நீயின்றி அமையாது உலகு 9

tayag-2பலவித நாகங்களுக்கு நடுவில் நான் மட்டும். என் இரு கைகளையும் இறுக்கப்பிடித்த மலைப்பாம்புகள் ஆளுக்கு ஒருபக்கம் என இழுத்தன. தப்பித்து ஓடிவிட முடியாதபடி கால்களை கருநீல நாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சூழ்ந்திருந்தன. சுற்று வளைத்துவிட்ட நாகங்களின் பளபளத்த மேனி கண்களைக் கூசியது. இருக்கும் இடைத்தைப்பற்றியோ கிடக்கும் நிலை பற்றியோ என்னால் முழுமையாக சிந்திக்க முடியவில்லை.

இதற்கிடையில் ஒரு நாகம் மட்டும் என் முகத்துக்கு நேராக கொஞ்சம் கொஞ்சமாக தன் தலையை உயர்த்தியது. மூக்கின் நுனிவரை உயர்ந்து நின்றது அதன்  தலை. அதன் கண்களில் ஏக்கம் சூழ்ந்திருந்தது. வலது இடதென தலையாட்டியபடி நாக்கை நீட்டி நீட்டி என் மூக்கை தொட்டுக்கொண்டிருந்தது.

அதன் இரட்டை நாக்கின் எச்சில் என் முகத்தில் தெளித்தது.

அலாரம் அடிக்கும் முன்பாகவே தூக்கிவாரி எழுந்து அமர்ந்தேன். குளிர்சாதன அறையிலேயே குளித்துவிட்டதுபோல் வியர்வை வழிந்தது. பாம்புகளுக்கு என் மீதென்ன ஆசையென்ற குழப்பத்துடன் எழுந்து நடக்கலானேன். சிந்தனையில் சில ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவம் நினைவுக்கு வைத்தது.

தோட்டத்தில் வசித்துக் கொண்டிருக்கும் சமயம். எங்கள் வீடிருக்கும் வரிசையில் பாம்பொன்று புகுந்துவிட்டது. துடுக்கான பையன்களாக நாங்கள் இருந்ததால் வழிமறந்து வந்த பாம்பை தேடியடித்துக் கொன்றோம். அதிலும் அதனை உயிர்பிரியும்படி அடித்தது நான்தான். கையில் கொண்டு சென்றிருந்த சிலம்ப கம்பை அதன் நடுமண்டையில் அடித்து அதனை ஆகக்கடைசியாக துடிக்க வைத்தேன். அதுவரை அங்கே இல்லாமல் இருந்து பெரியவர்கள் இப்போது வந்து சேர்ந்தார்கள்.

வீர தீரச் செயலைச் செய்துவிட்டதாக நாங்கள் ஆளுக்கு ஆள் மமதையில் நின்றிருந்தோம். சட்டென ஓர் அலறல். என் அம்மா அப்படி அலறி நான் கேட்டதில்லை. அவ்வப்போது பூஜைகளில் அம்மாவிற்கு அருள் வரும்போது கூட இப்படியான விசித்திர சத்தத்தை நான் கேட்டதாக நினைவில் இல்லை.

அம்மாவின் குரலில் இருந்த அதிர்வு அங்கிருந்த எங்களனைவரையும் நிலைகுலையச் செய்துவிட்டது.tayag4

பக்கத்தில் இருந்த நண்பன் “இப்ப எதுக்குடா உங்கம்மா கே.ஆர்.விஜயா மாதிரி கத்தறாங்க?” என்று அடித்த கமெண்ட்டுக்கு என்னால் சிரிக்க முடியவில்லை. “அய்யோ இது நல்ல பாம்பாச்சே…. சாமி பாம்புடா… இதை ஏண்டா அடிச்சீங்க… பாவிங்களா… இந்த பாவம் குடும்பத்தை சும்மா விடாதேடா….”

இப்போதுவரை பாம்பை அடித்துக் கொன்றவர்களில் தலையானவன் நானென அம்மாவிற்குப் பிடிபடவில்லை. ஆனால் இப்போது அம்மா முழுமையாக அம்மாவாக மட்டும் இருக்கவில்லை என உள்ளுணர்வு என்னை எச்சரித்தது.

தலையில் அடித்துக் கொண்ட அம்மா எல்லோரையும் ஒரு சுற்று பார்க்கலானார். அந்தச் சுற்று என்வரை வந்ததும் சட்டென நின்றுவிட்டது. என் கையில் பாம்பைக் கொன்ற சிலம்பக்கம்பு.  என் மீதிருந்த பார்வையை கம்பிற்கு நகர்த்தினார். அவரது கண்கள் விரிந்தன. உதடுகள் துடித்தன. ஏதோ தவறு நடந்துவிட்டதை அவரது கைகளின் நடுக்கம் காட்டியது. நாங்கள் எல்லோருமே செய்வதறியாமல் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தோம். அம்மாவை கே.ஆர்.விஜயா என கமெண்ட் அடித்த நண்பனின் வயிற்றின் கொட கொட சத்தம் என் வரை கேட்டது. அம்மா தலையை இடதும் வலதுமாக மெல்லியதாய் ஆட்டிவிட்டு “டேய் இவங்களுக்குத்தான் தெரில .. உனக்குமாடா தெரியல..” . இப்போது என் வயிற்றில் லாரியே வந்து நிற்பது போல சத்தமும் அதிர்வும் கேட்டது. அம்மா அப்படியே மயங்கி விழுந்தார்.

பாம்பை அடித்துவிட்ட நாங்கள் நடுக்கத்துடன் இருந்தோம்.

tayag-1அம்மாவிற்கு மயக்கம் தெளிந்தது. தோட்டத்தில் வயதான பாட்டி அம்மாவை தாங்கிப் பிடித்திருந்தார். அம்மாவிற்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை. பாட்டிதான் கொஞ்சம் கொஞ்சமாக விபரத்தை சொல்லிக்கொண்டிருந்தார். அம்மா இப்போது நடுங்க ஆரம்பித்தார். இந்த நடுக்கம் அவர் முழுமையாக என் அம்மாதான் என காட்டியது. பாம்பை அடித்தது பாவமென்றும் அந்த பாவம் குடும்பத்தை சும்மா விடாதென்றும் அம்மா புலம்ப ஆரம்பித்தார். தவறியும் முன்பு பேசிய தொனியோ தோரணையோ இருக்கவில்லை.

சம்பந்தப்பட்ட நண்பர்கள் அவரவர் பெற்றோருடன் என் வீட்டில் கூடியிருந்தது அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்று பேசிட உதவியாக இருந்தது. நண்பர்கள் யாரும் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்காமல் பட்டும் படாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தோம். முடிவாக பாம்பை சாங்கியங்கள் செய்துவிட்டு புதைத்து வாரம் ஒருமுறை சமாதியில் பால் ஊத்த வேண்டும் என தீர்மானம் செய்தார்கள்.

செத்துக்கிடக்கும் பாம்பை கொண்டு வரச் சென்றவர் குழப்பத்துடன் வீட்டிற்கு வந்தார். அடித்து சாகடித்த இடத்தில் பாம்பு இல்லை. அம்மா மீண்டும் தலையில் அடித்துக் கொண்டு, கடவுளே என்றார். இப்போதுதான் கவனித்தேன் நண்பன் சொன்னது சரிதான். பார்ப்பதற்கு கே.ஆர்.விஜயா போலத்தான் இருக்கிறார்.

நாய் பூனை என ஏதாவது தூக்கிச்சென்றிருக்கும் என யூகித்த நாங்கள் பக்கத்தில் இருக்கும் புதர் முதற்கொண்டு தேட ஆரம்பித்தோம். ஆளுக்கு ஆள் ஏதேதோ புலம்பிக்கொண்டே தேடியபடியிருந்தார்கள். இந்த தேடலுக்கு மத்தியில்தான் அம்மா என்னைப்பார்த்து கேட்டது நினைவுக்கு வந்து உடல் உரோமங்களை குத்தி நிற்க வைத்தது. முதலில் அது என் முழுமையான அம்மா இல்லை. அதோடு ஏன் என்னை பார்த்து அப்படிக் கேட்டார். குழம்பங்களுக்கு மத்தியில் தேடுதலில் இருந்தவர்கள் எதையோ கண்டுவிட்டதாய் தெரிந்தது.

விரைந்துச் சென்று பார்க்கையில் சற்றும் புரிந்துவிடாத ஒன்று அங்கு காத்திருந்தது. என் முழங்கால் உயரம் கொண்ட புற்று. இத்தனை ஆண்டுகளில் யார் கண்ணிலும் அகப்படாமல் இருந்த புற்று இப்போது மட்டும் எப்படி அகப்பட்டது. பல முறை நாங்கள் இவ்விடத்தில் சுற்றித் திரிந்துள்ளோம். பறந்துவந்து விழுந்த பந்துகளை தேடி எடுத்திருக்கிறோம்.

பாம்பு எப்படி புற்று கட்டும், இதெல்லாம் கரையான் புற்று என்று சொல்வதற்கு இடம் கொடுக்காமல் புற்றின் பக்கத்தில் பாம்புச்சட்டை கிடந்தது.

நிலைமை இன்னமும் மோசமாகிவிட்டது. பாம்பு பழிவாங்கப்போகிறது. பழைய நீயா படத்தில் வருவது போல என்னையும் என் நண்பர்களையும் பாம்பு தேடிப்பிடித்து கடித்து சாகடிக்கப் போவதாகத் தோன்றியது. அதிலும் கதாநாயகன் கமல் போல நான்தான் இறுதியில் கம்பியில் தொங்கப்போவதாக கற்பனை செய்துகொண்டேன்.

மீண்டும் எங்கள் வீட்டின் முன் கூட்டம் போடப்பட்டது. இறந்துவிட்ட பாம்பு கிடைக்காத பட்சத்தில் கண்டுபிடித்த புற்றுக்கு தினம் தொடர்ந்து ஒரு மண்டலத்துக்கு பூஜை போடுவதாக தீர்மானம் போட்டோம்.

பூஜைகள் தொடர்ந்தன. சின்னத் திருவிழா போலவே இருந்தன அந்த நாட்கள்.

நாற்பத்தியெட்டாவது நாள் பூஜைக்கு எல்லோரும் தயாரானோம். புதருக்குtayag நடுவில் கண்டுவிட்ட புற்று இப்போது அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படி கோவிலாக கட்டியிருந்தோம். இதுதான் கடைசி நாள் பூஜை என்கிற மகிழ்ச்சி எனக்கும் என் நண்பர்களுக்கும் இருந்தது. கடந்த நாற்பத்தியேழு நாட்களை எளிதாக நாங்கள் கடத்தியிருக்கவில்லை. நாள் முழுக்க பயத்துடன்தான் இருந்தோம். லேசான அசைவு எங்கேயும் தெரிந்தாலும் பாம்புதான் பழிவாங்க வந்திருப்பதாக நினைத்து உடல் அதிர்ந்து கண்கள் பிதுங்கினோம்.

முன் அறிவிப்பு ஏதுமின்றி அடைமழை தொடங்கியது. காற்றின் வேகம் வீட்டு கூரைகள் சிலவற்றை பறக்கச்செய்தது. எல்லாமே புதிதாக இருந்தது. சட்டென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் மரங்கள் காற்றின் வேகம் தாங்காது வேரோடு சாய்ந்து விழுந்தது. அன்று இரவு யாரும் வெளியில் செல்லவில்லை. அப்போதெல்லாம் ஓவர் டைம் செய்து சம்பாதிக்க அவசியம் இல்லாததாலும் பெரும்பாலான்ொர் பால்மரம் சீவும் பணியில் இருந்ததால் இரவு எல்லோரும் வீட்டில்தான் இருந்தார்கள். மறுநாள் வேலைக்கும் செல்ல வேண்டிய அவசியம் மழையின் காரணமாக இருக்கவில்லை.

கடைசிநாள் பூஜையைச் செய்யமுடியாமல் போய்விடுவோ என அம்மாதான் அவதிக்குள்ளாகியிருந்தார். ஆனாலும் வெளியில் செல்வதற்கு சாத்தியமே இல்லையென்று அப்பா புரியவைத்துக் கொண்டிருந்தார். எனக்கு ஒரே குழப்பம் மழையைக் கவனிப்பதா பாம்பு குறித்து யோசிப்பதா என மாறி மாறி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

மறுநாள் காலை, கொஞ்சம் கொஞ்சமாக விடிந்து கொண்டிந்தது. ஆளுக்குஆள் வெளிச்சம் கண்டு வெளியே வந்துகொண்டிருந்தோம். பல வீட்டுக்கூரைகள் வானம் பார்க்க அண்ணாந்திருந்தன. பூச்செடிகள் எல்லாம் பிய்த்து வீசப்பட்டிருந்தன. வீட்டின் முன் உயர்ந்திருந்த பல மரங்கள் இலைகளின்றி மொட்டைத்தலையோடு இருந்தன கிளைகள் முறிந்து கிடந்தன. இன்னும் சில சாய்ந்து கிடந்தன. குறிப்பாக ஒரு வேப்பிலை மரம் மட்டும் அந்தப் புற்றுக்கோவில் மீது விழுந்து கோபுரத்தையும் புற்றையும் மண்ணோடு மண்ணாக்கியிருந்தது.

அம்மா மீண்டும் கே.ஆர்.விஜயா ஆனார்.

எல்லாமே நேற்று நடந்தது போலத்தான் தோன்றியது. இத்தனை ஆண்டுகள் மறந்திருந்தவற்றை அதிகாலைக் கனவு நினைக்கவைத்து நடுங்க வைத்தது. தொழிற்சாலை மணி ஒலித்தது. எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றார்கள். எனக்கு எந்த அவசரமும் இருக்காது. பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் வேலைதான் என்பதால் அடிபிடியின்றி உள்ளே செல்லலாம். என் அறைக்குச் செல்லும் முன்பாக ஒருமுறை அக்காவை பார்க்கத்தோன்றி அவர் இடத்திற்கு சென்றேன் அவர் அங்கில்லை. திரும்பும்போது எதிரே தென்பட்டார்.

“என்னடா இந்த பக்கம்… மறுபடியும் வயரை வீணாக்கிட்டிங்களா..?”

“இல்லக்கா… சும்மாதான்..”

என பேசிகொண்டே அவரது கண்களை உற்று கவனித்தேன். வழக்கம் போல்தான் இருந்தன. அன்று நான் பார்த்த கண்ணில் தெரிந்த வெள்ளை நாகம் மாதிரி ஏதுமில்லை. ஏதோ சமாளித்த மகிழ்வில் என் அறைக்குள்ளே நுழைந்தேன். என்னையறியாமல் மீண்டும் கடந்தகால பாம்புகள் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன. நம்மைச் சுற்றி நடப்பதில் எல்லாம் நமக்கான செய்தி இருக்கிறது என மனம் நம்பத் தொடங்கிய காலகட்டம் அது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...