நிர்வாணம்

latha-1ஏழு வருஷப் பழக்கம். ஒத்த நூல் பிரிஞ்சி கெட்டித் துணி பரபரன்னு கிழிஞ்சமாறி சட்ன்னு அறுந்து போச்சு. வருஷக் கடைசியில கலியாணம். மண்டபம் புக் பண்ணி, துணி எடுத்து, மால, சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்து…. எல்லாமே செஞ்சாச்சு. பத்திரிகதான் இன்னும் கொடுக்கத் தொடங்கல. தொண்டைக்குழிக்குள்ள இறுகி மூச்சை, பேச்சை எல்லாத்தையும் அடைச்சிகிட்டு தண்ணிகூட இறங்கல. அப்பதான் ஆஸ்பத்திரி போக லீவு எடுக்க முடியுமான்னு அம்மா கேட்டாங்க. கருங்கல்லா இறுகிட்டு இருந்தது, நெருப்புக் குழம்பா பொங்கி வெளிய பீய்ச்சி அடிச்சிடுச்சி.

தொண்டக்குள்ள அடைச்சிட்டிருந்த கல்லு கரைஞ்சு போற வரைக்கும் அன்னிக்குக் கத்திட்டே இருந்தேன். அதுக்குப் பிறவு பேச்சே இல்ல. அம்மா முகத்தக்கூடப் பார்க்கிறது இல்லை. தூங்க மட்டும்தான் வீடுன்னு ஆயிடுச்சு.

அன்னிக்கு  ஜிஹெச்சில டாக்டரப் பாத்திட்டு அம்மா அலுவலகத்துக்கு போன் செஞ்சாங்க.  எனக்குத்  தெரிஞ்சு அம்மாவோட குரல் அத்தன கம்மி, கலக்கமா இருந்ததேயில்ல. என்னம்மான்னு கேட்டப்ப அவங்க முதல்ல பேசவே இல்லை. எனக்கு என்னென்னமோ யோசனை ஓடிச்சி. யாருக்காவது என்னாவது ஆயிடுச்சா, அஸிடென்டா, அண்ணனுக்கு என்னாவது நடந்திடுச்சா… நான் பாட்டுக்கு யோசிச்சிட்டே இருந்தேன்.. திடீர்னு அம்மாவோட நடுக்கமான குரல் தூரத்தில கேட்டிச்சி…  “கான்சராம். உடன வீட்டுக்கு வர முடியுமா?” அதுக்குமேல  அவங்களால பேச முடியல. அழுத மாறி இல்ல, அழாத மாறியும் இல்ல. போன வெச்சிட்டாங்க. எனக்கு அந்த நிமிஷம் ரொம்ப புழுக்கமா, மழ பெஞ்சா நல்லாருக்கும்போல தோணிச்சு.  வேலையை செய்ய முடியல. அப்படி அப்படியே எல்லாத்தையும் போட்டுட்டு கிளம்பிட்டேன். அன்னிக்கின்னு நான் போன எல்லா ரோடிலேயும் டிராபிக் ஜாம். பதட்டத்தில கார ஓட்டவே முடியல.  அம்மாவ பாக்குற வரையில  படபடப்பாவே இருந்திச்சு.  சாவிய தேடி கதவ திறக்ககூட பொறுமையில்லாத பெல்ல அடிச்சிட்டே இருந்தேன். “உள்ளேயிருந்து வர வேணாமா அதுக்குள்ள என்னா அவசரம் உன் சாவி எங்கே…”ன்னு எப்பவும் போல சாதாரணமா கேட்ட அம்மாவ பாத்தபோது ஏதோ கற்பனை பண்ணியிருப்பனோன்னுதான் தோணிச்சு.

எனக்கு எதுவும் கேட்க தோணல. செருப்ப கழட்டிட்டு சோபாவில உட்காந்து டிவிய போட்டேன். “இப்பத்தான் கலக்கினேன்,”ன்னு அம்மா தேத்தண்ணியை கொண்டு வந்து வெச்சாங்க. நான் பேசாம டிவிய பாத்திட்டிருந்தேன். அவங்களும் பேசாம பக்கத்தில உட்காந்திருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு நான் தேத்தண்ணியைக் குடிக்கத் தொடங்கினதும் எழுந்திரிச்சு போயி ஆஸ்பத்திரி ரிப்போர்ட்ட கொண்டாந்து வெச்சாங்க. எதுவும் சொல்லல. நானும் உடன எடுக்கல. முகத்த கழுவிட்டு பாக்கலாம்ன்னு பாத்ரூம் போனப்ப குளிக்கனும்னு தோணிச்சு. குளிச்சி சட்ட மாத்திட்டு ஹாலுக்கு வந்தப்ப அண்ணன் வந்திருந்திச்சி. அம்மா அங்கியேதான் உட்காந்திருந்தாங்க. நான் வந்ததும் ரிப்போர்ட் என் கையில கொடுத்திச்சி. நான் திரும்ப திரும்ப புரட்டிட்டே இருந்தேன்.  “ டாக்டர்கிட்ட நான் பேசினேன். உடனேயே கீமோதெரபி செய்யனும்ன்னு  சொல்லுறாரு,”ன்னு அண்ணன் சொல்லிச்சு.

வேற ஸ்பெஷலிசிட்ட காட்டலாம், இன்னொருவாட்டி சோதனை செய்யலாம்ன்னு நான் சொன்னேன். அம்மாக்கு  புற்றுநோய் இருக்காதுன்னு நம்பவே மனசு விரும்பிச்சு. மனசு அது விருப்பத்திலதான எப்பவும் நிக்கும். யார் பேச்சக் கேக்கும்…

ராப்பகலா தேர்வுக்கு படிக்கிறமாறி கான்சர் பத்தி படிச்சேன். கண்ண சுத்தி கருப்பு படிஞ்சு, தோலெல்லாம் வாடிப்போயி… ஆனாலும் விடல. இப்பகூட  கான்சர் பத்தி யாருக்கு என்ன சந்தேகம் வந்தாலும் என்னால விளக்கிச் சொல்ல முடியும். அப்படிப் படிச்சேன். திடீர்ன்னு ரெண்டொரு வாரத்துக்குள்ளாறவே அம்மாக்கு ரொம்பவும் முடியாமப் போச்சு.  நடக்கவே சிரமப்பட்டாங்க.  அப்ப மறுபடியும் வேற டாக்டர்கிட்ட போகலாம்ன்னு நான்  சொன்னப்ப அம்மா முதல்ல கேட்க மாட்டேன்னுட்டாங்க. தனியார் மருத்துவர்ட்ட போனா ரொம்ப செலவு, ஜிஎச்சுக்கே போகலாம்ன்னுங்கா. அண்ணன் கண்டிஷனா சொன்ன பிறவுதான்

மவுண்ட் எலிசபெத்துக்கு போக ஒத்துக்கிட்டாங்க.  நான் ஏற்கெனவே கூகிள் பண்ணி டாக்டர் டானை கண்டுபிடிச்சு அவர்கிட்ட அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியிருந்தேன். அங்க திரும்பவும் எல்லா சோதனையும் செய்து அதையேதான் சொன்னாரு. ஆனா வெள்ளை  அணுக்களோட பெருக்கத்த கட்டுப்படுத்தற  ஒரு  புதிய மருந்து பத்தி  சொன்னாரு.  குணப்படுத்திடலாம்  ஆனா செலவு ஐம்பதாயிரத்துக்கு மேல ஆகுமின்னாரு.  அம்மாக்கு இன்சூரன்ஸ் இல்ல. நானும் அண்ணனும் சேர்ந்து எப்படியும் கட்டிடலாம்ன்னு முடிவு செஞ்சோம். அம்மா கடைசி வரைக்கும் ஒத்துக்கவே இல்ல. தன்னால எங்களுக்கு எந்த செலவும் வரக்கூடாதின்னுட்டாங்க. தன்னோட சேமிப்பில இருந்து மொத்த தொகையையும் கட்டினாங்க.

ரெண்டு நாளா அம்மா கண் தொறக்கல. நானும் அண்ணனும் மாத்தி மாத்தி ஆஸ்பத்திரியிலேயே  இருந்தோம். மூணாவது நாள்  நினைவு வந்திச்சு. அதுக்கடுத்த நாள் காலையில நான் போனப்ப அம்மா நர்ஸோட பேசிட்டிருந்தாங்க. என்னைப் பாத்ததும், சோதனை, ட்ரீட்மெண்ட், மருந்து, பத்தியெல்லாம் நான் துருவித் துருவிக் கேள்வி கேட்டிட்டே இருக்கிறதா, அந்த நர்ஸ் அம்மாட்டா கோள் மூட்டினா.

அம்மா சிரிச்சாங்க. அவங்க அப்படித்தான். ஸ்கூல்ல டிச்சர் கூப்பிட்டு ஏதாச்சும் சொன்னாலும் சிரிப்பாங்க. அண்ணனோட டீச்சர்தான் கூப்பிடுவாங்க. அண்ணன் ரொம்ப சேட்ட. சில நேரத்தில டீச்சருக்கு கோவம் வரும். ஆனாலும் அம்மா சிரிச்சிட்டே பேசுவாங்க. வீட்டுக்கு வந்தும் அண்ணனத் திட்ட மாட்டாங்க. ரொம்ப சாதாரணமா ஏதாவது சொல்வாங்க.

எங்கிட்ட அன்னிக்கு அப்படித்தான் சொன்னாங்க, “நீ  நிறைய லீவு எடுத்திட்ட. இனிமே லீவு எடுக்க வேணாம்.  எனக்கு நால்லாயிட்டுது… இன்னிக்கே வேலக்கு போ”ன்னாங்க…

வீட்டு வந்த கொஞ்ச நாள்ல  அம்மா நல்லா தேறிட்டாங்க. சமையல், கட வேலை, நடன்னு  முன்னமாதிரி அவங்க வாழ்க்க திரும்பினாலும் பழையபடி  இருக்காதுங்கிற  உண்ம  அம்மாவையும் எங்களையும் ரொம்ப பாதிச்சுது. “இன்னும் கொஞ்ச காலம்தான்”ன்னு எங்கோ  மூளைக்குள்ள கேட்டிட்டே இருந்திச்சு.

அம்மாக்கு எல்லாத்தையும் சரியா செய்யனும். எதிலயும் தீவிரம் இருக்காது, சுணக்கமும் இருக்காது. வேல, சாப்பாடு, தூக்கம், பொழுதுபோக்கு எல்லாமே அந்தந்த கணக்கில இருக்கும். கூடக்குறைய இருக்காது.

அம்மாட்ட நான் நாலஞ்சு மாசமா முறைச்சிட்டிருந்தேன். என்னான்னு ஒரு வார்த்த கேட்குறதில்ல. அம்மாவும் ரொம்ப அழுத்தம். அவுங்களும் கண்டுக்கல. சரி  ஆத்தாமையில ஏதோ கோபிச்சுகிட்டா, மகதானே நாம சமாதானபடுத்துவோம்ன்னு அவங்களுக்குத் தோணல. அது எனக்கு இன்னும் ஆத்திரமாயிடுச்சி.  அநாத ஆயிட்டோம்ன்னு சோகமாயிடுச்சி. செத்துப்போன அப்பாமேல கோவம் வந்திச்சி. நான் மனவருத்தமா இருக்கிறதவிட, அது யாருக்கும் வருத்தமாயில்லங்கிறதுதான் இன்னும் வருத்தமாயிருந்திச்சி. அவன்கூட ஒரு போன் போடல. நானா தேடிகிட்ட முடிவு. நாந்தானே அனுபவிக்கனும்… தாயும் பிள்ளையுமா இருந்தாலும் வாயும் வயிறும் வேறுன்னு தோண தனியா வீடு பாத்திட்டு இருந்தேன்.

அந்த நாலஞ்சு மாசத்தில அவங்கள வியாதி திரும்பவும் தீவிரமா தாக்க ஆரம்பிச்சிது. அம்மாவ ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கிறதாக அண்ணன் போன் பண்ணிச்சி. வேலையில இருந்த நான் பாதி மீட்டிங்கிலேயே கிளம்பினேன்.  நடமாட முடியாம, சோறு திங்க முடியாம, உடம்பெல்லாம் குழாய் குழாயா பொருத்திட்டு, படுத்திருந்த அம்மாவைப் பாத்தப்ப, இந்தவாட்டி அம்மா இன்னும் மோசமா பாதிக்கப்பட்டிருந்தத உணரமுடிஞ்சிச்சி.

அடக்கமாட்டாம  அழுதேன். நான் நிதானமடைஞ்சதும்  அம்மா என்னைக் கண்ணால  வருடிக்கொடுத்தாங்க.  அம்மாவால எதுவும் சாப்பிட முடியல. பால், ஜூஸ்ன்னுதான் குடிக்க முடிஞ்சுது. அன்னிக்கு அம்மா அதுவும் குடிக்கல்ல.

மறுநாள் சவ்வரிசி கஞ்சி செஞ்சி எடுத்திட்டுப் போனேன். அம்மாவால் தலையைக்கூடத் தூக்க முடியல்ல.  போன தடவ ஆஸ்பத்திரியில இருந்தப்ப அம்மா இத்தினி மோசமா இல்ல. அவங்களால சொந்தமா சாப்பிட முடிஞ்சிது. ஸ்பூனால நான் கஞ்சிய அவங்களுக்கு  ஊட்டிவிடப்போனா, அம்மா ரொம்ப சங்கடப்பட்டாங்க. எனக்கும் சங்கடமாத்தான் இருந்துச்சி. இதுவரைக்கும் அம்மாக்குத் தட்டிலகூட நானோ அண்ணனோ சாப்பாடு போட்டுத் தந்ததில்ல. மெயிடகூட அம்மா சாப்பாடு எடுத்தத்தரச் சொல்லமாட்டாங்க. எப்பவும்  அவங்களேதான் தனக்கு சாப்பாடு எடுத்து வைச்சிப்பாங்க. ரெண்டு, மூணு நாள் நாம ரெண்டுபேரும் சங்கடப்பட்டோம். பிறவு மெல்ல மெல்லப் பழகிப்போச்சு.  கழுத்தில டிஷ்ஷூ பேப்பரை விரிச்சு வைச்சு, பேசிட்டே  ஒரு கோப்பைக் கஞ்சியையும் அம்மாவைக் குடிக்க வைக்கிறதில தேர்ந்திட்டேன். இருந்தாலும் நர்ஸ் உடம்பு துடைச்சு துணி மாத்திறப்பவும் ‘பம்பர்ஸ்’ மாத்திறப்பவும் அம்மா என்னைய வெளியிலேயே நிக்கச் சொன்னாங்க.

அன்னிக்கு ராத்திரி நான் போனப்ப  அறை முழுக்க ஒரே பீ நாத்தம். ஆஸ்பத்திரியோட மருந்து வாடயையும் மீறி அந்த நாத்தம் தூக்கியடிச்சிது. அம்மா வெளிக்குப்போய் ரொம்ப நேரம் ஆயிருக்கனும். அம்மா மருந்து மயக்கத்தில இருந்தாங்க. அன்னிக்கு பொதுவிடுமுறை என்கிறதால ரொம்ப நர்ஸுங்க லீவில இருந்தாங்கபோல. கொஞ்ச பேரதான பாக்க முடிஞ்சுது. வேறு வார்ட்டுக்குப் பொறுப்பான நர்ஸ  கூப்பிட்டு அவங்க உதவியோட அம்மாக்குத் துணி மாத்தி, சுத்தம் செஞ்சேன். தாதிகளுக்கு பழகியிருந்த அம்மா, எங்கிட்ட ரொம்ப கூச்சப்பட்டாங்க. எப்பவும் பளிங்காட்டம்  இருக்கிற அம்மாவை அப்படிப் பாக்க எனக்கும் ரொம்பக் கஷ்டமா இருந்திச்சி. சீக்குன்னு படுத்திட்டா எல்லாமே மாறிடுது.

துணி மாத்திறப்பகூட, ரூம்பு கதவ சாத்திட்டு மாத்திறவங்க அம்மா. அப்பா, நான், யார் ரூம்புள்ளாற இருந்தாலும் வெளில விரட்டிவிட்டுருவாங்க. அம்மாக்கு அத்தனை கூச்சம். அம்மா வீட்டில கைலியும் இடுப்புவரை நீளமான சட்டையும் போடுவாங்க. வெளியில தெருவில போனாலும் அந்த டிரெஸ்தான். முக்கியமான இடங்கள்ன்னா சேலை கட்டுவாங்க. நைட்டிகூட அம்மா போடமாட்டாங்க. பேண்ட்டும் சட்டையுமான அந்த ஆஸ்பத்திரி உடுப்புக்குப் பழக அம்மா முதல்ல ரொம்ப சிரமப்பட்டாங்க.  நர்ஸ் துணி மாத்திவிட அம்மா முதல்ல ஒத்துக்கல்ல. மயக்கமா இருந்தப்பகூட தானேதான் துணி மாத்துவேன்னு அடம்பிடிச்சாங்க.

மெல்ல மெல்ல அம்மா என்னைத் தன்னோட அந்தரங்கத்துக்குள்ள அனுமதிக்கத் தொடங்கினாங்க. நர்ஸ்   உடம்பு துடைச்சு, துணி மாத்திவிடும்போது கூடமாட உதவ அனுமதிச்சாங்க.  ஆனாலும் அந்தநிலையிலயும் அம்மா தன்னைச் சுத்தி எழுப்பியிருந்த வலைக்குள்ளாற தனிச்சித்தான் இருந்தாங்க.

அம்மா  வீட்டுக்கு வந்த பின்னாடி, ஓரளவு நடமாடத் தொடங்க கொஞ்சநாள் ஆச்சு. அவங்க ரொம்ப வீக்கா இருந்தாங்க. மெலிஞ்சு, இறக அசைக்கக்கூட சத்தி இல்லாத குருவியாட்டம் இருந்தாங்க. அவங்களுக்கு குளிக்கவும் கழிவறைக்கு போகவும் உடை மாத்தவும்  உதவி தேவையாயிருந்திச்சி.  அம்மா வீட்டுக்கு வந்த அன்னிக்கு மெயிடு அம்மாகிட்ட  பாத்ரூம் போகனுமான்னு கேட்டா. ஆனா அம்மா அவசரமில்ல, அப்புறமா பாத்துக்கலாம்ன்னு  ராத்திரி வரைக்கு மூத்திரம் போகவே இல்ல.  வயிறு உப்பிப் போச்சு. மூத்திரத்த அடக்கி அம்மா வேதனைப்பட்டுகிட்டு இருந்தாங்க. ஆனாலும் காற்சட்டையைக் கழட்டி,  மூத்திரக்குடுவை வைக்க மெயிடு உதவுறது அம்மாக்கு பிடிக்கல்லன்னு புரிஞ்சுது. பிறவு நானே மூத்திரப் பாத்திரத்தை வைச்சு சலம் கழிக்க உதவிசெஞ்சேன்.

மறுநா அம்மாக்கு உடம்பு துடைச்சிவிட போனப்போ, முகத்த மட்டும் துடைச்சா போதுமின்னாங்க. உடம்பைத் துடைச்சி, சட்டை மாத்த விடாம என்னவோ காரணமெல்லாம் சொல்லி ரெண்டு நாள கடத்தினாங்க. மூணா நா அவங்களுக்கு  நா மூஞ்சி கொடுக்கல. அவங்க பேச்சு காதிலேயே விழாதமாறி நா  பாட்டுக்கு அவங்க சட்டைய கழட்டி, துடைச்சி விடத் தொடங்கிட்டேன். ஆஸ்பத்திரியில இருந்தவரை தாதிங்க உடம்பு துடைச்சி, உடுப்பு மாத்தி விடுவாங்க.  அவங்கள தூக்கி உட்கார வைக்க உதவுறது, தலையணையைச் சரிசெய்யிறது, கஞ்சி கொடுக்கிறதுன்னு  சின்னச் சின்ன உதவிகள மட்டும்தான் நா செஞ்சேன். இப்பதான் முதமுறையா, நானே அவங்கள முழுக்க துடைச்சி விட்டு சட்டை மாத்தி விடறேன்.

சின்ன வயசில அம்மாதான் என்னைக் குளிப்பாட்டி, சட்டை போட்டு விடுவாங்க. நானும் அம்மாவும்  நிறையவாட்டி ஒன்னாக் குளிப்போம். அம்மா எனக்குச் சோப்பு போடுவாங்க, நான் அவங்களுக்குச் சோப்புப் போட்டுவேன். அவங்க எனக்கு உடம்பெல்லாம் தேச்சு விடுவாங்க. நா அவங்க வயித்ததான் தேய்பேன். அப்பெல்லாம் அவங்களோட உயரம், பெரிசா இருக்கிற மார்பு, கைகால்களெல்லாம் முள்ளுபோல குத்திட்டு நிக்கிற மயிர்க்கால்க பத்தியெல்லாம் கேள்வி கேட்டது அரைகுறையா நினைவு இருக்கு. ஏதோ ஒரு கட்டத்தில் நானே எல்லாம் தனியா செஞ்சுக்க தொடங்கின பிறவு, அம்மா முன்னாடி சட்ட மாத்தகூட எனக்கு ரொம்ப சங்கடமா ஆயிட்டுது. என்னமாறியே அவங்களுக்கும் ஒரு கட்டத்தில அப்படி ஆயிருக்கும்போல. நினைச்சுப் பாத்தா ஆச்சர்யமாதான் இருக்கு. ஆனா இதுபோல நிறைய விஷயம். ஒன்னான்னா ரொம்ப இருக்கு. மனசுவிட்டுப் பேசறது, அழறது, கோபப்படறதுன்னு எல்லாத்துக்குமே எப்படியோ இடவெளி வந்திடுச்சி. அவங்களுக்குப் புரியாதுன்னு எப்ப நா நினைக்கத் தொடங்கினேன்னு தெரியல. அப்பலேயிருந்து அவங்களுக்கும் அப்படி தோணியிருக்குமோ என்னவோ. ரோட்டில சாதாரணமா இருக்கிற அல்லூறுமாறி ஒரு சின்ன இடவெளிதான். ஆனாலும் தாண்ட முடியாம இருந்திச்சி.

ஒரு மாசத்துக்கு மேலா சோறில்லாம, படுத்த படுக்கையா இருந்ததால அம்மா பாதியாயிட்டாங்க. முன்னெல்லாம் அவங்கள பாத்தாக்கா  65 வயசுன்னு யாரும் சொல்லவேமாட்டாங்க. சத்தியம் செஞ்சாக்கூட நம்பமாட்டாங்க.  அவங்ககூட வெளியில போனா, என் அக்காவான்னுதான் கேப்பாங்க. அவங்க தசயெல்லாம் கெட்டியா, தளதளன்னு இருப்பாங்க. ஆனா இப்ப கொஞ்ச நாளுக்குள்ளாற, தண்ணியெல்லாம் வத்திப்போய் வயசானவங்களா ஆயிட்டாங்க. தோலெல்லாம் ரொம்ப உலர்ந்துபோச்சி. அவங்களோட அழகான மார்பு சூம்பி சுருங்கிப்போச்சி. கைகாலெல்லாம் காலாகம்பாட்டம் குச்சிகுச்சியாட்டுது. சூத்தில தசையே இல்ல. எலும்புதான் துருத்திட்டு இருக்கு.

முதல்ல வெதுவெதுப்பான தண்ணில துண்ட நனைச்சு அவங்க உடம்பு முழுக்க துடைச்சேன். பிறவு காய்ஞ்ச துண்டால தண்ணியில்லாம துடைச்சுவிட்டேன். அப்புறம் அம்மாக்கு பிடிச்ச கோகுல் சந்தனப் பவுடர கழுத்து, முதுகெல்லாம் தடவி, கைலியும் சட்டையும் போட்டுவிட்டேன். அவங்களால எழுந்திரிச்சு உட்கார முடியாததால, அவங்கள அணைச்சாமாறி, என்மேல சாய்ச்சி வைச்சிட்டு, தலமுடிய வாரி ரப்பர்பேண்ட் போட்டப்ப,  நினவுதெரிஞ்சி, இப்படி அம்மாவோட அணைப்பில நா இருந்ததில்லங்கிறது எங்கேயோ சுருக்குன்னு குத்திச்சு.

நாங்க வளர்ந்த பின்னாடி அம்மா எங்கள அவங்ககிட்ட  நெருங்கவிட்டதே இல்ல. அதுவும் எங்கிட்ட ரொம்பவே கண்டிப்பு. அப்பா பக்கத்திலயோ, அண்ணன் பக்கத்திலயோ நெருக்கமா  உட்கார்ந்தா திட்டுவாங்க. “வயசு வந்த பிள்ள, என்னா பழக்கம் இது?”ன்பாங்க. அப்பெல்லாம் அவங்கள வம்பு பண்ணுறதிக்கின்னே, அண்ணன் அம்மாவைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கப் போகும், தூக்கும். அம்மா கோவத்தோட தள்ளிப் போவாங்க.  அம்மா சொல்லிச் சொல்லியோ அல்லது இயல்பாவோ எனக்கும் தொட்டுப் பேசுறதும் அணைக்கிறதும் சங்கடமா ஆயிட்டுது.

அம்மா கொஞ்சம் நல்லாகி, நடமாடத் தொடங்கினதும் தானே தன்னோட வேலகள பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.  மயக்கமா இருந்தாலும் குளிக்கிறது உடுப்பு மாத்திறதெல்லாம் தானே செஞ்சுகிட்டாங்க.  அன்னிக்கு அவங்க அறைக் கதவயும் குளியலறைக் கதவயும்  சாத்திட்டு குளிக்கிறத கவனிச்சேன். அம்மாக்கு சீக்கு குணமாயிட்டுதுன்னு தோணிச்சு. அம்மாவை நினைச்சு சிரிப்பும் வந்திச்சு.

அம்மா ரொம்ப மெலிஞ்சு போயிட்டதால, சட்டங்க, உள்ளாடைங்க எல்லாமே அவங்களுக்கு தொளதொளன்னு ஆயிடுச்சு. அந்த ஞாயித்துக்குகிழம அம்மாவக் கூட்டிட்டு கடைக்குக் கிளம்பினேன். எவ்வளவோ காலத்துக்குப் பிறவு அம்மாவும் நானும் ஒன்னா துணிக் கடைக்குப் போறோம். ஏதாவது பிறந்தநாள், பண்டிகைன்னாக்கூட நாங்க ஒன்னாத் துணி எடுக்கப் போறதில்ல. அம்மா தனியா போய் எங்களுக்குத் துணி எடுத்து வருவாங்க. நாங்க அவங்களுக்கு வாங்கிட்டு வருவோம்.

‘ஓஜி’ பேரங்காடியில ஒரு மணி நேரத்துக்கு மேல் சுத்தி, அம்மாக்கும் எனக்கும் உள்ளாடைகளும் மேல்சட்டைகளும் பொறுக்கி எடுத்தோம். அம்மாக்கு உடம்பு வலி இருந்ததால, மென்மையான உள்ளாடைகளயும் வீட்டுக்குப்போட வசதியா, லைட்டா இருந்த கால்சட்டைகளயும் எடுத்தேன். விலை அதிகமா இருந்ததால அம்மா வேண்டாமின்னாங்க. போட்டுப் பாருங்க. சரியா இருந்தா வாங்குவோம், இல்லன்னா வச்சிட்டு வந்திடுவோம்ன்னு அம்மா ட்ரெஸ் போட்டு பாக்குற அறைக்குள்ளாற இழுக்காத குறையா கூட்டிட்டுப் போனேன்.

என் முன்னாடி உள்ளாடைய போட்டுப் பாக்க அம்மா முதல்ல ரொம்ப கூச்சப்பட்டாங்க. எனக்கும் கொஞ்சம் தயக்கம் இருந்திச்சி. ஒரு நொடிதான். பிறவு நான் எடுத்திட்டு வந்திருந்த உள்ளாடக, மத்த உடுப்புகள ஒன்னொன்னா போட்டு அம்மாட்ட காட்டினேன். அம்மாவும்  ஒவ்வொன்னையும் போட்டுப் பாத்து எங்கிட்ட, “எப்படியிருக்குன்னு,” கேட்டாங்க.  எடுத்து வந்த துணிகளயெல்லாம் போட்டுப்பாத்து முடிஞ்சதும் நாம ரெண்டுபேரும் துணி எதுவுமே போடாம கண்ணாடி எதிர நின்னு சிரிச்சோம்.

“இந்த வயசிலேயே மாரையும் வயித்தையும் இப்படி தொளதொளன்னு வச்சிருக்கியே, எக்ஸசைஸ் செய்யி”ன்னு வயித்தில குத்திட்டே அம்மா  சொன்னாங்க. நானும் அம்மாவோட லேசா, அப்பங்கணக்கா உப்பியிருந்த வயித்த தொட்டு, “உங்களுக்கும் பாருங்க, ரெண்டு மாசத்தில வயிறு எவ்வளோ பெரிசா போச்சி,”ன்னு சிரிச்சேன். “ஏன் சொல்லமாட்டே,” ன்னுட்டு பக்கவாட்டில் திரும்பி கண்ணாடியில பாத்துக்கிட்டாங்க.

“இந்த வயசிலேயேயும் நீங்க சிக்குன்னுதான் இருக்கீங்க,”ன்னு அவங்க பின்னாடி நின்னு தோளைக் கட்டிப்பிடிச்சிட்டு கண்ணாடியில பார்த்த எனக்கு டக்குன்னு ஆயிடுச்சி. இப்படித்தான் சின்னவயசில அம்மா செய்வாங்க. நா கண்ணாடி முன்ன நின்னு தலமுடிய வாரிட்டே இருப்பேன். எங்கேயிருந்து வருவாங்கன்னு தெரியாது, திடீர்ன்னு பின்னால வந்து என் தோளில ரெண்டு கையையும் சுத்தி கட்டிட்டு கண்ணாடில பாப்பாங்க. நானும் கண்ணாடில பாப்பேன். ரெண்டுபேரும் யாரோடயே போட்டோவ பாக்கிறாமாறி கண்ணாடில நம்பலப் பாத்து சிரிச்சுப்போம். அப்பக்க அப்படியே என்ன வேகமா மேல தூக்குவாங்க. வேகமா மேலபோயிட்டு அம்மாவோட கன்னத்த ஒட்டிட்டு கீழ இறங்கிறது எனக்குப் பிடிக்கும். அம்மாவோட பவுடர் என் முகத்தில ஒட்டி, அவங்களோட வாசன என்மேல ஒட்டிக்கும். எனக்கு அப்ப ரொம்ப சந்தோசமா இருக்கும். அது ரொம்ப ரொம்ப சின்ன வயசில.

“அடச் சீ, முதல்ல டிரெஸ்ஸ போடு, வெக்கங்கெட்டவ,”ன்னு என் கைகளைத் தட்டிட்டு, என்னோட சட்டய எடுத்து என்மேல போட்டாங்க. கைலியை எடுத்து உடம்பைச் சுத்திகிட்டு, உள்ளாடைகளை அணியத்தொடங்கினாங்க.

இந்த சில மாசங்கள்ள அம்மாவும் நானும் நல்ல கூட்டாளிங்களாயிட்டோம். தேக்கா மார்க்கெட்டில உட்காந்து கோப்பி குடிச்சிட்டே, நிறைய கத பேசினோம். ஆனந்த், அதுக்கு முன்னாடி முறிஞ்சுபோன உறவுக, இப்படி அம்மாட்ட சொல்லாம மறைச்ச எல்லாத்தப்பத்தியும்  சாதாரணமா பேசமுடிஞ்சிது. அம்மாவும் ஒரு கூட்டாளிகணக்கா, கத கேட்டாங்க. அவங்களும் நிறய விஷயங்களச் சொன்னாங்க.

அப்பாக்காக செஞ்ச சமரசங்க, அவங்களோட நிறைவேறதா ஆசக, நாலுவாட்டி வயறுகழுவினதகூட சொன்னாங்க. கிழவிங்க கணக்கா ரெண்டு பேரும் ராத்திரி, பகல்ன்னு கத பேசிட்டே இருந்தோம். அண்ணன்கூட அப்பப்ப முறச்சி பாக்கும். எப்ப பாத்தாலும் என்னா அம்மாட்ட பேசிட்டே இருக்க, அவங்க தூங்க வேணாவான்னு ஏசும். நா கண்டுக்கவே மாட்டேன். ராத்திரி மூணு, நாலு மணி வர கூட சில நேரம் பேசிட்டே இருப்போம்.

சமயங்கள்ல அம்மா என் கைகள தன்னோட கைகளோட கோத்திட்டு நடப்பாங்க. அப்பெல்லாம் நா அவங்க விரல்களை கெட்டிய பிடிச்சிப்பேன்.

“எனக்கு சீக்கு வந்ததும் ஒரு வகையில நல்லதுதான்”ன்னு என்று அம்மா சிரிச்சிட்டே சொன்ன அன்னிக்கு அம்மாவுக்கு காய்ச்சல் வந்திச்சி. காய்ச்சல்லன்னா அப்படி ஒரு காய்ச்சல். தாள போட்டா எரிஞ்சு போயிடும்போல உடம்பு அப்படித்தான் சுட்டிச்சி.  இருமுனா  சளியோட ரத்தமும் வந்திச்சி. உடனேயே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனோம். மூணு நாளா அம்மா கண்ணத் தொறக்கவேயில்ல. எல்லா சிகிச்சகளையும் செஞ்சாங்க.  டாக்டர் டானோ இன்னும் ரெண்டு டாக்டருங்க பாத்தாங்க.  ஆனா  ஒருத்தரும் ஒரு வார்த்தகூட நம்பிக்கையா சொல்லல்ல.

நா பக்கத்திலேயே உட்காந்திருந்தேன். அண்ணன் வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்குமா அலைஞ்சிட்டு இருந்திச்சி. ராத்திரியானதும் தெரியல. விடிஞ்சதும் தெரியல. ஆஸ்பத்திரி அறைக்குள்ள அம்மா பக்கத்தில உட்காந்திட்டே இருந்தேன். அண்ண வரும்போது திட்டும், போய்க் குளி,  சாப்டுன்னு ஏதாவது சொல்லும். அது சொல்லுதேன்னு செய்வேன். அதெல்லாம் அதோட மனச கொஞ்சம் மாத்தினா மாறி இருக்கும்.  நாலாம் நாளு நானும் அண்ணனும் அம்மா பக்கத்தில் உட்காந்திருந்தோம். நா அண்ணன் வாங்கியாந்த மைலோவ குடிச்சிட்டிருந்தேன். அண்ணன் அம்மாவ பாத்திட்டு இருந்திச்சி. அப்ப அம்மாவுக்கு லேசா உணர்வு வந்திச்சி. முதல்ல  என்னமோ முணகினாங்க. சத்தம் வரல. பிறவு கண்ண தொறக்க முடியாம தொறந்தாங்க. நேர எங்கள பாத்தாங்க. எப்படி நாங்க அந்தப் பக்கத்தில உட்காந்திருந்தது அவங்களுக்குத் தெரியுமோ…  ஆனா சொல்லி வச்சாமாறி கண்ணத் தொறந்ததும் நேர எங்களத்தான் பாத்தாங்க.

அவங்க உடம்பு ரொம்பவு நொந்துபோயிருந்ததால லேச கை பட்டாகூட அவங்களுக்கு வலிச்சிச்சு. துணிகூட போடமுடியல்ல. மெல்லிய துணியால அம்மாவ போத்தி விட்டிருந்தோம். வாஷிங்மிஷினில பிழிஞ்ச துணி கணக்கா சுருங்கிச் சிறுத்துப் போயிருந்த அம்மா,  அம்மா போலவே இல்ல. மைலோ உள்ளாற இறங்க முடியாம தொண்டை அடைச்சிது. அண்ணனோட கைகள கெட்டியா பிடிச்சேன்.

என்னா நினைச்சிச்சோ, என் கைகளை அண்ணன்  உதறிச்சி. என்னான்னு நா யோசிக்கிறதுக்குள்ளாற, சட்டுன்னு அம்மாவை அப்படியே குழாய்களோடோ தூக்கி இறுக்க அணைச்சிச்சு. அம்மா  மேல போத்தியிருந்த துணி நழுவி கட்டில்ல விழுந்திச்சி. நாடித் துடிப்ப கண்காணிக்க அவங்க விரல்ல மாட்டியிருந்த குழாயும் கழண்டு விழுந்திச்சு.  அண்ணன் எதையுமே கண்டுக்கல. அழாம, கேவாம, கூட்டத்தில தொலைஞ்சுபோன குழந்த பயந்து அழுது, தவிச்சு, திடீர்ன்னு அம்மாவ பார்த்தும் வீல்லுன்னு அழுதிட்டே சிரிக்குமோ, அதுமாறி அப்ப அதோட முகம் இருந்திச்சி.   அம்மாவ அப்படியே கட்டிப்பிடிச்சிட்டே முத்தம் கொடுத்திச்சி. அம்மா தடுக்கல்ல.

நா அம்மாவையே பாத்திட்டிருந்தேன். நாய்க்குட்டி கணக்கா அவங்க முகம் குழஞ்சிட்டே வந்திச்சி. அவங்க கைகள அவங்களால தூக்க முடியல. ஆனாங்காட்டியும் கையத் தூக்க எத்தனிச்சாங்க. அண்ணனை அணைக்க நினைச்சாங்க போல. தண்ணியெல்லாம் வத்தி காய்ஞ்சு போன இல மாதிரியிருந்த அவங்க ரெண்டு கண்ணுலேயும் அப்படி ஒரு வெளிச்சம். அவ்வளோ அன்பு. அழுவிப்போன ஆப்பிள் தோல்கணக்காகயிருந்த இமைக்குள்ளாற, செத்துப்போன மீன்மாறி இருந்த அந்தக் கண்ணுக்குள்ளே, சூரியன்லேயிருந்து வர்றமாறி அவ்ளோ பெரிய வெளிச்சம். அந்த வெளிச்சம் வெள்ளமா மாறி கொட்டிச்சி. முகம் முழுக்க சிரிச்சா மாறி விரிஞ்சிதிருந்திச்சு. அம்மாவோட கன்னத்தில ஒட்டிக்கிட்டிருந்த அண்ணனோட முகம் முழக்க நனைஞ்சி போச்சி. ஆனா அண்ணன் கண்ணுலயிருந்து ஒரு சொட்டுத் தண்ணி வரல. அதோட முகம், வயிறுமுட்ட பால்குடிச்சிட்டு தூங்கப்போற  பிள்ளயோட முகம்மாறி  நிறைஞ்சி இருந்திச்சி.

அம்மா பாக்குறதுக்கு அதுக்குமேல எனக்கு சத்தியில்ல. காலெல்லாம் பலமிழந்து கீழ விழப்போயிட்டேன்.  கை நடுங்கிச்சி. கையிலேயிருந்த மைலோ கீழ விழுந்திடுச்சி. உடம்பு கனமாச்சி ஆனாலும் நாற்காலிய, மேசைய, கதவ பிடிச்சி பிடிச்சி வெளிய போயிட்டேன்.

1 comment for “நிர்வாணம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...