ம.நவீன் கவிதைகள்

சராசரிகள்2017-02-03-09-40-00-473092292

 

காதலின்

இறுதி விந்தும் தீர்ந்தபின்

நாம்

சராசரி விசயங்களைப் பேசத்தொடங்கினோம்

 

சராசரி திரைப்படங்கள் பற்றி

சராசரி உணவுகள் பற்றி

சராசரி நூல்கள் பற்றி

சராசரி திட்டங்கள் பற்றி

சராசரி பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றி

சராசரி பாடல்கள் பற்றி

சராசரி வாழ்க்கை பற்றி

 

காதல் தீர்ந்த இடத்தில்

நாம் சராசரிகளை வைத்துதான் நிரப்ப வேண்டியுள்ளது…

சராசரிகள் அசூயையாவதில்லை

சராசரிகள் எழுச்சிகளை ஏற்படுத்துவதில்லை

சராசரிகள் கண்ணீரை வரவழைப்பதில்லை

சராசரிகள் சோர்வடைய வைப்பதில்லை

சராசரிகள் உற்சாகத்தையோ உருக்கத்தையோ உருவாக்குவதில்லை

 

சராசரி விசயங்கள்

வாழ்வை தொடர மட்டும் உதவுகின்றன

அவை மரணத்தை மட்டும்

நூலிழையில் தடுக்கின்றன.

 

***

 

சாலையில் பிச்சை கேட்ட2017-02-03-09-41-22-1610259443

முதியவளின் பார்வையை

நான் மறுத்தபடி கடந்த நிமிடம்தான்

மாயா என்னிடம் மிட்டாய் கேட்டாள்

பையில் எஞ்சியிருந்த

கிழிந்த ஒற்றை ரிங்கிட்டை

தயங்கியபடி வெளியெடுத்த என்னிடம்

பிடுங்கி ஓடியவள்

சப்புக்கொட்டி வந்தாள்

மிட்டாய் தீர்ந்துவிட்டதென…

கிழிந்த நோட்டை

முதியவள் வெயிலில் தூக்கி ஆராய்ந்ததை

அவளைப்போலவே

நானும் கவனிக்காதபடி நடந்தோம்.

 

***

 

நேற்று

ஒரு தடித்த

தத்துவ நூலை வாசித்து முடித்தபின்

நண்பனிடம் அழைத்து

நூலைப்பற்றி சிலாகித்தேன்

அதன் பக்கங்களைப் புரட்டி

தகவல்களைக் கூறினேன்.

மடியில் படுத்திருந்த மாயா

ஓடிச்சென்று தனது பாட நூலை எடுத்துவந்தாள்

அதில் இருந்த ‘A,B,C,D’ யைப்பற்றி

அன்றிரவு முழுவதும்

என்னிடம்

சிலாகித்துக்கொண்டே இருந்தாள்.

 

***

 

தன் வீட்டில்images-2

பெரிய சுறா மீன்கள் வளர்வதாகவும்

சிறிய டைனோசர் இருப்பதாகவும்

சாக்லெட் மரம் முளைத்துள்ளதாகவும்

தனது தோழியிடம்

பேசிக்கொண்டிருந்த மாயாவை அணைத்தபடி

அவள் பொய்யை கண்டித்தேன்…

இரவுகளில் மட்டுமே வீட்டுக்குள் நுழையும்

எனக்குக்குக் கூட

அவை வளர்வது தெரியாது

என தன் தோழியிடம் சத்தமிட்டு சொல்லி

தொடர்ந்து நடந்தாள்.

 

***

 

சுவர் ஓவியத்தில் இருந்த ரோஜாக்கள்

செம்பு நிறத்தில் இருப்பதில்

அதிருப்தி அடைந்த மாயா

தனது சிவப்பு வண்ணப் பென்சிலால்

அதை கிறுக்கினாள்…

பென்சில் முனையில் முழுமையாய் ஒட்டிவிட்ட

செம்பு நிறத்தை

நேற்றைய இரவு முழுவதும்

ஆச்சரியமாய்  பார்த்துக்கொண்டிருந்தாள்

அவ்வப்போது ரோஜா மணம் வீசுவதாக

முகர்ந்தபடி

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...