வாழ்க்கை என்னைத் தின்றுவிட்டது! – அரு.சு.ஜீவானந்தன்

250002மலேசிய நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் அரு.சு.ஜீவானந்தனை முற்போக்கு இலக்கியத்தின் முகம் எனச்சொல்லலாம். இவரின் பல சிறுகதைகள் அக்காலக்கட்டத்து வாசகர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோலவே இன்றும் சில வாசிப்புக்கு ஏற்றதாய் உள்ளது. இலக்கியச் சூழலில் தனது கருத்துகளை சமரசமின்றி வைக்கும் அரு.சு.ஜீவானந்தன் தனது சிறுகதைகளிலும் கலாச்சார மீறல்களைச் செய்துப்பார்த்தவர். சில காலமாக புனைவிலக்கிய உலகில் இருந்து விலகி இருப்பவர் போல காட்சியளித்தாலும் வாசிப்பின் மூலமாகத் தன்னைப் புதுப்பித்தே வைத்துள்ளார். வல்லினத்துக்காக அவரை சந்தித்து உரையாடலைத் தொடங்கினோம்:

கேள்வி : உங்களின் தொடக்ககால வாழ்க்கை பற்றி கூறுங்கள்?

அரு.சு.ஜீவானந்தன்: பிறந்தது கோலாசிலாங்கூர் மாவட்டம். புக்கிட் ரோத்தான் என்ற சின்ன இடம். அந்த இடத்தைச்சுற்றி எல்லாம் தோட்டங்கள்தான். எல்லாமே ரப்பர் தோட்டங்கள். அதில் ‘மன்முத் எஸ்டேட்’ என்ற தோட்டம் இருந்தது. அதுவும் சின்ன தோட்டம்தான். அங்குதான் பிறந்தேன். அங்கு மூன்றாம் ஆண்டு வரையில் படித்திருந்தேன். அதற்குமேல் அங்கு வகுப்புகள் இல்லை. அதனால் பக்கத்தில் இருக்கிற சுங்கை பூலோ தோட்டத்தில், நான்கு. ஐந்து. ஆறு படித்தேன். அப்போதுதான் ‘ரசாக் கல்வித் திட்டம்’ என்பதைக் கொண்டுவந்தார்கள். அதாவது ஆறாம் ஆண்டை முடித்த பின்னர் புதுமுக வகுப்பு போவதற்கான திட்டம். ஆறாம் ஆண்டை முடித்த பின்னர் பக்கத்தில் கம்போங் குவந்தான் என ஒரு பட்டணம் இருந்தது. அங்கு சென்று புகுமுக வகுப்பில் நுழைந்தேன். புகுமுக வகுப்பு, படிவம் ஒன்று முடித்த பின் கோலாசிலாங்கூரில் சுல்தான் அப்டுல் அசிஸ் ஷாவில் ஐந்தாம் படிவத்தை முடித்தேன். தேர்வில் தோல்வி கண்டேன். அதோடு என் படிப்பிற்கு  முற்றுப்புள்ளி வைத்தேன்.

கேள்வி : தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் உங்கள் இணைவு பற்றி கூறுங்கள்?

அரு.சு.ஜீவானந்தன்: தமிழ் இளைஞர் மணிமன்றம் தொடங்கி அப்போது நாடு முழுவதும்12 செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். பாத்தாங் பெர்ஜுந்தாயிலும் ஒரு மணிமன்றம் அமைத்தார்கள். அங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிகழ்ச்சி ஒன்றைச் செய்வார்கள். பேச்சுப்போட்டி, இலக்கியக் கலந்துரையாடல், திருக்குறள் போட்டி எனச் செய்வார்கள். அதில் நாங்கள் கலந்துகொள்வோம். சைக்கிளில் காலையில் கிளம்பி எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டு திரும்புவோம். அது எங்களுக்கு ஏறக்குறைய ‘பிக்னிக்’ மாதிரி இருக்கும். அங்கு ஆசிரியர்கள் சில சமயம் மொழியைச் சொல்லிக்கொடுப்பார்கள். திருக்குறள், மற்ற இலக்கியங்களைச் சொல்லிக்கொடுப்பார்கள். பேச்சுப்பயிற்சி கொடுப்பார்கள். மேடைப்பேச்சு, பட்டிமன்றம் என பயிற்சிகள் நடக்கும். அந்தப் பயிற்சி எங்களுக்கு நாளடைவில் மணிமன்றப் பேரவைக் கூட்டங்கள் நடக்கும்போது பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்கமாக இருந்தது. ஒருசமயம், மிஞ்ஞாக் தோட்டம் என நினைக்கிறேன். அங்கு தற்காலிகமாக தமிழாசிரியர்கள் வேண்டும் எனக்கேட்டு அங்கு சென்றேன். அங்கு ஒரு வாரம்தான் படித்துக் கொடுத்தேன், அது எனக்கு ஒத்துவரவில்லை. ஆகையால் அதனையும் விட்டுவந்துவிட்டேன்.

கேள்வி : வானொலி அறிவிப்பாளராக எப்படிப் பரிணாமம் எடுத்தீர்கள்?

அரு.சு.ஜீவானந்தன்: வானொலி மீது அப்போது எனக்கு மோகம் இருந்தது. வானொலியில்12 எப்படியாவது பேசவேண்டும் என ஆர்வம் இருந்தது. முன்னமே பட்டிமன்றங்கள் மற்றும் பேச்சுப்போட்டிகள் போன்றவற்றில் கலந்திருப்பதால் பேசுவதில் ஆர்வம். அதோடு அந்த நேரத்தில் தி.மு.க  பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறோம். கோ.சாரங்கபாணி ஒவ்வொரு தமிழர் திருநாளுக்கும் இரண்டு பேராசிரியர்களை அழைத்துவருவார். அவர்களின் உரை கேட்க ஆர்வமாக இருக்கும். அப்படியிருக்கையில் வானொலியில் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்கிற பேராசை எனக்கு ஏற்பட்டது. அதற்காகவே முயற்சிகளையும் மேற்கொண்டேன். தோட்டத்தில் இருந்து கிளம்பி பேருந்தின் மூலம் கோலாலம்பூர் வந்து, வழிகூடத் தெரியாமல் பலரிடம் வழிகேட்டு வந்தேன். அவ்வளவு எளிதில் வானொலியில் பேசிவிட முடியாது. அதற்கென்று தனி தேர்வு உள்ளது எனவும் பின்புதான் அறிந்தேன். அப்படித்தான் எனது குரலை அதற்கேற்றவாரு மெருகேற்றி வேலைக்குத் தேர்வானேன். உடனே வேலையும் கொடுக்கவில்லை.

தோட்டத்தில் இருக்கும்போது இளைஞர் உலகம், ஐ.நா பேசுகிறது என்ற இரண்டு நிகழ்ச்சிகள் வானொலியில் ஒலியேறும். இது இரண்டும் எனக்குப் பிடித்த நிகழ்ச்சிகள். ஐ.நா பேசுகிறது நிகழ்ச்சி பிடிப்பதற்கு காரணம், அந்த நேரத்தில் வெளிநாட்டு தலைவர்களில் உரையை அதில் ஒலியேற்றுவார்கள் . குறிப்பாக, கென்னடியின் உரை, நேருவின் உரை ஒலிபரப்பாகும், இந்த உரைகளையெல்லாம் கேட்பதற்கு எனக்கு ஆர்வமாக இருக்கும். இரவு பத்து மணிக்கு ஒலியேறும் நிகழ்ச்சி. அவ்வுரையை ஒலியேற்றிய பின் அதனைத் தமிழாக்கம் செய்து வாசிப்பார்கள். இளைஞர் உலகம் நிகழ்ச்சிக்கு கட்டுரைகளை எழுதி அனுப்புவேன். அந்தக் கட்டுரைகளை வானொலியில் அவர்கள் வாசிக்கும்போது ஒரு சாதனையாகவே எனக்குள் மகிழ்வேன். ஏனெனில் முதல் வாரம் தலைப்பைக் கொடுப்பார்கள். அதனை மறுவாரம் செவ்வாய்கிழமைக்குள்ளாக அனுப்பியாக வேண்டும். கட்டுரையை எழுதி அங்கிருந்து மிதிவண்டியில் மூன்று மைல் தூரத்தில் இருக்கும் தபால் நிலையத்திலிருந்து கட்டுரையை அனுப்ப வேண்டும். கட்டுரை அவர்களிடம் கிடைத்ததா இல்லையா என்றும் தெரியாது. அவர்கள் கைக்குக் கிடைத்தாலும் நமது கட்டுரை ஏற்புடையதாக இருக்குமா இருக்காதா எனவும் தெரியாது. இதற்காகவே காத்துக் கொண்டிருப்போம். வியாழக்கிழமை ஆறு மணிக்கெல்லாம் வானொலி முன் அமர்ந்திருப்பேன். இப்படி மானசீகமாக வானொலியுடன் உறவு கொண்டிருந்த நான் பிற்காலத்தில் அந்நிகழ்ச்சியைத் தயாரித்து வழி நடத்தினேன். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இப்படித்தான் அமைந்தது வானொலி வாழ்க்கை.

கேள்வி : இலக்கியத்தில் ஆர்வம்  எப்படி வளர்ந்தது?

அரு.சு.ஜீவானந்தன்: எங்கள் அம்மா நல்ல கதைசொல்லி. சம்பவங்களை அவர் சொல்லும்போது சுவாரஸ்யமாகச் சொல்லுவார். சின்ன விசயமாக இருந்தாலும் அதனை மிகைப்படுத்தி சொல்லுவார். உதாரணமாக எட்டு பேர் கொண்ட குடும்பம் எங்களது. அம்மா ஒவ்வொருவரின் பிறந்தநாளையும் நினைவில் வைத்திருப்பார். நாங்கள் பிறக்கும்போது நடந்தவைகளை சுவாரஸ்யமாகச் சொல்லுவார். பிறக்கும்போது நடந்த சம்பவங்களை கோர்வையாக சொல்வது கதை கேட்பது போலவே இருக்கும். அப்படி ஒவ்வொன்றையுமே ஒரு கதையாகத்தான் சொல்லுவார். நான் அம்மா பிள்ளை. சிறுவயதில் அடிக்கடி நோய்வாய்ப்படுவேன். அதனாலேயே எப்போதும் அம்மாவுடனேயே அவர் புடவையைப் பிடித்துக் கொண்டே இருப்பேன்.

பிற்காலத்தில் ஏழு எட்டு வயதிருக்கும்போது, தமிழாசிரியர் கல்கண்டு இதழை வாங்கிப்படிப்பவர். அவ்விதழ் சிறுவர்களுக்கான இதழ் என நினைத்துக் கொண்டேன். ஆகவே அதனை சுவாரஸ்யமாகப் படிப்பேன். பின்னர்தான் அது பெரியவர்களின் இதழ் எனக்கூறி அவர் எனக்கு அம்புலிமாமா இதழை அறிமுகம் செய்தார். நண்பர்கள் ஐந்தாறு பேர் கூடித்தான் இதழ்களைப் படிப்போம். இந்தக் கதைகள் மீதான ஆர்வம் வந்தது எனக்கு. என் அண்ணன் வார மாத இதழ்களை வாங்க ஆரம்பித்தார். அதிலிருந்த கதைகளைத்தான் நான் அதிகம் படிப்பேன். இப்படித்தான் சிறுகதைகள் மீதான ஆர்வம் வந்தது எனக்கு.

கேள்வி : உங்கள் வாசிப்பு அனுபவம் எப்படி வளர்ந்தது?

அரு.சு.ஜீவானந்தன்: எல்லோரையும்போல எனக்கும் ஆரம்ப காலத்தில் பதிமூன்று arusuபதிநான்கு வயதில் மு.வரதராசன்தான் அறிமுகம் ஆனார். படிவம் இரண்டு படிக்கும்போது எனக்கு தமிழ்ப்பாடம் எடுத்த ஆசிரியர் ஒரு முறை ‘கரித்துண்டு’ நாவலை வகுப்பில் காட்டி, அறிமுகம்  செய்தார். இருந்தும் அந்தப் புத்தகம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் மு.வ என்ற பெயரை அப்போதுதான் முதன் முதலாகக் கேட்டேன். அதனையடுத்து நூல்நிலையத்திற்குச் சென்றேன். சிறிய புத்தகம்தான். தெளிவான, அழகான தமிழில் எளிமையாக அவர் சொல்லியிருந்தது எனக்குப் பிடித்திருந்தது. அந்த ஒரு புத்தகமே என்னை மு.வ-விடம் அழைத்துச்சென்றது.  அடுத்தடுத்து மு.வ-வின் புத்தகங்களைத் தேட ஆரம்பித்தேன். அண்ணன் சிங்கையில் இருந்தார். எனக்கு மு.வ புத்தகங்கள் தேவையென அவருக்கு கடிதம் அனுப்பினேன். சிங்கையில் இருந்து அண்ணன் இரண்டொரு புத்தகங்களை வாங்கி அனுப்பினார். இப்படித்தான் என்னுடைய வாசிப்பு தொடங்கியது. மு.வ என் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒருவர். ஏனெனில் அவர் எனக்கு தமிழ் இலக்கிய உலகைக் காட்டியவர். நாவலைத் தவிர்த்து அவரது கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களில் அடிக்குறிப்பு கொடுப்பார். ஒவ்வொரு புத்தகத்திலும் எதாவது அடிக்குறிப்பு இருக்கும். சங்ககாலப் புலவர்களின் பெயர்கள் அதில் இருக்கும். பின்னர் நான் அந்தப் பெயர்களைத் தேடிச்செல்வேன். பட்டிணத்தாரைக் குறித்தோ அருணகிரிநாதர் குறித்தோ அல்லது எதாவது ஒரு நூலை அவர் குறிப்பிட்டிருந்தால் அந்த நூலை தேடிப்போவது என்னுடைய இயல்பாகிவிட்டது. அப்படி மு.வவின் வழிகாட்டுதலில் பல புத்தகங்களைத் தேடி வாசிக்கலானேன். குறிப்பாக அவர் எழுதிய ‘சங்ககால இலக்கியத்தின்  இயற்கை’ எனும் நூல். அவர் பி.எச்.டி க்காக எழுதிய புத்தகம் அது, சங்ககாலத்தின் எல்லா இயற்கை சார்ந்த விடயங்களையும் அதில் எழுதியிருப்பார். அது அருமையான புத்தகம். அந்நூலில் இருந்துதான் சங்ககாலப் பாடல்களின் ஆழத்தை அறிந்து கொண்டேன்.

ஒரு சமயம் என் அண்ணன் மு.வவின் புத்தகங்களை எனக்கு அனுப்பும்போது அறிஞர் அண்ணாவின் ‘தம்பிக்கு அண்ணாவின் கடிதம்’ என்ற தொகுப்பை அனுப்பி வைத்தார். இது என்ன புதிதாக இருக்கிறதே என அந்தப் புத்தகத்தையும் படிக்கலானேன். அது முற்றிலும் மாறியிருந்தது. மு.வவின் எழுத்து நடைக்கும் அண்ணாவின் எழுத்து நடைக்கும் அதிக வேறுபாடு இருக்கும். அண்ணாவின் கடிதங்கள் படிக்கச் சுவையாகவும் இருக்கும். அது என்னை தி.மு.க பக்கம் கொண்டுசென்றது. நெடுஞ்செழியன் வெளியிட்ட மணிமேகலை, சிலப்பதிகாரம், மற்றும் சின்னச் சின்ன பத்திரிக்கைகள் வெளிவரும் அதையெல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன். இப்படிப் படித்துக் கொண்டிருந்த சமயம் நான் தோட்டத்தில் இருந்து பட்டிணத்திற்கு மாறி வருகிறேன். பட்டிணத்தில் இருக்கும்போது இந்தியத்தூதரகம் போவேன் (indian high commision). அங்கு ஒரு பகுதியில் நூல்நிலையம் இருக்கும். அங்கு சென்றும் வாசிப்பேன். அப்படி சில புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கும்போது, தினமணி கதிர் அறிமுகமானது. அதில்தான் சுஜாதா எழுதிக்கொண்டிருந்தார். கலைமகளில் ஜெயகாந்தன் எழுதிக்கொண்டிருந்தார். இப்படியான பத்திரிகைகளில் இருந்துதான் இவர்களின் எழுத்து எனக்கு அறிமுகமானது. இவர்களின் எழுத்து என்னை அடுத்த கட்டத்திற்கு தள்ளியது. இதில் சுஜாதாவை விடவும் ஜெயகாந்தனின் எழுத்துகள் எனக்கு மாற்றமாக இருந்தது. அவர் எழுத்தும் சரி அவர் எடுத்துக்கொண்ட விசயமும் சரி குறிப்பாக அது சிறுகதையாக இருந்தாலும் அதில் அவர் சொல்லும் எதார்த்தம் பிடித்திருந்தது எனக்கு. ஓரளவுக்கு அதில் கம்யூனிசம் இருக்கும். இப்படித்தான் வாசிப்பு நகர ஆரம்பித்தது. தீவிரமான எழுத்தாளர்களை கவனிக்கத் தொடங்கினேன். எல்லாருமே எனக்கு சிறு பத்திரிகையின் மூலமாக அறிமுகம் ஆனவர்கள்தான்.

பின்னர், குமுதத்தில் ‘கேட்டு வாங்கிப் போட்ட கதை’ என தொடர் ஒன்றை ஆரம்பித்தார்கள். தமிழ்நாட்டில் அந்தச் சமயத்தில் பிரபலமாக இருந்தவர்களிடம் கதையைக் கேட்டு வாங்கிப் பிரசுரிப்பார்கள். அந்தக் கதைகள் தீவிரமான தளத்தில் எழுதப்பட்ட கதைகளாகவே இருந்தன. அதே போல ‘வைர மோதிர’ கதைகள் என ஒரு தொடரை ஆரம்பித்தார்கள். எழுத்தாளர்களிடம் கதையை வாங்கி அவர்களுக்கு மோதிரத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள். இங்கு ‘மாத்ரு பூமி’ என்கிற மலையாள இதழ் வரும். மலையாள எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புக் கதைகளை அப்போதுதான் படிக்க ஆரம்பித்தேன். படிப்பு என்பது எனக்கு தொடர்ச்சியான செயல்பாடாக இருந்தது. எப்போதும் எல்லாவற்றையும் படித்துக்கொண்டே இருந்தேன். அப்படிப் படிக்கின்ற சமயத்தில் இந்த எழுத்தாளர்கள் யாரும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது. எல்லோருடைய எழுத்தும் சீக்கிரம் என்னிடம் வந்து சேர்ந்துவிடும். அதில் இருக்கக்கூடிய மதிப்பை நானே பகுத்துப்பார்க்க தொடங்கினேன். அது குறித்து சிந்திக்கவும் நண்பர்களிடம் பேசவும் ஆரம்பித்தோம். வாசிப்பு அப்படித்தான் வளர்ந்தது.

கேள்வி : எழுத்தாளராகப் பரிணாமம் அடைந்தது குறித்து கூறுங்கள்?

அரு.சு.ஜீவானந்தன்: சொல்லப்போனால் வெளிநாட்டிற்குச் செல்வதற்கு முன்பாகவே நான் எழுத ஆரம்பித்துவிட்டேன். படித்ததையெல்லாம் உள்வாங்கிவிட்டு எனக்கான தளத்தை நான் உருவாக்கி எனக்காக விடயங்களை நான் எடுத்துக்கொண்டு நானே எழுதத் தொடங்கினேன். அப்படி எழுதும்போதுதான் தமிழ் நேசனின் பவுன்  பரிசு போட்டியை ஏற்பாடு செய்தார்கள். அதில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு எனக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இப்படி எழுதிக் கொண்டிருக்கும்போதே, வானொலிப் பணி, தொலைக்காட்சிப் பணி என ஒரு பக்கம் போனது. அதில் ஒரு சலிப்பும் வந்தது. காலையில் செல்வது, செய்தி வாசிப்பது, அறிவிப்பு செய்வது, இதில் வானொலியில் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள் மீது எனக்கு ஏற்பட்ட வெறுப்பு என நான் மனதளவில் சோர்ந்திருந்தேன். என்னால் எதனுடனும் ஒத்துப்போக முடியவில்லை. வேறு என்ன செய்யலாம் என யோசிக்கும்போது, அப்போதைக்கு புதுமையாகத் தென்பட்ட ஒரு விடயம் கணினிதான். அதனைக் கையில் எடுத்துக்கொள்ள எண்ணினேன். கணினி பயில லண்டன் சென்றேன்.

கேள்வி : மார்க்சிய அறிமுகம் எப்படி ஏற்பட்டது?

அரு.சு.ஜீவானந்தன்: புதியவற்றை கற்றுக்கொள்ளவேண்டிய ஆர்வத்தின் பேரில்தான்02 லண்டனுக்குப் புறப்பட்டேன். அங்கு சென்று படிக்கும்போது ஏற்கனவே இங்கே  அறிமுகமான, மலாயா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நண்பர்கள் மூலமாக ஓரளவு மார்க்சிய சிந்தனைகள் குறித்துத் தெரிந்துகொண்டேன். இங்குதான் மார்க்சியம் குறித்தும் கம்யூனிஸம் குறித்தும் தெரியவந்தது. லண்டனுக்குச் சென்று கணினித்துறையில் டிப்ளோமா முடித்த பின்னர், நூல்நிலையம் சென்று கம்யூனிஸம் குறித்த புத்தகங்களை வாசித்தேன். அங்கு இது குறித்த புத்தகங்கள் அதிகமாகவே இருந்தன. இன்னும் சொல்லப்போனால் கணினி குறித்த புத்தகங்கள் கிடைப்பதைக்காட்டிலும் இவ்வகையான புத்தகங்கள் சீக்கிரம் கிடைத்தன. இதனாலேயே என்னுடைய கடப்பிதழ் முடிந்த பின்னரும் மூன்று மாதத்துக்காகப் புதுப்பித்து, படிப்பதற்காகவே அங்கேயே தங்கியிருந்தேன். அந்த நேரத்தில் ‘தஸ் கேபிட்டல்’ (மூலதனம்) போன்றவற்றைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் மாவோவின் வாழ்க்கை வரலாறு, அவருடைய ‘லாங் மார்ச்’, அவருடைய சித்தாந்தங்கள், ஸ்டாலினுடைய சித்தாங்கள், லெனின் குறித்த புத்தகங்கள் போன்றவற்றை அப்போதுதான் படிக்க ஆரம்பித்தேன். அவற்றை நிறையவே படித்தேன். லண்டனின் உள்ள ஹைட் பார்க் பக்கம்  சென்றால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிந்தனையாளர்கள் சந்தித்து சுதந்திரமாகப் பேசுவார்கள். யார் வேண்டுமானாலும்  வந்து பேசலாம். ஒவ்வொரு ஞாயிறும் கூட்டத்தில் நான் கலந்துகொள்வேன். அப்படித்தான் எனக்கு மார்க்சியம் மீது ஈர்ப்பு வந்தது. அதைப்பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பும் அங்குதான் கிடைத்தது. கணினி குறித்து மட்டுமல்லாது இதனையும் படித்துவிட்டுதான் நாடு திரும்பினேன்.

கேள்வி : இலக்கிய அமைப்புகளில் உங்கள் ஈடுபாடு எப்படி இருந்தது?

அரு.சு.ஜீவானந்தன்: வானொலியில் இருக்கும்போதே, நண்பர்கள் சிலர் இலக்கிய வட்டம் என்ற குழுவை அமைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். வானொலியில் பணியாற்றுபவர்கள் வெளியில் உள்ளவர்கள் எனச் சேர்ந்து அதனை செய்துகொண்டிருந்தார்கள். இரா.தண்டாயுதம் மலேசியா வந்திருந்த புதிதில் நவீன இலக்கியம் குறித்துப் பேசுவதற்கு ஒன்றாகக் கூடினார்கள். என்னையும் அதில் இணைத்துக் கொண்டார்கள். நான் அப்போது இளம் வயதினனாக இருந்தேன். 24 வயதுதான் இருக்கும். அந்தக் குழு எனக்கு உற்சாகமாகவும் பல கதவுகளையும் சிந்தனைகளையும் எனக்குள் திறந்துவிட்டது. அதன் பின், வெளியூரில் இருந்து திரும்பிய பின் இலக்கியச் சிந்தனை என்ற ஒன்றை அமைத்தோம். நானும் சில நண்பர்களும் சேர்ந்து மாதந்தோறும் பத்திரிகைகளில் வரும் கதைகளைப் படித்து அதில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பரிசுகள் கொடுக்க ஆரம்பித்தோம். ஒரு காலகட்டத்தில் நாமே ஒரு போட்டியை நடத்தலாம் என்று சிறுகதைப் போட்டியையே நடத்தினோம். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசும் தந்தோம். பின்னர் அதுவும் கலைந்து போனது. அதனையடுத்து கவிதைக்களம் என்று முழுக்க முழுக்க மரபுக் கவிதைகளுக்காகக் காரைக்கிழார் போன்றோரெல்லாம் சேர்ந்து தொடங்கினார்கள். அதிலும் நான் சேர்ந்துகொண்டேன். எனக்குக் கவிதைகளில் ஆர்வம் உண்டு. அந்தக் காலக்கட்டம்தான் புதுக் கவிதைக்கும் மரபுக் கவிதைக்கும் மோதல் அதிகமாக இருந்தது. கடுமையான எதிர்ப்புகளும் இருந்தது. நான் புதுக்கவிதை சிந்தனையை கொண்டு செல்லத்தான் கவிதை களத்திற்குள் சென்றேன். என்னுடைய காரணங்களை நான் அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்.  ஆனால் அது ஒரு மனிதனின் குரலாகத்தான் இருந்தது அதில் பின்னர்  சண்முகசிவா வந்து இணைந்துகொண்டார். பேசுவதற்கும் என்னோடு அவரும் சில வாதப் பிரதிவாதங்களை வைப்பதற்கும் அது எனக்கு உதவியாக இருந்தது. புதுக்கவிதைகள் குறித்துப் புரிந்து வைத்திருந்தார் அவர். அந்தக்குழுவும் கூட ஒரு சமயத்தில் கலைந்துபோனது. அதனை அடுத்துதான்  ‘அகம்’  என்று தொடங்கினோம். சொல்லப்போனால் எனக்கும் சண்முகசிவாவுக்குமான நட்பும் அங்கிருந்துதான் தொடங்கியது எனலாம். நான், சண்முகசிவா, சாமி மூர்த்தி ஆகியோர் சேர்ந்து ‘அகம்’ என்ற குழுவை தொடங்கினோம். சோதிநாதனின் மயில் இதழ் அலுவலகத்தில்தான் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவதாக ஏற்பாடு செய்தோம். எனக்கு சிலரின் பெயர் மட்டுமே நினைவில் இருக்கிறது. அதில் நாங்கள்  பழைய புதிய இலக்கியங்களை எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வோம். படித்த புத்தகங்கள் குறித்தும் பேசுவோம். ஜே ஜே சில குறிப்புகள் நாவல் அந்த சமயத்தில்தான் வந்தது. அதை வைத்து நாங்கள் வாதம் செய்திருக்கிறோம். எங்கள் கைக்கு என்னென்ன கிடைக்கிறதோ என்னவெல்லாம் புதிதாக எழுதப்படுகின்றதோ அதுகுறித்துப் பேசி விவாதிப்போம். இது ஒரு பக்கம் இருக்க, அக்காலத்தில் இருந்த பழைய எழுத்தாளர்களையும் எழுதாமல் விடுபட்டுக் காணாமல் போயிருப்பவர்களையும் அழைத்து அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை தெரிந்து கொள்வதற்கு அவர்களுடன் உரையாடியுள்ளோம். ஓவியர்களையும் நாங்கள் அழைத்துள்ளோம். முழுக்க முழுக்க கலை சம்பந்தப்பட்டவர்கள் இருந்தார்களெனில் அவர்களையும் அழைத்திருக்கிறோம். வில்லுப்பாட்டு பாடுகின்றவர்களையும் அழைத்திருக்கிறோம். வானொலியில் பாடும் பாடகர்களையும் அழைத்திருக்கிறோம். கவிதை எழுதுகின்றவர்களையும் அழைத்திருக்கிறோம். என்னவொன்று எதனையுமே நாங்கள் பதிவு செய்யவில்லை. பதிவு செய்திருந்தால் நல்ல உபயோகத்தில் இருந்திருக்கும்.

கேள்வி : இலக்கியக்களம் மூலம் மலேசியாவுக்கு சுந்தர ராமசாமி வருகை அமைந்தது. அது குறித்து கூறுங்கள்?

10

சு.ராவுடன்

அரு.சு.ஜீவானந்தன்: பரவலாக இந்த நாட்டில் தீவிர எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம் குறைவு. சுந்தர ராமசாமி என்றதும் யாரவர் என்று கேட்பார்கள். வானொலியில் அவரை அழைத்து பேட்டி காண ஏற்பாடு செய்யும்போது, யாரவரென என்னையே கேட்டார்கள். சினிமாக்காரர்களென்றால் ஒலிப்பதிவுக்கு காட்டும் அக்கறை இது போன்றவர்களுக்கு கிடைப்பதில்லை. இங்கு தீவிர எழுத்தாளர்கள் அறிமுகம் அப்படியாகத்தான் இருந்தது. நாங்கள் எப்படியோ அவரைத் தெரிந்துகொண்டோம். எங்கள் கைக்குக் கிடைத்த சிறுபத்திரிகைகள் அதற்கு உதவின. இரண்டாவது, அந்த வயதில் அந்தக் காலகட்டத்தில் சுந்தர ராமசாமி ஒரு பிம்பமாகத் தெரிந்தாரே தவிர அதன் பிறகு அவர் அத்தனை பெரிய பிம்பம் கிடையாது என உணர்ந்தேன். ஆனால் அவரைப்பற்றி பிம்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன அவ்வளவுதான். அவர் ஒரு நாவலை எழுதியிருந்தார். ‘ஒரு புளியமரத்தின் கதை’ அதிக பிரபல்யமாகப் பேசப்பட்டது. அந்தச் சமயத்தில் தமிழகத்தில்  நுண்ணரசியல் நடந்துகொண்டிருந்தது. பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்க்குமான நுண்ணரசியல் அது. அது இலக்கியத்திலும் பிரதிபலித்தது. அந்தப் பிரதிபலிப்பு சுந்தர ராமசாமியை கொஞ்சம் மேலே தூக்கிக்காட்டியது எனலாம். பத்திரிகைகள் பிராமணியச் சார்புடையவையாக இருந்ததனால் அவரைக்குறித்து பெரிய பிம்பத்தை நமக்குக் காட்டினார்கள். அந்த மயக்கத்தில் நாங்கள் விழுந்துவிட்டோம் என நினைக்கிறேன். அவர் சாந்தி பத்திரிகையிலிருந்துதான் எழுத ஆரம்பித்தார். கம்யூனிசச் சிந்தாந்தம் இருந்ததாகச் சொல்லிக்கொள்வார். ஆனால் அவரது எழுத்துகளில் அதனை நாம் பார்க்க முடியாது. அவரும் சாதாரணமாக மற்ற எழுத்தாளர்கள் போலத்தான். அவர் ஜனரஞ்சக பத்திரிகைகளுக்கு எழுத மாட்டார். அவரது எழுத்துகள் பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில்தான் வரும். சிறு பத்திரிகைகளில் எழுதுகின்றவர்கள் எல்லோருகே தீவிர எழுத்தாளர்கள் என்கிற பிம்பமும் இருந்தது. நாங்களும் அந்த நேரத்தில் அதனை அப்படித்தான் பார்க்கவேண்டியதாக இருந்தது.

கேள்வி : எஸ்.வி.ராஜதுரையின் வருகை எவ்வாறு அமைந்தது?

13

எஸ்.வி.ஆருடன்

அரு.சு.ஜீவானந்தன்: எஸ்.வி.ராஜதுரை இன்னொரு ஆளுமை. உள்ளபடியே சுந்தர ராமசாமிதான் எங்களுக்கு அவரை அறிமுகம் செய்தார். அவர் இந்த நாட்டிற்கு வந்திருந்தபோது பெயர்களையெல்லாம் குறிப்பிட்டு நீங்கள் இவர்களைச் சென்று சந்தியுங்கள் என்று சொல்லியிருந்தார். வரதராஜு என்பவர்தான் வரவழைத்திருந்தார். அவர் தோட்டப்புறம் குறித்த புத்தகம் எழுதியிருந்தார். அந்த நேரத்தில்தான் எஸ்.வி.ஆர் வந்தார். என் வீட்டில்தான் தங்கியிருந்தார். அவரது சிந்தனைகள் வேறானவை. புனைவு இலக்கியம் இல்லை அவரிடம். முழுக்க முழுக்க சமூக சிந்தனையும் தீவிரமான கம்யூனிஸ சித்தாந்தமுமாக இருந்தார். அதனால் அது எனக்கு இன்னொரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. அவ்வளவுதான். இன்னொரு புதிய சிந்தனையாளனை என் வாழ்க்கையில் நான் சந்தித்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் இப்படி வந்து வந்து சென்றவர்கள்தான் எல்லோருமே. நானாக யாரையும் முன்மாதிரியாக தேர்ந்தெடுத்துக்கொண்டது கிடையாது. யார் பின்னால் சென்றதும் கிடையாது.

கேள்வி : தற்கால மலேசிய இலக்கியம் குறித்து  உங்கள் பார்வை என்ன?

அரு.சு.ஜீவானந்தன்: கடந்த இருபது-இருபத்தைந்து ஆண்டுகளாக மலேசிய இலக்கிய உலகத்தில் நடப்பது குறித்து எனக்குத் தெரியாது. அதில் எனக்கு அதிக ஈடுபாடு கிடையாது. நானும் எதிலும் சென்று கலந்துகொண்டது கிடையாது. அதனால் என்ன மாற்றங்கள் என என்னால் திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை. தேக்கம் எனப் பார்த்தால் எழுதுகின்றவர்களுக்கு முதலில் ஒரு பரந்த சிந்தனை, ஒரு தீவிரமான சிந்தனை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பெரும்பாலும் குறைந்த படிப்பு, எல்லைக்கு உட்பட்ட சிந்தனை, அதிலும் மாற்றுக்கருத்தைப் பேசுவதற்குத் தைரியம் கிடையாது. புதிய சிந்தனையைப் பேசுவதற்கோ அதனைச் சோதித்துப் பார்ப்பதற்கோ யாருக்கும் துணிவு கிடையாது. பெரும்பாலும் கண்கட்டிவிட்ட குதிரைகள் போலத்தான் எல்லாரும். ஓடிக்கொண்டே இருந்தார்கள். முதலில் ஆழ்ந்த படிப்பு, இரண்டாவது அறிவுஜீவிகளுடன் கலந்துரையாடுவது, மூன்றாவது, அறிவு சார்ந்த விடயங்களைப் பேசுவது. இவையெல்லாமே என்னைப் பொருத்தவரையில் இங்கே குறைவாகவே இருக்கிறது. நானே உட்கார்ந்து பேசுவதற்கு ஆளில்லாமல் இருந்திருக்கிறேன். நான்காவது, அதற்குண்டான தளமும் இங்கு கிடையாது. ஜனரஞ்சகம் பேசும் ஞாயிறு இதழ்களைத் தவிர்த்து தீவிர இலக்கியம் பேசும் பத்திரிகைகள் இங்கு கிடையாது. பத்திரிக்கைகள் பொது மக்களுக்கு பொதுவான ஜனரங்கமான விடயங்களைக் கொடுக்கிறார்கள். பத்திரிக்கைகள் விற்க வேண்டுமே. தீவிரமானவற்றை அவர்கள் எழுதுவது கிடையாது. அதற்குத் தகுதியானவர்களும் இல்லை. அதனால் அடுத்தடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியவில்லை. அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் முரண்பாடான விடயங்கள் பேசப்படுவதுதான் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியும். அது பல்கலைக்கழகத்திலும் நடந்தது இல்லை. வெளியிலும் நடந்தது இல்லை. பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் அதைவிட மோசம். அதற்குள்ளே சென்று உரையாடலை நடத்த விரும்பவில்லை. இப்படியான சூழ்நிலைதான் இந்த நாட்டு இலக்கியம் அக்காலத்தில் தத்தளித்தது.

கேள்வி : ‘இலக்கிய வட்டம்’ முயற்சி குறித்து கூறுங்கள்?

அரு.சு.ஜீவானந்தன்: வானொலியில் நாங்கள் இருந்தபோது நடத்திய இலக்கிய வட்டம் என்ற கூட்டத்தில் ஐந்து இதழ்களை வெளிக்கொண்டு வந்தோம். ஒவ்வொருவரும் எழுதிய கதை, கட்டுரைகளைத் தொகுத்து புத்தமாக்கினோம். தனிச்சுற்றுக்காகத்தான் அதனை வெளியிட்டோம். அதற்கு ‘இலக்கிய வட்டம்’ என்றே பெயரிட்டிருந்தோம். நாங்கள் பேசிய விடயங்களை அதில் எழுதி ஐந்து இதழ்கள் வரை வெளிவந்திருக்கும். பெரும்பாலும் இலக்கியக் கட்டுரைகள் இருக்கும். சில சமயங்களில் சில விவாதங்கள் இருக்கும். கடந்த கூட்டத்தில் பேசியதை ரெ.கார்த்திகேசு தொகுத்து புது இதழில் எழுதியிருப்பார். அந்த நேரத்தில் அகிலன் வந்திருந்தார். அவர் வந்துசென்ற பின்னர் அவருடன் நாங்கள் நடந்திய சந்திப்பு குறித்தும் இதழில் எழுதியிருப்போம். இப்படித்தான் அந்த இதழ் ஒவ்வொரு மாதமும் சேகரிக்கப்பட்ட விடயங்களுடன் வெளிவந்தது. தனிச்சுற்றுக்கு மட்டும் என்று இருந்ததால் இருபது முப்பது இதழ்கள்தான் தயாரிப்போம். விற்பனைக்காக அல்லாமல் எங்கள் பேச்சுகள் பதிவாக அதனை செய்திருந்தோம். ஒவ்வொன்றும் பதினைந்து பக்கங்கள் இருக்கும். சி.கமலநாதன் அதில் எழுதியிருக்கிறார். எஸ்.ஆர்.எம்.பழனியப்பன் எழுதியிருக்கிறார். தண்டாயுதம் எழுதியிருக்கிறார். என்னுடைய கதைகள்தான் அதில் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யும்.

கேள்வி : இடையில் இலக்கியத்தில் தங்களிடம் ஏற்பட்ட தொய்வுக்கும் தேக்கத்துக்கும் என்ன காரணம்?

அரு.சு.ஜீவானந்தன்: என்னைப் பொருத்தவரை வாழ்க்கை என்னைத் தின்றுவிட்டது என்று29 சொல்வேன். வாழ்க்கையா? இலக்கியமா? எனும் சூழல். குடும்பத்தலைவனாக வாழ்க்கை நடத்துவதா அல்லது இலக்கியவாதியா இருந்து நீங்கள் சொல்வதுபோல இலக்கியக் காரியங்களில் ஈடுபடவா என யோசிக்கையில் எனக்கு வாழ்க்கைதான் முக்கியமாகப்பட்டது. கிட்டத்தட்ட எங்களுடைய காலகட்டத்தில் இருந்தவர்களில் சூழ்நிலையும் இதுதான். இலக்கியத்துக்காக முன்னெடுப்பவர்கள் மிகக்குறைவு.  மற்றவர்கள் இந்த வாழ்க்கைப் போராட்டத்தின் இடையில் கொஞ்சம் கொஞ்சம் இந்த மாதிரியான விடயங்களை எங்களுடைய மனதிருப்திக்காக, ஒரு வடிகாலாகத்தான் அதைப் பார்க்கிறோம். அப்போதெல்லாம் ஞாயிறு மட்டும்தான் சந்தித்தோம். மற்ற நாட்களில் எல்லாம் வேலை. எங்களுக்கான வாழ்க்கை, குடும்பம் பிள்ளைகள் என எல்லாவற்றையும் நாங்கள் கவனிக்க வேண்டும். அதனால் நீங்கள் சொல்வது குற்றச்சாட்டாகவும் இருக்கலாம். விமர்சனமாகவும் இருக்கலாம். நாங்கள் இயலாதவர்கள்தான். அந்தக் காலக்கட்டத்தில். சண்முகசிவாவை நான் சந்தித்தபோது அவரிடம் இருந்த ஆர்வத்தைப் பார்த்து சிற்றிதழ் தொடங்கலாம் என்றேன். அவருக்கும் வாழ்க்கைப் போராட்டம். அதனால் மற்றதில் கவனம் செலுத்த முடியவில்லை. எங்களுக்குள்ளே ஆர்வம் இருந்தாலும் அதனைச் செயல்படுத்தக்கூடிய ஒரு சூழல் எங்களுக்கு அமையவில்லை. லண்டனில் இருந்து திரும்பிய பிறகு என்னுடைய சிந்தனை பெரிய மாற்றத்திற்கு உண்டானது. முழுக்க முழுக்க என்னை நான் மார்க்சியவாதியாகத்தான் பார்த்தேன். அதாவது, இந்தக் கலை என்பதில் இருந்து விடுபட்டு அல்லது விலகி சமூக விடயங்களில்தான் நான் கவனம் செலுத்தினேன். அதனால் இலக்கியத்தில் பின் தங்கிவிட்டேன். இரண்டாவது எனக்கு எற்பட்ட குடும்பச் சூழல். அப்போதுதான் நான் திருமணம் முடித்தேன். குடும்பம், பொருளாதாரம் போன்றவற்றை நான் பார்க்கவேண்டியதாக இருந்தது. மூன்றாவது எனக்கு ஏற்பட்ட சிறிய விபத்தில் உடம்பு பாதிக்கப்பட்டது. இது மீதி இருந்த என் வாழ்க்கையையும் தின்றுவிட்டது. இடுப்பில் எற்படும் வலி, மீதம் இருந்த என் எல்லா சத்துகளையும் உறிஞ்சிவிட்டது. அதனாலேயே என்னுடைய நடவடிக்கைகள் எல்லாம் ஒரு சுருக்கத்திற்குள் வந்துவிட்டது. இப்படி இருக்கிற மனிதனிடத்தில் எப்படி நீங்கள் எழுத்தாற்றலை எதிர்பார்க்க முடியும். இப்போதுகூட வலியுடன்தான் அமர்ந்திருக்கிறேன். முப்பத்தியாறு ஆண்டுகளாக இவ்வலி என்னை தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது. இந்த வலியுடன் நான் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டம் இருக்கிறதே, அந்தக் கஷ்டத்தைச் சொல்லவியலாது. சில சமயங்களில் எழுத்தை இழந்துவிட்டேனோ என மிகுந்த துயரமாக இருக்கும். அதனால்தான வாழ்க்கை என்னை தின்றுவிட்டதாக சொல்கிறேன். எனக்குள் இருக்கும் இலக்கியவாதியையும் அது சுருட்டி வாயில் போட்டுக்கொண்டது.

நேர்காணல் : ம.நவீன்

எழுத்து : தயாஜி

1 comment for “வாழ்க்கை என்னைத் தின்றுவிட்டது! – அரு.சு.ஜீவானந்தன்

  1. S. Vairaccannu
    March 24, 2017 at 1:30 am

    70-களின் துவக்கத்தில் நான் பத்திரிகைகளுக்கு சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்த போது அரு.சு.ஜீவானந்தனின்
    ‘முரட்டு ‘ கதைகளைப் படித்து ‘மிரண்டு ‘ போயிருக்கிறேன்.வானொலியில் பணியாற்றிய போது அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். மௌனி, க.நா.சு, தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன்,சுந்தர ராமசாமி போன்றோரின்
    சிறந்த படைப்புக்களைப் பற்றி அவர் கூற, அவற்றை தேடித் தேடி வாசித்திருக்கிறேன்.மறைந்த எழுத்தாளர் மு.அன்புச்செல்வன் அவர்களும் என்னிடம் நிறைய பகிர்ந்து கொண்டிருக்கிறார். அரு.சு.ஜீவானந்தன் அவர்கள் வலியுடன் வாழ்வதை அறிந்து வருந்துகிறேன். ‘கோமா’வில் விழுந்து மரணத்திலிருந்து மீண்டு, மனவலி,உடல்வலிகளுடன் நானும் இருக்கிறேன். வாசிப்பு தாகமும் எழுத்து வேட்கையும் அடங்கவேயில்லை.
    நண்பரே, உங்கள் வலிகள் குறைய ‘சர்வ வல்ல’ தேவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...