லாகிரி தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

lagiri-1

                                                           ~  நான்  ~

 

இடது தட்டினடியில் புளி ஒட்டப்பட்ட துலாக்கோல்.

இயேசுவின் இடது கன்னத்து முத்தம்.

தேயிலையில் கலக்கப்பட்ட மரத்தூள்

கவனத்தைத் திசைதிருப்ப சாலையில் 10ரூபாயை வீசுபவன்

கள்ளகாதலியை  விழாக்களில் தங்கையென அறிமுகம் செய்பவன்

நிறைய பஞ்சடைக்கப்பட்ட பெண் மேல்ஆடை.

கொத்தப் பாயும் நீர்பாம்பு.

நிலப்பத்திரங்களின் கள்ளக் கையெழுத்து…….

 

 

~ நான் ~

 

முக்காலாய் நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில்  பால் பீய்ச்சுபவன்.

வைக்கோல் திணிக்கப்பட்ட கன்றுக்குட்டியைக் காட்டி பசுவின் மடி திருடுபவன்

மனைவியின் ஆண் நண்பர்களின் வாகனத்தில் ப்ரேக் ஒயரை அறுத்துவிடுபவன்

வெறுமனே சுண்ணாம்பு மாவால் மட்டுமே ஆன வலி நிவாரணி மாத்திரை.

திருவிழாக் கூட்டங்களில் பெண் முலையைக் கவ்வும் கரம்.

வெள்ளாட்டின் தலையை முன் கிடத்தி செம்மறிக் கறி விற்கும் கறிக்கடை.

 

~ நான் ~

 

ஒரு கிலோவில் ஒளிந்திருக்கும் இரு அழுகல் கனி.

மிளகோடு கையில் சிக்கும் பப்பாளி விதை.

முதல் சலவைக்கு சுருங்கிச் சாயம்போகும் புத்தாடை.

பார்வையற்றவர் தனியே நடந்து செல்கையில் முகத்திற்கு நேரே

குத்துவது போல் சைகை செய்பவன்.

நெடுஞ்சலையில் வழி விசாரிக்கும் வாகனங்களுக்கு

வேண்டுமென்றே தவறாய் வழி சொல்பவன்.

தனக்கு முடிந்ததும் குப்புறப் படுத்துறங்குபவன்.

கவர்ன்மெண்ட் டெண்டர்.

 

~ நான் ~

 

உள்ளங்கையில் பணம் திணிக்கப்படும் சோதனைச்சாவடி.lagiri-2

போதையூட்டிக்கொள்ள பணம் கிட்டாமல் குழந்தையின் இருமல் மருந்தை திருடுபவன்.

பஸ்ஸில்  வாசிக்கக்  கொடுக்கும்

நான் இருதய நோயாளி, எனக்கு திருமணமாகாத மூன்று தங்கைகள்… அட்டை.

இறுதி நிமிடம்- “ரெம்ப கஷ்டம்” – “சிசேரியன்தான்” – “இன்னும் பணம் கட்டுங்க “.என்று சொல்லும் பிரசவ வார்டு

குடி அமர்வின் போலிக் கண்ணீர்.

போலியான தற்கொலைக் கடிதம்.

 

~ நான் ~

 

மருத்துவமனையின் டோக்கனில் 9-ம் எண்ணை 6-ம்  எண்ணெனக் காட்டி முன் செல்பவன்.

விலை உயர்ந்த “ஜாக் டேனியல்” மது போத்தலில் ஊற்றப்பட்ட “ஓல்ட்  மாங்க்”.

நேர்காணல் வந்தவளிடம் குடும்பக் கஷ்டத்தை கண்ணீர் மல்கக் கேட்டபின்…

தன் உடலோடு இணங்கிப் போகச் சொல்பவன்.

வரைந்து முடித்து இறந்து போனவனின் ஓவியத்தில் தன் கை ஒப்பமிடுபவன்.

மார்க்கெட்டில் இன்றைய  காய்கறிகளோடு  கலக்கப்பட்ட நேற்று மிஞ்சிய காய்கறி.

 

~  நான்  ~

 

கள்ளச்சந்தை ~ திருட்டு VCD ~ மொட்டைக் கடிதாசி ~  ” ஹேர் டை”  ~ ” விக் ”

~நில மோசடி ~ ஏலச்சீட்டு  ~ போலி மதிப்பீடு ~ கள்ள யோனி ~ கள்ள ஆண் குறி.

~கள்ளக் கணக்கு ~ குற்றமிழைத்த நாவு ~ பொய் சாட்சி ~ கள்ளப் பாதிரி.

 

 

2                                  ~

இடது ஜன்னலின் வழியே பார்த்தேன்

ஏசுவின் கை சுத்தியலை ஏந்தியிருந்தது

தந்தை ஜோசப்பின் கை அறுவடை நாளினது அரிவாளை..

மரியாள் தன் விடாய் நாளின் செந்நிறத் துணியை யேந்தியிருந்தாள்.

 

~ அதனால்தான் சொன்னேன். அவர்கள் இடது சாரியாளர்களென …~

 

இல்லை. இங்கே வலது ஜன்னலின் வழியே பார்.

வலகரத்தில் சுத்தியலோடு நான்கு அறையப்படும் ஆணிகளுமிருக்கின்றன.

தந்தை ஜோசப்பின் கையினது அரிவாள் ஆங்கோர் சிலுவை மரத்தை தறித்துக் கொண்டிருக்கிறது பாருங்கள்

மரியாளின் கையில் இழைக்கப்பட்ட மரச்சிராய் பட்டதில்தான் உதிரக்கசிவு.

கையில் காடாத்துணி சுற்றி இருக்கிறாள்.

 

~ கிறித்துவ குடும்பத்தின் அறிகுறிகள் தாம் தெரிகின்றன.~

 

இல்லவே இல்லை. நடுக்கதவை உடைத்துத் திறந்து பார்.lagiri-3

ஏசு வாஞ்சையாய் குட்டி செம்மறியின் கால்களை உடைத்து மண்டியிட செய்கிறார்.

தந்தை. ஜோசப்பின் கையினது அரிவாள்  மறியின் சங்கில் கீறுகிறது..

மரியாளின் நீளமான  கை  அதன் வயிற்றுக்குள் நுழைந்து

இதயத்தை, குடலைக் கவ்வியபடி ரெத்தக் கறையோடு வெளியேறுகிறது..

 

~ இது ஓய்வு நாளின் எளிய நடுத்தரக் குடும்பம்.~

 

4

 

அம்மா  முன்பு நமக்கு முதுகு இருந்ததா ?

ஆம் மகளே. ஆனால்  அவை நிமிர்ந்திருந்தது

 

அம்மா முன்பு நமக்கு கரங்களிருந்ததா?

ஆம் மகளே. ஆனால் அவை நம் தோளில் தொங்கியது.

நெஞ்சின்  குறுக்காய் கட்டப்படிருக்கவில்லை

 

அம்மா முன்பு நமக்கு புட்டமிருந்ததா?

ஆம் மகளே. ஆனால் பிரம்புகளில்லை.

 

இந்த மலையை போன்ற மார்புகளிருந்ததா?

ஆம் மகளே. ஆனால்

மரபீரோவின் உருண்டை கைப்பிடியைப்போல

அதைப் பற்றித் திருகும் முரட்டு  ஆண்கரங்களில்லை

 

குழந்தையாலோ, உணவாலோ நிரப்பப்பட்ட உப்பலான வயிறு இருந்ததா?

ஆம் மகளே. ஆனால்  அது அந்நியர்களாலும்,

அந்நிய பயிர்களாலும் நிரப்பப்படவில்லை.

 

நம் உடலின் மீது உடைகள் தரிக்கப்பட்டிருந்ததா?

ஆம் மகளே. அவை செங்குத்தாகவோ, இடவலமாகவோ கழட்டவல்லவை.

கிழிக்கப்பட்டவை அல்ல.

 

நம்மிடையே  நெல் இருந்ததா?

ஆம் மகளே. ஆனால் பெயரிடப்படவில்லை

 

நிலம், ஆறுகள்..?

ஆம் மகளே. முன்பு நிலத்தில் மண்ணும், ஆறுகளில் நீரும் ஓடின.

இப்போதுதாம்  வலது காலணிகளை நாம் இடது காலில்  அணிகிறோம்.

சில நேரம்  இரு கால்களிலும் இடது இடது : இல்லையேல் வலது வலது

 

அம்மா முன்பு நமக்கு வாயிருந்ததா..?

நாக்கு.., பற்கள்., சிரித்தோமா?

ஆம் மகளே. காட்டு மக்காச்சோளத்தின் மேல் பச்சை றெக்கைகளை உரித்துப்பார்.

இப்போதும் சிரித்தபடி தெரியும் நம் பழைய மஞ்சள் பற்கள்  .

~

 

5

இந்தச் சுவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில்..lagiri

அதன் உள்ளே செங்கற்கள் தெரிகிறது.

இன்னமும் உற்றுப் பார்க்கப்பார்க்க

சூளை தெரிகிறது.

குழைக்கும் மண் தெரிகிறது.

அதன்மேல் மண்ணை மிதிக்கும் சூளைச் சிறுவனின் பாதங்கள் தெரிகிறது.

அந்தப் பாதத்தின் மேல்தான் நீங்கள் ஆணி அடித்திருக்கிறீர்கள்.

மேலும்..

~ இயேசு நாதர் சிலுவையில் தொங்கும் புகைப்படம். ~

 

 

6

அந்நிய நாட்டில் இந்தியனைப் போல..

இந்திய நாட்டில் முஸ்லிம் பிரஜை போல..

மாநிலத்தில் பூர்வீக தாய்மொழி பேசுபவனைப் போல..

சொந்த வீட்டின் பெரியவர்கள் மறதியாய் பணத்தை வைத்து விட்டு

குற்றவாளியாய் பார்க்கப்படும் சிறுவனைப் போல..

 

~  நான் சந்தேகத்திற்குட்படுத்தப்படுகிறேன் ~

எனது தந்தை இரும்புப் பட்டறை வைத்திருக்கிறார்

விவசாயக் கருவிகள், ஆயுதங்கள் செய்து தருவார்

ஒருபோதும் அவர் கலவரங்களை உற்பத்தி செய்பவர் அல்லர்

எப்போதேனும் அரசுக்கு எதிராய் கோஷமிடுவார்.

அப்போதெல்லாம் அவருக்கு தலாவொரு  சவுக்கடியும், ஒரு உப்பு

ரொட்டியும் கிடைக்கும்

 

~ ஒரு நாளில் நிறைய உப்பு ரொட்டிகளைத் தின்ன விருப்பம் கொள்வாரவர்.~

துணியுலர்த்தும் கொடியில் ஈரப் பறவைகள்  வந்தமர்கின்றன.

அவைகளின் உடல் ஈரம் உலர்கிறது.

தாம் சூரியனின் கீழ்  அமர்ந்திருக்கிறோமென்பதை

அவை ஒப்புக் கொள்வதில்லை.

துணி உலர்த்தும் கொடிகள் தாம் ஈரத்தை உலர்த்தவல்லவையென

அவை நம்புகின்றன.

 

~ ஆட்சியாளர்கள் நம்மை வாழ வைக்கிறார்களென  நம்ப துவங்கி விட்டோம். நாம் ~

 

இந்த தேசத்தில் யாருக்கும் முதுகோ, கரமோ இல்லை.

கரங்களும், முதுகுகளும் இல்லாதவர்களை எப்படி அணைத்துக் கொள்வது.

உண்மையில் புன்னகைப்பவர்களிடம் எதிர் புன்னகை செலுத்தக் கூட

எவருக்கும் உதடுகளில்லை.

இந்த  நாட்டில் எல்லா நீரும் கசப்பு : ஆனால் அவை சுவையுற்றிருப்பது

போல் பாவனை செய்யும்.

எல்லாமே இரவல் பாத்திரங்கள்: இரவல் மனிதர்கள்: இதுவொரு

இரவல் நாடு

 

~ எல்லாவற்றையும்  வேறொருவருக்கு திருப்பிக் கொடுக்கவேண்டும் ~

 

இங்கே நீ எழுத மறுக்கப்பட்ட பின் எதை எழுதுவாய் ?

எழுத மறுக்கப்பட்டேனென்பதை….

பேச மறுக்கப்பட்ட பின் எதை பேசுவாய் ?

பேச மறுக்கபட்டேனென்பதை…

உன்னிடமிருந்து  பறிக்கப்பட்ட பின்  எதை வாழ்வாய் ?

உங்களிடமிருந்து பிடுங்கி பிடிவாதமாய் அதே வாழ்க்கையைத்தான்.

~ இந்தமுறை இன்னும் வலுவாய் பிடுங்கி….. ~

“உலகில் அதிகமான கல்லறையும்: அதிகமான பிணங்களும் எரிக்கப்படும் தேசம் ”

{ அரசு சுற்றுலாத் துறையின் விளம்பரப் பதாகைகள் }

~

7

 

நம்பு. இந்த  எல்லையை நான் கிழிக்கவில்லை.

எல்லையைத் தாண்டி நிற்கும் உனக்கும் எனக்கும் எந்தப் பிணக்குமில்லை

எதிரில்  நிற்பதனாலேயே

உன்னை எதிரி என அழைக்க ஒப்பவில்லை.

என் எதிரில் உன்னை நிற்க வைத்தவன் நானில்லை.

நண்பனே. அவர்கள் ஒருபோதும் களத்திலில்லை.

எல்லையில் நம்மை நிற்க வைத்துவிட்டு.

அவர்கள் உள்நாட்டில்  பூர்விகக்குடிகளிடமிருந்து

நிலங்களைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 

சிறு வயதில் சொந்த ஊரின்  மண்ணை அள்ளி தின்றிருக்கிறாயா?

அவ்வளவு ருசி.

 

சூளைக்காரா…!

என் நிலம் பிடுங்கப்படுமெனத் தெரிந்தால்

இன்னும்  நிறைய அள்ளி அள்ளித் தின்றிருப்பன்.

இப்போது கூட பார்.

மதிய உணவிற்கு என் நிலத்திலிருந்து வேக வைக்கப்பட்ட

மூன்று செங்கற்களை வைத்திருக்கிறேன்.

 

~

8

 

நீ கடந்து செல்லும்போது “பசி” என்ற வார்த்தையை உச்சரித்து விட்டேன்

அதற்காகத்தானே

அரை  நிசியில்  கடையைத் திறந்து

கோதுமைமாவு சிப்பங்களின் எண்ணிக்கையையும்,

எடையையும் பரிசோதித்தாய் நண்பனே….

உன் கோதுமை மாவு, புளிக்க வைக்கும் ஈஸ்ட்….,

ரொட்டித் துண்டுகள் யாவும் பத்திரமாயிருக்கிறது.

ஆனால் புதிதாய் வந்த ரொட்டி சுடுபவரின்

கோதுமை வயலையும் அதிலிருந்த வட்ட வடிவ கிணற்றையும்

யாரோ நள்ளிரவில் திருடியிருக்கிறார்கள்.

திருடியவனின் காலடித் தடம்

இந்த வெதுப்பகத்தில்தான் வந்து முடிகிறதாம் நண்பனே……

அதன் நினைவிலிருந்து மீளாதவனாய்

தோட்டத்தைப் போன்று செவ்வகத்திலும்

கிணற்றைப் போன்று வட்ட வடிவத்திலும்

ரொட்டிகளாய் சுட்டு அடுக்குகிறானவன்.

 

ஆனால் ஏன்? நள்ளிரவில் யாருக்கும் தெரியாது உன் கால் வடிவத்தையொத்த

ரொட்டிகளை நெருப்பிலேற்றிப் பழுக்கச் சுட்டு

அதை ரகசியமாய் கடித்துண்பதில் பெருவிருப்பம் கொள்கிறானவன்.

தொட்டுக் கொள்ள ரெத்த நிறத்தில் தக்காளி சாஸ் வேறு. . .

 

10

எங்கே விரும்புகிறதோ….

அங்கே வளர்ந்து கொள்ளட்டுமென விதைகளை எறிந்து விடுவேன்.

பேரிளம்பெண்ணொருத்தி  புதைக்கப்பட்ட புதைமேட்டிலிருந்து ஒரு மாங்கன்று.

சரியாய் புதைபட்டவளின் பிறப்புறுப்பு மூடப்பட்ட இடத்திலிருந்து….

தன் 63 வயதில் புதைக்கப்பட்டவள் அவள்.

 

இனி இச்சிறு செடியின் வயதை 64 லிருந்து எண்ணத் துவங்கவேண்டும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...