சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!

 மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம்

1மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் தனக்கான ஓர் அடையாளத்தைத் தேடி பயணித்தத் தொடக்கப்புள்ளியாக ‘இலக்கிய வட்டம்'(1970) முயற்சியையே என்னால் சுட்ட முடிகிறது. ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் சிற்றிதழ் வெளியிடப்பட்டதும், அதில் உள்ள படைப்புகள் விவாதிக்கப்பட்டதும், அவ்விவாவதங்களை மீண்டும் ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மூலமாகவே பதிவு செய்ததும் அக்குழுவினர் மலேசிய நவீன இலக்கியத்தின் தொடக்கக் கட்ட நகர்ச்சிக்காகத் திட்டமிட்டுச் செயல்பட்டதையே காட்டுகிறது. ஆனால், ரெ.கார்த்திகேசு முன்னின்று உருவாக்கிய இவ்விதழ்கள் குறித்து ரெ.கார்த்திகேசு உள்ளிட்ட ஆய்வாளர்கள் பலரும் எளிய வாக்கியங்களோடு கடந்துபோவதுதான் ஆச்சரியம். ‘மணிமன்றம்’ அல்லது ‘முத்தமிழ் படிப்பகம்’ போன்ற பிரமாண்டமான தொடர் முயற்சிகளில் மொழி சார்ந்த அக்கறைகளுக்கும் ‘கதை வகுப்பு’, ‘ரசனை வகுப்பு’ போன்ற சிறுகதை புனைவுக்கான அடிப்படை முன்னெடுப்புகளுக்கும் வரலாற்றில் இடமுண்டு என்றாலும் இவற்றிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டு பரிச்சார்த்தமான முயற்சிகளுக்கு என்றே தொடங்கப்பட்ட ‘இலக்கிய வட்டம்’ சிறு குழுவில் உள்ளவர்களின் எளிய முயற்சிதான் எனினும் அதுவே நவீன இலக்கியத்தின் பாணி என யாரும் உணர்ந்ததாய் தெரியவில்லை.

பைரோஜி நாராயணன், மெ.அறிவானந்தன், இரா.தண்டாயுதம், வீ.செல்வராஜ், க.கிருஷ்ணசாமி, சி.வடிவேலு, சி.வேலுசாமி, அரு.சு.ஜீவானந்தன், சு.கமலநாதன், சா.அ.அன்பானந்தன், மலபார் குமார், ரெ.கார்த்திகேசு, மைதீ.சுல்தான் போன்ற பலரும் பங்களித்துள்ள ‘இலக்கிய வட்டம்’ இதழ்களைத் தேடிப் புரட்டியபோது முழுக்கவே தன்னைத் தமிழக இலக்கியத்திலிருந்து துண்டித்துக்கொண்டு மலேசிய நிலத்துக்கான நவீனத் தமிழ் இலக்கியத்தை உருவாக்கும் முனைப்போடு மிக முக்கியமான வரலாற்றுத்தகவல்களைப் பதிவு செய்துள்ளதையும் அறிய முடிந்தது.

‘இலக்கிய வட்டம்’ முயற்சிக்கு முன் 1950களில் சுப.நாராயணனும் பைரோஜி நாராயணனும் நடத்திய ‘கதை வகுப்பை’ சிறுகதை இலக்கியத்திற்கான முக்கிய முன்னெடுப்பாகப் பல ஆய்வாளர்கள் சொன்னாலும் 1952-இல் தமிழ் நேசன் பத்திரிகைக்குப் பணி நிமித்தமாக மலேசியா வந்த கு.அழகிரிசாமி மலேசியச் சிறுகதைகளின் மேல் அதிருப்தி கொண்டிருந்ததையும் 1957-இல் அவரை மையமாகக் கொண்டு நடந்த ‘இலக்கிய வட்டம்’ எனும் சந்திப்பின் வழி சிறுகதைக்கான வடிவத்தை அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் அடிப்படையிலும் கு.அழகிரிசாமிக்கு முன்பான மலேசியத் தமிழ் இலக்கிய முயற்சிகள் சவலைப்பிள்ளையாக இருந்ததையே அறிய முடிகிறது. மேலும், அக்காலக்கட்டத்தில் கு.அழகிரிசாமியின் சந்திப்பில் கலந்துகொண்டு முக்கிய எழுத்தாளர்களாக அவராலேயே அடையாளம் காட்டப்பட்ட மா.செ.மாயதேவன், மா.இராமையா, செ.குணசேகர், சி.கமலநாதன் போன்றவர்களின் சிறுகதைகளை இன்று வாசிக்கும்போது, இருப்பதில் சிறந்ததை மட்டுமே கு.அழகிரிசாமி சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் என எந்த வாசகனும் அறிவான். அக்காலத்தில் கு.அழகிரிசாமி சுட்டிக்காட்டிய சிறுகதை எழுத்தாளர்களுக்கும் நவீன இலக்கியத்திற்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை.

‘இலக்கிய வட்டம்’ முயற்சியின் மூலம் உருவான இதழ்கள் வாயிலாக நவீனத்தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்தவர் அரு.சு.ஜீவானந்தன் என அவ்விதழ்களை வாசிக்கும்போது அறிய முடிந்தது. ‘இலக்கிய வட்டம்’ இதழ்களுக்கு முன்பே அவர் சிறுகதைகள் எழுதியிருந்தாலும் சிற்றிதழுக்கே உள்ள சுதந்திரத்துடன் கலாச்சார மீறல்களைச் செய்துப்பார்க்கும் அவரது கதைகள் ‘இலக்கிய வட்டம்’ இதழில் வெளிவந்தன.

‘இலக்கிய வட்டம்’ இதழ் உருவாகும் முன்பே மலேசியாவில் மொழிவழி கலை இலக்கியங்களை வளர்த்த இயக்கம் ‘தமிழ் இளைஞர் மணிமன்றம்’. அங்கிருந்து புறப்பட்டு, பின்னர் சிறுகதைகளில் தங்களை அதிகம் இணைத்துக்கொண்டவர்கள் ரெ.கார்த்திகேசு, சை.பீர்முகம்மது, எம்.குமரன் மற்றும் மு.அன்புச்செல்வன் எனலாம். ரெ.கார்த்திகேசுவின் எழுத்துகள் மேட்டிமைவாதத்தைப் பேசுபவை. மேலிருந்து எளியவர் வாழ்வை கீழ்நோக்கிப் பார்ப்பவை. அதற்கான எளிய தீர்வுகளைச் சொல்பவை. அமுலில் உள்ள அத்தனை அதிகாரங்களுடனும் ஒத்துப்போபவை. எம்.குமரன், ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ எனும் நாவல், சில சிறுகதைகள் அன்றி தொடர் முயற்சிகள் எதுவும் செய்யவில்லை. ஆனால் அரசியல் பகடியுடன் அவர் பிரசுரித்த ‘கோமாளி’ கேலிச்சித்திர இதழ் மலேசிய இதழியல் சூழலில் முக்கியமான முயற்சி. மு.அன்புச்செல்வனின் பெரும்பாலான படைப்புகள் ஜனரஞ்சகமானவை. அவர் தீவிர இலக்கியத்தொடர்புள்ளவராக இருந்தாலும் அவரது புனைவுகள் மேம்போக்கானவை. இவர்களில் சை.பீர்முகம்மது மணிமன்றத்தைத் தொடர்ந்து ‘முத்தமிழ் படிப்பகம்’, ‘இலக்கியச் சிந்தனை’ என தொடர்ச்சியாகப் புனைவிலக்கியத்தில் இயங்கியவர். புனைவிலக்கியத்தில் பல்வேறு சாத்தியங்களை முயற்சித்தவர். மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சை.பீர்முகம்மதுவின் செயல்பாடுகள் முக்கியமானவை. அதேபோல ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழகத்தில் இயங்கும் இலக்கியவாதிகளோடு அவரது உறவும் வலுவாமல் இருந்துள்ளது. அவ்வுறவின் வழியாக அப்போதைய இலக்கியப்போக்கை அறிந்து தனது எழுத்தின் தன்மையை மாற்றிக்கொண்டவையாக சை.பீர்முகம்மதுவின் ஆக்கங்களைச் சொல்ல முடியும்.

1970களின் இறுதியில் ‘நவீன இலக்கியச் சிந்தனை’ எனும் அமைப்பின் மூலம் செயல்பட தொடங்கியவர்கள் எம்.ஏ.இளஞ்செல்வன், நீலவண்ணன் மற்றும் சீ.முத்துசாமி. இவ்வியக்கம் புதுக்கவிதையின் முன்னெடுப்புக்காகத் தொடங்கப்பட்டது. அதை ஒட்டிய கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. புதுக்கவிதையை முன்னெடுக்க முயன்ற இவர்களில் எம்.ஏ.இளஞ்செல்வன் மற்றும் சீ.முத்துசாமி சிறுகதைக்கு முக்கியமானவர்கள். எழுத்தாளர் கோ.முனியாண்டி பின்னாளில் ‘நவீன இலக்கியச் சிந்தனை’ இயக்கம் மூலம் அறிமுகமானாலும் அவரது கவனம் பெரும்பாலும் கவிதையில் இருந்தது. எம்.ஏ.இளஞ்செல்வன், சீ.முத்துசாமி உள்ளிட்ட ‘நவீன இலக்கியச் சிந்தனை’ குழுவினரால் ஈர்க்கப்பட்டு கோ.முனியாண்டி புனைவிலக்கியத்தில் ஈடுபடத்தொடங்கினார். பெரிய கால இடைவெளி இல்லாவிட்டாலும் கோ.முனியாண்டிக்குப் பிறகு எழுதத் தொடங்கி மிகப்பரவலாக அறியப்பட்டவர் கோ.புண்ணியவான்.

அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, எம்.ஏ.இளஞ்செல்வன், சீ.முத்துசாமி ஆகியோர் 70களில் மலேசியாவில் நவீன இலக்கியம் வேரூன்ற காரணமாக இருந்தவர்கள் எனலாம். ‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ முயற்சிக்காக இவர்களிடம் நேர்காணல் செய்தபோது அக்காலக்கட்ட இலக்கியச் சூழலில் இருந்து முற்றிலும் இவர்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட ஜெயகாந்தனின் எழுத்துகள் காரணமாக இருந்ததை அறிய முடிந்தது.

ஜெயகாந்தனும் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியமும்

இன்றுவரை மலேசியாவில் உள்ள புத்தகக் கடைகளில் பெரும்பாலும் ஆனந்த விகடன்cover 5 அல்லது குமுதம் மூலம் பிரபலமான எழுத்தாளர்களின் நூல்கள்தான் விற்பனையாவதைக் காண முடியும். ஆனந்த விகடன் முன்னிறுத்தும் காப்பிரெட் சாமியார்கள் உடனுக்குடன் பிரபலமாவதும் அல்லது பாலா, வெற்றிமாறன், பிரகாஷ் ராஜ் போன்ற பிரபலமானவர்களை எழுத வைப்பதன் மூலமும் தன்னை அவ்விதழ் ஜீவிக்க வைப்பதும் வாடிக்கை. இதேநிலைதான் 70களிலும் இருந்துள்ளது. ஆனந்த விகடன் மூலமாக ஜெயகாந்தன் அப்போது வெகுமக்கள் மத்தியில் மிகப்பிரபலமானார். மலேசியாவில் விற்பனையான ஜெயகாந்தன் நூல்கள் மூலமாகவும் அதற்கு முன் இருந்த இலக்கிய அறிமுகங்களை மாற்றிக்கொண்டதில்  அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, எம்.ஏ.இளஞ்செல்வன், சீ.முத்துசாமி ஆகிய நால்வரும் ஓர் மையத்தில் சந்திக்கின்றனர் .

எம்.ஏ.இளஞ்செல்வனுடனான தனிப்பட்ட உரையாடல்கள் மூலமும் மேலும் மூவரின் நேர்காணல்கள்/ஆவணப்படங்கள் மூலமாக ஜெயகாந்தனே நவீனத் தமிழ் இலக்கியத்திற்குள் நுழையும் வாசலாக இந்நால்வருக்கும் இருந்துள்ளார். இதே காலக்கட்டத்தைச் சேர்ந்த மா.சண்முகசிவா தமிழகத்தில் தன் கல்வியைத் தொடர்ந்ததால் ஜெயகாந்தனில் தொடங்கி பின்னர் அவரை விமர்சிக்கும் மார்க்ஸிய இலக்கியங்கள் பக்கம் போய் தி.ஜானகிராமனின் அழகியலில் சென்று சேர்ந்தார்.

70களில் உருவான குறிப்பிடத்தக்க நவீன படைப்பாளிகளாக அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி, அமரர் எம்.ஏ.இளஞ்செல்வன், மா.சண்முகசிவா, சை.பீர்முகம்மது ஆகியோரை பட்டியலிடலாம். இப்படி ஒரு தலைமுறை உருவாக அப்போதைய ஆனந்த விகடன், குமுதம், அதன் வழி ஜெயகாந்தன் இருந்ததை ஒப்புக்கொண்டே திட்டவட்டமான மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தை கணிக்க வேண்டியுள்ளது.  ஜெயகாந்தனுக்கு முன் இருந்த புதுமைப்பித்தன் தொடங்கி நவீன எழுத்தாளர்கள் குறித்த அறிமுகமும் வாசிப்பும் இல்லாமலேயே மலேசிய இலக்கியம் வளர்ந்து வந்துள்ளது.

கல்வி மற்றும் தொழில் அடிப்படையில் மா.சண்முகசிவா மற்றும் சை.பீர்முகம்மதுவுக்கு தமிழகத்தில் பரந்த இலக்கியத் தொடர்புகள் இருந்தன. ஜெயகாந்தனைக் கடந்து செல்லவும் அவருடன் முரண்படவும் இந்தத் தொடர்புகள் பங்களித்தன. எம்.ஏ.இளஞ்செல்வனின் படைப்புகள் ஆதி.குமணன் நடத்திய பத்திரிகைகள் மூலம் முன்னெடுக்கப்பட்டன. அன்றைய வானம்பாடியில் அவர் எழுதிய தொடர்கதை மூலமாக மலேசிய வாசகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். பாலியலை முன்வைத்து பேசும் அவரது படைப்புகள் அப்போது ‘நவீனத்துவம்’ என தவறாகக் கணிக்கப்பட்டது. ஆனால் ஒழுக்க வரம்புகளால் கட்டமைக்கப்பட்ட மலேசியத் தமிழ் இலக்கியத்தை மூர்க்கமாகத் தகர்த்த ஆளுமை எம்.ஏ.இளஞ்செல்வன். அதற்காக அவர் எப்போதும் எதிர்வினையாற்ற தயாராக இருந்தார். அரு.சு.ஜீவானந்தனின் இலக்கிய உலகம் மேலும் விரிவானது. இலக்கிய வட்டம், இலக்கியச் சிந்தனை, அகம் என சிறு சிறு குழுக்கள் மூலமாகவே தன் இலக்கியத் தேவையை அடைந்த அவருக்கு வாய்த்த லண்டன் பயணமும் மார்க்ஸிய தொடர்புகளும் சுந்தர ராமசாமி, எஸ்.வி.ராஜதுரை உள்ளிட்ட ஆளுமைகளுடனான உரையாடல்களும் அவரது சிந்தனை மாற்றத்துக்குக் காரணமாக இருந்துள்ளன.

இவர்களுக்கு மத்தியில்தான் சீ.முத்துசாமி தன்னந்தனியாக இயங்கி வந்தார்.

சீ.முத்துசாமி எனும் படைப்பாளி

04 siகெடா மாநில எழுத்தாளர் சங்கம் எம்.ஏ.இளஞ்செல்வன் மூலமாகத் தீவிரமாகச் செயல்பட்ட காலத்தில் அதன் உறுப்பினராக இருந்தவர் சீ.முத்துசாமி. அதன் பின்னர் உருவான ‘நவீன இலக்கியச் சிந்தனை’ அமைப்பிலும் குறுகிய காலமே செயல்பட்டார். அதன் பிறகு அவரது வாசிப்பும் தேடலும் பெரும்பாலும் தனியான ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கியது. அப்போது இங்கு வாசிக்கக் கிடைத்த ந.பார்த்தசாரதியின் தீபம் மூலம் முக்கியமான படைப்பாளிகளை அடையாளம் கண்டவர் வண்ணதாசன், வண்ணநிலவன் என தனது வாசிப்புப் போக்கை நீட்டித்தார். கோலாலம்பூரிலிருந்து 400 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்த சுங்கைப்பட்டாணியில் இருந்த அவருக்கு தமிழகத் தொடர்புகளோ வெளிநாட்டுப் பயணங்களோ வாய்க்கவில்லை. நாளிதழ் மூலமாக இளஞ்செல்வனுக்குக் கிடைத்த வெளிச்சமும் இல்லை. 1977-இல் இவரது ’இரைகள்’ சிறுகதை, தமிழகத்தின் குமுதம் இதழின் சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு பெற்றதோடு தமிழகத்தின் இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரச் சிறந்த சிறுகதையாகவும் தேர்வு பெற்றது இவர்மீது வெளிச்சம் பட வைத்தது. தொடர்ந்து வானம்பாடி மூலம் உருவான குறுநாவல் பதிப்புத் திட்டத்தில் வெளிவந்த இவரது ‘விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை’ எனும் நாவலுக்குப்பின் ஏறக்குறைய 18 வருடங்கள் இலக்கியச் சூழலிலிருந்து விலகியிருந்தார்.

சீ.முத்துசாமி அடிப்படையில் கொஞ்சம் உணர்ச்சியவயப்படக்கூடியவர். இலக்கியச் சூழலில் நடக்கும் சுரண்டல்களுக்கு அவர் மௌனம் காத்தது குறைவு. பெ.ராஜேந்திரன் தலைமையில் செயல்பட்ட எழுத்தாளர் சங்கத்தின் கீழ்மைகளைக் கண்டித்துப் பலமுறை குரல் கொடுத்தவர். 18 ஆண்டுகள் அவர் இலக்கியச் சூழலில் இருந்து விலகி இருக்க பொருளியல் தேடல் மட்டும் இல்லாமல் அப்போதைய இலக்கியச் சூழலும் காரணமாக இருந்தது. கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தின் போக்கு, ஜனரஞ்சக இலக்கியத்தை முன்னெடுக்கும் மலேசிய இலக்கியச் சூழல் என பலவும் அவரைக் குழுச்செயல்பாட்டிலிருந்து அந்நியப்பட வைத்தது. அந்த மனநிலை தனிமைக்கு இட்டுச் சென்றது.

மீண்டும் எழுத வந்தபோது சீ.முத்துசாமி உற்சாகமாக செயல்படத் தொடங்கினார். தொடர்ந்து அவரது சிறுகதைகளுக்குப் பவுன் பரிசுகள் கிடைத்தன. குறுநாவல், நாவல் என தீவிரமாகவே அவரது எழுத்துப்பணி நீட்டித்தது. 2005-இல் அவர் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றது அவரது முழு விருப்பம் இன்றியே நடந்து ஈராண்டுகளில் அதுவும் முடிவுக்கும் வந்தது. காதல், வல்லினம் போன்ற இதழ்களில் தனது படைப்புகள் தொடர்ந்து பிரசுரமாவதில் ஆர்வம் காட்டியதோடு புதிய தலைமுறை எழுத்தாளர்களோடு சீ.முத்துசாமி நெருக்கம் காட்டியதும் 2005க்குப் பின்னர்தான்.

ஒருவகையில் சீ.முத்துசாமியைத் தீவிரமாக வாசித்து அவரை மீட்ட வாசகர்கள், 2000க்குப் பின் உருவான இளம் தலைமுறை படைப்பாளிகளே. முத்துசாமியின் அட்டைப்படம் ‘காதல்’ இலக்கிய இதழ் முகப்பில் வந்ததும், நேர்காணல்கள் பிரசுரமானதும், சீ.முத்துசாமி மாற்று கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பொதுவில் வைத்ததும், அவரே முன்வந்து மொழிப்பெயர்ப்பு முயற்சிகள் செய்ததும் காதலில் ஆரம்பமாகி வல்லினத்திலும் தொடர்ந்தது. வல்லினம் செய்த கலகங்களில் முத்துசாமியின் பங்களிப்பும் கணிசமாகவே இருந்தது. வெகுசன இலக்கியங்களின் பிரதிநிதிகளைக் காட்டி மலேசிய இலக்கியத்தை அடையாளப்படுத்திக்கொண்டிருந்த சூழலில்தான் வல்லினம் சீ.முத்துசாமியையும் மா.சண்முகசிவாயும் மீண்டும் மீண்டும் மலேசிய நவீன இலக்கியத்தின் முகங்களாக முன்வைத்தது.

 

70களில் சீ.முத்துசாமியின் புனைவுலகம்

‘அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்’ எனும் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகளில் இரண்டு, 70களில் அவர் எழுதியவை. சீ.முத்துசாமி அபத்தமான இலக்கியச் சூழலில் தன்னை விலக்கிக்கொண்ட காரணத்தை அவ்விரு சிறுகதையும் வாசிக்கும்போதே அறிய முடிகின்றது. திட்டவட்டமான தீர்வுகள், சமூக அவலங்களை முன்வைக்கும் கதைக்கரு, முடிவுகளில் திருப்பம் வைக்கும் உத்தி, கருத்துகளைப் பிரதிநிதிக்கும் கதாபாத்திரங்கள் என நிரம்பியிருந்த மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் நுட்பமான புனைவுகளை அவர் அப்போதே முயன்றுள்ளது ஆச்சரியம். இதில் இரைகள் சிறுகதை குறித்து பலகாலமாக மலேசியாவில் பேசப்பட்டாலும் அக்கதையினுள் சிலவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலேயே பேசியுள்ளதுதான் அதை தட்டையாகப் புரிந்துகொள்ள வைத்துள்ளது. விளைவாக, தோட்டத்து நிர்வாகியின் அராஜகத்தால் தன்னை ஒப்புக்கொடுக்க முயன்ற ஒரு பெண்ணின் அபலக்குரலாகவே இக்கதை மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டது. சிவப்பு அடையாள அட்டையால் எத்தனை பேர் இப்படி பாதிக்கப்பட்டனர் என கல்வியாளர்களின் ஆய்வேடுகளில் அங்கலாய்க்க வைத்தது.

சீ.முத்துசாமி நவீனக் கலைஞன். நவீனக்கலைஞன் மொத்த சமூகத்தின் அவலத்தைக்கூற கதாபாத்திரங்களை உருவாக்குவதில்லை. அவலத்திற்குள் இருக்கும் கதாபாத்திரங்கள் வழி வாழ்வின் சிடுக்குகளில் முன்முடிவுகளற்று நுழைந்துப்பார்க்கிறான். விளைவாக சிக்கலின் பன்மைத்தன்மைகளை அடையாளம் காண்கிறான்.

குடிகாரக் கணவனை இழந்தபின் கால் ஊனமான கிருஷ்ணனோடு சேர்ந்து வாழலாம் என முடிவெடுக்கும் நிமிடம் வரை நிர்வாகியால் லட்சுமிக்கு எந்தத் தொந்தரவும் இல்லை என்பதை கவனிக்காமல் வாசிக்கும் ஒருவருக்கு இக்கதை எதையும் திறந்து காட்டாது. இன்னும் சொல்லப்போனால் கிருஷ்ணனுக்கே லட்சுமியின் அருகாமை தேவையாய் இருக்கிறது. பாதுகாப்பு கருதி அவள் கிருஷ்ணனுடன் சேர்ந்து வாழ்வதாய் முடிவெடுத்து அதை அண்ணனிடம் சொல்லி அவ்விசயம் தோட்டத்தில் பரவியப்பின்பே நிர்வாகி அவளைப் படுக்கைக்கு அழைக்கிறான். சம்மதிக்க மறுக்கும் அவளிடம் கிருஷ்ணனின் பெர்மிட்டைப் புதுப்பிக்காமல் அவனை வேலையில் இருந்து நீக்குவதாக மிரட்டுகிறான். லட்சுமியும் சிவப்பு அடையாள அட்டையுடன் பெர்மிட்டுக்காக நிர்வாகியின் தயவை நாடுபவள்தான். அவன் அவளது பெர்மிட்டை புதுப்பிக்காமல் இருக்கப் போவதாக மிரட்டவில்லை. விளைவாக லட்சுமி, கிருஷ்ணனின் வேண்டுகோளை நிராகரித்து நிர்வாகியின் எண்ணத்துக்குச் சம்மதிக்கிறாள் என கதை முடிகிறது.

லட்சுமியின் மனநிலையை சீ.முத்துசாமி மிக நுட்பமாகவே சித்தரித்துள்ளார். அவளுக்கு மரத்துப்போன மனம். ஐந்து குழந்தைகளைக் கொடுத்துவிட்ட குடிகாரக் கணவன். கணவன் மேல் அவளுக்கு உள்ள வெறுப்பும், கணவனின் அருவருப்பான செயல்களை ஒப்பிட்டுப்பார்க்கும் இடமும் அவளுக்கு இன்னொரு துணையைத் தேடுவதிலும் அதற்கு மேலாவது ‘வாழ்வதிலும்’ எந்தத் தடையும் இல்லை என்பதையே காட்டுகிறது. தன்னைவிட பரிதாபமாக மனைவியை இழந்து குழந்தைகளுடன் வாழும் உடல்குறையுள்ள ஒருவனின் வாழ்வில் இணைவதன் மூலம் அவனுக்கு ஏற்படும் இழப்பே அவளை அலைக்கழிக்கிறது. கிருஷ்ணனின் வேண்டுகோளை நிராகரித்து நிர்வாகியைச் சந்திக்க அவள் எழும் அவ்விரவில் அவள் யாராக இருந்தாள் என்பதேயே விசாரிக்கிறது ‘இரைகள்’.

கதை முடிவில் லட்சுமியைப் பற்றி சீ.முத்துசாமி சொல்லாத அந்தரங்கங்கள் மனதில் தொற்றிக்கொள்கின்றன. அவ்விரவுக்குப்பின் அவளுக்குத் துணை வேண்டாம். நிர்வாகியிடம் செய்துக்கொள்ளும் சமரசம் அவளலவில் அருவருப்பானதுதான். ஆனால் அதைக்காட்டிலும் ஒரு அருவருப்பைதான் அவள் தன் கணவன் மூலம் அத்தனைக்காலம் அனுபவித்திருந்தாள். கணவன் மீதான கசந்த மொத்த வாழ்வோடு ஒப்பிடுகையில் நிர்வாகியின் வீட்டை நினைத்து எழுந்த அந்த இரவு அத்தனை கொடுமையானதாக அவளுக்கு இருந்திருக்காது.

இக்கதை, சிவப்பு அடையாள அட்டை, பெர்மிட், தோட்டச்சிக்கல் என எதையும் சொல்லவில்லை என்பதையும் கிருஷ்ணனுக்காகத் தன்னையே இழக்கும் லட்சுமியின் தியாகத்தைப் பேசவில்லை என்பதையும் அறியும் ஒரு வாசகனால் மட்டுமே சொல்லப்படாத இன்னொரு கதைக்குள் நுழைய முடியும். என் வாசிப்பில் இக்கதை லட்சுமி இரையாவதன் சுதந்திரத்தைப் பேசுகிறது என்றே எண்ண வைத்தது. அவள் முன்பு கணவனுக்கு இரையாக இருந்தாள். இரையாவதன் வலி அவளுக்குத் தெரியும். அதைப்பற்றியே அவள் அதிகம் நினைக்கிறாள். ஆனால் அது பழக்கமான வலி. ஒப்புக்கொடுத்துவிட்டு மௌனமாக அனுபவிக்கும் வலி. கிருஷ்ணன் வாழ்வில் நுழையும் தருணம் உண்டாகும் வலி அவளுக்குப் புதியது. அவள் தன் இயல்பை முற்றிலும் இழந்தவளாகிறாள். ஒப்புக்கொடுத்துப் பழகிவிட்ட அவளுக்குப் போராடி ஒன்றை தக்கவைத்தல் இனி சாத்தியமில்லை. அவள் மீண்டும் இரையாகவே நினைக்கிறாள். அதுவே அவளுக்கு சம்மதம். அவள் தொடர்ந்து பல இரவுகள் எழப்போவதின் தொடக்கம்தான் இக்கதையின் முடிவு.

‘கருகல்’ இதே காலக்கட்டத்தில் சீ.முத்துசாமி எழுதிய மற்றுமொரு சிறுகதை. இக்கதை 70களில் எவ்வாறான வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்திருக்கும் என ஊகிக்க முடியவில்லை. அக்கால மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலுடன் முற்றிலும் மாறுபட்ட கதை. இத்தொகுப்பில் உள்ள மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என்றே ‘கருகல்’ கதையைச் சொல்வேன்.

வாழ்வில் எதுகுறித்தும் பெரிய கவலை இல்லாத இன்பம் மட்டுமே பருக தான் பிறந்ததாக நம்பும் ஒரு பெண்ணின் கோலாகலத்துடன் கதை தொடங்குகிறது. கதையில் அவளுக்கும் அம்மாவுக்கும் கனவுகள் வருகின்றன. அவள் நம்பும் வாழ்வைப் போல அவளது கனவுகள் இன்பமயமானவை. தேவதைகளோடு தேவதைகளாக அவள் வருகிறாள். ஆனால் அம்மாவோ கனவு காணும் போதெல்லாம் அலறுகிறாள். அம்மாவின் கனவுகளும் அலறும் காரணங்களும் அவளுக்குப் புரிவதில்லை.  தோட்டத்தில் நடக்கும் எந்தத் திருமணத்திலும் அவள் தனக்கான திருமணத்தையும் கற்பனை செய்கிறாள். அவளையும் பெண்பார்த்து நிச்சயம் முடிவாகியிருந்தது. பந்தல் போட உதவும்போதே அவள் தன் திருமணத்துக்கான பந்தலைக் கற்பனையில் போட்டுப்பார்க்கிறாள். மறுநாள் மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து திருமணம் குறித்த திட்டவட்டமான கட்டளைகள் வரவும் அவளுக்குள் இருக்கும் குதூகலங்கள் இறப்பதைச் சொல்லி கதை முடிகிறது.

இரைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட உணர்வுகளை மேலெழும்பச்செய்யும் கவித்துவமான மொழி. ‘இரைகள்’ சிறுகதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடை. கதையில் வரும் பெண் திருமண அட்டைகளைச் சேமித்து வைக்கிறாள். தோட்டத்தில் எந்தக் கல்யாணம் நடந்தாலும் அது தனக்கான கல்யாணம் போல உற்சாகம்கொள்ளும் அவளது அத்தனை எதிர்ப்பார்ப்புகளும் மாப்பிள்ளை வீட்டில் விதிக்கப்பட்ட கட்டளைகளால் களைகிறது. கல்யாணம் நடக்கும் இடம், கல்யாணப் பத்திரிகை என எதிலும் உரிமையற்ற அவளது கந்தர்வலோகத்து தேவதை வாழ்க்கை அந்த நிமிடம் முதல் அர்த்தமிழக்கிறது. அவள் வாழ்வில் முதன் முதலாக நிதர்சனத்திற்கு வரும் இடத்துடன் கதை முடிகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு அமைத்த கல்யாணப்பந்தல் பிரித்து எடுக்கப்பட்டு, தோரணப் பின்னல்கள் காய்ந்து கருகிவிடும் என்ற உண்மை முதன் முதலாக அவளுக்குத் தோன்றுகிறது. உருவாக்கப்படும் ஒன்று அழியும் என்பது அவளை அச்சம் கொள்ளச் செய்கிறது. பந்தல் போட்ட நிலம், பின்னர் வானம் பார்த்து நிற்கும் என்ற வெறுமையின் தரிசனம் அவளைத் திகைப்புற வைக்கிறது. வாழ்க்கை, அழகு நிறைந்த முழுமை எனும் அவளது கற்பனையில் எழுந்த முதல் கேள்வியால் அன்றிரவு அவளுக்கும் அம்மாவைப் போல அலற வைத்த கனவுகள் சில வரலாம். அவள் அம்மா அத்தனை காலம் அலறியதன் அர்த்தம் அவளுக்குப் புரியலாம். அவள் தன் அம்மாவின் முற்பகுதி. அம்மா அவள் வாழ்வின் பிற்பகுதி.

கனவுகளிலிருந்து நிதர்சனத்தை நோக்கி வாழ்வு எப்படியும் ஒருவரை இழுத்துவந்துவிடும் என்றாலும் மடந்தை பிராயத்தில் அக்கனவுகள் திருமணம் மூலமாக நசுங்குவதைச் சொல்லப்படாத அம்மாவின் இன்னொரு பகுதியின் மூலமாக உணர்த்துவது அபாரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது.

90களுக்குப் பின்பான சீ.முத்துசாமி

சீ.முத்துசாமியைக் கித்தாக்காட்டின் கதைச்சொல்லியாக மட்டும் சுருக்கிப்பார்ப்பது அபத்தம். 90களுக்குப் பின் அவர் எழுதிய சிறுகதைகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், நகரம் சார்ந்த வாழ்க்கை, சிறுநகரங்களின் தெருக்கள் என கதைக்களங்கள் விசாலமடைகின்றன. ஆனால் பெரும்பாலான கதைகளில் அடியோட்டமாக இருப்பது உறவுகளுக்கிடையிலான சிக்கல்கள்தான். குறிப்பாக சீ.முத்துசாமியின் புனைவுகளில் உள்ள கணவன் – மனைவிக்கிடையிலான (ஆண் – பெண்) ஊடாட்டங்களும் அதனுள் இருக்கும் வன்மமும் வன்மத்துக்கு வழங்கப்படும் புதிய தோற்றமும் மீண்டும் மீண்டும் சித்தரிக்கப்படுவதைப் பார்க்கிறேன். தி.ஜானகிராமனின் புனைவுகளில் இவ்வாறான உறவுகளுக்குள் ஊடுறுவியுள்ள சிக்கல்களின் தேடல்களை  வாசித்ததுண்டு.

கல்லறை’யும் ‘இரைகள், கருகல்’ போலவே மீண்டும் ஆண் – பெண் உறவுக்குள் நுணுக்கமான உளவியலை, அடுக்குமாடி குடியிருப்பின் பின்னணியில் சொல்கிறது. சீ.முத்துசாமியின் குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிறுகதை இது.

நூறு கிலோ அசைந்து நகரும் மாமிசம் அவள். பெரும்பாலும் தொலைக்காட்சியின் முன் தனிமையில் கழிக்கும் அவளுக்கு விலகும் ஆடையைச் சரிசெய்ய மனமில்லாதபடிக்கு உடல்மீதான அக்கறையும் அகன்றுள்ளது. அவளுக்கு ஒரே துணையாக இருந்த கருப்புப்பூனையும் ஒருநாள் காணாமல் போகிறது. அவள் வேறு ஒரு பூனையின் துணையை நாடும்போது கணவனிடம் எதிர்ப்புவர அவள் தனது மிரட்டலால் அவனை முடக்கிப்போடுகிறாள்.

கதையில் கணவன் (அல்லது சேர்ந்து வாழ்பவன்) அவளுக்கு அடங்கியிருப்பவனாகவே காட்டப்படுகிறது. அவனால் அவளுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாததுபோலவே அவள் மகிழ்ச்சியாக இருப்பதையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே அவளுக்குத் தெரியாமல் அவளது கருப்புப்பூனையைக் கழுத்தைத் திருகிக் கொல்கிறான். அவளை மேலும் மேலும் தனிமைக்குள் தள்ளுகிறான். அவளை நீங்கி வேறொரு பெண்ணுடன் இணையப்போவதாகத் தொலைவில் நின்றபடி மிரட்டவும் செய்கிறான். மாப்பஸானின் ‘நான் பைத்தியக்காரனா?’ சிறுகதையில் வருபவன் குதிரையை எதற்காகக் கொல்கிறானோ அதற்காகவே இவனும் பூனையைக் கொல்கிறான். தானில்லாத தனிமையை வேறொன்றால் நிரப்பிக்கொள்ளும் பெண்ணின் மகிழ்ச்சி ஆண்களால் தாங்க முடியாததாகிறது. பூனையைக் கொன்றப்பின் அவள் மேலுமொரு பூனையைத் தேடுவது அவனை பதற்றமடைய வைக்கிறது. அவளைவிட்டு நீங்கிச் செல்வதாக மிரட்டுவதன் வழி அவளை அமைதியிழக்க வைக்கிறான்.

கதையில் வரும் ‘அவள்’ ஆக்கிரரோஷமானவள் என துள்ளியமாகவே காட்டுகிறார் சீ.முத்துசாமி. கணவனிடன் சண்டையிட்டு கதவை அறைந்து சாத்தும் அளவுக்கு அவனை அலட்சியப்படுத்தத் தெரிந்தவள். அவள் குடும்பத்தை எதிர்த்தே அவனை நம்பி வந்திருந்தாள். எனவே திரும்பிச்செல்ல முடியாத நிலை. பிரமாண்டமான அவள் உடலை தனது எதிரியாக நினைக்கும் அவளது குமைச்சலில் அசரீரிகள் அவளுக்குள் இருந்து கேட்கின்றன. அது அவளை மேலும் இறுக்கமானவளாக மாற்றுகிறது. அசோகமித்திரனின் ‘விமோசம்’ சிறுகதையில் சரஸ்வதியைத் தரையோடு இழுத்துச்சென்ற கணவன், அவளது மிரட்டலால் அடையும் பதற்றமும் விலகலும் நிகழ கணவனுக்குள் எழுந்த பயமே ‘கல்லறை’ சிறுகதையில் வரும் ஆணின் மனநிலையாக இருக்க வேண்டும் எனத்தோன்றியது.

முற்றிலும் காதல் நீங்கிய ஒருவனுக்கு வேறெதற்காக இல்லாவிட்டாலும் தான் அடக்கிவைக்கவாவது பெண் ஒருத்தி தேவைப்படுகிறாள். பெண் அடங்கிப்போவதாக பாவனைக்காட்டும் வரையே ஆண்களால் அந்த சௌகரியத்தை அசைபோட முடிகிறது. இது ஆணும் பெண்ணும் அறிந்தே நிகழ்த்தும் நாடகம். எல்லா ஆண்களும் பெண் தன் அளவுக்கோ தன்னைக் காட்டிலோ ஆளுமை மிக்கவள் என அறிந்தே வைத்துள்ளனர். யானையின் கால்களைச் சின்னஞ்சிறிய சங்கிலியாய் கட்டிப்போட்டு பாகனும் யானையும் நடத்தும் எளிய நாடகம் அது. அதை மீறிச்செல்லும் கனம் இருவரும் இணைந்திருப்பது சாத்தியமே இல்லாமலாகிறது.

சமூகம் ஏற்பாடு செய்துவைத்துள்ள மானுட உறவுகளின் இயல்புகளை மீறி நடக்கும் செயல்களையே சீ.முத்துசாமியின் புனைவுகள் உள்சென்று சொல்ல முயல்கின்றன. தன் அப்பாவை வெறுக்கும் அம்மாவின் மனநிலையை அதுவரை அறிந்துகொள்ள முடியாத மகன், நண்பனின் மனைவி மூலமாக அவ்வுணர்வை உள்வாங்கும் உணர்வை ‘அம்மா வந்தாள்’ சொல்கிறது. இதேபோல ‘வெளி’ சிறுகதையிலும் ஒரு மகன் வருகிறான். அப்பா அம்மாவுக்கான தகறாறுகளைப் பார்த்து வளர்ந்த மகன் அவன். அம்மா இறந்தப்பின் அவனுக்குள் ஏற்படும் மன உணர்வுகளைக் கதை பேசிச்செல்கிறது. அப்பாவினால் அம்மா அனுபவித்தக் கொடுமைகள் விலாவாரியாகப் பேசப்படுகின்றன. அவன் அம்மாவின் இறப்புக்குப் பின் திறந்த வெளி அவனுக்கு பெரும் இருளாகிறது. அது உக்கிரமான இருள்.  அம்மாவின் அவதிகளை அந்த உக்கிர வெளியுடன் அவன் மனம் இணைத்துக்கொள்கிறது. இவ்விரண்டுமே தொகுப்பில் உள்ள சுமாரான சிறுகதைகள். பெற்றோருக்கு மத்தியில் நடக்கும் பிளவுகளை குழப்பத்துடன் மட்டுமே கவனிக்கும் மகனின் மனதில் விரியும் ரணமான சுவடுகளை மட்டுமே இக்கதைகள் சொல்கின்றன. சுவடுகளில் இருந்து குறிப்பிட்ட ஒரு சிக்கலைச் சொல்ல மிகுதியான காட்சிகளின் வர்ணனைகளும் விலாவாரியான சூழல் விளங்கங்களும் வாசிப்புச் சோர்வையே உண்டு செய்கிறது. ஆனால் இதேபோல காட்சி வர்ணனைகளே ‘வழித்துணை, கல்லறை, வனத்தின் குரல்’ ஆகியவற்றுக்கு வலுவும் சேர்க்கின்றன.

‘இருளுள் அலையும் குரல்கள்’ குறுநாவல் தொகுப்பில் ரெ.கார்த்திகேசு கதையைவிட சுற்றுச்சூழலை அதிகம் வர்ணிக்கும் முத்துசாமி குறித்து சொல்லுமிடத்தில் மற்றவர்கள் கதைக்குப் பின்னணியாகச் செடியை வைத்தால் முத்துசாமி காட்டையே வைக்கிறார் என்கிறார். அது சரிதான். அவரது சில கதைகளில் இந்தக் காட்சிப்படுத்துதல் கதையின் தீவிரத்தை பாதிக்கிறது. ஆனால் ‘கல்லறை’ சிறுகதையில் சீ.முத்துசாமி காட்சிப்படுத்துதலே கதைக்கு வலு. மன உளைச்சலில் மூழ்கியிருப்பவர்கள் அதிகமாக உண்பதையும் உடல் பருத்துக்கிடப்பதையும் அறையின் சித்தரிப்பில் துள்ளியமாகச் சித்தரிக்கிறார் சீ.முத்துசாமி.  மன உளைச்சல் கொண்டவளில் அறை எப்படி இருக்கும் என்ற காட்சி அவர் சொற்களில் விரிகிறது. முத்துசாமி வர்ணனைகள் மொத்தமும் அவர் சிறுகதையில் உலாவவிடும் இன்னொரு கதாபாத்திரம்தான். அந்த அரூப கதாபாத்திரத்தின் விவரிப்பின் மூலமே நிஜ கதாபாத்திரங்களை வாசகன் அறிந்து கொள்கிறான். அந்தப்பாத்திரங்களின் மனதினுள் நுழைந்து பார்க்கும் வரை இந்த வர்ணனைகள் துணை செய்கின்றன.

அதேபோல ‘வனத்தின் குரல்’. சீ.முத்துசாமின் மொழிவிளையாட்டுகள் அதிகம் உள்ளlasara_2176216h சிறுகதை. நேர்க்காணல் ஒன்றில் சீ.முத்துசாமி தனது இளமைகாலத்தில் லா.ச.ராமாமிர்தத்தின் ‘அபிதா’ நாவலை வாசிக்கச் சிரமப்பட்ட அனுவத்தைக் கூறுவதிலிருந்தே அவரது மொழிநடை உருகொண்ட தருணத்தை என்னால் உள்வாங்க முடிந்தது. சின்ன வயதில் நான் வேட்டைக்குச் செல்வதுண்டு. அதில் உடும்பு வேட்டை சோர்வளிப்பது. காட்டுப்பன்றி வேட்டையே சவாலானது. என்னை வேட்டைக்கு அழைத்துச்செல்லும் தாத்தாவின் சாகசத்தை காட்டுப்பன்றி வேட்டையிலேயே நான் வியந்து பார்ப்பதுண்டு. உடும்பை லஸ்டிக்கில் அடித்தே வீழ்த்தும் அவர், காட்டுப்பன்றிக்குச் செய்யும் முன் ஏற்பாடுகள் ஆர்வத்தைக் கிளறுபவை. எனக்கு உடும்பு இறைச்சியின் மேல்தான் ஈர்ப்பு அதிகம். சரியாகப் பிரட்டினால் அதன் சுவையே அலாதி. ஆனால் வளர்ந்து இளைஞனானப்பின் நான் நண்பர்களுடன் காட்டுப்பன்றி வேட்டைக்குச் செல்லவே அதிகம் ஆர்வம் காட்டினேன். அதுதான் எனது மொத்த திறமைக்கும் சவால் விடுவதாக இருந்தது. அதுதான் காடுகளில் கண்மூடித்தனமாக என்னை ஓட வைத்தது. படைப்பாளிகளும் ஒருவகையில் வேட்டைக்காரர்தான். ஜெயகாந்தன் தொடங்கி தன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் பலர் இருந்தும் அவர் லா.ச.ராவின் மொழியை தனதாக்கிக் கொள்கிறார். இளமையில் அதுவே அவரை வியப்பில் ஆழ்த்திய உச்ச சாகசம். அவருக்கு அம்மொழி சுவைக்காததாகக் கூட இருக்கலாம். வேட்டைக்குச் சுவை ஒரு பொருட்டல்ல.

சீ.முத்துசாமி ல.ச.ராவிடமிருந்து எடுத்துக்கொண்டது மொழிநடையை மட்டுமே. ஒன்றைச் சொல்லவந்து அதன் நுனியைப் பற்றிக்கொண்டே மற்றுமொரு கையால் சுற்றியிருப்பதை விலாவாரியாகச் சிலந்திவலைபோல பிண்ணிக்காட்டும் சூட்சுமத்தை முத்துசாமி அவரிடமிருந்து எடுத்துக்கொண்டிருந்தாலும் எதார்த்தத்திலிருந்து விலகிச்செல்லும் ல.ச.ராவின் பாணி அவர் கதைகளில் காணக்கிடைக்கவில்லை.  சீ.முத்துசாமி நிலத்தில் நடந்து கைகளை வானில் விசுறுகிறார். ல.ச.ரா வானில் பறந்தபடி கரங்களை பூமியில் தடவுகிறார். அதனாலோ என்னவோ படிமங்கள் வழியாக லா.ச.ராவிடம் வெளிபடும் தத்துவப்பார்வை சீ.முத்துசாமியின் சிறுகதைகளில் இல்லை. வாழ்வை மேல் சென்று பார்க்கும் தன்மையும் குறைவாகவே வெளிப்படுகிறது. உதாரணமாக ‘கவச குண்டலம்’.

கவச குண்டலம்’ சிறுகதையும் கணவன் மனைவுக்கு இடையிலான மெல்லிய இடைவெளியையே பேசுகிறது. மின்சாரம் தாக்கி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவன் படுத்தப்படுக்கையில் கிடக்கிறான். முத்துசாமியின் மொழியில் ‘ஆணுக்குறிய அர்த்தம் இழந்து’ இருக்கிறான். குடும்பம் பொருளாதாரச் சிக்கலில் மூழ்குகிறது. மனைவி வேலைக்குச் செல்லத் தொடங்கியது முதல் இருவருக்கும் இடையில் உண்டாகும் இடைவெளியும் மனைவிக்கு வேலையிடத்தில் உருவாகும் மற்றுமொரு ஆணுடனான தொடர்பும் என கதை முடிகிறது. மிகச்சிறந்த சிறுகதையாக வந்திருக்க வேண்டிய கரு. அறைக்குள் அடிக்கடி அவனுடன் இருக்கும் மனைவி அவ்வப்போது வந்துபோகும் காட்சிகள் வலிமை மிக்கவை. ஆனால் அவை எல்லாமே பெண் ஒருத்தி தனக்கான வாழ்வை தேடிக்கொள்ளும் இடத்தை அதிர்ச்சி மதிப்பீடாக வைப்பதில் பலவீனமாகின்றன. ஒரு சிறுகதை யாரின் தரப்பாக இருந்து விரிகிறது என்பது அடிப்படையானது. அதைத்தேர்ந்தெடுக்க படைப்பாளிக்கு எல்லா சுதந்திரங்களும் இருந்தாலும் இக்கதை பெண்ணின் பார்வையில் இருந்து விரிந்திருந்தால் அவள் விலகிச்செல்லும் தருணங்கள் அசாத்திய வாசிப்பனுவத்தைக் கொடுத்திருக்கலாம்.

சீ.முத்துசாமியின் மொழி ஒரு வலுவான ஆயுதம்தான். ஆனால் தங்க வாளினால் செம்மறியாட்டின் உரோமத்தைச் சிரைக்க முயன்றால் மரணமே எஞ்சும். அங்கத உணர்வை உருவாக்க குறைந்த சொற்களே தேவைப்படுகின்றன. அதிகச் சொற்களைப் பயன்படுத்தி செய்யும் கேலியைவிட குறைவான சொற்களைக் கூறி இடைவெளிவிடும் பகடி கூர்மையானது. சில சமயம் அதிகக் காயம் ஏற்படுத்துவதும் அதுதான். பகடியை விளக்கத்தொடங்கும்போது அது வெறும் கருத்துகளாகிவிடுகின்றன. அறிவை வெளிக்காட்டாத அ.முத்துலிங்கம் உருவாக்கும் வெகுளித்தனமான கதாபாத்திரகளின் தொணியும் கதைக்குள் இயல்பாக அங்கத உணர்வைக் கொண்டுவந்துவிடுகிறது. சீ.முத்துசாமியின் மொழிப்பிரயோகம் அங்கத உணர்வுக்கு மிகவும் தள்ளி இருப்பது. ‘குரல், கம்போங் முனீஸ்வரா’ போன்ற சிறுகதைகளில் அவர் செய்யும் பகடிகள் அனைத்தும் நேரடிச் சாடல்களாக மாறிவிடுகின்றன. விளைவாக அவை ஒரு நல்ல சிறுகதையாக உருமாற முடியாமல் போகின்றன.

அம்மா வந்தாள், தூண்டில் மீன்கள், உறவு’ போன்ற சிறுகதைகளில் முத்துசாமி மீண்டும் மீண்டும் ஒரு கதைக்கூறல் உத்தியைச் செய்துப்பார்க்கிறார். ஓர் இறந்தகால நினைவை விவரித்துக்கொண்டே வந்து கொஞ்ச நேரம் நிறுத்தி பின்னர் நிகழ்காலத்தில் வேறொரு சம்பவத்தில் அடையும் உளவெழுச்சியில், இறந்தகாலத்தின் மங்கலான உணர்வின் மீது சடாரென நீர் அள்ளித்தெளிக்கிறார். நீர் வடியும் வரை முத்துசாமி காத்திருப்பதில்லை. தெறிப்பு நடந்த அடுத்த கணம் கதையை முடிக்கிறார். இரு வேறு காலத்திலும் நடந்து முடிந்திருக்கும் சம்பவங்களை இணைத்துப்பார்ப்பது வாசகன் வேலை.

தூண்டில் மீன்கள், உறவு ஆகிய இரு கதைகளுக்குமே பொதுவான ஒரு தன்மை உண்டு. முதலில் அவை வாசகனின் கற்பனைக்குச் சவால் விடுகின்றன. ‘தூண்டில் மீன்களில்’ நதியும் ‘உறவு’ சிறுகதையில் ஒரு கிணறும் படிமமாக வருகிறது. அவை நினைவுகளை மீட்பதாய் உள்ளன. முன்பு எங்கோ விட்டுவந்த ஓர் உணர்வை அதன் கவிச்சி மாறாமல் நினைவுறுத்தக்கூடியதாய் உள்ளன. இரண்டு சிறுகதையிலுமே முத்துசாமி ஒரு கைவிளக்கை எடுத்து வைத்துக்கொண்டு ஆங்காங்கு வெளிச்சம் காட்டுகிறார். வாசகன் மனம் அந்த விளக்கு வட்டத்தில் அகப்பட்டக் காட்சிகளைச் சேகரித்து தொகுத்து உருவகப்படுத்த வேண்டும். அவ்வுருவகத்திலிருந்து கதையின் ஆன்மாவை அடைய வேண்டும்.

sartre-viduthalaiyin-paathaigal_FrontImage_316‘அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனும்’ சிறுகதையை வாசித்தபோது சீ.முத்துசாமி தன் சிறுகதைகளில் காட்டும் ஆண்–பெண் உறவுகள் அனைத்துமே காளிங்க நர்த்தனம் என்றே தோன்றியது. காளிங்கன் எனும் பாம்பைக் கொன்று அதன் மேலே நர்த்தனமாடி வரும் கிருஷ்ணனின் காட்சி சட்டென  மனதில் வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கத் தொடங்கியது. உண்மையின் அது ஓர் ஆழமான படிமம். ழான் – போல் சார்தரின் (Jean-Paul Sartre) ‘மீள முடியுமா?’ நாடகத்தை வாசித்தப்பின் உண்டாகும் கேள்விகளே முத்துசாமி காட்டும் உறவுகளின் அடிநாதம். அவர் கதையின் இணையர்கள் அனைவருமே மனதிற்குள் ஆழமாக ‘நரகம் என்பது மற்றவர்கள்தான்’ என சார்த்தரின் புகழ்ப்பெற்ற வரியைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரின் ஒருவர் பாம்பு. பாம்பைக் கொல்லாமல் அதன் தலையில் ஏறி நர்த்தனமாடும் இன்னொருவர் எஞ்சிய வாழ்வை இழுத்துப்பிடித்து ஓட்டுகிறார். வேறு எங்கு இருந்தாலும் அந்தப் பாம்பு தீண்டிவிடும். அதனால் தலைமேல் நிற்கிறார். நிற்கக்கூட இல்லை; ஆடுகிறார். அது ஓர் ஆனந்தமான ஆட்டம். உலகம் முழுவது ஒருவர் இன்னொருவரைப் பொறுத்துக்கொண்டு ஆடும் ஆட்டம்.

சீ.மு எனும் கலைஞன்

சீ.முத்துசாமி தன் புனைவுகள் மூலம் மலேசியத் தமிழுக்கு பெரும் கொடை செய்தவராகிறார். ஏறக்குறைய முற்றிலும் பயன்பாட்டில் இருந்து விலகிவிட்ட பல மலேசியத் தமிழ் சொற்களை அவரது புனைவுகளில் இருந்தே வருங்காலம் சேகரிக்க இயலும். புறவயமான வாழ்வை மட்டுமே பேசிக்கொண்டிருந்த மலேசிய இலக்கிய உலகத்தில் அகவயமாக பேசத்தொடங்கிய முதல் கலைஞனாக மலேசியச் சூழலில் முத்துசாமியைப் பார்க்கிறேன். ஆனால் அவரது அகச்சித்தரிப்புகள் முழுக்கவும் இருண்மையில் மூழ்கியுள்ளன. வாழ்வு குறித்த எவ்வித நம்பிக்கையும் அவர் எழுத்தில் தட்டுப்படவில்லை. மானுடத்தின் மீது கவிந்திருக்கும் கசப்பின், அவநம்பிக்கையில் வெளிபாடுகளாகவே அவை உருபெற்றுள்ளன. மானுடத்தின் உச்சங்களைப் பேசும் படைப்பாளிகளைப் போல கசப்புகளைப் பேசும் படைப்பாளிகளும் உலக இலக்கியப்போக்கில் இருந்து வருகின்றனர். முத்துசாமி இரண்டாம் ரகம். அவர் உருவாக்கும் புற உலகம் அகத்தை அறிவதற்கான ஒரு துணை கதாமாந்தரே. அவரது ஆக்கங்கள் மற்றவர்கள் நமக்கு எப்படி நரகமாக மாறிவிடுகிறார்கள் எனும் கேள்விக்கான விடையைத் தேடிச்செல்வதாகவே கணிக்கிறேன். அவர் கதைகளில் அதீதமாக மனிதர்களை நேசிப்பவர்கள் தனிமையில் இருப்பவர்களாகவும் சக மனிதர்களோடு இருப்பவர்கள் கசப்பை உமிழ்பவர்களாகவும் வந்துபோகிறார்கள். அடிப்படையில் அவர்கள் தனியர்கள். அந்தத் தனியர்கள் மூலம் இந்த உலகம் ஏன் தனியர்களால் ஆனது என முத்துசாமி சிறுகதைகள் விசாரணை செய்கின்றன. பிறந்தவுடன் செத்துப்போன இரட்டைப் பிள்ளைகளைகளின் உடலில் தனது அடையாளம் இருப்பதைப் புதைக்கும் முன் நெடுநேரம் ஆராய்ந்து பிணத்தைக் கட்டியணைத்து அழும் தகப்பனைப்போல (அம்மாவின் கொடிக்கயிறும்) சக மனிதன் இல்லாதபோது மட்டும் பேரன்பொழுக அழும் மனித மனதின் சூட்சுமத்தைப் பேசும் அவரது சிறுகதை மலேசிய நவீன இலக்கியத்தில் தனித்துவமானவை.

1 கருத்து for “சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...