குடியேறிகள்

ks maniam

கே.எஸ்.மணியம்

நண்பர்களுடன் சீன டீயை குடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கடையை விட்டு வெளியேறினான். அவனது கால்கள் நிலைகொள்ளவில்லை. நடைபாதைகளில் கடந்து பழகிய கட்டடங்கள் அவனை நோக்கி சுழன்று வந்தன. அருகில், குப்பைக் குவியலை கிழறிக் கொண்டிருந்த காகமொன்று பேரிரைச்சலுடன் அதன் கூட்டை நோக்கி பறந்தது.

அவன் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, கிருஷ்ணன் தனக்குள் பேசிக்கொண்டான். நாங்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள். ‘பென்டாத்தாங்!’ வாக்குகளுக்காகப் பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகள் மட்டும் பயன்படுத்தும் சொல் அது. எப்போதும் இல்லை. இந்த சொல்லை இனி பயன்படுத்தக்கூடாதென சில அமைச்சர்கள் களத்தில் இறங்கி கோஷம் போட்டிருக்கிறார்கள்.”இவர்களின் மூதாதைகள்தான் பென்டாத்தாங். இவர்களில் சிலரது தாத்தாக்கள் பென்டாத்தாங். இவர்களது அப்பாக்கள் பென்டாத்தாங் அல்ல. இவர்களும் பென்டாத்தாங் அல்ல.” அமைச்சர்கள் திமிரியபடி கோபத்துடன் பேசியிருந்தார்கள். அதற்குப் பின் அச்சொல் நாளிதழ்களில்கூட மிக அரிதாகவே பயன்படுத்தப்பட்டதை கிருஷ்ணன் மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்தான். இப்போதும் அவனால் தன் நினைவலையை மிகத் துள்ளியமாக நினைவுகூர முடிந்தது.

வீட்டை நெருங்கியவனுக்குள் தயக்கம் தொற்றிக்கொண்டது. தெருமுனையில் இருக்கும் தன் வீட்டைப் பார்த்தான். முப்பது வருடங்களுக்கு முன் சிறு சேமிப்பை முன்பணமாக்கி வாங்கிய வீடு. நீ திவாலாகிடுவ. அவன் நண்பன் சொல்லியிருந்தான். இருபதாயிரம் டாலர்! பெரும்பணம்! ஆனால் கிருஷ்ணன் அதையெல்லாம் சமாளித்தும் விட்டான். வாங்கியபோது இருந்த மாதிரியே அச்சு பிசகாமல் இருந்தது அந்த வீடு. வீட்டின் எந்தப் பகுதியும் விரிவாக்கப்பட்டதில்லை; சமையலறை, தாழ்வாரம் என எதுவுமே புதுபிக்கப்படவுமில்லை; மாற்றப்படவுமில்லை. வெளி கதவை தள்ளி திறந்தான். எப்போதும் பூட்டப்படாமல் இருக்கும் கதவு சிமென்டு தரை வரை சென்று கொஞ்சம் குறுகலாக வழிவிட்டது. மனைவி இரும்புக் கதவுவரை வந்து அவனை உள்ளே நுழைய விட்டு கதவை இழுத்து தாழிட்டாள். அவள் போக்கு ‘நான் மட்டும்தான் எப்போதும் வீட்டில் இருக்கிறேன்!’ என்று மறைபொருள் சொன்னது.

“ஏதும் பிரச்சினையா?” அவள் கேட்டாள்.

“இல்லை,” என்றபடி சோபாவில் அமர்ந்தான்.

“நிஜமாவா? ஏதாவது படபடப்பு இருக்கா?” அவள் தொடர்ந்து கேட்டாள்.

‘படபடப்பு’ என்ற வார்த்தையை அவள் ஒரு துண்டு பிரசுரத்திலிருந்து பீய்த்தெடுந்திருந்தாள். நாற்பதுகளைக் கடந்துவிட்ட ஆண்கள் மன அழுத்தம் இதய நோய் முதலானவற்றில் கவனமாக இருக்கும்படி அந்த துண்டுபிரசுரம் கூறியிருந்தது.

“ஏதாவது வலி?”

“இருக்கலாம்”, “நான் அதைப்பற்றி பேச விரும்பவில்லை..”

“பேச என்ன இருக்கிறது? நாம எதாவது செய்யனும்.”

“இது அந்தமாதிரியான வலி இல்லை.”

தொடர்ந்து பேசாமல் அவன் மனம் போன போக்கில் இருக்க விட்டாள். மிக அரிதான தருணங்களிலேயே கிருஷ்ணன் தன்னை இப்படி உள்ளிழுத்துக் கொண்டு தனிமைபடுத்திக் கொள்வான். இப்படியான சாபத் தருணங்களை எளிதாக வென்று புதுத்தெம்புடனும் மகிழ்வுடனும் இயல்பு நிலைக்குத் திரும்பகூடியவன்தான் கிருஷ்ணன். பசியின்மையைகூட புதுப்பித்துக்கொண்டு சாப்பிட அமருவான். ஆனால் அன்றைய பொழுது அத்தனை இயல்பானதாய் அமையவில்லை. இரவு உணவுக்கான நேரமாகியும் சோபாவில் அசையாமல் கிடந்தான்.

“சாப்பாடு  தயாராகிவிட்டது” மனைவி சொல்ல, “எனக்கு பசியில்லை,” என்று கூறி முடித்தான்.

“நிறைய சீன டீ குடிச்சீங்களா?”

“எனக்கு சாப்பிட தோனல,” மனைவியின் சீற்றத்தைக் கண்டு அதிர்ந்தவனாய் பதில் சொன்னான்.

 “என்னவோ சரியில்ல.”

சாய்நாற்காலியில் அமர்ந்தவளை கவனிக்க மனமில்லாமல் இருள்கெளவிய மூலையை நோக்கி தலையை திருப்பிக் கொண்டான். கிருஷ்ணன் அவளிடம் இப்படி நடந்து கொண்டதில்லை. ‘மாட்’டினுடைய இழிந்த கோர முகம் கிருஷ்ணனை சூழ்ந்து கொண்டது. அடங்கா பெருங்கோபத்தை உசுப்பிவிடும் அளவுக்கு மாட் அப்படி என்ன சொன்னான்? கிருஷ்ணன் உள்ளூர நினைத்து வியந்தான்.

“சாப்பாடு மேசை மேலதான் இருக்கு. பசிச்சா சாப்பிடுங்க”,  கூறிவிட்டு அவள் உளர்ந்த துணிகளை மடிக்கச் சென்றுவிட்டாள்.

கிருஷ்ணனுக்கு அவள் குரல் சன்னம் சன்னமாகவே கேட்டது. அவர்கள் ஏதாவது ஏற்றுமதி இறக்குமதி பற்றி பேசினார்களா? கணினியின் தொழில்நுட்பம் பற்றி? கிழக்கு ஐரோப்பிய கூட்டணியின் பிளவு பற்றி? அவனால் திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ‘மாட்’டினுடைய முகம் பல விசித்திர கோணங்களில் அவனது நினைவைத் துழையிட்டுக் கொண்டிருந்தது: மாட் சட்டென தன் கன்னங்களை ஊதி பெரிதாக்கி, கண்களைச் சிமிட்டி கொட்டாவி விடுகிறான். எரிச்சலில் அவன் உதடுகள் அமிழ்கின்றன. அடுத்தடுத்து அவன் வைத்த குற்றச்சாட்டுகளில் கிருஷ்ணன் சுக்குநூறாகினான்: ‘நீ பெண்டாத்தாங்!’ சொல்லிய அடுத்த கணம் மாட் நினைவின் அலையைவிட்டு அகன்றான். பெண்டாத்தாங் என்றால் என்ன? குடியேறிகள்? சட்டவிரோதிகள்?

பென்டாத்தாங். படகுகளில் நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளுக்கு வரும் வியட்நாம்pendatang1 மக்களைக் குறிப்பிட இச்சொல் பயன்படுவதை அவன் முன்பு எப்போதோ கேட்டிருந்ததாய் ஞாபகம். பின்னர் மிக விரைவிலேயே அவர்கள் படகு-மக்கள் என்று அறியப்பட்டதும் அவன் நினைவில் அகலாமல் இருந்தது. இப்படி வரும் வியாட்நாமியர்களின் அசாத்தியமான தைரியம் கிருஷ்ணனை ஆச்சரியத்தின் விளிம்புக்குக் கொண்டு சென்றதுண்டு. குறுகலான, அபாயம் நிறைந்த மிக நீண்ட கடற்பயணத்தை அவன் கற்பனையில் நிழலாடியது. கடற்கொள்ளையர்களின் தாக்குதல், இளம்பெண்கள் கற்பழிப்பு, ஆண்கள் படகிலிருந்து கொத்துக் கொத்தாய் கடலில் தூக்கி வீசப்படுவது, கொம்பு மீன்களால் அவர்களது சதைகள் பீய்த்தெறியப்படுவது என அவர்களைப்பற்றி கிருஷ்ணன் நாளிதழ்களில் நிறையவே படித்திருக்கிறான். அவர்கள் எந்த நிலத்திற்கும் உரிமையானவர்கள் அல்ல. அவர்களின் பாதங்கள் எந்த மண்ணிலும் உறுதியாகப் பதிவதில்லை. வன்முறையினாலும் பிடிவாதமான சித்தாந்த கொள்கைகளாலும் அவர்கள் உருகுழைக்கப்பட்டிருப்பதை நினைத்ததும் கிருஷ்ணனுக்கு கதிகலங்கியது. அதிகார பேராசையில் அடையாளம் காண முடியாத அளவுக்கு சூறையாடப்பட்ட முகமொன்று நீரில் மிதந்தபடி வந்து அவனது கனவுகளை ஆர புசித்தது.

பென்டாத்தாங். இவர்களை போலவேதான் இந்தோனேசியர்கள். புறநகர் பகுதிகளில் டியூடர்-ஸ்பானிஷ்-மொரிசியஷ் வம்சாவளிகளின் குடியிருப்புகள் நிர்மாணிக்குமிடங்களில் பார்த்திருக்கிறான். போகுமிடமெங்கும் தற்காலிக குடில்களை அமைத்துக் கொண்டு, அனைவருக்கும் பொதுவாக இருக்கும் குழாய்களில் திறந்தவெளியில் குளிப்பார்கள். பெண்களின் உடலை சூழ்ந்திருக்கும் கைலி மார்பகங்கள்மேல் இறுக்கமாய் முடிச்சிடப்பட்டிருக்கும். உலர்ந்த பழுப்பு நிற ரத்தம் உடலினை பற்றிக்கொண்டிருப்பதுபோல. வீடுகளுக்கு அடித்தளம் அமைக்க தோண்டிய சகதிகள் பிள்ளைகளின் தோல்களில் படர்ந்திருக்கும். மாலை நேரங்களில், எங்கும் போக வழியற்றவர்களாய், மங்கலான பல்பு வெளிச்சங்களின்கீழ் உட்கார்ந்துக் கொண்டு வம்பளந்து கொண்டிருப்பார்கள். உடலுழைப்பால் மரத்துப்போன சதைகளை மெல்லிய வருடல்களால் தொட்டுளர்த்த ஆண்கள் பெண்களுடன் மள்ளுக்கட்டிக் கொண்டிருப்பார்கள். அதுவுமில்லையென்றால் ரிங்கிட்டை ரூபாய்க்கு மாற்றும்போது ஏற்பட்ட குழருபடியால் வீட்டில் எல்லோரும் பட்டினி கிடக்க வேண்டிய கட்டாயத்தின் மள்ளுக்கட்டலாகவும் இருக்க வாய்ப்புண்டு.

தன்னைச் சார்ந்த மதிப்பீடுகள் அனைத்தையும் இருள் கெளவி கலைத்துப்போட்டு அவனை வெறுமைக்குள் தள்ளியது. கிருஷ்ணன் உறைந்துபோனான்.   ஆழ்கடல் மின்னோட்டங்களுக்கு மத்தியில் திக்குதிசை தெரியாமல் சுழன்றான். தலை மட்டும் சுழலின் வெளியில் பிதுங்கி அலைகழிந்தது.  முந்தைய ஞாபகங்களும் பழக்கமானவைகளும் அவனை இறுகப்பற்றி நெறுக்கின. இருந்தும் கிருஷ்ணன் மிதந்தபடி இருந்தான்.  எதையும் கணிக்க முடியாமல் இலக்கின்றி அலைந்து முன்பின் கண்டிறாத கரை நோக்கி மிதந்தபடி இருந்தான்.

 ‘மனித மலத்தில் நிரம்பி வழிந்தது கப்பல்’, அப்பாவின் வார்த்தைகள் அவன் காதுமடல் நோக்கி வளர்ந்தது. ‘வாடைகளின் மேல் நின்றுகொண்டு புதிய நிலம் நோக்கி பயணித்தோம்.’

மலாயாவுக்கு வந்த தந்தையின் கடல் பயணத்தை நினைவுகூற கடுமையாக முயற்சித்தான். இருந்தும் சில விசித்திரமான தடைகள் அவன் நினைவுகளை ஸ்தம்பிக்கச் செய்தன. நீருக்கும் நிலத்துக்கும் நடுவில் நின்று தன்னை ஊடுருவ முயலும் இருளிலிருந்து விடுபட உறுதியாகப் போராடியும் தோற்றுப் போனான். இப்படித்தான் எப்போதும். அப்பாவின் அனுபவங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடுவது அவன் வழக்கமாகியிருந்தது. சுய உணர்வு அரும்ப தொடங்கியபோதே கிருஷ்ணன் திட்டவட்டமாக இரு முடிவுகளுக்கு வந்திருந்தான். மற்றவர்களின் நினைவுகளாலும் ஏக்கங்களாலும் தூண்டப்படாமலிருப்பதென. இருந்தும் பழகிப்போன சில விஷயங்கள் விடாமல் அவனைப் பிராண்டிக் கொண்டே இருந்தன. இருந்தும் கிருஷ்ணன் மிதந்தபடி இருந்தான்.  எதையும் கணிக்க முடியாமல் இலக்கின்றி அலைந்து முன்பின் கண்டிறாத கரை நோக்கி மிதந்தபடி இருந்தான். மனைவி தோள்பட்டையை குலுக்கியதும், மெலிதாய் திடுக்கிட்டெழுந்தான். மீட்டெடுத்த நினைவுகள் மீண்டும் நீருக்கடியில் நூல்விட்டன.   ‘குறைந்தபட்சம் படுக்கவாவது வாங்க,” அருகிலேயே காத்து நின்றாள்.

அவளைப் பின்தொடர்ந்து படுக்கையறைக்கு சென்று கைலி சட்டையைப் போட்டுக்கொண்டான். அவனது கைகள் காற்றலையில் சிக்கிக் கொண்டதுபோல் நீண்டெழுந்து அலைந்தன.  அவளருகில் இடுக்கிக்கொண்டு படுத்தான். இருளின் மங்கிய ஒளியில் அவளது தோள்பட்டை உயர்ந்து சரிந்துக் கொண்டிருப்பது இதற்குமுன் கண்டிறாத ஒரு தேசத்தின் எல்லைக்கோடுபோல் தெரிந்தது. தங்களது முதல் வாரிசுக்காய் காந்திருக்கும் அவனது மகனும் மகளும் நிலையற்று அசைந்து கொண்டிருக்கும் அந்த தேசத்து நிலத்தில் அமிழ்ந்துகொண்டிருந்தனர்.

அன்றைய இருள் வெள்ளத்தினுள் அவன் போராட்டங்கள் நீண்டன. பலமுறை ஆழங்காணமுடியா பயத்தினுள் உறிஞ்சப்பட்டு இறுதியாக மேற்பரப்பிற்கு உந்தப்பட்டான். முன்பிலும் இப்போது கொஞ்சம் வலுவாகியிருந்தான். இரவு நெடுக செல்லறிக்கும் இப்புதுவித வதையை அவதானித்தபடி கழித்தான்.

காலை, தேநீர் குவளையுடன் கதவின் ஓரம் உட்கார்ந்துக் கொண்டான். காலை பனியும் மண்ணில் நனைந்த புல்லும் அதன் மென்மையை, சிளிர்த்திடும் மெல்லிய ஒளியை அவனுள் பிரவாகம் செய்யவில்லை. அதற்கு பதிலாக, பருவமழை நிரப்பியிருந்த சாக்கடை கழிவு சாலையை குறுக்கிட்டு பாய்ந்து அவன் நாசியை துன்புறித்தியது. வாசற்படியில் பரவிய ஒளி அவனது விளித்திருந்த சதைமீது படர்ந்து மேலும் அவனை உக்கிரப்படுத்திக் கொண்டிருந்தது.

பெண்டாத்தாங். வருகின்ற ஒருவன். மாறுபட்ட அனுபவங்களின் மூலம் ஞானம் பெற முயலும் ஒருவனின் பயணம். அப்பா சிந்திப்பது போல தன் சிந்தனைக்கும் குவியமமைத்தான். அப்பாவின் பாதிப்புகள் கிஞ்சிற்றும் எனமீது ஆதிக்கம் செலுத்தியதில்லையென இதுகாறும் எவ்வளவு முட்டாள்தனமாய் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறேன்!

மாலையில் குளித்தான். புத்துணர்வு பெற்றிருந்த தோள்மீது தண்ணீர்ப்பட்டு சிதறி மறைந்தது.  வேலைக்கு அணிய தைத்திருந்த கால்சட்டையை அணிந்து கொண்டான். நாடு சுதந்திரம் அடையும் முன் குர்த்பெர்க் என்ற பிரிட்டிஸ் முதலாளியிடம் மாட் அனுபவித்ததுபோல் அல்லாமல் சற்றே நேரெதிர் போராட்டமொன்றில் சிக்கியிருப்பதாய் தன்னிலையை மீட்டுணர்ந்தான்.

தேநீர் கடையை நோக்கி சென்ற வழிகளில் முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆட்டம் காணாமல் திடமாக நிற்பதாக நினைத்த வீடுகளில் அங்கும் இங்குமாக விரிசல்கள் தென்பட்டன. வெறும் காண்கிரீட் வேலைபாடுகளில் உண்டான விரிசல்கள் இல்லை அவை. அதற்கும் மேல். மூலையில் மளிகைக் கடை ஒன்று தனிமையில் தள்ளாடிக் கொண்டிருந்தது. இந்தப் பகுதிக்குக் குடித்தனம் நடத்த வந்தபோது அக்கடையைப் பற்றி அக்கம் பக்கத்தில் நிறையவே பேச்சுகள் இருந்தன. அந்த நேரத்தில் மணியத்திற்கு அவை வெறும் கதைகள். வெவ்வேறு உதடுகளின் வழியாக வண்ணங்களை, சம்பவங்களும் சேர்த்து பிண்ணபட்ட சொற்களின் சரங்கள். இப்போது அந்தக் கதைகளெல்லாம் வாழ்வின் கெட்ட அத்தியாயங்களாகி இனி எப்போதும் துளையிட்டுபோய் பார்க்க முடியாதபடி நிலைகுத்தி விட்டன.

அந்தக் கதைகள் ஒருவனது துயர்மிக்க வாழ்வின் வாடையேற்றிருந்தன: தன் கனவுகளின்படி வாழ்வைசெதுக்கிக் கொண்டிருந்த ஒருவனின் முயற்சியைப் பற்றி பேச எல்லாருக்கும் விசயம் இருந்தது. ஆ சோ நல்லவன் இல்லை, அவர்கள்தான் சொல்லியிருந்தார்கள். முன்வினைகளிலிருந்து தப்பித்து ஓடி ஒலிந்துகொண்டவன்தான் ஆ சோ. பார்க்க சாதாரண வியாபாரியாகத்தான் எல்லோருக்கும் தெரிகிறான். ஆனால் அவன் வைத்திருக்கும் பணம் முன்பு கெட்ட வழியில் சம்பாதித்தது. இப்போது சராசரி மனிதர்களைப்போல் உடுத்திக் கொண்டு ஏதோ யாரையுமே துன்புறுத்தாதவன் ,கொலை செய்யாதவன்போல  நடமாடுகிறான். அவனால் வெகுதூரம் ஓடிவிட முடியவில்லை. கடந்தகாலங்களிலிருந்து தப்பித்து நீண்ட நேரம் மறைந்துகொள்ள முடியாது. ஒருநாள் எல்லாமும் கண்டுபிடிக்கப்படும். ஒருநாள் பெரிய கூட்டமாய் குணடர்கள் வந்து அவனை அடித்து கடையையும் நொறுக்கி விட்டனர். அவ்வளவு ஆன பின்னும் ஆ சோவின் பிடிவாதம் குறையவில்லை. கடையை சரிசெய்துகொண்டு எதுமே நடவாததுபோல நாட்களை கடத்தினான். அதே கும்பல் மீண்டும் வந்தது. அவன் மகளை துவம்சம் செய்தது. அப்போதும்கூட அவன் எதுவும் நடந்துவிட்டதுபோல் காட்டிக் கொள்ளவில்லை. நானாக இருந்திருந்தால், ஆவி மேலேறி அந்த கூட்டத்தை அடித்து நொறுக்கியிருப்பேன்!

ஆ சோ கிழவனை கடந்து செல்லும்போது, கவுண்டரின் பின்னால் நின்று கொண்டு கிருஷ்ணனை நோக்கி, ஏதோ வாழ்க்கை என்பது அவனுக்கு எப்போதுமே தொல்லைத் தறாததைப்போல மெல்லிய புன்னகையை படரவிட்டான்.

ஆ சோவின் கடையைத் தாண்டி மிக நெருக்கத்தில் இருந்த வளைவில் ஒவ்வொரு கடையும் அதன் கடந்தகாலங்களை கிருஷ்ணனிடம் நெட்டிக் காட்டிக்கொண்டிருந்தன.  தேநீர் கடைக்குச் செல்வது சரிவிலிருந்து மீளும் பயணமாக அவனுக்குப் பட்டது. சாலைகளின் ஒவ்வொரு இணைப்பும் இடையில் புகுந்து அவனிடம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டன.

கடைசியாக தேநீர் கடையின் உள்ளே எளிதில் மறந்துவிட முடியாத அந்த முகங்கள் அவன் கண்களுக்குத் தென்பட்டன.  பளிங்கு மேசையைச் சுற்றி ஒவ்வொருவரும் வலைபோல் இணைக்கப்பட்டிருந்தனர். அவனுக்கு அது சுழலும் மின்விசிறியை நினைவுபடுத்தியது. அவர்களுக்கு நடுவில் தேய்த்து பளபளப்பாக்கப்பட்ட தேநீர் குடுவை மின்னிக்கொண்டிருந்தது. கிருஷ்ணன் மிக அருகில் வந்தபோதும், அவர்கள் தங்களது கைகளுக்கிடையில் ஒற்றுமையை நெசவிட்டு காட்டிக்கொண்டிருந்தனர். மயிரின் மெல்லிய இறுக்கமாய் வலுவற்று காட்சி தந்தது.

 “ஒரு வழியாக வந்துவிட்டார்!” வோங் கூறினான்.

“உங்களுக்கு என்ன ஆயிடுச்சி?”, “இன்னும் மனைவியிடம் இருந்து ஓய்வு கிடைக்கலையா?” டெங் கேள்விகளை அடுக்கிக்கொண்டிருக்க, அந்த மேசை பித்தலை தங்கத்தின் பிரகாசமாய் போலி சிரிப்பொலியில் ஜொலித்தது.

“எவரும் எதிலிருந்தும் ஓய்வு பெற முடியாது,” கிருஷ்ணன் கூறினான்.

“வாவ்… இந்த மனுஷன் எப்படி மாறிட்டான்!” டெங் கூறினான்.

வோங், அந்தக் குழுவில் கொஞ்சம் கறாரான ஆள், கிருஷ்ணனை என்னவோபோல் புதிதாய் பார்த்தான்.

“எல்லாமே வெறும் வார்த்தைகள். அதிலிருந்து கிடைக்கப் போவது ஒன்றுமில்லை” என்றான் வோங்.

“நீ அப்பாவியாக இருந்தால் மட்டும்தான் அது சாத்தியம். அப்பாவியாக இருப்பதென்பது முட்டாளாக இருப்பது.”

“நீங்கள் இருவரும் நீண்டநாள் பழகியவர்கள். நீ ‘மாட்’டை தெரிந்து வைத்திருக்கனும்.”

“எனக்கு எதுவும் தெரியாது”, “ஆனால் தெரிந்துகொள்ள இன்னும் தாமதமாகவில்லை,” கிருஷ்ணன் விருட்டென கூறினான்.

“தாமதமாகவில்லையா!”, “யாரு பேசறா பாரு! நாம எல்லாருக்குமே தாமதமாகிவிட்டது. ஒரு காலை கல்லறைகுள்ள வச்சாச்சி.” டெங் கூறினான்.

“நாம நிம்மதியா போகனும்,” கிருஸ்த்துவனானலும் சீன வழக்கங்களில் இறுக்கமான பிடிப்புள்ள பிரான்சிஸ் லிம்  கூறினான்.

“ஒருவேளை நாம் இதுவரையிலும் விழித்துக் கொள்ளாமலே இருந்திருந்தால்,” கிட்டத்தட்ட இதை கிருஷ்ணன் தன்னை நோக்கியே சொல்லிக் கொண்டான். “அதெல்லாம் இருக்கட்டும். அவன் எங்கே?”

“அவன் எப்போதோ ஓரிரு முறைதான் வருகிறான். ஒருவேளை இனி மீண்டும் வராமல்கூட போகலாம்” வோங்.

“மனசுக்குள்ள ஏதோ இருக்கு… .”

“மனசுலெல்லாம் ஒன்னும் இல்ல,” பிரான்சிஸ் லிம் மறுத்தான். “பாரத்தைக் குறைக்க கப்பலிலிருந்து தூக்கியெறிப்படும் அவசியமற்ற பொருட்களை போல வெறும் வெற்று வார்த்தைகள் அவை”.

அதுவரை அவர்கள் அனைவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிந்த கிருஷ்ணன் மீண்டும் நிலைதடுமாறி திக்குத்தெரியாமல் அலைகழியத் தொடங்கினான். சுக்குநூறாய் உடைத்தெறிக்கும் வலிமைகொண்ட அவர்களது இறுகிய உதடுகளிடமிருந்து தன்னை துண்டித்துக் கொண்டு கிருஷ்ணன் வெகுதூரத்தில் மிதக்கத் தொடங்கினான்.

pendatang2ஜடமாய் உட்கார்ந்து மட்டும் இருந்தான், எதற்கும் செவிகொடுக்கவில்லை, யாருக்கும் காத்திருக்கவில்லை, கொஞ்சம் கொஞ்சமாய் தன் நினைவுகளை மீட்டுக்கொண்டிருந்தான். சொன்ன நேரத்திற்கு தேநீர் வராததால் சுட்டெறிக்கும் உக்கிரத்துடன் வோங் ஆர்பாட்டம் செய்ததை அவன் பார்த்திருக்கிறான்.  அதுவரை அவனுக்குள் மறைந்திருந்த கோர முகம் அன்று பேராற்றலுடன் வெடித்து வெளிபட்டது. ரொட்டி வெட்டும் கத்தியை நோக்கி வோங்கின் கை அத்தனை உறுதியாய் போனது. கடை உரிமையாளர் அங்கு வந்து, வேலையாளின் செயலுக்காக நொந்துகொண்டு சமாதானப்படுத்த வேண்டியதாகிவிட்டது. அப்போதும் அவனது மூர்க்கம் குறையவில்லை. கிருஸ்துவ கருணை உணர்வை கொட்டும் பிரான்சிஸுக்கும் லிம்முக்கும்கூட வன்முறை உணர்வு வெளிபட்டதைப் பார்த்த ஞாபகமும் கிருஷ்ணனுக்கு வந்தது. அவர்கள் இருவரும் நாட்டு குடிமக்களின் தனிமனித உரிமைப்பற்றி பேசத் தொடங்கிய தருணமது. “எது தனிமனித உரிமை?” அவன் முழங்கினான். “உன்னால் எடுக்க முடிந்ததை எடுத்துக்கொண்டு அதை இழக்காமல் வைத்துக் கொள். அந்த ஒரு உரிமைதான் நமக்கு இருக்கு.”

“ச்சோப்.. ச்சோப்,” டேங் குறுக்கிட்டான். “நீ முதலில் கைகளை முறுக்கு, கத்தியை கையில் எடு. துப்பாக்கியை பிடி. அப்போதுதான் நீ கேட்டது உன்னிடம் வரும். நீ ஒருமுறை எழுந்து நின்றால் உடனே உன்னை இன்னும் அதி பாதாழத்துக்குள் எவனாவது தள்ள வருவான்.” வறண்ட சிரிப்புடன் அவன் தொடர்ந்தான், “யார் அந்த ‘எவனாவது’னு உனக்குத் தெரியும்தானே.” சொல்லிக்கொண்டே ‘மாட்’டை பார்த்தான்.  அன்று எல்லாரும் சிரித்தனர், மாட் உட்பட.. ஒருவர் இன்னொருவரிடம் வஞ்சகம் கொண்டிருப்பதை ஒப்புக்கொள்வதுபோல இருந்தது அந்த சிரிப்பு.

“நீ இப்படி இருக்கும் ஆள் இல்லையே,” டெங் இப்போது குறுக்கிட்டான். “யோசனை. யோசனை. எதுக்கு இந்த யோசனை?”

கிருஷ்ணன் தன் சிந்தனை குமிழிக்குள்ளிருந்து வெளிவந்தான். குழப்பத்தோடு டெங்கை வெறித்து பார்த்தான். கேலியும் கிண்டலும் பொதிந்த அவன் முகத்தில் கொடூரமும் கோரமும்கூட நிறைந்திருப்பதன் சுவடுகள் தென்பட்டன. அவனது நகைச்சுவைகள் கிருஷ்ணனைக் கடித்து, இறுகப்பற்றி ரணப்படுத்தின. அவர்களது கரடுமுரடான கத்திமுனைகள் நசிந்து மிதந்துக்கொண்டிருந்த கிருஷ்ணனை அறுத்து, சிதைத்தன.

“நீங்க பரவால,” கிருஷ்ணன் தொடர்ந்தான். “யோசிக்காமல் இருக்கலாம். நான் யோசித்தாகனும். வாழ்க்கை முழுவதும் இதுவரை எதையும் யோசித்ததில்ல.”

அதன்பின் யாரும் எதும் பேசவில்லை. தேநீரைக் குடித்தபடி மங்களான மாலை விளக்கொளியில் நாற்காலி மேசைகள் நிழலுரு கொள்வதையும் ஆண்களெல்லாம் கரு நிழல்களுக்குள் பேய்களாவதையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்குள்ளும் சிந்தனை வேர்விட்டுக் கொண்டிருந்தது.

மரணித்துக்கொண்டிருந்த அன்றைய அடர்ந்திருண்ட நாளில் கிருஷ்ணனின் நண்பர்கள் செய்த துரோகங்கள் ஒவ்வொன்றாய் சேர்ந்து உருண்டுதிரண்டிருந்தன. அவர்களது முடிவற்ற கபடத்தன்மை கிருஷ்ணனின் நம்பிக்கையை நிலைதன்மையற்று பலவீனமாக்கியது. கிருஷ்ணன் அவற்றையெல்லாம் அடுக்கடுக்காக அவதானிக்கத் தொடங்கினான். எந்தவொரு எதிர்ப்புமின்றி சரணடையும் தேர்வு மட்டுமே அவன்முன் இருந்தது. சட்டென சிந்தனையொன்று உந்தித் தள்ளுவதை உணர்ந்தான். அது அவனடைந்த புது ஞானத்திலிருந்து உதித்தது. இதுநாள்வரைச் ‘மாட்’தான் பல்வேறு சூழல்களிலிருந்தும் மனிதர்களிடமிருந்தும் விலகி நின்று தனக்குள் புகுந்துகொள்கிறான். அப்படி பார்த்தால் மாட் மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறான். கிருஷ்ணன் மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கிறான். ஆம், ‘மாட்’ மீண்டும் மீண்டும் தன் சுயத்தை நோக்கி பயணிக்கிறான். ஆகவே அவன்தான் பென்டாத்தாங்!

அவனது மனைவி அவனை மீண்டும் ஏற்றுக்கொண்டாள். அன்றைய நாளில் மாட் மீதிருந்த கசப்பை அவளது கோபப்பார்வை அப்பட்டமாக வெளிகாட்டியது. இருவரும் ஒருவருக்கொருவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமலே சேர்ந்து இதுவரை வாழ்ந்தும் விட்டனர். அவன் ஒளிரும்போது இவளும் ஜொலித்திருக்கிறாள். அவன் சிரிக்கும்போது இவளும் சிரித்திருக்கிறாள். அவ்வளவுதான். இப்படி சிரிப்பதற்கும் ஜொலிப்பதற்கும் பின்ணனியில் வேறெதுவும் இருக்க முடியுமா என்ன?

இப்படியொரு சந்தேகம் தொடர்ந்து சூழ்ந்திருக்க, மனைவி தயாரித்து வைத்திருந்த எளிய இரவு உணவை கிருஷ்ணன் சாப்பிட முற்பட்டான். புரிந்தும் புரியாமல் எந்த கேள்வியுமற்று படுத்திருந்த மனைவி எனும் சதைப் பிண்டத்தின் அருகில் படுத்தும் கொண்டான். அன்றைய இரவுக்கானவனின் வருகைக்குக் காத்திருந்த தருணம் அவனுக்கு வியர்த்து தொண்டைக்குள் விசித்திரமான சத்தமொன்று சிக்கி வெளிபட்டது. எதையும் பொருட்படுத்தாமல் கிருஷ்ணன் காத்துக்கொண்டே இருந்தான். அவன் வரும்வரை.  அல்லது அவனை சென்றடையும்வரை.

அவனில்லாமல் வேறு யாரோ ஒருவன் வந்தான். தொடக்கத்தில் கிருஷ்ணனால் அவனை அடையாளம் காண முடியவில்லை. புதிதாய் வந்தவனின் தசைகள் உறுதியாகவும் கோடுகளற்றும் இளமை துள்ளலோடு இருந்தன. முகம் வட்டமாக, சாந்தமாக, சேதமடையாமல் இருந்தது. அவனால் என் கனவுக்குள் அவ்வளவு தைரியமாக வர முடியுமா? கிருஷ்ணன் ஆச்சரியப்பட்டான். பின் அவனை தன் மனதில் அமர்த்திக் கொண்டு அவன் நடமாடுவதை, வேலை செய்வதை, பேசுவதை பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் விரித்த நட்பெனும் பொறிக்குள்ளும் விழுந்தான்.

அதோ கிருஷ்ணன் இப்போது ‘மாட்’டுடன் போய்க் கொண்டிருக்கிறான். அவர்கள் ஒரு அலுவலகத்தினுள் இருக்கிறார்கள். மாட் திரு.குத்பெர்ட்டின் அறையிலிருந்து வெளிபடுகிறான். திரு.குத்பெர்ட் அவனை கடுமையாக திட்டியனுப்பிவிட்டார். கிருஷ்ணனால் புரிந்து கொள்ளவே முடியாத ஒரு முகபாவத்தை மாட் காட்டிக் கொண்டே வருகிறான்.  “அற்பன்!” மாட் சொன்னான். “அவன் மனசுல என்ன நினைச்சிகிட்டு இருக்கான்? இங்க வந்து எனக்குச் கத்துக்கொடுக்கிறானா? எனக்கு கத்துகொடுக்கிறானா?”

தெளிந்த நீரிலிருந்து பிடித்து ஒரு வாளி கடல்நீருக்குள் போடப்பட்ட மீனாக கிருஷ்ணன் தன்னை கற்பனை செய்துக் கொண்டான். கடல்நீருக்குள் இருக்கும் ஏதோ ஒன்று தன்மீது ஆதிக்கம் செலுத்துவதை நிராகரித்து, மறுத்து, எதிர்த்து மீன் போராடியது. ‘மாட்’டின் முகம் அதிருப்தியில் வியர்த்துக் கொட்டியது. பின்னர் அது, நையாண்டியாக உடைபட்டது.

“நேரம் வரும்,” மாட் கூறினான். “வா சாப்பிட போகலாம்!”

சூரிய ஒளியையும் கடையையும் நோக்கிச் செல்லும் அந்த படிக்கட்டுகளில்தான் அவர்களின் அன்றாட வெளியேறல்கள் பதிந்திருக்கும். திரும்ப வரும்போது அவர்களுக்குள் புதுத்தெம்பு தோன்றியிருக்கும். மனச்சுமை தனிந்து நட்புணர்வும் பொங்கியிருக்கும். ஆனால் இம்முறை நிழல் பிம்பமொன்று அலுவலகக் கட்டடத்தின் வெளியிலும் உள்ளும் அவர்களைப் பின்தொடர்வதைக் கிருஷ்ணன் கண்டான். அவர்கள் இருக்கையில் அமரும்போதும் வேலை செய்யும்போது அந்த நிழல் கிருஷ்ணனின் பார்வையிலிருந்து அமிழ்ந்துக் கொள்கிறது.

அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்நிழல் கீழ்நோக்கி சென்று; இரண்டாய் பிழந்து அவனுக்குள்ளும் ‘மாட்’டினுக்குள்ளும் மூழ்கியது. அவர்கள் திரு. குத்பெர்ட்டின் பற்றி பேசும்போதெல்லாம் அந்நிழல் வார்த்தைகளின் இடுக்குகளில் சிக்கி ரணப்படுவதைக் கிருஷ்ணன் உணர்ந்திருக்கிறான். அவன் ‘மாட்’டை பார்க்கிறான்; மாட் அவனைப் பார்க்கிறான். இரு முகங்களிலும் ஒரே மாதிரியான அனுதாபமும் பயவுணர்ச்சியும் பளிச்சிடுகிறது. இந்நேரத்தில் திரு. குத்பெர்ட்டின் அறைக்கதவு அதிகார உலகின் ஊடுருவலில் மூடியிருக்கவில்லை. அது வெளி நோக்கி ஊசலாடுகிறது, அவர்களை அழைப்பது போல, பின் ‘மாட்’டையும் அவனையும் உள்ளே இழுத்து பயத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்கிறது.

அதன் இருளுக்குள் அசுவாசப்படுத்திக் கொண்ட அவர்கள் உள்ளே எந்த பொருளும் இல்லாதிருப்பதைப் பார்க்கிறார்கள். வரைபடங்கள் சுவர்களாகியும் தரை ஓயாமல் நேரத்தையும் சுழற்றிக்கொண்டிருந்தது. நிதானமாக எவ்வளவோ முயன்றும் அவர்களது உடல் மட்டும் நடுங்கிக் கொண்டிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவரின் தோள்களும் பயத்தால் வியர்த்து கொட்டிக் கொண்டிருந்தது. வரைபடங்களிடமிருந்தும் சுழலும் நேரத்திடமிருந்தும் தங்களது நிழலை மீட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் அப்போதைக்கு மனம் மட்டுமே அதற்கு தயாராக இருந்தது.

பிறகு, சட்டென அவர்களது மனதால்கூட அந்த நிழல்களை, காலத்தின் வழியாக தங்களை ஊடுருவிச் செல்லும் நாடுகளை தடுக்க முடியவில்லை.  தொற்றியிருந்த பயமும் அவர்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் நீங்கத் தொடங்கியது. சுயத்தை மட்டுமே மையப்படுத்திய அவர்களது உணர்வுநிலை உடைந்து புதியதொரு தெளிந்த நிலைக்குள் நுழைகிறது. நூற்றாண்டுகள் காலமாக மனிதர்கள் கடந்து செல்கிறார்கள். வரலாறு அவர்களது உடைகளில் திட்டுத் திட்டாய் தெரிந்தன, வெளிச்சத்தில் அவர்களது முகங்கள் புதிராலும் தெளிவின்மையாலும் ஒளிர்ந்தன. முழுமையான அந்தக் காலசுழற்சியில் கிருஷ்ணனும் ‘மாட்’டும் ஆர்வத்தோடு இயைந்தனர்.

எந்த ஒழிவுமறைவும் இன்றி பெருக்கெடுத்து ஓடும் கால சுழற்சியில் இருவரும் பண்டைய புராதன சாகசக்காரார்களையும், பிறந்த நிலத்தை விஞ்சி சென்ற அலெக்சாண்டர்; புத்தரின் நிலைத்த தியானம், இன்னும் கொஞ்சம் கீழே சென்று கிரேக்க முனிவர்களின் ஞான மேட்சத்தையும் பார்த்தனர். நேரத்தின் உயிரணுக்கள்மீது சவாரி செய்தவர்கள் போர்கள், கலாச்சார மோதல்கள் என பல பிரளயங்களைப் பார்த்துவிட்டு அப்படியே தங்கள் சொந்த வரலாற்றை பின்தொடர்ந்தனர். அதில் ஆட்சியாளர்கள்மூலம் தங்களது கப்பல்களும் வாழ்வாதாரங்களும் அந்நாட்டு கடற்கரைக்குக் கொண்டுவரப்படுவதை சாட்சியாய் இருந்து கவனித்தனர்.  முடிவில்லாமல் தொடர்ந்த கால சுழற்சியில் சட்டென திரு. குத்பெர்ட்டின் வருகை அவர்களது பார்வைக்கு வந்தது. மெலிந்து, தோற்றுப்போய் வாழ்க்கை கந்தல் கந்தலாகி கிடந்தாலும் அவனது ஆன்மா மட்டும் எதிர்காலம் நோக்கி பிரகாசித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து அவர்கள் அவனை நேர் எதிர்கொண்டு நோக்கினர். அவனிடம் வரலாறு இல்லை, அவனை மேலும் ஆறாய நகர்கின்றனர், அவனது வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் ஒன்றுமே இல்லை; அவன் எங்குதான் முன்னோக்கி பார்க்கிறான் என பார்த்தால், அங்கும் சுழன்றுகொண்டிருக்கும் மூடுபனியாய் எல்லாமும்.

பின் விழித்தெழுந்த கிருஷ்ணன் முழு பிரக்ஞைக்கு வந்தான். அதுவரை இருந்த பயம், மனகுழப்பம் அனைத்தும் அவனிடமிருந்து அகன்றது. இருட்டில் மனைவியின் உடல்வளைவுகளில் தெரிந்த எல்லைக்கோடுகள், அர்த்தமற்று இருப்பதுபோல உணர்ந்தான். அவர்களின் வாழ்வு நத்தை ஒட்டுக்குள் அன்றாடத்தனங்களால் ஆன நாட்களின் குவிப்பாகி விட்டிருந்தது.  புரிந்துகொள்ள முடியாத அனைத்திலிருந்தும் மீண்டு வசதியான புள்ளியில் தன்னை நிறுத்திக் கொண்டான். திரு. குட்பெர்த்தில் அறைக்குச் சென்று தன் தரப்பை முன்வைக்க நேரும்போதெல்லாம் மாட் இப்படியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறான். தன்னை அடக்க முயல்பவனிடமிருந்து விலகி தன் கூட்டுக்குள் சென்று பாதுகாப்பாகிக் கொள்வதுபோல.

‘நானும்கூட என் அப்பாவின் வழிதோன்றலாகி, சரித்திரத்தின் நீட்சியாகி,’ நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டான். சட்டென படுக்கையிலிருந்து சத்தமில்லாம் எழுந்து வரவேற்பரைக்குச் சென்றான். மங்கலான சுவர் விளக்கை தட்டி, முன் கதவைத் திறந்து அமைதியாக இருக்கும் தெருவைப் பார்த்தான்.

“பெண்டாத்தாங்,” தனக்குள் சொல்லிக் கொண்டே தெருவில் மரத்தின் நிழலை, பொதுதொலைபேசி, மின்கம்பங்களை நோக்கிச் செல்லும் பாதை ஆழமான காரிருளுள் தோய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கு முன் நிகழ்ந்ததையும் தன் முன்னால் விரிந்து கிடக்கும் மீத வாழ்வையும் எந்தவொரு கலக்கமும் பயமும் இல்லாமல் தன்னால் இப்போது பார்க்கமுடிவதை உணர்ந்தான்.

“பெண்டாத்தாங்,” அவன் நன்றி ததும்ப மென்மையாய்ச் சொன்னான். “பெண்டாத்தாங், பெண்டாத்தாங், பெண்டாத்தாங்.”

அவனது சுயநினைவையும் கடந்து அச்சொல் அவனுள் புகுந்து எங்கோ சென்றது. கட்டடத் தொழிலாளர்களின் களிமண் மூடிய தோல்களையும் கடந்து எங்கோ சென்றது. தன்னை கோபத்துடன் நிராகரித்த ‘மாட்’டின் உதடுகளைக் கடந்து, சுயநலம் பொங்கிய அவனது கன்னங்களைக் கடந்து எங்கோ சென்றது. அது கிருஷ்ணனை அவன் உள்நோக்கி கொண்டு செல்லவில்லை. அனைத்தையும் கடந்து வேறொன்றுக்கு கொண்டு சென்றது. கதவருகில் உட்கார்ந்து வீட்டின்முன் நீண்டிருக்கும் சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.   விடியலும் அவன் மனைவியும் அவன் இருப்பை அடையாளம் கண்டு கொண்டனர்.

“நீங்க கொஞ்சமும் தூங்கவில்லையா?” மனைவி கேட்டாள்.

“தூங்கியே கிடப்பதைவிட சில சமயம் விளிப்பாக இருக்க வேண்டியுள்ளது,” அவளைப் பார்க்க திரும்பியபடி கூறினான்.

தொலைந்திருந்த சிரிப்பு அவள் உதட்டில் மீண்டும் மலர்ந்தது. அவனுக்கு காப்பி கலக்க சமயலறை நோக்கி நடந்தாள். எப்போதாவது வரும் இந்த தனிமை உணர்விலிருந்து வெளிபட்டிருப்பதால் அவனுக்கு பெரும்பசி எடுத்திருக்கக்கூடுமோ என தனக்குள் பலவாறாக சிந்திக்கொண்டாள்.

அவள் மதிய உணவைப் பறிமாறும்போது ஏதோ முடிவற்ற பயணத்தை தொடங்குபவன் போல ஒவ்வொரு பண்டத்தையும் விடாமல் சாப்பிடத் தொடங்கினான். இருந்தும் அவனுக்கு வயிறு நிரைந்தபாடில்லை. இதற்கு முன் கண்டிராத ஒளியை கிருஷ்ணனின் கண்களில் அவள் உணர்ந்தாள். அந்த ஒளி அவனை சுற்றி நடக்கும் ஒவ்வொன்றையும் சேகரித்து துல்லியமான பெரும் திட்டத்திற்கு அவனை ஆயத்தப் படுத்துவதுபோல் இருந்தது. பகலில் மணியம் தன் நண்பர்களைப் பார்க்கச் சென்றான்.  சில வாரங்களாக அவனுக்குள் என்னதான் நடந்துகொண்டிருந்தது என அவனது மனைவியால் புரிந்து கொள்ள முடியாமலே போனது. குளம், கால்வாய், குடிசை, பங்களா, அறிமுகமில்லா இடுக்குகள் என சுற்றிக்கொண்டிருந்த கணவனுக்கு எங்கிருந்து இப்புதுத்தெம்பு வந்ததென அவளால் அடையாளம் காண முடியவில்லை.

கிருஷ்ணன் கடையை நோக்கி நடந்தான். மனதின் ஆழத்தில் நிலைகொள்ளாத மனசாந்தம் வழியில் பார்க்கும் அனைத்தையும் தனக்குள் உறிஞ்சிக் கொண்டது. குப்பைத் தொட்டியை நெறுங்கியபோது  குப்பை குவியலை கிழறிக் கொண்டிருந்த காகம் அவனுக்குள் இருந்த ஒன்றை தொட்டுவிட்டதாய் உணர்ந்தான்.  அது தன்னை கீழ்படியவைத்து உள்ளுக்குள் சிதறிகிடக்கும் வரலாற்று எச்சங்களை எல்லாம் கொத்தி எறிந்து காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டான். ‘ஆ சோ செய்ததைப் போல்,’ கிருஷ்ணன் மளிகைக் கடையை கடக்கும்போது நினைத்துக் கொண்டான்.

கடைக்குள் நுழையும்போது வோங், பிராஞ்சிஸ் லிம், தெங் எல்லோரும் கடையில் இருந்தனர். இறுதியாக அவன் கடையை விட்டு வெளியேறியபோது உட்கார்ந்திருந்தவர்களைபோல் அப்படியே இருந்தனர். எப்போதும்போல் மிக சாவகாசமாக அதே மேசையில் அமர்ந்திருந்தனர். அந்த மேசை அவர்களது அசையும் நிழல்களை உறைத்து அதே இடத்தில் வைத்திருக்கிறது. கிருஷ்ணன் சரணடைவதைப் பற்றி சிந்தித்தான்.

“யாரு வந்திருக்கா பாரு!’ தெங் சொன்னான். “ரொம்ப தெளிவா இருக்கீங்க. உங்க மனைவி நல்லா சேவகம் செய்தாங்களோ?”

“ உங்க மனைவி பின்வாங்கிட்டாங்களா?” கிருஷ்ணன் தொடர்ந்தான்.

வோங்கும் ப்ராஞ்சிஸும் கிருஷ்ணனை உற்று பார்த்தார்கள்.

“நான் சொல்வத கேள் நண்பா, உன்னை எதிர்பார்க்கிறோம்,” தெங் கூறினான்.

“மாட்,” வோங் சொன்னான். “விசித்திரமானவன் அவன்.”

“நாம் அவனை புரிந்துகொள்ள முயற்சி செய்யனும்,” கிருஷ்ணன் கூறினான்.

“அப்படி செய்து உன் வாழ்நாளை வீணடித்துக்கொண்டு இருக்கிறாய்,” பிராஞ்சிஸ் லிம் கூறினான்.

“ஒருவேளை தவறான கோணத்திலிருந்து நான் அவனைப் பார்த்திருக்கலாம்.”

“நீ உன் கோணத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்,” வோங் தொடர்ந்தான், “ஆனால் அவன் மாற மாட்டான்”.

“மாறுவது நமக்கு நல்லதுதான்.”.

தெங் சிரித்தான், மற்றவர்களும் கிண்டலாய் நகைத்தனர்; அவர்களது அவநம்பிக்கையின் சிற்றலைகளை கிருஷ்ணன் அவதானித்தான், சோர்ந்துபோகவில்லை. வெளிச்சங்களாலும் நிழல்களாலும் நிரப்பப்பட்ட பல பகல்களை அவன் கண்டிருக்கிறான்.  மாறாத அதே ஒளி அதே நிழல், மாட் கூறலாம், “பெண்டாத்தாங்!” அப்போது கிருஷ்ணனும் கூறுவான் . “ஆம் நான் எப்போதும் வந்துகொண்டிருப்பவன்தான். வந்துகொண்டே இருக்கிறேன்.  ஆனால், வந்தடையப் போவதில்லை.  வந்தடைதல் என்பது. மரணம். வந்தடைந்துவிட்டால் பிரயாணப்படுதல் இல்லை. எங்கே வந்தடைவது? எனக்குத் தெரியவில்லை. ஆகவே நான் எப்போதும் வந்துகொண்டிருப்பவன் தான். அடைவை வந்தடையாதவன். வந்துகொண்டிருப்பவன்”.

ஆங்கில மூலம் : கே.எஸ்.மணியம் (Arriving)

தமிழில் : விஜயலட்சுமி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...