வல்லினம்: இன்றும் நாளையும்

நுஃமான்வல்லினம் நூறாவது இதழ் வெளிவருவது கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வுதான். மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு உலகத் தமிழர் மத்தியில் ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த இதழ் அது.

பத்து ஆண்டுகளுக்கு முன் வல்லினம் முதலாவது இதழ் வெளிவந்திருந்த சமயம் நான் மலேசியாவில் இருந்தேன். 2007 ஜுலை முதலாம் திகதிமுதல் ஓராண்டு காலத்துக்கு மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் துறையில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றுவதற்குச் சென்றிருந்தேன். மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றி அப்போது நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்த படைப்புகள் அதிக கவர்ச்சியை ஏற்படுத்தியிருக்கவில்லை. மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் யாருடனும் எனக்கு நேர் அறிமுகம் இருக்கவில்லை. மலேசிய இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு இருட்டறை வாசியாகவே இருந்தேன்.

அதுவரை நான் அறிந்திராத, மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையான டாக்டர் சண்முகசிவா என்னைப் பற்றிக் கொஞ்சம் அறிந்திருந்தார். எனது மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் நூலைப் படித்து என்மீது கொஞ்சம் நல்லபிப்பிராயம் கொண்டிருந்தார். நான் மலேசியா வந்திருப்பதை நண்பர் பேராசிரியர் கிருஷ்ணன் மணியம் மூலம் அறிந்து நான் இருக்கும் இடம் தேடிவந்து சந்தித்தார். அது ஒரு அற்புதமான சந்திப்பு. அந்தச் சந்திப்பின் மூலம்தான் நான் என் இருட்டறையில் இருந்து வெளிவந்து மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் வாசற்படியில் கால்வைத்தேன். அவர்தான் வல்லினம் குழுவினரை எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். அவர்கள் எல்லோருக்கும் அன்பான தகப்பனாக, வழிகாட்டியாக, ஆதர்சமாக விளங்கியவர் அவர்.

அவ்வகையில் என்னை முதலில் வந்து சந்தித்தவர் வல்லினம் ஆசிரியர் நவீன். வல்லினம் முதல் இதழுடன் அவர் வந்ததாக ஞாபகம். வல்லினம் ஒரு கூட்டுமுயற்சிதான் என்றாலும் நவீன்தான் அதன் முதுகெலும்பு, மூளை, கைகால் எல்லாம் என்று சொல்லவேண்டும். நண்பர்கள் எல்லாரையும் ஒன்றிணைத்து வல்லினத்தைக் கொண்டுசெல்லும் உந்துசக்தி அவர்தான். நான் சந்தித்த இளைஞர்களில் அது ஒரு வித்தியாசமான பிறவி, ஒரு locomotive. அதன் இயங்குவிசை அலாதியானது. என்போன்றவர்களை அச்சுறுத்துவது. அவருடைய வயதில் இத்தகைய இயங்கு விசையுடன் நான் செயற்பட்டிருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாம் என்ற ஏக்கத்தையும் பொறாமையையும் ஏற்படுத்துவது.

வல்லினம் குழு இளைஞர்கள் எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு ஆச்சரியம்தான். யுவராஜன், மஹாத்மன், சந்துரு, சிவம், மணிமொழி, தோழி, பூங்குழலி, யோகி என இவர்கள் எல்லோரும் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் புதுப் புனலாக, ஆண் பெண் எல்லைகளைக் கடந்து, நட்புடன் ஒன்றிணைந்து செயற்பட்டவர்கள். காதல் சஞ்சிகைதான் முதலில் இவர்களை இணைத்தது என்று நினைக்கிறேன். அதுதான் வல்லினத்தின் முன்னோடி. அதன் மறைவில்தான் வல்லினம் முளைத்தது.

நான் மலேசியாவில் இருக்கும்வரை வல்லினம் 5 இதழ்கள் வெளிவந்தன. பின்னர் மூன்று இதழ்கள்தான் அச்சில் வெளிவந்தன. இந்த எட்டு இதழ்களும் காலாண்டு இதழ்களாக வெளிவந்தவை. ஒன்பதாவது இதழிலிருந்து இணைய இதழாக மாதாந்தம் வல்லினம் வெளிவருகின்றது. நூறாவது இதழ் வெளிவருவது ஒரு சாதனை. இந்தச் சாதனையில் பலருக்குப் பங்கு உண்டு. அதில் தலையாயது நவீனுடையது.

வல்லினத்தில் நான் எழுதியது மிகக் குறைவு. நவீன் தொடர்ந்து எழுதச் சொல்லி நச்சரித்துக்கொண்டே இருப்பார். தொடர்ச்சியாக ஒரு பத்தி எழுதும்படியும் கேட்டிருக்கிறார். நான் வாக்குறுதி அளிப்பதில் வள்ளல். ஆனால் எழுதுவதில் கஞ்சன். நவீனின் தொடர்ச்சியான வற்புறுத்தலில் சற்று விரிவான எனது நேர்காணல் ஐந்தாவது இதழில் வெளிவந்தது. இந்தோனேசியக் கவிஞர் சைறுல் அன்வரின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் சில எட்டாவது இதழில் வெளிவந்தன. இணைய இதழ்களில் இரண்டொரு கட்டுரைகள் பிரசுரமானதாக ஞாபகம். அவ்வளவுதான். வல்லினத்தில் எனது பங்களிப்பு ஒரு சிட்டிகை அளவுதான். நூறாவது இதழ் வெளிவருகின்ற இவ்வேளையில் திரும்பிப்பார்க்கும்போது நானும் எவ்வளவோ எழுதியிருக்கலாம் என்ற ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை. இது ஒரு நபுஞ்சகனின் ஏக்கம்தான்.

கடந்த பத்தாண்டுகளில் மலேசிய கலை இலக்கிய உலகில் வல்லினம் சாதித்தது அதிகம். வல்லினம் ஒரு சஞ்சிகை மட்டுமல்ல. அது ஒரு இயக்கம். நூல்வெளியீடுகள், கருத்தரங்குகள், இலக்கிய விழாக்கள், பயிற்சிப்பட்டறைகள், ஆவணப்படங்கள் என அதன் பணிகள் பல. இவற்றின் மூலம் மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு வெளியில் வல்லினம் பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. மலேசிய இலக்கிய வளர்ச்சிப் போக்கை வல்லினத்துக்கு முன், வல்லினத்துக்குப் பின் எனப் பிரித்துப்பார்க்கக் கூடிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக நோக்கினால் தற்கால மலேசியத் தமிழ் இலக்கியத்தின் பிரதான நீரோட்டம் கல்கி, அகிலன், மு.வ போன்றோரின் செல்வாக்கு வலயத்துள்ளும் கருத்துநிலையில் பண்பாட்டுப் பழமைவாதத்துள்ளும்தான் சுற்றிக்கொண்டிருந்தது. அ. ரெங்கசாமி, சீ. முத்துசாமி, சை. பீர்முகம்மது, எம். ஏ. இளஞ்செல்வன், கோ.முனியாண்டி, கோ.புண்ணியவான், மா.சண்முகசிவா முதலியோர்தான் மலேசியத் தமிழ் இலக்கியத்தை வெவ்வேறு வகையில் நவீன யுகத்துக்குள் கொண்டுவந்தவர்கள் எனலாம். நவீன இலக்கியம் என்பது வெறும் கற்பனைப் புனைவு அல்ல, அது சமூக யதார்த்தத்தில் வேரூன்றி நிற்பது என்பதை இவர்களின் படைப்பகளே வெவ்வேறு அளவில் வலியுறுத்தி நின்றன. ரப்பர்த் தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கை பற்றிய அகிலனின் பால்மரக் காட்டினிலே நாவலையும் முத்துசாமியின் மண்புழுக்கள் நாவலையும் ஒப்புநோக்கினால் இது விளங்கும். இதை இன்னொரு கட்டத்துக்குக் கொண்டுசெல்பவர்களாக வல்லினம் குழுவினரை நான் காண்கிறேன். அடுத்த பத்து ஆண்டுகளில் இவர்களிடமிருந்து சிறந்த அறுவடையை நாம் எதிர்பார்க்கலாம்.

மலேசியத் தமிழ் இலக்கியம் உலகளாவிய தமிழ் இலக்கியச் செல்நெறியோடு இணைந்து நிற்கவேண்டும், அதன் தரம் உயரவேண்டும் என்ற ஆதங்கம் வல்லினத்துக்கு உண்டு. அந்த நோக்கில் வல்லினம் முன்வைக்கும் சில விமர்சனங்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த வல்லன. விமர்சனங்கள் தனிமனிதர்களை நோக்கியதாக அன்றி கோட்பாட்டுப் பின்னணியில் ஆக்கபூர்வமாக அமையும்போதுதான் ஆரோக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும். வல்லினம் வளர்ந்த கதை என்ற கட்டுரையில் சண்முகசிவா பற்றிக் கூறும்போது இலக்கியம் சார்ந்த அவருடைய விமர்சனம் வெளிப்படையாக இல்லை என்றும் தனக்கு மட்டுமே தெரிந்த சண்முகசிவா விமர்சனம் செய்யத் தொடங்கினால் பலர் தற்கொலை செய்துகொள்ளக்கூடும் என்றும் நவீன் எழுதுகிறார். நல்லவேளை சண்முகசிவா அந்தக் காரியத்தைச் செய்து பலரைத் தற்கொலைசெய்யத் தூண்டிய பழிக்கு ஆளாகவில்லை. விமர்சனம் உயிர் ஊட்டவேண்டுமே தவிர, உயிரை அழிக்கக் கூடாது என்பதுதான் சண்முகசிவாவின் கருத்து என்று நினைக்கிறேன். எனது கருத்தும் அதுதான். இளமையில் நானும் தடாலடி விமர்சனங்கள் செய்திருக்கிறேன். எனது பதினெட்டு வயதில் பிரசுரமான எனது முதலாவது கட்டுரையின் தலைப்பு ”வெற்று டப்பாக்களின் சபதிப்பு விமர்சனமாகாது” என்பது. இப்போது அதைப் படித்துப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கிறது. அப்போது நானே ஒரு வெற்று டப்பாவாக இருந்தேன் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு நீண்ட காலம் பிடித்தது.

படைப்பாளிகள், வாசகர்கள் பலரகப்பட்டவர்கள். அவ்வாறே இலக்கியப் படைப்புகளும் பலரகப்பட்டவை. இந்தப் பன்முகத்தன்மை எங்கும் காணப்படுவது, இயல்பானது. எனது ரசனையின் அளவுகோலைக் கொண்டு மற்றவர்களின் ரசனையை அளப்பதும், அதை மட்டம் தட்டுவதும் எனது மேட்டிமைத் தனத்தின் வெளிப்பாடு என்பதை நான் இப்போது புரிந்துகொள்கின்றேன்.

இலக்கியப் படைப்பும் ரசனையும் பயிற்சியின் பாற்பட்டவை. பயிற்சி மேம்படும்போது ரசனையும் மேம்படும். நம்மில் அநேகர் கல்கி, அகிலன், மு.வ ரசனை வழிவந்தவர்கள்தான். பின்னர்தான் பாரதி, புதுமைப்பித்தன், அழகிரிசாமி என வழிமாறினோம். இன்று இன்னும் நமது ரசனை விசாலமடைந்திருக்கிறது. இது நமது சுயமுயற்சியின், வாசிப்புப் பயிற்சியின் விளைவு. இந்த வாய்ப்பு எல்லோருக்கும் சுயமாக, இலகுவாகக் கிடைப்பதில்லை. நாம் இதைப் பள்ளிகளிலிருந்து தொடங்கவேண்டும். ஆனால் நமது பள்ளிப் பாடத்திட்டங்கள், பாடநூல்கள், ஆசிரியர்கள் இதற்கு அதிக இடம் கொடுப்பதில்லை. இது ஒரு பிரச்சினைதான். முதலில் பள்ளிகளுக்கு வெளியே நாம் இதைத் தொடங்கலாம். வல்லினம் அத்தகைய முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகின்றது. எழுத்தாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை நடத்தியிருக்கின்றது. நானும் அத்தகைய இரண்டொரு நிகழ்வுகளில் கலந்திருக்கிறேன். தடாலடி விமர்சனங்களைக் கைவிட்டு, ரசனையை, எழுத்தாற்றலை மேம்படுத்தும் இத்தகைய பயிற்சிகளில் வல்லினம் தொடர்ந்தும் அக்கறைகாட்டும் என்று நம்புகிறேன்.

மலேசிய மொழிகளுக்கிடையே இலக்கியப் பரிமாற்றம் இல்லாதிருந்தமை, நான் மலேசியாவில் இருந்த காலத்தில் அவதானித்த ஒரு முக்கிய குறைபாடு. வல்லினம் நேர்காணலிலும் நான் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளேன். மலாய் மொழியே மலேசியத் தமிழர்களின் கல்விமொழி என்றவகையில் மலாய் மொழிப் படைப்புகளைத் தமிழிலும் தமிழ்ப் படைப்புகளை மலாய் மொழியிலும் மொழிபெயர்க்கக் கூடிய மொழித் தேர்ச்சி அவர்களுக்கு உண்டு. ஆனால் இத்துறையில் குறிப்பிடத் தகுந்த பணிகள் எவையும் நடந்ததாகத் தெரியவில்லை. எனது ஆர்வம் காரணமாக புகழ்பெற்ற மலேசிய, இந்தோனேசியக் கவிஞர்களான லத்தீப் முகையதீன், சைரில் அன்வர் ஆகியோரின் கவிதைகளை ஆங்கில வழி தமிழில் மொழிபெயர்த்து இரண்டு தொகுதிகள் கொண்டுவந்தேன். வல்லினம் சிறு அளவில் மலாய்மொழிக் கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டுள்ளது. வல்லினம் இதில் தொடர்ந்தும் அக்கறைகாட்ட வேண்டும் என்பது என் விருப்பம். வல்லினத்தின் எதிர்காலத் திட்டத்தில் இது ஒரு முக்கிய அம்சமாக இடம்பெறும் என்று நம்புகிறேன்.

மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு மட்டும் அன்றி, உலகத் தமிழ் இலக்கியத்துக்கும் வல்லினம் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும், அதை வளப்படுத்த வேண்டும் என்பது என் ஆவல். வல்லினம் இன்னும் பல நூறு இதழ்கள் வெளிவர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

1 comment for “வல்லினம்: இன்றும் நாளையும்

  1. maana mackeen
    September 10, 2017 at 10:26 pm

    அருமையான கருத்துக்கட்டுரையை அள்ளி வழங்கி அசத்தி விட்டார் பேராசிரிய நண்பர் 😃 பாராட்டுகள்

Leave a Reply to maana mackeen Cancel reply