வல்லினம் ஏற்படுத்திய வாழ்வின் திருப்பம்

ஜீவாஎனக்கும் வல்லினத்திற்குமான தொடர்பு கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்டது. ஒரு நாள் திடீரென நவீன் என்னை அழைத்து அவரது சிறுகதைகளை நான் ஆய்வு செய்ய முடியுமா என வினவினார். மனதில் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் கூட நமக்கு அது ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என சொல்லி அந்த விமர்சனத்துக்கு ஒப்புக்கொண்டேன். அதனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரவாங்கில் ஒரு வீட்டில் செய்தார்கள். அந்த அமர்வுக்கு நான் சென்றிருந்த சமயத்தில்தான் ஒரு குழுவாக இவர்கள் என்னென்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. அங்குதான்விஜயலட்சுமி, தயாஜி இவர்களோடு இதர நண்பர்களை சந்தித்தேன். எனது விமர்சனத்தை நான் வாசிக்கும்போது சரியோ தவறோ என யோசிக்காமல், என் மனதில் பட்ட விமர்சனங்களை நான் முன் வைத்தேன். பிறகு என்னைப்பற்றிய ஆவணப்படம் செய்யப்போவதாக சொன்னார்கள். எனக்கு அது அதிர்ச்சியாகவும் அதே சமயத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நாம் கூட ஓர் ஆவணப்படத்தில் வரலாமோ எனத் தோன்றியது. இருந்தாலும் என் வாழ்க்கையை பதிவு செய்வதற்காக இந்த இளைஞர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த ஆவணப்படத்தில் என் வாழ்வு குறித்து எல்லா பகுதிகளையும் நான் சொல்லிவிட்டதாகவே நினைக்கிறேன். அந்த ஆவணப்பட வெளியீட்டில் மலேசியாவில் அவர்கள் கண்டெடுத்த படைப்பாளிகளின் கதையை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து புத்தகமாக்கி அதையும் சேர்த்து வெளியீடு செய்வதற்கான காரியங்களில் ஈடுபட்டதாக நான் கேள்வி பட்டபோது நான் மிகுந்த ஆச்சரியம் கொண்டேன். இவ்வளவு ஆர்வமும் இலக்கியம் மீது உத்வேகவும் கொண்ட இளைஞர்கள் மலேசியாவில் இருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. அவ்வாறே இது ஒரு புதிய அத்தியாயத்தை கொடுக்கும் என நம்பினேன். அந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட போது, என் நம்பிக்கையை அவர்கள் மறுஉறுதி படுத்தினார்கள். வேறு ஒரு திசையில் இவர்கள் சிறகை விரித்து பறப்பதை என்னால் பார்க்க முடிந்தது. மீண்டும் கதை எழுத உத்வேகம் ஏற்பட நான் கலந்துக்கொண்ட வல்லினம் விமர்சனக்கூட்டம் முக்கிய காரணம். அதன் பிறகு நடந்த சிறுகதை கலந்துரையாடல்களுக்கும் நான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நாட்டின் மூத்த எழுத்தாளரான ரெ.கார்த்திகேசுவிற்குப் பாராட்டு விழாவை எழுத்தாளர் சங்கம் நடத்தவுள்ளதாக கேள்விப்பட்டு, பெ.இராஜேந்திரனிடம் அவரைப்பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டேன். எல்லோருமே தெரிந்த விடயங்களை பற்றி சொல்லக்கூடும் என்பதால், நாங்கள் ஆரம்பத்தில் நடத்திய ‘இலக்கிய வட்டம்’ குறித்த சில செய்திகளை பதிவு செய்ய நினைத்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு ரெ,கார்த்திகேசுவை தொடர்பு கொண்டேன். இலக்கிய வட்டத்தின் சில இதழ்களை அவரிடமிருந்து பெற்றேன். இலக்கிய வட்டம் எப்படி தொடங்கப்பட்டது, எப்படி நடத்தப்பட்டது. எனக்கு எப்படி உத்வேகம் கொடுத்து உந்து களமாக இருந்தது எனஒரு வரலாற்று செய்தியை பதிவு செய்தேன்.

என்னிடம் இருந்த ‘இலக்கிய வட்டம்’ இதழ்களை என்னிடமிருந்து பெற்றுகொண்ட நவீன் அதனை குறித்து விமர்சன கட்டுரையை எழுதினார். இந்தத் தொடர்ச்சி எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இப்போது, வல்லினம் 100க்கு என்னையும் சிறுகதையொன்றை எழுதித்தரும்படி நவீன் கேட்டுக்கொண்டார். நானும் அவர் பேச்சை தட்ட முடியாமல், மனதில் ஏற்கனவே இருந்த கதையை அவருக்கு எழுதிக் கொடுத்தேன். அக்கதை இந்த நூலில் வருகிறது. அதோடு வல்லினம் இத்தகைய பெரிய முயற்சியொன்றை எடுத்து இந்த நூலை முக்கிய ஆக்கமாக கொண்டு வருவதிலும் எனக்கு மகிழ்ச்சி. அதோடு வல்லினம் குழுவினரிடம் பழகுவதற்கும் அவர்களோடு இலக்கிய கலந்துரையாடல் நடத்துவதற்கும் எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்லதொரு வாய்ப்பாகவே நான் பார்க்கிறேன். அவர்கள் தொடர்ந்து செய்கின்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சந்திப்புகளுக்கும் எனது உடல்நிலையால் கலந்துக்கொள்ள முடியாவிட்டாலும் அந்தச் செய்திகளை நான் பார்க்கத்தவறுவதில்லை. அதே சமயம், வல்லினத்தின் இணைய பக்கத்தில் இருந்து நிறைய செய்திகள் என் மின்னஞ்சலுக்கு வந்து சேரும். எல்லாவற்றையும் முழுமையாக படிக்க முடியாவிட்டாலும் யார் யார் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என மேலோட்டமாக என்னால் பார்க்க முடியும். அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து நிறைய எழுத்தாளர்களை இங்கு அழைத்து வந்து இலக்கிய பரிமாற்றங்களை நடத்துகின்றார்கள் என்று கேள்விபட்டுள்ளேனே தவிர நான் அவ்வாறான கூட்டங்களுக்கு சென்றது ஒன்று இரண்டாக இருக்கலாம். ஆனால், அக்கூட்டங்கள் இளைஞர்களுக்கு பயனாக இருக்கும். வல்லினம் எனக்கு அறிமுகமானதில் எனக்கு மகிழ்ச்சி. வல்லினத்தின் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களின் நட்பும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. வாழ்க்கையில் சிறிய திருப்பம் இதன் வழி ஏற்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...