வல்லினத்தின் புதிய எழுத்துப்போக்கு

கொ.புஇன்றைய காலக்கட்டத்தில் மலேசியாவில் படைப்பிலக்கியம் கொஞ்சமும் தீவிரத்தன்மை இல்லாமல், கேளிக்கைத்தனமாகத்தான் பார்க்கப்படுகின்றது. எந்த எழுத்தாளர் சங்கமும் இதனைத்தான் முன்னெடுக்கின்றன. அவர்களுக்கு இருக்கும் அறிவை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு இருக்கும் மொழியை வைத்துக் கொண்டு பத்திரிகையில் கதை கவிதைகளை எழுதுகிறவர்கள் பலர். அவை பிரசுரமானதும் மகிழ்ச்சியடைந்து விடுகிறார்கள். அதுதான் இலக்கியம் என நினைக்கிறார்கள். கேளிக்கைகளைக் கொண்டாடுகின்ற மனம் எழுதிய கேளிக்கை படைப்புகளாகத்தான் அவை உள்ளன. வல்லினம் வந்த பிறகு தீவிர இலக்கியத்தை அவர்கள் முன்னெடுத்தார்கள். தீவிரமான இலக்கியத்தை பேசினார்கள். எது இலக்கியம் என அறிமுகம் செய்தார்கள். எதையெல்லாம் எழுதவேண்டும்; எழுத்தாளர் எதையெல்லாம் வாசிக்க வேண்டும் என்ற அறிமுகத்தை உருவாக்கினார்கள். பலர் இவர்களை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். இதையெல்லாம் எழுதலாமா என சந்தேகித்தார்கள். தமிழலகத்தில் சில சிற்றிதழ்கள் போல இங்கு வல்லினம் இலக்கியத்தில் மறுமலர்ச்சி இயக்கமாக இருந்து அதனை செயல்படுத்திகொண்டிருக்கிறது. பினாங்கு மாநில எழுத்தாளர் சங்கம், பேராக் மாநில சங்கம், மலேசிய எழுத்தாளர் சங்கம் என நான் பல இடங்களுக்கு நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளேன். ஆனால் எங்கும் தீவிரத்தன்மை இல்லாமல் இருக்கும். எழுபது வயது மரபு கவிஞர் தான் மேடையேறி கவிதை படிக்க வேண்டும் என கேட்டு அதையும் அவர்கள் செய்ய வைப்பார்கள். அவரும் நான்கு வரிகளில் அவர் எழுதிய கவிதையை மேடையில் வாசிப்பார். அது தரமாகவும் இருக்காது. எழுத்தாளர் சங்கமும் அவரைப் போன்றவர்களை வளர்க்கவில்லை.

இந்நிலையில் மறுமலர்ச்சியாக மட்டுமில்லாமல் அறிவு சார்ந்த இயக்கமாகவும் வல்லினம் இயங்குகிறது. வல்லினத்தில் நானும் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். வழக்கமான கட்டுரைகளாக இல்லாமல் ஆழமானவையாக அவை இருக்கும்படி ஆய்வு செய்து எழுதுகிறேன். இவ்வாரான மனநிலைக்கு எழுதுபவர்களையும் வல்லினம் மாற்றியது. வல்லினம் புதிய வகை எழுத்தாளர்களை, சிந்திக்க கூடிய எழுத்தாளர்களை வளர்த்துக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். சமீபத்தில் இவர்கள் நடத்திய சிறுகதை போட்டிகளை பார்க்கும் போது, பல கதைகள் நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றன. செல்வம் காசிலிங்கம். ஐஸ்வர்யா, கலைசேகர் இவர்களையெல்லாம் பார்க்கும்போது நல்ல எழுத்துகளைக் கொடுக்க கூடிய புதிய எழுத்தாளர்களாக இருக்கிறார்கள்.

 

1 comment for “வல்லினத்தின் புதிய எழுத்துப்போக்கு

  1. ஸ்ரீவிஜி
    September 11, 2017 at 5:01 pm

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார். எழுதுவதற்கு முன் நிறைய வாசித்திருக்கவேண்டும் என்பது வல்லினம் வைக்கின்ற முக்கிய கோரிக்கை. இது எதனால் என்றால், தமிழில் புலமை இருந்தால் போதும், பிழையில்லாமல் எழுதத்தெரிந்தால் போதும், வஜவஜ என்று ’இலக்கியம்’ படைத்துவிடலாம் என்கிற எண்ணம் இருக்கிறதல்லவா, அதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதனை நான் வல்லினத்திடம் கற்றுக்கொண்ட பாடமாக கருதுகிறேன். எச்சரிக்கை உணர்வுடன், யாரையாவது impress பண்ணவேண்டும் என்று எழுதினால் அது குப்பை எழுத்தாகப்பார்க்கப்படும் என்கிற தெளிவும் பிறந்ததிற்கான ஒரே இடம் வல்லினம்தான் என்பதை இந்த 100வது விழாவின் மூலம் சொல்லிக்கொள்வதில் பெருமை படுகிறேன். இந்தப்பயணத்தில் வல்லினத்தின் உளிபட்டு செதுக்கப்பட்ட எனது எழுத்துகளும் அவ்வப்போது தலைகாட்டி இருப்பது எனக்கும் மிகுந்த உற்சாகம். இந்த விழா சிறப்பாக நடைபெற எனது மனப்பூர்வ வாழ்த்துகள்.
    `எழுது, அதற்கு முன் வாசி, ஒன்றல்ல நிறைய.’ வல்லினத்தின் தாரக மந்திரம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...