வல்லினம் 100 : சர்ச்சைகள், கேள்விகள், விவாதங்கள்

21762838_1480486425321429_4654187497600265211_oதமிழ் நூல்களைப் பதிப்பித்தல், அதனை விற்பனைக்குக் கொண்டு வருதல் போன்றவை மலேசிய இலக்கியச் சூழலில் ஆபத்தான காரியங்களாகவே பலகாலமாக வர்ணிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் ஒருவர் பெரும் நஷ்டங்களைச் சந்திக்க நேரும் எனவும் அதனை சரிகட்ட அரசியல்வாதிகள் அல்லது தனவந்தர்களை முன்னிலைப்படுத்துவதன் மூலமாகவே தமிழ் நூல் பதிப்புத்துறையில் இயங்குபவர்களும் எழுத்தாளர்களும் காக்கப்பட முடியும் எனவும் பல காலமாகவே கற்பிதங்கள் உள்ளன. இந்நிலையில்தான் 472 பக்கங்களுடன் செம்பதிப்பாக உருவான ‘வல்லினம் 100’ வெளிவந்த ஒரு மாதத்தில் 500 பிரதிகளைக் கடந்து விற்பனையாகியுள்ளன. இது ஒரு சாதனையல்ல என்றாலும் மலேசிய இலக்கியச் சூழலில் திட்டமிட்டு தீவிரமாக இயங்கும் யாருமே வாசகர்களை வெகு எளிதில் அணுக முடியும் எனவும் இலக்கிய உலகுக்குள் அதிகார வர்க்கங்களை இணைப்பதெல்லாம் பேராசையினாலும் இயலாமையினாலும் சொல்லப்படும் காரணங்கள் என்பதும் இதன் வழி தெளிவாகிறது.

‘வல்லினம் 100’ குறித்து நேர்மறையான கருத்துகள் தொடர்ந்து வந்தபடி இருந்தாலும் சில எதிர்வினைகளும் தொடர்ச்சியாக எழுத்து மூலமாகவும் நேர்ப்பேச்சிலும் வெளிபடவே செய்கின்றன. அவற்றுக்கான விளங்கங்களை வழங்குவது முறை என்பதால் பல்வேறு சூழலில் எழுந்த கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

கேள்வி : வல்லினம் 100இல் ஒரே படைப்பாளியின் படைப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்டு இடம் பிடித்துள்ளன. மலேசியாவில் மேலும் சில படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.

பதில் : வல்லினம் வாய்ப்பு வழங்கும் பதிப்பகம் அல்ல. முதல் நூலை பதிப்பிக்கும்போது தீவிர இலக்கியத்தை அல்லது தரமான இலக்கியத்தை முன்னெடுக்கும் பதிப்பகம் என வாய்சவடால் விட்டுவிட்டு இரண்டாவது புத்தகத்திலேயே ஜனரஞ்சக வரிகள் அடங்கிய சொற்குவியல்களைக் கவிதைத் தொகுப்பு என பதிப்பித்து வளைந்துகொடுக்கும் இலக்கியச் சரிவு ரகசியமாக நடக்கும் சமகாலச் சூழலோடு வல்லினம் பதிப்பகத்தை ஒப்பிடுவது தவறு. நாங்கள் தரமானவற்றை தொகுக்கிறோம்; தரமானவை ஒருவரிடம் ஒன்றுக்கும் மேற்பட்டு வெளிவரும் என்றால் அதை இணைப்பது தவறாகாது. அதே சமயம் பல படைப்பாளிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும் என மொண்ணையானவற்றையும் இணைக்க இயலாது. ‘வல்லினம் 100’ பொதுவான மலேசிய இலக்கியத்தைக் காட்டும் முகம் அல்ல; மாறாக மலேசிய-சிங்கை நவீனத் தமிழ் இலக்கியத்தின் காத்திரமான ஒரு முகம். இங்கு இன்னும் வெவ்வேறு தரப்பு இலக்கியம் இருக்கலாம். அவற்றை முன்னிலைப்படுத்த வேண்டியது அந்தந்த முகாம் சார்ந்தவர்களின் பொறுப்பு.

கேள்வி : வல்லினத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த இதழில் அதிகம் பங்கு கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இது சுயநலமாக தயாரிக்கப்பட்டது போல உள்ளது.

பதில் : இம்மலரை தயாரிக்கும்போது வல்லினம் குழுவில் மொத்தம் 9 பேர் இருந்தனர். இவர்களில் 7 பேருடைய படைப்புகள் மட்டுமே வல்லினம் 100இல் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் இவ்விதழில் பங்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30. அப்படியிருக்க இந்தக் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. அதே சமயத்தில் இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஆய்வுக்கட்டுரைகளையும் படைப்பிலக்கியங்களையும் ஒரே அளவீட்டில் பார்ப்பதும் தவறு. ஆய்வுக்கட்டுரைகள் வல்லினம் குழுவினரிடம் தலைப்பு வழங்கி பெறப்பட்டவை. சமகால இலக்கியம், சமூகம், அரசியல் என பலவற்றையும் பதிவு செய்ய வேண்டும் எனும் நோக்கில் இந்தத் தலைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்தத் தலைப்புகளில் கட்டுரைகள் உருவாக கூட்டு முயற்சிகள் தேவைப்பட்டன. ஆக, தலைப்பை தயார் செய்து அதற்கேற்ற ஆய்வுகளை முன்னெடுக்க வல்லினத்துடன் இணங்கி வேலை செய்பவர்களால் மட்டுமே சாத்தியம். அதே சமயம் படைப்பிலக்கியங்களான 11 சிறுகதைகளில் 2 மட்டுமே வல்லினம் குழுவினருடையது. கவிதைகளில் ஒன்று மட்டுமே வல்லினம் குழுவுடையது. இடம்பெற்ற 7 நேர்காணல்களில் அனைத்துமே வல்லினம் குழுவில் சம்பந்தப்படாதவர்கள். 3 பழங்குடிகள் பற்றிய கட்டுரைகளில் ஒன்று மட்டுமே வல்லினம் குழுவினருடையது. உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க மேற்கண்ட குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை. தீவிர இலக்கியத்தை முன்னெடுக்கும் வல்லினம் தீவிர இலக்கியவாதிகளை இவ்விதழ் மூலம் ஒன்றிணைத்துள்ளது. சிலர் படைப்புகளை வழங்காததற்கும் காலம் தாழ்த்தியதற்கும் வல்லினம் பொறுப்பேற்க முடியாததுபோலவே ஜனரஞ்சகப் படைப்பாளிகளை இணைக்காததைக் குற்றச்சாட்டாக வைத்தால் நீங்கள் இன்னும் இலக்கிய உலகில் நுழையவே இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் நவீன இலக்கியச் சூழலில் உதயமான களஞ்சியங்கள், தமிழினி 2000 அல்லது குவார்னிக்கா போன்ற தொகுப்பில் எப்படி எல்லாருக்குமான வாய்ப்பு எனும் கருத்தாக்கத்தை திணிக்க முடியாதோ அதேபோல வல்லினம் 100லும் திணிக்க முற்படாதீர்கள்.

கேள்வி : வல்லினம் 100இல் அச்சகத்தின் முகவரி இல்லை. பதிப்புத்துறை குறித்து அதிகம் கவலைப்படும் நீங்கள் அதில் கவனம் செலுத்தாதது ஏன்?

பதில் :  தேசிய நூலகத்தில் ISBN பெற சில தகவல்கள் அவசியம். அவ்வகையில்  கேட்கப்பட்ட தகவல்களை நாங்கள் முழுமையாக வழங்காமல் ISBN கிடைத்திருக்காது அல்லவா. தேசிய நூலகத்திடம் நூல் விபரங்கள் பகுதியையும் அட்டை வடிவமைப்பும்  வழங்கினால் மட்டுமே ISBN கிடைக்கும் சூழலில் நாங்கள் எந்தச் சட்டத்தை மீற முடியும்? ஒருவேளை நீங்கள் KDN  (சஞ்சிகை பதிப்பிக்கும் உரிமம்) சட்டங்களும் இதையும் போட்டுக் குழப்பிக்கொண்டுள்ளீர்கள் என்றால் தெளிவாவது நலம்.

கேள்வி : வல்லினம் இணையத்தளத்தில் இடம்பெற்ற பல படைப்புகள் இந்த அச்சு இதழில் இடம்பெறவில்லையே. இது பலருக்கு ஏமாற்றமாக இருந்திருக்காதா?

பதில் : முதலில் ‘வல்லினம் 100’ படைப்புகளுக்கு வல்லினம் நண்பர்கள் ஒவ்வொருவர் பொறுப்பேற்றிருந்தனர். அவ்வகையில் வல்லினம் இணைய இதழில் 2010 தொடங்கி கடந்த 7 ஆண்டுகளில் இணைய இதழில் பிரசுரமானவற்றில் சிறந்த சிறுகதைகளை ஶ்ரீதர் ரங்கராஜ், கட்டுரைகளை அ.பாண்டியன், பத்திகளை கங்காதுரை மற்றும் தயாஜி, கவிதைகள், விமர்சனங்கள் மற்றும் நேர்காணல்களை ம.நவீன், ஆகியோர் தேர்வு செய்து கொடுத்ததன் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. தொகுக்கப்பட்ட படைப்புகளை மீள் ஆய்வு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட படைப்பாளிகளிடம் அச்சுக்குச் செல்ல அனுமதி கேட்கப்பட்டது. இதற்குக் காரணம் இணையத்தில் வந்த படைப்புகள் எதற்கும் ராயல்டி பணம் கொடுக்காததுதான். வல்லினம் தளத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட படைப்புகளை அச்சில் மறுபிரசுரம் செய்யும்போது உரிமத்தொகை வழங்கப்படாது என அறிவிப்புப் போட்டிருந்தாலும் தெளிவு படுத்துவது முறையென மறு உறுதி செய்துக்கொண்டோம். இரண்டாம் மூன்றாம் கட்ட வாசிப்பின்போது முன் தேர்வு செய்யப்பட்ட பல படைப்புகள் நீக்கப்பட்டன. ‘வல்லினம் 100’ இல் இடம்பெறும் அனைத்துப் படைப்புகளும் என்றென்றைக்குமான முக்கியத்துவத்துடன் இருக்க வேண்டுமென கருதினோம். அதன் அடிப்படையில் அவை தொகுக்கப்பட்டன.

கேள்வி : ராயல்டி குறித்து பேசும் வல்லினம் இந்நூலில் இடம்பெற்ற படைப்புகளுக்கு உரிமத்தொகை வழங்கியுள்ளதா? “வல்லினத்தில் இடம்பெறும் தனது படைப்புகளுக்குப் பணம் கொடுத்திருப்பேன்” என்ற முனைவர் ஶ்ரீ லட்சுமியில் குத்தல் எதன் அடிப்படையிலானது?

பதில் :  வல்லினம் 100 இல் இடம்பெற்ற படைப்புகள் ஏற்கனவே வல்லினம் அகப்பக்கத்தில் பிரசுரமானதாக இருக்கும் பட்சத்தில் அவற்றுக்கு எவ்வித உரிமத்தொகையும் வழங்கவில்லை. ‘பறை’ ஆய்விதழில் பிரசுரமான கட்டுரைகளுக்குத் தலா 300 ரிங்கிட் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. எனவே, அக்கட்டுரைகளுக்கு எவ்வித உரிமத்தொகையும் வழங்கவில்லை. ஆனால், ஆய்வு கட்டுரைகள் வல்லினம் குழு முடிவெடுத்த தலைப்பின்கீழ் கடும் உழைப்பில் உருவாக்கப்பட்டதால் கட்டுரையாளர்களுக்கு 200 ரிங்கிட் வழங்குகிறோம். முனைவர் ஶ்ரீ லட்சுமி தனது கட்டுரை இடம்பெறாத ஆற்றாமையில் எழுதியுள்ளார். அவரது படைப்பு வல்லினம் 100இல் இடம்பெறாததற்கு காரணம் அவரது ஆய்வு வல்லினம்100 இடம்பெற தகுதி பெறவில்லை என்பதே அடிப்படை காரணம்.

கேள்வி : வல்லினம் 100 இல் இடம்பெற்றுள்ள சில படங்கள் தெளிவில்லாமல் கறுமையாக உள்ளன.

பதில் : உண்மைதான். தொழில்நுட்ப கோளாறு. மிக விரைவில் இந்நூல் இரண்டாம் பதிப்பு வரும்போது இந்தக் குறையுடன் எஞ்சி இருக்கும் சில எழுத்துப்பிழைகளும் திருத்தப்பட்டு முழுமையாக வெளிவரும்.

கேள்வி : ஓர் இலக்கிய இதழில் காத்தையா போன்றவர்களின் அரசியல் சார்ந்த நேர்காணல்கள் இடம்பெறும் நோக்கம் என்ன? இது கலை இலக்கிய இதழ் அல்லவா?

பதில் : கலை இலக்கியங்களை அரசியல் நீக்கம் செய்யும் அரசியலில் வல்லினத்திற்கு உடன்பாடில்லை. வல்லினம் கலை இலக்கியங்களில் அரசியல் பார்வை வேண்டும் எனும் நோக்கத்தில்தான் கடந்த காலங்களில் தலித்திய வகுப்பு உள்ளிட்ட பல வகுப்புகளை நடத்தினோம். காத்தையாவின் நேர்காணல் கம்யூனிச காலக்கட்டம் மலேசியாவில் உருவாக்கிய அதிர்வுகளைத் துள்ளியமாக விளக்குகிறது. இந்த வரலாற்றை மறந்துவிட்டு அதன் பின்னணியில் இயங்கும் அரசியல் சூழலை மறைத்துவிட்டு வீரியமற்ற இலக்கியங்களைத்தான் மலேசியாவில் படைக்க இயலும். கலை இலக்கியம் என்பதே சமூகத்துடன் இணைந்ததுதான். அது தனித்து வானில் புனிதமாக பறந்துகொண்டிருப்பது என்று சொல்பவர்கள் குறித்து எங்களுக்கு அக்கறையும் இல்லை.

கேள்வி : ஏன் தமிழக ஓவியர்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள். மலேசியாவில் ஓவியர்களே இல்லையா?

பதில் : இருக்கலாம். நான் இவ்விதழுக்கான ஓவியம் மற்றும் அட்டைப்பட பொறுப்புகளை யாவரும் பதிப்பாளர் நண்பர் ஜீவகரிகாலனிடம் ஒப்படைத்துவிட்டேன். ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு விதமான ஓவியம் பெற வேண்டும் என்பது திட்டம். அவருக்கு ஏராளமான ஓவியர்களுடன் தொடர்புண்டு. அதேபோல தீர்த்த பாதா எனும் மலேசியாவில் உள்ள இளம் ஓவியர் ஒருவரும் இரு கதைகளுக்கு ஓவியம் வரைந்துள்ளார்.

கேள்வி : வல்லினத்துடன் முரண்பட்டவர்கள் இந்நூலில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளனர் என அதை புரட்டும்போது தெரிகிறது.

பதில் : புரட்டாமல் வாசித்தால் முழு உண்மை விளங்கும். வரலாறு என்பதும் படைப்பிலக்கிய முன்னெடுப்பு என்பதும் வேறு. வல்லினம் வளர்ந்த கதை எனும் வண்ணத்திலான பகுதியில் இதுவரை வல்லினத்தில் இணைந்து விலகியவர்கள், அவர்களது படங்கள், அவர்களது புத்தகங்களின் அட்டைப்படங்கள், குழுப்படங்கள் என பலவும் இடம்பெற்றுள்ளன. இவை வரலாறு. அதை யாரும் எங்கும் மறைக்கவில்லை. ஆனால், வல்லினத்துடன் முரண்பட்டு அதன் போக்கில் ‘குறைகள்’ இருப்பதாகச் சொல்லி சில எழுத்தாளர்கள் விலகியுள்ளதால் குறையுள்ள ஓர் இயக்கம் முன்னெடுக்கும் இலக்கிய முயற்சிகளில் அவர்களை முன்வைப்பது சங்கடமானது. முரண்பாடுகள் இருந்தாலும் அதனை அறிவார்ந்த விவாதங்கள் மூலமாக அணுகும் இலக்கியத் தோழமைகளின் படைப்புகளைப் பிரசுரிப்பதில் வல்லினம் சுணக்கம் காட்டியதில்லை.

கேள்வி : இவ்வளவு பெரிய உழைப்பை ஒரு கலை இலக்கிய விழாவில் அறிமுகம் செய்வதோடு நிறுத்திக்கொள்ளுதல் முறையா? நாடு முழுவதும் இவ்வுழைப்பு  சென்று சேர வேண்டாமா?

பதில் : நாடல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களைச் சென்றடையும் வழிமுறைகளைக் கண்டறிந்து வருகிறோம். வாசகர்கள் விரும்பினால் எங்கும் அறிமுகக் கூட்டங்கள் செய்யலாம். ஒரே விதிமுறை இலக்கியத்திற்கு தொடர்பில்லாதவர்களைத் தலைமை தாங்குவதாக அமர வைக்கக் கூடாது. நூல் குறித்து யாரும் கருத்துக்கூறலாம். கருத்துக்கூறுபவர் விமர்சகராக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் இல்லை. வாசகப் பிரதி எங்கிருந்து எப்படி வேண்டுமானாலும் ஒலிக்கலாம். ஆனால், ஓர் இலக்கியக் கூட்டத்தில் இலக்கிய வாசிப்பில்லாத, இலக்கியத்தை முன்னெடுக்கும் தீவிரப்பணியை ஆற்றாத ஒருவரை தலைமை தாங்க வைக்கும் கலாச்சாரம் வல்லினத்துக்கு ஒவ்வாது.

கலை இலக்கிய விழா 9இல் தலைமைத் தாங்கிய வழக்கறிஞர் பசுபதி சமூக சேவை என்பதைக் கடந்து இலக்கியத்திற்கென பங்காற்றியுள்ளார். அவர் அளவுக்கு செம்பருத்தி பதிப்பகம் நடத்தியுள்ளதும் அதன் மூலம் சிறந்த நூல்களை வெளிக்கொணர்ந்ததும், செம்பருத்தி இதழ் மூலம் பல புதிய படைப்புகளைப் பிரசுரித்ததோடு இலக்கியப் போட்டிகள் நடத்தியதும், ‘செம்பருத்தி இலக்கிய மாலை’ என இலக்கிய சந்திப்புகள் உருவாகக் களம் அமைத்துக்கொடுத்ததும், பிரளயன் மூலமாக வீதி நாடகங்கள் அரங்கேற வழி அமைத்ததும், வல்லினம் வகுப்புகளில் இணைந்து செயல்ப்பட்டதோடு மூன்றாவது கலை இலக்கிய விழாவையும் இணை சேர்ந்து நகர்த்திச் சென்றதும், ஜகாட் போன்ற சிறந்த திரைப்படம் உருவாக பொருளாதார ரீதியில் கைக்கொடுத்ததும் என நீண்ட தடங்கள் இருக்கவேண்டியதில்லை. மாறாக, கொஞ்சம் நவீன இலக்கிய அறிவிருந்தால்கூட போதுமானது என நினைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...