பாதசாரியின் “மீனுக்குள் கடல்” தொகுதியை முன்வைத்து…

downloadfileஅவன் அவளை தன்னைக் காட்டிலும் அதிகமாய் நேசிக்கிறான். ஆனால் மற்றொருவன் மீதாக தனதன்பைப் பொழிபவளாய் இருக்கிறாள் அவள். எப்படியேனும் தனக்கானவளாய் அவளை மாற்றிட எதையும் செய்யத் தயாராயிருப்பவன் அத்தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான். தன்னிலை மறந்து மனதின் மிருகம் விழித்துக் கொண்டதொரு சமயம் தடம் புரளும் அவள் வாழ்க்கை. வேறெங்கும் நகலவியலா சூழல். நம்பிக்கையின் அத்தனை சாத்தியங்களும் அற்றுப்போக அவனுடன் சேர்ந்து தன்னுடலை விற்றுப் பிழைக்கத் தொடங்கும் இழிநிலை. தான் விரும்பிய பெண்ணை மற்றவரிடம் அழைத்துச் செல்கிறோம் எனும் குற்றவுணர்வைக் காட்டிலும் அவள் தன்னுடையவளாகத் தன்னருகே தன்னன்பில் இருக்கிறாள் என்பதில் அமைதி கொள்ளும் மனம். என்றேனும் தன் அன்பை அவள் புரிந்து கொள்ளக்கூடும் எனும் ஆழ்மன இச்சையோடு நகரும் வாழ்க்கை. இப்புனைவின் வழி வெளிப்படும் ஆண்மனம் என்னவாக இருக்கிறது? அவள் ஒரு வேசை என்பதைக் காட்டிலும் தன்னுடையவள் என்பதில் திருப்தி கொள்ளும் அதீத மனநிலை எதை விளக்குகிறது? உண்மை – பொய், நேர்மை – தீமை, அன்பு – வெறுப்பு எனத் தொடர்ச்சியாய் உலகின் அத்தனை இயக்கமும் இரண்டகத்தன்மைகளுக்குள் அடக்கிப் பார்க்கும் அவலத்திலிருந்து வெளியேறி இயங்கும் உணர்ச்சிகளின்பாற்பட்ட மனதின் அடையாளம் என்ன? வரையறுக்கப்பட்ட உணர்வுகளின் சட்டகங்களுக்கு வெளியே இயங்குபவனின் மீதான சமூக மதிப்பீடு எப்படி இருக்ககூடும் என்கிற எல்லாக் கேள்விகளையும் காசி என்கிற ஒற்றை மனிதனை முன்னுறுத்திப் பேசுகிறது பாதாசாரியின் மீனுக்குள் கடல்.

ஃப்ராயிட் மனித மனத்தினை மூன்று பிரிவுகளாக வகுக்கிறார். கான்சியஸ் எனும் மேல்மனம் (Conscious). சப்கான்சியஸ் எனும் அடிமனம் (Subconscious). இறுதியாய் அன்கான்சியஸ் எனும் ஆழ்மனம் (Unconscious). இம்மூன்று மனநிலைகளையும் கொண்டே மனிதனொருவனை நாம் இன்னாரென்று அடையாளம் கொள்ள வேண்டியதாகும் சூழலில் பாதசாரியின் காசியும் அவனது இயல்புகளும் கொள்ளும் உருமாற்றம் எத்தகையது?

குற்றவுணர்வு ஏதுமின்றித் தான் நினைப்பதைச் செய்து பார்க்க நினைக்கும் இந்தச் சமூகத்தின் அடிமனம் அல்லது சப்கான்சியஸ்தான் காசியின் மேல்மனம் அல்லது கான்சியஸ். நாம் அனைவரும் நம் ஆழ்மனதில் என்னவாக இருக்க விரும்புகிறோமோ அதனுடைய சமரசமற்ற வடிவம்தான் காசி. சீதாகாந்த் மகாபாத்ராவின் வரிகளில் சொல்வதானால் எல்லாருக்குள்ளும் தன்னையே கண்டுகொள்ளும் மனிதனவன். ஒவ்வொருவரும் அவனே. அவனுக்குள் நிகழும் அனைவரின் வலியாலும் துன்புறும் காசி ஒவ்வொரு உதாசீனத்திலும் சிதிலமடைகிறான். அவன் உதவியற்ற சாதாரணன். வாழ்வின் இருப்பையும் அதன் இன்மையையும் ஒற்றைச்சரடில் பிணைப்பவன். அவனுடைய வாழ்க்கை ஒரே சமயத்தில் தனிமொழியாகவும் பொதுக்குரலாகவும் ஒலிப்பது. உங்களையும் என்னையும் கட்டுப்படுத்தும் சட்டங்கள், சுய பிரக்ஞை, சமூக ஏளனம் என்கிற எல்லாத் தடங்களையும் மீறிச் செல்பவன் அவன். எது பற்றியும் கவலை கொள்ளாது தன் மனதைப் பின்தொடர்பவன். தன்னையும் தன் உணர்வுகளையும் மட்டும் மதிப்பவன். அவனை அறிந்த அனைவருக்கும் தங்களால் இப்படியொரு வாழ்வை வாழ முடியவில்லையே என்கிற ஏக்கத்தை உண்டாக்கிடுபவன். எனவேதான் எழுதப்பட்டு முப்பது வருடங்கள் ஆனபின்பும் காசி இன்னமும் ஜீவனோடு இருக்கிறான்.

தன்னைச் சுற்றி இருக்கும் மக்களைக் காட்டிலும் தன்னைத்தானே அதிகம் உணர்ந்தவன் காசி.images-2 இரண்டு “நான்”கள் – பிளவுபட்ட நான்கள் – சமூகத்தின் பார்வைக்கான நானும் மனமென்னும் நானும். வெளியிலிருக்கும் நான் என்பது வெறும் பூச்சாகவும் உள்ளிருந்து உணரும் நான் மட்டுமே உண்மை என்கிற தொடரும் உறுத்தல். சுயம் பற்றிய இந்த பிரக்ஞை இருப்பதலாயே தான் எழுதுவதை எல்லாம் வெற்று சுய புலம்பல் எனத் தாண்டிப் போக காசியால் முடிகிறது. இல்லடா டயரி மட்டும்தான். கவிதை கதைன்னு எழுதினா சுய புலம்பலா இருக்கு. பால் வராத முலைக்காம்பை உறிஞ்சுவது போல ஒரு சிகரெட்டைக் குடிக்கிறேன் என மிகுந்த கூர்மையோடு சொல்பவனைத் தன் சுயநினைவைத் தொலைத்தவன் என்றோ மனநிலை பிறழ்ந்தவன் என்றோ எப்படிச் சொல்வது?

எல்லாவற்றிலும் இருந்து விலகி நிற்க நினைப்பவனை துரத்தியபடி இருக்கும் யதார்த்த வாழ்வின் கூர்முனைகள். காசும் பணமும் தேடியலைய  வேண்டிய வாழ்வின் நிர்ப்பந்தம். எந்தவொரு வேலையிலும் அவனால் நிலைத்திருக்க இயலாது ஓடிக் கொண்டே இருக்கிறான். ஆரம்பத்தில் மில்லில் வேலை. பொறுப்புகளின் மீதான பயம் அவனைத் துரத்துகிறது. அங்கிருந்து வெளியேறுகிறான். மனம் பிறழ்ந்தவனாய் நடிக்கிறான். பின்னர் காதலிக்கும் பெண்ணுக்காக அச்சாபீஸில் வேலை. அவளுக்கான கவிதைப் புத்தகம் அச்சானபின்பு அதிலிருந்தும் தப்பி ஓடுகிறான். வேறொன்றும் முடியாத நிலையில் உடன்பிறந்த தமக்கையிடமே வீட்டு வாடகை வாங்கிப் பிழைக்கும் நிலை. அதுவும் சரிப்படாத சூழலில் நண்பர் ஒருவரொடு இணைந்து செய்யும் மருந்து வியாபாரம். ஒரு மருந்தை விற்க வேண்டுமெனில் டாக்டருக்கு கமிஷன் தரவேண்டுமென்பது காசிக்குக் குமட்டலை வரவழைக்கிறது.

இயல்பு என்பதாக சமூகம் ஏற்றுக்கொள்ளும் எதையும் ஒப்புக்கொள்ள மாட்டாதவனுக்கு காசுதான் சுதந்திரம் காசுதான் சுதந்திரம் என ஒரு இன்லாண்டு லெட்டர் முழுவதும் எழுதித் தீர்த்து தன் நண்பனுக்கு அனுப்புவதையும் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதையும் தாண்டி எந்தவொரு எதிர்வினையும் செய்யத்தெரியாத அப்பாவியின் மனம். தன் மனம் ஆன்மா வயிறு உடம்பு என அனைத்தையும் கழுவப் பணம் தேவையாக இருக்கிறது என அழுது அரற்றும் சுய காழ்ப்புணர்ச்சி. எல்லாம் தாண்டி தன்னைச் சுற்றி இருப்பவர்களை பாதிக்கிறோம் என உணரும் தருணத்தில் தன்னைத் திருத்திக் கொள்ள முனைபவனாக இருக்கிறான் காசி – அது அவனால் முடியாது எனும்போதும். முன்ன மாதிரி என்னப் பிச்சி வீசி வாந்தியில புரட்டி ஆபாசப்படுத்திக்கிறதில்லைடா. கஷ்டப்பட்டு விழுங்கிக்கிறேன். அப்பாவுக்காக..

காசியின் கனவின் எல்லாத் துளிகளிலும் பெண்களே நிறைந்து கிடக்கிறார்கள் . அவர்கள் அவனைப் பெரிதும் விரும்புகிறார்கள், வெறுத்து ஒதுக்கவும் செய்கிறார்கள். பிரம்மாண்டமான சிலை ஒன்றின் மாரில் புதைந்து பாலருந்துவதாகவும் பின்பு அதைப் புணருவதாகவும் கனவொன்று வருகிறது காசிக்கு. நினைவில் அந்த முகம் யாரெனத் தெரிய துயரம் கொண்டவனாகிறான். அது சிறுகுழந்தையாக இருந்தபோதே இறந்துபோன அவனுடைய அம்மாவாக இருந்திருக்கலாம். அல்லது அவனுடைய அக்காவாக இருக்கலாம். இல்லையெனில் அவனுக்கு இன்னும் வெகு நெருக்கமான பெண்ணாகவும். ஆனால் அவன் அத்தனை பெண்களிலும் ஒரு பெண்ணையே தேடுகிறான். யாதும் ஒன்றாகக் காணும் நிலையில் தான் விரும்பும் பெண் ஒரு தாயாக இருக்க வேண்டும் எனக் காசி தொடர்ச்சியாகச் சொல்வதை உளவியல் ரீதியாக பார்க்கையில் அத்தனை பெண்களிலும் அவன் தேடிக் கொண்டிருந்தது தனக்குக் கிட்டிராத தாயன்பை.

அவனால் பெண்களை மட்டுமே கடவுளாகக் கொள்ள முடிகிறது எனும்போது எல்லாவற்றையும் தாண்டி காசிக்கு வேண்டியதாக இருப்பது பாதுகாப்பு. அதை ஒரு பெண் அதுவும் தாயாக இருப்பவள்தான் தர முடியும் என்பது அவனுடைய நம்பிக்கை. தன் நண்பன் குணா பெண்ணாக இருந்திருந்தால் தான் இத்தனை சிரமப்படாமல் அவனோடு பாதுகாப்பாய் இருந்திருக்க முடியும் எனும் காசியின் வார்த்தைகளில் ஒளிந்து கிடப்பது அவனது பயமும் பாதுகாப்பின்மையும். பின்னொரு காலத்தில் வியாபார உலகில் விழுந்து உலகோடு ஒத்து வாழத் துவங்கினாலும் அவ்வுணர்வும் பயமும் காசியை நீங்குவதே இல்லை. எனவேதான் மீண்டுமொருமுறை விதவைப் பேராசிரியையிடம் தன்னை மணந்து கொள்ளும்படியாக வற்புறுத்தி சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். தான் முற்றிலும் மாறி விட்டதாக நம்பிவிட வேண்டாம் எனும் அவனுடைய வார்த்தைகளுக்குள் தொனித்துக் கொண்டிருப்பது என்றேனும் தனக்குள் ஒளிந்திருக்கும் உண்மையான காசி வெளிப்படக்கூடும் எனும் எச்சரிக்கை உணர்வு.

சமூகத்தின் மீதான எள்ளலும் வழக்கங்களின் மீதான கோபமும் நிரம்பி வழியும் காசியின் வாழ்க்கை. சகோதரி இறந்து போக அவளுடைய பிள்ளையை கைகழுவிட மாமன்கள் முடிவு செய்கிறார்கள். மாமன்மாரின் பகல் தூக்கத்தைக் குழந்தை அழுவதை யாரால் சகிக்க முடியும். தான் வேலையற்று சுற்றிய தினங்களில் எல்லாம் யாரேனும் இப்போது என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டால் பெருங்கோபம் கொள்ளும் குணாவுக்கு காசியோடு பேச்சை வளர்க்க அதே கேள்வி வேண்டியதாய் இருக்கிறது. அப்புறம்..? இப்ப.. நேரத்துக்குத் தூங்குவதும் விழிப்பதும் வேலைக்கு ஓடுவதும் திருமணம் செய்து குழந்தை ஒன்றைப் பெற்று வளர்த்து மரித்துப் போவதுமென இயந்திரமாகிப் போன மனித வாழ்வில் சக மனிதனோடு அமர்ந்து பேசவே நேரம் இல்லாத சூழலில் அடுத்தவன் மனம் குமைவது பற்றிப் பேச ஏது அவகாசம் அது எத்தனை நெருங்கிய உறவாக இருந்தாலும்? காசியின் அக்காவினுடைய  கணவருக்கும் இதுதான் நடக்கிறது எனும்போது அவரை நாம் எப்படிக் குற்றம் சொல்ல முடியும். மனிதாபிமானத்தைக் கொஞ்சமேனும் பராமரிக்க அவர் உழைப்பின் ஷிப்டில் நேரம் கிடைக்கவே இல்லை. காசி திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் அப்பாவோ ஒருபடி இன்னும் அதிகமாகப் போய் தன் மகளின் முதல் விவாகரத்துக்கு உதவிய வழக்கறிஞரைக் கொண்டே காசியிடம் இருந்தும் விவாகரத்து வாங்கித் தருகிறார். தொடர்ச்சியாக இப்பகடிகளின் வழியே கேள்விக்கு உள்ளாக்கப்படும் மனித வாழ்வின் இயல்புகள்.

காசி கடவுளைப் பற்றி இரண்டு இடங்களில் பேசுகிறான். குணாவிடம் நீ பெண்ணாக இருந்தால் நன்றாயிருக்கும் எனச் சொல்லும் சமயத்தில். அறிவோடக் குத்தலைப் பொருட்படுத்தாம சொன்னாக் கடவுளோட மடியில இருக்க மாதிரி. இங்கே அறிவின் குத்தல் எங்கிருந்து வந்தது என்பது காசி எழுதப்பட்ட காலம் சார்ந்த கேள்வி. எந்தத் திராவிட விரலும் தன்னை நோக்கி நீண்டு விடக்கூடாது எனும் அறிவின் குத்தலாக இருக்கலாம். மற்றொரு சமயம் சாமியாரிடம் காசி மீண்டும் கடவுள் பற்றிச் சொல்லுகிறான். ஆனா கடவுள்னு ஒருத்தர் இருந்துட்டாக்கூட பரவாயில்லைன்னு படுது சாமி. இதுதான் அவனது உண்மையான வெளிப்பாடு. இந்த ஏக்கம்தான் வாழ்வின் அத்தனை ஆதாரங்களையும் அசைத்துப் பார்க்கும் காசியின் அடிப்படைப் பிரச்சினை.

இலைகள் சிரித்தன காசியின் வாழ்விலிருந்து துண்டித்து எடுக்கப்பட்ட சின்னதொரு பகுதி. காசியில் அங்கங்கே சொல்லப்படும் அப்பாவினுடைய பாத்திரமும் அதன் மீதான நாயகனின் அன்பும் விரிவாகப் பேசப்படும் கதையில் அதிகம் பேசப்படுimagesவது அன்பு சார்ந்த தத்துவ விசாரணைகள். பின்னிரவில் எழுந்து கொள்ளும் காசி தன் தந்தையைக் காணாமல் எரிச்சலுறுகிறான். அலைபாயும் நினைவுகளும் அதன் தொடர்ச்சியாக உண்டாகும் தந்தை திரும்பாமலே போய்விடக்கூடும் என்கிற எரிச்சலும் பயமும். ஆனால் காலை வேளையில் திரும்பி வரும் தந்தையைக் கண்டவுடன் அவனுக்குள் எழும் ஆசுவாசமும் அவர் மீது அவன் உணரும் நெருக்கமும் அவனை நிம்மதி கொள்ளச் செய்கின்றன. உறவுகள் பற்றிய மெல்லிய உணர்வுகளையும் அவை உண்டாக்கும் சலனங்களையும் பேசிப்போகும் உதிர்ந்த இலைகள் சிரித்தன.

சமூகம் – அது சார்ந்த தனதிருப்பு, காதல் மற்றும் காமம் ஆகியவற்றைப் பேசுகின்றன பாதசாரி அல்லது காசியினுடைய கவிதைகள். யதார்த்த வாழ்வு மற்றும் கனவு என இரு தளங்களில் இயங்கும் இக்கவிதைகளை காசிதான் எழுதியிருக்கக் கூடும். அதற்கான தரவுகளும் தொகுதியில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளின் மூலமாகவே கிடைக்கின்றன. குணாவை மதுபான விடுதியில் சந்திக்கும் காசி கன்ஃபெசன்ஸ் ஆஃப் சீனோ என்கிற இடாலோ செவெவோவின் நாவல் குறித்து உரையாடுகிறான். தன்னைப் போலவே அந்த மனிதரும் ஈக்குஞ்சு பற்றி கவிதை எழுதியிருப்பதை பகிர்ந்து கொள்கையில் பிரமாண்டமாய் விரிகிறது அவன் சந்தோசம். புருஷனுக்குத் தெரியாமல் பலதடவை பிணங்களுக்கு கொஞ்சம் தலைக்கு வெண்ணையும் காட்டுக்கு வறட்டியும் இலவசமாகத் தந்த ஒரே அக்காவும் எங்கோ தொலைவூரில் சாணி தட்டும் ஓசை கேட்கிறது என்பதில் துயரத்தின் உருவமாய் வாழ்ந்து கொண்டிருப்பவள்  காசியின் அக்கா. கனவில் வனமொன்றின் ஊடாகப் பிரவேசித்து மிகப்பெரிய சிலையொன்றின் மார்பில் முட்டி மோதி இறுதியாய்ப் புணர்ந்து இன்னாரென முகம் தெரிகையில் சுக்கல் சுக்கலாய் உடைந்து போகும் காசியின் குற்றவுணர்வு நெளிந்திடும் மீனுக்குள் கடலாய். நிர்வாணத்தில் ஒளிரக் கண்டேன் அவளே என் அம்மாவும் அவளே என் தங்கையும் அவளே என் மனைவியும் அவளே என் குழந்தையும் அவளே. ஒருவளே எல்லாமுமாய் ஆதியும் அந்தமுமாய்.

காக்கி உடையில் பேருந்துக்காக காத்து நிற்கும் பெண் போலீசைப் பதிவு செய்யும் காசியின் கனவுகளில் வெட்டுண்ட ஆடுகள் இட்டேறியில் மே..ங் என்றலறுகின்றன. எதிலும் நிலையாய் இருக்கமாட்டாது நனவிலும் கனவிலும் மாறி மாறி உழல்பவனின் வாகனம் எந்தவித கவனிப்புமின்றி தொய்ந்து நிற்கிறது. சிறுவாணி நீரும் நண்பரின் கடிதமும் ஆதூரமாய்ப் பார்த்துக் கொள்ள சில மனங்களும் தேடி ஏங்குபவன் இறுதி வரைக்கும் அழகானதொரு சாட்டை செய்ய முயன்று தோற்றவனாகவே இருக்கிறான். தன் மனக்குரங்குக்கு உடைகள் தைத்து சலித்தோடும் அவன் யாக்கையின் காலம். எனவேதான் எத்தனை முறை தோற்றும் கவலை கொள்ளாது மீண்டும் காதலில் வீழ்கிறான். உலகில், உலகின் எல்லாவற்றிலும் பெண்ணின் அரவணைப்பைத் தேடும் இதயம். காதலின் வலி பெருகி நிற்க காதலியின் மார்புக் குருதியை மறக்க இயலாதவனால் உணர முடிகிறது குறுக்கும் நெடுக்குமான தங்களிருவரின் உடலையும் பிரிக்கவியலாதொரு சிலுவையென. வடிவங்கள் வண்ணங்கள் என எதையும் ஒரு பொருட்டெனக் கருதாத அவனால் தன் பிரியத்துக்குரியவளை வேர்களால் தழுவிக் கொள்ள மட்டுமே முடிகிறது. ஏனெனில் கணிதத்தால் அளக்க மாட்டாதவையாக இன்னும் இவ்வுலகில் வேர்கள் மட்டுமே இருக்கின்றன. தான் நேசிப்பவள் அழகு என்பதைக் காட்டிலும் பெண் என்பதைக் காட்டிலும் அது முத்தம் என்பதாலேயே முத்தமிடுவதாய்ச் சொல்பவன் சிரித்தபடி கேட்கிறான். முத்தத்தில் உண்டோடி என் முத்தம் உன் முத்தம்  நம் முத்தமும் இல்லை அது – முத்தம். காதலிக்கும் மனதின் பொதுவில் கசியும் ஈரமெனவிருக்கும் உயிர்.

வழியில் ஒன்று மட்டும் புரிகிறது புறப்படாமலேயே போய்க் கொண்டிருக்கிறேன். எதுவும் எல்லாமும் பறக்கும் இவ்வுலகில் பிரிவும் கூடலும் அர்த்தமற்றதந்த் தொனிக்கும் நிதர்சனம். வெகு குறைவாகவே தத்துவவிசாரம் பேசுபவனைத் துரத்தும் மனிதம் தொலைத்து இயந்திரமாய்ச் சமைந்த உலகம். காட்டுப் பூக்களின் வாசனைக்கு தவிக்கும் மனம்.  மலைகளில் காயப் பொருக்குகளாய் மாடி வீடுகளும் மனிதனின் ஆசனங்களாய் மாறும் கொல்லப்பட்ட காடுகளும் இரத்தமாய் ஊற்றெடுக்கும் அமிலம் விரட்டிய மேகங்களின் வியர்வையும் உண்டாக்கிப் போகும் சூனியம். வேலை பார்த்துத்தான் பிழைக்க வேண்டும் எனும் வாழ்வியல் நெருக்கடி மதிய வேளைத் தூக்கத்தையும் குற்றமாய் உணரச் செய்யும். மின்சாரம் தாக்கியிறந்த காகத்தைச் சுற்றி நிற்கும் பிற காகங்களின் படபடப்பும் நடுத்தெருவில் சோகம் கசிய நின்றிடும் ஆண் கழுதையும் காதுகளுக்குள் உரத்துச் சொல்லியபடி இருக்கும் தனது நிலையை. புத்தகங்கள் சூழ்ந்திருக்க உலர்ந்த கண்ணாடிக் கோப்பைகளின் வழியே மெலிதாய்க் கரைபவன் அனைத்துமாய் தானே உருமாறுகிறான் சிந்துபாத்தாய் கிழவனாய் இறுதியில் சிவனாய். மின்சாரம் அள்ளி முகம் கழுவ விழைபவனின் உலகில் எதிரிகள் என்றும் எவருமில்லை. தன்னைத் தானே அவன் தலைப்பிட்டழைக்கும் பெயரும் அழகியல் சார்ந்ததாய் ஆணின் பெயராகவோ பெண்ணின் பெயராகவோ செல்லப்பிராணியின் பெயராகவோ இல்லை. ஒரு பிச்சைக்காரன் பைத்தியக்காரன் விபச்சாரி குஷ்டரோகி அனாதை அழைக்கும் பெயராகவே இருக்கும் அவனுடைய பெயர் அத்தனை ரகசியமானது கிடையாது. புலியொன்றின் முதுலிருக்கும் சீழ் கொப்பளமெனக் காலத்தில் பழுத்துக் கொண்டிருக்கிறான்.

தன் வாழ்வின் பாதை முழுதும் தோல்வியின் நிழல் படிந்தவனாகவே இருக்கிறான் காசி, இறுதி வரைக்கும். பின்னாட்களில் தமிழில் எழுதப்பட்ட சம்பத்துகளுக்கும் சவுந்திரராஜன்களுக்கும் பெயர் தெரியா இன்னும் எத்தனையோ நண்பர்களுக்கும் அவன் ஒரு முன்னோடி.

இவை ஃப்ராயிடின் வார்த்தைகள். ”பெரும்பாலான மனிதர்கள் சுதந்திரத்தை விரும்புவதில்லை. ஏனெனில் சுதந்திரம் மனிதனை பெரியதொரு பொறுப்ப்புகு ஆட்படுத்துகிறது. அதனை எந்தவொரு மனிதனும் விரும்புகிறவனாய் இருப்பதில்லை” காசி தன்னைப் பற்றியும் இதைத்தான் சொல்கிறான். காசியின் மொத்த வாழ்வையும் அவனது வார்த்தைகளில் சொல்வதானால் “ஃபியர் ஆஃப் ரெஸ்பான்சிபிலிட்டி அண்ட் ஃப்ரீடம்..”

 

1 comment for “பாதசாரியின் “மீனுக்குள் கடல்” தொகுதியை முன்வைத்து…

  1. paadhasaari vishwanathan
    March 4, 2017 at 10:58 pm

    வரிகளில் ஊடுருவி உணர்வுகள் தொட்டு அர்த்தமும் பிரித்து என் எழுத்தின் ஊற்று முகம் கண்ட கார்த்திகைப் பாண்டியனுக்கு அன்பும் நன்றியும்..கூடவே வல்லினத்திற்கும்…

Leave a Reply to paadhasaari vishwanathan Cancel reply