சிட்னியின் மீதான காதல்

oஎனக்கு ஆங்கில நாவல்கள் மேல் ஒரு  காதல் உண்டு. பல நாள்கள் கண் விழித்து படிக்கிற நிலையிலான ஒரு காதல். அந்தக் காதல் ஏன் வந்தது என பலமுறை யோசித்திருக்கிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட காதல் அது என சரியாகக் கணக்கிடலாம். மிக முக்கியமாக அதை சிட்னியின் மீதான காதலாக நான் கருதுகிறேன்.

யார் இந்த சிட்னி?

உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும் சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது வென்றவருமான சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon) அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்தவர். இளம் வயதில் மன உளைச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதன் காரணமாக கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இளம் வயதிலேயே தனித்துவமிக்க எழுத்தாற்றலைக் கொண்டிருந்த இவர், கல்லூரி நாடகக் குழுவினருக்காக நாடகங்கள் எழுதவதன் வழி தனது எழுத்துப் பணியைத் தொடங்கினார். ‘தி பேச்சுலர் அண்ட் தி பாபி சாக்ஸர்’ (The Bachelor and the Bobby-Soxer) என்ற திரைப்படத்துக்கு முதல்முறையாக 1947-ஆம் ஆண்டு திரைக்கதை எழுதினார். அந்தத் திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

1969-ஆம் ஆண்டு முதல் விற்பனையில் சாதனைகளை வாரிக் குவித்த இவரது நாவல்களின் பயணம் தொடங்கியது. அந்த ஆண்டு இவர் எழுதிய ‘தி நேக்கட் ஃபேஸ்’ (The Naked Face) என்ற முதல் நாவலே விற்பனையில் பெரும் சாதனைப் படைத்தது. அவரது அடுத்த நாவலான ‘தி அதர் சைட் ஆஃப் தி மிட்நைட்’ (The Other Side of Midnight), 1973-ஆம் ஆண்டு வெளியானது. மிக அதிக அளவில் விற்பனையாகி பல விருதுகளைக் குவித்த இந்நாவல்  நியூயார்க் டைம்ஸ் விற்பனையிலும் சாதனை படைத்தது.

தொடர்ந்து, ‘தி அதர் சைட் ஓப்ஸ் மிட்நைட்’ (The Other Side of Midnight-1973), ‘எ ஸ்ட்ரேஞ்சர் இன் தி மிரர்’ (A Stanger in the Mirror – 1976), ‘மாஸ்டர் ஆஃப் தி கேம்’ (Master of the Game- 1982), ‘ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ்’ (Rage of Angels-1983) ‘இஃப் டுமாரோ கம்ஸ்’ (If Tomorrow Comes- 1985) உள்ளிட்ட நாவல்களும் விற்பனையில் பல சாதனைகளைப் படைத்தன.

சிட்னியின் நாவல்கள் சுவாரஸ்யமானவை. மிக முக்கியமாக அதிகமான பெண் கதாபாத்திரங்களை முதன்மைக் கதாபாத்திரங்களாக கொண்டவை. அதிகமான பெண் வாசகர்களே சிட்னியின் நாவல்கள் மேல் பைத்தியமாய் இருந்தனர். ஒவ்வொரு அத்தியாயமும் கொடுக்கும் திருப்பு முனைகள் நாவலை கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து வாசிக்க வைக்கும் அபார வல்லமையைச் சிட்னியின் எழுத்துகள் கொண்டிருந்தன.

ஆனால், மிக அதிகமுறை வாசித்த அவரது நாவல்களில் ஒன்றான ‘இஃப் டுமாரோ கம்ஸ்’ என்ற அதிகம் கவர்ந்த நாவல் எனலாம். இந்நாவல், திரேசி விட்னி (Tracy Whitney) என்ற பெண்ணைச் சுற்றி நகர்கிறது. திரேசி விட்னி அறிவான பெண் – அழகானவளும் கூட. ஒரு வங்கியில் கணினியியலில் நிபுணர். நிறைந்த மகிழ்ச்சியில் அவள் இருந்தாள். அவளது மகிழ்ச்சிக்கு மூன்று காரணங்கள் இருந்தது. அவளது தந்தை இறந்ததில் அவளை விட்டுப் பிரிந்திருந்த தாய் மீண்டும் அவளோடு வந்திருப்பது பெரும்பாலும் உறுதிப்பட்டிருந்தது. அவள் கணினி அறிவும் அயராத உழைப்பும் அவளுக்கு பதவி உயர்வை விரைவில் தரவிருந்தது. அதுபோக, அவள் விரைவில் தாயாக விருந்தாள். அவளது வருங்கால கணவர் சார்லஸ் அந்தக் குழந்தை குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தன் வழி அவள் அவன் நல்ல கணவனாகவும் நல்ல தகப்பனாகவும் இருக்க முடியும் என அவள் நம்பியிருந்தாள்.

ஆனால், சார்லஸின் பெற்றோர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு அவளது நம்பிக்கை சிதைந்திருந்தது. அவர்கள் அவள் சார்லஸ்சுக்கு சிறிதும் பொருத்தமில்லாதவள் என உறுதியாக நம்பினார்கள். அதே நேரத்தில் அவளது தாய் தற்கொலை செய்து கொண்டாள் என்ற அவலமான செய்தியும் அவளை உலுக்கியது. தாய் நலமாகத்தான் இருக்கிறாள் என எண்ணியிருந்த அவளுக்கு இந்த செய்தி பேரிடியானது. சில விசாரணைகளுக்குப் பிறகு, அவள் தாய் ஜோ ரோமனோ என்ற ஒரு கும்பல் மூலம் ஏமாற்றப்பட்டு, மன உளைச்சல் காரணமாகவும் அவமானம் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வருகிறது.

ஒரு துப்பாக்கியை வாங்கிக் கொண்டு, தன் தாயின் மரணத்திற்குப் பழி வாங்குவதற்காக ஜோகுழலி3 ரோமனோவைக் துப்பாக்கி முனையில் மிரட்டி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட அவனது வீட்டிற்குச் செல்கிறாள். ஆனால், மிக கொடூரமான ஜோ ரோமனோ அவனைப் பாலியல் கொடுமை செய்கிறான். மிக பதற்றமடைந்த நிலையில் திரேசி அவனை சுடுகிறாள். அவனைக் கொன்று விட்டதாக நினைக்கும் திரேசி தப்பித்து விமான நிலையம் வருகிறாள். அங்கே, காவல் துறையால் கைது செய்யப்படுகிறாள். தன்னைக் காப்பாற்றும்படி சார்ல்ஸிடம் கெஞ்சுகிறாள். ஆனால் அவனோ அவளுக்கு உதவினால் அவனது குடும்ப நற்பெயர் பாதிக்கப்படுமென்றும் அவளது குழந்தை ஏதாவது செய்துக் கொள்ளும்படியும் இனிமேல் எக்காரணம் கொண்டும் அவனைத் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கின்றான்.

திரேசி சுட்டதில் ஜோ ரோமனோ இறக்கவில்லை. தன் வீட்டிலுள்ள விலை மதிப்புள்ள ஓவியத்தை திருட வந்தாள் என குற்றஞ்சாட்டி அவளை சிறையில் அடைக்கின்றனர். அவள் குற்றமற்றவள் என உறுதிப் படுத்த எடுக்கும் எல்லா முயற்சிகளும் பணத்தால் தரைமட்டமாக்கப்படுகிறது.  சிறையில் கொடூரமான லெஸ்பியன்களால் பாலியல் கொடுமை செய்யப்படுவதால் திரேசி தன் குழந்தையை இழக்கிறாள். பல கொடுமைகளுக்குப் பிறகு,  சிறைக் காவலரின் குழந்தையை நீரில் மூழ்குவதிலிருந்து காப்பாற்றுவதன் மூலம் பொது மன்னிப்பு பெற்று வெளியேறுவதன் மூலம் அவளது வாழ்க்கையின் இரண்டாம் பாகம் தொடங்குகிறது.

நியூயார்க் செல்கிறாள். ஆனால், அங்கும் அவளது சிறை வாழ்க்கையின் பதிவுகள் அவளைத் துரத்துகிறது. ஒரு முன்னாள் குற்றவாளியைச் சமூகம் எப்படி மீண்டும் மீண்டும் குற்றவாளியாக்கத் துடிக்கிறது என்பதை அவள் கண்டு கொள்கிறாள். தனது வாழ்வைச்  சிதைத்தவர்களைப் பழி வாங்கியது போக அவள் ஜெஃப் ஸ்டீவன்ஸ்-சுடன் இணைந்து மிக லாவகமான தொழில்களைச் செய்யத் தொடங்குிறாள். காவல்துறை அவளை மீண்டும் பின் தொடர்கிறது. இப்போது அவள் எதற்கும் பயப்படுகிற பழைய திரேசி அல்ல…

ஒரு பெண் தனது துயரங்களுக்குக் கிடையே எவ்வாறு உயிர் வாழ்கிறாள் என்பதையும் அவளின் வெற்றி எவ்வாறு சாத்தியமானது என்பதையும் இந்நாவல் எவ்வித தொய்வுமின்றி சொல்லிச் செல்கிறது.

குழலி2யாரும் குற்றவாளியாய்ப் பிறப்பதில்லை. நாம் வாழ்கின்ற சூழலும் சமூகமுமே நம்மை குற்றவாளியாக்குகிறது என்பதை இந்நாவல் தெளிவாக காட்டுகிறது. மேலும், மிக இளம் வயதிலேயே குடும்பத்திலிருந்து தனித்து வாழ்கின்ற சூழல் உளவியல் ரீதியில் குழந்தைகளை அவர்கள் வாழ்வின் இறுதி கணங்களை வரை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் கதையோட்டம் நமக்கு உணர்த்துகிறது.

சிறுவயதிலேயே பெற்றோரைப் பிரிந்து தனித்ததொரு வாழ்வுக்குத் தள்ளப்பட்ட திரேசி வளர்ந்த பின்பும் தனிமையையே அதிகம் நாடுபவளாகவும் மிக சொற்ப எண்ணிக்கையிலான நண்பர்களைக் கொண்டிருப்பதன் வழி காணலாம். மேலும், இப்படியான சூழலில் வாழ்பவர்கள் முடிவுகள் எடுப்பதில் முதிர்ச்சி அற்றவர்களாக இருப்பதையும் காண முடிகிறது.

எல்லாவற்றையும் தாண்டி ஆக்கப் பயன்படும் அதே அறிவுதான் அழிவுக்கும் பயன்படுகிறது என்பதையும் இந்நாவல் தெளிவாகக் காட்டுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...