நூறாவது வல்லினத்தில்…

cropped-logo-vallinam.jpg2007இல் வல்லினம் அச்சு இதழ் தொடங்கியது முதலே அதை நிறுத்தப்போகும் தினம் குறித்த பேச்சும் தொடங்கிவிட்டது. அதற்கு முன் தமிழகத்தில் சிற்றிதழ்கள் தோன்றுவதும் மறைவதும் சடங்கான ஒன்றாக இருந்ததால் அதன் நீட்சியில் வல்லினத்தின் ஆயுள் கால நிறைவு குறித்து ஆர்வமாகவே காத்திருந்தோம்.

நிதானம் என்ற பெயரில் சோம்பேறித்தனத்தையும், புத்திசாலித்தனம் எனும் அர்த்தத்தில் பின் வாங்குதலையும், இலக்கியவாதியின் அடிப்படை குணமென அலட்சியப்போக்கையும் கைவரப்பெற்றவர்கள் வல்லினம் பயணத்தில் இணையாதது அந்நிலை வல்லினத்துக்கு நிகழாது என்பதை கால ஓட்டத்தில் புரிய வைத்தது..

வல்லினம் என்பது ஒன்றல்ல; அது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு வல்லினமாக இருந்துள்ளது என தொடர்ந்து வாசிக்கும் எவராலும் உணர முடியும். அவற்றை இவ்வாறு பட்டியலிடலாம்.

முதல் வல்லினம்: அச்சு இதழாக வந்த ஏழு இதழ்கள். இந்த வல்லினம் முழுக்கவே உயிர்மை, காலச்சுவடு, தீராநதி போன்ற தமிழக இலக்கிய இதழ்களை முன்மாதிரியாகக் கொண்டவை. படைப்பிலக்கியங்களுடன் பிற கலைத்துறைகளின் மேல் அக்கறை எடுத்துக்கொண்டு அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்த இதழ்கள் உருவாகின.

இரண்டாவது வல்லினம்:  எட்டாவது அச்சு இதழில் இருந்து தொடங்குகிறது இரண்டாவது வல்லினத்தின் தொடக்கம். எழுத்தாளர் ஷோபா சக்தியின் வருகை, அவருடனான தொடர் உரையாடல்கள், புதிய வாசிப்பு அனுபவம் என என் சிந்தனைப்போக்கில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருந்தது. நலிந்த மக்கள் மீதான கரிசனை, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவான குரல், இடதுசாரி அரசியலை முன் வைப்பது போன்றவையே வல்லினத்தின் கடமை என நம்பினேன். எனவே அவர் வருகைக்குப்பின் தயாரான எட்டாவது இதழின் அட்டையிலேயே ‘ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்’ என அச்சிட்டு இதழை வெளியிட்டோம். தொடர்ந்து அவ்வடைமொழியிலேயே வல்லினம் வெளிவரும் என்ற என் முடிவில் மஹாத்மன் முரண்பட்டார். ஒற்றை அடையாளத்துடன் இலக்கிய இதழ் வெளிவரக்கூடாது என்றார். என்னால் முடிவெடுக்க முடியவில்லை. நல்லவேளையாக எட்டாவது இதழுடன் வல்லினம் அச்சு இதழ் நின்றது.

மூன்றாவது வல்லினம் (இணைய இதழ் தொடக்கம்): மூன்றாவது காலக்கட்ட வல்லினம் தன்னை கலகத்தில் முங்கிக்கொண்டது. இணைய இதழாக வல்லினம் தொடங்கப்பட்ட அன்றே இலக்கியம், சமூகம் என எல்லா நிலைகளிலும் அக்கலகம் தொடர்ந்தது. பெரும்பாலோர் வல்லினத்தைப் புறக்கணிக்கத் தொடங்கியதும் தள்ளி நிற்கத்தொடங்கியதும் இக்காலக்கட்டதில்தான். எதிர்வினையை அங்கதத்துடன் சொல்வது பலரையும் ஆழமாகவே காயப்படுத்தியது. கோபத்தைக் கூட அவர்களால் கோபத்தால் சமன் செய்ய முடிந்தது; சிரிப்பை அவ்வாறு கடக்க முடியவில்லை. நாங்கள் தொடர்ந்து ஆளுமைகளின் சரிவுகளைப் பார்த்து சிரிக்கத்தொடங்கிய காலம் அது.

நான்காவது வல்லினம்: 2013 இல் தயாஜின் சிறுகதையான ‘கழிவறையும்  பழிவாங்கும் வழிமுறையும்’ வெளிவந்தப்பின்னர் அத்தனை காலம் செய்த கலகங்களுக்கு நல்ல எதிர்வினையாக அமைந்தது. பாதிப்பக்கப்பட்ட பலரும் ஒன்று சேர்ந்து ‘வல்லினத்திற்கு எதிர்வினை’ என்ற பெயரில் அவதூறு செய்யத் தொடங்கியதும் அவ்வாறு செய்ய முடியாத பாதிப்புக்குள்ளான பிற எழுத்தாளர்கள் கள்ள மௌனம் சாதித்ததும் தொடர்ந்து ஒரு மாதம் மலேசியாவில் நீடித்தது. அப்போதுதான் அறிவார்த்தமான உரையாடல்கள், ஆய்வுகள் எவ்வளவு அவசியம் என உணர்ந்தோம். விளைவாக ‘பறை’ எனும் ஆய்விதழ் உருவானது. வல்லினத்திலும் ஆய்வுக்கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. விமர்சனங்கள் ஆய்வு ரீதியில் ஆழமாக முன்வைக்கப்பட்டன.

ஐந்தாவது வல்லினம்: நான்கு காலக்கட்டத்திலும் உருவான அனுபவத்தின் திரட்சியில் வல்லினம் 2015இல் எடுத்த புதிய பரிணாமம் முழுமைப் பெற்றது எனலாம். எழுத்தாளர் இமையத்தின் வருகை படைப்பிலக்கியத்தில் வல்லினத்திடம் இருந்த மெத்தனப்போக்கை உணர்த்தியதுபோல எழுத்தாளர் ஜெயமோகனின் வருகையும் கலந்துரையாடல்களும் புதியப் போக்கிற்கு பல வகையில் துணை செய்தன. முந்தைய தலைமுறை படைப்பாளிகளின் ஆக்கங்களைக் கறாரான முறையில் அணுகி அவற்றில் முக்கியமானதை முன்னெடுத்தல், மூத்தப்படைப்பாளிகளை விருதுகள் மூலம் கௌரவித்தல், ஆவணப்படங்கள் மூலம் வரலாற்றைப் பதிவு செய்தல், தொடர் உரையாடல்களை நிகழ்த்துதல், சமகாலப் படைப்பிலக்கியம் மீது விமர்சனங்களை முன்வைத்தல், தரமான இலக்கியங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துதல் என அவர் தனிமனித இயக்கமாகச் செய்தவற்றை வல்லினம் மூலம் கூட்டுமுயற்சியில் தொடர்ந்தோம். வல்லினம் விருது, ஆவணப்பட முயற்சிகள், இணையப் புகைப்பட தொகுப்பு, சிறுகதை போட்டி, நாவல் பதிப்புத்திட்டம், விமர்சனக்கூட்டங்கள் என வல்லினத்தின் முயற்சிகள் விரிவாகிக்கொண்டே போகின்றன. அதே சமயத்தில் வல்லினம் தொடங்கும்போது இருந்த எழுத்தாளர் குழு முற்றிலும் மாறுபட்டு இன்று நேர்மறையான சிந்தனையுடன் தன்னலமின்றி பயணப்படும் உற்சாகமான நண்பர்கள் மூலமாக எத்தனைக் கடினமான பணிகளும் எளிதாக நிறைவடைகின்றன.

இவ்வாறு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதிய சிந்தனைகளாலும், முந்தைய தவறுகளை ஒப்புக்கொள்வதாலும், தடுமாற்றங்களை மறுபரிசீலனை செய்வதாலும் வல்லினம் புதிய இதழாகத் தன்னை நிறுவிக்கொள்கிறது. அந்த புதிய அடையாளமே தொடர்ந்து பயணிக்கும் தெம்பைக்கொடுக்கிறது. வல்லினத்தில் இந்த ஐந்து காலக்கட்ட மாற்றத்தில் மிக அந்தரங்கமாக எனக்குள் நிகழும் இலக்கியம் சார்ந்த புரிதல் ஒரு காரணமாக இருந்தாலும் வல்லினத்துடன் இணைந்து இலக்கியத்தை முன்னெடுக்கும் நண்பர்களின் இணைவும் பங்கெடுப்புமே பெரும்பாலும் அதன் போக்கைத் தீர்மானித்துள்ளது. அவ்வகையில் அ.பாண்டியம், விஜயலட்சுமி, கங்காதுரை, தயாஜி, ஶ்ரீதர்ரங்கராஜ், சரவணதீர்த்தா போன்ற நண்பர்களின் ஒத்துழைப்பும் ஆலோசனையும் ‘வல்லினம் 100’ களஞ்சியம் போன்ற பெரும் முயற்சிகள் உருவாகக் காரணம்.

இந்தப் பயணத்தில் உடன் வந்த, தொலைவில் இருந்து கவனித்த, சுமைகளின் போது தோள்கொடுத்த, அறிவார்ந்த வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பங்களித்த பல ஆளுமைகளின் கட்டுரைகள் இம்மாத வல்லினத்தில் இடம்பெற வேண்டும் என முடிவு செய்தோம். ஒரு குழந்தையை கண்ணாடி சூழ்ந்த அறையில் நடக்க விட்டு எல்லா கோணத்திலும் அதன் நகர்வை ரசிப்பது போலத்தான் இது. பல சமயம் அது குழந்தையின் எதிர்க்காலத்தைத் தீர்மானிக்கவும் உதவக்கூடும்.

வாழ்க்கை போலவே வல்லினமும் நிறைய பிழைகளையும் சரிகளையும் கொண்டிருப்பதை அதை ஒரு களஞ்சியமாகத் தொகுக்கும் போது உணரமுடிந்தது. சிலவற்றைச் செய்திருக்க வேண்டாமோ எனவும் தோன்றியது. எதையுமே மீட்க முடியாது. எனவே மலேசிய இலக்கிய வரலாற்றில் முக்கிய இடத்தில் நிற்கப்போகும் ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை மிகக் கவனமாகவே உருவாக்கியுள்ளோம். வல்லினம் தளத்தில் வெளிவந்த படைப்புகளோடு, 75% புதியப்படைப்புகளையும் உள்ளடக்கிய அது வெளியிடப்படும் நாளில் உங்கள் அருகாமை அவசியம். சந்திப்போம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...