நீயின்றி அமையாது உலகு 8

tayagகடந்த இதழின் தொடர்ச்சி

அதன் பின் சந்திக்கும்போதெல்லாம் அந்த அக்காவிற்கு நன்றி சொல்ல ஆரம்பித்தேன். எல்லோரிடத்திலும் சிடுசிடுவென இருக்கும் அவர் என்னிடம் சிரமமின்றிப் பழக ஆரம்பித்தார். தொழிற்சாலையில் வேலை செய்யும் மற்றவர்க்கு அது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது. அது நிர்வாகத்தினர் வரை சென்றது.

அன்று பணியாளர்களும் மேனேஜரும் சந்திக்கும் நாள். முதல் நாள்தான் எங்களுக்கு தெரியும். கடந்த ஒருவாரமாக  தொழிற்சாலையில் கிடைத்த லாப நஷ்டம் குறித்து மேனேஜர் பேசுவார். எங்களுக்குத் தெரிந்து இதுவரை மேனேஜர் நஷ்டத்தைத் தவிர லாபம் குறித்துப் பேசியதே இல்லை. சரியான நேரத்திற்கு பொருள்களை தயார் செய்யவில்லை. ஓய்வுக்கு அதிகநேரம் எடுக்கிறார்கள். குழுத்தலைவர்கள் பேச்சைக் கேட்பதில்லை என புகார்களுக்குப் பஞ்சமே இருக்காது.

பொருள்களின் தரத்தை நிர்ணயிக்கும் நாங்கள்தான் ஒவ்வொரு முறையும்  வாங்கிக்கட்டிக் கொள்வோம். ஏனெனில் தொழிற்சாலையை விட்டுப் பொருள்கள் வெளியே செல்வதற்கு முன் இறுதிச் சோதனையை நாங்கள்தான் செய்கிறோம். அதோடில்லாமல், பணியாளர்கள் முன் சந்திக்கும்போது எங்களைத் திட்டிவிட்டு அதன்பின்னர் மேனேஜர் எங்களை அவரது அறைக்கு அழைத்துப் பணியாளர்களைத் திட்டுவார். இதை மற்றவர்களிடம் சொன்னால் நம்பவா போகிறார்கள். தொழிற்சாலைப் பணியாளர்களுக்கும் எங்களுக்குமான உறவு சுமுகமாக இருக்கக்கூடாது என்று மேலிடம் சிரத்தையுடன் பார்த்துக்கொண்டது.

காலை,  பலரும் பல வித எண்ணங்களுடன் மேனஜருக்காக காத்திருந்தோம். ஒரு வாரத்தில் செய்துவிட்ட தவறுகளை பலரின் முகத்தில் பார்க்க முடிந்தது.

மிகச் சரியாக 8 மணிக்கு மேனேஜர் வந்தார். வழக்கம்போல அவர் பாட்டுக்கு நஷ்ட கணக்கை அடுக்கிக்கொண்டே போனார். நல்லவேளையாக வாய் தவறி இந்த வாரம் அனுப்பிய பொருள்களில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அதை அவரால் நம்ப முடியவில்லை என்றார்.

நானும் அக்காவும் அருகருகில் நின்றுகொண்டு பேச்சை கேட்டுக்கொண்டிருந்தோம். காது மேனேஜர் பேசுவதை கேட்பதுபோல இருந்தாலும் tayag2எங்களுக்குள்ளாக நாங்கள் பேசிச்சிரித்துக் கொண்டோம். பக்கத்தில் அவர் சிரித்த சிரிப்பு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. மேனேஜரும் ஓரிரு வினாடிகள் பேச்சை நிறுத்தி எங்களைக் கவனித்து பின்னர் பேச்சைத் தொடங்கினார்.

கூட்டம் முடிந்து புறப்படும் நேரம், மேனேஜர் என்னை அவரது அறைக்கு வரும்படி சொல்லிச்சென்றார். கலைந்து கொண்டிருந்தவர்கள் என்னைப் பரிதாபமாகப் பார்த்துத் தலையை ஆட்டினார்கள்.

போயும் போயும் அந்த மேனஜரிடமா தனியா மாட்டுன. பேசியே கொன்னுடுவான் . இன்னிக்கு உன்னோட கடைசிநாள் வேலையா இருந்தாக்கூட ஆச்சர்யப்படறதுக்கு இல்ல என பலர் நேரடியாகவே சொல்லி விட்டார்கள். அந்த அக்கா ஏதும் நடக்காதது போல அவரிடத்துக்குச் சென்றார்.

ஏனோ எனக்கு அக்காவின் மீது கோபம் வந்தது. அவருடன் பேசியதால்தான் இப்போது  மாட்டிக்கொண்டேன். ஆனால், கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சி இன்றி அவர் அவரிடத்துக்கு வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார். கோபத்துடன் அவர் இருக்குமிடத்திற்குச் சென்றேன். பின்னால் நான் நின்று அவரைக் கூப்பிடும் முன் அவர் பேசினார்;

“உன் கோபத்தை இங்க காட்ட வந்துட்டியா…”

நான் அப்படியே நின்றுவிட்டேன்.

“வந்த வேகத்தைப் பார்த்தா என்னமோ வெட்டி முறிக்கிற மாதிரி இருந்திச்சி… இப்படி முழிக்கற..?”

இப்போதும் அவர்தான். எப்படித் திரும்பாமலேயே என்னைக் கண்டுகொண்டார், என் கோபத்தைத் தெரிந்துகொண்டார் என எனக்குப் பிடிபடவில்லை.

“போ..! போய் முதல்ல மேனெஜர் சொல்றதை கேளு.! அப்பறமா இங்க வா.. சண்டை போடலாம்..”

இப்போதும் அவர் திரும்பாமல் அவர் வேலையிலேயே மும்முரமாக இருந்து கொண்டுதான் பேசினார்.

மேனேஜர் அறையில் நின்றுகொண்டிருந்த என்னை அமரும்படி சொன்னார். என்னைப்பற்றி விசாரித்தார். என்ன வயது என்ன படிப்பு என்ற கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் உளறிக்கொண்டிருந்தேன்.

பொதுவாகவே அந்த அக்காவிடம் யாராலும் பேசிவிட முடியாதாம். நான் பேசி அவர் சிரித்தது மேனேஜருக்கு ஆச்சர்யமாக இருந்ததாம். ஆக எனக்குப் பணியாளர்களிடம் நாசுக்காகப் பேசி வேலை வாங்கும் கலை இருப்பதாகக் கூறி யார் யாரின் பெயரையோ உதாரணமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். தொழிற்சாலையைப் பொறுத்தவரை நமக்குத் தேவையான தரத்தில் பொருள்களைச் செய்வதற்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அவசியமானது. ஆனால் அவர்களை முழுமையாகத் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லாதது. அப்படியிருக்கையில் அவர்களை வேலை செய்ய வைப்பதற்காகத்தான் சிறு சிறு குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பொறுப்பாளரை நியமிக்கிறார்கள். ஐந்துபேர் கொண்ட குழுவின் வேலை திறனையும் நேரத்தையையும் ஒரு பொறுப்பாளர் கவனிப்பது சிக்கலில்லாதது.

tayag4தொடர்ந்து அடுக்கிகொண்டிருந்தவர், இனிமேல் அந்தக் குழு பணியாளர்களையும் அக்குழு பொறுப்பாளர்களையும் கவனித்துக் கொள்ளும் பணியை செய்யச் சொன்னார். ஏற்கெனவே வாங்கும் சம்பளத்தைவிட ஒரு மடங்கு அதிக சம்பளம். முன்னர் செய்த பணிபோல குறிப்பிட்ட பொருளை ஏற்றுமதி செய்வதற்கு முன் பரிசோதிப்பதில்லை. செய்யவேண்டிய பொருள்களுக்கான கச்சாப் பொருள்கள் தொழிற்சாலைக்கு வரும்போதே அதற்கென ஒரு கோப்பினைத் தயார் செய்து அதன் தரத்தை கவனிக்க வேண்டும். ஒவ்வொரு படியாக கச்சா பொருள் உருமாறி வருவதில் எந்த சிக்கல் எழுந்தாலும் முதலில் என்னிடம்தான் வருவார்கள். அந்த சிக்கலைக் கண்டறிந்து நடவடிக்கைக்குத் தயாராக வேண்டியது என் வேலைகளில் ஒன்று.

ஒரு வகையில் புரமோஷன் என்று எண்ண வைத்தார். மகிழ்ச்சியில் தொழிற்சாலைக்குள்ளே மெல்ல நடந்து வந்தேன். என் முகத்தில் தெரிந்த குதூகலத்தை பார்த்த பணியாளர்களுக்கு என்ன நடந்துவிட்டது என்கிற குழப்பம்.

உள்ளே செல்லும்போது இருந்த நடைக்கும் இப்போது நடக்கும் நடைக்கும் உள்ள வித்தியாசம் அனைவரையும் கவர்ந்திழுத்தது. அந்த அக்காவிடம் முதலில் சொல்லவேண்டும் எனத் தோன்றி  அவரிடம் சென்றேன்.

வழக்கம்போல அவர் கம்பிகளைக் கணக்கிட்டு குறித்து வைத்துக்கொண்டிருந்தார். அவர் பின்னால் நின்று அழைத்தேன்.

“வாங்க முதலாளி… இனி உங்க பேச்சைதான் நாங்க கேட்கணுமா…”

“கா…!”

“இனி எல்லார் பார்வையும் உன் மேலதான் இருக்கும்… கொஞ்சம் மிஸ் ஆனாக் கூட சபிச்சே கதைய முடிச்சிடுவாங்க.. கவனமா இரேன்..” என்றவர் திரும்பினார்.

அவரின் இரு கண்களின் கருவிழிகளுக்கும் நடுவில் மெல்லிய வெள்ளை நிற நாகம் நின்றுகொண்டு என்னைப் படமெடுக்கிறது. அவர் வேறு மாதிரியாக மாறிக்கொண்டிருந்தார்.

தொடரும்….

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...