நாரின் மணம் 1: காக்க காக்க கதிர்வேல் காக்க

school_refusalஏதோ ஒரு காரணத்தினால் என்னை பாலர் பள்ளியில் இணைக்கவில்லை.  வறுமை ஒரு காரணமாக இருக்கலாம். சித்திதான் (அம்மாவின் தங்கை) எனக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். இரவானால் அம்மா சாமி அறையில் என்னையும் அக்காவையும் அமரவைத்து தேவாரம், திருவாசகம் பாடுவார். ஏழு வயதிலெல்லாம் கந்தர் சஷ்டி கவசமும் சிவபுராணமும் எனக்கு நன்கு மனனம். கந்தர் சஷ்டி கவசம் என்னை எந்த ஆபத்தில் இருந்தும் காப்பாற்றும் என அம்மா சொல்வதுண்டு. அம்மாவுக்காக இல்லாமல் அந்தப்பாடல்களைப் பாடும்போது எனக்குத் திக்காததால் நான் அவற்றை விரும்பிப் பாடுவதுண்டு. நாக்கு உளராத என்னை நான் சாமி அறையில்தான் அந்த வயதில் பார்த்தேன். என் உலகம் வீட்டுக்குள்ளேயே மையமிட்டிருந்தது. எனவே முதன்முறையாக ஒன்றாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்தபோது பெரும் கலாச்சார அதிர்ச்சியே எனக்குள் ஏற்பட்டது.

என்னுடன் ஒன்றாம் ஆண்டில் இணைந்த பெரும்பாலான மாணவர்கள் பாலர்ப்பள்ளியில் பயின்றவர்களாக இருந்தனர். எங்கள் ஊரில் ஒரே ஒரு பாலர்ப்பள்ளி இருந்ததாலும் அதிலேயே அவர்கள் அனைவரும் படித்திருந்ததாலும் முதலாம் ஆண்டில் அவர்களுக்குள் ஓர் இணக்கம் இருந்ததைக் காண முடிந்தது. அவர்கள் தனிக் குழுவாக இருந்தனர். ஒருவருக்கொருவர் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டனர். என் பெயர் யாருக்கும் தெரியாததைப் போலவே எனக்கும் யாருடைய பெயரும் தெரியாது. எனவே என்னைப்போலவே அந்நியப்பட்டுக்கிடந்த ஒரு மாணவனின் பக்கத்தில் அமர்ந்தேன்.

கொஞ்ச நேரத்தில் எங்கள் வகுப்பு ஆசிரியர் வந்தார். பெயர் ருக்குமணி. உடல் பருமன் என்பதற்கு எனது சித்தப்பா ஒருவரை எல்லைக்கோடாக வைத்திருந்தேன். அந்த எல்லைக்கோட்டை ‘தூ’ என ஊதி கலைக்கும் வகையில் பருமனாக இருந்தார். பயத்துடன் பக்கத்தில் இருந்த நண்பனைப் பார்த்தேன். அவனும் அதிர்ச்சியில் இருந்தான். வெளியில் செல்வதுதான் எனக்குப் பாதுகாப்பு என நினைத்துக்கொண்டு கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்டு ஓடினேன்.

தகரத்தினால் ஆன கழிவறை அது. உள்ளே நுழைந்ததும் எங்கே சிறுநீர் கழிப்பது எனத்தேடினேன். அதற்கான பிரத்தியேக வசதி ஒன்றும் இல்லை. நான்கு பக்கம் தடுப்பு. அதன் உள்ளே செல்ல வாயில் என்ற இடைவெளி. குடலைப் பிடுங்கும் வாடையால் எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என யோசித்துக்கொண்டிருக்கும்போது உள்ளே சில மாணவர்கள் நுழைந்தனர்.  தகரத்தின் இசையுடன் சிறுநீரில் ஓவியம் வரையத்தொடங்கினர். வெட்கமே இல்லாமல் குறியைக் காட்டிக்கொண்டிருந்தனர். தகரத்தின் சூடும் வாடையும் அசூயை உணர்வை ஏற்படுத்தினாலும் வகுப்பில் இருந்து தப்பிக்க அடிக்கடி கழிவறை செல்ல ஆரம்பித்தேன். அங்கு ஒரு சின்னஞ்சிறிய கண்ணாடி இருந்தது. முடியைப் பார்த்துக்கொண்டேன். அம்மா அழகான முட்டை வைத்து முடியை வாரி விட்டிருந்தார். முட்டை என்பது தலைவாரிவிடும்போது முன்தலையில் உருவாகும் முடியின் திரட்சி. அம்மா அது களையக்கூடாது எனச் சொல்லியிருந்ததால் கவனமாக இருந்தேன்.

ருக்குமணி டீச்சரிடம் அனுமதி கேட்கும் ஒவ்வொரு முறையும் திக்கும்.  அப்போதுதான் நான் அவர் கவனத்தில் விழுந்திருக்க வேண்டும். யாருடைய கவனத்தையும் எளிதில் ஈர்க்காத தோற்றம் என்னுடையது. ஆனால் விசித்திரமான திக்குவாய் பேச்சு என்னைக் காட்டிக்கொடுத்துவிட்டது. தலையில் ஒரு குட்டு விட்டார். முட்டை சட்டென உடைந்தது. அது அவ்வளவு எளிதில் உருவாக்க முடியாத சிறந்த முட்டை என நான் நம்பியிருந்தேன். அவரது பிரமாண்டமான உருவமும் கோபமும் என்னை பயமுறுத்தவே பள்ளிக்கூடம் எனக்குப் பிடிக்காமல் போனது. மறுநாள் காலையில் தாங்க முடியாத வயிற்றுவலி. மூச்சுவிட சிரமமாக இருந்தது. தலையில் கொட்டு விழுந்ததற்கும் வயிற்றுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும் என நினைத்து பயந்தேன். பள்ளிக்குச் செல்ல மறுத்த முதல் நாள் அது. ஆனால் அது பல நாள்கள் தொடர்ந்தது. சரியாகக் காலையில் வயிற்றுவலி வந்துவிடும். வயிற்று வலியால் நான் துடிப்பேன். முதலில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்க நான் நடிப்பதாக எண்ணியவர்கள் நான் தொடர்ந்து வலியால் துடிக்கவே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பார்த்தனர். ஒன்றும் மாற்றம் இல்லை. நோயையும் கண்டுப்பிடிக்க இயலவில்லை. ஸ்கேன்வரை சோதித்துப்பார்த்தும் என் வயிற்றுக்குள் என்ன உள்ளது என டாக்டருக்கும் புரியவில்லை.

“இங்க வலிக்குதா இங்க வலிக்குதா,” என அழுத்தி அழுத்தி கேட்பார்கள். எனக்கு உண்மையில் எல்லா இடத்திலும் வலித்தது. ஆனால் டாக்டர் ரொம்பவும் கஷ்டப்படுகிறாரே என ஏதோ ஓர் இடத்தைக் குத்து மதிப்பாகக் காட்டினேன். உடனே ஏதோ கண்டுப்பிடித்ததுபோல டாக்டர் அது நிச்சயம் ‘கேஸ்ட்ரிக்’ என்றார். கேஸ்ட்ரிக் மருந்துகள் கொடுக்கப்பட்டாலும் வலியும் குறையவில்லை. வாரக்கணக்கில் பள்ளிக்குச் செல்லாமல் விடுப்பெடுத்தேன். அதற்குமேல் பொறுக்கமுடியாத தருணம் வந்தபோது வீட்டில் வன்முறையைப் பிரயோகிக்கத் தொடங்கினர். அதற்கும் நான் ஒரு உபயம் வைத்திருந்தேன். சமத்தாகப் பள்ளிக்குக் கிழம்பி சரியாகப் பள்ளியை நெருங்கும்போது ‘உவேக்’ என சட்டையில் வாந்தி எடுத்துவிடுவேன். சட்டையில் வாந்தி நாறும். வேறு வலியில்லாமல் வீட்டுக்கு அழைத்துவந்துவிடுவர். இதனாலேயே பயந்துகொண்டு பள்ளியை நெருங்கும்போது வாந்தி எடுப்பதற்கான அறிகுறி தென்பட்டால் குனிய வைத்து உள்ள அனைத்தையும் கக்க வைத்துவிடுவர்.

குறிப்பிட்ட காலத்துக்குப் பின் ஆத்தா (அம்மாவின் அம்மா) என்னைப் பள்ளியில் சேர்க்கும்school-phobia-a23414f82187ca0c_large பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆத்தா நல்ல கதைச்சொல்லி. இரவில் அவர்தான் கதைகளைச் சொல்லி தூங்கவைப்பார். மறுநாள் கதைகளை நாடகமாக நாங்களே நடிப்போம். கதையில் வரும் கெட்ட மிருகம் ஆத்தா. நல்ல மிருகம் நானும் அக்காவும். காலையில் நல்ல மிருகமான நான் கெட்ட மிருகமான ஆத்தாவிடம் கெஞ்சுவேன். கெட்ட மிருகம் எப்படிச் சம்மதிக்கும். கெட்ட மிருகத்திடன் இரண்டு மூன்று அடிகள் வாங்கி பள்ளிக்கு அழுதப்படியே செல்லும் நல்ல மிருகம். சில சமயம் எவ்வளவு அடி வாங்கினாலும் ரப்பர் மரங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு பள்ளிக்குப் போகமாட்டேன் என அடம்பிடிக்கும். இரவில் வட்டியும் முதலுமாக கெட்ட மிருகத்தை பலிதீர்த்துவிடும்.

என்னைப் பள்ளியில் வயித்த வலி பையன் என அடையாளம் இட்டிருந்தனர். முதலாம் ஆண்டு படிக்கும்போதே ஆறாம் ஆண்டுவரை நான் பிரபலம். பள்ளியில் என்னை விட்டுச்சென்றாலும் வகுப்புக்குச் செல்லும்போது வயிற்றுவலி கூடுதலாகப் பிடித்துக்கொள்ளும். ருக்குமணி டீச்சர் முனகியபடியே என்னை தலைமை ஆசிரியர் அறையில் விடுவார். வெல்லஸிலி தோட்ட மாரியம்மன் கோயில் மண்டபம் வகுப்பறையாக இருந்தது என்றால் மண்டபத்தின் மூலைதான் தலைமை ஆசிரியர் அறை. அடிக்கடி அக்கோயிலில் கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். கஞ்சி காய்ச்சி ஊற்றுபவர்களின் குடும்பத்தினரைத் தவிர கோயில் மண்டபத்தில் பயிலும் நாங்கள்தான் அவர்கள் தானத்தைப் பெறும் பக்தர்கள். காலை பத்து மணிக்குமேல் கோயில் மணி அடித்தால் அன்று கஞ்சி உள்ளதென அர்த்தம். பிளாஸ்டிக் குவளையுடன் வரிசை பிடித்து நிற்போம். தலைமை ஆசிரியர் அறையில் ஒரு நீண்ட பெஞ்ச் இருந்தது. என்னை அதில் படுக்க வைத்துவிடுவார் தலைமை ஆசிரியர். நானும் அதில் படுத்துக்கொண்டு அருகில் இருக்கும் சன்னல் வழி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.

தலைமை ஆசிரியர் பெயர் மணியம். உயரமான மனிதர். அன்பானவர். பேசும் போதும் அடிக்கடி நுனிக்காலில் எம்பி நிற்பார். அப்படி நிற்பது அவர் முடிக்கும் வாக்கியத்தின் இறுதியாக இருக்கும். அவர் அறையில் படுத்திருப்பது கொஞ்சம் சௌகரியமாக இருந்தது. வயிறு அவ்வளவாக வலிக்காது. தலைமை ஆசிரியர் பெரிதாக ஒன்றும் திட்ட மாட்டார். ஏதாவது அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பார். சில கையேடுகளைக் கொடுத்து கணிதம் செய்யச்சொல்வார். பயம் இல்லாத தருணங்களில் வயிற்று வலி வராததை நான் ஆச்சரியமாகக் கவனித்தேன்.

அப்போதுதான் ‘சூரியன்’ என்ற மாத இதழ் மலேசியாவில் உதயமாகி இருந்தது. (அவ்விதழ் 1988 ஆக்ஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. நான் 1989இல் முதலாம் ஆண்டில் புகுந்தேன்) தலைமை ஆசிரியர் என்ன நினைத்தாரோ அதை என் கையில் கொடுத்து “இதை படிச்சிக்கிட்டு இரு,” என்றார். நானும் அவ்விதழை கையில் வாங்கி புரட்டத்தொடங்கினேன். அந்நேரம் பார்த்து ருக்குமணி டீச்சர் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்து கடுப்பானார். பலவாரங்கள் வகுப்பறை பக்கம் வராத எனக்கு பெரியவர்கள் வாசிக்கும் இதழைக் கொடுப்பது நியாயமில்லை என்பது போல ஏதோ சொன்னார். தலைமை ஆசிரியர் என்னை அப்புத்தகத்தின் தலைப்பை வாசிக்கச் சொன்னார். ‘சூரியன்’ என உடனே வாசித்தேன்.

ருக்குமணி டீச்சருக்கு அதிர்ச்சி. உடனே ஒன்றாம் ஆண்டில் சிறந்த மாணவியை அழைத்து அதே புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அம்மாணவிக்கு ‘ரியன்’ வாசிக்க முடிந்தது. ‘சூ’ மட்டும் தகறாறு செய்தது. உடனே ருக்குமணி டீச்சர் “உனக்கு வாசிக்க முடியுமா?” எனக்கேட்டார். நான் வீட்டில் நிறைய பாடல்கள் வாசிப்பேன் என்றேன். பாடச்சொன்னார். நான் என் நினைவில் இருந்த ஓர் அற்புதமான பாடலைப் பாடிக்காட்டினேன்.

‘கியா கியா கோழிக்குஞ்சு

கீழே அரிசி பொறுக்குது

கொக்கரக்கோ சேவக்கோழி

கூவி சண்டைக்கு அழைக்குது

மெ மெ ஆட்டுக்குட்டி

மெதுவா இலைய கடிக்குது

மியா மியா பூனைக்குட்டி

மெத்தை மேல தூங்குது’ என அபிநயத்துடன் செய்துக்காட்டினேன். ஆத்தாவுடன் நிறைய கதைகளில் நடித்திருப்பதால் பாவனைகள் அத்துப்படி. இன்றும் அது எனக்கு அற்புதமான பாடல்தான். என் சித்தி வாங்கிக்கொடுத்த சிறுவர்களுக்கான பாட்டு புத்தகத்தில் இப்பாடல் இருந்தது. இப்பாடலில் எல்லா மிருகங்களும் அசைகின்றன; ஏதோ ஒரு வேலையைச் செய்கின்றன. அந்த வரிகள் என் மனதில் காட்சிகளாகவே பதிந்திருந்தன. ருக்குமணி டீச்சர் மட்டுமல்ல எல்லா ஆசிரியர்களுமே அப்போது பாடப்புத்தகத்தில் இருந்த ‘நிலா நிலா ஓடிவா’ பாட்டை மட்டும்தான் அறிந்து வைத்திருந்தனர். எனவே எனது பாடல் தலைமை ஆசிரியரையும் ருக்குமணி டீச்சரையும் வெகுவாக ஈர்த்தது. ருக்குமணி டீச்சர் “உனக்கு வேறென்ன தெரியும்?” என்றார். நான் “கந்தர் சஷ்டி கவசம்,” என்றதும் அவர் முகம் வெளிறியது. அவர் அதை நம்பவில்லை. நான் நாற்காலியில் அமர்ந்தேன். கந்தர் சஷ்டி கவசத்தைப் பாடத்தொடங்கினேன். 15 நிமிடம் நிறுத்தாமல் பாடி முடித்தேன். அன்று யாரோ கஞ்சி ஊற்றியிருக்க வேண்டும். சரியான ‘டைமிங்குடன்’ கோயில் மணி ஒலித்தது. டீச்சர் கண்களில் ஆனந்த கண்ணீர். என்னை அணைத்துக்கொண்டார்.

முழு மரியாதையுடன் நான் ஒன்றாம் ஆண்டுக்குள் ருக்குமணி டீச்சரால் அழைத்துச்செல்லப்பட்டேன்.  அம்மா சொன்னதுபோலவே கந்தர் சஷ்டி கவசம் என்னைக் காத்ததில் நானும்  அவ்வயதில் முருக பக்தனாகியிருந்தேன்.

7 comments for “நாரின் மணம் 1: காக்க காக்க கதிர்வேல் காக்க

  1. கலைசேகர்
    June 14, 2017 at 7:44 pm

    lதங்கள் வகுப்பறையில் நானும் ஒரு மாணவனாய் எல்லாவற்றையும் நேரில் பார்த்த உணர்வு.
    சொந்த கதையை சோர்வின்றி சொல்லியுள்ளீர்கள்!👏🏼👏🏼👏🏼
    தொடர்ந்து வாசிக்க ஆவல் கொண்டுள்ளேன் அருமை நண்பரே🙏🏼👍🏼

  2. முனியாண்டி ராஜ்.
    June 14, 2017 at 11:44 pm

    அருமை … தொடரவும்

  3. June 15, 2017 at 10:52 am

    நான்படித்த ஆயர் ஈத்தாம் தமிழ்ப் பள்ளயின், ஒன்றாம் வகுப்பிற்கு, என்னை அழைத்து சென்றது.

  4. திலகன்
    June 15, 2017 at 10:59 am

    உங்கள் எழுத்தின் வசீகரம் அடுத்த பதிவுக்காக காத்திருக்க வைத்திருக்கிறது…… எப்போதும் போலவே…..

  5. S.Kalieswary
    June 15, 2017 at 3:30 pm

    அருமை ஐயா. ஒரு தோட்டப்புறத்திக்குள்ளே சென்று வந்தது போல இருந்தது. அடுத்த பாகம்?

  6. magendran rajendran
    June 16, 2017 at 9:27 pm

    ஒரு பள்ளி மாணவனின் மன நிலையில் தான் இந்த கதையை வாசித்தேன்.என் ஏழு வயதுக்கு பின்னோக்கி என்னை அழைத்து சென்றது நண்பரே.நீங்கள் கதை சொல்லும் பாணியே அலாதியான ஒன்று.உங்கள் சில கதைகளை படித்த அனுபவம் உள்ளது.சில கதைகளில் ஆழமான உட்பொருள் இருக்கும். ஆனால் இது முழுக்க முழுக்க மாணவ புரிதலுக்கு உரியது.எழுத்து நடையும் அப்படி தான் உள்ளது.இந்த மாணவ பருவத்தில் பலர் செய்யும் திருவிளையாடலகளை தான் நீங்களும் செய்து இருக்கிறீர்கள். கந்த சஷ்டி கவசம் உங்களுக்கு புதிய கோணத்தில் கதையை நகர்த்த உதவி உள்ளது வியப்பு.உங்கள் வாசிப்பு பழக்கம் சூரியன் என்ற இதழ் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்பது மகிழ்ச்சி.தொடர்ந்து வாசிக்க ஆவலாக உள்ளேன்.

  7. ஸ்ரீவிஜி
    July 4, 2017 at 5:02 pm

    ஹாஹாஹா.. செம

Leave a Reply to magendran rajendran Cancel reply