ஆட்டம்

aatamஅது என் தலை தைப்பூசம். முதல் முறையாகச் சுங்கை பட்டாணியில் என் மனைவியின் குடும்பத்தோட தண்ணீர் பந்தலில் நின்றுக்கொண்டிருந்தேன்.

கல்யாணத்துக்கு முன் தைப்பூசம் வேறு மாதிரி இருக்கும். அப்போதெல்லாம் தைப்பூசம் என்றால் அது ஈப்போவில் தான். வருசா வருசம் தெரிந்த யாராவது ஒருவன் காவடியெடுப்பான். நானும் சிவாவும் முன் கூட்டியே ஒப்பந்தமாவோம். நாங்கள் இருவரும் பயங்கர நடன நட்சத்திரங்கள். கொழுந்து பச்சை, அறையும்-ஆரஞ்சு, மயக்கும்-மஞ்சள் போன்ற நிறங்களிலும் ஜிமுஜிமுக்கும் ஜிகுனா துணிகளிலான ஆடைகளை தான் தேடியலைந்து வாங்குவோம். எல்விஸ் மாதிரி, மைக்கல் ஜாக்சன் மாதிரியெல்லாம் தலை முடியினை வளர்த்துக்கொள்வோம். வருடத்திற்கு ஒரு வடிவில் காலணியும் தொப்பியும், சிரிப்பு மூட்டும் கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு தக தகவென கண்களை கவருவோம். மாரியம்மன் கோவிலில் துவங்கி கல்லுமலை வரையிலும் நடனம் அனல் பறக்கும்.

அவன் உள்ளங்கைகளை இணைத்து முகம் பார்க்கும் கண்ணாடி போல் காட்ட, நான் சீப்பில்லாமலேயே தலை சீவும் அந்த அபிநயமே நாங்கள் கண்டு பிடித்தது தான். காப்பிரைட் கொடுக்காமலேயே இன்று எல்லாரும் பின்பற்றும் ஒன்றாகி விட்டது.

ஒத்தை காலை தூக்கி கொண்டு வளைந்து வளைந்து கோலமிடும் ஸ்டெப்பும், பாம்பு தலைகீழாய் பால் குடிக்கும் ஸ்டெப்பும் எங்களின் தனித்துவ அடையாளம். மீண்டும் மீண்டும் அந்த இரண்டு ஸ்டெப்களுக்கும் விண்ணப்பம் வந்தபடியிருக்கும். ஒரு ரசிகர் படையே உடன் வரும். பீரை வாரி வாரி வழங்கும் ரசிகர் வட்டத்துக்காகவே நடனம் பட்டயைக் கிளப்பும்.

சிலர் எங்களை சிறப்பு விருந்தினராக மற்றவர் காவடிகளிலும் ஆடக்கேட்டுள்ளனர். சும்மா இல்லை. பஞ்சமின்றி தண்ணியை இறக்குவார்கள். கரும்பு திங்க கூலி தரும்போது ஏன் சும்மா விடணும் என இறங்குவோம். அப்படி சென்றதில் ஒரு முறை பெரிய கைக்கலப்பு. யாருடைய பார்வையோ சரியில்லையாம். இன்று வரை என் மூக்கு உடைப்பட்டதின் காரணம் எனக்கே தெரியாது. சிவாவுக்கு ப்ளேட் கீறல்கள். அப்போதிருந்து மற்றவர் காவடிக்கு நாங்கள் செல்வதில்லை. நம்ம செட் கைகளுக்காக மட்டும்தான் எங்கள் கலைசேவைதொடர்ந்தது.

போன வருடம் தைப்பூச மறுநாள் ரத ஊர்வலம் பாக்க போகும் வழியில் ஒரு சாலை விபத்தில் சிவா என்னை விட்டு போய்ட்டான். நொந்து நூலாகக் கிடந்த எனக்கு நவம்பர் மாதம் கல்யாணம் பண்ணி வைத்தார்கள். கமலேஸ்வரி. எங்களுக்கு தூரத்து சொந்தம்தான். கல்யாணம் ஆகி மூன்று மாதமாக மாமனாரின் மளிகை கடையில் தான் வேலை செய்கிறேன். கடை சார்பாக, தைப்பூசத்தன்று ஒவ்வொரு வருடமும் தண்ணீர் பந்தல் போடுவார்கலாம். காலையிலே வந்துவிட்டோம். மோரும், எலுமிச்சை சாரும் தயார் செய்து பதினோரு மணியிலிருந்து கொடுக்கத்தொடங்கினோம். கூட்டம் கூடிக்கிட்டே இருந்தது.

தைப்பூசத்தை இப்படிக் கழிப்பது ரொம்ப கஷ்டமாகவே இருந்தது. ஆட்டம் போடத்தான் முடியவில்லை, குறைந்தது இரண்டு கேன் பீரையாவது போட்டா கொஞ்சம் உட்சாகமா இருக்குமென சமயம் பார்த்திருந்தேன். கம்பெனிக்கு ஒரு ஆள் கிடைச்சா சிறப்பு. மூன்று மச்சான்களும் ரொம்ப நல்லவர்களாக நடந்துக்கொண்டார்கள். காதில் வளையம், ஸ்டைலா முடிவெட்டு, லேட்டஸ்ட் ட்ரெண்ட் தாடி என பார்ப்பதற்கு மோடனா இருந்தாலும் அவங்க அப்பாவை கண்டாலே பொட்டி பாம்பா அடங்கினார்கள். வேறு யாரையும் பழக்கம் இல்லாத அந்த ஊரில் கூடியிருந்த கூட்டம் எனக்கு அந்நியமாகவே இருந்தது.

காணிக்கைகள் வரிசைக்கட்ட தொடங்கியது. மேல சத்தங்கள் காதில் விழ விழ என் உடம்பெல்லாம் ஏதோ செய்துக்கொண்டிருந்தது. ஊற்றும் மோர் பீராக மாறக்கூடாதா என மனம் ஏங்கியது.

“வாங்க கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வரலாம்” கமலேஷ் கூப்பிட்டாள். தப்பிக்கச்aatam1 சரியான தருணமென மோர் ஊற்றும் ஜாடியை மச்சானிடம் கொடுத்துவிட்டு கமலேசுடன் நடந்தேன். போகும் வழியில் சுற்றும் முற்றும் பார்த்து சில பீர் விற்கும் கடைகளை அடையாளம் கண்டுகொண்டேன். நெரிசலுக்கு மத்தியில் ஊடுருவி முருகரின் சன்னிதானத்தை அடைந்தோம். இதுவரை எத்தனையோ தைப்பூசத்திற்குச் சென்றிருந்தாலும், முருகரை இவ்வளவு அருகில் பார்த்ததில்லை. சிவா நினைவுக்கு வந்தான். அவன் இறுதி சடங்கில் யாரோ ஒரு பாட்டி ‘முருகனுக்கு முன்னே குடுச்சிட்டு ஆட்டமா ஆடுனியே, அதான் இப்படி அழிஞ்சி போய்ட்ட’ என்று கதறி அழுதது மீண்டும் எனக்கு கேட்டது. கண்கள் கலங்கி முருகனை கூச்சத்துடன் கும்பிட்டேன். வேண்ட வேறெதுவும் தோன்றவில்லை அத்தருணம். அர்ச்சனை ஆனதும் “சாப்பாடு எடுத்துட்டு போலாம்” என்றாள்.

அன்னதானதுக்காக வரிசை நீண்டிருந்தது. என் கைகளை இழுத்துக்கொண்டுபோய் அசராமல் வரிசையில் இணைந்தாள் கமலேஷ். நிறைய அனுபவசாலி என்பதை வரிசையில் இறுக்கி செல்லும் யுக்தியில் தெரிந்தது. எனக்கு இதெல்லாம் புதுசு. ‘சைவ சாப்பாட்டிற்காக இவ்வளவு நேரம் காத்திருந்து போகணுமா?’ என்று எண்ணியதுண்டு. பந்தியை நெருங்கினோம். ஒரு ஆளுக்கு அதிகபட்சம் இரண்டு பொட்டலம் தான் என்று சொன்னார்கள். வாதாடி ஆளுக்கு மூன்றை வெற்றிகொண்டாள் கமலேஷ். ஒரு மரத்தடியில் நின்று ‘நாம முதலில் சாப்பிடலாம்’ என்றாள். அங்கே ஏற்கனவே நிறையே பேர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். நாங்கள் அமர்ந்த இடத்தின் அருகே எவனோ  ஒருத்தன் நெக்க தண்ணி போட்டிருப்பான் போல, வாடை மயக்கியது. சாப்பிட்டுட்டு சாப்பிட்டால் நல்லாருக்குமே என்று வாயூறியது. வாய்ப்பில்லை. ஆளுக்கொரு பொட்டலம் சாப்பிட்டோம். சைவ சாப்பாடு இதுவரை இந்தளவு ருசித்ததில்லை.

மீதம் நான்கு பொட்டலங்களுடன் தண்ணீர் பந்தல் நோக்கி நடந்தோம். இதற்கு மேல் பொறுக்க முடியாமல், முதலில் பார்த்து வைத்த ஒரு சீன உணவகம் வந்ததும், ‘நீங்க முதல்ல போங்க, பாத்ரூம் போயிட்டு வந்துறேன்’ என்று என் கையில் இருந்த இரண்டு பொட்டலங்களை காமலேசிடம் கொடுத்தேன். ‘நான் வெய்ட் பண்ணுறேன், போயிட்டு வாங்க’ என்றாள். கடுப்பானாலும் காட்டிக்கொள்ளாமல் விரைந்தேன். ‘கேப்ல கடா’ வெட்டிடலாமென்று நினைத்தால், என் இரண்டாவது மச்சான் அந்தக் கடையில்தான் இருந்தான். என்னை பார்த்ததும் ‘பாத்ரூமுக்கு வந்தேன்’ என்று குலைந்தான். அவனை அறையனும் போலிருந்தது. அடக்கிக்கொண்டேன். வராத சிறுநீரை வற்புறுத்தி வெளியாக்கி விட்டு காமலேசை நோக்கி நடந்தேன். மச்சானும் பின்தொடர்ந்தான். மூவரும் தண்ணீர் பந்தலை அடைந்ததும் நாங்கள் பானங்களை ஊற்றினோம். மற்றவர்கள் சாப்பிட்டார்கள். எனக்கு மீண்டும் மோர் ஊற்றும் பொறுப்பு. ஒரு குவளை மோரை என் வாயிலும் ஊற்றிக்கொண்டேன். நேரம் மாலையை நோக்கி நகர்ந்தது.

தூரத்திலிருந்து பெருங்கூட்டத்துடன் ஒரு காணிக்கை வந்துக்கொண்டிருந்தது. உறுமி மேல சத்தம் அது. இன்று முழுவதும் பம்பை, தப்பு, பொங்கோ போன்ற மேளங்களே இங்கே அதிகம் வாசிக்கப்பட்டது. ஈப்போவில் உறுமி மேளம்தான் ஜாஸ்தி. அதையே கேட்டு பழகியிருந்த காதுகளுக்கு இந்தக் காணிக்கையின் வருகை மகிழ்வூட்டியது. மேளத்துடன் விசில் சத்தங்களும் பசங்களின் கோஷங்களும் உட்சாகமளித்தது. அந்தக் காணிக்கை நெருங்க நெருங்க எனது மனம் படபடத்தது. கால்கள் தானாக அசைபோட்டன. கட்டிக்கொண்டேன். சிகப்பு சட்டையில் ஒருவனும், மஞ்சள் சட்டையில் இன்னொருவனும் இணைந்து ஆடிக்கொண்டிருந்தனர். இரு இயந்திர மனிதர்கள் போன்ற ஆட்டமது. அனைவரின் பார்வையும் அவர்கள் மீதுதான். எனக்கு அப்படியே என்னையும் சிவாவையும் அவர்களுக்குள் பார்க்க முடிந்தது. அதே விறுவிறுப்பு, அதே சேட்டைகள், அதே ஈர்ப்பு. நான் மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

பந்தல் அருகே வந்ததும், நீண்ட அலவு பூட்டிய நேர்த்தி கடன் சற்று நேரம் அமர்ந்துக்கொண்டது. சிலர் மட்டும் தண்ணீர் பந்தலுக்கு வந்து பானங்களை எடுத்து குடித்தனர். நடமாடும் ‘தண்ணி’ பந்தல் போல அவர்களுக்குள்ளேயே ஒரு சிலரால் பொட்டலங்களில் பீர் டின்கள் மேளக்காரர்களுக்கும் ஆட்டக்காரர்களுக்கும் பரிமாட்டப்பட்டது. மடக் மடக் கென்று டின்களை காலியாக்கி வீசினார்கள். அந்த இருவரும் கொஞ்ச நேரத்தில் இரண்டு மூன்று டின்களை உள்ளே ஊற்றிக்கொண்டனர். குடிப்பதிலும் எங்களுக்கிருந்த அதே வேகம்.  அவர்கள் பேசிக்கொண்ட கொச்சை வார்த்தைகள் எனக்கு புதிதில்லை என்றாலும் மனைவி குடும்பத்தோடு நின்று கேட்கையில் அந்த வார்த்தைகளால் முதல் முறையாய் என் காதுகளுக்குள் கூசியது. நானும் சிவாவும் கூட இப்படித்தான் பொது இடமென்று பாராமல் பேசிக்கொள்வோம் என்று நினைத்து பார்க்கையில் குறு குறுத்தது.

காணிக்கை பந்தலை கடந்து சென்றதும், மாமியார் என்னருகில் வந்து “சாரி தம்பி. இதுங்க தான் இந்த ஊர் அறுந்த வாலுங்க. நீங்க கோச்சிக்காதிங்க” என்றார். அவர் முகத்தில் வருத்தம் பரவிக்கிடந்தது. அதற்கு என் மாமனார் “கண்ட தெரு நாய்களுக்காக நீ ஏன் மன்னிப்பு கேக்குற? அவருக்கு தெரியாதா” என்றார்.

என் வாயும் மூக்கும் நீளமாகி, காதுகள் மேல்நோக்கி கூறாகி, ஆசனம் அருகே வால் முளைத்து நான் நான்கு காலில் நடப்பதை போலுணர்ந்தேன். இல்லை இல்லை என்று தலையசைத்து மீண்டும் மனித ரூபம் பூண்டேன்.

மாமியாரின் மன்னிப்பும் மாமனாரின் வர்ணனையும் என்னை வதைத்தன. இன்று ஆடாமலேயே கால்கள் வலித்தன. குடிக்காமலேயே தலை சுற்றியது. ஒரு தப்பும் செய்யாமலேயே அவமானத்தில் கூனி குறுகினேன்.

தனிமையில் தெருச்சந்தில் நடந்து, ஆளில்லா இடத்தில அமர்ந்துக்கொண்டேன். வடிந்தோடும் என் கண்ணீரை சிவா துடைத்து விட்டுக்கொண்டிருந்தான்.

கலைசேகர்

மகிழம்பூ, ஈப்போ

5 கருத்துகள் for “ஆட்டம்

 1. Krishna
  June 12, 2017 at 7:35 pm

  ஒரு சில இளைஞர்களின் வருந்த தக்க வர்ணிக்கப்பட்ட உண்மை கதை.
  அருமையான படைப்பு.

 2. கங்காதுரை கணேசன்
  June 15, 2017 at 5:12 pm

  ஒரு விண்ணப்பம். நீங்கள் எழுதும்போது எழுத்துமொழியில் எழுதப்போகிறீர்களா அல்லது பேச்சு மொழியில் எழுதப் போகிறீர்களா என முடிவு செய்து கொள்ளுங்கள். பேச்சு மொழியை எழுத்து மொழியின் இடை இடையே படிக்கும்போது மொழியின் தன்மையை சீர்குழைக்கிறது.

 3. Yuma vasuki
  June 16, 2017 at 11:26 am

  Mikavum nanru!

 4. June 16, 2017 at 12:38 pm

  அருமை, மிகவும் சரளமான எழுத்து நடை, படிப்பதைப்போலில்லாமல் பக்கத்திலிருந்து கதை சொல்வதைக் கேட்பது போலிருந்தது, பாராட்டுக்கள், தொடர்க.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...