டிலீப் டிடியே

பெயர்: டிலீப்  டிடியேடிடியே1
பிறப்பு: நோர்மண்டி
தொழில்: பல்கலைக்கழக மாணவன்

அப்பா பெயர்: டிடியே பிரான்சுவா
தொழில்: மருத்துவர்
அம்மா பெயர்: மைதிலி தம்பிப்பிள்ளை

                                                                                        ***

ஓர் இளவேனிற்காலச் செக்கல் பொழுதில் நோர்மண்டி மத்திய தொடருந்து  நிலையத்தில் திலீப்  டிடியே-யை இறக்கி விட்டு அந்த தொடரூந்து தனது பயணத்தைக் தொடர்ந்தது. டிலீப்  பாரிஸ் சோர்பேண் பல்கலைக்கழகத்தில் அரசியல் பீடத்தில் ஒரு வருடத்தை நிறைவு செய்து விடுமுறைக்காக நோர்மண்டி வந்து கொண்டிருந்தான். டிலீப் அப்பாவைப்போன்று நெடுநெடுவென்று உயரமும் பச்சைக்கண்களும் சுருள்சுருளான கரிய தலைமுடியும் அம்மாவைப்போன்று விளைந்த நெற்கதிரின்  நிறமும் அம்மாவையும் அப்பாவையும் கலந்து வைத்த முகமும் என்று பார்போரைக் கிறங்கடிக்கும் அழகனாக இருந்தான். தொடருந்து நிலையத்தை விட்டு வெளியேறிய பொழுது அங்கு அவனது அம்மா மைதிலி காருடன் நின்றிருந்தாள். “மம்மோ …” என்று கத்தியபடி அம்மாவைக்  கட்டிப்பிடித்து கொஞ்சினான். அவளின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.ஒருவருடமாக மகனைக்காணாது அவள் ஏங்கிப்போயிருந்தாள். என்னதான் அவள் ஓர் பிரெஞ் வாழ்கை முறைக்கு மாறியிருந்தாலும் எச்சசொச்சங்களான ஊர் பழக்கவழக்கங்கள் பல அவளை விட்டுச் செல்லவில்லை. காரில் ஏறியதும் டிலீப் ஓடிக்கொண்டிருந்த இளைய ராஜாவை மாற்றி ஷெரி எப் எம் 80 பாடல்களுக்கு றேடியோவைத் திருப்பினான். றேடியோவில் ஜோன் ஜக் கோல்ட்மன் உருகிக்கொண்டிருந்தார்.மொழியினால் பாடல்களின் அர்த்தங்கள் மாறினாலும் அதன் உள்ளடக்கம் ஒன்றாகவே இருந்ததினால்  மைதிலிக்கு சிரிப்பாக இருந்தது. மகனைக்கண்டதும் மைதிலிக்குத் தனது பழைய நினைவுகள் மனதில் பாடலுடன் சேர்ந்து ஓடத்தொடங்கின.

                                                                                             ***
தம்பிப்பிள்ளை வசுமதி தம்பதிகள் பாரிசுக்கு புலம்பெயர்ந்த பின்னர் பிறந்தவள்தான் இந்த மைதிலி. அவர்களுக்கு ஒரே மகளாக வந்து வாய்த்ததால் அவள் துடியாட்டமாகவே வளர்ந்தாள். அவளது எடுப்பான மூக்கு, உள்ளேயும் இல்லாது ஆக வெளியே இல்லாதவையுமான கண்கள், சிரிக்கும் பொழுது கன்னத்தில் விழுகின்ற குழி, விளைந்த நெற்கதிரின்  நிறம், அளவான மார்பகங்கள், அதற்கேற்றால் போல் பின்புறங்கள், மிகவும் அடர்த்தியான நெளிந்த நீண்ட கூந்தல்  என்று அவள் அழகியாக அந்தப்பல்கலைக்கழகத்தில் உலாவர முடிந்தது. ஒருநாள் மாலை வகுப்புகள் முடிந்து தனது மடிக்கணணியை நோண்டிக்கொண்டிருந்த மைதிலிக்கு, டிடியே பிரான்சுவா ஓர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தான்.

அன்பின் மைதிலிக்கு ,

எங்கள் வகுப்பிற்கு நீ புதிய மாணவியாக வந்த பொழுது உனது அழகும் உனது குடும்பப்பாங்கான அணுகுமுறைகளும் என்னை ஈர்த்தன. எனது அம்மாவை சிறுவயதில் இழந்த எனக்கு என்னதான் அப்பா எனது தேவைகளை நிறைவேற்றினாலும் அவரால் எனது அம்மாவின் இடத்தை நிரப்ப முடியவில்லை. நீ விரும்பினால் டேட்டிங் செய்வோம் எம்மைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். உன் பதில் கண்டு மிகுதி தொடர்கின்றேன்.

அன்பின் டிடியே பிரான்சுவா

மைதிலியின் பிறெஞ்  பள்ளிக்கூட வாழ்வில் சந்தித்த மாணவ  மாணவிகள் எல்லோருமே எதோ ஒருவகையில் ஒவ்வாமையாக இருந்திருக்கின்றார்கள். அன்பையும் மற்றவர்களை மதிக்கின்ற பண்புகளையும் இரத்தத்தில் ஊட்டி வளர்த்த குடும்பத்தில் இருந்து வந்த அவளுக்கு, அவர்களது இரட்டை வசன கதைகளும் ,கட்டற்ற செக்ஸ் வேட்கைகளும் அருவருப்பாக இருந்தன. அவர்களுக்கும் கவலைகள் அன்புகள் இருந்தன ஆனால் அவைகள் நீர்குமிழிகள் போல இருந்தன. அவர்கள் காதலர்களை மூக்குத்துடைக்கும் ரிஸ்யூ பேப்பர் போல் பாவித்துக்கொண்டிருந்தார்கள். இதனால் மைதிலி அவர்களுக்கிடையில் ஓர் சிறிய இடைவெளியை உருவாக்கிக்கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமை மாலை பார்ட்டிகளுக்கு செல்வதானாலும் அம்மாவின் அனுமதியுடனேயே சென்று வந்தாள். பிரான்சுவாவின் நாகரீகமான மின்னஞ்சல் அவளுக்கு அவன் மேல் ஓர் மதிப்பை ஏற்படுத்தினாலும் அவள் அவன் விடயத்தில் விட்டுப் பிடிக்கவே விரும்பினாள். சரியாக இரண்டு கிழமைகளுக்குப் பின்னர் பிரான்சுவாவின் மின்னஞ்சலுக்குப் பதில் எழுதினாள்.

அந்த வெள்ளிக்கிழமை மாலையில் பிரான்சுவா ஓர் மலர்க்கொத்துடன் அவளை சந்திக்க வந்தான். அவளுக்கு அது ஓர் சாதாரண சந்திப்பாக இருந்தாலும் பிரான்சுவா சிறிது பதட்டமாக இருந்தான். கபேயும் தேநீரும் ஓடர் செய்து விட்டு கிடைத்த இடைவெளியில் மைதிலியே கதையைத் தொடங்கினாள்.

“எந்த விதத்தில் என்னை அறிய விரும்புகின்றாய் பிரான்சுவா? என்னை சந்திப்பதால் உனக்கு என்ன லாபம்?

“நான் ஓர் பாரம்பரியமான பிறெஞ் குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது வருங்கால வாழ்க்கை  பிக்கல் பிடுங்கல் இல்லாது தெளிந்த நீரோடை போல் அமைதியாக இருக்க விரும்புகின்றேன். ஓர் ஆசியக்குடும்பத்தில் இருந்து வந்த நீ சம்மதித்தால் உன்னை எனது வாழ்க்கை துணையாக்க விரும்புகின்றேன் மைதிலி .”

“ஆசியக்குடும்பத்தில் இருந்து வந்த பெண்கள் எல்லோரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நீ எந்த வகையில் தீர்மானித்தாய் ?”

“உனக்கு தெரியுமோ தெரியவில்லை நான் ஆசியக்குடும்ப வாழ்வியல் தொடர்பான நூல்களை லைபிரரியில் எடுத்து வாசிக்கின்றேன். குறிப்பாக இந்திய குடும்ப அமைப்பு தொடர்பாக வாசிக்கின்றேன். கோடைகால விடுமுறையில் இந்தியா சென்று ஓர் கூட்டுக்குடும்பத்துடன்

தங்கி இருந்து அவர்களது வாழ்வை பார்க்க விரும்புகின்றேன் “.

டிடியே“இங்கே பார் பிரான்சுவா….. திருமணம் என்பது ஓர் வீடு கட்டுவதற்கு ஒப்பானது அதற்கு பொறுமையும் அதிநிதானங்களும் வேண்டும்.ஒருவர்பலம் பலவீனங்கள் இரண்டையும் அங்கீகரிக்க வேண்டும்.அதிக காதல்கள் ஒருவரின் பலமும் அதன் வழியே வந்த சாகசங்களுமே முன்நிலைப்படுத்தப்படுகின்றன. இதற்கும் அப்பால் ஓர் வாழ்க்கை உண்டு. அங்கு பலவீனங்கள் வெளியாகும் பொழுது ஒருவரை ஒருவரால் ஜீரணிக்க முடியவில்லை அவரா இவர் என்றும் இவளா அவள் என்றும் கோர்ட்டுவாசலில் வந்து நிற்பார்கள். எனக்கு இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் நம்பிக்கை இல்லை. என்னை உருவாக்க தெரிந்த அம்மா அப்பாவுக்கு எனது வாழ்க்கை எப்படியாக இருக்க வேண்டும் என்பது தெரியாதா என்ன ? அம்மா அப்பாவின் அனுமதி இல்லாமல் நான் யாரையும் பார்க்க மாட்டேன். வீணாக கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாதே. நாம் இப்பொழுது செய்ய வேண்டியது படித்து ஓர் நல்ல நிலைக்கு வருவதே. அதை செய்வோம். ஒருவேளை வரும்காலத்தில் எமக்கிடையில் பரஸ்பரம் புரிந்துணர்வுகள் வருமானால் பார்க்கலாம்”.

“இல்லை உனது கருத்தை நான் மதிக்கின்றேன். ஆனால் எமக்காக அம்மா அப்பா சாப்பிட முடியுமா என்ன? அதுபோல் தான் திருமணமும். எமக்கான வாழ்க்கையை நாங்கள்தான் தெரிவு செய்ய வேண்டும். தனியாக முடிவெடுக்கின்ற பக்குவத்தை நாங்கள் வளர்க்க வேண்டும்”.

“உனது பண்பையும் நல்ல குணத்தையும் மதிக்கின்றேன். ஆனால் இது மட்டும் திருமணத்துக்கு போதாது. இப்பொழுது என்னால் எதுவும் முடிவாக சொல்ல முடியாது”.

” உனக்காக காத்திருக்கின்றேன் வடிவாக யோசி”.

“பார்க்கலாம்.”

எந்த முடிவுக்கும் வராது அந்த டேட்டிங் முடிந்து போனது. மைதிலி எதுவும் நடக்காதது போலவே அவனிடம் பழகிக்கொண்டாள். ஒருமுறை அவளுடைய பிறந்தநாளுக்கு படித்த மாணவர்கள் எல்லோரும் வீட்டிற்கு வந்திருந்தனர். பிரான்சுவாவும் வந்திருந்தான். மைதிலி அவனை அப்பா அம்மாவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள்.அன்றும் பிரான்சுவா ஓர் பரிட்சையில் தோற்றி முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவன் போன்ற நிலையிலேயே இருந்தான்.வந்த எல்லோரும் அவளுக்குப் பரிசில்களை கொடுத்துச் சென்றனர். எல்லோரும் சென்ற பின்னர் நண்பர்கள் தந்த பரிசில்களை உடைத்துப் பார்த்தாள். அதில் பிரான்சுவாவின் பரிசும் இருந்தது. ஓர் சிறிய பெட்டியில் அழகான கைக்கடிகாரமும் ஓர் சிறிய கடிதமும் இருந்தது.அதில் ” உனது முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருக்கும் டிடியே பிரான்சுவா ” என்று எழுதியிருந்தான். மைதிலிக்கு அவனது கடிதம் மனதில் அலைக்கழிப்பை ஏற்படுத்தியது. தான் பிரான்சுவாவின் நல்ல மனத்தைக் காயப்படுத்துகின்றேனோ என்று தனக்குள் மருகினாள்.ஆனாலும் அவளால் பிரான்சுவாவையிட்டு ஓர் முடிவுக்கு வர முடியவில்லை.அதற்குக் காரணங்கள் இல்லாமலும் இல்லை. வெள்ளையர்களது திருமண வாழ்வு ஓர் சீரில்லாது பாம்பு தோலை மாற்றியது போன்று அடிக்கடி மாறுவதும் அவளது பயத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனாலும்  குற்ற உணர்ச்சி அவளை வாட்டி எடுத்தது. இறுதியில் ஓர் முடிவுக்கு வந்தவளாக உறங்கிப்போனாள்.

ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குப் பின்பாக பிரான்சுவாவின் மின்னஞ்சல் மீண்டும் அவளின் கணனிக்கு வந்திருந்தது. “தான் தந்த அன்பளிப்பு அவளுக்குப் பிடித்திருந்ததா என்பதுபற்றியும் தமது எதிர்காலத்தைப் பற்றி அவள் என்ன முடிவு செய்திருக்கின்றாள்” என்றும் அந்த மின்னஞ்சல் வினவியிருந்தது.

“எவ்வளவுதான் நான் உன்னை மறக்க நினைத்தாலும் உனது நினைவுகளே என்னைச்சுற்றுகின்றன. எனது வாழ்வு உன்னுடன் தான் என்று இருந்தால் அதைத்தடுக்க யாரால்த்தான் முடியும்? உனது அப்பாவுடன் வந்து எனது அப்பா அம்மாவுடன் இது பற்றி கதை”

என்று மைதிலி அந்த மின்னஞ்சலுக்குப்  பதில் எழுதினாள். ஓர் கிழமை முடிவில் பிரான்சுவா தனது தந்தையுடன் வந்து அவளின் அப்பா அம்மாவிடம் தனது விருப்பத்தை தெரிவித்தான்.தம்பிப்பிள்ளைக்கும் வசுமதிக்கும் தங்களை வாழ வைத்த நாட்டிற்குத் தங்கள் மகளை வாழ அனுமதிப்பதில் பெரிய முரண்களைக் கொண்டிருக்கவில்லை. அத்துடன் புலம்பெயர்  தமிழர் சமூகத்தில் தங்கள் மகளை திருமணம் செய்து கொடுப்பதில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள் அவர்களை பயமுறுத்திக் கொண்டிருந்தன.  அம்மா அப்பா இலகுவாக அவனை ஏற்றுக்கொள்வார்கள் என்று அவளால் நம்ப முடியாமல் இருந்தது. ஓர் நல்ல நாளில் மைதிலியின் நண்பிகளும் பிரான்சுவாவின் நண்பர்களும் ஒன்று சேர நோர்மண்டி நகரசபையில் சட்டப்படி கலியாண வாழ்வில் ஒன்றிணைந்தார்கள்.அன்றிலிருந்து இருவரும் புதியதோர் உலகத்தில் நுழைந்தார்கள்.அந்த உலகம் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. அங்கு கொஞ்சல்களும் கெஞ்சல்களும் மிஞ்சல்களும் முயங்கல்களுமே நிறைந்திருந்தன . அதன் விளைச்சலாக டிலீப் “மம்மோ …” என்ற அலறலுடன் வந்து குதித்தான்.

                                                                                     ***

சீரான ஓட்டத்தில் வந்து கொண்டிருந்த கார் ரெட் சிக்னலுக்காகக் குலுங்கி நின்றபொழுது மைதிலி சுயநினைவுக்கு வந்தாள் . அருகே டிலீப், ஜாக் பிராதல் -இன் காதல் பாட்டில் சொக்கிப்போயிருந்தான்.ஆனால் அவனது முகம் வழமைக்கு மாறாக மலர்ச்சியின்றி வாடிப்போயிருந்தது. அவனது மனதை ஏதோ ஒன்று கடுமையாக ஆட்டிப்படைப்பதை அவளால் ஊகிக்க முடிந்தது.அவனாக சொல்லட்டும் என்று விட்டு விட்டாள்.”மம்மோ … நான் நிக்கிற நாளிலை எனக்கு  எல்லா குறிக்கும் (கறி) கனக்க எண்ணை போட்டு சமைச்சு தருவியா ?” அவனின் கேள்வி மைதிலிக்கு சிரிப்பை வரவழைத்தது. ” முந்தி எண்ணை வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நிப்பியே இப்ப என்ன புதிசாய் …? ” , “இல்லை மம்மோ … இனி நான் நல்ல குண்டாய் வரவேணும்” என்று கண்களில் கண்ணீர் தெறிக்க இடைவெட்டினான். அவனது கண்களில் கண்ணிரைப் பார்த்ததும் துடித்துப் போய் விட்டாள் மைதிலி. ஒன்றும் பேசாது வீட்டுக் கராஜில் காரை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தார்கள். டிலீப் நேரடியாகத் தனது அறைக்குப் போனான். சிறிது நேரத்தில் உடைமாற்றிக்கொண்டு வந்த குசினிக்குள் நுழைந்து தனக்கு வேண்டிய எக்ஸ்பிராஸோவை போடுவதற்குக் கைப்பிடியில்  கோப்பித்தூளை அளவாக எடுத்து நெருக்கமாக அடைத்து மெஷினில் நுழைத்து விட்டு பட்டனை அமத்தி விட்டான்.”மம்மோ… பப்பா எங்கை ?” அவர் கிளினிக்குக்கு போட்டார். நீ இண்டைக்கு வாறதாலை கெதியாய் வாறதாய் சொன்னார்”. “மம்மோ… எனக்கு இண்டைக்கு பிரியாணியும் முத்தோன் குறியும் (மட்டின் கறி) கனக்க எண்ணை விட்டு  செய்து தருவியா? ” என்று மைதிலியின் கழுத்தில் தொங்கியவாறு கேட்டான்.

ஆசையாக மகன் கேட்கின்றானே என்று அவளும் குசினியில் பம்பரமானாள். இரவு  போல் பிரான்சுவா வீட்டிற்கு வந்தார் . “பப்பா…” என்று ஓடிவந்து அவரைக் கட்டிக்கொண்டான் டிலீப். உடைமாற்றிக்கொண்டு மூவருமாக குசினியில் இருந்து தேநீருடன் சமையல் வேலையில் ஈடுபட்டார்கள். டிலீப்  மீண்டும் எக்ஸ்பிராஸோ-வுக்கு மாறினான். பிரான்சுவா அவனின் படிப்பு தொடர்பாகவும் ஹொஸ்டல் வாழ்கை பற்றியும் அக்கறையாக விசாரித்தார்.டிலீப் இருவருக்கும் பகுதி நேர வேலையால் உழைத்த காசில் தான் வாங்கிய சேர்ட்டையும் கவுனையும் கொடுத்தான். இருவருக்கும் சந்தோசம் முகத்தில் அள்ளித் தெறித்தது. “பப்பா நீ படிக்கிற நேரம் உனக்கு கனக்க குப்பின் ( பெண் நண்பிகள் ) கள் இருந்தார்களா “? என்று இடக்கு முடக்காக ஓர் கேள்வியைக் கேட்டான். அவனது கேள்வியால் சிறிது தடுமாறிய பிரான்சுவா மைதிலியை கை காட்டினார். ” மம்மோ … உனக்கு …?” “அடிப்பன் உனக்கு வாய் கூடிபோச்சுது” என்ற மைதிலியின் மனதில்  டிலீப் ஏதோ ஒன்றைப் பற்றிக் கதைக்கத் தடுமாறுகின்றான் என்பது மட்டும் அவளிற்குப் புரிந்தது. ” ஷெரி ( அன்பே ) உங்களுக்கு தெரியுமா டிலீப் குண்டாக வரப்போகின்றானாம் என்னவென்று கேளுங்கள் ” என்று பிரான்சுவாவின் பக்கம் பந்தை நகர்த்தி விட்டாள். ஏனடா குண்டாய் வரப்போறாய் ? இப்ப நீ நல்ல வடிவாய்த்தானே இருக்கிறாய்?”பப்பா இந்த வடிவுதான் எனக்கு பிரச்சனையாய் இருக்கு. நான் தனிய ஒரு இடத்திற்கும் போகேலாமல் இருக்கு. பெட்டையள் டேட்டிங்-க்கு வரச்சொல்லி கரைச்சல் தாறாளவை”. மைதிலியின் மனம் துணுக்குற்றது. “என்னை கலியாணம் செய்ய சொல்லி எல்லா பெட்டையளும் கரைச்சல் படுத்துறாளவை. என்னாலை ஒழுங்காய் படிக்கேலாமல் இருக்கு . நான் என்ரை பிரெண்ட்சோடை  ஒரு இடத்துக்கு சுதந்திரமாய் போகேலாமல் இருக்கு. என்னை சுத்திச்சுத்தி வந்து கலியாணம் கட்டச்சொல்லி ஒரே அரையாண்டமாய் இருக்கிறாளவை. பப்பா…. இவளவையாலை எனக்கு ஒரே மோறல் ரோச்சராய் இருக்கு.  என்னை ஒரு செக்ஸ் ரோய் மாதிரி பாக்கிறாளவை. அண்டைக்கு ஒருத்தி, நான் எந்த விதத்தில வடிவு இல்லை, உன்னாலை எனக்கு ஒரு குழந்தை வேணும்  எண்டு கேக்கிறாள் .எனக்கு பெரிய அவமானமாய் போச்சுது. நான் படுற பாட்டைப்பாத்து  ஒரு சைக்கியரிஸ்ட்டை என்னை காட்ட சொல்லி அறை நண்பன் ரொபேர்ட் சொன்னான் . நானும்  ஒரு சைக்கியரிஸ்ட்டை போய் காட்டினன். பிரச்சனையளை வடிவாய் கேட்டுப்போட்டு, நீ நல்ல குண்டாய் வந்தால் உன்னை ஒருத்தியும் திரும்பியும் பாக்க மாட்டாளவை எண்டு அவர்தான் இந்த ஐடியாவை தந்தார்.” என்று சொன்ன டிலீப்பின் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. பிரச்சனையின் தீவிரத்தை பிரான்சுவாவால் இப்பொழுது உணர முடிந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாது பல கதைகள் சொல்லி அவனைத் தேற்றினார்.

டிலீப் நோர்மண்டி வந்து ஒரு கிழமையாகப் போகின்றது. மைதிலியும் அவனது விருப்பப்படியே எண்ணை அதிகம் சேர்த்து பார்த்துப் பார்த்து சமையல் செய்து கொடுத்தாள் . ஆனால் அவனின் உடலில் பெரிய மாற்றங்களை காண முடியவில்லை அதே தோற்றத்துடன் அழகனாகவே வளைய வந்தான். குமரிகளின் தொல்லைகள் கூடியதே ஒழிய குறைந்தபாடாகத் தெரியவில்லை. ஒருநாள் மாலை அவன் லைபிறரிக்கு  செல்லும்பொழுது சிறியவயதில் அவனுடன் ஒன்றாகப் படித்த சில்வியாவை சந்திக்க நேரிட்டது.

“ஹேய்  டிலீப் எப்ப வந்தனி “?

“ஒருகிழமை”.

“வாறியா ரெண்டு பியர் குடிப்பம் ?கன நாள் உன்னோடை கதைச்சு”.

“நான் இப்ப லைபிறரிக்கு போறன். என்னம் ஒருநாள் பாப்பம்”.

“ஒரு பத்து நிமிடம்தான் வா கதைப்போம்”.

இருவரும் அருகே இருந்த கபே பாரினுள் நுழைந்தார்கள். பியருக்கு சொல்லி விட்டு வீதியோரம் போடப்பட்டிருந்த கதிரைகளில் இருந்தார்கள்.சில்வியா டிலீப் விட இரண்டு வயது மூத்தவள். நெடுநெடுவென்ற உயரமும் சதைப்பிடிப்பான உடலும் அகன்ற பெரிய விழிகளும் பந்தயக்குதிரைகள் போல் திமிர்த்த முன்புறமும் பின்புறமும் என்று அழகு அவளிடம் வஞ்சமில்லாது கொட்டிக்கிடந்தது. அவளுக்குப் பின்னால் திரியாத ஆண்களே இல்லை.சில்வியா இப்பொழுது மருத்துவ பீடத்தை நிறைவு செய்து விட்டு நோர்மண்டியிலேயே  இன்ரேர்ன் செய்கின்றாள். பரிசாரகர் கொண்டு வந்து வைத்த பியரை சுவைத்தவாறே சில்வியா வார்த்தைகளால் சுற்றிவளைக்காது நேரடியாகவே அவனைப்பார்த்து ,

“டிலீப் நாங்கள் கலியாணம் செய்தால் என்ன “? இவளுமா … என்று அவன் அதிர்சியானான்.

“எனக்கு இப்ப கலியாணம் செய்யிற ஐடியா இல்லை”.

“இந்த வயசிலை செய்யாமல் எப்ப கலியாணம் செய்யிறது? எனக்கு உன்னாலை ஒரு குழந்தை வேணுமடா. நான் உனக்காத்தான் வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கிறன்”.

“உனக்கு குழந்தை வேணுமெண்டால் அதுக்கு நானா கிடைச்சன்? உன்ரை வடிவுக்கு எத்தினை பேர் உனக்கு குழந்தை தருவங்கள். நீ படிச்சிட்டாய். என்னை படிக்க விடு சில்வியா”.

“எனக்கு உன்னாலை தான் குழந்தை வேணும். கலியாணம் கட்டினால் அது உன்னோடைதான். இல்லாட்டில் கலியாணமே கட்டமாட்டன்”.

டிலீப் விலுக்கென்று எழுந்து அவளைப்பாராது விரைவாக நடந்தான். “நான் என்னத்திலையடா குறைஞ்சனான்” என்றவாறே  சில்வியா விடாது அவனைப் பின்தொடர்ந்தாள். அவனது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத பொழுது வந்த ஆத்திரத்தில், ” நீ ஒரு பெதே…- யடா ( கே ). அதாலை தான் எங்களைப்போலை பெட்டையளை பாக்காமல் திரியிறாய். உன்னை விடமாட்டன்”. என்று சில்வியா அவனைப் பார்த்துக் கத்தினாள்.

லைபிறரிக்கு வந்த அவனுக்கு நெஞ்சு படபடப்பாக இருந்தது. அவனையறியாது அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவள் சொல்லிய “பெதே” தான் அவன் காதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. “அழகனாகப் பிறந்தது எனது குற்றமா? ஏன் இந்தப்பெண்கள் காமப்பேய்களாக அலைகின்றார்கள்? செக்ஸ் – ஐ விட இவர்களுக்கு வாழ்க்கையில் வேறு ஒன்றுமே இல்லையா? அம்மாவுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம். அம்மா ஓர் வெள்ளையனை கலியாணம் செய்தாலும் அவளது வாழ்கையில் செக்ஸை ஓர் பகுதியாகப் பார்க்க, இவர்கள் செக்ஸை வாழ்கையாகவல்லவா பார்க்கின்றார்கள். தற்கொலை செய்து கொள்ளலாமா? இவர்களுக்கு பயந்து நான் தற்கொலை செய்து கொள்வதா? அம்மா அப்பா போல் நான் நன்றாகப் படித்து ஓர் நல்ல நிலைக்கு வரவேண்டும்” என்று அவனது மனம் பலவாறு தாளம் தப்பி ஓடிக்கொண்டிருந்தது.  லைபிறரியில் அவனால் மனம் ஒன்றி இருக்க முடியவில்லை. பொழுதும் வேறு நன்றாக இருட்டி விட்டது போக்குவரத்து அடங்குவதற்குள் அவன் வீட்டிற்கு போக வேண்டும் என்ற அவசரத்தில் அந்த வீதியால் நடந்து கொண்டிருந்தான்.

                                                                                   ***

மெல்லிய குளிரும் பனிப்புகாரும்  சுற்றாடலைப் போர்த்தியிருந்தது. பனிப்புகாரினுடாக வீதியில் இருந்த விளக்குகள் வெளிச்சத்தைத் தரப் போராடிக்கொண்டிருந்தன. தூரத்தே இருந்த சந்தியில்  ஓர் உருவம் நின்றிருந்தது. அது நிதானமாக இல்லாது பரபரப்பாக இருந்தது. அதில் ஒருவிதமான வெறித்தனமும் எதையோ தேடுகின்ற தவிப்பும் அதிகமாக இருந்தது. டிலீப் அந்த உருவத்தை நெருங்கிய பொழுது , அந்த உருவம் மிகவும் பதட்டமாக இருந்தது. அதன் வாயில் இருந்து கனபிஸ் ( கஞ்சா ) நாற்றம் குடலைப்  புரட்டியது.

“ஃபிறேயர் ( சகோதரா ) உன்னிடம் சிகரெட் இருக்கின்றதா”?

“இல்லை நான் புகைப்பதில்லை ஃபிறேயர்”.

“நீ பொய் சொல்கின்றாய்”.

“இல்லை நான் உண்மையைத்தான் சொல்கின்றேன்” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அந்த உருவம் பின்பக்க கால்சட்டைப் பொக்கற்ருக்குள் இருந்த பிஸ்டலால் மூன்று தோட்டாக்களை அவனைப்பார்த்து வெளியேற்றி விட்டு திரும்பிப் பாராது ஓடியது. சற்றும் எதிர்பாராத டிலீப் நிலைகுலைந்து நிலத்தில் சாய்ந்தான். அவன் கண்கள் முன் அம்மாவின் முகம் ஒடித்தெறித்தது. அவனாக இருந்த அவன் இப்பொழுது அதுவாக மாறியிருந்தான். அவனில் இருந்து வெளியேறிய இரத்தம் அந்தக்குளிரில் உறையத்தொடங்கியது. உடலில் இருந்து சூடு மெதுமெதுவாகக் குறையத்தொடங்கியது. அந்த வீதியால் வந்த காவல்துறைக்கு டிலீப் மீது தோட்டாக்களைத் தீர்த்தவனைப் பிடிப்பது பெரியவேலையாக இருக்கவில்லை. அவனது உடலத்தை அருகே இருந்த வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டு பிரான்சுவாக்கு தகவல் சொல்லியதன் பின்னர் வைத்தியசாலையிலேயே இரு காவலர்களைக் காவலுக்கு வைத்தது காவற்துறை.

                                                                                            ***

டொக்ரர் சில்வியாவுக்கு அன்று இரவுப்பணியாக இருந்தது.தனது இரவு நடனத்துக்கு வேட்டு வைத்த அந்த இரவுப்பணியை திட்டியவாறு வைத்தியசாலைக்குள் நுழைந்தாள்.அவசரப்பிரிவில் இருந்த நோயாளிகளை பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது டிலீப்பின் கொலை செய்தி அவளை வந்தடைந்தது.தனக்குக் கிடைக்காதவன் பிணமாகிப் போனானே என்ற கவலை அவளை வாட்டினாலும் அவளது தொழில்முறை அதை பத்துடன் பதினொன்றாக எடுத்தது. ஏறத்தாழ இரவு ஒரு மணிக்குப் பின்னர் அவசரப்பிரிவில் சிறிது சனம்குறைந்த வேளையில் தன்னுடன் பணியாற்றிய அனாவிடமும் நேர்ஸ் ஜூலியாவிடமும் தான் ரவுண்ட்ஸ் போய் விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு டொக்ரர் சில்வியா அந்த இடத்தை விட்டு அகன்றாள். அவள் சென்ற பின்னர் அனாவும் ஜூலியாவும் சில்வியாவின் ஆண் நண்பர்கள் பற்றி சிரித்துக் கதைத்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தின் பின்னர் அவசரப்பிரிவு மீண்டும் பரபரப்பாகியது. அனாவால் தனியாக அவசரப்பிரிவைச் சமாளிக்க முடியவில்லை. சில்வியாவைப் பார்த்து வரும்படி ஜூலியாவை அனுப்பினாள். ஜூலியா எங்கு தேடியும் சில்வியாவை கண்டுபிடிக்கமுடியவில்லை. சில்வியா எங்கு போனாள் என்று யோசித்தவாறே ஜூலியா அவசரப்பிரிவுக்கு திரும்பி வரும் வேளையில் நீண்ட கொரிடோரின் ஓரத்தில் பிரேத பரிசோதனை செய்து பாதுகாக்கும் காம்பரா இருந்தது. ஜூலி  ஏதோ ஓர் அருட்டல் வந்தவளாக காம்பராவின் கதவை திறந்து பார்த்த பொழுது அவளால் வாய் பேசமுடியவில்லை . அங்கே சில்வியா  தன்நிலை  மறந்தவோர் பரவசநிலையில்  ஒருகை  அவளது   எடுப்பான  மார்புகளை அழைந்து கொண்டும் மறுகை நிர்வாணியாக இருந்த டிலீப் டிடியேயின்  இடுப்புக்கு கீழே அழைந்து கொண்டுமிருந்தன.

பின்குறிப்பு :
மம்மோ : அம்மா
பப்பா : அப்பா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...