நகர்வு

nagarchiபிபிஆர் பிளட்சின் 15-வது மாடியில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் ஒரே சத்தமும் சண்டையுமாக இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து ஒருஆண் குரல் பலமாக கத்திக் கொண்டிருந்தது. சண்டை நடந்து கொண்டிருக்கும் வாசற்படியை மலாய்கார குடும்பம் ஒன்று அமைதியாக கடந்து போனது. கீழ் மாடியில் குடியிருக்கும் சாந்தி சத்தம் கேட்டு வேகவேகமாக படியேறி மேலே வந்தாள்.

மனிதனை சுற்றி நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு. மலேசிய தமிழர்கள் சுமார் 250 வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டில் இருந்து மலாயாவுக்கு கொண்டு வரப்பட்டபோது எஸ்டேட்களிலும், நகரங்களிலும்அரசாங்க குடியிருப்புகளிலும் மட்டுமே குடியிருந்தார்கள். ஜப்பானியர் ஆட்சி காலத்திற்கு பிறகு நகரமயமாக்குதல் நாடு முழுவதும் நடந்தது.  அந்த காலகட்டங்களில் பெரு நகரங்களின் ஓரங்களில் கம்பங்கள் உருவானது.  எஸ்டேட் தமிழன் மெல்ல கம்பத்து தமிழன் ஆனான். கம்பங்கள் உடைக்கப்பட்டு ரூமா பஞ்சாங்-க்கு நகர்ந்தார்கள். ரூமா பாஞ்சாங்-கின் அப்டேட் தான் இன்றைய பிபிஆர் பிளட்சுகள். ஆனால் எஸ்டேட்டில் நடந்த அதே சண்டைகள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறன.

ராத்திரி நேரம். மணி 8-க்கு மேல் இருக்கும். குமாருக்கும் குமாரின் அக்கா ஞானத்திற்கும் 15-வது மாடியில் பத்தாம் நம்பர் வீட்டில் சண்டை நடந்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் கத்தி பேசினாலும் அந்த பிள்ட் முழுவதும் கேட்கும். குமார் அடி தொண்டையில் கத்தி கத்தி சண்டை போட்டு கொண்டிருந்தான். சாந்தி வேகமாக ஓடி வந்து வீட்டின் வாசல் அருகில் நின்றாள். சாந்தி ஞானத்தின் நெறுங்கிய தோழி. ஒரே வயது. 30-க்கு மேல். ஒன்றாக படித்தவர்கள். ஒரே கம்பனியில் வேலை செய்கிறார்கள். சாந்திக்குக் கல்யாணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கின்றன. ஆனால் ஞானத்திற்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

வீட்டு வாசற்படியில் வந்து நிற்கும் சாந்தியைப் பார்த்ததும் குமார் இன்னும் ஆவேசமாக கத்தினான்.

“என் அக்கா கெட்டு போனதற்கு முக்கிய காரணமே நீ தான். என்ன ….? கூட்டி கொடுக்கிற வேலையை பார்க்கிறாயா?” சாந்தியைப் பார்த்து குமார் கத்தினான். பதிலுக்கு சாந்தியும் கத்தத் தொடங்கினாள்.

“யாருடா கூட்டி கொடுக்கிற வேலையைப் பார்க்கிறா? உன் அக்காவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க துப்பு இல்ல,…என்னை பார்த்து கூட்டி கொடுக்கிறாயான்னா கேட்கிற. நாயே!” என்று கூறியதும் குமார் கையை ஓங்கிக் கொண்டு சாந்தியை அடிக்கப் போனான்.

“அடிச்சு பார்றா என்னை. இரு…, என் வீட்டுகாரர் வரட்டும் உன்னை என்ன செய்கிறேன் என்று பார்.  கையை ஓங்கிட்டு வருகிறாய். இந்த கையை ஓங்கிட்டு வருகிற வேலையை எல்லாம்வாய் இல்லாத புள்ள பூச்சு உன் அக்காகிட்ட வெச்சுக்க.”

ஞானம் வாசற்படியின் அருகில் ஓடி வந்து சாந்தியை நோக்கி,

“விடு சாந்தி. அவன் எதாவது கத்தி விட்டு போகட்டும். நீ ஏன் வீட்டு வாசற்படியில் நின்று கத்திக் கொண்டிருக்கிறாய்.” என்றாள்

“ஆமாண்டி,,… நீ இப்படியே எல்லாத்தையும் சகிச்சுகிட்டு இரு. உன்னை நல்லா தலையில் மொளகா அறைச்சு கடைசி வரையில் கல்யாணமே கட்டிக் கொடுக்காம இந்த வீட்டிலேயே வச்சுக்கலாம்னு பார்க்கிறாங்களா…? தோ…சோபாவில் சிலை மாதிரி உட்கார்ந்திருக்கே உன் அம்மா…” என்று சாந்தி சொல்லி முடிப்பதற்குள், குமார், “நீ தான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக் கொண்டாய். அதே மாதிரி என் அக்காவையும் கெடுக்க பார்க்கிற” என்று கத்தினான்

“நான் ஓடி போய் கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் இதே பிளட்சில் கௌரவமாகத்தான் வாழ்கிறேன். உன்னை மாதிரி அக்கா சம்பாதியத்தில் ஓசி சோறு சாப்பிடுவதில்லை.”

“நீ போய் உன் குடும்பத்தையும் உன் புருசனையும் நல்லா பார்த்துக்கோ, என் குடும்பத்து விவகாரத்தில் தலையிட நீ யார்?”

“சாந்தி! நீ போ ….. நான் பார்த்துக் கொள்கிறேன். அவன் தான் கத்திகிட்டு இருக்கிறான் என்றால் நீயும் அவனோடு சரி சமமாக கத்திக் கொண்டிருக்கிறாய்.” ஒரு வழியாக சாந்தியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள் ஞானம்.

சாந்தி குமாரை முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள். சாந்தி அங்கிருந்து நகர்ந்ததும் மீண்டும் ஞானத்திடம் சண்டை போட ஆரம்பித்தான்.

“நீ பன்றது எல்லாம் எனக்கு தெரியாதுனு நினைச்சியா? எனக்கு எல்லாம் தெரியும்.”

“உனக்கு உன் அக்கா மேல் நம்பிக்கை இல்லையா? அப்படி நான் என்ன யார்கூடவும் போய் படுத்து கொள்வேனா?”

“ஒரு மலேசியகார ஆளை காதலிச்சாலும் பராவாயில்லை. போயும் போயும் ஊர்காரன் தான் கிடைச்சானா?”

“நான் ஊர்காரனை காதலிக்கிறேன்னு உனக்கு யார் சொன்னது? நான் சும்மா கூட்டாளியாகத்தான் அந்த ஊர்காரனிடம் பழகுகிறேன்.”

“எனக்கு எவ்வளவு கூட்டாளி இருக்காங்கன்னு தெரியுமா? நீ எங்க போனாலும் வந்தாலும் நியூஸ் சொல்ல ஆள் இருக்கு. போன வாரம் வேலைக்கு லீவு போட்டு விட்டு ஹோட்டல் போயிருக்க.” என்று குமார் சொன்னதும் ஞானம் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். ஞானத்தோடு சேர்ந்துக் கொண்டு அவள் அம்மாவும் அழ ஆரம்பித்தாள்.

அதுவரை நடப்பதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்த அவர்களின் அம்மா குமாரை பார்த்து ஆவேசமாய்,

“நான் ஒன்னும் என் மகளை அப்படி கேவலமாய் வளர்க்கவில்லை. இன்னொரு வாட்டி அப்படி சொன்னாய் என்றால் விளக்குமாத்தால் அடிப்பேன். வெளியே போ நாயே!” என்று கத்தினாள்

இதை கேட்டதும் விருவிருவென வீட்டை விட்டு வெளியே போனான் குமார்.

இவ்வளவு களேபரத்தையும் அமைதியாக ஐஸ்பெட்டியின் ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஞானத்தின் தங்கை மலர் ஞானத்தின் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

ஞானத்துக்கு ஒரு தம்பி ஒரு தங்கை. தம்பி குமார். கத்தி கலாட்டா செய்து சண்டை போட்டுக்nagarchi3 கொண்டு போனவன். தங்கை மலர். 15 வயது. பி.டி3 படிக்கிறாள். ஞானத்தின் அப்பா கேன்சர் வந்து படாதபாடு பட்டு செத்து போனார். அம்மா மாரியாயிக்கு அப்பாவின் சொக்சோ காசு கொஞ்சம் வருகிறது. அப்பா செத்து போனதால் குடும்ப சுழ்நிலை வேறு மாதிரி மாறி போய் ஞானம் படிவம் மூன்றோடு பள்ளியை விட்டு விலகி வேலைக்கு போக ஆரம்பித்தாள். தம்பி குமார் தண்டமாய் பள்ளிக்குப் போய்; தண்டமாய் படித்து; தண்டமாய் வேலைக்கு போகாமல்; தண்டமாய் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால் ஞானத்தின் தங்கை மலர் படிப்பில் நல்ல கெட்டிகாரி. யுபிஎஸ்ஆரில் நான்கு ஏ மூணு பி எடுத்தாள். தன் தங்கை மலரை எப்படியாவது யூனிவர்சிட்டி வரை அனுப்பி பெரிய பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை ஞானத்து உண்டு.

***

தன் அக்கா ஞானத்திடம் சண்டை போட்டுவிட்டு வெளியே போன குமார், நேரே துரை கடைக்குப் போனான். துரை கடையில்தான் மூன்று பீர் டின் பத்து வெள்ளிக்குக் கிடைக்கும். கூடவே கிங் ஃபிஷர் பெரிய டின் பீர் ஆறு வெள்ளிக்குக் கிடைக்கும். பத்து வெள்ளி கொடுத்து மூன்று பீர் டின் வாங்கினான். அதில் ஒரு டின்னை திறந்து குடிக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் குமாரின் நண்பன் ரவி அவனைத் தேடிக் கொண்டு துரை கடை வரை வந்துவிட்டான்.

“என்னா மச்சி! வீட்ல ஒரே சத்தமாக இருந்திச்சி. என்ன கதை ?”

“வெளியில சொல்லவே அசிங்கமாக இருக்கு … போயும் போயும் ஒரு ஊர்காரனை என் அக்கா காதலிக்கிறாடா… அவன்களைப் பார்க்கவே அருவருப்பா இருக்கு. அழுக்கு புடிச்சவன்கள். எப்படித்தான் அவன்கள் மேல் காதல் வருதோ”

“மச்சி, இந்த ஊர்காரன்களைப் போட்டாத்தான் அடங்குவான்க …. இப்படியே விட்டோம் …. அப்புறம் நமக்கு இங்கு என்ன மரியாதை இருக்கு ….” என்று சொல்லிக் கொண்டே ரவி ஒரு பீர் டின்னை திறந்து குடித்தான்.

“உண்மைதான். பொழைக்க வந்த நாய்ங்க …. இங்குள்ள பொண்ணுங்க கேட்குதா அவன்களுக்க…”

“தனுஸ்ரீ கேஸ் அண்ட் கேரி ஓனர் ஒரு ஊர்காரன். இங்குள்ள பெண்ணை கல்யாணம் கட்டிக் கொண்டு இங்கேயே செட்டில் ஆகி பிஸினஸும் பண்றான்.”

“மச்சி… பி எம் டபிள்யு எக்ஸ் 3 கார் வச்சிருக்கானே அவனா…?”

“ஆமாம் அவனேதான். அவன் மட்டுமா ….? பிரேமாவை கல்யாணம் பண்ணிக் கொண்டு இங்குள்ள ரெஸ்டொரண்டுகளுக்கு கோழி சப்ளை செய்கிறானே மனோகர், அவனும் ஊர்காரன். கல்யாணி ரெஸ்ரொரண்ட் ஓனர் குணாவும் ஊர்காரன் தான். இங்குள்ள பசங்களுக்கு ஜலான் காசு கட்டிகிட்டு பிஸினஸ் பண்ணிக் கொண்டு செம்மையாக வாழ்கிறார்கள். நாம விரல் சூப்பிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.”

ரவி சொல்லிக் கொண்டே இருக்க குமார் இன்னொரு பீர் டின்னையும் முழுவதுமாக குடித்து முடித்து; ரெண்டு கிங் பிஷர் பீர் வாங்கினான். ஆளுக்கு ஒன்றாக குமாரும் ரவியும் குடிக்க ஆரம்பித்தார்கள்.

“மச்சி …. என்னால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்த ஊர்காரன்கள் இருக்கிறான்களே சரியான திருட்டு பயல்கள். ஊரில் ஒரு கல்யாணம் பண்ணி இருப்பான்கள். இங்கு வந்து இங்குள்ள பெண்களையும் கட்டி கொள்கிறான்கள். மாரியம்மா கோவில் ஆய்யர் இப்படி தானே மகாவை கல்யாணம் பன்ணிக் கொண்டான். அப்புறம் தான் விசயம் தெரியுது,… அவன் ஏற்கனவே ஊரில் கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைகள் வேறு இருக்கு என்று…”

“இதை இப்படியே விட கூடாது மச்சி. உன் அக்காவை காதலிக்கிற ஊர்காரனை போட்டு தள்ளுகிறோம். அது மத்த ஊர்காரன்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.”

“ரைட்டு மச்சி. இப்பவே அந்த ஊர்காரன்கள் தங்கி இருக்கிற ரூமுக்கு போறோம். அந்த ரூமில் தங்கி இருக்கிற அத்துனை ஊர்காரன்களையும் போட்டு தள்ளுறோம். நீ சிவாவுக்கும் அரசுவுக்கும் போன் போட்டு வரச் சொல்லு. இன்னைக்கு ராத்திரியே அவன்களை போடறோம்.”

பீர் டின் போதையில் குமார் ஆவேசமாக பேச,  ரவி கூட்டம் சேர்க்க போனை எடுத்து டயல் செய்தான்.

                                                ***

குமார் வீட்டை விட்டு வெளியேறியதும் ஞானம் தன் ரூமில் புகுந்து கொண்டு கதவை சாத்தி தாழ் போட்டுக் கொண்டாள். போன் எடுத்து தன் ஊர்கார காதலனுக்கு போன் அடித்தாள்.

“மா… என் தம்பிக்கு எல்லா விசயமும் தெரிந்துவிட்டது. வீட்டில் ஒரே சண்டை ஆகி விட்டது. என் தம்பி கண்டிப்பாக உங்களைத் தேடி வருவான். எனக்கு ரொம்பவும் பயமாக உள்ளது.” போனில் தன் தமிழ் நாட்டு காதலனிடம் சொல்லிக் கொண்டிருந்தால்.

மறுமுனையில்,

“நீ பயப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன். உன்னை ஏதும் அடித்தானா?”

“’இல்லை. எனக்கு உங்களை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. இனி என்னால் இந்த வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது…”

“அவசரப்படாதே ஞானம். கொஞ்சம் பொருத்துக் கொள். எனக்கு இன்னும் பர்மிட் ரினிவல் வரவில்லை. பஸ்போர்ட்டும் ஏஜண்ட் கையில் இருக்கு. எனக்கு எல்லாம் சரியாகட்டும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.”

“இல்லை மா …. உங்களைப் பிரிந்து என்னால் இனி ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. எனக்கு நீங்கள் வேண்டும். உங்க கூட வாழணும். நீங்க தான் என் உலகம். வாருங்கள் நாம் எங்கெயாவது ஓடி போய் விடலாம்”

“எனக்கு இன்னும் சம்பளம் கூட போடவில்லை. கையில் சுத்தமாக பணம் இல்லை.”

“என்னிடம் பணம் இருக்கு. நான் சிறுக சிறுக சேமித்து 15 ஆயிரம் வெள்ளி பேங்கில் வைத்திருக்கிறேன். கொஞ்சம் நகையும் இருக்கிறது. நாம் எங்கெயாவது ஓடி போய் சந்தோசமாக வாழலாம்.’

“சரி…. அப்படி என்றால் நாளைக்கு, நீ எப்போதும் வேலைக்கு போவது போல் கிளம்பி வந்துவிடு. எங்கே போவது என்று பிறகு பேசிக் கொள்ளலாம்.”

“ஜொகூரில் சாந்தியின் அக்கா இருக்கிறார். நாம் அங்கே போய் விடலாம். யாருக்கும் தெரியாது”

nagarchi2ஞானம் போனை வைத்து விட்டு தூக்கம் வராமல் மெத்தையில் புரண்டுக் கொண்டிருந்தாள். பலவித கற்பனைகள் அவள் மனதில் தோன்றின. தன் காதலனுடன் ஓடிப் போய் கலயாணம் செய்து கொள்வது போலவும், இருக்கும் பணத்தில் தொழில் செய்து தன் காதலன் பெரிய முதலாளி ஆகி விட்டது போலவும், ரெண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்ட பிறகு தன் காதல் புருசனோடு தன் அம்மா வீட்டிற்கு வருவது போலவும், தன் அம்மா, தம்பி, தங்கை எல்லோரும் தன் காதல் கணவனை ஏற்றுக் கொண்டு மிகவும் அன்பாக பழகுவது போலவும் அழகான கற்பனை கனவு ஒன்று கண்டாள். ஒளிமயமான எதிர்காலத்தை எண்ணி இரவு முழுக்க தூக்கம் வராமல் விழித்துக் கொண்டே இருந்தாள்.

                                                ***

’தமிழ் நாட்டு வாலிபர் கொடுரூமாக வெட்டிக் கொலை. நான்கு உள்ளூர் இளைஞர்கள் கைது ’ ரெண்டு நாள் கழித்து அனைத்து தமிழ் பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்தியாக குமார் மற்றும் அவனின் நண்பர்கள் படத்தோடு பிரசுரமானது. வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஞானத்தின் தமிழ் நாட்டு காதலன் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடக்கும் படமும் குமார் மற்றும் ஞானத்தின் படத்தோடும்  வாய்ஸ் நோட் ஒன்று வாட்சாப்பில் வைரலாக பரவி வந்தது. முகநூலில் பலவித காமெண்டுகளோடு இதே செய்தி ரவுண்ட் அடித்துக் கொண்டிருந்தது.

மதியழகன் முனியாண்டி

2 comments for “நகர்வு

  1. psanmugam
    July 1, 2017 at 7:16 pm

    நாட்டு நடப்பு நம் மக்கள் சிந்திக்கவைக்கும்

  2. Pusparani
    July 5, 2017 at 8:56 am

    சிந்திக்க வேண்டிய உண்மைகள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...