வல்லினம் மீண்டும் அச்சிதழாக வேண்டும்

சை.பீர்வல்லினம் இணைய இதழுக்கு முன்பு, அச்சிதழாக வந்தது எனக்கு ஒரு உந்துதலாகவும் எதையாவது எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது. எனது கதைகள் கட்டுரைகள் எல்லாம் அதில் வெளிவந்தன. தொடர்ந்து என்னை ம.நவீன் விரட்டி விரட்டி படைப்புகளை வாங்கினார். ஒரு முறை நான் எழுதிக் கொடுக்காவிட்டால் என் வீட்டின் முன் தீ குளித்துவிடுவேன் என்றும் கிண்டலாகச் சொல்லியிருக்கிறார்.  கிண்டலாக இருந்தாலும் இந்த விரட்டலும் உந்துசக்தியும்வல்லினத்தில் என்னை தொடர்ந்து எழுத வைத்தது. எனது பங்கும் இருந்தது என இப்போது பேசும்போது நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. இப்போது இணையத்தில் எப்போது வேண்டுமானாலும் எழுதலாம் என்று வரும் போது அந்த  உந்துசக்தி குறைகிறது. வல்லினம் மீண்டும் அச்சு இதழாக வருவதில் உள்ள சிக்கல் எனக்குப் புரிகிறது. வாங்கும் சக்தி, வாசக பரப்பு, பொருளாதாரம் இப்படி பல சிக்கல்கள் இருக்கின்றன.இது என் தனிப்பட்ட விருப்பம். இன்று பரவலாக இணையத்தில் போனாலும் கூட அந்த அச்சில் வந்த வல்லினத்தின் பங்கு மிகப்பெரியது; ஒரு வரலாறு. மிகப்பெரிய பத்திரிகையாளர் திரு.எம் துரைராஜ் அவர்கள் வல்லினம் இதழை ஒரு சமயம் பார்த்துவிட்டு இவ்வளவு சிறப்பாக நேர்த்தியாக செய்கிறார்களே என வியந்து பாராட்டி அவரும் சந்தாதாரர் ஆனார். அது எனக்கு பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. இணையத்தில் இருப்பது போல அச்சில் இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோல்.

3 comments for “வல்லினம் மீண்டும் அச்சிதழாக வேண்டும்

  1. September 5, 2017 at 12:22 pm

    Vallinam puthiya ezuththaalarkali uukkuvippaarkalaa?

    • ஸ்ரீவிஜி
      September 12, 2017 at 12:39 pm

      வணக்கம் அண்ணா, உங்களின் வாசகி நான். தங்களின் எழுத்து வசீகரமிக்கது. நம் நாட்டு சிறந்த படைப்பாளர்களை உங்களை தவிர்த்து விட்டு பட்டியல் போடமுடியாத அளவிற்கு முக்கிய இடத்தில் உள்ளவர் நீங்கள்.

      இன்றைய இளைஞர்களுக்கு ஈடாக எழுதக்கூடிய நவீன எழுத்தாற்றலும் கொண்ட ஓர் படைப்பாளி நீங்கள். முதன் முதலின் உங்களின் சிறுகதையை பத்திரிகையின் வாயிலாக வாசித்தபோது, இவர் மலேசிய எழுத்தாளரா, அல்லது தமிழ்நாட்டு எழுத்தாளரா? என்று எனக்குள் வினா.! ஆச்சிரியமும் கூட. இதுகாரும் தட்டையாக, மகிழ்வூட்டுகிற, சுபம், வணக்கம் போன்ற எழுத்துகளை தொடர்ந்து வாசித்துப்பழகிய நான், முதன்முதலில் வித்தியாசமான எழுத்தோவியத்தைக் கண்டு வியந்தது உங்களின் எழுத்துகளைத்தான். அப்பேர்பட்ட எழுத்துகள் உலக அளவில் சென்று சேரவேண்டுமென்றால், அது இணையத்தளத்தால் மட்டுமே சாத்தியம். அதைத்தான் வல்லினம் செய்துகொண்டிருக்கிறது. கோ. புண்ணியவான், சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, பாலமுருகன், பாண்டியன், கங்காதுரை, நவீன், விஜி, யோகி, பூங்குழலி, போன்ற எழுத்தாளர்களை உலக முழுக்க உள்ள தமிழர்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்/கண்டுகொண்டார்கள் என்றால் அதற்குப் பாலம் அமைத்துக்கொடுத்தது நமது வல்லினம்தான்.

      வல்லினம் எழுத்து வடிவில் ஒரு இதழாக வந்துக்கொண்டிருந்தால், இப்படி உலகமுழுக்க இருக்கின்ற வாசகர்களைச் சென்று அடைந்திருக்குமா என்பது சந்தேகமே.! மற்ற இதழ்களும் உண்டு அவைகள் உள்நாட்டுச் செய்திகளை பரப்பும் கருவியாக மட்டுமே இருந்துவருகிறது ஆனால் நல்ல இலக்கியத்தை உலகிற்குக்காட்டுகிற பணியினை நல்ல முறையில் செய்து வருவது நமது வல்லின இணைய இதழ்.

      மலேசிய சூழலைப் பொருத்தமட்டில் (எனக்குத் தெரிந்து) அச்சு ஊடக வாசகப் (நல்ல வாசிப்பை நேசிப்பவர்கள்) பயணிப்பாளர்கள் கணிசமாகக் குறைந்து வருகின்றனர் என்று தைரியமாகச் சொல்லலாம். ஏன், நான் கூட எல்லாவற்றையும் இணையத்திலேயே வாசித்துக்கொள்வேன்.

      இங்கே எழுதுபவர்கள், இங்கே அறிமுகப்படுத்தப்படுபவர்கள், இங்கே சொல்லப்படுகிற விவரங்கள் மிக விரைவாக மக்களைச் சென்று அடைகிறது என்பது கண்கூடு. அதுவே இன்றைய காலகட்டத்து நிதர்சனம். தற்போதைய தலைமுறைக்கு எது தேவையோ அதை நோக்கியே வல்லினத்தின் பயணமும் அமந்திருக்கிறது.

      வல்லினத்திற்கென்றே வாசகப்பரப்பு இருப்பது அவர்கள் நிகழ்த்துகின்ற நிகழ்வின் போது கூடுகிற வாசக கூட்டம் சான்று.

      நானும் வல்லினத்தின் தீவிர வாசகி.

      இதை நன்முறையில் பல போராட்டங்களுக்கு மத்தில் தொடர்ந்து நடத்திக்காட்டிவரும் எனது அருமை அன்புக்குரிய நண்பர்/தம்பி/ சகோதரன்/ நவீன் அவர்களுக்கு எனது மனப்பூர்வ பாராட்டுகள்.

      தொடரட்டும் இந்த இலக்கியப்போர். இந்த 100வது இதழ் விழா சிறக்க வாழ்த்துகள்

      • ஸ்ரீவிஜி
        September 12, 2017 at 12:41 pm

        இதை நன்முறையில் பல போராட்டங்களுக்கு //மத்தில்// (மத்தியில்) தொடர்ந்து நடத்திக்காட்டிவரும் எனது அருமை அன்புக்குரிய நண்பர்/தம்பி/ சகோதரன்/ நவீன் அவர்களுக்கு எனது மனப்பூர்வ பாராட்டுகள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...