வழித்துணை

வழித்துணை1விடியலை, அகண்ட வாசலில் நின்று வரவேற்ற கருக்கல்.

மென் பூச்சாய், இருளுள் படர்ந்து விரியும் ஒளி இழைகளின் ஊடாய், மெல்லச் சிவக்கும் அடிவானம்.

நீண்டுகிடக்கும் மென் இருளடர்ந்த சாலை.

பகல்நேர வெயிலின் உக்கிரமோ ஆர்ப்பரிப்போ குழப்பமோ வாகனப் புகை நெடியோ ஜன சந்தடியோ ஏதுமில்லாமல் – ஒரு அகண்டு விரிந்த கோயில் பிரகாரத்தின் நுழைவாயிலில் தரிசனம் வேண்டி, தன்னத்தனியாய் நிற்பதான பிரம்மை.

சாலையைத் தொட்டு, அடர்ந்து தொங்கும் பனிமூட்டம். அதில் மிதந்து அலையும், வரிசை பிடித்து நிற்கும், தெருவோர விளக்குகளிலிருந்து வழிந்து படரும், மஞ்சள் சிவப்பொளி.

அசாதாரண அழகும் குளுமையும் நிறைந்து வழியும், அன்றைய பொழுதின் முகப்பு ஓவியம் அது.

பகலெல்லாம் வாகனங்களின் அசுரப்பாய்ச்சலைச் சுமந்து, களைத்து, நிம்மதியாய்  இருளைப் போர்த்திப் படுத்துத் தூங்கும் மலைப்பாம்பாய், நீண்டுகிடக்கும் சாலையில், அதனைச் சங்கடப்படுத்தாத மென் அடிகளாய் வைத்து நடைபோவது பழக்கமாயிருந்தது.

விளக்குக் கம்பத்தினடியில் நின்று, கடிகாரத்தைப் பார்க்க, சரியாக அரைமணி கடந்திருந்தது, வீட்டைப்பூட்டிப் புறப்பட்டு, அவளும் போன நாளிலிருந்து, சூரிய அஸ்தமனம் என்பது பகையாளியின் வருகையாகிப் போயிருந்தது.

ஒளியுள் மெல்ல வலை பின்னும் இருளின் இழைகளை, நடுக்கத்துடன் பார்த்து மருண்டது. மேற்கே, அடிவானத்தில் தூங்கப்போகும் சூரியனை, ஏக்கத்துடன் நோட்டமிட்டது.

இருட் போர்வைக்குள், சகல ஜீவராசிகளும் துணையின் ஸ்பரிச சுகத்தில் ஒடுங்க, விரிந்து வியாபிக்கும் நிசப்த உலகத்துள் – உயிர்பெற்று உலா வரும் தனிமையின் கூரிய நகரங்களின் பிறாண்டலில் – வெடிப்புற்று, ரத்தம் சொட்டும் எனது இரவுகள்.

மேலே  சுழலும் காற்றாடியின் விர்ர் ஒலி மட்டுமே துணையிருக்க – சுவர்க் கோழிகளின் திடுக்கிடவைக்கும் அலறலில் கண்கள் இருளைத் துழாவ – விடியும்வரை, நான்கு சுவர்களுள் நிரம்பி வழியும் வெறுமைக்குள் அமிழ்ந்துகிடப்பது நரகம்.

கருக்கலில், ஒரு நடை அவசியமாகிப்போனது.

எதிரில், மாரியம்மன் கோயில் வளைவு, நெருங்கி வந்திருந்தது.

கோயிலுக்கு, புதிதாய் ஓர் அர்ச்சகர் வந்திருப்பதாகய் யாரோ சொன்னதாய் ஞாபகம். ஒருநாள் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வர வேண்டுமென்று பலமுறை நினைத்ததோடு, நின்று கிடக்கிறது.

பழைய பூசாரி, ஊருக்குப் போய் ஒரு மாதமிருக்கும். வருவதும்  போவதுமாக இருந்தவர். ஒருநாள், இனி வருவதில்லை என்று சொன்னதைக் கேட்டபோது சங்கடமாகியது. வழியில், எதிர்பாராத மனிதர்களோடு மன ஒட்டுதலும் உறவும், பின் அது தானாய் உதிர்தலும், பயண வழி நெடுக.

ஐந்தடி உயரத்தில், வெள்ளை முழுக்கைச் சட்டை, வேட்டி, நெற்றியில் பட்டைத் திருநீரும், சந்தனப் பொட்டுக்கு மேல் குங்குமப் பொட்டுமாக, வலது கன்னத் தாடையில், பெரிதாய் வளர்ந்த பரு ஒன்று. பஞ்சாங்கத்தைப் புரட்டும், அவரின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே, தனித்துத் தொங்கும் சதைப் பந்தைப் பார்த்த எவருக்கும், பிறகு என்றுமே அது நினைவிலிருக்கும்.

வயதாக – கண்ணில் படும் எல்லாமே, முன் பதிவான வேறு ஏதோ ஒரு காட்சியின் நீட்சியாகவோ, உணர்வின் மறு வார்ப்பாகவோ நிழலாட்டம் காட்டி – அந்தக் கணத்தை நெகிழச்செய்வது, புதிய அனுபவம்.

ஒவ்வொன்றின் மன ஸ்பரிசத்திலும், எது ஆழ அமிழ, அங்கே உறங்கிக்கிடக்கும் வேறு ஏதோ ஒரு நினைவுச்சரம், மேலே வந்து திணறடிக்கிறது.

இதே வளைவைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் தவறாமல் எதிரில் வந்து நிற்கும், பால்ய கால நண்பன் ஒருவன்போல.

வயதாக, நட்பின் வட்டம், இலையுதிர் கால  இலைகளாய் ஒவ்வொன்றாய் உதிர – மன வெளிக்குள் கவியும் வெறுமை, இட்டு நிரப்ப இயலாதது.

கோயில் கோபுர வாசலில், ஒத்தை நியான் லைட், கோபுரச் சிலைகள் மேல் கவிந்து நிற்கிறது.

விரவிய வெளிச்சத்தில், போனமாதம் தீமிதிக்கு நடந்த அதன் வண்ணப்பூச்சியின் மினுக்கம் கவர்ந்தது.

பக்கமிருந்த புறாக் கூண்டிலிருந்து, இதற்குள் தொடங்கி விட்டிருந்தது சலசலப்பு. ஒத்தைப் புறா ஒன்று, கோபுரத்தை வட்டமடித்துப் பறக்க, துணைக்கு வந்து சேர்ந்து கொண்டது இன்னொரு புறா.

சின்னக் குடிலில் ரோட்டைப் பார்த்து, கையில் அரிவாளோடு, தனிமையில் உட்கார்ந்திருக்கிறார் முனீஸ்வரர்.

சின்ன உருவில்  அவரைப் பார்க்க வினோதமாய் இருந்தது.

வீரத்திற்கும் கோபத்திற்கும் பேர்ப்போன சாமி.

அவர் குறித்த பிம்பத்திற்கு, இந்தச் சின்ன உருவம் எந்த வகையிலும் நியாயம்வழித்துணை கற்பிக்கவில்லை என்பதை, ஏனோ, எவரும் நினைத்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை.

அந்தப் பிம்பத்திற்கு ஏற்ற உருவாய் – தோட்டத்தில், பழைய மாரியம்மன் கோயிலுக்கு மேற்கில், அகண்டு விரிந்த அரசமரத்தடியில், இன்னமும் உருளும் விழிகளோடும், துடிக்கும் மீசையுடன், கையில் அரிவாள் சகிதம் ஆஜானுபாகுவாய் இன்றுவரை நின்றிருக்கும், அவரை மட்டுமே மனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

சாலையோர வலது பக்கம் நெடுக, மலாய்க் கம்பங்கள்.

வீடுகளில், விளக்கு எரியத் தொடங்கியிருந்தது. எருமை ஒன்றை வழிநடத்திப் போனது ஓர் உருவம். வயல்வெளி தூர்ந்து கிடந்தது.

அங்கிருந்து புறப்பட்டு வந்த, ஏதோ பறவையின், விடாது தொடரும் ஒத்தை சோகக்குரல்.

அடுத்து வந்த தோட்டத் தொழிலாளர் சங்கக் கட்டடம். அரை இருளில், வர்ணப் பூச்சு மங்கிப் பாழடைந்த தோற்றத்தில், தனிமையில் நிற்கிறது.

நுழைவாயிலில் படிந்த மங்கிய விளக்கொளி.

நாற்காலியில், ஒருக்களித்து உட்கார்ந்து, அரைத் தூக்கத்தில், சுருட்டுப் பிடித்துக்கொண்டிருக்கும் இரவுக் காவலாளி.

வளர்ந்த நான்கு பிள்ளைகளில் ஒன்றுமே உதவாமல் போக, சொந்தக் கையை ஊன்றிக் கரணம் போடும் குருசாமி அண்ணன். அவர் காலடியில், வழக்கமாய்ச் சுருண்டு கிடக்கும் மொட்டை வால் நாய். ஆள் நடமாட்டம் உணர்ந்து, எழுந்து நின்று சத்தம் போட்டு, வேலி பார்த்து பாய்ந்துவர உஷாராகும் குருசாமி அண்ணன்.

ஒருகாலத்தில், மிகுந்த உயிர்ப்போடு இயங்கிய இடம் – தினமும், பொழுது விடிய, ஆளுக்கொரு பிரச்சனையோடு வந்து, வாசலில் நின்ற தோட்டத்து ஜனங்கள்.

அது ஒரு காலம்.

தோட்டங்கள் உருக்குலைய, அதைச் சார்ந்த அனைத்தும் சோபையிழந்து போயின.

இதே சாலையில், மூச்சுத் திணற, ஆயிரம் முனகல் சத்தம் போட்ட அப்பாவின் பழைய இரும்பு சைக்கிளின் பெடலை மிதித்து, சுப்ரமணியர் கோயில் கூத்து மேடையிலிருந்த சரஸ்வதி பள்ளிக்குப் போன, காலம் ஒன்றிருந்தது.

கண்ணை மூடி, சைக்கிள் விட்ட காலம் அது.

இத்தனை நெரிசல் இல்லை அப்போது.

எப்போதேனும் ஒரு வாகனம் – சாலையைக் கடக்க இப்போதுபோல், பதற்றத்துடன் பொறுமையைச் சோதிக்கும் அளவு காத்திருக்க வேண்டியதில்லை.

எதிலும் ஒரு நிதானகதி – சைக்கிளை விட்டிறங்கி, உருட்டிக்கொண்டு, சாவகாசமாய் யாருடனாவது பேசியபடி சாலையைக் கடந்து மறுபக்கம் போகலாம்.

அப்போதெல்லாம், இந்தச் சாலை சுமந்த பாரமும் சொற்பமே.

எப்போதேனும் ஒரு பழைய ஆக்ஸ்போர்ட் காரோ, ஒரு லாரியோ, ஒரு மோட்டார் சைக்கிளோ, பேட்சா வண்டியோ, மணிச்சத்தம் சிணுங்க சைக்கிளோ போவதைப் பார்த்து கள்ளுக்கடை மேட்டிலிருந்த வாதாமர நிழலிலிருந்து யாரோ ஒருவர் உற்சாகமாய்க் குரல் கொடுக்க, திரும்பிப் பார்த்து, கையாட்டிப் போவதை, சாவகாசமாய், ரோட்டோர ஒட்டுகடை வாசலில் நின்று பார்க்கலாம்.

“டேய்… அங்க பார்டா… நம்ம ரத்தினம் டிரைவர் காடி போவுது…” என்று எவரும்  சுலபமாய், சாலை வழிப்போகும் வாகனத்தை அடையாளம் கண்டு சொல்ல முடிந்த  காலம் அது.

நடேசன் பெரிய வாத்தியாரின் சைக்கிள் மோட்டாரை, அத்தனை சுலபத்தில் அந்தக் கால ஜாலான் கோலகெட்டில் வாசிகளால் மறந்திருக்க முடியாது.

நோஞ்சான் வண்டி. இன்றைக்கு நிறுத்தால், இருபது  கிலோதான் தேறும். ஆனால் அதிலும் ஒரு விசேஷம் இருந்தது. கையில் காசுள்ளபோது பெட்ரோல் நிரப்பி, நாலு உதைவிட்டால், தானாக ஓடும். கையில், சில்லறை தட்டுபாடு வந்துவிடும் சமயத்தில் கவலையே படவேண்டாம். மோட்டாரைச் சைக்கிளாக்கி மிதித்துப் போகலாம்.

வழக்கமாய், கூத்துக் கொட்டகை மரத்தடிதான் அவரது வண்டி நிறுத்துமிடம் – விளாம்பழ மரம்.

இரவில் உதிர்ந்த விளாம்பழங்கள் தரையில் சிதறிக்கிடக்கும். தினமும் பத்துப் பதினைந்துக்கும் குறையாமல் – மேல் ஓடு உடைந்து, மஞ்சள் பிசின் கசியக் கிடக்கும்.

கோயில் பிரகாரத்துக்கு வலப்பக்கமாய், சீனன் கடைக்குப் பின்புறம் ஒன்றும், எதிர்ப்புறம் ஒன்றும், கோயில் கூத்து மேடையை அணைந்து, பூசாரி குடியிருப்புக்கும் சேர்ந்து நிழல் கொடுத்து நிற்கும் இன்னொன்று.

இன்றும்கூட, கோயில் வட்டத்துள் காலடி வைக்கும் பொழுதெல்லாம், அவை கண்ணில் படுவதுண்டு.

சின்ன வித்தியாசம், காலத்தின் ஓட்டத்தில், கோயிலின் சூழல் மாறிக்கிடந்தது.

கூத்துக் கொட்டகை, அர்ச்சகர் வீடு, அதனை ஒட்டிய விளாம்பழ மரம், அரச மரத்தடி பிள்ளையார், புறாக்கூண்டு இருந்த இடங்களை, கல்யாண மண்டபம் பிடித்துக் கொண்டிருந்தது.

வாழ்ந்த இடம் பறிபோன தவிப்போடு, கோயில் கோபுர வாசலை வட்டமடிக்கும் புறாக்கள்.

கூத்துக்கொட்டகை மட்டும் பத்திரமாய் இடம்பெயர்ந்திருந்தது. கோயில் சுற்றுச்சுவருக்கு வெளியே ‘சுப்ரமணிய தேவஸ்தான அரங்கம்’ என்ற புதிய நாமகரணம் சூடி ஒதுங்கி நிற்கிறது.

ஆனாலும், இன்னமும் எந்த மாற்றமும் காணாமல், சர்வ வல்லமையோடு ஆடாமல், அசையாமல், சுற்றுச்சுவருக்கு வெளியே, உப்பு ஆற்றை ஒட்டி உட்கார்ந்திருந்தது பன்றி அறுப்புக் கொட்டகை.

தினமும் பொழுது சாய்வதற்குள், பத்துப் பன்றிகளாவது வந்திறங்கி, கொட்டிலில் அடைபடும்.

இதே கருக்கலில், அந்தக் காலம்போல் இன்றும் காற்றில் கலந்து கோயிலை வலம் வருகிறது, கழுத்தில் ஆழ இறங்கிய ஈட்டியில், ரத்தம் பீறிடச் சாய்ந்துகிடக்கும், அவற்றின் உயிர்போகும் வீறிடல்.

பொழுது விடிய, பாளம் பாளமாய்ப் பிளவுற்று, ரத்தம் சொட்ட, கோயில் கடைசிவரிசை ஒன்றில் தொங்கும் எல்லாம்.

அதற்கு எதிர்ப்புறக் கடை வரிசையில்தான் முத்துராமன் பிள்ளை இருந்தார் முப்பது வருடங்களுக்கு முன்பு.

அறடி உயரம், கூரிய மூக்கு, ஒட்ட வெட்டிய நரைத்த தலைமுடி, அரைக்கை ‘பகோடா சாப்’ பனியன், வேட்டி.

மளிகைச் சாமான்களின் தனித்த மணங்களுக்கு மத்தியில், அகண்ட மேசைக்குப் பின்னால் உட்கார்ந்து, மூக்கு கண்ணாடியை மூக்கின் நுனிக்கு நகர்த்தி, அவர் கணக்கு வழக்குப் பார்த்த அழகே தனி.

நடேசன் வாத்தியாருக்கு, அவர் வீட்டம்மா மேல் அலாதி பிரியம் என்பதும், அவருக்காகத் தினமும் கூட மோட்டாரை மிதுத்து வரத் தயங்கமாட்டார் என்பதும், விபரம் தெரிய வந்த நாட்களில் உணர்ந்த உண்மை.

அந்த உணர்தலின் தொடர்ச்சியாய், அந்த வயதிற்கே உரிய கற்பனா மயக்கத்தில், வகுப்பில் முன்வரிசையில் எப்போதும் இரட்டைப் பின்னலும் ஒத்தை ரோஜாப்பூவுமாய், கலகல சிரிப்பில் – இராக் கனவுகளில் சொர்க்கம் அழைத்துப்போன அவளை, ஜோடி சேர்த்துப் பொருத்தம் பார்த்துக்கொண்டது மனது.

அவளே என் மனைவியாய் வரும் தருணத்தில், நடேசன் வாத்தியாரின் விசுவாசத்தோடு, அவளோட வாழ வேண்டும் என்ற சங்கல்பமும் ஏற்பட்டது.

நடேசன் வாத்தியார், நல்ல தாட்டியம் – முன் துருத்தி அசையும் பெரிய தொப்பை – மேல் பாகத்தின் அதீத சுமை தாளாமல், வளைந்து அகட்டி நகரும் கால்கள்.

எப்போது பார்த்தாலும், அதே வெள்ளைச் சீருடை. தொப்பைக்கு ஈடாய் அகண்ட வாய் முழுக்கால் சிலுவாரும், அரைக்கைச் சட்டையும்.

அவர் வீட்டம்மாவின் கரிசனத்தின் சாட்சியாய் இருக்கும் அவரது உடைகள்.

கெட்டியான கிழங்கு மாவுக் கஞ்சியில் நனைத்துக் காயப்போட்ட துணிகள், இரும்புப் பெட்டியில் கரிபோட்டு எரியவிட்டுச் சூடேற, மிகப் பக்குவமாய்த் தண்ணீர் தெளித்துப் போட்ட இஸ்திரி. நாள் முழுக்க, அதன் மொடமொடப்புக் கலையாமல் விறைப்புடன் இருக்கும். பக்கத்தில் நிற்க, புது மணம் மனசை அள்ளும், சரியாகக் காலை ஏழு மணிக்கு, கம்போங் ராஜாவிலிருக்கும் தனது விட்டை விட்டுப் புறப்படும் அவரது பயணம், இதே வழியாகத்தான் கோயில் நோக்கிப் போகும்.

அவரும் போய்ச் சேர்ந்துவிட்டிருந்தார்.

அவருடன் வேலைபார்த்த டெனியல் அம்மா, பரிபூரண சொந்தத்திற்கும் அதிராத குரலுக்கும் சொந்தக்காரர். வெள்ளைப் புடவைக்காரர் வேறு ரகம். அதட்டலும் உருட்டலும், பயமுறுத்தும். தர்மலிங்கம் சார், பெரிய வாத்தியாரின் வலது கை.

நடை, இதற்குள் உடலின் இறுக்கத்தை, கொஞ்சம் தளர்த்தி, மனசையும் இலேசாக்கிவிட்டது போலிருந்தது.

ரோட்டோரம், வரிசையாய் இருளுள் மினுங்கும் ஆங்சானா மரங்கள்.

இன்னமும் உடல் முதிர்ந்திராத சின்ன வயது மரத்தின் கிளைகள். முந்தாநாள் பேய்மழைக் காற்று, தன் கைவரிசையில் கிளைகளை முறித்துப் போட்டுப் போயிருந்தது. முறிந்த கிளைகளில் ஒன்றிரண்டு இன்னமும் வழிமறித்து, படுத்துக் கிடந்தன. அடர்த்தி பச்சை இலைகளில் மினுக்கியது, இரவின் கண்ணீர்த் துளிகள். தரையில் சிந்திய மஞ்சள் பூக்கள்.

மரக்கிளைகளில் இரைச்சலிடும் காட்டு மைனாக்கள்.

குரல் மட்டும் காதில் விழ, இலைகளின் சலசலப்பின் பின்னே மறைந்த உடல்கள்.

ஒரு காலத்தில், பெரிய பஸ் ஸ்டாண்ட் பாலத்திற்கு இந்தப் பக்கமே, அதன் குடியிருப்பு. முடிவெட்டும் கடைகளுக்கு நிழல் பரப்பி நின்ற வாதா மரங்களில் மட்டும் கேட்ட ஆரவாரம்.

பொழுது விடிந்து ஒரு பொழுதும் – அந்தி சாயும் மயக்கத்தில் ஒரு பொழுதும்- மரத்திண்ணையில் கும்பல்கூடி அரட்டையடிக்கும் வம்பர்கள் வர்க்கம்.

இப்போது நின்று அண்ணாந்து பார்க்க இரைச்சல் மட்டுமே.

கிளைகளை விலக்கி எட்டிப் பார்க்கும் நிலா.

அகண்ட வெளியை, தனது ஏகபோக உரிமையாக்கிய பால் வெள்ளம். மேற்கு முகமாய் நிரைந்திருக்கும் அதன் துணையாய் மினுங்கும் விண்மீன் கூட்டம்.

தைப் பூசத்தன்று பார்த்த நிலா அல்ல இது. அது பூரணம். நிறைமாத கர்ப்பிணியின் செழுமை.

மோட்டார் ஒன்று பறந்துவந்து “அண்ணே….” என்று குரலைக் காற்றில் கலந்து வளைவில் மறைந்துபோகிறது.

வழக்கமாய்க் கடந்துபோகும், அதே பழைய சுஸூகி.

சில சமயம், இதே வேளையில், விளக்கில்லாமல், நிழல் உருவமாய்க் குரல் கொடுத்துப் போனதும் உண்டு.

வீடு வீடாக அதிகாலை இருளில் பேப்பர் போடும் ரகு.

ஏதோ சின்ன அரசாங்க வேலை.

வீட்டோடு இருக்கும் மனைவியையும், இதற்குள் வருஷம் ஒன்றாய் அடுத்தடுத்து வந்துவிட்ட நாலு குழந்தைகளையும், ஒத்தை ஜீவனாய்ச் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

யாரோ ஒரு புண்ணியவதி பேச்சுவாக்கில்-

“என்னப்பா ரகு? சம்பாதிக்க என்ன வழியா இல்ல? ஓம் புள்ளகுட்டிங்களுக்காக நாயா பேயா நீதானப்பா ஒழைக்கனும்? ஊருல உள்ளவனா வந்து ஒழச்சிச் சோறு போடப்போறான்?” வேத வாக்காய் எடுத்துக் கொண்டு, காலைக் குளிரில் ஓடிக்கொண்டிருப்பவன்.

காலை நடைக்கு, இதமான பருவ காலம்.

எப்படிப் பார்த்தாலும், இப்போதைய மார்கழி மாதக்குளிர், முன்புபோல வராது.

மார்கழி மாதம் முழுக்கவும், மாரியம்மன் கோயில் கூத்துக் கொட்டகையில் கூட்டாளிகளோடு படுக்கை போட்டுக் கோழி கூவ எழுந்து – கோயில் கிணற்று நீரை தலையோடு ஊற்ற – குளிரில் கிடுகிடுக்கும் உடம்பில் – வேஷ்டியைச் சுற்றி, திருநீரு பட்டை நெற்றியில் துலங்க – சங்கு முழக்கத்தோடு, பஜனைக் கோஷ்டி ஆரவாரத்துடன் லயத்துக் காட்டில் கால் வைக்க..

இதே காலையில், மாரியம்மன் கோயில் வளைவில் விபத்தில் மாண்டுபோன அந்தப் பால்யகால பஜனைக் கோஷ்டி நண்பன், அருமையாகப் பஜனைப் பாடல்கள் பாடுவான்..

பஜனைப் பாடல்களோடு, அவன் வருகிற நேரந்தான்.

இவ்வாண்டின் விஷ்ணுபுரம் விருதுபெரும் சீ.முத்துசாமியின் சிறுகதை தொகுப்பு நூலில் இருந்து மீள்பிரசுரம் காண்கிறது

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...