திறவுகோல் 2: செலாஞ்சார் அம்பாட்

ko.pu 1தங்கமீன் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஏப்ரல்மாதம் நடைபெற்ற நாவல் பயிலரங்கில்தான் மலேசிய எழுத்தாளர் திரு கோ.புண்ணியவான் அவர்களை முதன் முதலில் சந்தித்தேன். தனது எழுத்துலக அனுபவத்தை பார்வையாளர்களிடம் விரிவாக பகிர்ந்துகொண்ட அவர் தனது நாவலான ‘செலாஞ்சார் அம்பாட்’டைப் பற்றி குறிப்பிட்டு பேசினார். அன்றுமுதல் இந்நூலை சிங்கை நூலகங்களில் தேடத்தொடங்கினேன். என்னோடு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த இந்நாவல் இரண்டுவாரங்களுக்கு முன் கையில் அகப்பட்டது.

தீப ஒளி என்டர்பிரைசஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்நாவலைச் சுமார் இருபதுநாட்களில் எழுதி முடித்துவிட்டதாகச் சொல்கிறார் நாவலாசிரியர். மலேசியத் தமிழர்கள் கொத்தடிமைகளாக அல்லல்பட்ட ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்தப் புனைவு நூல்.

கொத்தடிமைத்தனத்தைப் பற்றிப்பேசும் நாவல் என்று முதலில் தோன்றினாலும் அதன் கருப்பொருள் வேறு என்பது வாசிக்க, வாசிக்க மெல்லப் புலப்பட்டது. தோட்டங்களைத் தங்களது வாழ்வாதாரமாகக் கருதிவாழ்ந்த தோட்டப்புறத் தொழிலாளர்களின் வாழ்க்கையை நிலைகுலையச்செய்த பெரிய பிரச்சனை ‘தோட்டத் துண்டாடல்’. 1950ல் தொடங்கிய துண்டாடல் 1957 ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம்பெற்ற பிறகும் 1960கள் வரை தொடர்ந்திருக்கிறது.

“நமக்கு மிஞ்சி, மிஞ்சிப் போனா என்னா தெரியும்? கித்தா மரப்பட்ட சீவத்தெரியும், பாலெடுக்கத் தெரியும், எடுத்த பால ஸ்டோர்ல கொண்டு போயி ஊத்தத் தெரியும்…. இதுலியே கெடந்து இதுலியே அமுத்திட்டானுங்க… எங்கடா வெளிய போனா எல்லாம் கத்துகிட்டு நமக்கே நாமம் போட்ருவானுங்கன்னு, உஷாரா இருந்திட்டான் முதலாளி” என்று ஒரு கதாபாத்திரம் சொல்வதின் வழியாக ‘தோட்டத் துண்டாடல்’ என்ற பிரச்சனையின் வீச்சை உணரமுடிகிறது.

தொழிற்சாலைகள் வரவிருப்பதால் மூன்று தலைமுறைகளாக தோட்டமே உலகம் என்று வாழ்ந்த மக்களைத் தோட்டத்திலிருந்து காலி செய்யச்சொல்கிறது நிர்வாகம். அங்கு வாழ்ந்த மக்களில் பலர் எங்கெங்கோ இடம்பெயர்ந்து செல்ல மீதி இருக்கும் நாற்பது பேர் வாழ வழி தெரியாமலும், போதிய வழிகாட்டல் இல்லாமலும் கொத்தடிமைகளாக சிக்கிக் கொள்கிறார்கள். ‘செலாஞ்சார் அம்பாட்’ என்ற இடத்தில் அமைந்துள்ள செம்பனைக் காட்டுக்குள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். விடுமுறை கிடையாது. சம்பளம் கிடையாது. ஒரு நாளைக்கு பத்து மணிநேர உழைப்பு. சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற மிக மோசமான நிலையில் தங்குமிடம். மளிகை சாமான்கள் வாங்க சிறு கடை. சீன தவுக்கே (செம்பனைக் காட்டின் முதலாளி), அவனது மனைவி, அவனது உதவியாளர்களாக மூன்று முரடர்கள் (தமிழர்கள்) இவர்கள் நால்வரைத் தவிர அந்த அத்துவானக் காட்டில் வேறு யாரும் கிடையாது.

வெளி உலகத்திற்கு தெரியாத அவல வாழ்க்கை. எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்கு அடியும் உதையும் விழுகிறது. போதுமான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் ஒரு சிறுவன் மரணம் அடைகிறான். தப்பித்துப்போக முயலும் ஓர் இளைஞன் மோசமாக தாக்கப்படுகிறான். திருமணமான பெண் ஒருத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். அனைத்து கொடுமைகளையும் சகித்துக் கொண்டு நமக்கு விடிவு காலம் பிறக்காதா என்று அவர்கள் காத்திருக்கும்போது அவர்களில் ஒருத்தி தப்பித்துச் செல்கிறாள். அவள் மூலம் பத்திரிகையில் செய்தி வெளியாக இறுதியில் அனைவரும் அந்தப் பாழ் நரகத்திலிருந்து விடுதலை அடைகிறார்கள். புனைவுதான் என்றாலும் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை உணரும்போது மனம் பதறுகிறது.

மக்களின் இந்த அவல நிலைக்குத் ‘தோட்டத் துண்டாடல்’ ஒரு காரணம் என்றால் மற்றொரு முக்கியமான காரணம் ‘சிவப்பு நிற அடையாள அட்டை’. இந்த அட்டை அக்காலத்தில் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தோட்டம், தோட்டமாக வந்து கைதூக்கச் சொல்லி மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டபோது ‘இது பிழைக்க வந்த ஊர்தானே. நம் மண்ணுக்கே திரும்ப போயிடலாம்’ என்று எண்ணி ஒரு தலைமுறை குடியுரிமையை மறுத்ததன் விளைவால் அதற்குப்பிறகு வந்த தலைமுறை எதிர்கொண்ட சிக்கல்களை வலியோடு சொல்கிறது இந்நாவல்.

தோட்டத் துண்டாடலின்போது மற்ற வேலை வாய்ப்புகளில் நீலநிற அடையாள அட்டைக்காரர்களுக்கே (மலேசியக் குடியுரிமை பெற்றவர்கள்) முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழர்கள் சிவப்பு அடையாள அட்டையை நீலமாக மாற்ற எதிர்கொண்ட துன்பங்களும் இழிவுகளும்  இக்கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போது என் மகன் நீலநிற அடையாள அட்டையை (சிங்கப்பூர் நிரந்தரவாசி) சிவப்பு நிறமாக (சிங்கப்பூர்க் குடியுரிமை) மாற்றுமாறு சொல்லிக் கொண்டிருக்கிறான். மனிதர்களுக்கான மதிப்பு வெறும் வண்ண அட்டைகள்தானா என்ற ஐயம் மண்டையைக் குடைகிறது.

சிவப்பு அடையாள அட்டையை நீலமாக மாற்றுவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல என்பதை இந்நாவல் வழியாக அறிய முடிந்தது. பிறப்புச்சான்றிதழில் உள்ள பெயர் சரியானது என்று மாஜிஸ்டிரேட்டிடம் சத்தியப் பிரமாணம் செய்து வாங்கவேண்டும். சிவப்பு அடையாள அட்டையிலும் அதே பெயர் இருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் அதை மாற்றுவதற்கு நடையாய் நடக்க வேண்டும். அதன்பிறகு நீல அடையாள அட்டைக்கு மனு செய்யவேண்டும். தேசிய மொழி அதாவது மலாய் மொழி நேர்காணலில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தனையும் செய்து முடித்தால்தான் நீல அடையாளக் கார்டு கிடைக்கும்.

சில நேரங்களில் பதிவதிகாரிகள் கவனக்குறைவால் பெயரை எழுத்துப்பிழைகளோடு எழுத (உதாரணத்திற்கு செங்கோடன் என்பதை செங்கோட்டான் என்று எழுதுவது), அந்தப் பிழைகளே மலாயாவில் பிறந்த ஒருவனுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதற்கான எமனாக மாறியுள்ளன என்பதை அறிய நேர்ந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை அவமானங்களுக்கும் அவச்சொற்களுக்கும் ஆளாகி அந்த நீல அடையாள அட்டையை கட்டாயம் பெறத்தான் வேண்டுமா? என்று என் மனதில் எழுந்த கேள்விக்கான விடையை ‘ஆம். பெறத்தான் வேண்டும். ஏனென்றால் நீல கார்டு என்பது சொர்க்கம், விடுதலை, கௌரவம்’ என்று நூலாசிரியர் பதில் சொல்கிறார்.

‘செலாஞ்சார் அம்பாட்’, FELDA (Federal Land Development Authority) நில மேம்பாட்டுத் திட்டத்திற்கு கீழிருந்த பகுதி. நாட்டு மக்களின் ஏழ்மையை நீக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் ஓர் அங்கமான இந்த நில மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கம் சொந்த நிலமற்று இருக்கும் மலாய் மக்களை மறு குடியமர்த்துவதாகும். இருபத்தோரு வயதிலிருந்து ஐம்பது வயதுவரை உள்ளவர்களுக்கு பத்திலிருந்து பதினான்கு ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்படும். அங்கு பயிரிடப்பட்டிருக்கும் செம்பனை வளர்ந்து அறுவடை ஆகும்வரை அவர்கள் அங்கே பயிரிட்டுப் பிழைக்கலாம். கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவர்களுக்கே அரசாங்கம் அந்நிலத்தைப் பட்டா போட்டுச் சொந்தமாக்கிவிடும்.

இந்தக் காட்டுப்பகுதியில் தாக்குப்பிடிக்க முடியாமல் பலர் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுவிட புறக்கணிக்கப்பட்ட செம்பனைக்காடுகளை அரசாங்கம் குத்தகைக்கு விட்டுள்ளது. அப்படி புறக்கணிக்கப்பட்ட பகுதிதான் செலாஞ்சார். சீனர்களில் பலர் வாய்ப்பை நழுவவிடாமல் பல ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார்கள். ஆனால் சிவப்பு அடையாள அட்டைக்குச் சொந்தக்காரர்களோ செலாஞ்சார் அம்பாட்டில் கொத்தடிமைகளாக மாறிப்போனார்கள் என்பதை வாசிக்கும்போது சொல்லமுடியாத வேதனை ஏற்படுகிறது.

‘மீனைத் தருவதைவிட மீன் பிடிக்கக் கற்றுத்தருவதே சிறந்தது’ என்று ஒரு பொன்மொழி உண்டு. ஆனால் மீனும் தரப்படாமல் மீன் பிடிக்கவும் சொல்லித்தரப்படாமல் சிவப்பு அடையாள அட்டை கொண்டவர்கள் வாழ்க்கை எனும் பெரும் சுழலில் சிக்கித் தவித்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி இல்லை. தொழிலாளர்களுக்கு மற்ற வேலைகளில் ஈடுபட முறையான பயிற்சிகள் இல்லை. வழிகாட்ட நல்ல தலைமை இல்லை. பிரச்சனைகளை அரசாங்கத்திடம் கொண்டு செல்ல சரியான அமைப்பு இல்லை. இப்படி எதுவுமே இல்லாமல் போவதற்காகவா நாடு விட்டு நாடு சஞ்சிக்கூலிகளாக வந்து மலேசிய மண்ணை வளம்பெறச் செய்தார்கள்? என்ற கேள்வி எழுகிறது.

“கொட்டக் கொட்ட குனிஞ்சி காட்டுன கூலி சனம்தான கடேசியா பெரிசா ஒரு கொட்டு விட்டுறுவோம்னு நல்லா கொட்டிட்டானுங்க உச்சாந்தலைல. இப்போ போயி எங்கko.pu போறதுன்னு அவன கேக்க முடியுமா? எக்கேடாவது கெட்டுப் போங்கடா. எங்க வயிறு ரொம்பனா சரின்னு, நம்ம வாய்ல மண்ண போட்டுட்டு மூணு நாமமும் போட்டுட்டானுங்க”, “மாட்ட ஓட்டிகினு வந்த மாரி வெள்ளக்காரன் நம்மல ஓட்டிகிட்டு வந்தான். காக்காய் ஓட்டத்தான் கூட்டிகிட்டு போறேன்னு சொல்லி காட்ட அலிக்க சொல்லி, கல்லு முள்ளு காடு மேடெல்லாம் வேல வாங்கி, மலேரியா கொசுல கடிபட்டு செத்து, சையமுக்கு கம்பி சடக்கு போட சப்பாங்காறன் சாகடிச்சது போக மிச்ச சொச்சந்தான் நம்ப”, “மரங்களுக்கும் தமிழர்களுக்குமான தொடர்பு சஞ்சிக்கூலிகளாக வந்த நாள்முதல் தொட்டுத் தொடர்கிறது. மலாயாக் காடுகளை அழித்து ரப்பர் மரங்களை நட்டான். சயாம் காடுகளை அழித்து ரயில்பாதை போட்டான். ரப்பர் மரங்களை அழித்து மறுநடவும் செய்தான். ரப்பர் விலைச் சரிவில் செம்பனை மரங்களை நட்டான். மரத்தோட வாழ்ந்ததால் மரமாகவே மதிக்கப்பட்டானோ என்னவோ” இதுபோன்ற வரிகளில் நூலாசிரியர் உரக்கப் பேசுவதாக தோன்றினாலும் சிவப்பு அடையாள அட்டையால் பாதிக்கப்பட்ட ஒருவராக, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அவர் பேசுகிறார் என்ற தெளிவு வரும்போது அவரின் கொந்தளிக்கும் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கொத்தடிமைகளாக வாழும் மக்கள், கறி சாப்பிட ஆசைப்பட்டு செம்பனைக்காட்டுக்குள் பன்றியை வேட்டையாடி அதைச் சமைத்துக் கொண்டிருக்கும்போது வாசத்தை மோப்பம் பிடித்து அங்கு வரும் தவுக்கேயின் அடியாட்கள் “நல்லா ஒரப்பா பொரட்டி ஒரு பான கறிய எங்களுக்கு அனுப்புங்க” என்று சொல்லிச் செல்லுமிடத்தில் அதிகார நாய்களின் நாக்குகள் அப்பாவிகளின் வாழ்க்கையில் எல்லையில்லாமல் நீள்வதை எண்ணி எரிச்சல் வந்தது. நாஞ்சில் நாடனின் ‘விலாங்கு’ சிறுகதை மனதில் ஓடி மறைந்தது.

நாவலை வாசிக்கும்போது சில மலாய் வார்த்தைகளுக்குப் பொருள் புரியாமல் நான் தடுமாற நேர்ந்தது. அடுத்த பதிப்பில் இந்த வார்த்தைகளுக்கான பொருளையும் இணைத்தால் மலாய் தெரியாத வாசகர்களுக்கு உதவியாக இருக்கும். சுதந்திர மலேசியாவில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று உலகம் நம்பிக்கொண்டிருந்த வேளையில் காலனித்துவத்தில் கூலிகளாக இருந்த தமிழர்கள் சுதந்திரநாட்டில் கொத்தடிமைகளாக இருந்தார்கள் என்ற உண்மையைப் புனைவு கலந்து திரு கோ.புண்ணியவான் அவர்கள் எழுதியுள்ள இந்நாவல் வருங்கால தலைமுறை, வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் ஓர் ஆவணமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...