விருந்தினர் இலக்கியம்

10மலேசியாவில் இலக்கியம் என்று சுட்டப்படுவது மரபு இலக்கியம், பக்தி இலக்கியம், கண்ணதாசன், வைரமுத்து, வாலி வரிசையில் பாடலாசிரியர்களை மையமாக கொண்ட கேளிக்கை நிகழ்ச்சிகள், நன்னெறி இலக்கியங்கள், நவீன இலக்கியம் போன்ற எல்லா தரப்பு இலக்கிய முயற்சிகளையும் சேர்த்ததுதான்.

வெகுஜன இலக்கியம் தீவிர இலக்கியம் என்ற அகவய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டுபுறவயமாக இவை அனைத்துமே இலக்கியம் என்ற சராசரி புரிதலோடுதான் இங்கு பலரும் தங்களை இலக்கியப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.ஆகவே மலேசியாவில் கடந்த 50 ஆண்டுகளாக பல தரப்புகள், பல நோக்கங்களை முன்னிருத்தி  ‘இலக்கியத்தை’ முன்னெடுத்துச் சென்றுள்ளன. குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பலரின் முயற்சியில் மலேசியாவில் தமிழ் இலக்கியம் நீடித்துக் கொண்டிருக்கிறது.மலேசிய இலக்கிய வளர்ச்சி சில பெரிய அமைப்புகளாலும்பல சிறிய அமைப்புகளாலும் தனி மனிதர்களாலும்தீவிரமாக முன்னகர்தப்பட்டுள்ளது.

ஆயினும், பொதுவாக, ஈழ இலக்கியம் என்று சட்டென்று அடையாளம் காட்டும் எழுத்து வகைகள் இருப்பதைப் போன்று மலேசிய இலக்கியம் என்ற ஒன்று இங்கிருக்கிறதா என்ற கேள்விக்கு சற்று தடுமாற்றத்துடன்தான் நாம் விடை கூற முடியும். புலம்பெயர்இலக்கியத்தில் இலங்கை இலக்கியம் தரும் தாக்கத்தைப் போன்று மலேசிய சிங்கை இலக்கியங்கள் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது

நீண்டகாலமாகவே, மலேசிய தமிழ் இலக்கியம் என்று நாம் சொல்லிக் கொள்வது தமிழக இலக்கியம் போட்ட குட்டிகள் என்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். குட்டிகள் என்று பன்மையில் குறிப்பதன் நோக்கம், இங்கு முன்பே குறிப்பிட்டதுபோல் பல்வகை இலக்கிய வகைமைகள் உள்ளன. ஆனால் அவை யாவற்றுக்கும் தாயும் தகப்பனுமாக தமிழக மூலங்களே உள்ளன.

மலேசிய கலைத்துறையில் ‘மலேசிய’ என்ற அடைமொழியுடன் தமிழக கலைஞர்களின் பெயர்களை இணைத்துக் கொண்டு கலைப்பணி செய்யும் போக்கு உண்டு. மலேசிய டி.எம் எஸ், மலேசிய எஸ்.பி பாலா, மலேசிய எம்.ஜி.ஆர் போன்ற உதாரணங்களைச் சுட்டலாம். அவர்கள் தங்களை ஒரு மூலத்தின் நகல்களாக இங்கே மறுபதிப்பிடுவதையே தங்கள் கலை ஆற்றலாக நிலைநிறுத்துபவர்கள். இலக்கிய துறையில் அந்த அளவு நகல் எடுக்கும் போக்கு இல்லை. மறைந்த எம்.ஏ இளஞ்செல்வனை மலேசிய ஜெயகாந்தன் என்று அவரது நண்பர்களுக்குள் குறிப்பிட்டுக் கொள்வதுண்டு. ஆயினும் பொதுவில், மலேசிய மு.வ, மலேசிய ஜெயகாந்தன், மலேசிய அசோகமித்திரன் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுக் கொள்வதோடு அந்த அபத்தம் நின்றுவிடுவது வழக்கம்.ஆனாலும், மலேசிய எழுத்துத்துறையின் வழிகாட்டிகள் என்ற அளவில் தமிழக இலக்கிய ஆளுமைகளே இன்றும் உள்ளனர்.

ஆகவே, தமிழக இலக்கிய ஆளுமைகளும் எழுத்தாளர்களும் மலேசிய இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் ஊடுறுவி வந்திருப்பதையும் அதன் பின்னணியில் செயலாற்றி இருப்பதையும் மறுக்க முடியாது.

அவ்வகையில்  வரலாற்றில், தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு வருகை தந்துஇங்கு இலக்கிய சேவைகளை வழங்கிய ஆளுமைகளையும் தமிழ் அறிஞர்களையும் நீண்ட பட்டியலிட முடியும். நீண்டகால அடிப்படையிலோ குறுகிய கால வருகையிலோ அவர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர். ஆயினும் மலேசிய நவீன இலக்கிய வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை சித்தித்து பார்ப்பதும் அடையாளம் காண்பதும் மிக முக்கியம்.

இவ்விடத்தில் ஈ.வெ.ரா வின் மலேசிய வருகையையும் சி.என் அண்ணாதுரையின் வருகையையும் இலக்கிய கணக்கில் சேர்க்க முடியாது. அதேபோல் திராவிட பரப்புரை கருத்துகளை மேடைகளில் பேசுவதை முதன்மை திட்டமாக கொண்டு இங்கு வந்த பலநூறு பேரையும் கணக்கில் வைக்க முடியாது.  அவர்கள் சமூகத்தில் சிந்தனை புரட்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடுமாற்று கருத்துகளைச் சார்ந்து மேடை பேச்சாளர்களாக இங்கு வந்தனர். இலக்கிய அடிப்படையான செயல்பாடுகள் எதையும் முன்னெடுக்கவில்லை. ஆயினும் அவர்களின் கருத்துக்களால் கவரப்பட்ட பல மலேசிய எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் மைய சரடாக சமூக மறுமலர்ச்சியைக் கொண்டிருந்தனர்.

அவர்களின் மேடை பேச்சு மக்களிடம் சமூக மறுமலர்ச்சி சிந்தனைகளை மட்டும் ஓரளவு தூண்டிவிட்டு பொதுவான முற்போக்கு சிந்தனையின் அடிப்படைகளை அமைத்தது. சி.அண்ணதுரை, மு.கருணாநிதிபோன்ற திராவிட இயக்கத்தலைவர்கள் எழுத்தாளர்களாகவும் இருந்ததால் அவர்களுக்கு திரண்ட வாசகர்கள் இருந்தனர். அவர்களின் திரைப்படவசனங்களால் ஈர்க்கபட்ட பலர் தங்கள் எழுத்திலும் அதே சாயலை கொண்டுவர முயன்றனர். ஆயினும் அவை தற்காலிக கொந்தளிப்பாகவே இருந்தனவேயன்றி மலேசிய இலக்கியத்தில் பெரும் பாதிப்புகளைக் கொண்டுவரவில்லை. மலேசிய சூழலுக்கு மிகவும் செயற்கையான திராவிட இயக்க மொழிப் பயன்பாடு இயல்பாகவே இங்கு நிலைகொள்ளாமல் போனது.

அவ்வகையில் தமிழகத்தில் இருந்து வருகை தந்து மலேசிய இலக்கியத்தில் கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்ட முன்னோடியாக சித.நாராயணனைக் குறிப்பிடலாம். இவர் தமிழகத்தில் பிறந்து கல்விகற்று அங்கே ஊடக அனுபவமும் பெற்றவராவார். அக்காலகட்டத்தின் பிரபல எழுத்தாளர்கள் பலருடனும் பழக்கம் உள்ளவர். குறிப்பாக புதுமைப்பித்தன் எழுத்தால் ஈர்க்கப்பட்டவர்.

இவர் தமிழ் நேசனில் 1950 ஆம் ஆண்டில் கதை வகுப்பையும் பின்னர் 1952-ல்  தமிழ் முரசில் ரசனை வகுப்பையும் நடத்தினார். இவருக்கு துணையாக இருந்தவர் இவரை விட மிகவும் இளையவரான பைரோஜி.நாராயணன். இவரும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்தான்.

இவர்கள் இருவரும் தமிழகத்தை தாயகமாக கொண்டவர்கள் என்றாலும், அன்றைய மலாயாவில் சிறந்த எழுத்தாளர்களை உருவாக்க பெரிதும் உழைத்துள்ளது உண்மை. அதிலும் கந்தசாமி வாத்தியார் என்ற பெயரில் இயங்கிய சித நாராயணன், அன்றைய தமிழ்நாட்டு எழுத்தாளர்களுடன் சவால் விட்டு உள்நாட்டு எழுத்தாளர்களை முன்னிருத்த முனைந்த்துள்ளார். அவர் கதைவகுப்பு தேர்வுகளை நடத்தி மேதை எழுத்தாளர்கள், சிறந்த எழுத்தாளர்கள் என்ற பல்வேறு தரங்களில் மலாய எழுத்தாளர்களை அறிமுகம் செய்துள்ளார்.

//இவ்விருவரும் (கு. வெங்கடராஜுலு, கு.அழகிரிசாமி) மலாயாத் தமிழ் எழுத்தாளரைக் கூசாமற் குறைகூறி வந்தனர்….உள்ளூரார்மேற் குறை காணும் இத்தகையவர்க்குத் தமது குறைபாடுகள் தெரியாமலிரா.மமதையில் மூடி மறைக்கிறார்கள். இருவர்க்கும் பத்ரிகைத் தொழில் சரிவரத் தெரியாது, மொழிபெயர்க்கச் சரியாய் வராது, செறிவாக எழுத வராது, கவிதை மாற்றறியத் தெரியாது//என்று மலாயா படைப்பாளிகளுக்காக குரல் கொடுக்கும் துணிவு அவருக்கு அன்றே இருந்துள்ளது.

இதில் குறிப்பிடத் தக்க கூறு அன்றைய நிலையிலும் மலாயாவில் தனித்தன்மை வாய்ந்த எழுத்தாளர்கள் வளர வேண்டும் என்ற முனைப்பு இருந்துள்ளது என்பதுதான். உதராணமாக 1958-ஆம் ஆண்டு நடத்தப்பட சிறுகதைப் போட்டி ஒன்றில் “தமிழ் முரசு நடத்திய சிறுகதைப் போட்டித் தொடரில் 1958 மார்ச் மாதத் தலைப்பு விளையாட்டு பொம்மை. காமம், காதல் இல்லாமல் மலாயாச் சூழ்நிலையில் கதை இருக்க வேண்டும் என்ற விதிகளுக்கிணங்க ரெ கார்த்திகேசு முதற்பரிசாக 25 வெள்ளியைத் தட்டிச் சென்றார்.’ என்ற தகவலைபாலபாஸ்கரன்  தன் பதிவில் குறிப்பிடுகிறார்.

ஆகவே சுதந்திரத்திற்கு முன்னான மலாயாவிலேயே ‘மலேசிய’ அடையாளம் கொண்ட இலக்கியத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்துள்ளது தெளிவாகிறது. இந்த முன்னெடுப்புக்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட இலக்கிய ஆளுமை இருந்துள்ளார் என்பது கூடுதல் வியப்பு தருகிறது.

விருந்தினர் இலக்கியம் (கு.அழகிரிசாமி)அடுத்து தமிழக சிறுகதையாளரும் இதழாளருமான கு.அழகிரிசாமி தமிழ் நேசன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றபின்னர், இலக்கிய வட்டம் அமைப்பின் வழி எழுத்தாளர்கள் கலையாம்சம் மிக்க சிறுகதைகளைப் படைக்க வழிகாட்டியுள்ளார். லட்சியவாத கதை மாந்தர்களையும் சமூக கருத்துகளையும் பிரச்சாரங்களையும்முன்னிருத்தும்படைப்புகளை இவரின் கலை ரசனை ஏற்கவில்லை. மாறாக, கலையாம்சம் பொருந்திய சிறுகதை உருவாக்கத்திற்கு வித்திட்டார். அடிப்படையில் இவருக்கும் சுப.நாராயணனுக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளதை பாலபாஸ்கரனின் பதிவுகளின் வழி அறியமுடிகிறது. ஆயினும் இரு ஆளுமைகளும் இருவேறு ரசனை அடிப்படையில் மலேசிய இலக்கியத்தை வடிவமைக்க முனைந்துள்ளது தெளிவு. ஆகவே தமிழகத்தில் இருந்து மலேசியா வந்த முன்னோடி இலக்கியவாதிகள் மலேசிய இலக்கியத்தின் அடிப்படையை உருவாக்க பங்காற்றியுள்ளனர்.

தொடர்ந்து முருகு சுப்பிரமணியம், தமிழ் நேசனிலும் பணியாற்றிய காலத்தில் மலேசிய தமிழ்b இலக்கியத்தை வளர்க்க சில திட்டங்களை முன்வைத்துள்ளார். முருகு. சுப்பிரமணியமும் தமிழகத்தில் இருந்து மலாயாவுக்கு நாளிதழில் பணி புரிய வந்தவர்தான். இவர் காலத்தில் ‘பவுன் பரிசு’ திட்டம் மலேசிய எழுத்தாளர்களை எழுதத் தூண்டிய உக்தியாக அமைந்துள்ளது. பவுன் பரிசு திட்டத்தை பிடிமானமாக கொண்டு எழுத்துத்துறைக்கு வந்தவர்கள் பின்னர் இந்நாட்டின் முக்கிய எழுத்தாளர்களாக நிலைபெற்றனர். மா.ராமையா, மாயதேவன், சி,வேலுச்சாமி, ரே.கார்த்திகேசு, பாவை என பலரும் சித.நாராயணனும் பைரோஜியும்நடத்திய கதைவகுப்புகளிலும் ரசனை வகுப்புகளிலும்   தேறி வந்து தங்கள் திறமைகளை பவுன் பரிசு திட்டத்தில் சோதித்துக் கொண்டனர்.

தொடர்ந்து 66-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் தலைமை பொறுப்பு வகித்த தனிநாயக அடிகளின் முயற்சியில் முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை நடத்திய தனிநாயக அடிகளும் அந்த மாநாட்டில் கட்டுரைகள் படைத்த பலரும் தமிழகத்தைச் சார்ந்தவர்களே. இம்மாநாடு அன்றைய உள்நாட்டு எழுத்தாளர்களுக்கு இலக்கிய புரிதலையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளதுணைபுரிந்தது.அதோடு மலேசியாவில் தமிழ் மொழி உறுதியாக நிலைக்க வழிவகுத்தது. ஆயினும் நவீன இலக்கியமேம்பாட்டுக்கு இம்மாநாடு எவ்வகையில் பங்காற்றியது என்பது ஆய்வுக்குறியது.

அடுத்து மலேசியாவுக்கு இலக்கிய சுற்றுப்பயணம் செய்ய வந்த பிரபல எழுத்தாளர்கள் பார்த்தசாரதியும் அகிலனும் மலேசிய படைப்பாளிகளுக்கு எழுத்தார்வத்தை ஊட்டிச் சென்றார். வெகுஜன எழுத்தாளர்களான நா.பாவுக்கும் அகிலனுக்கும் மலேசிய எழுத்தாளர்களிடையே நல்ல செல்வாக்கு இருந்தது. அவர்களை முன்மாதிரியாக கொண்டு பலர் இங்கும் கதைகளை எழுதிக் கொண்டிருந்தனர். இலச்சியவாதம், மிகைஉணர்ச்சி, ஒழுக்கவாதம் போன்ற கூறுகள் மாணவர்களுக்குக் கல்வி போதிக்க சாதகமாக இருப்பதால் மலேசிய கல்வியாளர்கள் இவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பைத் தந்தனர்.

ஆயினும் மலேசியாவில் தனித்தன்மை கொண்ட இலக்கியம் படைக்கப்படவேண்டும் என்ற சித.நாராயணனின் கனவு தமிழக பிரபல எழுத்தாளர்களானநா.பா. அகிலன் போன்ற வெகுஜன எழுத்தாளர்களின் தலையீட்டால் தடைபட்டது என்பதே உண்மை.நா.பா இருமுறை மலேசியா வந்துள்ளார். முருகு.சுப்ரமணியம் முதன்முறையாக அவரை மலேசியாவுக்கு அழைத்திருந்தார். பின்னர் உலக தமிழ் மாநாட்டிற்கு சாமிவேலுவின் அழைப்பை ஏற்று 1987-ல் மீண்டும் ஒருமுறை வந்தார். முருகு.சுப்ரமணியம் தலைமையில் சை.பீர் முகமது நா.பாவை நாடு முழுவதும் கொண்டு சென்று நிகழ்சிகள் நடத்தினார். நா.பா பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இலக்கிய உரைகள் நிகழ்த்தினார்

அவரின் லட்சியவாத அழகியல் கதைகளில் ஈர்ப்பு கொண்ட மலேசிய எழுத்தாளர்களும் வாசகர்களும் அவரின் எழுத்தை இங்கு முதன்மை படுத்தியதாலும் கல்வி கூடங்கள் அவரின் படைப்பை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியதாலும் இங்கு மெத்தனமான அழகியல் படைப்புகள் கொண்டாட்டத்துகுறியனவாக ஆகின.

14650692_1816832198561781_5688843005756033090_n

ரப்பர் குறித்து அகிலனிடம் ரெ.கார்த்திகேசு விளக்கும்போது

அதேபோல் அகிலனின் மலேசிய பயணமும் இங்கு ஜனரஞ்சக படைப்புகளையே சிறந்த இலக்கியம் என்று நிலைநிறுத்தியது. அவர் மலேசிய பயணத்திற்கு பிறகு எழுதிய ‘பால் மரக்காட்டினிலே’ என்னும் நாவலில் இருந்து அவரின் மொண்ணையான இலக்கிய வீச்சை புரிந்துகொள்ளலாம். ஆகவே  இலக்கியத்தை வாழ்க்கையில் இருந்து வெகுதூரத்தில் நிறுத்திவைத்து அழகுபார்க்கும் இவ்வகை படைப்புகளால் மலேசிய இலக்கியத்தில் பெரும் தேக்கம் ஏற்பட்டது. வாசிப்பு குறைவும் சமூக கட்டுதிட்டங்களோடு முரண்படாத மனோநிலையும் கொண்ட பல வாசகர்களும் எழுத்தாளர்களும் இவ்வகை கர்பணாவாத இலக்கியமுன்னுதாரணங்களையே தங்களின் முன்னுதாரணங்களாக கொண்டனர்.

தொடர்ந்து, 1980-களில் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் பணிபுரிந்த இரா.தண்டாயுதம் மலேசிய இலக்கிய நகர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். இவர் தமிழகத்தில் உயர்கல்வி கற்றவர் என்பதோடு மு.வாவின் மாணவருமாவார். ஆகவே தேர்ந்த தமிழறிவும் இலக்கிய ஈடுபாடும் அவரிடம் மிகுந்திருந்தது. மலேசிய இலக்கியத்தின் பரிணாமத்தில் இவரின் பணிகளை மறுக்கமுடியாது. அவர் ஏற்ற கல்வி பணியும் அவரின் தனிப்பட்ட இலக்கிய ஈடுபாடும் மலேசிய இலக்கியத்தை சுறுசுறுப்பாக்கியது.

இவர் எழுத்தாளர்களுடனும் மாணவர்களுடனும் இனிமையாக பழகக்கூடியவர் என்பதால் பெரிய நட்பு வட்டத்தை இலக்கிய ஆர்வளர்களாக மாற்றமுடிந்தது. மலேசிய நாட்டுபுற பாடல் ஆய்வு, சிறுகதை கருத்தரங்கு, சிறுகுழுவில் இலக்கிய கலந்துரையாடல்கள் என்று சில புதிய போக்குகளில் மலேசிய இலக்கியம் நகர அவர் அடிப்படைகளை வகுத்தார்.இவரது வழிகாட்டலில் ரெ.கார்த்திகேசு, அருசு.ஜீவானந்தம், போன்ற மலேசிய முன்னோடி நவீன படைப்பாளர்கள் ‘இலக்கிய வட்டம்’ இலக்கிய குழு அமைத்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டதோடு சிற்றிதழ் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். நவீன இலக்கியம் குறித்த எளிய அறிமுகத்தை இரா.தண்டாயுதம் மூலம் மாணவர்கள் பெற்றனர். இலக்கிய விமர்சனங்களை கல்வியுலகம் வகுத்துக் கொண்ட திறனாய்வுகளின வழி முன்னெடுத்தார்.

ஆயினும் அவரின் இலக்கிய ரசணை ஒரு கல்வியாளராக மட்டுமே அவரை முன்னிருத்தியது. அன்றைய நவீன இலக்கிய போக்குகள் அனைத்தையும் வரவேற்று இளஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் தெளிவு இவருக்கு இருந்தாலும் நவீன இலக்கியத்தின் கூர்மையான பகுதிகளை அவர் கைகொள்ளவில்லை. அவரின் ‘தற்கால தமிழ் இலக்கியம்’ என்ற நூலை இன்று வாசிக்கும் போது அவரின் ரசனையின் பொதுமையைப் புரிந்து கொள்ளமுடிகிறது. தீவிர இலக்கிய விமர்சனப் பார்வையை அவர் கொண்டிருக்கவில்லை.அவரைப் பொருத்தமட்டில் அகிலனும் நா.பாவும், தி.ஜானகிராமனும், மெளனியும் ஒரே வரிசையில் வைக்ககூடிய படைப்பாளர்களே. அவர்கள் நல்ல இலக்கிய படைப்புகளை தந்தவர்கள் என்கிற அளவில் அவர்களை ஏற்றுக் கொள்கிறார். கா.நா.சுவின் இலக்கிய விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும்  அதே மனத்தோடே மு.வாவின் இலக்கிய விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்கிறார். அவரின் போக்கு கல்வியாளர்களிடம் காணப்படும் பொதுவான இலக்கிய திறனாய்வுத்தன்மை சார்ந்தே இருந்துள்ளது. ஆகவே அவர் அகிலலையும் நா.பாவையும் மிகச்சிறந்த  நவீன படைப்பாளிகளாக மலேசியாவில் அறிமுகம் செய்ததில் வியப்பிலை.

அவர் அகிலனை மலேசியாவுக்கு வரவழைத்து பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அகிலனும் நா.பாவும் பலரும் அறிந்த எழுத்தாளர்களாக இருந்த அதே காலகட்டத்தில்தான் தமிழகத்தில் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களும் எழுதிக்கொண்டிருந்தனர். ‘எழுத்து’ முதலான சிறுபத்திரிக்கைகளும் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் அவற்றை மலேசிய சூழலில் இரா.தண்டாயுதம் பரவலாக்கவில்லை. இரா.தண்டாயுதம் ஒரு கல்வியாளர் என்ற அடிப்படையில் கல்வி உலகு ஏற்கும் அல்லது இழகுவாக பொருந்தும் இலக்கிய முன்மாதிரிகளையே முன்னெடுத்தார். ஆகவே மலேசியாவில் ஒழுக்கவாத எழுத்தை முதன்மையாக போற்றும் போக்கு இன்றளவும் நீடிக்க இரா.தண்டாயுதமும் முக்கிய காரணமாகிறார்.

பணிநிமித்தம் மலேசியா வரும் படைப்பாளர்களைத் தவிர்த்துஇலக்கிய அமைப்புகளும் தனிமனிதர்களும் விடுக்கும் அழைப்பை ஏற்றும் பலர் மலேசியா வருகின்றனர். மரபாக மலேசியாவில் இலக்கியம் நாளிதழ்களின் கட்டுப்பாட்டிலும் அரசியல்வாதிகளின் ஆதரவை நம்பியும் இருந்ததால், தமிழக இலக்கியவாதிகளை மலேசியாவுக்கு அழைத்துவரும் பணிகளை அவர்களே முன்னின்று செய்வது வழக்கம். பலர் கோலாலம்பூரில் மட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பிவிடுவர். சிலர் நாடு முழுவதும் இலக்கிய சுற்றுலா மேற்கொள்வர்

அரசியல்வாதிகளுக்கும் பெரும் அமைப்புகளுக்கும் தமிழக எழுத்தாளர்களை மலேசியாவுக்கு அழைப்பதனால்கிடைக்கும் சுய பிரபலமும் தமிழக தொடர்புகளும் மிக முக்கியம். எனவே அவர்கள் திரைத்துறை பின்னணியும் அரசியல் பின்னணியும் உள்ள இலக்கியவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.  பொருளாதார நோக்கோடு கறாரான தொகையை முன்கூட்டியே பெற்றுக் கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மலேசியா வரும் பலரும் இங்கு சிறந்த பேச்சாளர்களாக, கவிஞர்களாக வலம்வருவர்.வைரமுத்து, லியோனி, சுகி.சிவம், விசாலி கண்ணதாசன், சுல்தானா பேகம்போன்ற பலர் ஆண்டுதோறும் மலேசியா வருவது வாடிக்கை என்றாலும் அவர்களை இலக்கிய செயல்பாட்டாளர் என்று கொள்ள முடியாது. அவர்களால் மலேசிய இலக்கியத்திற்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை.மக்களை ஒரு சில மணி நேரங்களுக்கு சிரிக்க வைக்கவும் சில தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவுமே அவர்களின் நிகழ்ச்சிகள் பயன்படுகின்றன.

ஆகவே, இவ்வகை இலக்கிய நிகழ்வுகளின் அடிப்படை நோக்கம் கூட்டம் திரட்டுவதும் மக்களை மகிழ்விக்கும் விடயங்களை இலக்கியம் என்ற பதாகையின் கீழ் பேசி களைவதுமாகவே இருந்துள்ளது. மலேசிய நண்பனின் முன்னால் ஆசிரியராகவும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவராகவும் இருந்த ஆதி.குமணன்  சில எழுத்தாளர்களை மலேசியாவுக்கு அழைத்து வந்து நாட்டின் பல பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தினார். வைரமுத்து, சிவசங்கரி போன்ற வெகுமக்கள் இலக்கியவாதிகளை அவர் மலேசியாவில் பிரபலப்படுத்தினார். நாடுமுழுதும் சுற்றுப்பயணம் செய்து நிகழ்சிகள் நடத்தி அவர்களின் நூல்களை இங்கு விற்று பணம் திரட்டி கொடுத்து அவர்களை மகிழ்ச்சிபடுத்தியதைத் தவிர வேறு நன்மை ஏற்பட்டதாக தெரியவில்லை.

இச்சூழலில், 1980-ஆம் ஆண்டுகளில் அருசு.ஜீவானந்தம், மு.அன்புச்செல்வன், மலபார் குமார், சாமி மூர்த்தி ஆகியோர் தீவிர இலக்கிய ஆர்வத்தில்  இலக்கிய சிந்தனை (இது வட வட்டாரத்தில் இயங்கிய ‘நவீன இலக்கிய சிந்தனை’ அமைப்பல்ல) என்ற அமைப்பை தோற்றுவித்து இயங்கினர். 1987-ஆம் ஆண்டில் இவர்கள் ஒழுங்கு செய்த சிறுகதை கலந்துரையாடலில்பங்கேற்க சுந்தர ராமசாமியை அழைத்தனர். சுந்தர ராமசாமியின் மலேசிய சிங்கப்பூர் வருகையை இந்த அமைப்பே ஏற்பாடு செய்தது.

மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவு இல்லாததாலும், சுந்தர ராமசாமியை மலேசிய எழுத்தாளர்கள் அறிந்திராததாலும், அவரின் பயணம் அக்காலகட்ட எழுத்தாளர்களிடம் பெரும் பாதிப்பை நிகழ்த்தவில்லை. ஈப்போ, கோலாலம்பூர், போன்ற பெருநகரங்களில் சுந்தர ராமசாமி உரைகளாற்றிய பின் சிங்கை சென்றார்.

ஆயினும்,  அரசியல் பின்புல அலங்காரமும், திரைப்பட பின்புல கவர்ச்சியும் கொண்ட வெகுஜன எழுத்தாளர்களை அழைத்துவரும் வழக்கமான நிலையில் இருந்து விலகி, சிற்றிதழ் சார்ந்து இயங்கும் ஒரு படைப்பாளரை அழைக்கும் புதிய முயற்சியாக இது அமைந்துள்ளது. ஆகவே தீவிர இலக்கியம் நோக்கி மலேசிய படைப்பாளர்களை நகர்த்தும் ஒரு அறிய முயற்சியாக இதைக் குறிப்பிடலாம். 2000-ஆம் ஆண்டுகளுக்குப் பின் பல தீவிர இலக்கிய படைப்பாளர்கள் மலேசியாவுக்கு அழைக்கப்பட்டதற்கு இது அச்சாரமாக அமைந்தது எனலாம்.

அதே போன்று செம்பருத்தி மாத இதழ் முயற்சியில், 13மாக்சிய சிந்தனையாளர் எஸ்.வி ராஜதுரை மலேசியாவில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். அரசியல், சமூகவியல் சிந்தனைகளை ஆழமாக பேசக்கூடியவரான அவர் நேரடி இலக்கிய விவாதங்களில் கலந்துகொண்டதாக தெரியவில்லை. ஆயினும் அவரது சிந்தனைகள் நவீன  இலக்கியவாதிகளுக்கு மிக்க பயனானவை என்பதை மறுக்க முடியாது.

2000-ஆம் ஆண்டுகளில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டிலான பல நிகழ்சிகளுக்கும் போட்டிகளுக்கும்  தமிழக எழுத்தாளர்கள் வருவது வாடிக்கையானது. வைரமுத்து, வாசந்தி,  மாலன், பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன், சுப்ரபாரதிமணியன் போன்ற பல படைப்பாளிகளைக் கொண்டு மலேசிய எழுத்தாளர்களுக்குக் கருத்தரங்குகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. மேலும் திரைப்பட பாடலாசிரியர்கள் பா.விஜய், சினேகன் போன்றவர்களும் மலேசிய தமிழ் எழுத்தாலர் சங்க நிகழ்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

பாடலாசிரியர் நா. முத்துகுமார், ராமகோபாலான் நம்பியார் தலைமையில் செயல்பட்ட கிள்ளான் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வந்து சென்றார். இதே போன்று இடைநிலைப்பள்ளிகளில் இலக்கியம் போதிக்கும் ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டு இயங்கும் இலக்கியகம், எஸ்.ராமகிருஷ்ணனை அழைத்து ஆசிரியர்களுக்கான சிறுகதை பட்டறை ஒன்றை நடத்தியது. நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களை திரட்டி செய்யப்பட்ட இந்நிகழ்வு, முன்னால் தேர்வு வாரிய தமிழ்ப்பிரிவு தலைவர் பி.எம்.மூர்த்தியின் முயற்சியில் நடந்தது. ஆயினும் கல்வித்துறையின் தேவையை முன்னிறுத்தி செய்யப்பட்ட இம்முயற்சியால் இலக்கிய பயன் சிறிதளவே விளைந்தது.

தமிழகத்தின் சிறந்த நவீன படைப்பாளிகளான அவர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டாலும் இந்நிகழ்ச்சிகளால் மலேசிய இலக்கிய போக்கில் பெரிய பாதிப்புகளைக் காணமுடியவில்லை. மலேசிய எழுத்தாளர் சங்கம் முன்னின்று நடத்திய அஸ்ட்ரோ நாவல் போட்டியால், மண்புழுக்கள்(2005)லங்காட் நதிக்கரை (2005), மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை(2007), நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்(2007), சிலாஞார் அம்பாட் (2012) போன்ற நல்ல நாவல்கள் நமக்கு கிடைத்தன என்றாலும் அவற்றை தமிழக எழுத்தாளர்களின் வருகையோடு தொடர்புபடுத்த முடியாது.

90-ஆம் ஆண்டுகளின் இறுதியில் சை.பீர்.முகமது தனது சொந்த முயற்சியிலும் செலவிலும் சில இலக்கியவாதிகளை மலேசியாவுக்கு கொண்டுவந்தார். எஸ்.பொன்னுதுரையையும் வாசந்தியையும் மலேசியாவுக்கு கொண்டு வந்து நவீன இலக்கியம் குறித்த நிகழ்ச்சிகளை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக 2000-தில் ஜெயகாந்தனைபெருமுயற்சியால் மலேசியாவுக்கு அழைத்து வந்தார்.

300001எழுத்தாளர் ஜெயகாந்தன் மலேசியா வந்தது மலேசிய முற்போக்கு இலக்கியத்தை தீவிரப்படுத்தும் முக்கிய நிகழ்வாக கொள்ளலாம். பரவலாக மலேசிய வாசகர்களால் அறியப்பட்ட எழுத்தாளராக இருந்தவர் ஜெயகாந்தன். மு.வ, நா.பா. அகிலன் என்ற எழுத்தாள மரபில் இருந்து சற்றே நகர்ந்து மாற்று இலக்கிய வெளியில் பிரவேசித்தவர்களின் ஆதர்ச படைப்பாளியாக ஜெயகாந்தன் இருந்தார். அவர் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த 70-ஆம் ஆண்டுகளில் அவரின் எழுத்துக்களை முன்மாதிரியாக கொண்டு மலேசியாவில், சை.பீர். முகமது, மு.அன்புச்செல்வன், எம்.ஏ.இளஞ்செழியன், க.பாக்கியம் என்று பலரும் முற்போக்கு இலக்கியங்களை எழுத முனைப்புகாட்டினர் என்கிறார் சீ.முத்துசாமி. ஆகவே ஜெயகாந்தனின் தாக்கம் மலேசிய நவீன படைப்பாளிகளிடன் அதிகம் இருந்தது தெளிவாகிறது. அதன் அடிப்படையில் அவரின் மலேசிய வருகை நாடு முழுதும் இருந்த தீவிர எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியது.

2005-ல் மலாயா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் வருகைதரு பேராசிரியராக பணியாற்றிய இலங்கை மொழியியலாளர் எம்.ஏ.நுக்மான் அமைதியான முறையில் இலக்கியப்பணி ஆற்றினார். உலக இலக்கியத்தில் பரந்த அனுபவமும் தீவிரமும் கொண்ட இவரின் சேவையை வல்லினம், அநங்கம் போன்ற இதழ்கள் பயன்படுத்திக் கொண்டன, மலேசியாவில் இலக்கிய கோட்பாடுகள் பற்றிய அறிமுகங்களை அவர் வழங்கினார். மலேசிய நவீன படைப்பாளிகளுக்கு இலக்கிய கோட்பாடுகள் முற்றிலும் புதிய திரப்புகளை கொடுத்தது.

2005க்கு பிறகு வல்லினம் அநங்கம் போன்ற சிற்றிதழ்கள் தங்கள் நிகழ்ச்சிகளுக்கும் நூல் வெளியீடுகளுக்கும் தமிழக எழுத்தாளர்களையும் இலக்கிய விமர்சகர்களையும் அழைக்கத் துவங்கின. ஜெயமோகன் காதல் இதழின் அழைப்பை ஏற்று முதன்முறையாக மலேசியா வந்தார். பிறகு அவர் மலேசிய எழுத்தாளர் சங்க அழைப்பை ஏற்று ஒருமுறையும் அதன் பின்னர் வல்லினம், கூலிம் நவீன சிந்தனைக் களம் ஆகிய அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடர்ந்தும் வருகைதருவது குறிப்பிடத் தக்கது.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் 2006-ல் காதல் இதழ் மற்றும் கவிஞர் அகிலனின் அழைப்பை ஏற்று மலேசியா வந்தார். அகிலனின் ‘மீட்பு’ என்னும் கவிதை நூல் வெளியீட்டுக்கு வந்த  அவர் காதல் இதழ் ஏற்பாடு செய்த கவிதை கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு நவீன கவிதைகள் குறித்த தெளிவைக் கொடுத்தார். 2009-ஆம் ஆண்டு எம்.ஏ நுக்மான் அநங்கம் சிற்றிதழை சுங்கைபட்டாணியில் அறிமுகப்படுத்தி உரைநிகழ்த்தினார்.

2012-ஆம் ஆண்டில் பெரு.ஆ,தமிழ்மணி தலைமையில் நடந்த பகுத்தாறிவாளர் மாநாட்டிற்கு அ.மாக்ஸ், ஆதவன் தீட்சண்யா போன்ற தலித்திய இலக்கியவாதிகள் முதன்முறையாக வந்தனர். பின்னர் இவர்களை சிறப்பு விருந்தினர்களாக கொண்டு வல்லினம் கலை இலக்கிய விழாக்கள் நடைபெற்றதோடு சிறப்பு இலக்கிய பயிலரங்குகளும் நடைபெற்றன.

அதே போல், எழுத்தாளர் இமையம், ஓவியர் டிரஸ்கிமருது போன்றவர்களும் முதன்முதலில் கோலாலம்பூர்தமிழ் ஆராய்சி மாநாட்டுக்கு வந்து சென்ற பின்னர், வல்லினம் நிகழ்ச்சிகளுக்காக சிறப்பு விருந்தினர்களாக வந்து கலந்துகொண்டனர். உடன் பெரியார் சிந்தனையாளர்களான, பேராசிரியர் அரசு, வா.கீதா ஆகியோரும் வந்ததோடு சில அரசியல் சிந்தனை கூட்டங்களிலும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, வல்லினம் 2012 ஆம் ஆண்டில் தமிழகத்திadavanன் தனித்தன்மை வாய்ந்த படைப்பாளர்களை வரவைத்து எழுத்தாளர்களுக்கான பட்டறைகளை நடத்தியது. தமிழன்பன், எம்.ஏ.நுக்மான், ஆதவன் தீட்சன்யா, அ.மாக்ஸ் போன்ற எழுத்தாளர்ளின் துணையுடன் கோட்பாட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. இப்பட்டறைகள் மலேசிய இலக்கியச் சூழலில் மிகவும் புதியவை என்றாலும் இவற்றை மலேசிய படைப்பாளிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை மறுப்பதற்கில்லை.

தவிர, வல்லினம் இலக்கிய கலைவிழாவை முன்னிட்டும் இலக்கிய கலந்துறையாடல்களை முன்னிட்டும் ஆண்டுதோறும் தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகள் வருகை தருவது தொடர்கிறது. அவ்வாறு மலேசியா வந்த படைப்பாளிகளின் வரிசையில், சாரு நிவேதா, லீலா மணிமேகலை, ஆதவன் தீட்சன்யா, ஷோபா சக்தி, இமையம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், போன்ற பலரையும் குறிக்கலாம்.

கவிஞர் கலாப்பிரியாவும்(2015), கவிஞர் யூமா.வாசுகியும்(2017) மலேசியாவுக்கு தனிப்பட்ட முறையில் வந்திருந்தாலும், அவர்களைக் கொண்டு வல்லினம் குழுவினரும் கூலிம் நவீன இலக்கிய களம் குழுவினரும் சில நிகழ்ச்சிகளை தலைநகரிலும் வடக்கிலும் செய்தனர். கவிதை ஆர்வளர்கள் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்வுகள் தீவிர உரையாடல்களுக்கு வழியமைத்தது.

2016–ஆம் ஆண்டில் எழுத்தாளர் மணிமொழி ஏற்பாட்டில் பினாங்கில் நடைபெற்ற பெண்ணிய கலந்துரையாடலில் பங்கேற்க கவிஞர் மாலதி மைத்திரியும் மற்றும் சிலரும் வந்திருந்தனர். சிறு குழுவினரின் கலந்துரையாடலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியும் சிறு குழுவின் தீவிர உரையாடல்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தது

எழுத்தாளர் வாணிஜெயம் ஒழுங்குபடுத்தி நடத்திவரும் மலைச்சாரல் இலக்கியக் குழுவின் கலந்துரையாடலில் கலந்து கொள்ள கவிஞர் யாவனிக்க ஶ்ரீராம் கடந்த ஆண்டு அழைக்கப்பட்டார். யாவனிக்கா ஶ்ரீராம், சொந்த அலுவல் காரணமாக பல முறை மலேசியா வந்திருந்தாலும் இலக்கிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இம்முறை கலந்து கொண்டார். கூலிம் நவீன இலக்கிய களம் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டார்.

மலேசியாவுக்கு முன்பை விட இப்போது தமிழக எழுத்தாளர்கள் வருகை அதிகரித்துள்ளது. சிறிய குழுக்களை நோக்கமாக கொண்டு மலேசியா வரும் தீவிர இலக்கியவாதிகளுக்கிடையே வெகுஜன மக்களைக் கவரும் நோக்கோடு பல அலங்கார மேடைப் பேச்சாளர்களும் வருகை தருகின்றனர். மலேசிய இலக்கிய ஆர்வளர்கள் எந்தவித விமர்சனமும் இன்றி எல்லாரையும் ஏற்றுக் கொள்ளும் நிலையே உள்ளது. அண்மையில் நாம் அறவாரியம் ஏற்பாடு செய்த கம்பன் கண்ணதாசன் இலக்கிய பயிலரங்கத்தை முன்னிட்டு பல தமிழக பேராசியர்களும் கல்வியாளர்களும் இலக்கிய உரை நிகழ்த்த மலேசியாவுக்கு வந்து சென்றுள்ளனர். மரபின் மைந்தன் முத்தையா, ந.ராமலிங்கம், பர்வீன் சுல்தானா, வாசுகி மனோகரன் போன்ற பேச்சாளர்கள் இந்த பயிலரங்கில் இலக்கிய உரையாற்ற வந்து சென்றனர். இவர்களின் உரைகளால் நவீன மலேசிய இலக்கிய மேம்பாட்டுக்கு பயனேதும் உள்ளதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஆகவே, மலேசிய இலக்கியத்தின் அசைவுகளில் தமிழக படைப்பாளிகளின் பங்கை மறுக்க முடியாது. மலேசிய தமிழர்கள் தமிழகத்தோடு கொண்டுள்ள வரலாற்று தொடர்பின்  ஓர் அங்கமாக இலக்கிய தொடர்புகள் உள்ளன.தமிழக படைப்பாளிகளின் தாக்கங்கள் தனிப்பட்ட முறையில் இங்குள்ள எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் கொடுக்கின்றன. புதிய உத்திகளையும் எழுத்து முறைகளையும் நாம் அறிமுகம் செய்துகொள்ளவும் உதவுகிறது. உலக இலக்கிய போக்குகள் பற்றிய அறிவை விரிவாகவும் ஆழமாகவும் பெற வாசிப்பைத் தவிர்த்து இதுபோன்ற நேரடி பேச்சுகளும் தீவிர உரைடாடல்களுமேசிறந்த வழியாகின்றன.

மேலும், மலேசியாவில் இலக்கியத்தை அடைமொழியாக்கிக் கொண்டு செயல்படும் அரசுசாரா  அமைப்புகள் பல இருந்தாலும் அவை இலக்கிய கலந்துரையாடல்களை நடத்த முன்வருவதில்லை. கலந்துரையாடல்களின் வழி இலக்கிய அறிவையும் உத்வேகத்தையும் பெற முடியும் என்கிற அடிப்படை உண்மையை அவை புரிந்துகொள்வதும் இல்லை. மாலை மரியாதை பொன்னாடைகளின் வழி வளர்க்கப்படும் தனிமனித மேலெடுப்புகளுக்கு மட்டுமே அவை முன்னுரிமை கொடுப்பது துரதஷ்டம். ஆகவே திவிர இலக்கிய தேடலில் ஈடுபடும் மலேசிய இளைஞர்களுக்குத் தமிழக எழுத்தாளர்களின் வழிகாட்டுதல் இன்றியமையாததாகின்றது.

ஆயினும், இலக்கிய அறிவு மட்டும் மலேசிய அடையாளத்தோடு கூடிய தனித்துவமான படைப்புகளைக் கொடுக்க உத்ரவாதமாகாது.அசலான மலேசிய படைப்புகளை உருவாக்க உள்ளூர் படைப்பாளர்களே அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். சித.நாராயணனின் கனவு மெய்படுவது மலேசிய சமூக, அரசியல் சிக்கல்களையும் பல்லின மக்களின் வாழ்வாதார போராட்டங்களையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்ட எழுத்தாளர்களாலேயே சாத்தியமாகும். அவர்களாலேயே இங்கு அசலான நவீன இலக்கியங்களைக் கொடுத்து மலேசிய தமிழ் இலக்கியம் என்ற தனித்த அடையாளத்தை நிறுவ முடியும். மாறாக, தமிழக எழுத்தாளர்களையும் பேச்சாளர்களையும் வியந்து அவர்களின் சாயலில் இங்கும் படைப்புகளைக் கொடுக்க முனைவது, மேலும் பல புதிய குட்டிகளைப் போட மட்டுமே வழி வகுக்கும்.

பின் குறிப்பு: இக்கட்டுரையை முழுமைபடுத்த தகவல்களைக் கொடுத்துதவிய எழுத்தாளர்கள் அருசு.ஜீவானந்தம், சை.பீர்.முகம்மது, டாக்டர் சண்முக சிவா, சீ.முத்துசாமி, ம.நவீன், மணி ஜெகதீசன், கே.பாலமுருகன் ஆகியோருக்கு நன்றி

  • http://balabaskaran24.blogspot.my/2010/12/blog-post_09.html
  • தற்கால தமிழ் இலக்கியம் (1973), இரா.தண்டாயுதம்
  • வேரும் வாழ்வும் (2004), தொகுப்பு  சைபீர்முகமது
  • புனைவுநிலை உரைத்தல் (2016) வல்லினம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...