அசோகமித்திரன் : எளிமையின் நடை

sri 31993, கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது என்று ஞாபகம். அப்போதைய வாசிப்பு சற்றே இலக்கில்லாமல் இருந்தது. நானாகத் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். ராஜேஷ் குமார், சுபா, பிகேபி கதைகளைத் தாண்டி சுஜாதாவுக்கு வந்து பாலகுமாரனில் நிலைகொண்டிருந்த காலகட்டம். தீவிர இலக்கிய வாசிப்பு என்பது அவ்வளவாக இல்லை. யாரைப் படிக்க வேண்டுமென்பதே தெரியாது. அப்போது மதுரைக்கல்லூரியின் ஹார்வி நூலகம்தான் மாவட்டத்திலேயே பெரியது. அங்கிருந்து அல்லது அரசு நூலகத்திலிருந்து கைக்குக் கிடைக்கும் புத்தகங்கள்தான் எனக்கு வாசிக்க. கல்லூரியில் உடன் பயின்றவர்களில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என கண்ணுக்கெட்டிய தொலைவு வரை யாருமே இல்லை. எனவே இதையெல்லாம் வாசிக்க வேண்டும் என்று சொல்ல யாரும் கிடையாது. ஆனால், எப்படியோ அந்த நாவல் எனக்குக் கிடைத்தது. ‘தண்ணீர்’. அசோகமித்திரனின் படைப்புகளில் நான் முதலில் வாசித்தது அந்த நாவலைத்தான்.

பதின்ம வயதில் அந்தக்கதையை என்னவாக உள்வாங்கிக் கொண்டேன் என்பது சரியாக நினைவிலில்லை. ஆனால் அந்தக்கதை நீண்ட நாட்களுக்கு என் நினைவிலிருந்து அழுத்திக் கொண்டேயிருந்தது. காரணம், சென்னையைக் களமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நாவல்கள், கதைகள் என நான் அதற்குமுன் வாசித்து வைத்திருந்தவை காட்டிய சித்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சித்திரத்தை அப்படைப்பு எனக்குள் உருவாக்கியிருந்தது. அப்போதெல்லாம் மதுரையில் தண்ணீர் தட்டுப்பாடு அவ்வளவாக இல்லை, வீட்டுக்கருகில் இருந்த வாழைத்தோப்புக்குள் வட்டக்கிணற்றின் பம்புசெட் குளியல் வாய்த்திருந்தது. எனவே முகத்தில் அறைந்தாற்போல அந்நாவலில் வரும் தண்ணீர்ப் பஞ்சக் காட்சிகள் என்னை வெகுவாகவே பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஒட்டுமொத்த நகரமும் தண்ணீருக்கு அலைந்து கொண்டிருப்பது எனக்குள் வியப்பையும் அச்சத்தையும் பல்வேறு யோசனைகளையும் கொடுத்தது என்பதோடு சென்னையைக் குறித்த புதிய பார்வையும் உருவானது. (அதற்குமுன் ஒரே ஒருமுறை சென்னை சென்று மெரினா பீச்சைப் பார்த்துத் திரும்பியதோடு சரி. சென்னையைப் பற்றி ஒன்றும் தெரியாது). இரண்டாவதாக ஜமுனா மற்றும் சாயாவின் வாழ்க்கை. அதுவரையில் நான் படித்திருந்த நாவல்கள் சிறுகதைகள் பெரும்பாலும் வாழ்க்கை குறித்த நம்பிக்கைகளை, தளராத ஊக்கமும் உழைப்பும் இருந்தால் எப்படியும் முன்னேறி விடலாம் என்ற எண்ணத்தை, ஆசுவாசத்தை அளித்திருந்தவை. அதை முதலில் கிழித்துத் தூரப்போட்டது இந்நாவல். ஜமுனாவும் சாயாவும் தண்ணீருக்கு அலைக்கழிக்கப்படுவதைப் போலவே, நிம்மதியான வாழ்க்கைக்கும் போராட வேண்டியிருப்பது முதன்முதலாக எனக்குள் வாழ்க்கை குறித்த சந்தேகத்தை, பயத்தை விதைத்தது எனலாம். அதுதான் வாழ்வியல் எதார்த்தம் என்பது பின்னால் விளங்கியது. எனவேதான் இன்றுவரை இந்நாவல் என் நினைவில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘18வது அட்சக்கோடு’ நாவலை வாசித்தேன்.punniya 1 இடையில் வாசிப்பில் பயிற்சி கூடியிருந்தது என்பதால் இந்நாவலை இன்னமும் அதிகமாக ரசிக்க முடிந்தது. இடங்கள், கட்டிடங்கள் குறித்த விரிவான வர்ணனைகள் உள்ளது. ஆனால் நாவலின் இடையே வரும் கிரிக்கெட் வர்ணனைகள் மிகவும் அலுப்பூட்டக் கூடியவையாக இருந்தாலும் (எனக்கு எந்த விளையாட்டிலும் ஈடுபாடு இருந்ததில்லை, அதிலும் குறிப்பாக கிரிக்கெட் மீது ஒவ்வாமைதான் உண்டு, அதனால் இருக்கலாம்) சுதந்திரத்திற்குப் பிறகான ஹைதராபாத் நிஜாம் காலத்திய சூழல் மிக முக்கியமான பதிவு. பல்வேறு போராட்டங்களின் வழி சுதந்திரம் பெற்ற பகுதிகளிலிருந்து இன்றைய இந்தியா உருவான விதத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமாக அந்நாவலைச் சொல்லலாம். அந்நாவலின் முடிவு என்னை மிகவும் பாதித்த ஒன்று, முதன்முதலாகப் பார்க்கின்ற ஒரு பெண்ணின் நிர்வாணம் முற்றிலும் எதிர்மறையான விளைவுகளை சந்திரசேகரன் எனும் இளைஞனுக்கு ஏற்படுத்தும்.

கலவரத்தின் விளைவுகளைத் துல்லியமாக, அதன் அதிர்ச்சியையும் பெருந்துயரையும் வாசிப்பவருக்குக் கடத்தும் விதத்தில் எழுதியவர்களில் மண்ட்டோ முக்கியமானவர். இந்தியா-பாகிஸ்தான்  பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரங்களை மிகச்சுருக்கமான சொற்களில் ஆனால் வாசிப்பவர்களின் மனத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் எழுதியிருப்பார். அதே அழுத்தத்தை அசோகமித்திரனின் இந்நாவல் முடிவும் நமக்குள் உருவாக்கக்கூடியது. இது அவரது மிகச்சிறந்த படைப்பு என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அவரது படைப்புகளைப் பேசும்போது எல்லோரும் குறிப்பிடுவது அவரது எளிமையான நடை. விஷயங்களைத் தவறவிட்டு விடும்படிக்கு உங்களை ஏமாற்றக்கூடிய மிக எளிமையான நடை. இதனாலேயே அசோகமித்திரனை பல வாசகர்கள் சரியாக மதிப்பிடவில்லையோ என்று கூட நினைக்கிறேன். அதேசமயம் அவரது நடை மிகக்கூர்மையானதும் கூட. அவரது கதைகளில் பெரும்பாலானவை உரையாடலால் மட்டுமே நகர்த்திச் செல்லப்படுபவையாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் வழி எண்ணினாற்போல சில சொற்களின் மூலமாக மொத்தக்கதையின், அப்பாத்திரத்தின் கட்டமைப்பை வெளிப்படுத்துவதுதான் அவரது பலம் என்று நினைக்கிறேன். அதைச் சரியாக அணுகக்கூடிய வாசகனுக்கு அவரது படைப்புகளின் மீதான விருப்பம் வேறானது.

உதாரணமாக அசோகமித்திரனது அடையாளமாக மாறிவிட்ட சிறுகதையான புலிக்கலைஞனில் வரும் டகர் பாய்ட் காதர் கூறும், “நம்மளது வேறமாதிரிங்க.” என்ற அந்த இரண்டு சொற்கள் மிகப்பெரிய சித்திரத்தை உள்ளடக்கி வைத்திருப்பதை கவனிக்க முடியும். என்னை மற்றவர்களோடு சேர்த்துப் பொதுமைப்படுத்த முடியாது, என் திறன் தனித்துவமானது என்ற ‘கலைத்திமிர்’ கொண்ட வார்த்தைகள் எந்தவொரு அசலான கலைஞனுக்கும் பொருந்தக்கூடிய வார்த்தைகள். அதனாலேயே அவனால் எல்லா இடத்திலும் பொருந்திப்போக முடியவில்லை. அவன் அங்கே வந்ததே கூட தனது தனித்திறன் மதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில்தான் என்று யூகித்துக் கொள்ளலாம். அவனை அவ்வளவு பிரம்மாண்டமாகக் காண்பிப்பதனால்தான் அடுத்து கால் தரையில் பாவ, “நான் சம்பாதிச்சுப் பல மாசம் ஆச்சுங்க,” என்று வாய்ப்புக்கேட்டு அழும்போது ஒரு கோபுரம் இற்று இடிந்து விழுவதான உணர்வைத் தருகிறது. அந்த இரண்டு சொற்களை இயல்பாகக் கடந்துசென்றுவிட்டீர்கள் என்றால், ஒரு ஏழைக்கலைஞனின் வயிற்றுப்பாடு எனுமளவில் அவ்வளவு தட்டையான ஒரு அர்த்தத்தைக் கொடுத்துவிடும் சாத்தியம் இக்கதையில் உண்டு. இந்தத்தன்மை அவரது பெரும்பாலான கதைகளில் உண்டு.

அசோகமித்திரனின் எழுத்துநடை குறித்து ஜெயமோகன் கூறும்போது ‘அசோகமித்திரனின் மொழிநடைக்கு இந்திய மரபிலும் சரி, தமிழ் மரபிலும் சரி, வேர்கள் இல்லை என்று பொதுவாகக் கூறலாம்’ என்றார். அது உண்மைதான். அவரது நடையை யாருடனேனும் ஒப்பிட்டுக் கூறமுடியும் என்றால் ஹெமிங்வேயைச் சொல்லலாம் என்று எனக்குத் தோன்றும். அவரது எழுத்தில் கவனிக்கவேண்டிய மற்றுமொரு அம்சம் அதிலுள்ள நகைச்சுவை. துயரமான அல்லது நெருக்கடியான ஒரு சூழலை விவரிக்கும்போதும் கூட அதில் நகைச்சுவை ஒளிந்திருக்கும். அதுபோலவே மிகையான உணர்ச்சிகளோ, அவை குறித்த அதீதமான சித்தரிப்புகளோ அவரது கதைகளில் இருக்காது. அப்படியான சூழ்நிலைகளைக் கூட சிலவரிகளில் கடந்து சென்றிருப்பார். கடைசியாக விகடனின் தடம் இதழில் வெளிவந்த அவரது நேர்காணலை வாசித்திருந்தேன். இளமையில் வறுமையை அனுபவித்தவராயினும் அதுகுறித்து அவருக்குப் புகார்கள் ஏதும் இல்லை என்றே அனுமானிக்க முடிந்தது. அது அவ்வளவு பக்குவமானதொரு நிலை.

அவரது நாவல்கள் அனைத்தையும் வாசிக்கவில்லை என்றாலும் சிறுகதைகளை அதிகம் வாசித்திருக்கிறேன். எனக்கு விருப்பமான எழுத்தாளர்களின் பட்டியலில் அவர் எப்போதும் இருந்திருக்கிறார். இனி அவரது படைப்புகள் வழி நம்மோடு எப்போதும் உரையாடத்தான் போகிறார். அவரது மொழியிலேயே சொல்லவேண்டும் என்றால் அவரது கதைகள் ‘வேறமாதிரி’த்தான். அவர் பிறந்த சாதிகுறித்துப் பேசுவதை விடுத்து அவரது படைப்புகளை வாசித்து அதன்மீது உரையாடத் தொடங்குவதே அவருக்குச் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

1 comment for “அசோகமித்திரன் : எளிமையின் நடை

  1. April 11, 2017 at 5:09 pm

    அசோகமித்திரன் குறித்த அற்புதமான கட்டுரை. அவருடைய சிறுகதைகள்தான் நிறைய வாசித்திருக்கிறேன். இனி அவரது நாவல்களைத் தேடி வாசிக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...