கவிஞனுக்கான சினிமா

suyanthan 1தலைசிறந்த ஒரு கவிஞனைப்பற்றிய முழுநீளப் படம் எடுத்தல் என்பது சில இலக்கிய நியதிகளுக்கும், கவிதைசார்ந்த உள்வாங்கலுக்கும் உட்பட்டே அமைதல் வேண்டும் என்பது பலரது கருத்தாகும். (தீவிர இலக்கியவாதிகள்) குறிப்பிட்ட ஒரு கவிஞரைப் பற்றிய பட ஆக்கங்களில் அவர்தம் வாழ்க்கை வரலாறு என்பது தவிர்க்க முடியாத, அதேநேரம் அவரது படைப்புக்களை திரையில் எவ்விதத்தில் பிரயோகிப்பது என்ற விவாதம் ஒவ்வொரு Filmmakers இடமிருந்தும் எழக்கூடும். அதுவும் தமிழில் பாரதி போலொரு கவிஞனாயினும், ஸ்பானிஷில் நெருடாவின் கதையாயினும் இந்த ஆழமான விவாதம் வேரோடிக்கொண்டேயிருக்கும்.

ஒவ்வொரு கவிஞனையும் இருக்கும்போது யாருமே கண்டுகொள்வதில்லை. அதற்கான காரணம் அவன் இருக்கிறான் எனும் அசட்டையும், நமது சமூக-கல்வி-பொருளாதார அடிப்படையிலான வாழ்க்கை முறையும் எனலாம்.  அதுவே ஒரு கவிஞனின் மரணத்தின் பிற்பாடு அவனது படைப்புகள், வரலாறு, அந்தரங்கம் என இன்னோரன்ன விடயங்கள் தோண்டியெடுக்கப்பட்டு மிகைப்படுத்தப்படுவது இயல்பாகும்.

கவிஞர்களைப் பற்றிய பல திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. அவற்றுள் சில சித்திரங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. ஷேக்ஸ்பியர் பற்றிய Shakespeare In Love (1998), ஜோன் கீற்ஸ் பற்றிய Bright Star (2009), கவிஞர் கிளென்டா இன் Stevie (1978), சில்வியா பிளாத் பற்றிய Sylvia (2003) திரைப்படங்கள் மிக முக்கியமானவை. அதே போல 2016ல் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப்பெற்ற ஒரு திரைப்படம் Neruda ஆகும். இது பிரபல கம்யூனிஸ்ட் கவிஞர் பப்லோ நெருடா பற்றிய திரைப்படமாகும்.

வார்த்தைகளால் ஜாலம் செய்த கவிஞனை திரைக்குள் அடக்க முயன்றுள்ளார் சிலி நாட்டு இயக்குனர் பப்லோ லரைன். ஸ்பானிய மொழியில் தயாரிக்கப்பட்டு, ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் பெற்றிருந்தது. கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டிருந்ததுடன், 89-வது ஒஸ்கார் விருதுவிழாவுக்கு சிலிநாட்டின் சார்பில் அனுப்பப்பட்டது. சிலி  நாட்டின் எழுத்தாளர் நெருடா 1971-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவராவார். இவரது நிஜப்பெயர் Ricardo Eliecer Neftali Reyes Basoalto என்பதேயாகும். குரோசியக் கவிஞர் ஜான் நெருடாவின் பெயரைத் தழுவித் தனது பெயரை மாற்றிக்கொண்டார். அரசியல் சித்தாந்தங்களின் காழ்ப்புணர்ச்சிகளால் இடம்பெறும் சம்பவங்களைத் திரைப்படம் சித்திரிக்கின்றது.

திரைப்படம் 1948ஆம் ஆண்டிலிருந்து நகரத் தொடங்குகின்றது. நெருடாவாக லூயிஸ் கானெக்காவும், ஒஸ்கார் பெலன்ஹாவின் தோற்றத்தில் காயல் கார்சியா பேர்னலும்  நடித்திருந்தனர்.

ஒருவரின் சுயவாழ்வுத் திரைப்படத்தை இயக்கும்போது சுவாரசியங்களை அதிகப்படுத்த சிலsuyanthan 2 கற்பனைகளையும் அவிழ்த்துவிடல் வேண்டும். அவ்வாறுதான் இத்திரைப்படத்தை எலி-பூனை (Cat-Mouse Game)  விளையாட்டுப் போல நகர்த்தியுள்ளனர். ஒஸ்கார் பெலிஹென்கா என்ற பொலீஸ் கதாபாத்திரத்தை மிகைப்படுத்தி உருவாக்கியுள்ளார் லரைன். சிலியின் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் 300 பேர் வரையிலும் நெருடாவைக் கைது செய்யத் தேடியதாகக் கூறப்படுகிறது. ஆனால் திரைப்படத்துக்கான சுவாரஸ்யம் கருதி ஒருவரை முன்னிலைப்படுத்தியுள்ளார் போலும். சிலியின் ஜனாதிபதி கொன்சலா விடேலாவின் ஆட்சியில் பொலிஸ் தலைமையாணையாளர்களாக நால்வர் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவரே ஒஸ்கார். முன்பின் நெருடா எப்படி இருப்பார் என்று அறிந்திராத இவரிடம் நெருடாவைக் கைது செய்யும் பொறுப்பு வழங்கப்படுகின்றது. அதற்கான கடும் முயற்சியில் அவர் இறங்கியிருப்பார். நெருடா கொஞ்சம் கொஞ்சமாக சிலியிலிருந்து ஆர்ஜன்டீனாவுக்குத் தப்பித்து ஐரோப்பாவுக்குச் சென்றும் விடுகிறார். இடையில் நடக்கும் Poetic, Detective Chase, Drama Comedy முதலானவற்றை தொய்வின்றி இயக்குநர் திரையில் கொணர்ந்துள்ளார் எனலாம்.

இலக்கியவாதி, கலைஞன், அரசத்தூதுவர், ஓவியர் பிக்காசோவின் நண்பர், நோபல் பரிசு வெற்றியாளன், மகாகவி என்கின்ற சிறிய பரப்பில் நெருடாவின் வாழ்வை நாம் நிர்ணயித்திருந்தோம். ஆனால் அரசியல் சித்தாந்தங்கள் மீதான காய்நகர்த்தல்கள் நெருடாவை எப்படி நாடோடியாக அலைய வைத்துள்ளது என்பது தெளிவாகக் காட்டப்படுகிறது. கம்யூனிசக் கொள்கை மீது அதீத பற்றுக் கொண்ட நெருடாவை (Steadfast Communist)  திரைப்படத்தினூடாக ஒரு தீவிரமான கம்யூனிசவாதி (Champange Communist) எனும் நிஜமான சாயமும் பூசப்படுகிறது.
நெருடாவின் கவிதைகளை விடவும், அவரது உறுதியான கம்யூனிசவாதமே தென்னமெரிக்க நாட்டவர்களைக் கவர்ந்துள்ளது என்பதை திரைப்படம் காத்திரமாகக் கூறுகின்றது.

நெருடாவின் கவிதைகள் பலருக்கு ஆக்க எழுச்சியூட்டுவதாக இருக்கிறது. ஆனால் அவரது சொந்த வாழ்க்கை அப்படி இருக்கவில்லை. திகிலான சம்பவங்களின் தொடர்கதைதான் அவரது வாழ்வு. அதையே லரைன் எடுத்தாண்டுள்ளார். இயக்குநருக்குப் பிடித்தமான நடிகர் பேர்னல் ஆவார். இதற்கு முன்பு இவர் புனைகதைகளிலோ, புதினங்கள் சம்பந்தப்பட்ட கதைகளிலோ நடித்திருக்கவில்லை. அதனால் இத்திரைப்படத்தில் வரலாற்றுக் கதாபாத்திரத்தைக் கையாள்வதில் சவால்களை எதிர்கொண்டு வெற்றிகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அதனை திறம்படச் செய்திருந்தார் எனலாம். “கற்பனை மிகுந்த நடப்புச் சூழ்நிலைகளை கலைநயத்துடன் கொண்டுவந்துள்ளார் திரைக்கதையாசிரியர் Guillermo Calderon.

suyanthan 3இதற்கு முன்னர் 1994இல் நெருடாவின் வாழ்வினை மையமாக வைத்து I Postino எனும் திரைப்படம் உருவாகியிருந்தது. அதில் அதிகமான கற்பனைக் கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால்  லரைன், சிலியின் தீவிர கம்யூனிஸ்ட் கவிஞரின் அரசியல் முகத்தையும் தெளிவாகக் காட்டியுள்ளார். கவிஞரைப் பற்றிப் படம் எடுக்கும்போது அவர்களின் அரசியல்-சமூக சித்தாந்தங்களை காத்திரமாகக் கூறியாகவேண்டும் என்பதே Neruda என்ற இத்திரைப்படத்தின் அடிநாதம் என்பது துலாம்பரம்.

“They say that Neruda is the most important Communist in the world”

என்ற வசனம் திரைப்படத்தின் முற்பாதியில் வருகின்றது. ஒரு அதீத கம்யூனிச சித்தாந்தியின் ஒருபகுதி வரலாறே இத்திரைப்படம் என்று  இந்த வசனத்தைக் கொண்டே ஊகிக்க முடியும். இது முழுமையான வாழ்க்கை வரலாறு அல்ல. அசாதாரணமான புத்தாக்க விடயங்களை கவித்துவமாகச் சுமந்து வரும் இத்திரைப்படத்தினை, “கவிதைகளின் திரைப்படம்” எனவும் கூறமுடியும்.

நெருடாவின் கவிதைகளின் நெருடலை எப்போதும் தூர இருந்து ரசித்தோருக்கு, இத்திரைப்படம் அந்த நெருடலுக்கான புதிரை அவிழ்த்து விடுகின்றது என்றும் கூறலாம்.  கவிஞனுக்கான சினிமாவில் கவிஞன் உயிர்வாழ்தலுக்காக  எந்தளவு தூரம் ஓடுகிறான் என்பதை இயக்குநர்  கொணர்ந்து புத்தாக வெளியினை மலரவைத்துள்ளார் என்றே கூறவேண்டும்.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...