எந்தப் பறவை எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தை! – வண்ணதாசன்

இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும்… நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது – வண்ணதாசன் 

குழலி படம்தமிழ் இலக்கிய பரப்பில் நன்கறியப்பட்ட முதுபெரும் தமிழிலக்கியத் திறனாய்வாளரான தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன் சி. கல்யாணசுந்தரம். ஆனால், அந்த இயற்பெயர் மறக்கப்பட்டு வண்ணதாசன் என்றும் கல்யாண்ஜி என்றுமே இவர் அறியப்படுகிறார். எண்ணற்ற  சிறுகதைகள் ,  கவிதைகள்  “சின்னு முதல் சின்னுவரை“ என்ற குறுநாவல் என பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளராக இவர் அறியப்படுகிறார். இவரது கடிதங்களும் தொகுக்கப்பெற்று  நூல் வடிவம் பெற்றுள்ளது. இவர் ஒரு ஓவியருமாவார். 

பொருள்வாதத்தை முதலாக கொள்ளும் இன்றைய வாழ்வு ரசனையைக் கொன்று புதைத்து விட்டது. ஆறும் கடலும் வானமும் மழையும் நிலவும் இப்போது யாரையும் கவர்வதில்லை. பேரங்காடிகளில் சுற்றி திரிவதையே எல்லாரும் அதிகம் விரும்புகின்றனர். நுனிப்புல் மேய்ந்து எல்லாவற்றையும் சட்டென கடந்து போகும் கலையை எல்லாரும் எளிதில் கற்று கொள்கிறார்கள் .

காற்று வாங்குவதற்கெல்லாம் இப்போது யாருக்கும் நேரம் இருப்பதில்லை. குளிர்காற்றை இயந்திரம் வழி பெற்று வெயில் துறந்து வாழும் வாழ்வை ஒரு பெரும் வரமென ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

நீ வருவதற்காக

காத்திருந்த நேரத்தில்தான்

பளிங்கு போல்

அசையாதிருந்த தெப்பக்குளம்

பார்க்க ஆரம்பித்தேன்.

தலைகீழாய் வரைந்து கொண்ட

பிம்பங்களுடன்

தண்ணீர் என் பார்வையை

வாங்கிக் கொண்டது முற்றிலும்;

உன்னை எதிர்பார்ப்பதையே

மறந்து விட்ட ஒரு கணத்தில்

உன்னுடைய கைக்கல் பட்டு

உடைந்தது

கண்ணாடிக்குளம்.

நீ வந்திருக்க வேண்டாம்

இப்போது…

வாழ்வின் அற்புதத் தருணங்களை நேர்த்திமிக்க வரிகளைக் கொண்டு கவிதையாக்கிவிடும் திறன் பெற்ற மிகச் சிலரில் கல்யாண்ஜி குறிப்பிடத்தக்கவர். காதலியின் வருகைக்காக காத்திருந்தவர் இப்போது இயற்கையின் பேரின்பத்தில் திளைத்துப் போகிறார். ஒரு கணத்தில் காதலி வந்துவிட , இயற்கையோடான அவரது உரையாடல் துண்டிக்கப்படுகிறது. காத்திருந்த வருகை இப்போது நிகழாமலேயே இருந்திருக்கலாம் என்ற அவரது உண்மை வெளிப்பாடோடு கவிதை முடிகிறது. மிக இயல்பான வார்த்தைகள்… தெப்பக்குளம், பிம்பம், கண்ணாடிக்குளம் என ஒன்றைச் சுற்றியே பின்னப்பட்ட வரிகள். ஆனால், கேள்வி எழுப்ப முடியாதொரு கவித்துவம் அதில் தானாகவே அமர்ந்திருக்கிறது. கவிதையைப் படித்து முடிக்கும்போது அந்த கவித்துவம் மெல்ல மெல்ல நம்மையும் பற்றிக் கொள்கிறது.

இரண்டு நாட்களாகவே

எந்தக் கடிதமும் இல்லாத

ஏமாற்றம்.

இன்று எப்படியோ

என்று பார்க்கையில்

அசைவற்று இருந்தது

ஒரு சின்னஞ்சிறு

இறகு மட்டும்

எந்தப் பறவை எழுதியிருக்கும்

இந்தக் கடிதத்தை.

நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகள் தான் கல்யாண்ஜியின் பாடுபொருளாகி யிருக்கின்றன. ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்போடு யாரிடமிருந்தோ ஒரு கடிதத்திற்காக காத்திருக்கும் அல்லது கடிதம் வராத விரக்தி நிலையிலும் கூட அந்த தபால் பெட்டியில் அன்று வந்து கிடக்கும் அந்தப் பறவையின் சிறகு குறித்த பிரக்ஞை கவிஞருக்கு எழுந்திருக்கிறது. எந்நிலையிலும் தன் சுயம் இழக்காத தன்மையாகவே இதனை நான் பார்க்கிறேன். சுயம் இழக்காத, சமரசம் செய்யாமல் எழுதப்படும் வார்த்தைகள் சாதாரண நிகழ்விற்குக் கூட பெரும் பிரளயத்தை நிகழ்த்தி விடுகின்றன.

சைக்களில் வந்த

தக்காளி கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்து திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கி போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை

மனிதர்களோடு இறந்த கொண்டிருக்கிறது மனிதாபிமானம். மனிதர்களாலேயே இறந்து கொண்டிருக்கிறது மனிதநேயம் என இப்படியும் சொல்லலாம். சக மனிதர்களிடம் குறிப்பாக துயரில் தவிப்போரிடம் காட்டும் அன்பும் இரக்கமுமே மனிதநேயம் எனப்படுகிறது. இன்றைய இயந்திரத்தனமான உலகில் மனித நேயத்தை தேடித்தான் காண வேண்டும் ? அப்போதாவது கிடைக்குமா? சுக உயிர் என்ற அடிப்படை அறிவற்ற மக்கள் கூட்டம் இன்று பெருகியபடியே இருக்கிறது. இப்படியான கவிதைகளை வாசிக்கிற பொழுதுதான் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிகிறது.

தானாய் முளைத்த

செடி என்கிறார்கள்

யாரோ வீசிய

விதையிலிருந்து தானே…

வாழ்தலின் தத்துவத்தை மிக எளிய நான்கு வரிகளில் சொல்லிச் சென்றிருக்கிறார் கவிஞர்.

தண்ணீர்த் தொட்டியில்

செத்துக் கிடந்த

காக்கைக் குஞ்சுகளுக்கு

மனதார வருத்தப் பட்டாயிற்று.

வாசலில் நிற்கும்

வயசாளிக்கு …..

“ஒன்றுமில்லை” என்று

அனுப்பிவிடலாம்.

இன்றைக்கு …..

என்னால் முடிந்தது இவ்வளவே.

மிக மெல்லிய மனம் கொண்டவராக கல்யாண்ஜி இருக்கிறார். ஒரு உக்கிர கோபத்தை இந்த சிறு கவிதையில் இறக்கி வைத்திருக்கிறார். தன் மீதான அல்லது தன் செயல்கள் மீதான கோபத்தை இதைவிட வேறு எப்படி வெளிப்படுத்த முடியும்? ஒரு சாட்டையென நம்மை விளாசிப் போகும் வரிகள் இவை.

இருந்து ….

என்ன ஆகப் போகிறது ?

செத்துத் தொலையலாம்.

செத்து….என்ன ஆகப் போகிறது?

இருந்தே தொலையலாம்.

தம் கவிதைகள் பற்றிக் கல்யாண்ஜி இப்படி கூறுகிறார் “என்னுடைய கதைகளையும் சரி, கவிதைகளையும் சரி, அந்தந்தத் துறைகளில் ஒரு அலை யெழுப்புகிறதாகவோ வலிமைமிக்க ஒரு உந்து சக்தியாகவோ, சுவடுகளைப் பதித்துப் செல்ல வேண்டிய அவசியமுடையவை என்றோ நான் கருதியதில்லை.  அப்படியெல்லாம் கருதாமலும் இல்லாமலுமே நான் இவைகளை எழுதிக் கொண்டு வருகிறேன்.  வாழ்வு குறித்தும் வாழ்வின் அந்தரங்கம் குறித்தும் எந்தத் தீவிரமான கேள்விகளும் எழுப்பாமல் அதே சமயத்தில் சிறுமைகளுடனும் சமரசம் செய்துகொள்ளத் தோன்றாமல், எப்படி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனோ, அதுபோல என் கவிதைகளும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  நான் எவ்வளவு நிஜமோ அவ்வளவு நிஜம், நான் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் இந்தக் கவிதைகள்“

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...