வல்லினங்களின் மெல்லிதயம்

கலாப்ரியாஇப்போது நான் வசிப்பது இடைகால் என்னும் கிராமம். இது தனிமையும்  அமைதியுமான அழகிய ஒன்று. ஒரு வகையில், வாசிப்பதற்கும் எழுதுவதற்கும்  அது மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் இங்கே இலக்கியம் பேசவோ படித்ததைப் பகிர்ந்து கொள்ளவோ நண்பர்கள் கிடையாது. அதனாலேயே இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு  வெளியூர் சென்று  விட்டு ஊர் திரும்பும் போது, எதையோ இழந்தது மாதிரி அநியாயத்துக்கு மனதில் ஒரு ’எல்லாம் முடிந்து போன’ உணர்வும் வெற்றிடமும் சூழ்ந்து கொள்ளும்.  மலேசியப் பயணம் முடிந்து விமானத்தில் திரும்பிக் கொண்டிருக்கையில்  சற்று அதிகமாகவே மனம் வெறுமையாக இருந்தது.

எங்களை  விமான நிலையத்திற்கு இட்டுச் செல்லும் ரயில் நிலையத் திற்குள்ளும் வந்து  வழியனுப்பி விட்டுச் சென்ற நவீனும் தயாஜியும் பேசிக் கொண்டிருந்தவைகள் எல்லாம் மனதிற்குள் நிழலாடியது. எங்களை அந்த ரயில் நிலைய வாயில் வரை தங்கள் ஊர்தியில் இட்டு வந்த பூங்குழலியும் அவரது சகோதரியும்தான் மதிய உணவைச் சிறப்பான ஒரு ஓட்டலில் ஏற்பாடு செய்து மனதையும் வயிற்றையும் நிரப்பி இருந்தார்கள்.

என்னையும் என் மனைவியையும், இன்னொரு இலக்கிய வாசிப்பாளரான மகாலிங்கம் தம்பதியினரையும் அங்கிருந்த அத்தனை நாட்களிலும் அன்பாக வரவேற்று உபசரித்தவர்கள் வல்லினம் இலக்கிய இயக்கத்தைச் சார்ந்த மெல்லிதயம் கொண்ட நவீனும் அவரது நண்பர்கள், தயாஜி, விஜயலட்சுமி, பூங்குழலி வீரன் ஆகியோர். எங்களுக்கு வழித்துணையாக வந்து மலேசியாவைச் சுற்றிக் காட்ட வந்தவர், என்னுடைய அன்புக்குரிய மதுரைத் தம்பியாகிய ஸ்ரீதர்ரங்கராஜ். ஏற்கனெவே முன்பொரு முறை மலேசியா போயிருந்த போது அறிமுகமான டாக்டர் சண்முக சிவாவும் எங்களுடன் அவ்வப்போது இணைந்து கொள்ளுவார்.

சண்முக சிவா அவர்களை எனக்கு முன்பே அறிமுகம் உண்டு.  நான் 2005 வாக்கில்  மலேசியா வந்திருந்த போது அன்பான, பாதுகாப்பான வரவேற்பை நல்கியவர். அற்புதமான சிறுகதையாளர், கவிஞர். இம்முறை வந்திருந்த போது அவரும் வல்லினம் குழுவில் இணைந்து செயல்படுவதாக அறிந்ததும்  மகிழ்ச்சியாக இருந்தது. அவரும் பிற நண்பர்களும் ஆர்வமுடன் பங்கேற்று நடத்தி வரும் ’மை ஸ்கீல்ஸ் அறவாரியத்தின்’ பணிகள் பற்றிய செய்திகள் மிக்க மகிழ்ச்சியளிப்பவை. நாங்கள் வந்திருந்த போது ”மெது நிலை மாணவர்களும் மாற்றுக் கல்வி முறையின் தேவையும்” குறித்த கருத்தரங்கம் ஏற்பாடாகி இருந்தது. நான் நவீன் எழுதிய ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன். கூட்டம் ஒழுங்கு செய்திருந்த விதமும், அதில் நண்பர்களின் ஈடுபாடு மிக்க ஆர்வமும் என்னை வியக்க வைத்தன. தயாஜியின் சுறுசுறுப்பு, விஜயலட்சுமியின் அர்ப்பணிப்பு, பூங்குழலியின் காத்திரமான பங்களிப்பு இடையிடையே விருந்தாளிகளிகளைக் குறைவின்றிக் கவனித்த எல்லோரின் உபசரிப்பு, எனப் பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

விழா, கிராண்ட் பசிபிக் விடுதியில் நடந்தது. அரங்கம் நிறைந்த பங்கேற்பாளர்கள். எனக்கு, மலேசியாவின் இன்னொரு பகுதியில் அதற்கு இரு தினங்கள் முன் நடந்த ஒரு சந்திப்பில் வந்திருந்த விரல் விட்டு எண்ணக் கூடிய பங்கேற்பாளர்களைப் பற்றிய ஏமாற்றம் சிறிது இருந்தது. அதில் எனக்கு ஏமாற்றமே தவிர வருத்தமில்லை. ஆனால் இந்த நிகழ்வுக்கு, அவை நிரம்பி வழிந்ததைக் கண்டு பூரிப்பாக இருந்தது. அன்று திரையிட்ட, சஞ்சய் குமார் பெருமாளின் ‘ஜகாட்’ திரைப்படத்தின் முன்னோட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. என்னுடன் எம்.ஏ.நும்மான், வீ.அரசு ஆகியோரும் உரையாற்றினார்கள். எனக்கு ஏற்கெனவே அறிமுகமான சை.பீர் முகம்மதுவும் வந்திருந்தது மனதிற்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

வல்லினம் இதழின் பக்கங்களை தங்கள்  காத்திரமான எழுத்துகளால் மிளிரச் செய்யும் பலரையும் சந்திக்க முடிந்தது. அவர்களிடம் நிறைய மலேசிய எழுத்துகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. அப்போது வெளி வந்திருந்த நவீனின் ‘மண்டை ஓடி’ கதைத் தொகுப்பும், மலேசியக் கல்வி முறையில் மெது நிலை மாணவர்களின் துயரம் பற்றிய ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ என்கிற சுய அனுபவ நூலும் ஏற்படுத்தியிருந்த இலக்கிய சமூகத் தாக்கங்களைக் குறித்து அரங்கிலும் தனியேயும் விரிவான உரையாடலை மேற்கொள்ள முடிந்தது. புறப்படும் நேரத்தில் கைக்கெட்டிய தயாஜியின் ‘ஒளிப்புகா இடங்களின் ஒலி’ நூல் பற்றியும் பேசினோம். இடையே விஜயலட்சுமியின் பிறந்தநாள் கொண்டாட்டமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மகிழ்ச்சியான ஒரு பயணத்தின் முடிவில் பிரிய இயலாமல் பிரிந்த நண்பர்களின் நினைவுகளோடு விமானம் மேலெழும்ப மேலெழும்ப மனம், வழக்கம் போல், வெறுமைக்குள் தலை குப்புற விழுந்தது. தனிமை உணர்வு மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கையில் ஒன்று தோன்றியது., இதே போல் ஒரு நிகழ்ச்சியை தமிழ் நாட்டுச் சூழலில் மலேசிய எழுத்தாளர்களை அழைத்து நாம் நடத்துவோமா என்று.  கஷ்டம்தான். ஒரு வேளை நடத்தினாலும்   இவ்வளவு சிறப்பாக அமையாது.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...