நுரை

நுரை3சூரிய ஒளியிலிருந்து கருப்புநிற கண்ணாடிகளைக் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது அந்த இடம். பின்னணியில் காதுகளை எரிச்சல் செய்யும் டும் டும் ஓசை. சுற்றியும் மிதப்பில் இருக்கும் ஆட்கள். எல்லாமே அவளை என்னமோ பண்ணியது. நாளைவரை வீட்டுக்கு யாரும் வரப்போவதில்லை. அப்பாவின் கூட்டாளி செத்துப்போனதும் அவர் இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பதும் நல்ல சகுனமாக நினைத்துக்கொண்டாள்.

மேசைக்கு அந்தப்பக்கம் இருந்து அவன் அனுப்பிய புன்னகையைப் பொருட்படுத்தாமல் ஜான்சி கீழே குனிந்துகொண்டாள். கைகளைப்பிசைந்து கொண்டு சுற்றும்முற்றும் தெரிந்தவர்கள் யாரவது இருக்கிறார்களா என்று பார்த்தாள். இருந்த ஐந்தாறு பேரும் முகம் அறியாதவர்களாக இருக்க, வந்த வேலைக்குத்தடையென எதுவுமில்லை. மேலும் இரவு நெருங்காத இந்தச் சமயம் ஆட்கள் வருவது குறைவாக இருக்கும் என அவளுக்குத் தெரியும். அவள் தன் மனதை மட்டுமே எதிர்க்க வேண்டியநிலை.

நேரம் ஆக ஆக அவளுக்கு இன்னும் படபடவென ஆனது. தப்பு செய்கிறோம் என்ற உறுத்தல் உச்சக்கட்டத்தை அடையும்முன் வந்தவேலையைப் பார்த்துவிட்டுப் போகவேண்டுமென்று நினைத்தாள்.

உதடுகள் ‘சீக்கிரம்கொண்டுவா…சீக்கிரம்கொண்டுவா…’ என முணுமுணுத்தன.

நிறைந்த அந்தக் கிளாசை அவன் அவளது முன்வைத்தான். வேகமான மூச்சுக்களை கொஞ்சம் அடக்கி ‘ஓகே’ என்பது போல் தலை அசைத்தாள்.

பயம். நுரை தங்க நிறமாகப் பொங்க அவளுக்கு அப்பாவின் ஞாபகம் வந்தது.

***

அப்பா மிகவும் பாசமானவர். ஜான்சி இதுவரை கேட்டு முடியாது என்று எதையும் சொன்னதில்லை. தான் இருக்கும்வரை தன்மகளுக்கு அவள் ஆசைப்பட்டதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்.

சாகும்வரை ஜான்சியின் பாட்டி சொல்லிக்கொண்டிருந்தார்…. அவளுக்கு இரண்டு வயது இருக்குமாம். பக்கத்து வீடு மாலதி அக்கா பாலர்பள்ளிக்குச் செல்வதைப் பார்த்து அவளும் பள்ளிக்குச்சென்றாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றாளாம். ஒழுங்காக இன்னும் பேசகூட ஆரம்பிக்காத போது பாலர்பள்ளியெல்லாம் தேவையில்லை. எப்படியும் மூனுநாளில் போகமாட்டேன் என்று அடம்பிடிப்பாள் என்று அம்மா  சொல்லியிருக்கிறார்.

அப்போது வீட்டின் வரவு, செலவுக்குச் சரியாக இருந்தகாலம்.

“என்மகள் என்னிடம் கேட்கிறாள். நான் அனுப்புகிறேன்;வா நம்ப ஸ்கூல் போலாம்…” என்று அவள் கையைப் பிடித்தவர் அப்பா. அவருக்கு என் முகத்தில் மலர்கிற அந்தப் புன்னகை மட்டும்போதும்.

இருந்தாலும் சுமந்தவளின் கணிப்பு தவறாகுமா? சிலநாட்களில் ஜான்சி அழுதுகொண்டே பள்ளி செல்லும் நிலைமை. ஆனால் இன்னமும் அப்பா ஜான்சிக்காகச் செய்வதையெல்லாம் அம்மா ஒருவகை பைத்தியதனமாகத்தான் பார்த்தார். உண்மைதான். எல்லோருக்கும் அப்பா மகள் மொழி புரிந்துவிடுமா என்ன?

***
வைத்த கிளாஸ் இன்னும் அப்படியே இருக்க, “எனி ப்ரோப்லேம் சயாங்?”, அவன் கேட்டான். “ன்…நோ…நோப் ரோப்லேம்…”என்றுசொல்லிவிட்டு மெல்ல கிளாசை கையில் எடுத்துக்கொண்டாள்.

எச்சிலை விழுங்கிவிட்டு பக்கத்தில் அவனது கிளாசைப் பார்த்தாள். பாதிகாலியாக இருந்தது. அப்படியே அந்த இளைஞனை கவனித்தாள். கருப்பு ஜாக்கெட்.  கொஞ்சமாகத் தாடி. சுமாரான முகம்.   ஒரு சீனப்பெண் அவன் உதடுகளையும் கன்னத்தையும் எச்சில் செய்துகொண்டிருந்தார்கள். அவள் அங்கு உபசரிப்பு பணிப்புரிபவள் என சட்டையில் இருந்த பியர் கம்பெனி சின்னத்தைப் பார்த்து அடையாளம் கண்டுக்கொண்டாள்.

ஜான்சி பெருமூச்சுவிட்டாள். இதை கவனித்த அவன் அவள் பக்கம் திரும்ப ஜான்சி வழக்கம் போல் தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். அவளை உள்ளே விட்டிருக்கமாட்டார்கள்.  பொய்யான டாட்டூவும் ஒப்பனையும் அந்தச் ஷோர்ட் ஸ்கெட்டும்தான் அவள் டிக்கெட் ஆனது. அந்த இளைஞனின் கை கிளாசை எடுக்க, ஓரக்கண்ணால் பார்த்தாள். “பேபி, வ்தத்ஸ் ஆப் ?”என அவன் கேட்க வழுகிய கிளாஸ் துண்டுகள் அவள் முன் சிதறிக்கிடந்தது.

***

அப்போதெல்லாம் அப்பா மாலையில் வேலை முடிந்து திரும்பும்போது முதலில் ஜான்சிதான் வாசலில் கதவு திறந்துவிடுவாள். சட்டென அப்பாவின் மேலிருந்து ஒரு வாடை தூக்கும். அது அவளுக்குப் பிடித்திருந்தது. அது வியர்வையுடன் கலந்த ஒருவிதமான வாடை. மாதத்தில் இரண்டு முறையாவது புது ஹாலிவுட் படங்கள் கொண்ட சிடிகள் அப்பா மூலமாக வீட்டினுள் வரும்.

அப்பா குளித்துவிட்டு அவரின் சாயும் நாற்காலியில் உட்கார்ந்து செய்திகள் பார்த்தபின், அவளும் அம்மாவும் தரையில் உட்கார்ந்து அப்பாவுடன் படம் பார்ப்பார்கள். இதற்காகவே ஜான்சி வீட்டுப்பாடங்களை முன்னவே முடித்துவிடுவாள். அப்பாவிடம் எந்தப்படம் பார்க்கலாம் என அவள் சிபாரிசு செய்வதுண்டு. அவள் சொல்லும் படத்தையே அப்பா அன்று ஒளிபரப்புவார்.

ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போது ஒரு சிக்கல் ஏற்படும். படத்தில் முத்தகாட்சிகள்நுரை2 வரும்பொழுது மட்டும் என்ன செய்ய வேண்டுமென்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அம்மா கையிலேயே வைத்திருக்கும் ரிமூட் மூலமாகக் காட்சியை வேகமாக ஓட்டுவார். அப்பா அவளிடம் சம்பந்தம் இல்லாமல் பேச்சுக்கொடுப்பார். ஒருமுறை சட்டென ஒரு பெண் கதாபாத்திரம் சட்டையைக் கழட்டி வீசி திரையில் தோன்ற அம்மாவுக்கு உதரல் எடுத்துவிட்டது. எதை அழுத்தி ஓட்டுவதென தெரியாமல் டிவியை அடைத்துவிட்டு பேசாமல் உறங்கப்போய்விட்டார். அன்று முழுவதும் அப்பா நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். சாமிக்கதையெல்லாம் அவர்களுக்குச் சொன்னார். என்னக் கதை சொன்னாலும் அவளுக்கு அந்தக் காட்சி மனதில் புகுந்து நடுக்கத்தையும் குழப்பத்தையும் உருவாக்கியபடியே இருந்தது.

மது அருந்தும் காட்சிகள் முத்தகாட்சிகள் போன்றல்ல. அம்மா ஓட்ட வேண்டியக் கட்டாயம் இல்லை. குடிக்கிறதெல்லாம் தப்பு என அதுபோன்ற காட்சிகளை ஓடவிடாமல் கொஞ்சம் அதட்டலாகச் சொல்வார் அம்மா. அப்பாவின் முகத்தில் எந்த மாறுதலும் இருக்காது.

அப்பா அவளுக்குத் தெரியாது என்று நினைத்திருந்தார். ஆனால், முன்னிலிருந்தே ஜான்சிக்கு நடப்பதெல்லாம் தெரியும்.  அம்மா அவளை என்றைக்கும் திறக்கவிடாத மேல் அலமாரியை அவள் அன்று தற்செயலாகத் திறந்தபின் கண்ட பியர் போட்டில்கள் அவளுக்கு அதிர்ச்சியைத் தந்தன.  அப்போதுதான் இரண்டு வாரங்களுக்கு முன் பள்ளியில் யார் வீட்டில் அப்பா மது அருந்தமாட்டார் என்று ஆசிரியர் கேட்டதற்குப் பெருமையுடன் அவள் கைதூங்கியிருந்தாள். அப்பாவை முன்புபோல் பார்க்கக் கண்கள் சம்மதிக்க மறுத்தன.

***

என்னதான் பள்ளியில் சிறந்த மாணவி என்றாலும் முன்பு ஜான்சி அவள் தோழிகளால் ஒதுக்கப்பட்டிருந்த பலகாரணங்களில் அவளுக்கு காதலன் இல்லாமையும் மது குடிக்க இயலாமையும் முக்கியமானது. ரோஸிக்கும் கேத்திக்கும் பியர் பெரிய விசயமே இல்லை. வைன் குடிப்பதெல்லாம் அவர்கள் வீட்டில் குடும்பத்துடன் அரங்கேறும் எனச் சொல்வதையெல்லாம் முதலில் விளையாட்டாகத்தான் நினைத்தாள். பின்னர் வீட்டில் அனைவரும் வைன் அருந்தி ஆடும் படத்தைக் காட்டியபோது கடும் தாழ்வுணர்சிக்குள் தள்ளப்பட்டாள். அப்பாவின் மீது இருந்த கோபம் அப்போதுதான் குறைந்தது.

போதையானபின் நண்பர்களுடன் நெருக்கமாக இருபத்துப் பற்றி பேசும்போது மட்டும்தான் ஜான்சிக்குள்ளே நடக்கும் மாற்றங்களை அவளால் கட்டுப்படுத்த முடிந்ததில்லை. அதுபோன்ற சமயமெல்லாம் அவளுக்கு அம்மா ஓட்டிய ஆங்கிலப்பட காட்சிகள் நினைவுக்கு வரும்.

அப்பா வீட்டில் இல்லாத சமயம்தான் அவள் அந்த அலமாரியில் உள்ள ஒரு டின்னை எடுத்தாள். நேராக வீட்டின் மாடிக்குச் சென்றாள். தொலைக்காட்சி சாதாரண அளவை விட கொஞ்சம் சத்தமாக எதை எதையோ கத்தினால் நன்றாக இருக்கும் என நினைத்தாள். பின்னர் ஏதோ ஞாபகம் வந்தவள் அம்மா நிராகரித்த ஆங்கிலப்படத்தைப் போட்டாள்.  அந்தக் காட்சிக்காகக் காத்திருந்தாள். அவளுக்குத் தெரியும் அது எந்த நிமிடமென. காட்சி வந்தபோது பியரை நுரைக்கவிட்டாள். அது முத்தக்காட்சி. முத்தத்தில்தான் தொடங்கியது. பின்னர் நடந்த பலவற்றை அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அழுகை வந்தது. தான் ஏதோ மிகவும் கெட்டவளாகிவிட்டதாக நினைத்து அழுதாள். நுரைத்த பியரைக் குடிக்காமல் மலக்கூடக் குழிக்குள் ஊற்றினாள்.

***

மீண்டும் ஒரு பியர் கிளாஸ் அவள் முன்நின்றது. இம்முறை தவறவிடக்கூடாது என மனம் கட்டளையிட்டது. வீட்டில் குடிப்பது அவளால் நிச்சயம் முடியாது. அம்மா தான் வணங்கும் சாமி சக்தி மிக்கது எனக்கூறியிருந்தார். அம்மாவுக்கு எல்லாமே தெரிந்துவிடலாம். அன்று குழிக்குள் பியரை ஊற்றியப்பின்புகூட அம்மாவின் முகம் அவ்வளவாக சரியாக இல்லை. எல்லாமே தெரிந்துவிட்டது என்றுதான் நினைத்தாள். இருண்டதெல்லாம் பேயாக தெரிந்தது.

ஒரு கிளாஸ் குடித்துவிட்டு அதை படம் பிடித்து வைத்துக்கொண்டால் நண்பர்களிடம் காட்டலாம். மெதுவாக வாயில் பியரை வைத்தவள் ஃபோனில் கேமராவை செல்பிக்குத் தயார் செய்தாள். கேமராவில் அந்த இடம் வித்தியாசமாகத் தெரிந்தது. பின்னணியில் இருக்கும் போஸ்டர்கள் தோழிகளை மிரளவைக்கலாம்.

கொஞ்ச நேரத்தில் கேமராவில்  அந்தக் கருப்பு ஜாக்கெட் ஆள் தெரிந்தான். இம்முறை தோள்மீது அவன் கைபோட ஜான்சியால் தட்டிவிட முடியவில்லை. சட்டென கேமராவை அழுத்தினாள். அந்தப் படம் அவளுக்குத் தேவையாக இருந்தது.

ஐஸ்வரியா, கோலாலம்பூர்

4 comments for “நுரை

 1. Kalaishegar
  May 6, 2017 at 11:00 am

  நல்ல கரு. சுவாரசியமாக படைத்துள்ளீர்கள்.
  சுற்றியுள்ள சக மனிதர்களோடு தன்னை தக்க வைத்துக் கொள்ள ஒருவருக்கு ஏற்படும் தாக்கம் பற்றியும், ஒருவர் மாறுவதற்கு சூழ்நிலை எவ்வகையில் கைக்கோர்க்கிறது என்பதையும் அழகாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். ஜான்சி பிடித்துக்கொண்ட சுயப்படங்கள் இனி என்னென்னவெல்லாம் செய்யுமோ என யோசிக்க தோணுகிறது.
  வெற்றிப்பெற வாழ்த்துக்கள் சகோதரியே!

  • September 27, 2017 at 10:39 am

   மிக்க நன்றி அண்ணா!

 2. கணேஷ்குமார் தியாகராஜன்
  May 13, 2017 at 12:09 pm

  அருமையான கதை கரு, அக்கா. மேன்மேலும் இது போன்ற சிந்திக்க வைக்கும் கதைகளை படைக்க என்னுடைய வாழ்த்துக்கள், அக்கா!!!!

  • September 27, 2017 at 10:38 am

   நன்றி கணேஷ்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...