திறவுகோல் 6: ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்

download (2)மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனால் எழுதப்பட்டு சுடர் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். ‘ஆப்பே கடையில் நடந்த 236-ஆவது மேசை உரையாடல்’, ‘மலை உச்சியில் உறைகிற மௌனங்கள்’ என இரண்டு குறு நாவல்கள் இந்நூலில் இடம் பெற்றிருந்தாலும் ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ என்ற நாவல்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ‘மலை உச்சியில் உறைகிற மௌனங்கள்’ என்ற நாவல் கடாரத்தில் இருக்கும் ஜெராய் மலையைப் பற்றி உலாவும் வாய்மொழிக் கதைகள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் மாய ஜாலங்கள் கலந்து புனைவாக எழுதப்பட்டுள்ளது.

மலேசியக் குண்டர் குழுக்களை மையமாக கொண்டு இந்நாவல் புனையப்பட்டுள்ளது. “மிகவும் பாதுகாப்பான ஒரு சூழலில் வாழும் பலர் எட்டிப் பார்க்கத் தயங்கும் ஒரு கதைக்களம்”, என நூலாசிரியர் குறிப்பிடுவது போல பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதுகாப்பான சூழலில் வாழும் எனக்கு இந்தக் குறுநாவல் அதிர்ச்சி அளிக்காவிட்டாலும் (ஒருவேளை கபாலி திரைப்படத்தைப் பார்க்கும் முன் வாசித்திருந்தால் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்) பல கேள்விகளை முன்வைத்தது.

எழுபதுகளின் இறுதியில் தோட்டங்கள் துண்டாடப்பட்டவுடன் வீடு, வேலையை இழந்த இந்தியர்கள் சிறு நகரங்களை நோக்கி இடம் பெயர்கிறார்கள். அப்படி இடம் பெயர்ந்து பெடோங் என்ற புறநகர் பகுதிக்கு வந்து சேர்ந்த தோட்டத்தமிழர்களில் இருந்த இரு குண்டர் குழுக்களுக்கு இடையே நடக்கும் ரத்தமும் சதையுமான வன்முறைப் போராட்டம்தான் கதையின் கரு. 1970-ஆம் ஆண்டிலிருந்து 1994 வரை கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட காலகட்டத்தில் பெடோங் பகுதியில் நடந்த சம்பவங்களை இந்நாவல் நான் லீனியர் முறையில் சொல்லிச் செல்கிறது.

கதையின் களமாக இருப்பது ஆப்பே கடை. எங்கள் ஊர்ப்பக்கதில் இருக்கும் ஆப்பக் கடையைத்தான் நூலாசிரியர் ஆப்பே கதை என்கிறார் போலும் என நினைதேன். வாசித்த பிறகுதான் ஆப்பே கடையின் பெயர்க் காரணம் விளங்கியது. ஆ பேங் என்ற சீனரின் கடை அது. அவருடைய வீட்டின் முன்வராந்தாவில் கட்டப்பட்டுள்ள அந்தக் கடையில் தேநீர், காப்பி, கருப்பு பீர், பட்டைச்சாராயம் ஆகியவை விற்கப்பட்டுள்ளன. இக்கடை சாமானியர்களுக்கு மனச்சுமையை இறக்க உதவும் இடமாகவும் குண்டர்களுக்கு போதைப்பொருள் வியாபார பேரம் பேசும் இடமாகவும் இருந்துள்ளது. கடையின் முன் வாசல் பக்கம் இருந்த மேசைகளில் சாதாரண மக்கள் காப்பி, தேநீர் குடிப்பதும் நடு தடுப்பிற்கு பின்னால் இருந்த மேசைகளில் பட்டை சாராயம் குடித்துக்கொண்டு குண்டர்  குழுக்கள் உரையாடல் நடத்துவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. 236 டேபிள் டாக்ஸ் நடந்து முடிந்திருந்த ஆப்பே கடையில் சில உரையாடல்களின் முடிவில் சண்டையும் சாவும் நிகழ்வது சகஜமாக இருந்துள்ளது.

தாய்லாந்திலிருந்து கட்டியைக் (போதைப் பொருள்) கடத்தி வந்து வியாபாரம் செய்வது, ‘ஆள் மார்க்’ செய்து கொல்லும் கூலிப்படையாகச் செயல்படுவது, கட்டை (துப்பாக்கி) கடத்துவது, தாய்லாந்திலிருந்து பெண்களைக் கொண்டு வந்து விபச்சாரம் செய்வது போன்ற சட்டத்திற்குப் புறம்பான வேலைகளைச் செய்யும், தினசரி வாழ்வுக்கும் சாவுக்கும் மத்தியில் போராடும் நிழல் மனிதர்களின் கதையை இந்நூல் பதிவு செய்துள்ளது.

குண்டர் குழுவின் வரலாற்றுப் பிண்ணனி எனக்குப் புதிய செய்தியாக இருந்தது. 1624-ஆம் ஆண்டு சீனாவில் உருவான ‘கொங்சி கெலாப்’ (குண்டர் கும்பல்) கலாச்சாரம், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் புலம் பெயர்ந்து வந்த சீனர்களுடன் மலாயாவுக்குள் பின்தொடர்ந்து வந்துள்ளது. எண்பதுகளில் சீனர்களின் ‘கொங்சி கெலாப்’ கும்பல்கள் சிதறிப்போன பிறகு இந்திய இளைஞர்கள் கம்பங்களையும் தோட்டங்களையும் தங்களது பிடிக்குள் கொண்டு வந்துள்ளனர். .

சரசு என்ற கதாபாத்திரம் மிக அழகாக கட்டமைக்கப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து ஓடிவந்து கீழ்சாதிப் பையனைத் திருமணம் செய்து கொள்கிறாள். அவளது கணவனை யாரோ அடித்துப்போட அதில் அவனது கால் ஊனமாகிறது. அடிக்கச் சொன்னது அவளது அப்பாதான் என்று சந்தேகிக்கும்  நொண்டிக் கணவன் அவளை உடலாலும் மனதாலும் துன்புறுத்துகிறான். ஒருநாள் ஆப்பே கடையில் கணவன் கொல்லப்பட தனி மனுஷியாக ஏதேதோ வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். தனது பிள்ளைகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கி கடத்தலுக்குத் துணை போகிறாள். இறுதியில் கொல்லப்பட்டு அநியாயமாக செத்துப்போகிறாள். பிறந்த வீட்டில் ஒரே பெண்ணாகவும், செல்லப் பெண்ணாகவும் இருந்து பூக்களை மாலையாகத் தொடுத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த சரசுவின் வாழ்க்கை இறுதியில் குண்டர் கும்பலில் வந்து முடியும்போது அவள் மீது பரிதாபம் எழுகிறது. தொடர்ந்து துன்பங்களை மட்டுமே சந்திக்கும் அவள், நத்தை தனது ஓட்டுக்குள் சுருங்கிக் கொள்வது போல தன்னைத் தனக்குள் சுருக்கி, இறுக்கி, முறுக்கிக் கொள்கிறாள். பெண்ணியவாதி போல அவள் காட்சி அளித்தாலும் இறுதியில் குண்டர் கும்பல் என்ற ஆண்களின் உலகத்தில் பலிகடா ஆக்கப்படுகிறாள்.

வரலாறு எப்பொழுதுமே வெற்றி பெற்றவனை நோக்கி எழுதப்படுவது. அதில் சாமானியர்களின் கதைகள் காணாமல் போவதுண்டு என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இருண்ட உலகத்தின் மனிதர்களைப் பற்றிப் பேசும் இக்கதையிலும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் வெற்றி பெற்ற பப்பாக் (குண்டர் குழு தலைவன்) மற்றும் அவனது கையாட்களைப் பற்றித்தான்  அதிகம் பேசப்பட்டுள்ளது. இந்தக் கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்ட சாமானியர்களின் வாழ்க்கையை இன்னும் சற்று விலாவாரியாக நாவல் பேசியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

குண்டர் கும்பல் சண்டைகளில் கொல்லப்பட்ட ஆண்களின் மனைவிமார்கள் இரவு நேரத்தில் வேலைக்குப் போதல், அவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், கணவனை விட்டுவிட்டு வேறு ஆணோடு ஓடிப்போதல், மனைவியை சந்தேகப்படும் கணவன்கள், அங்கே வாழ முடியாதவர்கள் வேறு இடத்திற்கு இடம் பெயர்தல், போதைப்பொருள் கடத்தியாவது தனது பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க முனைதல் போன்றவை அங்கு வாழும் எளிய மனிதர்களின் நிலையை வெளிப்படுத்தினாலும் அங்கு வாழும் சீனர்களின் வாழ்க்கை முறை, அவர்களுக்கும் தமிழர்களுக்குமான உறவு, அரசின் ஒருசார்பு நிலை, அந்தச் சூழலில் பிறந்து வளரும் குழந்தைகள், அவர்களுக்கான கல்வி மற்றும் பாதுகாப்பு என்று தொடர் சங்கிலியாக மனதில் எழும் பல சிந்தனைகளுக்கான பதில்கள் இந்நாவலில் இல்லாதது ஏமாற்றம் அளித்தது.

குண்டர் கும்பலில் இருக்கும் இருபது வயது இளைஞன் ஒருவனின் வாக்குமூலத்தோடு நாவல் நிறைவு பெறுகிறது. “பள்ளிக்கூடத்துல எப்பப் பார்த்தாலும் ஹிந்து பறையா, கிளிங் பாபின்னு சொல்லுவானுங்க. கூடப் படிக்கிற மத்த தமிழ்ப் பையனுங்களே அப்படித்தான் சொல்லுவானுங்க. அவனுங்க என்னவோ கவுண்டர்களாம்… தேவர்களாம்.. அவனுங்கலாம் ஆளு சேர்த்து என்ன அடிப்பானுங்க” என்ற வரி பல விஷயங்களை வாசிப்பவருக்குச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது. சாதிய மற்றும் இன அடக்குமுறைகள் குண்டர் குழு உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கான எதிர்ப்பு மனோபாவம்தான் அந்த இளைஞனைக் கட்டையை (துப்பாக்கி) காளியின் அரிவாளாகப் பார்க்க வைக்கிறது.

தெளிந்த நீரோட்டம் போல வாழ்க்கை அமைந்தவர்களுக்குச் சட்டத்திற்குப் புறம்பான வாழ்க்கை மேற்கொள்ளும் குண்டர் குழுக்களின் செயல்பாடுகள்  அநியாயமானதாகவும் தவறானதாகவும் தெரியலாம். ஆனால் ஒரு நாட்டில் சிறுபான்மை இனமாக வாழும்போது எதிர்கொள்ள நேரிடும் சிக்கல்கள், மறுக்கப்படும் உரிமைகள், பாரபட்சமான சலுகைகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இவற்றின் பிண்ணனியோடு குண்டர் குழுக்களை நோக்கி,   புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளவேண்டிய முக்கியத்துவத்தை இந்நாவல் அழகாக சொல்கிறது.

மேசையின் இந்தப் பக்கம் வாசகியாக நான் அமர்ந்து கேட்க அந்தப் பக்கம் கதை சொல்லியாக பாலமுருகன் அமர்ந்து கதை சொல்ல ஆப்பே கடையில் நடக்கும் 237 ஆவது மேசை உரையாடல் போல இந்நாவலின் வாசிப்பனுபவம் இருந்தது. பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டும் வாழ்வைச் சரிவர பதிவு செய்யத் தவறிய நாவல்கள் இருக்கின்றன. ஆனால் வெறும் எழுபதே பக்கங்களில் மலேசிய இலக்கியம் பதிவு செய்யாத ஓர் உலகத்தைக் கருவாக எடுத்துக்கொண்டு நிழல் மனிதர்களைப் புனைவு வெளிக்குள் உலவவிட்டு பலரும் அறியாத ஒரு வாழ்க்கையைச் சரியாகச் சொன்னதன் மூலம்  பாலமுருகன் ஒரு நாவலாசிரியராக வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

1 கருத்து for “திறவுகோல் 6: ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்

  1. P.BALAN A/L S.PALANISAMY
    March 10, 2017 at 11:14 am

    பாராட்டப்படவேண்டிய ஒரு முயற்ச்சி. நாவலாசிரியருக்கு வாழ்த்துக்கள் !!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...