கீழடி : சங்ககாலப் பண்பாட்டுப் படுகை (சில குறிப்புகள்)

keezhadi-treasures-caught-in-a-swirlமதுரையிலிருந்து தென்கிழக்கில் 13 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கீழடி. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அவ்வூரானது வைகையாற்றின் தென்கரையிலிருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் அமையப்பெற்றுள்ளது. கீழடியில் உள்ள  ‘பள்ளிச்சந்தை திடல்’ என்னும் பகுதியில் இந்தியத்தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவின் ஆறாவது கிளை 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக மேற்கொண்ட அகழாய்வானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அங்கு சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர நாகரீகம் கண்டறியப்பட்டுள்ளது. மதுரையின் தொன்மைக்கு இதுவரையிலும் இலக்கியச்சான்றுகள் தவிர்த்து, மதுரையைச் சுற்றி அமைந்த குன்றுகளில் உள்ள கி.மு. 3 முதல் கி.பி.1 மற்றும் 2-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த தமிழ்-பிராமி எழுத்துக்கள்தான் சான்றாக அமைந்திருந்தன. ஆனால் தற்சமயம் கீழடி அகழாய்வு மதுரையின் வரலாற்று முற்காலத்திற்கு வலுவான மேலதிகச் சான்றுகளை அளித்துள்ளது எனலாம்.

பல்வேறு காலகட்டங்களின்போது தென்தமிழகப்பகுதிகளில் நிகழ்ந்த கலாச்சார மாற்றங்கள்FL19_page_67_jpg_2720802g குறித்த ஆய்வுக்கு உதவும் வகையில் அகழாய்வு செய்யவேண்டிய இடங்களைத் தேர்வு செய்யவேண்டுமென்ற நோக்கத்துடன் இந்திய தொல்லியல் துறை 2013-ல் ஒரு சர்வே குழுவை அமைத்தது. அக்குழுவானது திருவாளர்கள் அமர்நாத் ராமகிருஷ்ணா, வேதாசலம், வீரராகவன், மற்றும் ராஜேஷ் ஆகிய நான்கு தொல்லியலாளர்களை உள்ளடக்கியதாகும்.

அக்குழுவானது 2013-2014 ஆண்டுகளில் தனது சர்வே பணியைs செய்தது. மேற்குமலைத் தொடர்ச்சி அடிவாரமான வெள்ளிமலையில் வைகை நதி உருவாகிற இடம் முதல் வைகை கடலில் கலக்கும் அழகன்குளம் வரையில் உள்ள வைகை நதிக்கரையோர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். வைகை நதியானது அது உருவாகும் இடம் தொடங்கி கடலைக்கலக்கும் முன்  சுமார் 250 கி.மீ. தூரம் , தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாகப் பயணிக்கிறது. இவ்வளவு தூரமும் வைகை ஆற்றின் இருகரைகளிலும் 5 கி.மீ. அளவிற்குட்பட்ட ஊர்களில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 400 ஊர்களில் சர்வே மேற்கொள்ளப்பட்டதில் 293 தொல்லியல் பகுதிகளைக் கண்டறிந்தனர்.

FL20_TSS_-74_jpg_3112582gமதுரையை வந்தடைந்த அக்குழுவினர் மதுரையைச் சுற்றிலும் அமைந்திருக்கும் அரிட்டாபட்டி, மாங்குளம், கீழவளவு, திருவாதவூர், வரிச்சியூர், கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கொங்கர் புளியங்குளம் போன்ற ஊர்களில் உள்ள குன்றுகளில் பொறிக்கப்பட்ட கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழ் – பிராமி எழுத்துகளை மீள் வாசிப்பு செய்தனர். பிறகு அங்குள்ள ஜைன புடைப்புச் சிற்பங்கள், கற்படுக்கைகள், கி.பி. 9-10ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் மீள்பார்வையிட்டனர்.

பிறகு நதியைத் தொடர்ந்த அக்குழுவினர் கீழடியை அடைந்து, அருகே உள்ள கொந்தகைFL20_art_KEEZHADI__3112599g என்னும் ஊரில் இடுகாட்டுப் பகுதிகளில் தொன்மையான முதுமக்கள் தாழிகளைக் கண்டுபிடித்தனர். சில நாட்கள் கழிந்த நிலையில் மீண்டும் கீழடிக்குச் சென்று சர்வே மேற்கொள்கையில், தற்செயலாக அங்கே சரக்கு வாகனத்திலிருந்த ஓட்டுனர் ஒருவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, பேச்சுவாக்கில் அவர் “உள்ளே தென்னந்தோப்பில் ஓடுகள் நிறைய சிதறிக் கிடக்கின்றன” என்றிருக்கிறார். குழுவினர் உடனேயே ‘பள்ளிச்சந்தை திடல்’ எனப்படும் அந்தத் தோப்புக்குள் சென்று பார்க்கையில், அந்த மேட்டுப்பகுதி முழுவதிலும் நூற்றுக்கணக்கான குறியீட்டெழுத்துப் பானை ஓடுகளும், சிதைந்த சுட்ட செங்கற்களுமாக விரவிக் கிடந்ததைக் கண்டனர். அப்பொழுது அவர்கள் கண்கள் வியக்குமளவுக்கு ஒன்று நிகழ்ந்தது. அந்தத் தோப்பின் வெற்று நிலப்பகுதியில் ஒரு இயந்திரம் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருக்கும்போது, கீழே தொன்மையான கட்டிடச் சுவர்களின் பகுதிகளைக் கண்ணுற்றனர். இரட்டை மேடுகளைக் கொண்ட அப்பகுதியானது அகழ்வாய்வுக்கு உரியது எனக்கருதினர்.

FL19_stone_semi_jp_2720827g1978-ஆம் ஆண்டில் அவ்வூரின் பள்ளித்தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளிச்சந்தை திடலிலிருந்து கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண்ணாலான ஆண், பெண், மற்றும் அய்யனார் உருவங்களைக் கண்டறிந்து தொல்லியலாளர் வேதாசலத்திடம் கொடுத்திருக்கிறார். வேதாசலம் அவர்கள் கீழடியில் உள்ள சிவன் கோயிலின் 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்றையும் ஏற்கெனவே கண்டறிந்துள்ளார். கீழடி மற்றும் கொந்தகையின் பழைய பெயர் ‘குந்திதேவி சதுர்வேதிமங்கலம்’ என்பதாகும். இது பின்னாளில் கொந்தகை எனவும், இதன் கிழக்குப் பகுதி கீழடியாகவும் மாறியது.

வைகையாற்றின் கரையோரங்களில் கணக்கெடுக்கப்பட்ட 293 தொல்லியல் பகுதிகளில்  வாழ்விடப் பகுதிகள் என அறியப்பட்ட 100 பகுதிகள் ஒவ்வொன்றும் தனித்தனியே இடுகாடுகளைக் கொண்டிருக்கவில்லை. நான்கு அல்லது ஐந்து என கொத்துகளாக அமையப்பெற்ற வாழ்விடப்பகுதிகளுக்கு, கொத்துக்கொன்றாகவே இடுகாடுகள் அமையப் பெற்றிருக்கிறது. பள்ளிச்சந்தை திடலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இடுகாடு அமைந்திருப்பதானது இப்பகுதியில் சில வாழ்விடப் பகுதிகள் அமைந்திருந்ததையே சுட்டுகிறது. இவ்வாறான காரணிகளால் கீழடியானது அகழாய்வு செய்யப்பட முடிவானது.

FL19_shell_bangle__2720824gதரைத்தளத்திலிருந்து 2.88 மீ உயரமுள்ள மேட்டுப்பகுதியை அகழ்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான ஆய்வுக்குழுவினர்  மார்ச் 2-2015 முதல் செப்டம்பர் 2015 வரையிலான முதல் கட்ட அகழாய்வு செய்து முடித்தனர். முதல்கட்ட அகழாய்வில் மொத்தம் 42 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பெற்றன. பிறகு இரண்டாம் கட்ட அகழாய்வானது 2016ஆம் ஆண்டில் நடைபெற்றது. இரண்டு கட்ட அகழாய்வுகளில் மொத்தம் 102 அகழாய்வுக்குழிகள் தோண்டப்பெற்றன. இவற்றிலிருந்து 5600 தொல்பொருட்கள் மற்றும் பல வகையான கட்டிட அமைப்புகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

கட்டிட அமைப்புகள் :

ஆழமான உறைகிணறு ஒன்று பெரிய அளவுடைய கட்டிட அமைப்பொன்றைச் சார்ந்துfl20_keezhadi_pipe_3112602g அமையப்பெற்றுள்ளது. இந்த அமைப்பின் தனிச்சிறப்பு என்னவெனில், இதுவரை கல்பாக்கம்- வசவசமுத்திரம், அரிக்கமேடு போன்ற அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறுகள் எந்தக் கட்டிட அமைப்பையும் சாராமல் தனித்தே காணப்பட்டன. அந்த வகையில் 13 சுடுமண் வளையங்களாலான இந்த உறைகிணறு தனிச்சிறப்பானதாகும்.

இங்குள்ள கட்டிடச் சுவர்கள் சுடப்பட்ட செங்கற்களினால் கட்டப் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு செங்கலும் 36 செ.மீ. நீளமும், 24 செ.மீ. அகலமும், 6 செ.மீ. தடிமனும் கொண்டிருக்கின்றன. சுடப்படாத செங்கற்கள் இங்கு பயன்படுத்தப் பட்டிருக்கவில்லை.

ஒன்றையொன்று சந்திக்கும் இரண்டு பெருஞ்சுவர்கள் உள்ளன. சுவரானது பத்து செங்கற்கள் தடிமனுக்கு, மண்கலவையால் கட்டப்பட்டிருக்கிறது.

ஒரு குழியில் செவ்வக வடிவிலான செங்கல் கட்டிட அமைப்பொன்று காணப்படுகிறது. இது ‘இடை வழியறை’ (antechamber) போன்று உள்ளதென தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.

இன்னொரு குழியில் பெரிய அளவிலான ‘சிறுகான் ஓடுகள்’ கிடைத்துள்ளன. எனவே இங்குள்ள கட்டிட அமைப்பானது ஓடுகள் வேயப்பட்ட கூரையமைப்பினைக் கொண்டிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. மேலுமொரு குழியில் நீர் வெளியேறுவதற்காக கட்டப்பட்டதைப் போன்ற செங்கற்களால் ஆன வாய்க்கால் அமைப்பு காணப்படுகிறது.

FL17khilzadi_1jpg__3138587gபெரும்பாலான குழிகளில் ஒரு குறிப்பிட்ட அளவிற்குக்கீழே ஆற்றுமணல் அடுக்கு தென்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தப்பகுதியில் பழங்கால்வாய் (paleochannel) இருந்திருக்கலாமெனக் கருதப்படுகிறது.

இங்கே கிடைத்ததைப் போன்ற பெரிய அளவுகொண்ட சுவர்களும், நல்ல நிலையில் உள்ள செங்கல் கட்டிட அமைப்புகளும் அரிக்கமேடு, காஞ்சிபுரம், உறையூர், காவிரிப்பூம்பட்டினம், மற்றும் அழகன் குளம் போன்ற அகழாய்வுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தப் பிற பகுதிகளுடன் செய்த ஒப்பீட்டாய்வு அடிப்படையில், அதாவது ‘அடுக்கியல் படிவாய்வு’ படி (stratigraphy) கீழ் மட்டத்தில் கிடைக்கப்பெற்ற கருப்பு – சிவப்பு மட்பாண்டங்களைக் கொண்டு இந்தப் பகுதியானது கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கூறமுடியுமென தொல்லியலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் சுடுமண் குழாய்கள் (terracotta pipes), பெரிய அடுப்பு போன்ற அமைப்பு, சதுர மற்றும் செவ்வக செங்கல் தொட்டிகள், சலவைக் கல்திட்டு  ஆகியனவும் காணப்படுகின்றன.

தொல்பொருட்கள்

கருப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், நுண் முத்துமணிகள், கார்னீலியன் மணிகள், அழகியFL19_fish_image_po_2720816g வேலைப்பாடுகள் மிக்க பெரிய குவார்ட்ஸ் மணிகள், இருபக்கக் கூம்புவடிவ பொன்மணிகள், பெரிய செம்பு மணிகள், நவரத்தினக்கற்களினாலான மணிகள், தந்தத்தினாலான காதணிகள், தந்தத்தினாலான பகடைக்காய்களும் இதர ஆட்டக் காய்களும், ரோமானிய அரெண்டெய்ன் பாண்டங்கள், பளபளக்கும் வெள்ளை முலாம்பூசப்பட்ட கறுப்பு மட்பாண்டங்கள், மிகப்பெரிய குதிர்கள், மூடிகளுடன் கூடிய மண்பானைகள், இரட்டைப் பானைகள், பெரிய அலங்கரிக்கப்பட்ட பானைகள், செம்பழுப்பு முலாமிடப்பட்ட பானைகள், ரோமானிய கலைநயம்மிக்க ரௌலெட்டட் மட்பாண்டங்கள், நெசவில் நூல்சுற்றப் பயன்படும்  இரும்பினாலான சுழல் உருளைகள், எடைக்கற்கள், செம்பினாலான கண்ணுக்கு மைதீட்டும் கருவி, சங்கு வளையல்கள், இரும்பினாலான ஈட்டி முனைகள், கோடரி முனைகள், குத்துவாள், கத்தி, பற்றுக்குறடுகள், சுடுமண் பொம்மைகள், ரோமானியர் காசுகள், பாண்டியர் காசுகள், தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் போன்ற 5600 பொருட்கள் இந்த இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.

தமிழி (அ) தமிழ்-பிராமி எழுத்துகள்:

கீழடி, பள்ளிச்சந்தை திடலில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களிடையே சுமார் பதினெட்டு மட்பாண்டச்சில்லுகளில் தமிழ்-பிராமி எழுத்துருக்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அச்சில்லுகளில் வேந்தன், சேந்தன் அவதி, சந்தன், சாத்தன், மடைசி, எரவாதன், உத்திரை, ஆதன், முயன், இயனன், திஸன், வணிகப்பெருமூவர் உண்கலம், போன்ற தமிழ் மற்றும் பிறமொழிச் சொற்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

கீழடி அகழாய்வு குறித்து தொல்லியலாளர்களின் கருத்துகள் :

அகழாய்வின்  இரண்டு கட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இவை பற்றியான ஆய்வில் ஈடுபட்ட தொல்லியிலாளர்களின் கருத்துகளைச் சுருக்கமாகக் காணலாம்.

FL19_head_figure_j_2720819gமொத்தமுள்ள 110 ஏக்கர் பரப்பளவிலான திடலில் வெறும் 1% மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10% ஆவது அகழாய்வு செய்தால்தான் இங்கு என்ன வகையிலான பயன்பாட்டு கட்டிட அமைப்புகள் இருந்தன, எந்தவகையிலான வாழ்விடச் சூழல்கள் இருந்தன என்பது பற்றிய ஓரளவிலான கருத்துக்கு வர இயலும் என்பதாக பொதுவான கருத்தை அமர்நாத் ராமகிருஷ்ணா முன்வைத்தாலும், நிச்சயமாக இது சங்க காலகட்டம் என்று குறிப்பிடப்படுகிற வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த இடமென்பதில் ஐயமில்லை என்கிறார். அவர்தம் கருத்தினை உறுதிப்படுத்தும் விதமாகவே கீழடியிலிருந்து அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திற்கு காலக்கணிப்புச் சோதனையான ‘முடுக்க நிறை நிறமாலையியல்’ (Accelerator Mass Spectrometry)-க்கு அனுப்பப்பட்ட கரித்துண்டுகளின் பரிசோதனை முடிவானது,  கி.மு.200 காலகட்டத்தைச் சேர்ந்ததென தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆய்வாளர் கா.ராஜன் இவ்வாய்வு  பற்றிக்கூறுகையில், கீழடியானது வைகை நதிக்கரையில் அமையப்பெற்ற நகர்மையப் பகுதிகளில் ஒன்றாகும். இது பாண்டியர்களின் தலைநகருக்கும் பாண்டிய நாட்டுத்துறைமுக நகரான அழகன்குளத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. குடியிருப்பு வசதிகள், புறவய வாணிகம், பல்-தொன்மை சமூகங்களின் இருத்தல், தொடர்பியல் அமைப்பு (மொழி), சொகுசுமிக்க பொருட்களின் பயன்பாடு, போன்றவை எல்லாம் சேர்ந்து ஒரு நகரத்தன்மைக்கான கூறுகளையே வெளிப்படுத்துகின்றன. கார்னீலியன் மணிகள் இங்கு காணப்பட்டதானது கீழடியின் குஜராத் போன்ற இந்தியத்துணைக்கண்டப் பகுதிகளுடனான வாணிகத்தைக் குறிக்கிறது. நுண்முத்து மணிகள், தந்ததினாலான பகடைக்காய்கள் போன்ற சொகுசுப்பொருட்கள் கீழடியின் முற்கால வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்தவர்களின் அபரிமித  செல்வச் செழிப்பைக் குறிக்கிறது. தமிழ்-பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளானது தொடர்பியல் அமைப்பின் பரவலான தன்மையைக் குறிக்கிறது. மேலும் கீழடியில் கிடைத்த பிராகிருதப் பெயர்கள் இலங்கைக்கும் கீழடிக்குமான கடல்வழி வாணிக உறவினைக் குறிக்கிறது என்பதாகத் தனது கருத்தினைத் தெரிவித்திருக்கிறார்.

கடல்சார் தொல்லியல் ஆய்வாளரான ந.அதியமான் கீழடி பற்றிக் குறிப்பிடும்போது, இங்கே உள்ள அடுப்பு, செங்கல் தொட்டிகள், துவைக்கும் கல்திட்டு, நீர்செல்லும்படி அமைக்கப்பட்ட வாய்க்கால் அமைப்பு, மற்றும் நெசவில் பயன்படும் இரும்பு சுழல் உருளைகள் ஆகியனவற்றைக் கொண்டும், கீழடி வணிகப்பெருவழியின் துறைமுகமான அழகன்குளத்திலிருந்து ரோமாபுரிக்கு அர்கெரு மஸ்லின் வகைத் துணிவகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதான முந்தைய தொல்லியல் ஆய்வினைக் கொண்டும், கீழடியில் துணி உற்பத்தித் தொழிற்கூடம் அமைந்திருக்க வேண்டுமெனக் கருதுவதாகத் தெரிவித்தார்.

இதுவரையிலுமான இரண்டுகட்ட அகழாய்வுகள் தென்னிந்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான சான்றுகளை வெளிக்கொணர்ந்தது பற்றிய சுருக்கமான குறிப்புகளே இவை. மூன்றாம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ள நிலையில், இவ்விரு அகழாய்வுகள் வெளிக்கொணர்ந்த  கலாச்சார ஆய்விற்குரிய அம்சங்கள் குறித்தும் விரிவாக பேச வேண்டியிருக்கிறது எனக் கூறிக்கொண்டு இவ்விடத்திலே நிறைவு செய்கிறேன்.

1 comment for “கீழடி : சங்ககாலப் பண்பாட்டுப் படுகை (சில குறிப்புகள்)

  1. April 12, 2017 at 1:23 pm

    Nice Article About khiladi excavation.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...