காசி கவிதைகள்

அந்த இரவுnavin 3

இந்த இரவில் அவ்வளவு கறுமையில்லை
எங்கிருந்தோ ஒரு மணியின் ஓசை
கண்கள்வழி புகுந்து
வெளிச்சம் கொடுக்கத்தொடங்கியது
தோல்களை உரசிய காற்று
இரவைக் கிழித்து
காட்சிகளைப் படிமங்களாக்கியது
இப்போதுதான் எரியத்தொடங்கிய
பிணத்தின் சாம்பல்வாடை
இரவுக்குள் கண்களை ஊர்ந்துசெல்ல வைக்கிறது
நான் கங்கையைப் பருகியபோது
கறுமை தனது ஆடைகளைக் களைந்து
இந்த இரவை அத்தனை கருமை இல்லாததாக்கியது.

 

சில உருண்டை பாங்குகள்navin 2

ஓருருண்டை பாங்க் என்பது
ஒரு சிறுமியில் கலர் பென்சிலாக இருக்கலாம்

சிறுமியின் கலர் பென்சிலால்
இலைகளை நீலநிறமாக்க முடியும்
மனித முகங்களை பச்சையாக்க முடியும்
எல்லா பொருள்களின் மூலைகளிலும் அழுத்தமான கோடிட முடியும்
அவள் விரும்பும் இடத்தில் நட்சத்திரத்தை மின்னச்செய்ய முடியும்
இசைக்குறியீடுகளை வான்பரப்பெங்கும் நீந்தச்செய்ய முடியும்

ஈருருண்டை பாங்க் என்பது
ஒரு சிறுமியின் விளையாட்டுச் சமையல் பொருளாகவும் இருக்கலாம்

சிறுமியின் பானைகளில்
எப்போதுமே மணம்வீசும் உணவுகள் தயாராகிக்கொண்டே இருக்கும்
சிறுமியின் விளையாட்டுக்கரண்டி
பசியுடன் உள்ள எவருக்கும் உணவை ஊட்ட உந்தும்
சிறுமி வைத்திருக்கும் குவளைகளில்
நாம் விரும்பும் பானங்கள் நிரம்பி வழிந்து கால்களை நனைக்கும்
சிறுமியின் விளையாட்டுப் பாத்திரங்களில்
உணவு இருப்பதுபோன்றே பசியும் இருக்கும்

மூவுருண்டை பாங்க் என்பது
ஒரு சிறுமியின் புத்தகப்பையாக இருக்கலாம்

சிறுமியின் புத்தகப்பையில்
பணத்தாளாக மிட்டாய் காகிதங்கள் பதுங்கிகிடக்கும்
திருகப்பட்ட  எச்சங்கள்
பென்சிலைவிட பத்திரமாகச் சேகரிக்கப்பட்டிருக்கும்
வீட்டில் வீசப்பட்ட தீப்பெட்டிகளை
தனது இரப்பர் வைக்கும் அறையாகச் சிறுமியிடம் சிக்கியிருக்கும்
சிறுமியின் புத்தகப்பை
உலகுக்கு ஒன்றாகவும் அவளுக்கு ஒன்றாகவும்
இருவகையில் காட்சி தரும்

பாங்குகள் நம்மை குழந்தைகளாகவோ
பின்னர் அவர்களின் அந்தரங்கப் பொருள்களாகவோ
மாற்றுகிறது
இறுதியின் கொஞ்சம் பின் சென்று
ஆதியில் இருந்த அணுவாக மாற்றியேவிடுகிறது.

காசியில் – 22.3.2017

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...