இருமொழி பாடத்திட்ட (DLP) விவாதம் – ஓர் எதிர்வினை

2017-01-25நண்பர் அனுப்பியிருந்த டிஎல்பி ((DLP)  விவாதக் காணொளியை  (‘நடப்பது என்ன?’) ஒரு மணி நேரம் செலவு செய்து பார்த்து முடித்தேன். உண்மையில், இருமொழித் திட்டம் மீதான விவாதங்கள் 2015 முதலே மிக விரிவாக நடைபெற்றிருக்க வேண்டும். டிஎல்பி திட்டம் குறித்த முழுத்தெளிவும் பெற்றோருக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு மிக சொற்பமான அமைப்புகளும் தனிநபர்களும் மட்டுமே இவ்விவகாரத்தை முன்னெடுத்து வாதிட்டனர். அதிலும் டிஎல்பி திட்ட நடைமுறைபடுத்தலில் உள்ள சிக்கல்களையும் கற்றல் கற்பித்தலில் ஏற்படப்போகும் பின்னடைவுகளையும் பேசாது மொழி உணர்வின் அடிப்படையிலும் மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்பு என்கிற நம்பகத்தன்மை அற்ற கருத்துகளையும் அடிப்படையாக வைத்து வாதிட்டு வந்தனர் என்பதைக் குறிப்பிடவேண்டும்.

ஆயினும் 2017 கல்வி ஆண்டு தொடங்கியதும் பள்ளிகள் பெற்றோருக்கு மேலோட்டமான தகவல்களை தந்து  ஒன்றுக்கும் மேம்பட்ட வகுப்புகளை ஆங்கில மொழியில் போதிக்க வழியமைத்துள்ளன. இந்நிலை தமிழ்ப்பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் கல்வியின் அடிப்படையிலும் போதனைமுறை அடிப்படையிலும் பல சிக்கல்களையும் பின்னடைவுகளையும் கொண்டுவரும் என்பதை பலரும் உணராமல் இருக்கின்றனர். குறிப்பாக, பின் தங்கிய மாணவர்களின் நிலை மிக மோசமாக பாதிக்கப்படும் என்பதை ஆசிரியர்களும் புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில், வணக்கம்மலேசியா.காம் ஏற்பாட்டிலான அந்தக் கலந்துரையாடலைக் காணும் வாய்ப்பு கிட்டியது.  திரு. தியாகராஜன் தலைமையேற்ற அக்கலந்துரையாடலில் இரண்டு பேச்சாளர்கள் டிஎல்பி- ஐ ஆதரித்தும் இரண்டு பேச்சாளர்கள் டிஎல்பியை மறுத்தும் பேசினர். டாக்டர்.மஹாலட்சுமி தவிர மற்ற பேச்சாளர்களை நான் அறிந்ததில்லை.  ஆனால் நால்வருமே கல்வித் தகுதிகளும் தமிழ்ப்பள்ளிகளோடு நெருங்கிய உறவும் அரசியல் நோக்கம் அற்றவர்களாகவும் இருந்தது சிறப்பு. இருதரப்பினரும்  மாணவர் முன்னேற்றம் பற்றியும் தமிழ்ப்பள்ளிகளின் உருமாற்றம் பற்றியும் தங்கள் தரப்பு கருத்துகளைப் பேசினர்.

ஆயினும், ஒரு முக்கியமான பிரச்சனையை விவாதிக்க வரும்முன் கொஞ்சம் மெனக்கெட்டு ஆதாரபூர்வமான தகவல்களைத் தரவுகளின் அடிப்படையில் சேகரித்திருக்கலாம். பேச்சாளர்களின் கல்வித்தகுதியும் தமிழ்ப்பள்ளிகளின் மீது உள்ள அக்கறையை மட்டும் மூலதனமாக்கி விவாதித்ததால் ஒரு கல்வித் திட்டத்தில் உள்ள குறை நிறைகளை முழுமையாக மதிப்பீடு செய்ய முடியாமல் போய்விட்டது.

முதலாவதாக, டிஎல்பி ஆதரவு தரப்பு சொல்வது போல் அத்திட்டம் அவ்வளவு எளிமையாகவும் நேர்மையாகவும் தமிழ்ப்பள்ளிகளுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பதை கூறுவதில் எதிர்த்தரப்புக்கு என்ன தயக்கம்? தொடக்கம் முதலே இத்திட்டம் மூடுமந்திரமாக, சிறப்புக் கூறுகளை மட்டுமே  பெரிதுபடுத்திக் காட்டும் வகையில் ஒரு குழுவால் காட்டப்பட்டு வருகிறது. அதன் பாதகங்களை அறிந்தும் அறியாதது போல் பாசாங்கு செய்யும் போக்கு கல்விமான்கள் மத்தியில் வெளிப்படையாகத் தெரிகிறது.

மேல்மட்டத்தில் ஒருசிலர் மட்டும் முடிவு செய்து 2015 டிசம்பர் விடுமுறையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் பெற்றோர்களோடு தொடர்புடையதன்று. அக்கடிதம் குறுகிய கால இடைவெளியில் தலைமையாசிரியர்கள் இருமொழித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரக் கோரிக்கையை மட்டுமே கொண்டிருந்தது. இக்கடிதம் எல்லா தமிழ்ப்பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது. மேலிட அழுத்தங்களின் காரணமாக தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களிடம் மட்டும் அரைகுறை விளக்கங்களை கூறிவிட்டு அவசர அவசரமாக விண்ணப்பத்தை அனுப்பினர். அப்போது டிஎல்பியின் முழு சாராம்சத்தையும் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் பெற்றோர்களும் அறிந்திருக்கவில்லை என்னும் உண்மையை ஏன் விவாத அரங்கில்  யாரும் பேசவில்லை.

மேலும், முழுக்கவும் பெற்றோர் பொறுப்பேற்க வேண்டிய ஒரு திட்டமாக இப்போது சித்தரிக்கப்படும் இருமொழித் திட்டம் பெற்றோர்களிடம் அல்லவா முதலில் அ முதல் ஃ வரை விவரித்து தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கோ பெற்றோர்களுக்கோ, பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கோ இதுவரை விளக்கக் கூட்டங்கள் நடைபெற்று உள்ளனவா?  2016 டிசம்பர் வரை கல்வி அமைச்சின் சார்பில் எத்தனை பெற்றோர் விளக்கக் கூட்டங்கள் நடத்தினர்? பெற்றோர்களுக்கே தெரியாத, புரியாத ஒரு திட்டத்தை பெற்றோரின் விருப்பதிற்கேற்ப நடைமுறைபடுத்தப்படும் என்று கூறுவது ஏமாற்று வேலையல்லவா?

துணைக் கல்வி அமைச்சரே, தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி திட்டம் கொண்டுவரப்பட்டது கல்வி அமைச்சின் முடிவு அல்ல என்று கூறிவிட்ட பிறகு பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிய கடமை யாருக்கு உள்ளது? அதன் நம்பகத்தன்மை என்ன? எதிர்கால இலக்கு என்ன? போவோர் வருவோர் எல்லாம் சொல்லும் உறுதி மொழிகளை நம்பி தமிழ்ப்பள்ளி மாணவர்களையும் தமிழ்ப்பள்ளியையும் ஒப்படைக்க முடியுமா?

தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பினால் அங்கு எல்லாப் பாடங்களும் தமிழில்தான் போதிக்கப்படும் என்பதை உணர்ந்துதானே தமிழ்ப்பள்ளிக்கு தங்கள் பிள்ளையை அனுப்புகின்றனர். அதுதானே அவர்களின் தேர்வு. அது பிடிக்காதவர்கள் இவ்வளவு காலமாக மாற்றுமொழிப் பள்ளிகளைத்தானே நாடினர். அப்படி இருக்க, தமிழ்ப்பள்ளிக்குள் இன்னொரு மொழித்தேர்வை வைத்தது பெற்றோர்களின் விருப்பமா? தனி மனிதர்களின் விருப்பமா? தமிழ்ப்பள்ளிகளின் நலத்திலும் வளர்ச்சியிலும் இதுநாள்வரை ஒரு துரும்பையும் அசைக்காத அல்லது தமிழ்ப்பள்ளி என்றாலே அவமானத்தின் சின்னமாக கருத்தும் சிறுபான்மை மேட்டுக்குடி இந்தியர்கள், இன்று இருமொழிகொள்கையைத் தமிழ்ப்பள்ளிகளில் திணிக்க மிகுந்த அக்கறைகாட்டுவதன் உள்நோக்கம் என்ன?

pandiyan 4தமிழ்ப்பள்ளியில் ஆங்கிலத்தில் அறிவியலும் கணிதமும் போதிக்கப்பட்டால் என் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று எந்தப் பெற்றோர் உங்களிடம் முறையிட்டது? இத்திட்டம் பைனியர் ப்ரொஜெக்ட் என்று எதை வைத்து சொல்கிறார்கள்?  தொடக்கத்தில், தேர்வு செய்யப்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாம் ஆண்டில் ஒரு வகுப்பும், நான்காம் ஆண்டில் ஒரு வகுப்பும் மட்டும் டிஎல்பி வகுப்பாக நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நடைமுறையில் நடந்தது என்ன?

இவ்வாண்டு பல தமிழ்ப்பள்ளிகளிலும் ஒரு வகுப்புக்கு மேல் ‘டிஎல்பியே பெற்றோர் தேர்வு’ என்று காரணம் கூறி நடத்தப்படுகிறதே. சில பள்ளிகளில் எல்லா வகுப்புகளும் டிஎல்பி வகுப்பாக மாறிவிட்டதைப் பற்றி என்ன கூறுவது? இதன் எதிர்கால நிலை என்ன? எல்லா வகுப்புகளும் அறிவியலும் கணிதமும் ஆங்கிலத்தில் போதிக்கும் பள்ளியில் பயிலும் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆவது? அவர்களுக்கான LINUS, pemulihan திட்டங்களை எந்த மொழியில் போதிப்பார்கள்?  பெற்றோரின் தேர்வு என்று காரணம் கூறியே பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழடிக்க முயல்வது கற்றவர்கள் செய்யும் சதியல்லவா?

ஆரம்பப் பள்ளியில் டிஎல்பியில் பயிலும் மாணவன் இடைநிலை பள்ளியிலும் டிஎல்பியில் பயிலக்கூடிய சாத்தியங்கள் குறைவாக உள்ளது. அல்லது ஆரம்பப் பள்ளியில் டிஎல்பியில் பயிலாத மாணவன் இடைநிலைப் பள்ளியில் என்ன ஆவான்?

இந்த அடிப்படை சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் அல்லவா  முதலில் பதில் தேட வேண்டும்.

ஆனால் அந்த உரையாடலில் பங்கு கொண்டவர்கள் முழுதும் டிஎல்பிக்கு வக்காலத்து வாங்க வேண்டும் என்ற முடிவோடோ அல்லது தமிழர் அடையாளம் என்ற நிலையிலோ மட்டுமே நின்று கொண்டு ஒன்றுக்கும் உதவாத கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருந்தது வேதனை அளித்தது.

டாக்டர். மஹாலட்சுமி ஒரு அறிவியல் ஆய்வாளர் என்பதற்காக அவரிடம் இன்றைய தமிழ்ப்பள்ளி பெற்றோர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைக்கு ஆலோசனை கேட்பது பொருளற்றது என்பது தெளிவாகப் புரிகிறது. போலியான வாதங்களைக் கட்டமைத்து தன் தரப்புக் கருத்துகளை செயற்கையாக அவர் பேசிக் கொண்டிருந்தார் என்பதே உண்மை. அரசாங்கம் டிஎல்பி முறையில் இரண்டு பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கச் சொன்னாலும் ஆசிரியர் வகுப்பில் அவ்வப்போது தமிழ் கலைச்சொற்களையும் பயன்படுத்தலாம் என்பன போன்ற சிறுபிள்ளைத்தனமான கருத்துகளைத்தான் அவரால் முன்வைக்க முடிந்தது. மதம்,மொழி போன்ற விடயங்களில் கூட அவரிடம் தெளிவு இல்லை. மலாயில் படித்ததனால் தனக்கு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் படிக்க சிரமம் ஏற்படவில்லை என்று இவர் கூறும் கருத்துப்படி பார்த்தாலும், தேசியப் பள்ளிகளில் டிஎல்பி-க்கு தேவை இல்லாமலே போகும்.

டாக்டர்.கண்ணன், சிறந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இடைநிலைப்பள்ளியில் கருத்துகளை சொல்லத் தடுமாறுவதாகக் கூறுவது எந்த அளவு ஏற்புடையது? அப்படியாயின் தேசியப்பள்ளி அல்லது சீனப்பள்ளியில் இருந்து வரும் இந்திய மாணவர்களின் நிலை எப்படி இருக்கிறது. மேலும் அந்தச் சிறந்த மாணவர்கள் PPSMI முறையில் படித்தவர்களாக அல்லவா இருப்பார்கள்? இது அவர்களின் கருத்துக்கு முரணானது ஆயிற்றே. ஆகவே இவர்கள் மறைமுகமாகக் கூற வருவது தமிழ்ப்பள்ளியில் படித்தால் அவர்கள் (கெட்டிக்காரர்களாக இருந்தாலும்) பின்தங்கிய நிலையிலேயே இருப்பார்கள் என்ற பிற்போக்குக் கருத்தைதான். இதற்கான தீர்வு ஒன்றே ஒன்றுதான். அதாவது தமிழ்ப் பள்ளியில் படிக்காவிட்டால் மேற்கண்ட எந்தச் சிக்கலும் இருக்காது என்பதே.

ஆரம்பப்பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை ஒரே மொழியில் பயின்றால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று சொல்வது கேட்க நன்றாகத்தான் உள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக தேசியப்பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை ஒரே மொழியாகிய மலாயில் பயின்ற இந்திய மாணவர்கள் எல்லாரும் சிறந்த நிலையை அடைந்துவிட்டனரா? இன்று உயர்நிலையில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் தேசியப் பள்ளியில் இருந்து வந்தவர்களா?

அடுத்து, PPSMI எப்போது மீட்டுக் கொள்ளப்பட்டது என்பதைக் கூட இரு தரப்பும் தெளிவாகanti ppsmi அறிந்திருக்கவில்லை. டாக்டர் கண்ணன் 2015 வரை அத்திட்டம் இருந்தது என்கிறார். டாக்டர். செல்வம் அத்திட்டம் நிறுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன என்கிறார். 2011 முதல் ஆரம்பப் பள்ளிகளில் KSSR எனும் புதிய கல்வித் திட்டம் நடைமுறைகண்டு 2017-இல் KSSM எனும் இடைநிலைப் பள்ளிகளுக்கான திட்டம் வந்து விட்டது என்பதை யாரும் குறிப்பிடவில்லை.

2011 தொடங்கிய KSSR முழுதும் தாய் மொழியை அடிப்படையாக கொண்ட திட்டமாகும். இந்த திட்டத்தில் பயின்ற மாணவர்கள் கடந்த ஆண்டு முதன் முறையாக புதிய வடிவிலான யுபிஎஸ்ஆர் சோதனையை எழுதினர். அந்தத் தேர்வில் அறிவியல் கணிதப் பாடங்களை தாய்மொழியிலேயே எழுதினர். கடந்த ஆண்டு பிறமொழிப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கணிதம் அறிவியல் பாடங்களில் சிறந்த புள்ளிகளைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் PPSMI-க்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஆனால் டாக்டர்.மஹா இந்த வெற்றிக்கு ஒரு குதர்க்கமான காரணத்தை சொல்கிறார். PPSMI காலத்தில் பல ‘கற்றறிந்த’ பெற்றோர் தமிழ்ப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைத்ததால்தான் இந்தச் சாதனை நிகழ்ந்தது என்பது அவரது அறிவியல் மூளையில் உதித்த அற்புதக் கருத்தாகும். PPSMI நிறுத்தப்பட்டவுடன் தமிழ்ப்பள்ளிகளில் பயின்ற ‘கற்றறிந்த’ மக்களின் பிள்ளைகள் வேற்று மொழிப் பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர் என்னும் கவலையில்தானே டிஎல்பி திட்டமே முன்னெடுக்கப்படுவதாக டாக்டர்.என்.எஸ். ராஜேந்திரன் உறுதியாகக் கூறுகிறார். ஆகவே டாக்டர்.மஹா தமிழ்ப்பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் அணுகுமுறையிலோ, ஆசிரியர்களின் ஆற்றலிலோ, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமையிலோ நம்பிக்கை அற்றவராகவே உள்ளார். அவரின் கருத்து பெற்றோர்களின் தகுதியை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது. ஆகவே இக்கருத்து மொத்த கல்விக் கொள்கைக்கும் விரோதமானது என்பது தெளிவு.

டிஎல்பி வகுப்புகளில் இரண்டு பாடங்கள்தான் ஆங்கிலத்தில் போதிக்கப்படும் என்று பேச்சாளர்கள் கூறினர். ஆகவே அது தமிழ்ப்பள்ளியின் தோற்றத்திற்கு பாதிப்பை உருவாக்காது என்று கூறினர். ஆனால் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் STEM என்கிற நான்கு பாடங்கள் படிப்படியாக ஆங்கிலத்தில் போதிக்கப்படும் என்றுதான் குறிப்பிட்டுள்ளது.(http://jpnmelaka.moe.gov.my/v3/images/destop/Soalan_Lazim_DLP_Versi_2.0_2015.pdf). இத்தகவல் பேச்சாளர்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே.

மேலும், சீனப்பள்ளிகள் டிஎல்பியை மறுப்பதற்கு டாக்டர்.கண்ணன் கூறும் கருத்துகள் முழுமையானவை அல்ல. காரணம் எல்லா சீன மாணவர்களும் சீன வழி இடைநிலைப் பள்ளியையோ, சீன உயர்கல்வியையோ நாடுவதில்லை. பல ஆயிரம் மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளிலும் அரசாங்க உயர்கல்விக் கூடங்களிலும் படிக்கின்றனர். எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெறும் அவர்களில் 95% மாணவர்கள் சீன ஆரம்பப் பள்ளியில் இருந்து வந்தவர்கள். ஆகவே சீனப் பள்ளிகள் டிஎல்பி வேண்டாம் என்று கூறுவதன் உண்மைக் காரணம், ஆரம்பக்கல்வியை தாய்மொழியில் படிப்பது கல்வி வளர்ச்சிக்கு எவ்வகையிலும் தடையாக இருக்காது என்னும் உண்மையை உணர்ந்ததால்தான்.

தொடர்ந்து, தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் வேண்டாம் என்னும் தரப்பு மிகவும் பலகீனமான கருத்துக்களை உணர்ச்சிப்பூர்வமாக பேசி நேரத்தை வீணடித்தது கவலையளித்தது. வரலாறு என்ற பேரில் சட்டென தமிழ் மூத்தகுடி, நாவலன் தீவு, தமிழ் அறிவியல் மொழி என்றெல்லாம் பேசி தங்கள் நிலைப்பாட்டை நிலைநிறுத்த முயன்றது ஏற்புடையதல்ல. ஒரு பேச்சாளர், எதிர்கால அறிவியலாளர்கள் கட்டாயம் தமிழ்மொழியைப் பயில வேண்டிய நிலை வரும் என்பன போன்ற அடிப்படையற்ற கருத்துகளை சொன்னது அபத்தமாக இருந்தது. டாக்டர்.செல்வம் தமிழ்ப்பள்ளிகளின் அடையாளம் என்னும் ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் கூறியது போதுமானதாக இல்லை.

மொழிப்பெருமையோ இனப்பெருமையோ கல்வித் திட்டங்களை ஏற்கவோ மறுக்கவோ காரணங்களாக இருக்க முடியாது. டிஎல்பியை மறுப்பதற்கான காரணங்களை இன்றைய கல்விச் சூழலோடும் பயிற்றியல் கோட்பாடுகளின் அடிப்படையில் விவாதிப்பதும்தான் அனைவருக்கும் தெளிவை ஏற்படுத்தும். டிஎல்பியின் அடிப்படைச் சிக்கலே அதன் அமலாக்கத்தில் உள்ளது என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும். ஒரு பள்ளியில் இரண்டு மொழிகளில் ஒரு பாடத்தை போதிப்பதும் அதுவும் பெற்றோரின் விருப்பத்தின் பேரில் அந்த தேர்வு அமையும் என்பதெல்லாம் வெறும் பேச்சுதானன்றி நடைமுறைக்கு ஏற்புடையதன்று.

இந்த ஆண்டு பல பள்ளிகளில் டிஎல்பிக்கான வகுப்புகள் பரிட்சையின் அடிப்படையிலேயே முடிவெடுக்கப்பட்டுள்ளன. பெற்றோரின் விருப்பம் என்பது இரண்டாம் பட்சம்தான். ஆங்கிலத் தேர்வில் சுமாரான மதிப்பெண் கிடைத்த மாணவன் பெற்றோர் விரும்பினாலும் டிஎல்பி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை. அதே போல் எல்லாப் பாடங்களிலும் சிறந்த புள்ளிகள் பெற்றிருந்தாலும் டிஎல்பியைத் தேர்வு செய்யாத காரணத்தால் அந்த மாணவன் பின்தங்கிய மாணவர்களுடன் படிக்க வேண்டிய சூழலும் உள்ளது.

மேலும், DLP திட்டத்தின் ஊடே HIP என்ற மற்றொரு ஆங்கில மேம்பாட்டு திட்டமும் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. (http://www.moe.gov.my/images/pekeliling/2016/circularfile_file_001393.pdf)  அத்திட்டம் ஆங்கில மொழியை பல செறிவான திட்டங்களின் வழி மேம்படுத்தும் நோக்கம் கொண்டது. தமிழ்ப்பள்ளிகளுக்கு மிகப் பொருத்தமான, அவசியமான அந்தத் திட்டம் குறித்து இரண்டு தரப்பும் பேசவில்லை என்பதும் ஏமாற்றமே.

முடிவாக,  பெற்றோர்கள், மேற்கண்ட கலந்துரையாடலின் வழி டிஎல்பி குறித்த மிக மேலோட்டமான தகவலை மட்டுமே பெற முடியும். ஆனால் சிக்கலுக்குள் புகுந்து அதை அலசி ஆராய்ந்து ஒரு தெளிவான முடிவுக்கு வர உதவாது. பெற்றோர்கள் இக்கலந்துரையாடலை அடிப்படையாக வைத்து தெளிவான முடிவெடுக்க இயலாது. ஆயினும், தமிழ்க்கல்வியின் மீது நம்பிக்கை வைத்து, பிள்ளைகளின் கல்வியில் கவனம் வைக்கும் பெற்றோருக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.

http://www.vanakkammalaysia.com/teline-v-videos/51-videos/7229-irumozhi-paadathittam-dlp-tamil-palligalukku-saathagama-paathagama-full-episode

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...