கவிஞர் சக்திஜோதியின் கவிதையுலகம்

sakthi 1பொதுவாக எந்தக் கவிஞரையும் யாரும் நிராகரித்துவிட முடியாது. ஏதாவது ஒரு சமயத்தில் அசாத்தியமான கவிதையை எழுதியவர்களாக, எழுதக்கூடியவர்களாகவே எல்லாக் கவிஞர்களும் இருக்கிறார்கள். ஏகப்பட்ட தொகுப்புகள் ஆண்டுதோறும் வெளிவந்தபடி இருக்கின்றன. அவற்றுக்கு தவறாமல் முன்னுரைகளும் மதிப்புரைகளும் தாராளமாகக் கிடைத்து விடுகின்றன. கவிதைகளை விமர்சிக்கத்தான் ஆளைக் காணமுடிவதில்லை. இன்றைய கவிதை இயக்கச் சூழலில் இது மிகப்பெரிய குறையாக இருக்கிறது.

கவிஞர் சக்திஜோதி 2008-லிருந்து 2016 வரை அவரது முகநூல் பக்கத் தகவல்படி 10 கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். வருடத்திற்கு ஒரு தொகுப்பு வீதம் வந்துகொண்டிருந்தது 2014 மற்றும் 2016-ல் இரண்டு தொகுப்புகள். என்னிடம் அவரது 2 முதல் 6 வரையிலான ஐந்து தொகுப்புகள் உள்ளன. முதல் தொகுப்பு என்னிடம் இல்லாதது துரதிர்ஷ்டமே. முதல் ஐந்து தொகுப்புகளின் தலைப்பும் முறையே நிலம், கடல், ஆகாயம், காற்று, தீ என்று வருகின்றன. தலைப்புதான் அப்படி தேர்வு செய்திருக்கிறாரே தவிர தொகுப்புகளில் அப்படி பாகுபாடு பார்க்க முடியவில்லை.

இவரது கவிதைகளில் பெரும்பாலும் உடல்-காதல்-காமம் இவையே கவிதையாடலாக உள்ளன. இந்த ஐந்து தொகுப்புகளில் (ஐந்து வருடங்களில்?) உள்ள வித்தியாசம் என்னவென்று பார்த்தால் காதலிலிருந்து காமத்துக்கான நகர்தலைச் சொல்லலாம். பொதுவான படிமமாக நிலம் பெண்ணைக் குறிப்பதாகவும், மழை ஆண்மையின் குறியீடாகவும் வருகின்றன. தொடர்ந்து நிலமும் மழையுமே குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது அயர்ச்சியூட்டுகிறது. சக்திஜோதி கவிதைகளின் குரல் குரலுயர்த்தாமல் கிசுகிசுப்பாய் ஒலிப்பவை. ஐந்து தொகுப்புகளையும் காலக்கிரமமாகப் பார்க்கையில் இரண்டாவது தொகுப்பில் காணும் கவிதை நயம் தேய்ந்து ஒருவித விட்டேத்தியான அலட்சிய மனோபாவத்துடன் பின் வந்த கவிதைகள் எழுதப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.

கடலோடு இசைத்தல் (2009) – இரண்டாவது தொகுப்பு

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைமொழி வார்த்தைச்செறிவு கொண்டு அத்தனை வார்த்தை விரயமில்லாமல் வந்துள்ளன. இரண்டு கவிதைகள் இதில் குறிப்பிடத்தக்கவை. 1. தடைகள் 2. மழையானவன்.

தடைகள்

இந்தச் சுவரின் பொருள் என்னsakthi 4

சுவரற்ற வீடு நிலந்தானே

காற்றையோ

மேகங்களையோ

மேலும்

மழையைக் குறை சொல்லிவிட முடியாது

உயர்ந்த மலைத்தொடரையோ

கடலின் ஆர்ப்பரிக்கும் அலையையோ

குறை சொல்லிவிட இயலாது

எதைக் கொண்டு எழுப்பினோம்

நம்மிடையேயான சுவரினை

நிச்சயம் மணல் சுண்ணாம்பு இரும்பு மரம் என்று

எதுவுமிருக்க முடியாது

மனசிலிருக்கும் வெறுப்பு

நிலமெங்கும் எழுப்புகிறது ஒரு சுவரினை

கட்டப்படுகிற சுவர்களுக்கு

முன் மாதிரியைத் தந்தவர்கள் யார்

கடத்த முடியாத உணர்வுகளை

சேகரிக்கவா சுவர்களை எழுப்பி வைத்துள்ளார்கள்

சுவர்கள் தன் மேல் விழும் ஒவ்வொன்றையும்

திருப்பி அனுப்புகிறது

அதனதன் பிறப்பிடம் நோக்கி

இந்தக் கவிதை மனதில் நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் பிரித்துவைத்திருக்கும் அத்தனை தடைகளையும் பற்றி மிக அழகாகச் சொல்லிவிடுகிறது. ஒரு தனிமனிதன் மட்டும் உருவாக்கிக்கொள்ளும் மனத்தடைகள்தான் எத்தனை. இப்படியே பார்த்தால் இந்தப் புவியெங்கும் எத்தனை அடையாளங்கள். அடையாளங்களே தடைகளாகவும் ஆகிவிடுகின்றன.

மழையானவன்

மழையை

தன் உடல் திறந்து பருகத் தொடங்குகிற

நிலத்தை

பூச்செடியினை நடும்போது

உணர்கிறாள் ஒரு பெண்

மெல்ல வலுக்கிறது

சாரல்

தன்மேல் படரும்

ஆண் வாசமென்று

வெட்கத்துடன் மலர்கிறது நிலம்

நிலமெங்கும் பாய்ந்தோடுகிறது

மழைநீர்

அப்போது

அவள்

தன் உடல் முழுவதும்

ஒரு கனவைச் சூடிக்கொள்கிறாள்

விதைகள் முளைவிடுகின்றன

பூச்செடிகளில் சில மொட்டரும்புகின்றன

நிலமெங்கும்

வண்ணத்துப் பூச்சிகள் வந்தமருகின்றன

கூடவே

மழை நின்றதும்

நிலம் தன் உடலை மூடிக்கொள்ளும்

அவள்

தன் உடல் திறந்து பருகுவாள்

மழையென்னும் பேராண்மையை

பின்பு

மழையே தானாகிறாள்

மழை – மழையின்றி உலகில்லை. மழையே உயிர். மழையோடு கலத்தலே உயிர்ப்பு, விருத்தி. புணர்ச்சியை, புணர்ச்சிக்குப் பின்னான கணங்களை நிலம், மழை என்ற படிமங்களில் அழகாகக் கையாண்டிருப்பதால் இது குறிப்பிடத்தக்க கவிதையாய் இருக்கிறது.

sakthi 3மூன்று கவிதைகள் பயண அனுபவங்களை வைத்து எழுதப்பட்டுள்ளன (புராதனக் கனவு, உறைந்த காலம் மற்றும் சீனப் பெருஞ்சுவர்).  இவை ஒரு பயணக்கட்டுரையின் ஒரு பத்தி என்றால் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எவ்விதத்திலும் கவிதையாகாதவை. இக்கவிதை வரிகள் வலிந்து திணிக்கப்பட்டவையாக, செயற்கை உணர்வுகளோடு நிற்கின்றன. நிறைய கவிதைகள் வடிவரீதியாக மட்டும் கவிதையாகத் தோற்றமளிக்கின்றன. அதாவது, கவிஞர் கவிதை வழியாகத்தான் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்று முடிவெடுத்து எல்லா விசயங்களையும் கவிதை என்ற பைக்குள் அடைத்துத் தருகிறார். உதாரணமாக, ‘கேள்வியும் பதிலும்’ என்ற தலைப்பிட்ட கவிதையை எடுத்துக் கொள்வோம். தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் கேள்விகளும் பதில்களும்தான் கவிதை. இந்தக் கேள்விகளும் பதில்களும் ஒருவகை அதீதத்தன்மையோடு, இலக்கியப்படுத்துவதற்கான மெனக்கிடல்களோடு மிக செயற்கையாக உள்ளன.

எனக்கான ஆகாயம் (2010) – மூன்றாவது தொகுப்பு

இந்தத் தொகுப்பில், ‘சிறைமீட்டல்’ என்ற கவிதை பற்றிக் குறிப்பிடவேண்டும். பெண்ணின் புற உலகு சார்ந்த அச்சத்தையும், பெண் மீதான சமூக அடக்குமுறைகளையும் அழகாய்ப் பதிவு செய்கிறது.

சிறைமீட்டல்

மண்கலயங்களின் சிறிய துவாரங்களின் வழிsakthi 5

தங்கள் உலகை

மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தன சில பறவைகள்

மஞ்சள்

பச்சை

நீலம்

இன்னும் பல வண்ணங்களில்

கூண்டினுள் பறவைகள்

காப்பிச்செடியின்

காய்ந்த கிளைகளில்

காதலை பரிமாறிக்கொண்டிருந்தன

வெயிலும்

பனியும்

கம்பிகளைக் கடந்து உள்நுழைகிறது

கூண்டுக் கம்பிகள்

மண்கலயங்கள்

காப்பிக் கிளைகள்

பறவைகளை

பருந்துகளிடமிருந்து பாதுகாக்கின்றன

பறவைகளின் இருப்பினை

வாசனையால் உணர்ந்துகொள்ளும் பூனைகள்

எங்கிருந்த போதிலும்

அவைகளை அச்சப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன

உயிரின் வாதையை படபடக்கும் சிறகுகள்

அறிவதில்லை

ஒருபோதும் கூண்டுப் பறவையை

பூனையால் பிடித்துவிட இயலாதென்பதை

//பறவைகளின் இருப்பினை வாசனையால் உணர்ந்துகொள்ளும் பூனைகள் எங்கிருந்த போதிலும் அவைகளை அச்சப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன// என்ற வரிகள் பெண் கொள்ளும் இயல்பான பதற்றத்தையும், ஜாக்கிரதையுணர்வையும் உணர்த்தி விடுகிறது.

‘மழைக்குப் பிறகு’ மற்றும் ‘இடைவெளி’ என்ற தலைப்பிலான கவிதைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஏனைய கவிதைகள் வெறும் சொற்களாக நிற்கின்றன. ‘காளான் பூக்கும் பருவம்’ என்ற கவிதை வெறுமனே அகநானூற்றுப் பாடலை பிரதி செய்கிறது. இதில் கவிஞர் செய்தது ஒன்றுமில்லை. ‘நிலாக்காலம்’ என்ற தலைப்பிலான கவிதை ‘இரண்டு நிலா தெரியும் இரவுகள்’ என்ற கவிதையின் பாதியை எடுத்து கொஞ்சமே கொஞ்சம் மாற்றி தனிக்கவிதையாக வந்திருக்கிறது. இவரிடம் சங்கப்பாடல்களின் ‘தாக்கம்’ அதிகம் இருப்பது கண்கூடு. உதாரணத்திற்கு, ‘அதிகாலைச் சூரியன் வருகையில்’ என்ற கவிதையில் ஒரு வரி: “என்னுடல் வெளிறி ஒளியிழந்து போக உன் வருகை நிகழாத என் வாசல் போதும்”.

காற்றில் மிதக்கும் நீலம் (2011) – நான்காவது தொகுப்பு

இந்தத் தொகுப்பில் 64 கவிதைகள் உள்ளன. இதில் சில கவிதைகளின் ஆரம்ப வரிகள் கீழே:

  1. காய்ந்த கிளைகளைச் சேர்த்து தீயிடுகிறேன்
  2. பாலைநிலத்தை கடந்து கொண்டிருக்கிறேன்
  3. ஜெருசலத்து நகரின் வீதியில் கல்வாரி மணல்பாதையில் நடந்து கொண்டிருந்தேன்
  4. ஆயிரம் ஆயிரம் சொற்களை வாசித்திருக்கிறேன்
  5. கோடைமழைக்குப் பிந்திய இந்த அதிகாலையில் வாகை மரத்தடியில் நிற்கிறேன்
  6. நதிக்கரையில் தனித்து விடப்பட்ட குடத்தைப் பார்க்கிறேன்
  7. உன்னை ஓவியமாக்க முயல்கிறேன்
  8. ஒவ்வொரு மாதமும் மூன்று நாடகளுக்குள் ஊதியத்தை எதிர்பார்த்து காத்திருப்பேன்

இந்த Running commentary வகைத் தொடக்கங்கள் உள்ள கவிதைகள் எல்லாமே கவிதைக்கான பாவனைகளை மட்டும் கொண்டு முதிர்ச்சியின்றி எழுதப்பட்டிருக்கின்றன.

நினைவெனும் பெருவெளி அற்புதமாய் வந்திருக்க வேண்டியது. தேவையற்ற வார்த்தை விரயங்களால் கவிதை ஒளிந்துகொண்டது.

நினைவெனும் பெருவெளி

பனிக்கால வெயில்

உன் நினைவுகளிலிருந்து எழுப்புகிறது என்னை

பூக்களுக்கு நிறத்தைத் தூவியபடி நகர்கிறது வெயில்.

கொடியது

இப்பனி அல்ல

பனிக்காலத்தில் வரும்

உன் நினைவுகள்

அந்த நினைவுகள் அக்கினி காலத்து சூரிய ஒளியைப் போல

சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றன

பறவைகளை

கோடையில் தண்ணீருக்கென அலையச் செய்வதுபோல

பனியிலிருந்தோ

அந்தக் காலத்தின் துயரம் மிகுந்த சம்பவங்களிலிருந்தோ

விடுபட அலைகிறேன்

அந்தப் பருவம் முழுக்க

வெற்றுப் பாதங்களோடு

பளிங்குக் கற்களை மிதித்து நடந்து செல்கிறேன்

நேற்றிரவு

நீ நடந்து சென்ற பாதை

அனலெனச் சுட்டெரிக்கிறது

கடந்தோ

மிதித்தோ

செல்வது எப்படியெனத் தயங்குகிறேன்

என் முன் விரிந்திருக்கிறது

உன் நினைவெனும் பெருவெளி

இந்தக் கவிதையில் “கொடியது” என்பதில் ஆரம்பித்து “மிதித்து நடந்து செல்கிறேன்” வரை வெட்டிவிடலாம். இந்த ஒவ்வொன்றையும் நீட்டி முழக்கி, பொருள் விளக்கம், தெளிவுரை எல்லாம் சொல்வது ஆயாசமூட்டுகிறது. இந்தமாதிரி கவிதைகளில் மனுஷ்யபுத்திரனின் பாதிப்பைக் காண்கிறேன். (மேலும் உதாரணங்களுக்கு காலடியின் நீரூற்று, காட்டுத் தீ, நிலா முற்றம், இருவேறு வாசனைகளுள்ள மலர்)

இந்தத் தொகுப்பிலும் நான்கு ஜெருசலம் பயணக் குறிப்புக் கவிதைகள். இவையும் முந்திய தொகுப்பைப் போலவே செயற்கையாக நிற்கின்றன. (ஒலிவ மரப்பெண் கவிதையைத் தவிர). சில கவிதைகளில் எடுத்தாளும் உவமைகள் பொருளோடு பொருந்தாமல் உள்ளன. உதாரணத்திற்கு நெருப்பு என்ற கவிதை

“காய்ந்த கிளைகளைச் சேர்த்து

தீயிடுகிறேன்

எரிந்தடங்குகிறது

பூந்தோட்டத்தைக் கடக்கிற பொழுதை

கணக்கிட்டு காத்திருந்த

நேற்றைய நினைவுகள்

அதிகாலை மார்கழியில்

குளிர்காயும்

சிறுமிகளுடன் சேர்ந்து கொள்கிறேன்

காய்ந்த கிளைகள்

தன் பட்டைகள் வெடிக்க எரிகிறது

கூடவே

பற்றியெறிவது

மலராத சில பூக்களும்தான்

காய்ந்த கிளையில் இருந்த மலராத பூக்கள் குறித்து கவிஞருக்குத்தான் வெளிச்சம். கவிதை சொல்லவரும் உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கையாண்ட வரிகள் தவறு. முதிர்ச்சியற்ற, செயற்கைத்தனம் மிகுந்த வரி என்பதைத்தாண்டி இதை படிமமாகப் பார்க்க முடியாது. Text, Subtext இரண்டும் இயைந்து வரவேண்டும். சொல்லப்படும் படிமம் இயல்பு வாழ்க்கையோடு ஒத்ததாக அர்த்தப் பிறழ்வின்றி இருக்க வேண்டும்.

நிறையக் கவிதைகளில் படிமங்கள் சரிவர அமையாமலிருக்கின்றன. உதாரணத்திற்கு கோடைகால ஆற்றங்கரையில் என்ற கவிதையில் “பாசிகள் மிதக்கும் நீர்ச்சுழலை விலக்கியபடி மீன்கள் நீந்துகின்றன” என்ற வரியை எடுத்துக் கொள்வோம். நீர்ச்சுழல் என்பது அதிவேகத்துடன் உள்ளே உள்ளே என்று இழுத்துச்செல்லும் சுழல். தீவிர இயக்கத்திலிருக்கும் சுழலில் எப்படி பாசியிருக்கும்? அங்கு மீன்கள் நீந்துமா?

அதேபோல மணலில் அலையும் தனிமை என்ற கவிதையிலும் இதே குளறுபடிதான்.

பாலைநிலத்தை கடந்து கொண்டிருக்கிறேன்

பெயரறியாத விலங்குகளின் அசைவுகள்

பறவைகளின் சிறகடிப்புகள்

தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அகன்ற நிலவெளியை

நிலவு நிறைத்துக் கொண்டிருக்க

காட்டுச் செடிகளின் நிழல்

இருண்மையை கவிழ்த்துகிறது மனதில்…//

மேலேயுள்ள வரிகளில் உள்ள பிரச்சினை என்ன? 1) இந்த வந்துகொண்டிருக்கிறேன், செய்துகொண்டிருக்கிறேன் என்பதை இவர் அடிக்கடி முதல்வரியாகப் பயன்படுத்துகிறார். இது ஒரு மோசமான யுக்தி. 2) பாலைநிலத்தில் நடந்துகொண்டிருக்கையில் காட்டுச்செடி எங்கிருந்து வந்தது? முதல் தொகுப்பில் என்றால்கூட இந்தக் குறைகளை மன்னிக்கலாம். நான்காவது தொகுப்பு இது. இரண்டாவது தொகுப்பில் இருந்த இறுக்கமும், செறிவும் போய் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதுபோல் எழுதப்பட்டிருக்கின்றன.

sakthi 2‘நாட்டியமாடும் நாள்’ என்ற கவிதை நாட்டியத்திற்குத் தயாராகி மேடையேறும் சிறுமியைப் பற்றிச் சொல்கிறது. ஆடைமாற்றித் தயாராகி மேடையேறுகையில் அந்தத் தாளகதிக்குள் அவள் சென்றுவிடுவதாக முடிகிறது. இதில் தான் என்பது கடந்து இன்னொருவரை அணுகிக் காணும் பார்வை தெரிகிறது. ஆனால் கவிதையாகவில்லை. இந்தத் தொகுப்பிலும் உடல்/காதல்/காமம் குறித்த கவிதைகள் நிறையவே காணப்படுகின்றன. ஒருசில நன்றாக வந்திருக்கின்றன. பொதுவாகக் கையாளும் நிலம்/மழை என்ற குறியீடுகள் அலுப்பூட்டுகின்றன. இந்தத் தொடர் படிமத்தை கற்பனை வறட்சியாகவே பார்க்கிறேன். இந்தத் தொகுப்பில், ‘ஒலிவ மரப்பெண்’,  ‘என்னைக் கடக்கும் கங்கை’ மற்றும் ‘நினைவெனும் பெருவெளி’ ஆகியவை பொருட்படுத்தத்தக்க அளவில் உள்ளன.

தீ உறங்கும் காடு (2012) – ஐந்தாவது தொகுப்பு

இந்தத் தொகுப்பில் 65 கவிதைகள். இதில், ‘ஊஞ்சலாடும் ஈரம்’ என்ற கவிதை காமத்தை உள்நோக்கிப் பார்க்கும் பார்வையோடு அழகாக வந்திருக்கிறது. ஈரம் என்பதை அன்பு என்றும் பொருள்கொள்ள முடிகிறது.

இந்த நிலம்

இப்போது

இப்படியென்று

எவருக்கும் புரிவதில்லை

பருத்திப்பூக்கள் வெடிக்கும் நிலத்தில்

வாழை காய்த்துக் குலுங்கும் நிலத்தில்

எத்தனை வெடிப்புகள் இருந்தபோதிலும்

சிறுமழை

கனமழை எதுவாகிலும்

ஈரத்தால் அத்தனை நெகிழ்ந்து போகும்

நிலத்தின் உட்பரப்பினை நெகிழச்செய்வது எது

உண்மையில் நனைதலில் நெகிழ்வது அகமா புறமா

நீரில் மிதந்து கொண்டிருக்கும்

பரந்து விரிந்த இந்நிலம்

செழித்திருக்கும் தாவரங்களின் இலைகளில் பனித்திருக்கவும்

வேர்களில் செறிந்திருக்கவும்

அறிந்திருக்கும்

நீர்க்கால்களின் அடர்வில்

நெகிழ்கிறது நிலம்

இங்கே நிலம் ஒன்று

இடங்கள் வெவ்வேறு

மேலும் கீழும் அசையும் ஊஞ்சலெனத்

தள்ளாடுகிறது இந்த ஈரம்.

’நீர்த்தாவரம்’ என்ற கவிதையையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் திரும்பத் திரும்ப வரும் இந்த நிலம்-மழை சலிப்பூட்டுகிறது. ‘கடலசையும் வீடு’ கூட ஒருவகையில் சேர்த்திதான்.

இந்தத் தொகுப்பிலும் இதற்கு முந்திய தொகுப்பில் உள்ள அதே சிக்கல்கள்தான். சரிவர உருப்பெறாத படிமங்கள், தவறான அர்த்தப் பிரயோகம் என்று ‘ஐந்தாவது’ தொகுப்பில் பார்க்கையில் அயர்ச்சியூட்டுகிறது. இதிலும் running commentary பாணியிலான தொடக்கங்கள் (செய்துகொண்டிருக்கிறேன்/பார்த்துக்கொண்டிருக்கிறேன்). சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

மீன்வெளி என்ற கவிதையில் தூண்டிலிட்டு மீன் பிடித்து சமைப்பதைக் குறித்து வருகிறது. இதில் இரண்டு வரிகளில் சிக்கல். 1. அந்த வண்ண மீன் இறந்த பின்பும் தனது அதிகாரத்தை என்மேல் செலுத்துகிறது. 2. அந்தச் சிறிய மீன் உயிர் நீங்கும்போது மன்றாடவே இல்லை. தூண்டிலிட்டு ‘வண்ணமீனைப்’ பிடித்து சமையல் செய்வார்களா? உயிருக்காகத் துடிக்காத மீன் ஏது? மீன் தன் போக்கிலேயே தான் போய்க் கொண்டிருக்கிறது. மெனக்கிடலோடு உட்கார்ந்து, காத்திருந்து தூண்டிலிட்டுப் பிடித்து, அலசி, சமையல் செய்பவர் மீது மீன் என்ன அதிகாரம் செலுத்துகிறது?

பிரபஞ்சம் போர்த்தியிருக்கும் ஆடை என்ற கவிதையில் உள்ள வரிகள்:

“ஆதித்தாய் உடுத்தியிருந்த

அந்த மேலாடையைத் தேடியபடியிருக்கிறேன்.

அந்த ஆடை நெய்யப்பட்டிருக்கவில்லை

அது அப்படியேதான் இருந்தது

….      …..     …..     …      ……

அவள் உடுத்தியிருந்த

அந்த ஆடையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

முதலில் மேலாடை என்கிறார். பின் அது நெய்யப்படவில்லை என்கிறார். நெய்யாமல் இருந்தால் அது நூலாகத்தான் இருக்கும். அது அப்படியேதான் இருந்தது என வருகிறது அடுத்த வரி. பழையபடி ஆடையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று வருகிறது. ரொம்பவே மர்மமான ஆடையாக இருக்கிறது. இதுபோன்ற பிழைகளால் கவிதை வரிகள் காட்சியாகாமல் (காட்சிப்படுத்தும் நோக்கோடு உள்ள வரிகள்) வெறும் சொற்களாகச் சிதறிக் கிடக்கின்றன.

’எதிர்பார்ப்பு’ என்ற கவிதையிலும் இதே பிரச்சினை. இந்தக் கவிதையில் இந்தப் பிழையில்லாமல் செய்திருந்தால், ‘கிறேன், கிறேன்’ என்று முடிப்பதைத் தவிர்த்திருந்தால், கடைசி வரி வேறுவகையில் முடித்திருந்தால் நல்லதொரு கவிதையாக அமைந்திருக்கும். நகரத்தில் விரையும் வாகனங்கள் குறித்து எழும் ஒவ்வாமையைப் பற்றி இந்தக்கவிதை பேசுகிறது. கடைசி வரிகள்: “ஒருகணம் எதுவும் அசையாது நின்று போமெனில் நான் கடந்துவிடுவேன். இந்தச் சாலை வழி இந்த நகரைவிட்டு இந்த நெரிசலைக் கடந்து மற்றொரு நகரத்தின் சாலையில் சிக்கிக் கொள்வதற்காக என்பதை அறியாதவாறு” இதில் என்ன குழப்பமென்றால் எழுதுபவர் தன்னிலையிலிருந்து கவிதையைச் சொல்கிறார் என்னும்போது வேறொரு நெரிசலில் ‘அறியாமல்’ சிக்கிக் கொள்வதைப்பற்றி அவர் எப்படிச் சொல்லமுடியும்?

சொல் எனும் தானியம் (2014) – ஆறாவது தொகுப்பு

இந்தத் தொகுப்பில் 59 கவிதைகள் உள்ளன. ஏற்கெனவே பார்த்தபடி “கிறேன்”களும், சுய அறிமுகங்களும் கவிதைகளில் தொடர்ந்தபடி இருக்கின்றன. ‘நான் என்ன நினைக்கிறேன் என்றால்’, ‘நான் அதுவானவள், இதுவானவள்’ இப்படியான வகைக் கவிதைகள் எல்லாத் தொகுப்புகளிலும் நிறைந்து கிடக்கின்றன. ஒருவகையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஏக்கமும், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், தெரிந்தவரிடம் ஊர் உலகத்தைப் பற்றிப் பேசுவதைப் போலவே நிறையக் கவிதைகள் உள்ளன. இவற்றை கவிதை என்ற வரையறைக்குள் கொண்டு வர இயலாது. உதாரணத்திற்கு 51-ஆம் பக்கத்தில் உள்ள, ‘அப்பாக்கள் அறியாத புதிர்’ என்பது தன்னுடைய அப்பாவையும் தன் மகளது அப்பாவையும் ஒப்பிடுகிறது. இது பக்கத்துவீட்டுப் பெண்ணோடான உரையாடல் தன்மையோடு இருக்கிறது. கவிதையில் அப்படி இருக்கக்கூடாதா என்றால், நிச்சயம் இருக்கலாம். ஆனால் உள்ளார்ந்த கவித்துவம் இல்லை என்பதுதான் பிரச்சினை. 53-ஆம் பக்கக் கவிதை, ‘அமிழ்தலும் மிதத்தலும் அற்ற ஆறு’, நகரத்துப் பிள்ளைகளின் வாழ்க்கை, கிராம வாழ்க்கை இரண்டைப் பற்றியும் சொல்கிறது. கீழே அந்தக் கவிதை:

முல்லையாற்றின் கரையில் பிறந்தவள் நான்

அங்குதான்

சுரைக்குடுவையில் நீந்தவும்

தண்ணீரில் மிதக்கவும் பழகிக் கொண்டேன்

நீரின் போக்கில் எதிர்க்கரை ஏறுதல்

என் பிரிய விளையாட்டு

அதிகாலையில் துயில் எழுந்து

மார்கழியின் பனி நீராடலை

மருதாநதியில் பழக்கிக் கொண்டது

என் இளம்பிராயம்

அப்போது அறிந்திருக்கவில்லை

நதியில் அமிழும் குளிர்மையை

பின்பொரு நாள் இழந்துவிடுவேன் என்று

இப்போது என் மகள் நீச்சல் பழகுகிறாள்

நகரத்து நட்சத்திர விடுதியில்

பிசிறின்றி வடிவமைக்கப்பட்டு

நீல வண்ணத்தில் ஒளிரும்

மிதவைகள் நிரம்பிய நீச்சல் குளத்திற்கு

தினந்தோறும் சென்று வருகிறாள்

நகரத்துக் குழந்தைகள்

கண்ணாடித் தொட்டியில் வளர்க்கப்படுகின்றனர்

கிராமத்து கிணறு

குழந்தைகள் அறியாதவை

கிராமத்து பாரம்பரியக் கிணறு

பழுப்பூறிய இருளில் தூர்ந்து கிடக்கிறது

ஊரில் ஆறில்லை

ஆற்றில் நீரில்லை

குவித்து விளையாட மணலில்லை

அமிழ்தலும் மிதத்தலும் அற்ற ஆறு

மனதில் சலசலக்க

எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோம்

கால வெள்ளத்தை எதிர்த்து நீச்சலிடுவதாக.

மிக மோசமாக, செறிவின்றி, படைப்பூக்கமேயில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. இதை எழுதவேண்டிய அவசியம் என்ன என்று ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது நான் சொல்வது, உள்ளார்ந்த ஒரு தேடலும் தேவையுமில்லாமல் “எழுத வேண்டும்” என்றொரு அவசியத்தையும் தேவையையும் எப்படி உருவாக்கிக் கொள்கிறார்கள்? அதன் பின்புலம் என்ன என்பதை கவிஞர்தான் யோசிக்க வேண்டும்.

ஒரு கவிஞர் கவிதை எழுதவேண்டியதின் அவசியமென்ன என்பது மிகவும் அர்த்தமுள்ள, ஒவ்வொரு கவிஞரும் ஆத்மார்த்தமாக தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. வலிந்து செய்யப்படும் எதுவும் தனது ஆன்மாவை இழந்துவிடுகிறது. கவிஞர் சக்திஜோதியின் பெருவாரியான கவிதைகள் இப்படி கவிதைக்கான கணம் நிகழாமல் செயற்கையாய் சிருஷ்டிக்கப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன். பகிர்தலும், எழுதுவதும் நன்று. ஆனால் அதையெல்லாம் கவிதை என்ற வடிவத்தில்தான் கொடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், தொடர்ந்து காதலையும் காமத்தையும் எழுதுவதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அவை கவிதையாகின்றனவா என்பதுதான் முக்கியம். வறட்சியான படிமங்களால் நிறைய இடங்களில் இவை வெறும் சிலேடையான கிளர்ச்சிக் கவிதைகளாகவே தோற்றமளிக்கின்றன (“எப்போதும் என் ஆசையின் உச்சத்தில் நான் உயிர்த்திருக்கையில் அருமருந்தாய் நிரம்புகிறான் என்னுள் நீர் அருந்துகிறது நிலம்”)

கவிதையாவதற்கும் அந்தக் கணம் அமைவதற்கும் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த “கிறேன்” வகையான வரிகள் எதை உணர்த்துகிறது என்றால் கவிஞர் கவிதையெழுதும் முன்பே இரண்டாவது நபரை தேர்ந்தெடுத்துவிடுகிறார். அதாவது ‘நான் இப்படிச் செய்கிறேன்’ என்று சொல்லும்போது அங்கே கேட்பதற்கு ஒருவர் மறைமுகமாக உருவாக்கப்படுகிறார். இது கவிதை நிகழ்வதைத் தடுத்து கேட்பவருக்கு ஏற்றாற்போல் பேசும் தொனியை உருவாக்குகிறது. (இந்தக் கூற்று கவிதை என்னவாக முடியும் என்று தெரியாமல் ஆரம்பிக்கிற கவிதைகளுக்கு மட்டுமே பொருந்தும்).

2 comments for “கவிஞர் சக்திஜோதியின் கவிதையுலகம்

  1. February 5, 2017 at 11:08 pm

    கவிதைக்கு மொழி மற்றும் ஆக்கம் குறித்து தாங்கள் முன்வைக்கும் குறைந்தபட்ச வரையறைகள் அத்தியாவசியமானவை.

    அலுக்கவைக்கும் வகையில் சுயநகலெடுக்கப்படும் குறியீடுகளும் கண்டுபிடிப்புகளும் கட்டவிழ்க்கப்படாத அகத்தைக்கொண்ட மேல்மனதின் உணர்ச்சி வெளிப்பாடு. உணர்ச்சிகள் மட்டுமே ஆழ்கவிதையாகா. கவிதை
    என்னும் வாழ்வீச்சு எனும் நூலில் ஆனந்த் அவதானிப்பதுபோல் கவி தனது அகவெளியில் தேடிப் போராடி அகத்தைக் கட்டவிழ்க்கும் கணம் தான் கவிதை நிகழும் கணம். புதுப்புது அறைகூவலிடும் கண்டுபிடிப்புகளை
    வெளிக்கொணரவும் நகல்களை சுயதணிக்கை செய்யவும் இந்தப் போராட்டம் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படவேண்டும்.

    கவிக்கு தனது ஆக்கத்தில் புலப்படாது வாசகருக்கு புலப்படும் குறைகள் சிலவேளைகளில் சற்று காலம் தாழ்த்தி கவியினுள்ளிருக்கும் தேர்ந்த வாசகரின் பார்வையில் நோக்கினால் புலப்படலாம். அந்தப் பார்வையை கைவசமாக்க அகப்பயிற்சியும் விடாமுயற்சியும் தேவைப்படும்.

    கவிதையை யதார்த்த உலகின் தர்கத்தைக் கொண்டு அணுகாமல், அது யதார்த்த விவரணையாக இல்லாதிருக்கும் பட்சத்தில், அதன் மொழிவீச்சு அது நிகழும் மாற்று யதார்த்த அகவெளியின் தர்கத்துடன்
    ஒத்திசைக்கிறதா என்ற கோணத்தில் அணுகலாம்.

  2. harikrishnan
    February 23, 2017 at 2:04 pm

    உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் அதை ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் நீர் புலம்பியென்ன கதறியென்ன ?

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...