முன்னுரை

downloadஒரு நூலினை தனித்துவம் மிக்கதாகக் காட்ட வடிவமைப்பு, படங்கள், வண்ணம், அன்பளிப்பு, விளம்பரம் எனப் பல்வேறு சந்தைப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவை நூல், நூல் அல்லாதவைகளுக்கும் (எழுத்துக் குப்பைகளுக்கும்) ஒரே மாதிரியாகப் பயன்படுவது எல்லாக் காலங்களிலும் தவிர்க்க முடியாதது. சில சமயங்களில் எழுத்துக் குப்பைகளுக்குக் கிடைத்துவிடும் வெளிச்சம் தரமான நூல்களுக்குக் காலம் தாழ்த்தியோ அல்லது கடைசிவரை கிடைக்காமல் போவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இவற்றையெல்லாம் கடந்து ஒரு நூல் பெரும் வாசகர் பரப்பைச் சென்றடைய நூலின் தரம், அந்நூலைச் சுற்றி உருவாகும் சர்ச்சைகள், விமர்சனங்கள், எழுத்தாளரின் நேர்/எதிர் பிரபலம், நூல் உட்கொண்டிருக்கும் அரசியல் ஆகியவற்றோடு அந்நூலுக்கு வழங்கப்படும் முன்னுரையும் மிக முக்கியப் பங்காற்றுவதை பலரும் அறிந்திருப்பதில்லை.

ஆங்கில மொழிச் சூழலில் அதிக முக்கியத்துவம் பெரும் நூலின் ‘முன்னுரை’ பகுதியைப் பிரத்தியேகமாகச் செய்துதர பல நிறுவனங்கள் இயங்கி வருவதை இணையத்தின் ஊடாகவே காணலாம். இந்நிறுவனங்கள் பலதுறை சார்ந்த ஆளுமைகளைப் பயன்படுத்தி நூல்களுக்கு முன்னுரை எழுதுவதை வணிக ரீதியாகச் சாத்தியப்படுத்தி வருகின்றன. ஆயிரக்கணக்கில் குவியும் விண்ணப்பங்களுக்கு மத்தியில் தரமிக்க நூல்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னுரை வழங்கப்படுகின்றது. பின்னர் இவை நூலகங்களுக்கும் புத்தக விநியோகிப்பாளர்களுக்கும் நூல் வடிவில் அனுப்பப்படுகின்றன. இவர்களோடில்லாமல் ‘Book Writing Couch’ எனும் தனிநபர்களும் நூல் உருவாக்கத்தில் ‘முன்னுரை’யின் கட்டுமானம் குறித்துப் பேசுகின்றனர். இத்தனிநபர்கள் பெரும்பாலும் துறைசார் ஆளுமைகளாகவும், முன்னாள் பதிப்பாளர், நூலாசிரியர், எடிட்டர்களாக இருந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

மற்ற மொழிகளில் நூலுக்கு முன்னுரை எழுதும் பாரம்பரியம் பற்றிய தெளிவான வரலாறு இல்லாத நிலையில் தமிழ்ச் சூழலில் நூலுக்கு முன்னுரை எழுதும் மரபு 12ஆம் நூற்றாண்டிலேயே இலக்கணம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதைக் காணலாம். பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலான நன்னூல் சிறப்புப்பாயிரம் எனும் முன்னுரையுடன் அமையப்பெற்றது கவனிக்கத்தக்கதாகும். தொல்காப்பியத்தின் அடியொற்றி வந்த நன்னூலில் முதலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரு பிரிவுகளே இருந்ததாகவும் 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த உரையாசிரியர் மயிலைநாதர் காலத்திற்குப் பின்னரே பாயிரவியல் நன்னூலின் உறுப்பாகக் கொள்ளப்பட்டது என்கிற கருத்தும் நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் கவனித்தாலும்கூட தற்போது கிடைக்கப்பெறும் நன்னூல் பாயிரவியல் பகுதியில் முழுமைபெற்ற ஒரு நூலுக்கான அடிப்படை விதிகளை தெளிவாகவே காணமுடிகிறது. ‘நூலின் இயல்பே நுவலின் ஓர்இரு பாயிரம் தோன்றி’ எனவரும் நன்னூல் சூத்திரம், ‘நூலானது (1) பொது (2) சிறப்பு ஆகிய இருவகைப் பாயிரங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறது.

பாயிரம்

பாயிரம் என்ற சொல்லுக்கு Tamil Lexicon (1986) அகராதி (1) preface, introduction, preamble, prologue – முகவுரை; (2) synopsis, epitome -பொருளடக்கம்; (3) origin, history – வரலாறு என்பதாகப் பொருளுணர்த்துகிறது. ஆக, பாயிரம் என்பதை நூலின் தொடக்கத்தில் அமையும் ஒன்றாக புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நூலுக்கும் இருவகை பாயிரங்கள் அவசியம் என்பதை,

ஆயிரம் முகத்தான்  அகன்றது ஆயினும்,

பாயிரம் இல்லது பனுவல் அன்றே’ (சிறப்புப் பாயிரம்)

எனக் குறிப்பிடுகின்றது. ஆயிரம் செய்திகளை எவ்வளவு விரிவாகப் பேசியிருந்தாலும்nannool பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப்படாது என்பது இதன் பொருளாகும். இதனைத் தொடர்ந்து வரும் சூத்திரத்தில் பாயிரத்தின் சிறப்பைக் குறிப்பிட்டு ‘மாளிகைக்கு ஓவியமும், பெரிய நகரத்திற்குக் கோபுரமும் பெண்ணுக்கு அணிகலன்களும் அழகு சேர்ப்பன. அவற்றைப் போல, நுண்ணிய பொருளைக் கூறும் பாயிரங்களை எவ்வகைப்பட்ட நூல்களுக்கும் முன்னர் வைத்தனர் பெரியோர்’’ என்கிறது நன்னூல்.

பொதுப்பாயிரம் (1) நூலின் தன்மை, (2) நூலாசிரியர், (3) கூறியிருக்கும் முறை, (4) வாசகர் தேவை, (5) படிக்கும் முறை என்பதை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்கிறது நன்னூல். இவ்வகை பாயிரம் எல்லா நூலுக்கும் இயல்பாகவே இருப்பதால் நூலினுள் இல்லாத புறப்பொருளைக் கூறுவது சிறப்புப் பாயிரம் என்று விளக்கப்படுகிறது. (1) நூலாசிரியர் பெயர்,  (2) நூல் வந்த வழி,  (3) நூல் வழங்கும் நாட்டின் எல்லைகள், (4) நூலின் பெயர், (5) நூலின் வகை அல்லது கட்டமைப்பு,  (6) நூல் கூறும் பொருள்,  (7) நூல் யாருக்காகப் படைக்கப்படுகின்றது, (8) நூலால் பெறக்கூடிய பயன் ஆகிய எட்டு செய்திகளும் சிறப்புப் பாயிரத்தின் இலக்கணமாக வரையறுக்கப்படுகிறது.

இவற்றுடன் நூல் எழுதப்பட்ட காலம், வெளியிட்ட இடம், நூலின் நோக்கம் சிறப்புப் பாயிரத்தில் இணைத்துக்கொள்ளத் தகுந்த மேலும் மூன்று அம்சங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவைதான் நூலுக்கு முக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.

இன்றைய நூல் பதிப்புச் சூழலில் நூலாசிரியர் உரை, பதிப்பாசிரியர் உரை என இவ்விரு தரப்பினரும் நூலில் வழங்கக்கூடிய உரைகளை, ஓரளவு பொதுப்பாயிரத்துடன் பொருத்திப் பார்க்க முடிகிறது. நன்னூல் காட்டும் சிறப்புப் பாயிரத்தின் பதினோரு அம்சங்களைக் கூட்டியோ குறைத்தோ எழுதப்படும் முன்னுரை, மதிப்புரை, சிறப்புரை, அணிந்துரைகள் சிறப்புப் பாயிரத்தின் தன்மையை ஒத்துள்ளதை இக்கால நூல்களின்வழி காணலாம். தவிர, உரைமுகம், தோற்றுவாய் ஆகியவற்றின் தன்மைகள் மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதால் அவை கூறியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இவற்றை வகைப்படுத்த முடியும்.

பாயிரம் என்ற சொல்லுக்கு மேலும் பல பெயர்களை நன்னூல் குறிப்பிடுகின்றது. அவற்றை இன்றைய உரை வகைகளுக்கு ஏற்ப வகைப்படுத்திக் காட்டும் முயற்சியாக கீழ்காணும் பட்டியலைக் காணலாம்.

எண் பாயிரத்தின் இதர பெயர்கள் விளக்கம் பாயிர வகை தற்காலச் சூழல்
உரை வழங்குநர் இன்றைய சொல் வழக்கு
1. முகவுரை நூலின் தொடக்கத்தில் சொல்லப்படுவது பொதுப் பாயிரம் நூலாசிரியர் முகவுரை, நுழைவாயில், நூலாசிரியர்உரை, உரைமுகம்,தோற்றுவாய்
2. பதிகம் பல்வகைப் பொருளைத் தொகுத்து சொல்வது சிறப்புப் பாயிரம் பதிப்பாசிரியர் /நூலாசிரியர்/ துறைசார் ஆளுமை பதிப்பாசிரியர் உரை,  நூலாசிரியர் உரை, முன்னுரை/அணிந்துரை
3. அணிந்துரை நூலின் பெருமை முதலியவற்றை விளக்க அணிந்து உரைப்பது சிறப்புப் பாயிரம் துறைசார் ஆளுமை முன்னுரை, அணிந்துரை
4. நூன்முகம் நூலின் தொடக்கத்தில் சொல்லப்படுவது பொதுப் பாயிரம் பதிப்பாசிரியர் முகவுரை, நுழைவாயில், நூலாசிரியர் உரை
5. புறவுரை நூலில் சொல்லப்பட்ட கருத்தல்லாத (நூலோடு தொடர்புடைய) மற்றவற்றைச் சொல்வது சிறப்புப் பாயிரம் துறைசார் ஆளுமை முன்னுரை, அணிந்துரை
6. தந்துரை நூலில் சொல்லப்படாதவற்றைத் தருவது. சிறப்புப் பாயிரம் துறைசார் ஆளுமை முன்னுரை, அணிந்துரை
7. புனைந்துரை நூலின் பெருமை, சிறப்பம்சம் முதலியவற்றை சிறப்பித்துச் (புனைந்து) சொல்வது. சிறப்புப் பாயிரம் / பொதுப் பாயிரம் துறைசார் ஆளுமை முன்னுரை, அணிந்துரை,  சிறப்புரை

நன்னூல் மட்டுமின்றி இன்றைய நவீன நூல் பதிப்பு முறையிலும் நூலுக்கு எழுதப்படும் உரைகள் சில அடிப்படையான வரையறைகளை மிகக் கவனமாக கையாளுகின்றன. நூல் எந்தத் துறை (Field/Subject area) சார்ந்தது என்பதைப் பொறுத்து கீழ்காணும் பிரிவுகளில் நூல்களுக்கு உரைகள் அமைக்கப்படுகின்றன.

  • நூல் அறிமுகம் (Introduction)

-புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றியது

பதிப்பாசிரியர் அல்லது எடிட்டர் எழுதுவது. சுயபதிப்பு என்றால் நூலாசிரியர் எழுதுவார். நூலாசிரியரின் துறைசார்ந்த ஆளுமை, வாசகர்கள் இந்நூலில் எதை வாசிக்கப் போகிறார்கள், இந்த நூலில் என்ன எதிர்பார்க்கலாம் என்கிற விபரங்களைத் தர வேண்டும். இது நூலை வாசகருக்கு அறிமுகம் செய்ய, வாசிப்பதற்கான ஆவலை உண்டாக்கும் வகையில் அமைய வேண்டும்.

(சுய பதிப்பு, புனைவல்லாத நூல்களுக்கு இது அவசியம்)

  • முகவுரை (Preface)

-புத்தகம் உருவாக்கப்பட்ட கதை

நூலாசிரியர்கள் எழுதுவர். நூலாசிரியரின் துறைசார்ந்த ஆளுமை, இந்த நூல் எப்படி, எதனால், யாருக்காக, எந்த வரையறைக்கு உட்பட்டு எழுதப்பட்டது என்ற விபரங்களைத் தர வேண்டும்.

(வரலாறு, நினைவுக் குறிப்பு, குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்களுக்கு இது அவசியம்)

  • முன்னுரை (Foreword)

-ஏன் வாசகர் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற விபரம்

குறிப்பிடத்தக்க துறையின் ஆளுமைகள் இவ்வுரையை எழுதுவர். நூலை முழுமையாக வாசித்து நூலாசிரியரின் தகுதி, நூலின் வரையறை, நூல் கருப்பொருளின் கட்டமைப்பு, உட்பொருள், மறைபொருள், நூல் வாசிப்பால் பெறக்கூடிய நன்மை போன்ற விபரங்களைத் தரவேண்டும். நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் எதுவும் முன்னுரையில் வரக்கூடாது. பதிலாக, புத்தகம் குறித்தான நம்பகத் தன்மையை வாசகர் மனதில் பதிய வைக்க வேண்டும்.

(அனைத்துவகை நூல்களுக்கும் பொருந்தும்)

இம்மூவகை உரைகளே பெருமளவு ஆங்கில, மலாய் மொழி நூல்களில் பரவலாகக் காணக்கூடியவை. தமிழ்ப் புத்தகச் சூழலோடு ஒப்பிட்டால் நூலுடன், நூல் பேசும் துறையுடன், பொருளுடன் தொடர்பற்றவர்களின் ஆசியுரை, அருளாசியுரை, வாழ்த்துரை, தலைமை உரை, ஏற்புரை என்று இன்னதென வகைப்படுத்தப்பட முடியாத மேலும் பலவகை உரைகளும் அதிகம் இடம்பெறுவது கண்கூடு.

imagesபொதுவாக நூல்களை சுய வெளியீடு செய்பவர்கள் நூல் பதிப்புக்கு நன்கொடை வழங்கியவர்கள், நூல் உருவாக்கத்தில் உதவியர்கள் போன்றவர்களின் உரைகளை சேர்ப்பது போல இயக்கங்கள், சங்கங்கள் நூல்களை வெளியீடு செய்யும்போது இயக்கத் தலைவர்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் போன்றவர்களின் உரையை நூலில் இடம்பெறச் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இவ்வாறான உரைகள் எப்போதும் ஒருவித ரெடிமேடான வாழ்த்துடன் பிரச்சாரத் தன்மையையும் பொதுப்படையான பரஸ்பரத் தன்மையையும் கொண்டிருக்கும். அவற்றை வேறெந்தப் புத்தகங்களுக்குள் வைத்தாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பொத்தாம் பொதுவாக அமைந்திருக்கும். பத்து புத்தகங்களுக்கு ஒரே விதமான வாழ்த்துரை, தலைமையுரை, ஆசியுரைகள் இருப்பதெல்லாம் இன்றைய புத்தகங்களில் காணக்கூடிய அதிகப்படியான கேலிக்கூத்துகள். இந்த உரைகளினால் உரை வழங்கியவருக்கு விளம்பரம், பதிப்பாளர்/நூலாசியருக்கும் அடுத்தமுறை நன்கொடை பெற, ஆசி பெற வாய்ப்பு என்பதைக் கடந்து வாசகனுக்கோ நூலுக்கோ எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

எண்பது பக்க நூலில் பத்து விழுக்காட்டு பக்கங்களில் உரைகளையும் படங்களையும் மட்டுமே பூசி மொழுகும் சூழல் உருவாகி விட்டிருக்கும் நிலையில் நூலுக்கு முன்னுரை எந்த அளவுக்கு முக்கியம் என்பதே மழுங்கடிக்கப்பட்டு விட்டதுதான் இதில் வருந்தத்தக்க உண்மையாகும்.

முன்னுரையின் தேவை

  1. வாசகனின் தேடலை எளிமையாக்கும்

பல நூறு நூல்களுக்கு மத்தியில் எல்லா நூலையும் படித்துப் பார்த்து வாங்க வாய்ப்பிருக்காது. முன்னுரை பகுதியை படிப்பதன்வழி நூல் பற்றிய அடிப்படையான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

உதாரணம் : குமரி நில நீட்சி என்ற நூலுக்கு எஸ்.வி. ராஜதுரை எழுதிய முன்னுரை நூலின் சாரத்தை வாசகனுக்கு மிகச்சுருக்கமாக தெளிவாகச் சொல்ல துணை புரிகிறது. நூலின் நம்பகத்தன்மை பெருகுகிறது.

  1. நூலின் தனித்தன்மையை நிறுவும்

பலதரப்பட்ட நூல்களுக்கு மத்தியில் குறிப்பாக ஏன் இந்த நூலை வாங்க வேண்டும் என்பதை விளக்கும். நூல் எடுத்துக்கொண்டிருக்கும் துறையில் கவனிக்கத்தக்க, தவிர்க்க முடியாத, பயனுள்ள ஒரு நூல் என்பதைப் பல்வேறு கோணங்களிலிருந்து அணுகி நிற்கும்.

உதாரணம் : நாடு விட்டு நாடு. இதற்கு முன்னுரை வழங்கியிருக்கும் முனைவர் கே.ந. முத்துக்குமாரசுவாமி என்பவர் இந்நூல் வாசிக்கத் தகுந்ததென நிறுவ “இது குடும்ப வரலாறு மட்டுமன்று; சென்ற நூற்றாண்டில் தமிழகத்தினின்றும் மலாயாவுக்குக் குடியேறிய கொங்கு வேளாள சமூகத்தின் வரலாறுமாகும். “ என்று குறிப்பிடுகிறார். தொடர்ந்து கொங்கு வேளாளர் சமூகத்தின் சமூக பண்பாடு, தொழில் என பேசி அச்சமூகம் எப்போதெல்லாம் நசுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தொட்டு இறுதியில் மிகச்சிறிய கதைச் சுருக்கத்தையும் கொடுத்துள்ளார். தன்வரலாற்று நூலான ‘நாடு விட்டு நாடு’ எனும் இந்நூலை வாசிப்பதன்வழி ஒரு சமூக வரலாற்றை தனிமனித வாழ்வோடு அணுகிச் சென்று பார்க்க முடியும் என்பதை இந்நூல் முன்னுரை தெளிவாக உணர்த்துகிறது.

  1. நூலின் தரத்தை வாசகனின் முன் நிறுத்தும்

ஆளுமைகள் தங்கள் படைப்பில் கடைபிடிக்கும் அத்தனை கறார் தன்மையையும் தான் முன்னுரை வழங்கும் நூலுக்கும் இருப்பதை உறுதி செய்தபின் முன்னுரை எழுதுவதை ஒப்புக்கொள்வது இயல்பு. இப்படியானவர்கள் எழுதும் முன்னுரை நூலின் தரத்தை அழுத்திப் பிடிக்கும் தன்மையிலானவை.

உதாரணம் : மண்டை ஓடி. எந்த மொழியில், எந்த அளவில் சொல்ல வேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர் நூலாசிரியர் என்று இத்தொகுப்பு சொல்கிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட நல்ல சிறுகதை தொகுப்புகளின் பட்டியலில் ‘மண்டை ஓடி’யும் இடம்பெறும்” என எழுத்தார் இமையம் எழுதியிருக்கும் அணிந்துரை இந்நூலின் தரத்தை வாசகனின் கண்முன் கொண்டுவரும் தன்மை கொண்டிருக்கிறது. கதை சொல்லும் முறை, கதாபாத்திர வார்ப்பு என இந்நூலில் உள்ள அனைத்து கதைகளைத் தொட்டும் அவர் அமைத்திருக்கும் விமர்சனம் நூலுக்கு நல்ல அறிமுகமாகவும் இருப்பது கவனிக்கத் தக்கது.

  1. நேர்மையான விளம்பரமாகும்

இந்த நூலின் பலம், பலவீனம் எது? இதை வாசிப்பதால் என்ன பயன்? நம் வாசிப்பு பசியை/தேடலை பூர்த்தி செய்யுமா? புதிய சிந்தனைத் தளத்தை நோக்கி நகர்த்திச் செல்லுமா? போன்ற அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கும்.

உதாரண நூல் : குவர்னிகா. இந்நூலின் அணிந்துரை “யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் இத்தொகுப்பு நூல் தன்னுள் கொண்டுள்ளது” என்பதாக அமைந்துள்ளது. மேலும் குவர்னிகா எனும் இலக்கியச் சந்திப்பின் தோற்றம், பாதை, இலக்கியம் வரலாற்றின் உப வரலாறு என 808 பக்கங்களைக் கொண்ட நூல் “பல்வேறு கருத்துநிலைகளில் உள்ளவர்களை உள் இணைத்து பன்னிரண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட பனுவல்களின் பெருந்தொகுப்பு” என முன்னிலைப்படுத்தப்படுகிறது. வெறும் இரண்டே பக்கங்களில் அமைந்திருக்கும் அணிந்துரை இந்நூலிலுள்ள 808 பக்கங்களும் வாசிக்க வேண்டியவை என விளம்பரம் செய்கின்றன.

  1. நூலாசிரியர் மீதான நம்பகத்தன்மையை நிறுவும்

இந்த நூலை எழுத நூலாசிரியருக்கு எல்லாத் தகுதியும் உண்டென்று நிறுவும். நூலாசிரியரின் தனித்தன்மை, தொடர்ந்து வாசிக்கத் தக்கவர் என அடையாளம் காட்டும்.

உதாரண நூல் : நினைவுச் சின்னம். சமீப கால வரலாற்றை நாவலாக்குவது மிகவும் சிரமம். சில வேளைகளில் ஆபத்தும்கூட. உண்மைகளையும் கற்பனையையும் கலந்து எழுதப்பட்ட நூல் இந்த நினைவுச் சின்னம். இத்தைகைய இலக்கிய மரபுக்கு இந்நாட்டில் இந்நாவலே முன்னோடியாக விளங்குகின்றது. இத்தகைய நாவல் எழுதுவது எவ்வளவு சிரமம் என்பது வரலாற்றுத் துறையில் ஆய்வுபுரிந்துள்ள என் போன்றவர்களுக்கே புரியும் என நூலின் முன்னுரையில் டாக்டர் சி. ஜெயபாரதி என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். Historical fiction வகையைச் சார்ந்த இந்நூலை தமிழர் சார்ந்த வரலாற்று ஆய்வுத் துறையில் முக்கியமானவராகக் கருதப்படும் ஒருவர் கொடுத்திருக்கும் எழுத்துப்பூர்வமான அங்கீகாரம் புனைவு உலகில் சஞ்சரிக்கும் நூலாசிரியரின் எழுத்துமீது நம்பகத்தன்மையை அதிகரிக்கவே செய்யும் என்பதை இதன்வழி புரிந்து கொள்ளலாம்.

  1. புதிய வாசக பரப்பை அடையாளம் காணும்

துறைசார் ஆளுமைகளிடம் முன்னுரை பெறும்போது அந்த ஆளுமையின் வாசகர்களும் இந்நூலை நாடி வாசிக்கும் வாய்ப்பை உருவாகிறது.

உதாரண நூல் : வேரும் வாழ்வும். “மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை, கல்வி போன்ற தராதரத்தில்தான் அதன் இலக்கியமும் அடங்கும். உலகப் பார்வையில் நமது மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை வளமானதாக நினைக்கப்படுகிறது. நமக்கென்ற வாழ்க்கையில் வளத்தைவிட வலிகளே அதிகம். இவற்றை இலக்கியத்தில் பதிவு செய்யவேண்டிய கடமை எழுத்தாளர்களுக்கும்-பத்திரிக்கைகளுக்கும் உண்டு! இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் சிலவற்றை நானே உரிமையோடு எடுத்து வரலாற்றில் அவர்களும் பேசப்படும் காலம் வரும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்துள்ளேன்.” என்பதாக தொகுப்பாசிரியர் எழுதியிருக்கும் பதிப்புரை பகுதி, இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் கதைகளின் தன்மை குறித்துச் சொல்கிறது. மேலும் அயலக இலக்கியச் சூழலுக்கு மலேசிய இலக்கியத்தை அறிமுகம் செய்யவும் இருவழித் தொடர்பாடலை ஏற்படுத்தி தக்க வைப்பதில் தொடர்ந்தியங்கிய சை.பீர்முகம்மது என்பரின் எழுத்து, பதிப்பு துறைசார் ஆளுமை இந்நூலுக்கான வாசகரை எளிதில் சென்றடையும் என்பது தெளிவு.

இவை ஒருபுறமிருக்க, முன்னுரை எழுதுபவரின் தரமும் நூலின் தரத்தை உயர்த்திப் பிடிக்கும் என்பதுதான் ஒரு நூலில் முன்னுரை இடம்பெறுவதின் மற்றுமொரு கவனிக்கத் தக்க விடயமாகும்.

முன்னுரை எழுதத் தகுதியானவர் யார்?

நன்னூலின் சிறப்புப் பாயிரம் விவரிக்கும் அம்சங்களும் இன்றைய நவீன புத்தகப் பதிப்புச் சூழலில் Foreword என்றழைக்கப்படும் முன்னுரைப் பகுதியும் ஒரே தன்மையிலானவையே. இவை இரண்டுமே நூலாசிரியரின் தரம், நூலின் கட்டமைப்பு, உட்பொருள், மறைபொருள், நோக்கம், நூல் பேசாதவைகள் போன்ற அம்சங்களையே பேச விழைகின்றன. அவ்வகையில் சிறப்புப் பாயிரத்தை எழுதத் தகுதியானவர் யார் என்பதை நன்னூலே தெளிவாக விவரிக்கிறது.

‘தன்ஆ சிரியன் தன்னொடு கற்றோன்

தன்மா ணாக்கன் தகுமுரை காரன் என்று

இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே’

தனக்குக் கற்றுக்கொடுத்த ஆசான், தன்னுடன் இணைந்து கற்றவன், தன்னுடைய மாணவன், தான் எழுதிய நூலுக்கு உரை எழுதும் தகுதி உடையவன் முன்னுரை வழங்குவதற்குத் தகுதியானவன் என்கிறது இச்சூத்திரம். தரத்தை மட்டும் முன்னிலைப்படுத்தும் இன்றைய நவீன நூல்பதிப்புத் துறை மிக அழுத்தமாக துறைசார் ஆளுமையின் முன்னுரையே மிகச் சரியான தேர்வென்கிறது. மேலும் நன்கு ஆராய்ந்து, இரத்தினச் சுருக்கமாக, வாசகனை வசப்படுத்தும் வலுவான முன்னுரைகள் ஒரு நூலுக்குக் கிடைக்கப்பெறும் அங்கீகாரம் என்கிறது. இதில் மற்றுமொரு நுட்பமான விடயமும் அடங்கியுள்ளது. துறைசார் ஆளுமைகள் அன்றி குறிப்பிட்ட துறையில் பிரபலம், செல்வாக்கு மிக்கவர்களின் மூலம் பெறப்படும் உரைகளை காலம் தாழ்த்தியேனும் வாசகன் அடையாளம் கண்டுகொள்வான்.

மேற்கத்தியச் சூழலில் புனைவல்லாத நூல்களுக்கு மட்டுமே அதிக அளவில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னுரை எழுதும் முறை, காலத்தின் தேவைக்கேற்ப அனைத்து வகை நூல்களுக்கும் வரவேற்கப்படுகின்றது. அச்சுத் துறையின் அபரிமித வளர்ச்சி இதற்கு மிகப் பெரிய காரணியாகும். சான்றாக நூல் பதிப்பு, நூல் வடிவமைப்பு, விநியோகம் ஆகிய துறைகளில் முன்னணி வகிக்கும் Bowker நிறுவனம் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி அமெரிக்காவில் 2007 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் குறையாத நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன. UNESCO அறிக்கையின்படி 2013ஆம் ஆண்டு இந்தியாவில் இந்திய மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட நூல்களின் மொத்த எண்ணிக்கை நாற்பத்தைந்தாயிரத்தைத் தாண்டும். இணையம் வழி வாசிப்பு பெருகிவிட்ட சூழலிலும் அச்சு நூல் பதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருப்பதை இவ்விரு சான்றுகள்வழி காண முடிகிறது. சூழல் இவ்வாறு இருக்க, எல்லா நூல்களும் விற்பனையாகின்றனவா எனக் கேட்டால் பதிப்பிக்கப்படும் நூல் எண்ணிக்கையில் 10 விழுக்காட்டு நூல்களாவது விற்பனையாகுமா என்பது கேள்விக் குறியே. புனைவு அல்லாத நூல்கள் ஆண்டொன்றுக்கு 250 பிரதிகளுக்குள்ளாகவே விற்பனையாவதாகவும் இவ்வகை நூல்கள் தங்களது ஆயுட்காலம் முழுக்க 2000 பிரதிகள் விற்றுத் தீர்வதே ஆச்சரியம் என்கிறது Bowker நிறுவனத்தின் அறிக்கை. தமிழ்மொழியில் அச்சாகும் நூல்களின் நிலையும் ஏறக்குறைய இப்படியாகவே இருப்பதை மறுக்க முடியாது. நூல் விற்பனையைப் பொருத்தமட்டில் விளம்பரங்களின் ஆயுட்காலம் மிகக் குறைவே. ஒரு எளிய வாசகனிடம் நூல் எல்லாக் காலங்களிலும் சென்று சேர அதன் ஆயுட்காலம் முழுவதும் நூலுக்கு எழுதப்படும் முன்னுரை மிக அவசியமாகிறது. ஒரு நூலை உருவாக்க எடுத்துக்கொள்ளும் கவனமும் சிரத்தையும் அதற்கான முன்னுரை பெறுவதிலும் இருப்பது ஒவ்வொரு நூலாசிரியரும், பதிப்பாளரும் கருத்தில்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

துறைசார் ஆளுமைகள் அல்லது அதற்கு மாற்றான ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்ட போலி அறிவுஜீவிகள் ஆகியோருக்கு இதன் தேவை இல்லாமல் இருப்பதையும் இவ்விடம் மறுப்பதற்கில்லை.

துணைநூல் பட்டியல்

  1. சோம. இளவரசு. (2013). நன்னூல் எழுத்ததிகாரம். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
  2. எஸ். கே. அக்னிபுத்ரன். (2008). புதிய நோக்கில் நன்னூல் காண்டிகை உரை. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
  3. ச. திருஞானசம்பந்தம். (2006). பவணந்தி முனிவரின் நன்னூல்-எழுத்ததிகாரம் : கண்டிகை உரை. திருவையாறு: கதிர் பதிப்பகம்.
  4. இரா. சீனிவாசன் & வே. கருணாநிதி. (1999). ஐந்திலக்கணம். சென்னை: தி பார்க்கர்.
  5. Tamil Lexicon. Vol V. (1986). Madras: University of Madras.
  6. தமிழநம்பி. (30 ஜூலை, 2009). பாயிரம் இல்லையேல் அது நூல் இல்லை. Retrieved from http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=10290908&week=oct2909
    Jack Lyon. (16 மார்ச், 2015). What is the difference between a preface, a forward and an introduction?. Retrieved from http://www.writersandeditors.com/preface__foreword__or_introduction__57375.html

1 comment for “முன்னுரை

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...