மேஜிக் பையுடன் சுண்ணாம்பு மலை திருடன்!

15.9.2017 – வெள்ளி

வழக்கம்போல தயாஜியும் நானும்தான் விமான நிலையத்தில் எழுத்தாளர் கோணங்கிக்காகக் 21728331_1690638897615848_3664065468584499206_nகாத்திருந்தோம். முதல் சந்திப்புதான். ஆனால் எளிதாக அடையாளம் காண முடிந்தது. ஐந்து மணிக்குள் சாலை நெரிசலாகும் பகுதிகளைக் கடந்துவிட வேண்டுமென அவசர நல விசாரிப்புகளுடன் காரை அடைந்தோம். தயாஜி காரில் காந்திருந்தார். காரிலேயே ‘வல்லினம் 100’ புத்தகத்தைக் கொடுத்தேன். பொதுவாக ‘வல்லினம்’ குறித்தும் ‘கல் குதிரை’ குறித்தும் பேச்சு போனது. திடீரென கோணங்கி கார் ஓட்டுவது யார் எனக்கேட்டார். ‘தயாஜி’ எனக்கூறியவுடன் உற்சாகமாக இரண்டு குத்து விட்டார் தயாஜியின் கையில். ‘கல் குதிரை’ இதழில் தயாஜியின் ‘இன்னொரு கிளை முளைக்கிறது’ எனும் சிறுகதை முன்பு பிரசுரமாகியிருந்தது. புனைவுகள் வழி அறிமுகமானவரை பாதிதூர பயணத்துக்குப்பின் அடையாளம் காணும் உற்சாகம் அவர் குரலில். “நிறைவா இருக்கு. எழுத்தாளர்கள் என்னை விமான நிலையத்திலிருந்து இரட்டை பறவைகள் போல தூக்கிச் செல்வது சந்தோஷமா இருக்கிறது…” என்றார்.

நேராக வீட்டுக்குதான் வந்தோம். பொருள்களை வைத்துவிட்டு இரவில் இரட்டை கோபுரம் பார்க்கச் செல்வது சரியெனப்பட்டது. பகலில் சாதாரணமாக இருக்கும் இரட்டைகோபுரம் இரவில்தான் விழித்திருக்கும். பயணத்தில் இரவு நேர கோலாலம்பூர் சாலைகளைக் கோணங்கி வேடிக்கை பார்த்தபடி வந்தார்.  “எல்லாமே ஒளி மிருகமா படுத்துக்கிடக்கு பாரு” என்றார். பெரும்பாலும் அவர் பேச்சுகளில் படிமம் இயல்பாகவே தொற்றிக்கொண்டுவிடுகிறது. அவரது நாவல்களில் மலேசியா மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகள் குறித்து தகவல்களைத் திரட்டி எழுதியுள்ளதால் இந்த நிலப்பரப்பில் பயணிப்பது நாவலுக்குள் பயணிப்பதாகவே அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். இரட்டை கோபுரத்தைப் பெரிதாக அவர் ரசிக்கவில்லை. ஒருதரம் ஏறிட்டுப்பார்த்து ‘ஓ’ என்றார்.

அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்தோம். வல்லினம் போட்டிக்கு வந்த சிறுகதைகள் குறித்து பேசினோம். கோணங்கியின் இலக்கியம் குறித்த பார்வையின்மேல் அவ்விரவில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் பட்டது. புனைவுகளை உள்வாங்கி தனது படிமங்களுக்குள் அதனை முங்கச்செய்து இன்னொரு வண்ணத்தில் மீண்டும் அதை வெளியில் எடுக்கிறார். அப்போது அது முற்றிலும் புதிய புனைவாகிவிடுகின்றது. அது இரு வெவ்வேறு இனக்குழுவுக்குப் பிறந்த பிள்ளைபோல அழகாக ஆரோக்கியமாக இருக்கிறது.

21731220_1690838007595937_8824737180055278346_nகோணங்கியின் புனைவுகளைக் காட்டிலும் அவர் குறித்து பிறரது பதிவுகளை வாசித்ததுண்டு. அவர் துடிப்பான பயணி என்பதும் அவரது வீடு ரயில் தண்டவாளத்தின் அருகே இருப்பதும் நினைவுக்கு வந்தது. ரயிலின் சத்தம் தொந்தரவாக இருக்காதா எனக்கேட்டேன். “ரயில்தான் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கு. ரயில் என்பது ஒன்றல்ல. அது ஒவ்வொரு சமயமும் ஒவ்வொன்றாக இருக்கிறது. யாரும் இல்லாத தனிமையில் செல்லும் ரயிலை அனாதையாக எங்கே செல்கிறது எனப்பார்ப்பேன். நள்ளிரவுகளில் கூட்டமாகச் செல்லும் மக்கள் அப்படி எங்குதான் இத்தனை தீவிரமாகச் செல்கிறார்கள் எனப்பார்ப்பேன். சிலசமயம் தூங்கு மூஞ்சி ரயிலும் செல்வதுண்டு. ரயில் சத்தம் எழுதுவதற்கான ஒரு மூட் கொடுக்கிறது,” என்றார்.

“இது ஒரு மேஜிக் பை. உங்க எல்லாருக்கும் இதில பொருள் இருக்கு. எடுக்க எடுக்க வரும்” என்றார். கல் குதிரைகள், அவரது சிறுகதை தொகுப்புகள் என அந்தப்பையில் இருந்து வெளிபட்டது. பை காலியாகி தொள தொளவென இருந்தபோதும் “இன்னும் நிறைய இருக்கு. இது மேஜிக் பை…” எனக்கூறி சிரித்தார். கோணங்கியால் அருகில் இருப்பவர்களைக் குழந்தைகளாகவே அணுக முடிகிறது. குழந்தைகளை ஆச்சரியப்படுத்துவதுபோல கற்பனைகளால் ஆச்சரியப்படுத்துகிறார். குழந்தைகள் ஆச்சரியப்படுவதுபோல எளிய விடயங்களுக்கு ஆச்சரியம் அடைகிறார்.

சந்தித்த முதல் நாளிலேயே அவரது மனம் முழுவதும் கல் குதிரையையே சுற்றி சுற்றி வருவது தெரிந்தது. எங்கிருந்து தொடங்கினாலும் கல் குதிரையில் வந்தே முடித்தார். பல சமயம் கல் குதிரையில் இருந்தே பேச்சை தொடங்கினார். மலேசியாவுக்கு வரும் முன்னர்தான் ‘கல் குதிரை 28 -29’ தயாராகி வந்திருந்தது. அது கொடுக்கும் அகச்சோர்வை கொண்டாடும் மனநிலையில் இருந்தார். அவரது பயணம் ஒரே நேரத்தில் வெளியே – உள்ளே என சர்ப்ப பிரதிஷ்டைகளாக இருந்தன. நாங்களும் அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டே இரு வேறு மனநிலைகளோடு இரவில் பயணித்தோம்.

16.9.2017 – சனி

காலையிலேயே பத்துமலைப் பயணம். கோணங்கி பெரும்பாலும் சுண்ணாம்பு மலையில் தன்னை இழந்திருந்தார். “எங்குமே மலைன்னா நிமிர்ந்து நிக்கும். இங்க மலை ஒழுகுது பாரு. இது ஒழுகும் மலை,” என்று குதூகலமானார். மறுநாள் கலை இலக்கிய விழா என்பதால் மலையில் அவரைக் கூட்டிச்செல்லும் அறிய வாய்ப்பை தயாஜிக்கு ஏற்படுத்திக்கொடுத்து நான் காரில் ஓய்வெடுத்தேன். கோணங்கிக்கு தயாஜி தொடர்ந்து புனைவுகளை எழுதவேண்டும் என்பதில் அக்கறை இருந்தது. தொடர்ந்து அது குறித்துபேசி ஊக்கப்படுத்திக்கொண்டிருந்தார். ‘கல் குதிரை’யும் இளம் படைப்பாளிகள் பலர் மையமிட்டுள்ள சிற்றிதழ்தான். தயாஜி வல்லினத்தில் இருந்தால் தாங்கள் வல்லினத்தை விட்டு நீங்கிவிடுவதாகக் கூறிய உன்னதப்படைப்பாளிகள் சிலரை நினைத்துக்கொண்டேன். ஒரு நல்லப் படைப்பாளி தீண்டாமையைக் கடைப்பிடிக்கமாட்டான். படைப்பில் எவ்வளவு கறார் பார்வையைக் கொண்டிருந்தாலும்  அதை யாரிடம் செலுத்த வேண்டும் எனும் இங்கிதம் இருக்கும். படைப்புகள் வழியாக இளம் படைப்பாளியின் ஆர்வத்தையும் அதன் எதிர்க்காலத்தையும் அனுமானிக்க நுட்பமான மனநிலை தேவைப்படுகிறது. அதை  கொண்டுள்ளவர்களே ஒரு காலத்தின் இயக்கமாகிறார்கள்.   சுந்தர ராமசாமி முதல் கோணங்கி வரை அக்குணம் நிரம்பியுள்ளதை அறிய முடிந்தது. அதுவே அங்கு புதிய படைப்பாளிகள் உத்வேகமாக கிளர்ந்து எழ காரணமாக உள்ளது.

இரண்டு மணி நேரத்துக்குப் பின் நல்ல களைப்புடன் திரும்பினார்கள். நேராக வண்டியை கிராண்ட் பசிப்பிக் விடுதிக்கு விட்டேன். காலையிலேயே ராம் சந்தர் மற்றும் சுஜா சிங்கையில் இருந்து வந்துவிட்டிருந்தனர். நாளைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அவர்கள் இருவரின் பொறுப்பில் கோணங்கியை விட்டோம். ராம் சந்தரை ஏற்கனவே குறுநாவல் பட்டறையில் சந்தித்துள்ளேன். சுஜாவை அன்றுதான் பார்த்தேன்.

21766349_1698076733538731_3622208054216524755_nமாலையில் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் ஶ்ரீதர் ரங்கராஜ் மொழிப்பெயர்த்த ‘பயணம்’ நூலில் அறிமுகக்கூட்டம் De’ Divine Cafe -இல் ஏற்பாடாகி இருந்தது. தங்கும் விடுதியில் கோணங்கியுடன் சுஜா, ராம் சந்தர், ராஜி மற்றும் அவரது தோழி ஆகியோரை ஏற்றிக்கொள்ளச் சென்றோம். வழியில் உமா கதிர் அவசரமாக எங்கோ நடந்துகொண்டிருந்தார். அப்போதுதான் சிங்கையில் இருந்து வந்து சேர்ந்திருந்தார். அவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்படும் அவசரத்தில் சிவானந்தனை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தேன். சிங்கையிலிருந்து வந்த அவர், விமான நிலையத்தில் இருந்து அறைக்கு வந்து, அங்கிருந்து புறப்பட்டு நிகழ்ச்சி நடக்கும் இடம் நோக்கி வந்து சேர்ந்தார்.

Samar Yazbek சிரியா போர் குறித்து நேரடி அனுபவமாக எழுதிய Crossing நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்அறிமுகம் 7.30க்கெல்லாம் தொடங்கிவிட்டது. வழக்கறிஞர் பசுபதி மாதம் முதல் சனிக்கிழமை அறிவார்ந்த குழுக்களுடனான சந்திப்புகளை நடத்தத் திட்டம் இட்டிருந்தார். அவ்வகையில் இது இரண்டாவது கூட்டம். இந்நூலை மொழிபெயர்த்த ஶ்ரீதர் விரிவாகவே அதன் உள்ளடக்கம் குறித்து பேசினார். நூல் குறித்து கருத்துகளும் பரிமாறப்பட்டன. வந்திருந்த அனைவருக்கும் மை ஸ்கில்ஸ் அறவாரியம் மூலம் நூல் இலவசமாக வழங்கப்பட்டது. சிங்கை நண்பர்களுடன் கோணங்கியும் இந்நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்துகொண்டார். தனது நண்பர் ஒருவரின் நூல் அறிமுகம் காண்பதில் அகம் மகிழ்ந்தார். தனது நூல் ஒன்றை ஶ்ரீதருக்கு அவ்வரங்கிலேயே அன்பளிப்பாக வழங்கினார்.

சிங்கை நண்பர்களை முதல்நாளே நான் வரச்சொல்லியிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் கோணங்கி பினாங்கு புறப்படுவதால் அவருடன் நேரம் செலவிட சனி இரவு அவர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம் எனக் கருதினேன். நண்பர்களுக்கு அவ்விரவை நன்முறையில் கோணங்கியுடன் கழித்தனர்.

17.9.2017 – ஞாயிறு – 20.9.2017 புதன்

கலை இலக்கிய விழா முடிந்தவுடன் கோணங்கி பினாங்கு புறப்பட்டார். பல இலக்கியக் குழுக்களும் அவரது கருத்துகளை உள்வாங்க வேண்டும் எனக்கருதியதால் மழைச்சாரல் (தைப்பிங்) மற்றும் நவீன இலக்கியக் களம் (கூலிம்) ஆகிய குழுக்கள் மூலம் சில சந்திப்புகளை ஏற்பாடு செய்ய முடிவானது. வடக்குப் பகுதிகளில் மூன்று நாள் அலைதலுக்குப் பின் கோணங்கி வியாழன் காலையில் மீண்டும் கோலாலம்பூர் வந்து சேர்ந்தார்.

21.9.2017 – வியாழன்

21766723_1698076933538711_3068372808988556570_nகோணங்கியை ரயில் நிலையத்தில் இருந்து ஶ்ரீதர் மற்றும் நித்தியா ஏற்றிக்கொண்டனர். மாலையில் வீட்டுக்கு வந்தபோது பூர்வக்குடியினரின் இசைக்கருவிகள் சிலவற்றை அவர் வாங்கி வைத்திருப்பது தெரிந்தது. அவரது தம்பி முருகபூபதி நடத்தும் நாடகப்பட்டறைக்கு அவை தேவையானவை என்றார். அன்று மாலையில் கோலாசிலாங்கூர் (புக்கிட் மெலாவாத்தி) சென்றது இதமானது. ஶ்ரீதர், விஜி, தயாஜி ஆகியோருடன் பயணம் தொடங்கியது. அங்குள்ள குரங்குகளுக்கு ஏற்கனவே ஜெயமோகனுடனும் நாஞ்சில் நாடனுடனும் நல்ல பழக்கம் இருந்தது. பரிணாம வளர்ச்சியில் அவற்றிடமிருந்து நவீன இலக்கியம் தோன்றலாம் என்பதால் இம்முறை கோணங்கியையும் பழகவிட்டோம்.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிலாங்கூர் சுல்தானின் நிர்வாக மையமாக இருந்த இடம் கோலா சிலாங்கூரின் புக்கிட் மேலாவாத்தி. சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்து 1784ஆம் ஆண்டு டச்சுக்காரர்களிடம் வீழ்ந்த கோட்டை,”Altingsburd Fort” என்று டச்சுக்காரர்களால் பெயரிட்டது. சுல்தான் பட்-இப்ராஹிம் ஜனவரி 1785-இல் போரிட்டு மீண்டும் இக்கோட்டையை மீட்டார். ஒரு சுல்தான் தனது கோட்டையை ஒரு வெளிநாட்டு சக்தியிலிருந்து மீட்க முடிந்த முதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.

புக்கிட் மேலாவதி கோட்டையின் பாதுகாக்கப்பட்ட சுவர்கள், அரண்மனை மைதானம்,21768133_1698076790205392_179725242869962217_n கலங்கரை விளக்கம், அரச கல்லறை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தலையை வெட்ட பயன்படுத்தப்படும் ஒரு தட்டையான கல் என இன்றும் வரலாற்றின் சில பகுதிகள் பழந்தன்மையுடன் பாதுகாக்கப்படுகின்றன. கோணங்கி தட்டையான கல்லைப் பார்த்ததும் அப்படியே அமர்ந்துவிட்டார். அவ்விடத்தைவிட்டு அகல மனம் வராதவராகவே இருந்தார். இது இடைக் கற்காலம் (Mesolithic) காலக்கட்டத்துக் கல் என்றார். ஜெயமோகனும் இக்கல்லை அவ்வாறுதான் குறிப்பிட்டார். கொசுக்கள் உடலை கடுமையாகப் பதம் பார்த்தன. “ஒரு கற்கால சூழலில் நுழையும் நம்மை கொசுக்களா விரட்டுவது?” என கோணங்கி சலித்துக்கொண்டார்.

ஆற்றோரம் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தில் நண்டு, கனவாய், இரால் என நீர்வாழ் உயிர்களை தட்டுகளுக்குக் கொண்டுவந்தோம். உணவுக்குப் பின் மீண்டும் ஆற்றில் பயணம். இம்முறை மின்மினிப்பூச்சிகளைப் பார்க்கச் சென்றோம். அவ்வனுபவம் சலிக்காதது. கோணங்கி பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். சூழலை உள்வாங்கிக்கொண்டிருந்தார்.

வீடு திரும்பியப்பின் பெரும்பாலும் களைப்பில்லை. இலக்கியம் குறித்தும், இதழியல் குறித்தும் கோணங்கி பேசிக்கொண்டிருந்தார். கல் குதிரையை குறைவாகப் பதிப்பிப்பது குறித்து பேச்சு வந்தது. தன்னை முழுக்கவே சிற்றிதழ் சூழலில் இயங்குபவராகக் கட்டமைத்துக்கொண்டுள்ள அவரிடம் நூல் விற்பனை குறித்தெல்லாம் கவலை இல்லை. உரியவரிடம் அவை சேர்ந்துவிடுவதாகக் கூறினார். பிரம்மராஜன் நடத்திய மீட்சி இதழிலில் இருந்து தனது இலக்கியப்பயணத்தைக் கொஞ்சம் விரிவாகவே பகிர்ந்துகொண்டார். கல் குதிரைக்கான படைப்புகளை அவர் வாங்கும் விதம், வடிவமைப்பாளர்களிடம் அவர் வேலை வாங்கும் லாவகம் என அவ்விரவு பேச்சு சுவாரசியமானது: எனக்கு பல நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தது.

22.9.2017 – வெள்ளி

21761410_1697009673645437_7800546219174039812_nவல்லினத்தின் வருடாந்திரச் சந்திப்பை வழக்கம் போல ஈப்போவில் உள்ள கங்காதுரை வீட்டில் ஏற்பாடு செய்திருந்தோம். கோணங்கியைக் கொஞ்சம் ஓய்வெடுக்க வைத்து வல்லினத்தின் அடுத்தத்த திட்டங்கள் குறித்து பேசினோம். வல்லினத்தில் கலைசேகர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டார்.. ஶ்ரீதர் ரங்கராஜ் அவர்களின் பிறந்தநாள் வெகுவிரைவில் வர இருந்ததால் வல்லினம் சார்பாக கங்காதுரை கேக் தயார் செய்திருந்தார். பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் அன்றைய சந்திப்பு முடிந்தது.

அங்கிருந்து புறப்பட்டு பத்துகாஜாவில் அமைந்துள்ள Kallie’s castle சென்றோம். 1910இல் ஸ்காட்லண்டைச் சேர்ந்த ரப்பர் தோட்ட நிர்வாகி William Kellie Smith கட்டிய இந்தக் கோட்டையில் 14 அறைகளுடன் சுரங்கப்பாதைகளும் உள்ளன. இரண்டாவது மாடியில் டென்னில் விளையாடவென தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் முதன் முதலில் பலுதூக்கி வைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட முதல் கட்டடமாக இது கருதப்படுகிறது. இந்த லிப்டை வாங்க போர்த்துக்கல் சென்றபோதுதான் அவர் இறந்துவிட்டார்.

ஈப்போவில் இருந்து புறப்பட்டு வரும்போது கோணங்கியின் நண்பர் மலேசியாவில் பணியாற்றுவது தெரியவந்தது. அவருடன் தொடக்கக் காலத்தில் கல் குதிரை தயாரிப்பில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டவர் எனக்கூறினார். சுங்கை பூலோவில் காரைச் செலுத்தி அறிவழகனைச் சந்தித்தோம். நோய்மையின் காரணமாக அறிவழகனின் தோற்றம் வேறொன்றாக இருந்தது. கோணங்கி கண் கலங்கினார். அவர் உடல் குலுங்கியது. மூன்று நாள்கள் குதூகலத்தை மட்டுமே காட்டிய கோணங்கியால் அழவும் முடியும் என அப்போதுதான் அறிந்தேன். கொஞ்ச நேரம் இருவரும் பழைய நினைவுகளைப் பேசிக்கொண்டிருந்தனர். காரில் திரும்பும்போது “அவன் பழைய அறிவழகன் இல்லை. பழைய நினைவுகள் உள்ள அறிவழகன்” என்றார்.

வீட்டிற்குத் திரும்பியதும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். “அவனும் உன்னைப்போலதான். அனைவரையும் இழுத்து வைத்துக்கொண்டு செயல்படுவான். இருக்கும் பணத்தில் அனைவருக்கும் செலவு செய்வான். அப்படி வேலை செய்தவன் இன்று எப்படி மாறிவிட்டான். தீவிர மார்க்ஸிஸ்டாக இருந்தவன். நெற்றியில் விபூதியும் கைகளில் கயிறுமாக உள்ளான். வாழ்வு அவன் நம்பிக்கையை தின்று மிச்சம் வைத்துள்ளது. நீ உன்னைப் பார்த்துக்கொள்ள வேண்டும். செயல்பாடுகளைவிட படைப்பிலக்கியத்தில் இயங்குவதுதான் முக்கியம். அதுதான் மனச்சோர்வில் இருந்து மீட்கும். செயல்பாடுகளுக்குள் அவ்வப்போது நுழைந்து பின் மீண்டுவிட வேண்டும். கல்குதிரை வேலைகள் முடிந்தபின் நான் என்னை புதுப்பித்துக்கொள்வேன். இந்த மலேசியப்பயணம் அவ்வாறு என்னைப் புதிதாக்குகிறது” கோணங்கியின் குரல் முழுவதும் அக்கறை.

நான் என்னிடம் புகார்கள் இல்லாதது பற்றி கூறினேன். யாழ் உருவாகிய நோக்கம்; அதன் மூலம் பொருளாதார தேவைகளை எதிர்க்கொள்ளும் திட்டங்கள் குறித்து விளக்கினேன். ஆனாலும் செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்டு படைப்பிலக்கியத்தில் மேலும் தீவிரம் காட்டுவதாக வாக்களித்தேன். அவ்விரவு அற்புதமானது. கோணங்கி தான் சுமந்துகொண்டிருந்த கற்பனைகளையெல்லாம் கீழிறக்கி வைத்து வெகு இயல்பான மனிதனாகப் பேசத்தொடங்கினார்.

அந்நிமிடம் கோணங்கியின் கொண்டாட்டங்கள் பலவும் அவரது இயல்பான குணம் அல்ல எனத்தோன்றியது; அல்லது தீவிரமான ஒரு மனநிலையில் அவ்வாறு அந்தரங்கமான தொனி அவருக்கு வாய்க்கலாம். அவர் தான் என்ன செய்கிறேன் என்பதில் அவர் கவனமாக இருக்கிறார். ஓர் உரையாடலில் யார் யார் என்னவாக இருக்கிறார்கள் என்பதை ஓரளவு அனுமானித்துச் சொல்கிறார். இலக்கிய உலகில் தனது பங்களிப்பு என்ன என்பதிலும் எதிரில் அமர்ந்திருப்பவர் என்ன செய்ய முடியும் என்பதிலும் கூர்மையான பார்வை கொண்டுள்ளார். அது எனக்கு ஆச்சரியமாக இல்லை. கல் குதிரை போன்ற ஓர் இதழை உருவாக்குபவர் வேறெப்படி இருக்க முடியும்? அன்றைய இரவு கண்ணீராலும் சிரிப்புகளாலும் நிரம்பியிருந்தது.

23.9.2017 – சனி

பொதுவாக மனச்சோர்வு இருக்கும் சமயங்கள் பூர்வக்குடியினர் வசிக்கும் பகுதியில்21761842_1698076986872039_8541075303237687829_n அமைந்துள்ள ஒரு டீக்கடைக்கு நான் செல்வதுண்டு. கோணங்கியைக் காலையில் அங்கு அழைத்துச்சென்றேன். வெயிலும் மழையும் இல்லாத மந்தமான காலையில் இருவரும் டீக்குடித்துக்கொண்டிருந்தோம். முன்தினம் ஈப்போவில் பார்த்த சுண்ணாம்பு மலை பற்றி பேசிக்கொண்டிருந்தார். “இங்க பத்துமலையிலும் சுண்ணாம்பு மலைய பார்த்தேன். ஆனா கங்காதுரை ஈப்போவில தோ பாருங்க சுண்ணாம்பு மலைனு ஆச்சரியமா சொன்னான் பாரு. அப்ப அது பயங்கரமா மனசுக்குள்ள பூந்துடுச்சி. நீ நிறைய சுண்ணாம்பு மலை பற்றி சொன்ன. ஆனால் தகவல்களால மனம் திறக்குறதில்ல. ஆச்சரியங்களால திறக்குது. கலைஞனுக்குத் தகவலைவிட ஆச்சரியங்கள்தானே முக்கியம்” எனக்கூறி ரொட்டி சானாய் ஒன்றுக்கு ஆர்டர் கொடுத்தார்.

“நேத்து Kellie Smith கனவுல வந்தான். அவனோட பெரிய டிஸ்கஷன். லிப்ட் வாங்கப்போறேன்னு போனியே உண்மையா போனியா? இல்ல ஈப்போ சுண்ணாம்பு மலை குகைகள் வழியா நொழஞ்சி பத்துமலை சுண்ணாம்பு மலைகளுக்கு நடுவுல உலாவிக்கிட்டு இருக்கியா? அப்படின்னு கேட்டேன். அவன் ஒன்னும் சொல்லல…” கொஞ்ச நேரம் அமைதியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

“இது அற்புதமான இடம். என் மனசு தெரிஞ்சி இங்க கூட்டி வந்திருக்க. காட்டுக்கு நடுவுல டீக்கட. இந்தப் பூர்வ வாழ்வை கெடுப்பது எது தெரியுமா? எங்கோ தொலைவுல ஓடுற வாகனத்தோட சத்தம். இந்தச் சத்தம் இந்த இடத்துக்கு அந்நியமானது. கார்கள் காட்டுக்கு அந்தாண்டப்பக்கமா ஓடுது. அதுல போற யாருக்கும் காட்டுக்கு இந்தாண்ட இருக்குற வாழ்க்க தெரியாது.” எனக்கு ‘ஃபாரென்ஹீட் 451’ நாவலில் வரும் வரிகள் நினைவுக்கு வந்தன. அதில் புத்தகங்களை எரிப்பவனிடம் க்லாரிஸ் எனும் பெண் கூறுவாள், ‘புல் எப்படி இருக்கும், மலர்கள் எப்படி இருக்கும் என கார் ஓட்டுபவர்களுக்குத் தெரியாது. அவற்றை அவர்கள் நிதானமாகப் பார்ப்பதில்லை.’

அருகில் இருக்கும் பூர்வக்குடியினர் மியூசியம் சென்றோம். அதன் அருகில் பூர்வக்குடிகளின் தலைவன் தங்கள் தயாரிப்பில் உள்ள பொருள்களை விற்றுக்கொண்டிருந்தார். கோணங்கி தேடிய இசைக்கருவி அங்கு இல்லை. பலவகையான மாந்திரீகப் பொருள்கள் இருந்தன. இடுப்பில் கட்டுவதற்கென ஒரு கயிறு தன்னிடம் மிகப்பிரபலம் என்றார். கோணங்கியிடம் அது குறித்து விளக்கினேன். “இதையெல்லாம் நம்பனும். அதிசயங்களை நம்புவதுதான் மனதை கலைக்காக பக்குவப்படுத்தும் வழி. எல்லாத்துலயும் அறிவை தலையிட வைத்து விலகிப்போகக்கூடாது” என்றவர் அந்தத் தலைவனை கட்டியணைத்து விடைப்பெற்றார். “அவரிடம் ஏதோ சக்தி இருக்குடா. கட்டிப்பிடிக்கும்போது உடம்புல எனர்சி நுழையுது.”

அவர் உண்மையாகவே சொல்கிறாரா? அல்லது அவரது புனைவுலகத்திற்குள் நுழைந்துவிட்டாரா? என்றக் குழப்பத்திலேயே காரைச் செலுத்திக்கொண்டிருந்தேன்.

“வெளிச்சங்களவிட இருட்டறையில் இருக்கும் மனதில்தான் கலை உருவாகுது. குற்றத்தில் ஒரு நறுமணம் இருக்கு. அறமென்பதே லிமிடேஷனானது. அழுக்கில ஆர்ட் இருக்கு.”

மலாயா பல்கலைக்கழகம் நோக்கிச் சென்றோம். “ஏன் நீங்க கல்யாணம் செய்துக்கல?” என்றேன்.

“சொந்தத்துல ஒரு பொண்ண பார்த்தாங்க. சின்ன வயசுலேயே நாங்க இருவரும் ஜோடின்னு பேசி வச்சிட்டாங்க. நான் ஒரு சமயம் கல்யாணம் வேண்டாமுனு ஓடிட்டேன். அவளுக்கு இப்ப வயசு அறுபதுக்கு மேல ஆவுது. கல்யாணமெல்லாம் செஞ்சி பிள்ளையெல்லாம் இருக்கு. இன்னமும் என்னைப் பார்த்தா திட்டுவா. அவ திட்டுற வரைக்கும்தான் நான் அவ மனசுல இருக்கேன்னு அர்த்தம். திட்டுறத விட்டுடா நான் செத்துட்டேன். என்ன சொல்ற…” எனக்கூறி சிரித்தார்.

“அதுக்கு அப்புறமா காதல் வரலயா?” மீண்டும் கேட்டேன். அவரை இன்னும் அணுக்கமாக அறிய ஆவல் எழுந்தது.

“அதெல்லாம் வராம இருக்குமா… படைப்பாளி காதல் செஞ்சா நாய்க்குட்டி மாதிரி ஆயிடுவான். காதலிக்கிற பொண்ணையே சுத்தி சுத்தி வருவான். அதுல தீவிரமா ஆயிடுவான். அப்புறம் ஒரு பய மதிக்க மாட்டான். நீயெல்லாம் என்னைய கூப்பிட்டிருப்பியா?” மீண்டும் சிரிப்பு.

நூலகம் வந்திருந்தது. விஜி பணியாற்றும் இடம். பார்வையிட்டார். கொஞ்சம் ஓய்வுக்குப்பின் அவர் பூர்வக்குடியினர் இசைக்கருவிகளை வாங்க வேண்டியிருந்ததால் கேரித்தீவுக்கு அழைத்துச்சென்றேன். ஶ்ரீதர், விஜி, தயாஜி இணைந்துகொண்டனர்.

கேரித்தீவு பழங்குடிகள் பகுதியில் சில இசைக்கருவிகள் கிடைத்தன. திரும்பும்போது எழுத்தாளர் அ.ரெங்கசாமி வீட்டுக்குச் சென்றோம். அவர் நாவல்கள் குறித்து கொஞ்ச நேரம் பேசினார். விமானத்துக்கு நேரமாகிவிட்டதால் புறப்பட்டோம்.

விமான நிலையத்துக்கு என்னுடன் விஜியும் வந்திருந்தார். சாப்பிட்டோம். பேசினோம். இதே விமான நிலையத்தில் இதே மன உணர்வோடு பல எழுத்தாளர்களை வழியனுப்பியதை நினைத்துக்கொண்டேன். “நல்ல வேளையா சுண்ணாம்பு மலைய எடுத்துக்கிட்டேன் டா” என்றார். நான் திகைத்துப்போய் “சுண்ணாம்புக்கல்லை பெயர்த்து எடுத்தீங்களா?” என்றேன். “கல்ல எடுக்குறதுனா கையால எடுக்குறது இல்லடா. மனசால எடுக்கிறது. எல்லாமே மேஜிக் பையில இருக்கு” எனக்கூறி சிரித்தார்.

அவர் செல்லும் திசைக்கு வழிகாட்டினேன். இறங்கி நடந்தார். மேஜிக் பையை இறுக்கமாகப் பிடித்திருந்தார்.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...