்ன பேசவேண்டும் என்பதெல்லாம் தானாகவே வந்துவிடும் . பொதுத் தொலைபேசியில் சில்லறைக் காசுகளைப் போட்டு அவள் கொடுத்த எண்ணுக்கு அழைத்தேன். முதல் அழைப்பிலேயே கைபேசியை எடுத்துவிட்டாள். அவள்தான்! அவளேதான்! மீண்டும் என்னுள்ளே மின்சாரம் பாய்ந்தது. உள்ளத்தில் தொடங்கி உச்சந்தலையில் சென்று மறையும் நேரம் தலையில் யாரோ கொட்டியது போல உணர்ந்தேன். அவள் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறாள். குழம்பியது . பிறகு புரிந்தது அந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை. எனக்கு படபடப்பு தொற்றிக்கொண்டது. அன்றைய சந்திப்பில் கொடுத்த எண் தவறான எணணோ? நான் தவறாக எழுதிவிட்டேனா? அவள் தவறாக கொடுத்துவிட்டாளா? அந்தக் குழப்பம் பள்ளி தொடங்கும்வரை இருந்தது.

பள்ளி தொடங்கிய தினத்தில் மூன்று நாட்கள் அவள் பேருந்துக்காகக் காத்திருக்கும் இடத்தில் காத்திருந்தேன். அவளைச் சந்திக்கவேயில்லை. அவள் வகுப்பு மாணவர்களை விசாரிக்கையில் அவள் குடும்பமே வேறு இடத்துக்கு மாற்றலாகிவிட்டார்கள் எனக்  கூறினார்கள். வேறு எந்த விபரமும் தெரியவில்லை. சில நாட்களுக்கு  அவளின் முகம் என்னை ஏதேதோ செய்தது. யாரிடமும் பேசவோ பழகவோ பிடிக்கவில்லை. வாழ்வதே அர்த்தம் இல்லாததுபோல தனிமையில் சுற்றினேன் . ஆனால், ஆச்சர்யமாக சீக்கிரமே எல்லாம் சரியாகிவிட்டது.

ஆனாலும் அவளின் நினைவுகளை என்மனம் ஏதோவொரு மூலையில் பதுக்கிக்கொண்டது. அதன்பிறகான வாழ்க்கைக்கு அந்த நினைவுகள் தேவையற்றதாக இருந்ததால் மனமே தன்னைத்தானே சீரமைத்து ஏதோ ஒரு பெட்டிக்குள்ளே தேவையற்ற நினைவுகளுடன் சேர்த்து அதைப்பூட்டி வைத்தது.

சில நாட்களுக்கு முன்பாக எனக்கு ஓர் மின்னஞ்சல் வந்திருந்தது. ”எப்படி இருக்கிங்க..? என்னை நினைவு இருக்கா…?” என இருந்தது. மின்னஞ்சலில் அவளின் பெயரும் என் பெயரும் இருந்தது. என்ன பதில் சொல்லலாம் என பல முறை யோசிக்கிறேன்.   இதென்ன வைரஸா , யாரும் விளையாடுகிறார்களா , இத்தனை ஆண்டுகள் கழித்து எதற்காக இந்த மின்னஞ்சல்.

என்ன பதில் அனுப்பலாம் என யோசித்துக்கொண்டிருந்த சமயம், இன்னொரு மின்னஞ்சல் வந்தது. ஒரு குழந்தையின் படம் அதில் இருந்தது. வேறெந்த விபரமும் அதில் இல்லை. அந்தக் குழந்தை படத்தைப் பார்க்கும்போது மூக்கு கூராகவும் முகம் பிரகாசமாகவும் இருந்தது.

நான் காதல்கொண்ட குழந்தை முகத்தை மீண்டும் காட்டிய அவளுக்கு நன்றியை எழுதிக்கொண்டிருக்கையில் கன்னத்தை ஏதோ தடவியது. கண்ணீர். மீண்டும் அவளது மூச்சுக்காற்றின் உஷ்ணத்தை மூக்கின் அருகே உணர்கிறேன்.

1 comment for “நீயின்றி அமையாது உலகு – 6

  1. வாணிஜெயம்
    August 2, 2016 at 7:05 pm

    அருமை தயா.பண்பட்ட படைப்பாளியின் நடை.ஞாபங்களைச் செதுக்கியவிதம் வெகுநேர்த்தி.

Leave a Reply to வாணிஜெயம் Cancel reply