உயிர்க்காடு – 2

kumar 1வேறு வழியில்லை, தான் கிளம்பித்தான் ஆகவேண்டும்’ என்று முடிவுசெய்தவுடனே, மனதளவில், யு.எஸ்.எஸ் ட்ரூமேனை, அவனேகூடத் தேற்றிக்கொள்ள முடியாதிருந்தான். இந்தவாழ்க்கையை சில மாதங்களுக்காகவது வாழ்ந்துபார்க்க வேண்டும் என்றுதான் அங்கு வந்திருந்தான் அவன். அங்கு வந்து, மூன்று வாரங்களாகிவிட்டன. மூன்று வாரங்களுக்குள் நான்கு மூத்த மருத்துவர்களும் ஆறு பயிற்சிமருத்துவர்களும் எட்டு செவிலியர்களும் அவனைச் செய்யாத பரிசோதனை எல்லாம் செய்து முடித்துவிட்டனர். ஆனால், ’என்ன நோய் அவனுக்கு’, என்றுதான் கண்டுபிடிக்க முடியவில்லை.

முதன்முதலாக கடந்த மாதம் ஐந்தாம் தேதிபோல, ரானேயின் மகிழ்வுந்தில், யீசூனில் புதிதாகத் தொடங்கியிருந்த  ‘கூ தெக் புவாட்’ பொது மருத்துவமனைக்கு தன்னைக்கூட்டிப் போகச்சொன்னான் ட்ரூமேன்.  இரண்டு காரல்ஸ்பெர்க் பீரை ’மடக்குமடக்கு’ என்று உள்ளே ஏற்றிவிட்டு, ரானேயின் வண்டியில் ஏறியவன், மருத்துவனை வாசலை அடையும்வரை நன்றாகப் பேசிக்கொண்டுதான் வந்தான். ’விபத்து மற்றும் அவசரப்பிரிவின்’ வாசலில் கார் நிற்கும்போது, படக்கென்று கதவைத் திறந்து, அப்படியே கதவிற்கு வெளியே சரிந்தான் ட்ரூமேன். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ரானே, மிகவும் அதிர்ந்து திரும்பிப்பார்த்தான்.

’என்ன ஆனதென்று தெரியவில்லை. நெஞ்சுவலி ஏதுமா, இல்லை வேறு ஏதாவதா’ என்று பதறிவிட்டான். உடனே வாசலை நோக்கி ஓடியவன், முன்சோதனைத் தடுப்பில் இருந்த துணைத் தாதியிடம் கைகளைக்காட்டி, ஏதேதோ சொன்னான். துணைத்தாதி வேகமாக ஓடி, ஒரு தள்ளுவண்டியை எடுத்துக்கொண்டு காரைநோக்கி ஓடிவந்தாள். காரின் கீழே, பாதையில் சரிந்துகிடந்த, ட்ரூமேனைத் தூக்கி வண்டியில் வைத்தார்கள். வண்டியை அம்மாது தள்ளிக்கொண்டு பதிவு மேசைக்கருகில் ஓடினாள். ’அவனின் ஐசி வேண்டுமே’ என்றாள்.

’காரை இங்கே நிறுத்தக்கூடாது’ என்று அறிவிப்பு செய்திருந்தாலும், காரின் அவசர விளக்குகளை ஏற்றிவிட்டுவிட்டு, மருத்துவமனையின் உள்ளே ஓடிய ரானே, தள்ளுவண்டியைத் தேடினான்.  அவள், அந்தத் தள்ளுவண்டியுடன், ரெஜிஷ்ட்ரேஷன் எனப்படும் ’பதிவு’ இடத்தில் நிற்பதைக்கண்டு அங்கு ஓடினான். ரானே அங்கே நெருங்கியதும், மீண்டும் அந்தத்தாதி, ’ஐசி’ எனப்படும், ட்ரூமேனின் அடையாள அட்டையைக் கேட்கவும், ரானே, என்னிடமில்லையே என்று ட்ரூமேனைப் பார்த்தான். தள்ளு இருக்கையில் சாய்ந்திருந்தாலும் ஐசியை எடுத்துத் தன்காற்சட்டையின் விளிம்பில் வைத்தபடியே, மயக்கமாய்க் கிடந்தான், யாருக்கும் தொந்தரவு கொடுக்காத ’ட்ரூமேன்’.

ரானே, ட்ரூமேனின் அடையாள அட்டையை எடுத்து, அதைப்பதிவு செய்யும் வெளிர்நீலச் சட்டையும் கருநீலக் குட்டைக் காற்சராயும் அணிந்து, புருவத்தை மீன்கோடுகள்போலச் செதுக்கியிருந்த பெண்ணிடம் கொடுக்கவும், அவள் அதனை வாங்கி, மேசையில் செங்குத்தாகச் செறுகிய சிறு ஓடு போலயிருந்த, தொடுகணினி மேல் அவ்வட்டையை உராசி, பதிவுசெய்து, சிறுசிறு ஒட்டுவில்லைகளைப் பட்டைகளாய்ப் பிரிண்ட் செய்து அதனை நீள்வடிவப் படிவத்தின்மேல் ஒட்டினாள். மேலும், வரிசை எண் கொண்ட ஒரு சிறுவில்லையையும் அதனுடன் வைத்தாள்.

அருகிலிருந்த, தனது மார்புக்கு மேல் ‘உதவியாளர்’ என்று எழுத்துரு தொங்கிக்கொண்டிருந்த, பார்ப்பதற்கு மெலிதாகவும் குள்ளமாகவும் இருந்த மற்றொரு தெரிவை, ‘கேஷா இல்லை நெட்ஸா என்று கேட்டுவிட்டு, அதன் தொடர்ச்சியாய் 110 வெள்ளி கட்டவேண்டும் முதலில்’ என்றாள்.

’சிங்கப்பூரருக்கு என்று ஏதும் தள்ளுபடி உண்டா, அண்மைய வரவு-செலவுத்திட்டத்தில் நிதியமைச்சர் ஏதோ சொன்னாரே’ என்று, அப்பெண்ணை வினவிkumar 2க்கொண்டே, ட்ரூமேனைப்பார்த்தான் ரானே. மயக்கமுற்ற நிலையிலும் ட்ரூமேன், இரு ஐம்பது வெள்ளிநோட்டுகளையும் ஒரு பத்துவெள்ளி நோட்டையும் ‘மான்செஸ்டர் யுனைட்டெட்’ என்று பொறிக்கப்பட்ட தனது மேலாடையின் மேல்பாக்கெட்டுக்குள் தயாராக வைத்திருந்தான். அதனை எடுத்து, அப்பெண்ணிடம் ரானே கொடுத்தவுடன், அவள் அதை வாங்கி, சிறுமேசைக்கு அடியிலிருந்த நாணயப்பெட்டிக்குள் தள்ளிவிட்டு, வெளியே பிரிண்டரிலிருந்து வெளித்தள்ளிய ரசீதை எடுத்து, அதனின் கீழ்ப்பக்கத்தில் தன் இடுகுறியை இட்டு, ஒரு அச்சுப்பதிவும் செய்துவிட்டு, மற்ற ஒட்டுவில்லைகளையும் சேர்த்து ஒரு ஏ4 வடிவ உறைக்குள் செருகி, ரானேயின் கையில் கொடுத்தாள்.

‘ஒருநிமிடம்’ என்று சொல்லிவிட்டு, அதுவரை அருகிலிருந்த, தள்ளுவண்டிக்கு உதவிசெய்த முன்சோதனைச்சாவடிப்பெண், ‘அந்த முன்சோதனைப் படிவத்தைக் கொண்டுவா’ என்று சொல்லி, அங்கிருந்த ஒருவனை அழைத்தாள். ட்ரூமேனை உள்ளே கொண்டுவரும்போதே அவனுடைய உடல்வெப்பநிலையை ’ஸ்கேன்’ செய்து, அதை அப்படிவத்தில் எழுதி, இன்னும் அவன் வந்தநேரம், வந்தவிதம், வந்தவண்டி போன்ற ‘நோயாளின் முதற்தரிசனக் காட்சிஅனுபவங்களையும்’ அதில் சுருக்கமாய் எழுதியிருந்தார்கள்.

உறையிலிருந்த ஒரு ஒட்டுவில்லையை எடுத்து அப்படிவத்தின் மேலும் ஒட்டியவள், ‘உடல்வெப்பநிலை சாதாரணமாகத்தான் இருக்கிறது’ என்று மிகமிகமெதுவாய்ச் சொன்னாள். அப்பெண் சொன்னது, ட்ரூமேனுக்குக் கேட்டதா தெரியவில்லை. ஆனால், திடுமென மூச்சிரைப்பு வந்தது அவனுக்கு. மூச்சை மேலும் கீழும் இழுத்தான். உடல் நடுங்கியது போலிருந்தது. தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட முள்நாறிப்பழத்தின் கொட்டையைக் காறி எடுப்பதுபோல, ‘க்வாக் க்வாக்’ என்றான். தலையைச் சுழற்றி உடலைக் குறுக்கி வினோத மொழியாடல்கொண்ட அவனைக் கண்ட அப்பெண், ‘தாமதிக்காதீர்கள், உடனே அந்த அறைக்குக் கொண்டுசெல்லுங்கள்’ என்றாள். வண்டியை வேகமாகத் தள்ளிக்கொண்டு சென்றான் ரானே.

மருத்துவர் பார்க்கும் முன்பு, மூத்த முதன்மைத்தாதி நோயாளியைப் பார்த்து, அதற்கேற்றார்போல, மருத்துவரை ஒதுக்கும் அந்த அறையில், யாரோ ஒரு பெண்நோயாளி இப்போது இருந்தாள். ’அவர் வெளியே வரட்டும், போகலாம்’ என்று அருகில் நின்ற தமிழ் உதவியாளர் இவர்களுக்குக் கைகாட்ட, பக்கத்தில் நின்ற ரானேயின் கையை மெதுவாகத் தட்டினான் ட்ரூமேன். ரானேயை அருகே வரச்சொல்லி சைகை செய்தவன், அவன் காதுக்கருகில் வாயைவைத்து, ‘நீ கிளம்பு’ என்றான்.

’காடியைப் ’பார்க்’ செய்யச்சொல்கிறானோ?’ என்றுதான் முதலில் நினைத்தான் ரானே. ‘இல்லை நீ கிளம்பு, நாளை முடிந்தால் வா. நானாவிடம் சொல்லி, நாளை வந்து என்னைப் பார்க்கச்சொல்’ என்று சொல்லிவிட்டு, ‘என்னை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள், நீ போ, காடியின் பின்னால் இரண்டு கார்ல்ஸ்பெர்க் டின் இருக்கிறது; எடுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு எதிர் அறையின் வாசலிலிருந்த உதவிப்பெண்ணை அழைத்து, அந்த முதன்மைத்தாதி அறைக்கு, தன்னைத் தள்ளிக்கொண்டு போகச்சொன்னான் ட்ரூமேன் ஒரு வீரனுக்குரிய கட்டளைத்தொனியில்.

ஏறக்குறைய மூன்றுவாரங்களுக்குப்பிறகு இன்று அவன், அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வரவேண்டிய சூழல். அவன் வெளியே வர விரும்பவில்லையெனினும், நானாவுக்காக வரச் சம்மதித்தான். ’காலை மணி, 5க்கு எப்படி டிஸ்சார்ஜ் ஆவது?’ என்றும் அவன் யோசித்தான்.

அரக்கப்பரக்கக் குசினிக்குள் இருந்தாள் மெலிசா. வீட்டுக்காரர்களுக்குத் தெரியாமல் சென்றுவிட்டுkumar 3, சீக்கிரம் திரும்பிவிடலாம் என்று நினைத்தவாறு, அடுப்பிலிருந்த பாலைச் சீக்கிரம் கொதியூட்டுவதற்காய் வாயு அடுப்பை அதிகமாக்கினாள். அதிகாலை சீக்கிரம் எழுந்துவிடும் குணவதிப்பாட்டிக்கு, ஆறுமணிக்கு புரு காஃபி தயாராய் இருக்கவேண்டும். இல்லையேல், வெறிகொண்டவள் போல மதியம்வரை திட்டிக்கொண்டிருப்பாள். பாலைக்காய்ச்சி, காஃபி கலக்கி ஃபிளாஸ்க்கினுள் வைத்துவிட்டால் போதும், வேண்டும்போது அவள் குடித்துக்கொள்வாள். ‘நாளைக்காலை, நான் தாமதமாகத்தான் எழுவேன், வயிற்றுவலியாய் இருக்கிறது’ என்று முதல்நாள் இரவே குணவதிப்பாட்டியிடம் சொல்லிவிட்டாள். வயிற்றுவலி என்றால் மட்டுமே மனம் இரங்குவாள் அவள். பெண்ணுக்குப்பெண் என்பதாலா அல்லது சுத்தம் வேண்டும் என்பதாலா என்பதைக் கணிக்க இயலவில்லை மெலிசாவால்.

அதற்காக, அடிக்கடி வாராவாரம் வயிற்றுவலி என்றா சொல்லமுடியும்? அதையும் நாள்கணக்காய் என் வயிற்றுவலியை நினைவில் வைத்திருக்கும் அந்தக்கிழவியிடம்? சில்வனிடம் இதுபற்றிச்சொன்னால், ’வயிற்றுவலியே உனக்கு வராமல் செய்துவிடுகிறேன், பத்துமாதத்திற்கு’ என்பான்.

’சாரையும் சிஸ்டரைப்பற்றியும் ஒரு கவலையும் இல்லை. சனிக்கிழமை இரவு என்பதால் வழக்கமாகச் செல்லும் நடனமாடும் அரங்குகளுக்குச் சென்றுவிட்டு, அதிகாலையில்தான் வீடுதிரும்புவார்கள். நான், அதிகாலை வெளியே சென்றுவிட்டு ஏழு எட்டுமணிக்குள் வீட்டுக்குத்திரும்பி வந்துவிட்டாள் போதும். அதுவரை அவர்கள் எழுந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் சொல்லிவிட்டுப்போகவும் அவசியமில்லை’ என்றவாறு மனதுக்குள் முன்னமே வரையறுக்கும் நிகழ்கலையை ஓட்டிக்கொண்டு, நடக்கப்போவதை அறியாமல், அடுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நீல வண்ணச் சுவாலைகள் அலுமினியத்துக்குள் சங்கமாகிக்கொண்டிருந்தன. பால், திரண்டுவரும் மேகம் போல சூழல் கொண்டிருந்தது.

நீண்ட வரவேற்பறைக்குப் பக்கத்தில், அந்த சமையலறை சிறு கிடங்குபோலக்கிடந்தது. ‘சிங்கப்பூரில் சமையல் செய்யவே வேண்டாம், வெளியிலேயே சாப்பிட்டுக்கொள்ளுங்கள்’ என்றுதான் இந்தவீடுகளைக் கட்டுபவர்களும் நினைக்கிறார்களோ என்னவோ, இவ்வளவு பெரிய வீட்டிற்கு, இத்தனூண்டு சமையலறையா என்று அடிக்கடி நினைத்திருக்கிறாள். ‘வயிறுதான் பெரிசா இருக்கும், வாய் சின்னதாதாத்தானே இருக்கணும்’ என்பான் சில்வன். சில்வனை அடிக்கடி நினைத்துப்பார்ப்பதே சுகமாய் இருந்தது மெலிசாவிற்கு. ‘இன்று அவனை நேரில் சந்தித்துவிட்டு சீக்கிரம் வந்துவிடவேண்டும். அடிக்கடிப் பார்க்கப்போவது சரியில்லை, அதுவும் கடந்த இருமாதங்களாக அடிக்கடி அவனைப் பார்க்கப்போகிறேன்.’

’முன்னர் யிஷூனில்தான் இருந்தான், அடிக்கடி பார்க்கவரமுடியாது என்பதால், ஞாயிறுகளில் மட்டுமே இருவரும் சந்தித்துக்கொள்வதுண்டு. இப்போது, அட்மிரால்டி வெஸ்ட் சாலையில் நடக்கும் ஒரு கட்டுமான வேலைக்கு அவனாய் கேட்டுக்கொண்டு வந்தானா இல்லை அவனுடைய நிறுவனமே அனுப்பியதா தெரியவில்லை.’

’இங்கிருந்து ஒரு கிலோமீட்டருக்குள், அவனது வேலையிடம் இருக்கிறது. அடிக்கடி பார்க்க வந்துவிடுகிறான், அல்லது நான் போகிறேன். இப்படி நடப்பது  நல்லதா கெட்டதா தெரியவில்லை ஏதும் பிரச்சனை ஆகிவிடுமோ என்றும் கவலையாயிருக்கிறது’. சிந்தனை பலவாறாகச் சுழல, அவற்றையே நினைத்துக்கொண்டு பாத்திரத்தைக் கீழே இறக்குகையில், சூடான பகுதியின் கைப்பிடி லேசாய் விரலில்பட்டு, விரலின் நுனியில் நெருப்பின் நீலவண்ணம் வந்து நின்றது.

லேசான கவலையில் ஆழ்ந்தாள் மெலிசா.

மருத்துவமனையின் ’நான்கு படுக்கை’ அறைகளைக்கொண்ட பிளாக்”பி”யின் ஐந்தாம் மாடியில், அறை எண் 55இல் எழுந்தமர்ந்த ட்ரூமேன், அவசரமாய், தனது கட்டிலின் அருகில் இருந்த ரிமோட்டில், தாதிக்கான அழைப்புமணியை அழுத்தினான்.

ஆறு மணிக்கு அடுத்த சுற்றுப்பணி ஆரம்பிப்பதற்குமுன், எல்லோரையும், எல்லாவற்றையும் சரியாக ஒப்படைக்கும் பொருட்டு ஆங்காங்கே அலைந்துகொண்டிருந்த தாதியர்களுள், ஜூனியரான பிலிப்பைன்ஸிலிருந்து வந்திருக்கும், செசில்லா (ஃபின் நம்பர் G4573421A), எந்த படுக்கையின் நோயாளி அழைக்கிறார் என்று, அவர்களது இருக்கைக்கு எதிரிலிருந்த ஒளிபெருக்கித்திரையைப் பார்த்தபோது, ’இவனா?’ என்று ஒருகணம் அதிர்ந்தாள்.

இன்னொரு தாதி, யாது, என்ன என்பதுபோன்ற கேள்விகளை வாய்விட்டுக் கேட்காமலேயே, கண்களாய் அத்திரையைப் பார்த்தாள். இவன் எப்படி 5மணிக்கு எழுந்தான் என்று ஒருகணம் தயங்கிவள், போய்ப் பார், என்று சொல்வதற்குள், மூன்று முறை அழைப்பு மணி ஒலித்துவிட்டது. இனியும் தாமதிக்கலாகாது என்று இருவரும் சேர்ந்தே அவனுடைய படுக்கையை நோக்கிச் சென்றார்கள்.

”எத்தனைமுறை அழைத்துவிட்டேன், என்ன செய்கிறீர்கள், உங்களையெல்லாம் வேலைக்கு எடுத்த சிங்கப்பூர் அரசைச் சொல்லவேண்டும்” என்று எகிறினான் ட்ரூமேன்.

”சாரி சார், என்னானது, எப்படி உங்களுக்கு உதவ முடியும்?” என்று கேட்டாள் kumar 4செசில்லா.

”ஹ்ம், இவ்வளவு நேரம் எங்கே போனீர்கள், எங்களைப் பார்த்துக்கொள்ளத்தான் உங்களுக்கு சம்பளம், நாங்கள் தூங்கும்போது நீங்கள் தூங்குவதற்கு அல்ல, நூறு மில்லியன் பணத்தை இனாமாய் வாரிவழங்கி மக்களுக்குச் சேவை செய்யுங்கள் என்று கொடுத்த கூதெக்புவாட் பெயரையே கெடுக்கிறீர்களே.. ” என்றவன், அவள் அருகில் நின்ற மூத்த தாதியிடம், “நீங்கள் சிங்கப்பூரர்தானே, வெளிநாட்டில் இருந்து வேலை செய்ய வந்தவர்களுக்குத்தான் தெரியாது, உங்களுக்குமா நம் நாட்டைப்பற்றித் தெரியாது, மாஜூலா சிங்கப்புரா என்றால் என்னவென்றால் உங்களுக்குத்தெரியும்தானே, ஏன் அமைதியாயிருக்கிறீர்கள், பேசுங்கள் சேவை முக்கியம்தானே” என்றான்.

”ஷிஃப்ட் முடியப்போகிறது. உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள், இல்லையேல் அடுத்த ஷிஃப்ட் தாதி வந்தவுடன் அவர்களை வந்து உங்களைப் பார்க்கச் சொல்கிறேன்” என்றாள் அந்த மூத்த தாதி.

”ஆக, உங்கள் வேலை முடிந்து விட்டது என்று சொல்கிறீர்கள், சேவைப்பிரிவில் ‘கோ எக்ஸ்ட்ரா மைல்’ என்கிறதே அரசாங்கம், உங்களுக்குத் தெரியுமா, தெரியுமா தெரியாதா?” என்றவன், “தெரிந்துகொண்டும் செய்யமாட்டீர்கள் அப்படித்தானே, உங்கள் மேலாளரைக் கூப்பிடுங்கள், அவரிடம் பேசவேண்டும்” கடுப்படித்தான்.

”என்ன ஆனது இப்போது, ஷிஃட் முடியும் தருவாய் என்பதால் கொஞ்சம் வேலையாக இருந்தோம், அதுதான் இருவர் வந்துவிட்டோமே, சொல்லுங்கள், என்ன வேண்டும் உங்களுக்கு?” மூத்த தாதியின் வார்த்தையில் அவசரம் தெரிந்தது.

”சாரி, உங்களிடம் பேசவிரும்பவில்லை, உங்களின் மூத்த தாதியரையோ அல்லது மேனேஜரையோ அனுப்புங்கள். என்ன சேவை செய்கிறீர்கள், இதற்குப்பெயர்தான் சேவையா? நான் ஒன்றும் இலவசமாய், இங்கு வந்து கிடக்கவில்லை அல்லவா? ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 450 வெள்ளி வாங்குகிறீர்களே, இதற்குத்தானா? கூப்பிடுங்கள், நான் உங்கள் உயர் அலுவலரிடம் பேசவேண்டும்” என்றான்.

”சரி, நீங்கள் அவரிடமே பேசிக்கொள்ளுங்கள். ஆனால், இப்போது ஷிஃப்ட் முடியும் நேரம் என்பதால், நீங்கள் காத்திருந்து, அடுத்த பணிச்சுற்று அலுவலரைத்தான் பார்க்கமுடியும். அவர் வந்தவுடன், உங்களைப் பார்க்கச்சொல்கிறேன்” என்று விறுவிறுவென்று கிளம்பினாள் செசில்லாவுடன் வந்த மூத்த தாதி.

”இதோ வருகிறேன், உங்களையெல்லாம் இப்படியே விடக்கூடாது, கம்ப்ளைண்ட் செய்யணும்” என்று கட்டிலைவிட்டுக் கீழே இறங்கி, கீழாடையைக் கையில் பிடித்துக்கொண்டு கழிவறையை நோக்கிச்சென்றான் ட்ரூமேன்.

அவன் உள்ளே சென்றதும், இரு தாதியரும் பாய்ந்து வெளியே ஓடினர். ”சீக்கிரம் கிளம்பு, காலை வேலையினர் வந்து அவனைப் பார்த்துக்கொள்வார்கள், அவனிடம் பேசிக்கொண்டிருந்தால் ஒரு ’ஹேண்டோவரும்’ செய்யமுடியாது. சீக்கிரம்” என்று பாய்ந்தாள் மூத்த தாதி செசில்லாவுடன்.

”அவர் புகார் ஏதும் செய்யப்போகிறார், சிஸ்டர்” என்று பயந்த செசில்லாவை, ”நத்திங் டு ஒரி, எவரிபடி நோ அபவுட் ஹிம், வி வில் ஜஸ்ட் எஸ்கேப்” என்றாள் மூத்த தாதி, செசில்லாவின் தோளில் தட்டி இழுத்துக்கொண்டே.

இதற்கிடையில் ட்ரூமேனின் தொலைபேசிக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. நான்குமுறை அழைத்திருந்தான் ரானே. ’என்ன ஆச்சு இந்த ரானேக்கு, அடித்துக்கொண்டே இருக்கிறானே, நான்தான் வருகிறேன் என்றுசொல்லிவிட்டேனே’ என்று மனதுக்குள் திட்டித்தீர்த்தான் ரானேயை.

’போனில் சொல்ல பயமாயிருக்கிறது, போலீஸ் பிடித்துவிடும், உடனே கிளம்பி வா’ என்று சொன்ன ரானேயிடம், ’வீட்டிற்குக்கீழே போய், பொதுத்தொலைபேசியிலிருந்து என்னை அழைத்து விவரத்தைச் சொல்’ என்று சொன்னவுடன், என்னை அழைத்து அனைத்தையும் சொல்லிவிட்டான். இன்னும் ஏன் மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டிருக்கிறான்.’

’ரானேயும் அவனது காதலியான நானாவும் சுயநலவாதிகள். அவர்களுக்கொன்று என்றவுடன் என்னைத் தேடுவார்கள். எனக்கென்று ஒன்று என்றால் கண்டுகொள்ளவே மாட்டார்கள்’. மீண்டும் தொலைபேசி அழைக்க, “ரானே, ஸூஸா லா நீ, தூங்கு, நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு தாதியைத் தேடினான்.

அவர்கள் யாரையும் அங்கு காணாததால், மீண்டும்மீண்டும் அழைப்பு மணியை அழைத்து, உரத்தகுரலில் ’யாருக்கும் இங்கே அறிவில்லை’ என்று கத்திக்கொண்டிருந்தான். எதிரில் மூடிய திரைச்சீலைக்குள் படுக்கையில் கண்களை மூடிக்கிடந்த தமிழ்த் தாத்தா எழுந்து, இருமுறை இருமிவிட்டு, அவரது கட்டிலுக்கு எதிரில் தொங்கிய தொலைக்காட்சியை ஒளியூட்டு செய்தார்.

சிறிதுநேரம் அங்கு யாருமே வரவில்லை. அனைவரும் எங்கோ ஓடிப்பதுங்கி மறைவதுபோலக் கிடந்தது அந்த அறையின் சூழ்நிலை. ட்ரூமேனுக்கு கோபம் எகிறிக்கிடந்தது.

kumar 5இருண்டு கிடந்த காட்டுக்குள் திடுமென புதுமழை புதுவெள்ளம் பாய்வது போல, அந்த அதிகாலையில், அந்த அறைக்குள் சரசரவென்று யாரோ வந்தார்கள். விதவிதமான ஊழியர் உடைகளில், உரகர்கள் போல குட்டையும், ஓங்கியுர்ந்த நெட்டையும், கீரைக்கொடிகளைப்பொல ஒல்லியும் பீமர்களைப்போல ஆண்களும் பெண்களுமாகிய மருத்துவமனைச் சிப்பந்திகளும், தாதிகளும், சுத்தப்பணியாளர்களும், மருத்துவர்களும் உலாவத்தொடங்கினர். முகப்பறையில் அமர்ந்துகொண்டு வரவேற்பவர்கள் மட்டும், எளிதில் அடையாளம் தெரியும்படி, இன்னும் கொஞ்சம் அதிகமான அழகாட்டுதலுடன் இருந்தனர்.

அவர்களின் உடலில் பூசிய வாசனைத்திரவியங்கள் ஆவியாகி ஏர்கானில் கலந்து சிலுசிலுவென்று அந்த அறைக்குள் பரவ, அதுதான் அந்தநாளுக்கான அவ்வறைகளின் உயிச்சாரம் போலிருந்தது.

அறைக்கு வெளியே, அந்த மின்தூக்கியிலிருந்து வெளிவந்து, வலப்புறம் ஒருவரும், இடப்புறம் ஒருவரும் பிரிந்துசெல்லும்முன், மையிமைக்கும் மணித்துகளில் உதடோடு உதடுவைத்து முத்திவிட்டுப் பிரிந்தார்கள் ஒரு ஆணும் பெண்ணுமாகிய இருவர். அம்முத்தம் அங்குள்ள அறைகளுக்கெல்லாம் சென்று, அன்பாய் உருக்கொண்டு, இரவுக்கு எங்களோடு திரும்புக’ என்பதுபோல புன்னகையோடு வார்டை நோக்கி நடந்த, அச்சிறு தாதிப்பெண் புதிதாய்க் கல்யாணம் ஆனவளாய் இருக்கவேண்டும் அல்லது காதலிப்பவளாய் இருக்கவேண்டும். இக்காட்சியைத் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ட்ரூமேனுக்கு, இக்காட்சி, மீண்டு எழும் கோப அலையில் ஒரு சிறுதுகள் போலப் படர்ந்து பரவி, நினைவுகளில்பதிந்து சிறு அமைதியைக் கொடுத்தது.

சில நிமிடங்களுக்குப்பின், அவனது அறைக்கு வந்தாள் அந்தத் தாதி.

”சரி, ஐயா, நீங்கள் மருத்துவமனையிலிருந்து உங்களை விடுவிக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள். மருத்துவர் வந்து பார்த்துவிடுத்தான் நீங்கள் கிளம்பவேண்டும், அதுதான் எங்கள் நிர்வாகமுறை. எனினும் நீங்கள் அவசரமாகக் கிளம்பவேண்டும் என்பதால், என்னால் ஒன்றே ஒன்றுதான் செய்யமுடியும், உங்களுக்காக” என்ற அந்த சிறுமுத்தக்காரியின் முகத்தையும் உதடுகளையும் மீண்டும் மீண்டும் பார்த்தான் ட்ரூமேன்.

”இது உங்களின் சொந்த முடிவு, மருத்துவமனையின் விருப்பமல்ல, இதனால் ஏற்படும் எந்தவித இழப்புக்கும், தீமைக்கும், அசௌகரியத்திற்கும் இந்த மருத்துவமனை எந்தவித பொறுப்பும் ஏற்காது’ என்று எழுதிய படிவத்தில் நீங்கள் கையெழுத்துப் போடவேண்டும்” என்று சொன்னாள்.

“சரி” என்று சொல்லி, அவளைப்பார்த்துக்கொண்டே, கையெழுத்துப் போட்டான் ட்ரூமேன்.

அவனிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, மூத்த தாதியிடம் அதைப்பற்றிச்சொல்லி, அவளிடம் ஒரு கையெழுத்து வாங்கிவிட்டு, அவனை வெளியே அனுப்பினாள் அச்சிறு முத்தத்தில் முளைத்த தாதி. அன்பில் இழைந்தோடியது அவள் முகம். மாறாக, மிகுந்த கடுகடுப்புடனும் கருமுகில் காணும் நிலம்கொள்ளும் சிறு விழைவோடும் வெளியே வந்தான் ட்ரூமென்.

முதல் பாகம்  : http://vallinam.com.my/version2/?p=3595

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...