உண்மைகளை மறைக்க என் புனைவுகளை நான் அனுமதிப்பதில்லை!

கேள்வி: உங்கள் தொடக்க கால வாழ்வைப் பற்றி கூறுங்கள்.003

அ.ரெங்கசாமி: தந்தை தாயார் எல்லாம் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்கள் 1927-ல் இந்நாட்டிற்கு வந்தார்கள். அப்போது பெற்றோருடன் அண்ணனும் அக்காவும் வந்திருந்தார்கள். 1928இல் இன்னொரு அண்ணன் இங்கு பிறந்தார். 1930-ல் நான் பிறந்தேன். அதன் பிறகு என் தங்கை பிறந்தாள்.அப்பாவும் அம்மாவும் பால்மரம் சீவும் தொழிலாளிகளாக இருந்தார்கள். பள்ளிக்கூடங்களெல்லாம் அப்போது இங்கு கிடையாது.

ஆனால் எங்கள் அப்பா தமிழகத்திலேயே திண்ணைப்பள்ளிக்கூடம் நடத்தியவர். அந்த வகையில் சிசங்காங் கம்பத்தில் திண்ணைப்பள்ளிக்கூடத்தை ஏற்படுத்தினார். அந்தப் பள்ளியில் ஐந்து வயதிலேயே எங்களுக்குக்  கல்வியைத் தொடங்கினார். அவர்தான் எங்களுக்கு ஆரம்ப ஆசான். அவரிடத்தில் இருந்துதான் நாங்கள் தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டோம்.

கேள்வி: உங்கள் தொடக்க கால கல்வி மற்றும் தொழில் குறித்து கூறுங்கள்.

அ.ரெங்கசாமி:அப்பா எங்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தார். அப்போது புத்தகங்களை எடுப்போம்; படிப்போம் அவ்வளவுதான். ஆனால் ஆசிரியராக உருவெடுக்கஎங்களுக்கு வழி காட்டியவர் வேறொருவர். 1946ஆம்  ஆண்டு, இங்கு புதிய எழுச்சி உண்டானது. ஜப்பானியர்கள் ஓடிவிட்டனர். ஆங்கிலேயர்கள் வந்தார்கள். இடைபட்ட காலகட்டத்தில் மக்களிடையே மறுமலர்ச்சி ஏற்பட்டது. அப்போது  சி‌சங்காங் கம்பத்தில் வாழ்ந்த எங்கள் உறவினர்கள், தோட்டங்களில் உள்ள பள்ளிகள் போலவே இங்கும் பள்ளிகளை ஆரம்பிக்கவேண்டும், நல்ல ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்று கம்பர் தமிழ்ப்பள்ளியை ஏற்படுத்தினார்கள். அங்கு முப்பது நாற்பது மாணவர்கள் பயின்றோம். இளம் வயது ஆசிரியர் ஒருவர் எங்களுக்கு பாடம் நடத்த வந்தார். அப்போது பள்ளியில் இருந்த மாணவர்களில் நானும் என் அண்ணனுமே அவர் கண்களுக்கு வேறு மாதிரியாக தெரிந்திருக்கின்றோம். பிற மாணவர்களிடம் ஒப்பிட்டுப்பார்த்திருக்கின்றார். “தமிழில் என்னைவிடக் கெட்டிக்காரர்களாக இருக்கின்றீர்கள். ஏன் நீங்களும் என்னை போலஆசிரியராகக்கூடாது?” என்ற கேள்வியை எங்களிடம் கேட்டார்.

அவர் பெயர் மு.வெங்கடாசலம். அவர் அப்படிக் கேட்டபோது எங்களுக்கு வியப்பாக இருந்தது. எப்படி அது சாத்தியமாகும் என வினவினோம். “உங்களை நான் ஆசிரியர்களாகக்குகிறேன்,” என மேலும் நம்பிக்கையைக் கொடுத்தார். கம்பன் பாடசாலை, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை அல்ல. அங்கு படித்தால் சான்றிதழ் என எதுவும் கிடைக்காது. அதனால் பக்கத்துத் தோட்டத்திலிருந்த பள்ளிக்குச் சென்று அங்குள்ள ஆசிரியரைப் பார்த்து எங்களை அங்கு சேர்த்தார். அச்சமயம் காலையிலும் மாலையிலும் பள்ளி இருக்கும். நாங்கள் மாலைப் பள்ளியில் படித்தோம், கம்பத்துப் பிள்ளைகள் அப்பள்ளியில் படிக்கக்கூடாது என்பது அன்றைய காலகட்டத்தில் முக்கிய சட்டம். இருந்தும் அந்த ஆசிரியர் எங்களுக்கு நன்மை செய்தார். மற்ற அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே எங்கள் பெயரைப் பட்டியலில் சேர்த்து, ஆறாம் ஆண்டு சான்றிதழைப் பெற்றுக் கொடுத்தார். ஆறாம் ஆண்டுக்குப் பிறகு சான்றிதழோடு ஏழாம் ஆண்டுக்கு சென்றோம். அதன் பிறகுதான் ஆசிரியர்களாகஉருவானோம்.

கேள்வி: இலக்கியத்தில் நீங்கள் ஈடுபட எது தூண்டுகோலாக அமைந்தது?

அ.ரெங்கசாமி: தொடக்கத்தில் ஒரு சராசரி நானும் வாசகனாகத்தான் இருந்தேன். வாசிப்பின் சுவை எனக்கு ஏழு வயதிலேயே தெரிந்துவிட்டிருந்தது. தந்தையார் அப்போதெல்லாம் அதிகமாக புராணக் கதைகளை வாங்குவார். ஏழு வயதிலேயே புராணங்களைப் படித்தேன். எட்டு வயதிலெல்லாம் அந்தக் கதைகளை மற்றவர்களுக்கு சொல்லத்தொடங்கி விட்டேன். மற்றவர்களை அமர வைத்து நான் படித்துக் காட்டுவதும் உண்டு.

001இது தொடர்ச்சியாக நடந்துகொண்டு இருந்தது. காலம் செல்லச் செல்ல வெளியில் இருந்து புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அந்நேரம் தமிழக வரவுகள் அதிகம் இருந்தன. கல்கண்டு, குமுதம் இந்தமாதிரி புத்தகங்களில் இருந்த கதைகள், தொடர்கதைகளைப் படிக்கும் போதுகூட நாமும் எழுத்தாளராக வரலாம் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியதில்லை. 1950களில், கந்தசாமி வாத்தியார்  என்பவர் கதை வகுப்பு நடத்தினார். தமிழ்நேசனில் அது குறித்த விளம்பரத்தைப் பார்த்தேன். கதை வகுப்புப் பகுதியைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன். அதன் பாதிப்பிலேயே நான் இரண்டு கதைகளை எழுதினேன். அதனைப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அக்கதைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன் பிறகு எழுதுவதை மறந்து அதிகமாக வாசிக்க ஆரம்பித்தேன்.

கேள்வி: கந்தசாமி வாத்தியார் மூலமாக அக்காலத்தில் நடைபெற்ற கதை வகுப்பு குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.

அ.ரெங்கசாமி: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எழுத்தாளராக என்ன செய்ய வேண்டும் என  அவர் எழுதுவார்.  நேரடியாக அவர் வகுப்பு நடத்தவில்லை. நாளிதழ் வழியாகவே நடத்தினார். உதாரணமாக கடந்த வாரம் கதை அனுப்பியவர் ரெங்கசாமி என்றால், நாளிதழிலேயே அந்தக் கதை குறித்தவிமர்சனத்தை எழுதுவார். ‘ஐயா உங்கள் கதை கிடைத்தது. வாசித்தேன். ஆனால் அதனைத் திருத்த வேண்டும். திருத்தி வேறு கதை எழுதி அனுப்புங்கள்’ என்று பதில் கூறியிருப்பார். நாங்களும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருப்போம். அப்போதுதான் இரண்டு கதைகளை அனுப்பி அது சரியாக வராததால் அப்படியே விட்டுவிட்டேன். 50-ல் எழுதிய கதைகள்அவைதான்.

கேள்வி: வரலாற்று நாவல் எழுதவேண்டும் என்ற ஆவல் எப்படி வந்தது?

அ.ரெங்கசாமி: ஆரம்பத்தில் நான் அதிகம் படித்தவை சாண்டில்யன்,மு.வவின் கதைகள். மு.வவின் கதைகளைக் காட்டிலும் சாண்டில்யன் கதைகள் என்னை அதிகம் கவர்ந்தன. வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதே சாண்டில்யன் நாவல்கள்தான். அவரது நாவல்களில் அவர் அக்கால வரலாற்றை எழுதியிருப்பதை வாசிக்கையில் நாமும் ஏன் நம் காலத்து வரலாற்றை எழுதக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. அதன் நானும் வரலாற்றுநாவல் எழுதும் முயற்சியில் இறங்கினேன்.

வரலாற்றை எழுதுவதென்பது இருவகைப்படும். ஒன்று புள்ளி விவரங்களோடு சொல்வது. மற்றொன்று கதையாகச் சொல்வது. சாண்டில்யன் கதையாகத்தான் சொல்லிக்கொண்டு போனார். அது மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. மக்கள் அதனை எளிதில் படித்துப் புரிந்துகொண்டார்கள். அந்த நோக்கத்தில்தான் நம் நாட்டில் நடந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகளை கதையாகஎழுதலாமே என எழுதத் துணிந்தேன்.

கேள்வி: கதைகள் எழுதுவற்கு இடைவேளை கொடுத்த காலத்தில் உங்கள் கலை மனதுக்கு எவ்வாறான வடிவம் கொடுத்தீர்கள்?

அ.ரெங்கசாமி: இயல்பாகவே கலையுணர்வு கொண்டவன் நான். 60-க்கு பின்னர் பள்ளி மாணவர்களை வைத்து நாடகம் நடத்தினேன். ஒவ்வோர்ஆண்டுஇறுதியிலும்பள்ளியில் கலை விழா நடத்தினேன். அந்நாடகத்திற்கான கதை, நாடகம், வசனம், பாடல் என அனைத்தையும் நானே எழுதுவேன். அக்காலத்தில் மேடையேறிய பல நாடகங்களில் சினிமாவின் தாக்கம் இருக்கும். சிலர் சினிமா காட்சிகளையே நாடகமாக்குவார்கள்.

ஆனால் நான்சிறுவர்களுக்கான குறுநாடகங்கள், பாடல்கள் என எழுதத் தொடங்கினேன். ஹைலன்ஸ் தோட்டம் என்கிற இடத்தில் இதுவெல்லாம் நடந்தது. 1963-ல் முதல் கலை விழா நடைபெற்றது. பெற்றோர்களில் ஒத்துழைப்பும் அதிகமாக இருந்தது. எனவேபெற்றோருக்கான நாடகம் ஒன்றையும் அரங்கேற்றினோம். ஒருசமயம், முழு நேர நாடகமொன்றை அரங்கேற்றலாமே என பெற்றோர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள். துன் வீ.தி. சம்பந்தன் அப்போது கூட்டுறவுச் சங்கத்தை வளர்த்துக் கொண்டிருந்தார். எனவே அதன் வளர்ச்சிக்கு உதவியாக‘ஒரே வழி’ என்ற மேடை நாடகத்தை அரங்கேற்றினோம். அப்போது குவாலா கிள்ளானின் திருக்குறள் மன்றம் என்ற ஒன்று இருந்தது. அங்கும் எனக்கு சில நண்பர்கள் இருந்தார்கள். அச்சமயம் கட்டிடம் கட்டுவதற்காக திருக்குறள் மண்டபம் நிதி திரட்டிக்கொண்டிருந்தது. நாங்கள் பத்துமலை சென்று உண்டியல் தூக்கியுள்ளோம். தீபாவளி சமயத்தில் வீடுவீடாகச் சென்று நிதி வசூலிப்போம்.

இந்நேரத்தில் சிங்கப்பூரில் இருந்து சர்மாவை அழைத்து நிதி வசூலுக்காக நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்கள். அங்கிருந்து நாடக நடிகர்களை வரவழைக்கவும், நாடகத்திற்கான தளவாடப் பொருட்களை கொண்டு வருவதற்குமே பெரும் செலவானது. ஆனால் நாடகத்தால் கிடைத்த நிதி வசூல் கொஞ்சம்தான். நான் திருக்குறள் மண்டப செயற்குழுவில் இருந்தேன். எதற்காக வீண் செலவு, நாமே ஒரு நாடகம் தயாரித்து நாமே நடிக்கலாமே என யோசனை கூறினேன். அதன்பின் 1967-ல் ‘வழிகாட்டி’  நாடகத்தை மன்றத்து உறுப்பினர்களை நடிக்க வைத்து அரங்கேற்றினோம். மக்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. நாடகத்தின் வழியே நான் என் எழுத்தாற்றலைத் தக்க வைத்துக்கொண்டேன்.

கேள்வி: எழுத்துத்துறைக்கு உங்கள் இரண்டாவது வருகை எப்படி  நிகழ்ந்தது?

அ.ரெங்கசாமி: ரா.நா.வீரப்பன், முரசு நெடுமாறன் போன்றவர்கள் இவ்விரண்டு நாடகங்களையும் பார்த்து, ஏன் கதை எழுதக்கூடாது என வினவினார்கள். அவர்கள் என்னை எழுத்தாளர் சங்கத்தில் சேரச்சொன்னார்கள். நானும் உறுப்பினராக சேர்ந்தேன். அப்போதுதான் நாவல் போட்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நானும் நாவல் ஒன்றை அனுப்பி வைத்தேன். கதை சரியாக இல்லை என்ற காரணத்துடன்002 அதுவும் திரும்பி வந்துவிட்டது. அதன் பிறகு நாவல் எழுதுவதையும் நான் விட்டுவிட்டேன். பிறகு வீடு மாறியபோது எனது புத்தகங்களுடன் எனது நாவல் பிரதியையும் பழைய வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தேன். ஒருமுறை எனது அண்ணன் மகன் சிவக்குமார் அந்தப் புத்தங்களைப் புரட்டியபோது எனது நாவல் பிரதியைஅவர் பார்த்திருக்கிறார். படித்துப்பார்த்த அவர், கதை நன்றாக இருப்பதாகவும் நடையும் நன்றாக வந்திருப்பதாகவும் கூறி ஏன் அப்படியே விட்டுவிட்டீர்கள்  என வினவினார். அப்போது தமிழ் நேசனில் நாவல் போட்டியை வைத்திருந்தார்கள். அதற்கு அனுப்பலாமா எனக் கேட்டு பிரதியெடுத்துக்கொண்டு நாவலை அனுப்பி வைத்தார். ‘உயிர் பெறும் உண்மைகள்’ என்ற அந்த நாவலுக்குஇரண்டாவது பரிசு கிடைத்து. என்னால் நாவல் எழுத முடியும் என்கிற ஆர்வம் என்னை ஊக்கப்படுத்தியது.

 

கேள்வி: தொடர்ந்து எழுதவேண்டும் என்ற தூண்டுதல் எப்படி உருவானது?

அ.ரெங்கசாமி: ஏதாவது போட்டி வரும்போதுதான் எனக்கு எழுதவேண்டும் என்கிற ஆர்வமே வந்தது. வானம்பாடி பத்திரிகையில் சிறுகதைப் போட்டி நடத்தினார்கள். ‘விளையாட்டுச்சட்டை’ சிறுகதைக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அதன் பிறகு வாராவாரம் கதைகள் எழுதினேன்.

அக்கதைகள் தொடர்ந்து வானம்பாடி, தமிழ் நேசன், மயில் போன்றவற்றில் மாறி மாறி பிரசுரமாகின. இக்காலக்கட்டத்தில்தான் மயில் பத்திரிகையின் என்னைத் தொடர் கதை எழுதலாமே எனக் கேட்டார். தமிழக எழுத்தாளர் அகிலன் மலேசிய வந்துசென்று மலேசியா குறித்த கதையை எழுதினார்.  நீங்கள் மலேசியாவில் இருந்துகொண்டு ஏன் தமிழ்நாடு குறித்து கதை எழுதக்கூடாது, எனக் கேட்டார். எழுத சம்மதித்து ஒரு நிபத்தனை வைத்தேன். ஆறு மாதங்களுக்கு இக்கதையை எழுதியவர் யார் என குறிப்பிடக்கூடாது. பிறகு இத்தொடரை எழுதியவர் யார் என போட்டி வைக்க வேண்டும். அதற்குக் கிடைக்கும் பதில்களில் என் பெயர் இல்லையென்றால் நான் வெற்றிகண்டதாக நினைத்துக்கொள்வேன் என்றேன். அதற்கு அவர் சம்மதித்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு வைக்கப்பட்ட போட்டியில் கலைஞர் மு.கருணாநிதி பெயர் உட்படபல தமிழக எழுத்தாளர்களின் பெயர்கள் பதில்களாக வந்திருந்தன. மலேசிய எழுத்தாளர்கள் பலரின்பெயர்களும் வந்திருந்தன. ஆனால், என் பெயரை ஒருவர்கூட எழுதி அனுப்பியிருக்கவில்லை.

 

கேள்வி: உங்கள் நாவல் வரலாற்றின் பக்கம் திரும்பிய காரணம் என்ன? அந்நாவல்கள் குறித்துக் கூறுங்கள்?

அ.ரெங்கசாமி: இந்நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நம் வரலாற்றை நம் சமூகம் எழுதி வைக்கவில்லை. தமிழர்கள் ஏறக்குறைய 150 ஆண்டுகளாக வாழ்ந்த நிலம்இது. ஆங்கிலேயர்கள்தான் நம்மை அழைத்து வந்தார்கள். வீடு, வசதி என எல்லாமே நமக்கு ஆங்கிலேயர்கள் செய்து கொடுத்தார்கள்.

எதிர்பாராத வகையில் ஜப்பானியருடன் போரிட்டு தோல்வி கண்டு நாட்டை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறினார்கள். அந்த நேரத்தில்தான் தமிழர்கள் தாங்கள் அனாதைகளாக ஆக்கப்பட்டதாக நினைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இருக்கும்போது எல்லாமே கிடைத்த நமக்கு அவர்கள் இல்லாதபோது வேலை, ஊதியம், உணவு என எதுவுமே இல்லாமல் போனது. நான்கு ஆண்டுகள் ஐப்பானிய ஆட்சி. மலாயா வரலாற்றில் இந்த நான்கு ஆண்டுகள் தமிழர்களுக்கு இருண்ட காலம். அப்போதுதான் பஞ்சம் என்றால் என்னவென்று இங்குள்ள தமிழர்கள் அறிந்துகொண்டார்கள்.

அந்தப் பஞ்சத்தில் சிக்கியவன் என்பதால் எனக்கு அந்த அனுபவம் மனதில் ரணமாகப் பதிந்திருக்கிறது. நத்தையை பொறுக்கிச் சாப்பிடுவது, நண்டு பிடித்து சாப்பிடுவது என கஷ்டப்பட்டோம். அடுத்த தலைமுறைக்கு இதனை யார் சொல்லப்போகிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதனால்தான் என் அனுபவம், நான் பார்த்தவை  அந்த நான்கு ஆண்டுகளில் நடந்தவை, அந்தச் சூழலில் எப்படி வாழ்ந்தோம் போன்றவற்றை ‘புதியதோர் உலகம்’ என்ற எனது முதல் நாவலில் எழுதினேன்.

சயாமில் இருந்து பர்மாவிற்கு பாதை போடுவதற்காக ஜப்பான்காரர்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டது. தமிழர்கள்தான் கூட்டம் கூட்டமாக  தோட்டங்களில் அதிகமாக இருந்தார்கள். கேட்பார் யாருமின்றி அனைவரையும் அள்ளிக்கொண்டுச் சென்று சயாம் காட்டில் விட்டு வேலை வாங்கினார்கள் ஜப்பானியர்கள். அங்கு சென்று உயிருடன் வந்தவர்கள் சொன்ன கதை கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்போனவர்களில் எங்கள் உறவுக்காரர்களும் உண்டு. எனது சித்தப்பா, அவரது பிள்ளைகள், எங்கள் பெரியாயி மகன், எங்கள் மாமன் இப்படி எல்லோரும் போனார்கள். அவர்களில் ஒரு சிலர்தான் திரும்பி வந்தார்கள். வந்தவர்கள் கதைகதையாகச் சொன்னார்கள். இக்கதைகள் காற்றோடு போய்விடக்கூடாது என்பதால் அவற்றைத் திரட்டினேன். ஏறக்குறைய சிம்பாங்கில் இருந்து சபாபெர்னாம் தோட்டம் வரை ஒவ்வொரு தோட்டத்திற்கும் நான் சென்றிருக்கிறேன். ஊர் ஊராகச் சென்று யாரெல்லாம் சயாம் ரயில் தண்டவாளம் போடப்போனவர்கள் என விசாரித்து, கண்டறிந்தேன். அவர்களிடம் குறிப்பு எடுத்துக்கொண்டேன். கதை எழுத ஆரம்பித்தேன். எப்படி எழுதுவது என்ற குழப்பம் இருந்தது. வரலாற்று நாவலில்மிகைப்படுத்துதல் இருக்கக்கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். என்ன இப்படியெல்லாம் எழுதிவிட்டீர்கள் என என்னை நோக்கி கேட்காதவாறு உள்ளது உள்ளபடி எழுத வேண்டும். எனவே மேலும் தரவுகளைத் தேடி ஷ அலாம் நூலகத்துக்குச் சென்று மூன்று மாதங்கள் அலைந்து புத்தகங்களைத் தேடி எடுத்தேன்.

ஆங்கிலத்தில்தான் அதிகம் எழுதியிருந்தார்கள். ஏனெனில் ஆங்கிலேயர்களும் சயாம் மரண இரயிலில் வேலை செய்தார்கள் .அதனை அவர்கள் தெளிவாக எழுதியிருந்தார்கள். பொம்பொங்கில் இருந்து தம்புட் ஜியா வரைக்கும் படம் வரைந்து ஒவ்வொரு நிலையத்தையும் குறிப்பிட்டிருந்தார்கள். ஒவ்வொரு காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தார்கள். அதனைப்பின்னணியாக வைத்து நான் சேகரித்த குறிப்புகளையும் இணைத்து முழுக் கதையாக்கினேன். ‘’நினைவுச்சின்னம்’ அந்நாவலை எழுதினேன்.

இதே காலகட்டத்தில் நேதாஜி மலேசியா வந்திருந்தார். பலரும் சொல்வதுபோல இந்நாட்டில் நேதாஜி இந்தியதேசியராணுவப்படையைத்திரட்டவில்லை. அவர் ஜெர்மனியில் இருந்த காலகட்டத்தில் இந்நாட்டில் ஐ.என்.ஏ படையை உருவாக்கியவர் ‘ராஜ் பிகாரி போஸ்’. அவரே இங்கு படை திரட்டி வைத்தார், பின்னர் நேதாஜி வந்து வந்து படையை அழைத்துக்கொண்டு போனார்.

ஆனால் அதில் தமிழர்களின் பங்கு குறித்து அதிகம் குறிப்பிடப்படவில்லை. அதனைச் சுட்டிக்காட்ட நினைத்தேன். அவருக்கு பின்னால் போனவர்கள் தோட்டத்துப் பிள்ளைகள். ஆண்களும் பெண்களும் என பாட்டாளிகளின் பிள்ளைகள் போனார்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களைப் பெண் புலிகள் என்கிறோம். அப்போதே நம் நாட்டில் இருந்து பெண் புலிகள் அங்கு சென்றிருக்கிறார்கள். அதைத்தான் ஜான்சி ராணி படை எனச்சொல்கிறார்கள். கைகளில் வெறும் ஒற்றைக்குழாய் துப்பாக்கி மட்டும்தான் இருந்தது. பகைவர்களிடம் எல்லாவிதமான ஆயுதங்களும் இருந்தன. நம்மிடம் ஒரு விமானம்கூட இல்லை. ஆனாலும் சண்டைக்குப் போனார்கள். அதைத்தான்‘இமையத்தியாகம்’ நாவலாக எழுதினேன்.

பொதுவுடமைக்கட்சி 1948இல் இந்நாட்டில் தொடங்கப்பட்டது. அவர்கள் வெள்ளைக்காரர்களைத் துரத்திவிட்டு கம்யூனிச ஆட்சி வரவேண்டுமெனப் போரிட்டார்கள். அங்கும் பாதிக்கப்பட்டது தமிழர்கள்தான். தோட்டங்களில் இருந்த காடுகளில்தான் கம்யூனிஸ்ட்டுகள் பதுங்கியிருந்தார்கள். அவர்கள் இரவுகளில் தோட்ட வீடுகளில்தான் சாப்பாடு கேட்பார்கள். உணவு கொடுக்காவிட்டால்  சுட்டுக்கொல்வார்கள். உணவு கொடுத்தால் ஆங்கிலேயர்கள் சுட்டுக்கொல்வார்கள். இப்படி இருதலைக்கொள்ளி எறும்புகளாகத்தான் அன்று வாழ்ந்தார்கள் தமிழர்கள். எனக்கு இதில்நேரடி அனுபவம் உண்டு. கம்யூனிஸ்டுகளுடன் நான் நட்பு வைத்திருந்தேன், காவல்துறையிலும் நட்பு வைத்திருந்தேன். இல்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க முடியாது. இதனைக் கருவாக வைத்துதான் ‘லங்காட் நதிக்கரை’ நாவலை எழுதினேன்.

ஆகக் கடைசியாக எழுதிய நாவல் ‘விடியல்’.ஆனால் ‘விடியல்’ நாவல்தான் முதல் நாவலாக வந்திருக்க வேண்டியது.

005முதன்முதலாக 1942ல் வெள்ளைக்காரர்களை எதிர்த்து கையில் களியுடன் தோட்டப் பாட்டாளிகள் சண்டையிட்டார்கள். அவர்களின் தலைவரைப் பிடித்து கிள்ளான் சிறையில் அடைத்துவிட்டார்கள். அவரை விடுவிக்கக்கோரி ஒரு நாள் காலை பத்தாயிரம் பேர் கையில் கம்புகளோடுகூடினார்கள். இந்த போராட்டத்தை ஒடுக்க நினைத்தார்கள் ஆங்கிலேயர்கள். ஜப்பான்காரர்களை விரட்டுவதற்காக இந்தியாவில் இருந்து இராணுவத்தை இங்கு கொண்டு வந்திருந்தார்கள் ஆங்கிலேயர்கள். இங்கு ஏற்கனவேஆஸ்திரேலிய இராணுவமும் இருந்தது. முதலில் இக்கலவரத்தைத் தடுக்க ஆஸ்திரேலிய இராணுவத்திடம் உதவி கேட்டனர். ஆனால், நாங்கள் ஜப்பான்காரர்களை எதிர்க்கவே இங்கு வந்தோம், எனவேவரவியலாது என்று அவர்கள் கூறிவிட்டனர். ஆனால் இந்தியப் பட்டாளம் வந்து இங்குள்ள இந்தியர்களைச் சுட்டுக் கொன்றது. இந்தக் கதையைச் சொல்வதுதான் விடியல். இவை ஐந்தும் வரலாறு. இந்த ஐந்து வரலாறும் எழுதப்பட்டதில் எனக்குத் திருப்தி.

இறுதியாக, ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ என என் வாழ்வையும் விரிவாக எழுதும் வாய்ப்புக்கிடைத்தது. தன்வரலாறாக இருந்தாலும் இதுவும் நாவல் பாணியில் செல்லும் கதைதான்.

கேள்வி: வரலாற்றை எழுத நீங்கள் நாவல் வடிவைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? கட்டுரை வடிவில் எழுதியிருக்கலாமே?

அ.ரெங்கசாமி: நான் எழுதுவது எல்லாத் தரப்பு மக்களிடமும் சென்று சேர வேண்டும். நாவலாக எழுதும்போது சாதாரண மக்களும் படிக்கின்றார்கள். புள்ளிவிவரங்களோடு கட்டுரையாக எழுதினால் பல்கலைக்கழக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே படிப்பார்கள். அதனால்தான் எல்லோரும் வாசிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் நாவலாக எழுதினேன். உண்மையை அடிப்படையாகக்கொண்டே நான் நாவல்களை எழுதியுள்ளேன். உண்மைகளை மறைக்க என் புனைவுகளை நான் அனுமதிப்பதில்லை

கேள்வி: இலக்கியம் என்பதை நீங்கள் எவ்வாறு புரிந்துள்ளீர்கள்?

அ.ரெங்கசாமி: சிலப்பதிகாரம் படிப்பதனால் என்ன பயன்? நமது பழையவரலாற்றை தெரிந்துகொள்கின்றோம். இம்மாதிரி நாம் படைக்கின்ற படைப்புகள் மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களின் வாழ்வை அதன் வரலாற்றுத்தடத்தை உணர வைக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் நான் எழுதுகிறேன்.

கேள்வி: மலேசிய இலக்கியம் இன்னும் உலக தமிழர்களால் கவனிக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

அ.ரெங்கசாமி: மலேசிய இலக்கிய உலகம் என்பது ஒரு குடைக்குள் இல்லாமல்  சிதறிக் கிடக்கிறது. பல குழுக்களாகப்பிரிந்து கிடக்கிறது. நல்ல படைப்பை அதற்குண்டான இடத்தில் வைத்து சொல்லக்கூடிய மனது இந்நாட்டு இலக்கியவாதிகளுக்கேகூட இல்லை. அப்படியிருக்க உலகத் தமிழ் வாசகர்களை நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும்?

கேள்வி: படைப்பாளியின் பணி படைப்பதுமட்டும்தானா? களப்பணியிலும் ஈடுபடும் உங்கள் கருத்து?

அ.ரெங்கசாமி: படைப்பாளிக்குப்படைப்பது மட்டும் ஒரு வேலை இல்லை. ஒரு வி‌ஷயத்தை எழுதிவிட்டு, அதுகுறித்த விவரங்களைத் தேடித்தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்வது சரியல்ல. எழுத்தொன்று வாழ்வொன்றுமாக இருக்கவும் கூடாது. இன்னும் எழுத்தில் உள்ளது புரியாத பாமர மக்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். அவர்களிடம் சேவையின் மூலமே நம் கருத்துகளைக் கொண்டு சேர்க்க முடியும். சமூகத்தைச் சென்று சேர எழுத்து ஒரு வாகனம் மட்டுமே. வேறு பல ஏராளமான பாதைகளும் பயண வழிகளும் உண்டு.

கேள்வி: நாவல்கள், சிறுகதைகள், தவிர்த்து வேறென்ன நூல்கள் எழுதியிருக்கிறீர்கள்? உங்கள் செயல்பாடுகள் என்ன?

அ.ரெங்கசாமி: ‘விடிந்தது ஈழம்’ புத்தகத்தைச் சொல்லலாம். ஆண்டன்பாலசிங்கம்எழுதிய ‘போரும் சமாதானமும்’ நூலை வாசித்தேன். அந்நாவலை வாசித்தபின் எனக்கு ஈழப்போர் தொடர்பான பல உண்மைகள் புரிந்தது. ஆனால் அந்த மாதிரி பெரிய நூலை எத்தனை பேர் வாங்கி படிப்பார்கள்? நானே கூட நண்பரிடத்தில் இரவல் வாங்கித்தான் வாசித்தேன். அதனை அனைவரும் படிக்க வேண்டும் என, அந்த நூலில் இருந்ததை 64 பக்கங்களாகச்சுருக்கி எழுதி எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்தோம். இன்னும் எழுத வேண்டியது நிறைய உண்டு. வாழ்வும் இயற்கையும் அனுமதிக்கிறதா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நேர்காணல்/ புகைப்படங்கள் : ம.நவீன்

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...