பெண்ணிய இலக்கியமும் வரம்புகளும்.

01கடந்த வாரம் தலைநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் தமிழ்நாட்டில் பெண்ணிய இலக்கியம் வரம்பு மீறி செல்வதாகவும் நம் நாட்டில் அந்த நிலை இல்லை என்றும் பேசியதாக தகவல் அறிந்தேன். அந்த உரையை முழுமையாக கேட்காததால் அது பற்றிய கருத்துகளை சொல்வது இயலாது. ஆனால் மேற்கண்ட செய்தியில் ‘பெண்ணிய இலக்கியம்’ , ‘வரம்பு’ ஆகிய இரண்டு சொல்லாடல்களும் நம்மை கவர்வதால் அவை பற்றிய தொடர் சிந்தனையின் விளைவே இக்கட்டுரை.

பெண்ணிய சிந்தனை என்பதும் பெண்ணிய இலக்கியம் என்பதும் நமக்கு புதிதல்ல. சங்ககால புலவர்களில் பல பெண்பால் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். ஔவையார் அவர்களில் புகழ்பெற்றவர். பின்னர் தோன்றிய பக்தி இலக்கிய காலத்திலும் பல பெண் கவிகள் இறையை போற்றி பாடி அமரத்துவம் எய்துள்ளனர். ஆண்டால், காரைக்கால் அம்மையார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர். அக்கால பெண்பால் கவிகளின் பாடுபொருள் இயற்கை, இறைபக்தி, நன்னெறி கூறுகள் போன்ற வற்றை அடிப்படையாக கொண்டிருந்தது. அக்காலகட்ட மக்களின் வாழ்க்கை முறையில் பெண்களின் பங்களிப்பு பலவகையிலும் மாறிக் கொண்டே வந்திருப்பதை இலக்கியங்களில் காண முடிகிறது. சங்க கால மகளிரிடம் இருந்த சுதந்திரம் பின்னர் தோன்றிய பக்தி காலத்தில் குறைந்து காணப்படுகிறது. பெண் தன் துணையை தேர்வு செய்வதில் சங்க காலம் கூடுதல் சுதந்திரம் தந்திருக்க வேண்டும்.

யாரும் இல்லை; தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

போன்ற சங்க பாடல்கள் உணர்த்தும் பெண் வாழ்க்கை சுதந்திரம்

பின்னர் வந்த தமிழ்ச்சமுதாயத்திடம் காணமுடியவில்லை.

சமயத்தின் பெயராலும் பண்பாட்டின் பெயராலும் பெண்கள் பலவகையிலும் கட்டுப்பாட்டுக்கும் நெருக்குதலுக்கும் ஆலான காலம் சில நூற்றாண்டுகள் தொடர்ந்தன.  தொடர் போர்கள், வறுமை, வெளியிட பாதுகாப்பின்மை, சாதீய சிந்தனைகள், அரசாட்சி நிர்வாகத்தில் அத்துமீரிய சமய தலையீடு போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஒடுக்கப்பட்டனர். கல்வி, காதல், திருமணம் போன்ற பெண்களின் எல்லா விருப்புரிமைகளும் முடக்கப்பட்டு ஆண்களின் முடிவிற்கு ஏற்பவே பெண் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் நிலையே நமது பண்பாடானது.

19- நூற்றாண்டில் உலகெங்கும் பாய்ந்து பரவிய புத்தெழுச்சியும் புது சிந்தனையும் உலக மக்களின் மனதில் புதுநம்பிக்கைகளை விதைத்துச் சென்றது. துறை தோறும் தோன்றிய அறிவியல் தர்க்க சிந்தனைகள் இலக்கியத்திலும் தோன்றியது. மேற்கத்திய பெண்கள் தாங்கள் சுதந்திரமான பெண்கள் என்றும் ஆண்களுக்கு சமமானவர்கள் என்றும் கூறி பல்வேறு போராட்டங்களை முன்வைத்தனர். அதுவே ‘பெண்ணிய சிந்தனையாக வடிவம் பெற்று உலக பெண்கள் அனைவரையும் கவர்ந்தது. தமிழ்ப் பெண்கள் மனதிலும் சுதந்திர சிந்தனை தோன்ற பாரதி போன்ற புதுமையாளர்கள் பணியாற்றினர்.

உலகில் எந்த ஒரு இயக்கமும் தோன்றிய அதே வடிவத்தோடும் அளவுகோலோடும் இருப்பதில்லை. ஆரம்பத்தில் தாங்கள் உள்வாங்கிக் கொண்ட மைய கோட்பாட்டை புணரமைத்தும் சீரமைத்தும் கால எல்லைகளை தாண்டி அவை பயணிக்கின்றன. பெண்ணிய சிந்தனையும் அவ்வாரே தனது ஆழத்தையும் அகலத்தையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. பின் நவீனத்துவ சிந்தனை தோன்றிய பிறகு பெண்ணிய சிந்தனையும் பெண்ணிய இலக்கியமும் தீவிர தன்மை கொண்டதாக சமுதாயத்தின் இருண்ட பகுதிகளுக்குள்ளும் சென்று பார்க்கும் தீரம் கொண்டதாக தன்னை உயர்த்திக் கொண்டது.

தொடக்ககால பெண்ணிய சிந்தனை என்பது பல்வேறு முற்போக்கு சிந்தனைகளின் தொகுப்பாகவே இருந்துள்ளது. பெண் கல்வி, விதவை திருமணம் போன்ற சமுதாய சட்ட திட்டங்களை மறு விசாரணை செய்யும் விதமாகவே அவை அமைந்துள்ளன. இந்த இயக்கங்களுக்கு பாரதியார், இ.வே.ரா, பாரதிதாசன் போன்ற ஆண் சிந்தனையாளர்கள் பலர் முன்வந்து குரல் கொடுத்துள்ளனர். அவர்களின் நோக்கம், பெண்கள் கல்வி அறிவும் உலக நடப்பும் தெரிந்த சிறந்த சமுதாய உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதுதான். அதனினும் மேலாக, பெண்கள் சிறந்த குடும்ப அமைப்புகளை நிர்வகிப்பதும் அதன்வழி ஆண்களுக்கு உற்ற துணையாக இருப்பதும் அன்றைய பெண்ணிய சிந்தனையாளர்களின் நோக்கமாக இருந்துள்ளது. பாராதி பாடிய பெண்விடுதலை பாடல்களும், பாரதிதாசனின் குடும்ப விளக்கு போன்ற படைப்புகளும் உணர்த்துவதும் இதுவே.

அதன் அடுத்த நிலையில் பெண்கள் அரசியலில் ஈடுபாடு காட்டுவதும் நாட்டுப் பற்றை நிலைநாட்டுவதும் பெண்ணிய சிந்தனையின் சிறந்த வெளிப்பாடாக கொள்ளப்பட்டது. மகாத்மா காந்தி இந்த வகையிலேயே பெண்ணிய சிந்தனையை ஆதரித்தார்.

பொதுவாக இந்த அளவு வரை பெண்ணிய சிந்தனை என்பது ஆக்ககரமான வகையில் தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. ஆனால் அதன் அடுத்த விரிவாக்கம் பல சர்ச்சைகளை கிளப்பக்கூடியதாக இருக்கிறது. பெண் தன் அறிவையும் ஆற்றலையும் பெருக்கி அதன் வழி குடும்ப சேவைக்கோ நாட்டு சேவைக்கோ தங்களை அற்பணித்தலே சிறப்பு என்றும் காலங்காலமாக வழியுறுத்தப்படும் அடிப்படை சமூக நெறிகளை பெண்ணிய சிந்தனை மீராது இருக்கவேண்டும் என்னும் முன்முடிவும் பலரிடமும் காணப்படுகிறது. ஆனால் அப்படி நிகழாமல் பெண்ணியம் வேரொரு பாதையை தேர்வு செய்யும் போது பெண்ணியம் விவாதப் பொருளாகிறது.

இதனாலேயே பெண்ணியம் இரு பிரிவுகளாக பிரிந்து காணப்படுகிறது. நம் நாட்டின் மூத்த எழுத்தாளரும் தொடர்ந்து பெண்ணிய கருத்துகளை கூறி வருபவருமான கா. பாக்கியம் அவர்கள் “ ‘பெண்ணியம்’ என்பதற்கு இன்றைய பொருள் வேறு. அன்றைய பொருள் வேறு” என்று வல்லினத்துடனான பேட்டியில் கூறுகிறார்.

பெண்ணிய சிந்தனைப் போக்கு, தன்னைப் பற்றி, தன் உடலைப் பற்றி, தன் உணர்ச்சிகளைப் பற்றி வெளிப்படையாகக் கூறக்கூடிய வேறொரு களத்திற்கு பயணிக்கும் போதுதான் ‘வரம்பு’ என்கிற எல்லைக் கோட்டைப் பற்றி சமுதாயம் சிந்திக்கிறது. இங்கு வரம்பு எனப்படுவது பெரும்பாலும் வழக்கத்தில் உள்ள நன்னெறி, அறநெறி அல்லது சமய கோட்பாடுகளை உள்ளடக்கியதாக உள்ளது.

பெண்ணிய இலக்கியங்களில் பெண்கள் தங்கள் பாலுணர்வு சார்ந்த அனுபவங்களையோ அல்லது கனவுகளையோ கூறுவது சமூக முறைக்கேடாக கருதப்படுகிறது. பெண்கள் தங்கள் புணர்ச்சி ரசனைகளையோ, பால் ஈர்ப்புகளையோ எழுதுவதுதை இலக்கியக் குற்றமாக பலரும் வாதிடுகின்றனர். தனிமனித ஒழுக்கங்களை மீரிய செயல் என்று கூறப்படுகின்றது. வரம்பு வகுக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.

கவிஞர் லீனா மணிமேகலை ஒரு நேர்காணலில்

“பாலியல் விருப்பங்களும், தேர்வுகளும் அவரவர் சுதந்திரம். பளிச்சென்று சொல்கிறேன், என்னைப் பொறுத்தவரை குறியுடனான புணர்ச்சி என்பதை விட பாலுறுப்புகளை உரசுவதால் உண்டாகும் கிளர்ச்சியே உச்சத்தை தரும். பாலுறுப்புகளை வருடி, முத்தமிட்டு எழுச்சி ஏற்படுத்தச் செய்வதற்குரிய விரல்களோ, நாக்கோ ஆண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? பெண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? ஏன் என்னுடையதாகவே இருந்தால் தான் என்ன? எல்லாமே எனக்கு ஒன்றுதான், விருப்பம் தான். ஆக இருபாலுமை என்பது என் தேர்வு, உரிமை” என்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டு மலாய் பாடகி ஒருவர் தொலைக்காட்சி பேட்டியில், தனக்கு ஒரே நேரத்தில் இரு ஆண்களுடன் போகித்திருக்க வேண்டும் என்கிற செஸ்சுவல் ஃபந்தசி (sexual fantasy) இருக்கிறது என்று கூறியதும் அதன் பின் நாடு முழுவதும் எழுந்த கண்டன குரல்களும் குறிப்பிட தக்கன.

இவ்வகை பாலியல் எழுத்தின் நோக்கமும் சமுதாய பாதிப்பும் பரவலாக பேசப்படுகிறது. பாலியல் குறித்த வெளிப்படையான பேச்சு சிக்கலான சூழ்நிலைகளை உருவாக்கும் என்பது உண்மைதான் என்றாலும் பெண்ணிய எழுத்தோடு மட்டும் இதை தொடர்பு படுத்தி பேசுவதில் தான் மிகப்பெரிய முரண் உள்ளது. ஆண்கள் மிக நீண்ட காலமாகவே பாலியல் கருத்துக்களை எழுதவும் பேசவும் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதைவிட ‘ தமிழர்களின் உன்னத பொழுது போக்கான திரைப்படங்கள் காட்டும் வக்ரமான பாலியல் காட்சிகளை குடும்பத்துடன் கண்டுகளிக்க பழகிக் கொண்ட சமுதாயம் இன்னும் நேர்மையாக சிந்திக்க மறுப்பதாகவே தோன்றுகிறது.  இதையே பிரேம் தனது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்.

“தமிழில் பெண்ணியச் சொல்லாடலும், பெண்ணிய கோட்பாடுகளும் எதிர்கொள்ளப்படும் முறையை வைத்தே தமிழ்ச்சிந்தனை நவீன தன்மையை அடையவில்லை, அது மனித உரிமைகளை மறுக்கும், அறிவியல் பார்வையற்ற நிலையில்தான் இன்னும் இருக்கிறது, அதிலேயே அது பெருமை கொள்கிறது என்பது புலப்பட்டுவிடும். பெரியார் தமிழில் இடஒதுக்கீட்டு அரசியல் தவிர மற்றவற்றில் வெளியேற்றப்பட்ட ஒரு சிந்தனையாளர் என்பது புரியவரும். ஒரு மரபுச் சமூகம் பொதுப்புத்தியில் பெண்ணிய மறுப்பு, பெண் சமத்துவ எதிர்ப்பைக் கொண்டிருந்தால் அதற்கான போராட்ட முறை வேறு. இங்கு நவீன சிந்தனை, நவீன இலக்கியம் என்ற தளத்தில் அவை நியாயப்படுத்தப்படுவதன் ஒரே பின்னணி இதுவரை இந்தத் தளங்கள் நவீனப்படவில்லை, விடுதலைக் கருத்தியல்களை ஏற்கவில்லை இவற்றின் அறிவார்த்தம் என்பது வெறும் நடிப்பு என்பதுதான். பெண்ணியம் மற்றும் பெண் சமத்துவம் என்பதை ஒவ்வொரு இழையிலும் அவமானப்படுத்தும் தமிழின் காட்சி ஊடகங்கள் மற்றும் திரைத்துறை என்னும் அறிவுமறுப்பு, விடுதலை மறுப்பு நிறுவனங்களுக்கு இவர்கள் அளித்துவரும் திறன் சார்ந்த பங்களிப்புகள் குறித்து இவர்களுக்கு எந்த அவமான உணர்வும் ஏற்படுவதில்லை, மாறாக அதுவே இவர்களின் வீடுபேறாக இருக்கிறது. ஆனால் இவர்களே சமூக அறம், நுண்ணுணர்வுகள் என்று பேசித்திரியும்போது தமிழின் மாற்றுச் சிந்தனைகளுக்கான இடத்தையும் அழித்துவிடுகிறார்கள்.”   

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...