எதைக் காவு கொடுப்பேன்

IMG-20170604-WA0005இலக்கியம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம் மலேசிய நவீன இலக்கியம் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் தீவிரத்தன்மையை அடையாமல் இருப்பது எதனால் என்கிற கேள்வி எழாமல் இருப்பதில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு கோணத்தில் இக்கேள்வி அணுகப்படுவது வழக்கம். வாசகர் இல்லாமை, பொருளாதாரம், கல்வித் தகுதி, அரசியல் கெடுபிடிகள், வெகுஜன இலக்கியங்களின் ஆதிக்கம், போலி இலக்கியவாதிகளின் அபத்தங்கள், அரசாங்க இன மொழி கொள்கைகள், அரசியல்வாதிகளின் அக்கப்போர்கள் என்று பல்வேறு தளங்களில் நின்று இக்கேள்விக்கு நாம் பதில் தேடமுடியும். ஆயினும் அவை முழுமையானவையாக இருப்பதில்லை.

கடந்த வாரம் (2,3,4 ஜூன்) கூலிம் பிரஹ்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நவீன  இலக்கிய களம் திட்டுமிட்டு நடத்திய இலக்கிய முகாமிலும், தமிழக எழுத்தாளர் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் முன்னிலையில் மீண்டும் இதே வினாவுக்கான விடை தேடும் கலந்துரையாடல் ஒன்று நடந்தது. உண்மையில் இந்த அரங்கை ஜெயமோகனே விரும்பி அமைத்தார். அவரே முதன்மை வினாவையும் முன்வைத்து கலந்துரையாடலை தீவிரப்படுத்தினார்.

சீ,முத்துசாமியும் கோ.புண்ணியவானும் மலேசிய மூத்த படைப்பாளிகளை பிரதிநிதித்தனர். ம.நவீனும் சு.யுவராஜனும் இளம் படைப்பாளிகளை பிரதிநித்தித்தனர். ஆக மலேசிய படைப்பாளர்கள் நால்வரும் மலேசியாவில் ஏன் தீவிர இலக்கியம் நிலைபெறவில்லை என்ற வினாவுக்கு பல்வேறு கோணங்களில் இருந்தும் அனுபவம் சார்ந்தும் பதில் தந்தனர்.

இலக்கிய முன்னோடிகளின் போக்கு, மற்றும் எது தீவிர இலக்கியம் என்ற தெளிவே இல்லாத நிலை போன்ற கருத்துகளை யுவராஜன் முன்வைத்தார். அரசு விதிக்கும் கெடுபிடிகளையும் கண்காணிப்புகளையும் முக்கியகாரணங்களாக சீ.முத்துசாமியும் கோ.புண்ணியவானும் விளக்கப்படுத்தினர். மூத்த படைப்பாளிகளுக்கு இருந்த தொலைத்தொடர்பு குறைபாடுகளை  கோ.புண்ணியவான் கூறினார்.  கலையாம்சம் பொருந்திய இலக்கிய படைப்புகள் அரசு கெடுபிடிகளை முறியடடிக்ககூடியவை என்ற கருத்தை ஈரான் திரைப்படங்களை உதாரணம் காட்டி நவீன் விளக்கினார். மேலும் சில கருத்துகளும் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன. இங்கே விமர்சனப் போக்கு அற்ற நிலையும் படைப்பாளர்களைப் பட்டியல் இட்டு முதன்மை படுத்தும் துணிச்சல் இல்லாமையும் தீவிர இலக்கிய வளர்ச்சியை குன்றச்செய்தன என்னும் உண்மை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆயினும் என்னைக் கவர்ந்த ஒரு வாசகத்தை; நான் நம்பும் ஒரு காரணத்தை  ஜெயமோகனின் பேச்சின் ஊடே பெற முடிந்தது. உண்மையில் தீவிர இலக்கியம் என்பது தமிழ்நாட்டிலும் மிக செழிப்பான வரவேற்ப்பை பெற்றிருக்கவில்லை என்பதே வரலாறு. தீவிர இலக்கியத்தை முன்னெடுத்த புதுமைபித்தன் முதல் க.நா.சு வரை அனைவரும் எந்த அரசு அங்கீகாரமும் இன்றியே வாழ்ந்து மறைந்தனர். இலக்கியத்தில் இருந்து செல்வம் சேர்க்காததோடு இருந்த சொத்துகளையும் விற்று இலக்கியம் செய்தவர்கள் பலர். பாரதியின் நிலை எல்லாரும் அறிந்ததே. வாழ்க்கையில் போராடிக் கொண்டே இலக்கியத்தில் இயங்கியவர்களே பலர்.

ஆகவே  தன் தலையை ஈடாக வைத்தவர்களால்தான் தீவிர இலக்கியம் அதன் நிலையை4 தக்கவைக்க முடிந்திருக்கிறது என்னும் உண்மை நம்மை உறுத்துகிறது. ஜெயமோகன் தன் பேச்சில் இதையே குறிப்பிட்டார். புதுமைப்பித்தன் இன்று நவீன சிறுகதைகளின் தந்தை என்றும் சிற்பி என்றும் நாம் கொண்டாட அவன் இலக்கியத்தின் முன் தன் தலையை வெட்டி வைத்தான் என்று அவர் குறிப்பிட்ட வாசகத்தின் ஆழம் நோக்கி நான் செல்கிறேன். அது ஒரு சவால். அது ஒரு தவம். புராணங்களில் அரக்கரும் முனிவரும் காட்டிலும் நெருப்பிலும் நீருக்கடியிலும் இருந்து செய்யும் கடுந்தவம்போன்றது அது.  மிகப்பெரிய கனவு. நம் முன்னோடிகளில் இலக்கியத்திற்காக நன் தலையை காணிக்கையாக்க துணிந்தவர் உண்டா? முன்னோர்களை விடுவோம். இன்று யாரேனும் உண்டா? நான் என்னையே கேட்டு தோல்வியைத் தழுவும் கேள்வியல்லவா அது. இலக்கிய வெற்றியைப் பெற நான் எதை இழக்க தயாராக இருக்கிறேன் என்ற கேள்விக்கான பதில் என்னை வெட்கப்படவைக்கிறது.

மலேசியாவில் சமூக இயக்கங்களுக்காக தலையை கொடுத்த சிலர் உண்டு. வாழ்க்கையின் எல்லா சுயவளர்ச்சி சந்தர்ப்பங்களையும் ஒதுக்கிவைத்து விட்டு தனது கொள்கைக்காக இயங்கிய ஒரு சிலர் இங்கே உண்டு. உதாரணமாக ச.ஆ.அன்பானந்தனைச் சொல்லலாம். தமிழ் இளைஞர் மணிமன்றத்தையும் அதன் வழி தான் நம்பும் கொள்கைகளையும் மிகப்பெரிய முனைப்புடன் நாடுமுழுவதும் கொண்டு செல்லவதை அவர் தன் வாழ்நாள் கடமையாகவே செய்தார். பல்வேறு சீர்திருத்த கருத்துகளை நாடகமாக எழுதி மேடையேற்றினார். அவர் எழுதி மேடை ஏறாமல் கைஎழுத்துப்படியாகவே இருக்கும் நாடகங்கள் பல. அவருக்கு சாமானிய மக்களிடம் மிகப்பெரிய ஆதரவு இருந்தது. ஆனால் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் பல்வேறு போராட்டங்களோடுதான் வாழ்ந்தார். அரசியலாலோ, பெரிய மனிதர்களாலோ அவர் அடைந்த லாபங்கள் என்பவை தான்சார்ந்த இயக்கத்தை முன்னிருத்தியது மட்டுமே.

சுதந்திரத்துக்கு முன் இயங்கிய தொழிற்சங்க வீரர்களை உறுதியாக சொல்லலாம். அவர்கள் இயக்கமாக செயல்பட்டாலும் பொதுவாழ்க்கையில் வெற்றிபெற்றாலும் அதற்காக அவர்கள் இழந்தவை எண்ணிலடங்காதவை. அடக்குமுறை அரசுக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிராக அவர்கள் சாமானிய பாட்டாளிகளைத் திரட்டிய போராட்டம், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்தவைதான். கே.எஸ்.நாதன், வீரசேனன்,மலாயா கணபதி போன்றவர்களை இன்றும் நாம் வரலாற்றில் வைத்திருப்பது அவர்கள்பெற்ற வெற்றிகளினால் மட்டும் அல்ல; அவர்கள் சொந்த வாழ்க்கையில் இழந்தவைகளுக்காகவும்தான்.

பொருளாதார துறையில் முன்னேற நேரடி விற்பனை முகவர்களும் காப்புறுதி முகவர்களும் முன்வைக்கும் ஆலோசனைகளை தேவ வாக்காக கேட்டு நாம் செயல்படும் உத்வேகத்தை ஒப்பிட்டு பார்க்கலாம் . மன உறுதியோடும் நம்பிக்கையோடும் ஒரு உற்பத்தி பொருளை சந்தைபடுத்தும் பணியில் காட்டுக் தீவிரம் என்ன?    அதுபோல் இலக்கியத்திற்காக அதிலும் சமூகம் எளிதில் உணர்ந்து கொள்ளாத  அல்லது அங்கீகரிக்க மறுக்கும் தீவிர இலக்கியத்திற்காக வாழ்க்கையை பணையம் வைத்து முயலும் துணிச்சல்  யாருக்கு உண்டு?.

எழுத்துக்காக நாம் எதை இழந்திருக்கிறோம்.  ஒரு உன்னத கலையைப் பெற வேண்டும் என்றால் நாம் பல இன்பங்களை இழக்கத்தான் வேண்டும்..  ஒரு சிறு அவமானம் நம்மை எழுத்து துறையில் இருந்து ஒதுங்கச் செய்துவிடுகிறது. அரசு அதிகாரியின் ஒரு இருமலுக்கே பேனாவை முறித்துப் போடும் நிலையில் நாம் இருந்தால் தீவிர இலக்கியம் கேட்கும் விலையை எப்படி கொடுப்பது. ஜெயமோகன் சொன்னது போல கண்காணிப்பு கோபுரங்கள் நம்மை கட்டுப்படுத்த அனுமதிக்கக் கூடாது.

எல்லா வகையிலும் மிக நிலையாக, பாதுகாப்பாக, இருந்து கொண்டு என் குடும்பத்துக்கும் தொழிலுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கொண்டு பின்னர் ‘கொஞ்சமாக’ இலக்கியம் செய்தால் போதும் என்ற மனநிலையுடன்தான்  நான் வாழ்கிறேன் என்னும் போது என்னவகையான இலக்கியம் என்னிடம் இருந்து பிறக்க முடியும். இலக்கிய வாசிப்புக்காக, எழுத்துக்காக நான் எவ்வளவு மணி நேரத்தை ஒருநாளில் ஒதுக்கிக் கொள்கிறேன் என சிந்திக்க துவங்கினாலே பல படிகள் முன்னேறிவிடலாம்.

தீவிர இலக்கியத்தில் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்றால் அதற்கு முதன்மை காரணம் புறத்தடைகளை விட நாம் கவனிக்க மறுக்கும் அகத்தடைகளே அதிகமாகும்.   ஓய்வு நேரத்தில் வீட்டுக்கு பின்னால் உள்ள மைதானத்தில்  சில நிமிடங்கள் காலாரநடப்பதை மூலதனமாக்கி உலக அரங்கில் நடைப்பயிற்சி வீரனாக மாற வேண்டும் என்று நினைக்க முடியுமா? அதற்கான பயிற்சி முயற்சி உழைப்பு தியகாம் வேண்டாமா?

ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு விலை உண்டு. அது நம் சுண்டு விரலாகவும் இருக்கலாம், சிரசாகவும் இருக்கலாம்.  இலக்கியம் கேட்டும் விலையை நாம் கொடுக்க நமக்கு முதலில் மனதிண்மை வரவேண்டும். பிறகு இந்நாட்டு இலக்கியம் பேசும்படியாக நிச்சயம் இருக்கும்.

4 comments for “எதைக் காவு கொடுப்பேன்

  1. Mathialagan Muniandy
    June 14, 2017 at 2:33 am

    //தீவிர இலக்கியத்தில் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்றால் அதற்கு முதன்மை காரணம் புறத்தடைகளை விட நாம் கவனிக்க மறுக்கும் அகத்தடைகளே அதிகமாகும். ஓய்வு நேரத்தில் வீட்டுக்கு பின்னால் உள்ள மைதானத்தில் சில நிமிடங்கள் காலாரநடப்பதை மூலதனமாக்கி உலக அரங்கில் நடைப்பயிற்சி வீரனாக மாற வேண்டும் என்று நினைக்க முடியுமா? அதற்கான பயிற்சி முயற்சி உழைப்பு தியகாம் வேண்டாமா?//

    என்னை சிந்திக்க தூண்டிய மிக நுண்னிய கருத்து. நமது நாட்டில் இலக்கியம் என்பது மாலை நேரங்களில்; வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் ஒரு கிளாஸ் வற காப்பியும் ஒரு குவையும் போல இயங்கிக் கொண்டிருக்கிறது.

    கடந்த நான்கு ஐந்து மாதமாக வல்லினம் தொடர்ந்து படித்து வருகிறேன். இந்த மாதம் வல்லினத்தில் வந்த ’எதை காவு கொடுக்க போகிறேன்’ மற்றும் ’பிரதி’ என்கிற சிறுகதை மட்டுமே எனக்கு தரமான படைப்பாக படுகிறது.

    இது என் சொந்த கருத்து. இதை படித்துவிட்டு யாரும் என்னிடம் சண்டை போடாதீர்கள். ப்ளிஸ்.

  2. கங்காதுரை கணேசன்
    June 15, 2017 at 4:45 pm

    ஹாஹா…தலைப்பு சூப்பர். எதையும் காவு கொடுத்துவிடக்கூடாதென்பதற்காகவே நாம் முன்னெச்சிரிக்கையாக செயல்படுகிறோமோ?

  3. A.M.Nawfal
    September 22, 2017 at 5:54 pm

    தீவிர இலக்கியம் என்பதை யாராவது விளக்கினால் இன்னும் புரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்

  4. விஜயா
    September 24, 2017 at 6:38 pm

    A.M. Nawfal இதை புதிதாக ஒருவர் வந்து விளக்க அவசியமில்லை. இணையத்தில் குறிப்பாக ஜெயமோகன், எஸ்.ரா போன்றோர் நிறையவே எழுதுயுள்ளனர். தீவிர இலக்கியம் ஒட்டிய விவாதப்பதிவுகளும் அவற்றில் உள்ளன. ஆங்கிலத்தில் serious literature என்று தேடி வாசியுங்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...