நழுவிக் கொண்டே இருக்கும் ந.மகேஸ்வரியின் கதைகள்

maheswary01

ந.மகேஸ்வரி

மலேசிய இலக்கியம் உருப்பெற்று வளர்ந்த அதே தடத்தில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சியும் அமைந்துள்ளதை நாம் அறிய முடிகிறது. மேற்கண்ட இலக்கிய ஈடுபாடும் வளர்ச்சியும் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மேலும் வளர்ந்தது. 1960கள் மலேசிய நவீன இலக்கியத்தில் நல்ல வளர்ச்சி படிகளைப் பதிவு செய்துள்ளது. பொதுவாகவே இன்று நாட்டில் சிறந்த முன்னோடி இலக்கியவாதிகளாக அறியப்படுவோர் 60 அல்லது 70களில் இலக்கியத்திற்குள் வந்தவர்கள்தான்.

ந. மகேஸ்வரி, க.பாக்கியம் முத்து, பாவை, எஸ்.பி.பாமா ஆகிய நால்வரும் மலேசிய பெண் படைப்பாளிகளில் நன்கு அறியப்பட்டவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை தங்கள் படைப்புகளுக்காகப் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்ற இவர்களின் ஐந்து சிறுகதை தொகுப்புகளை (78 சிறுகதைகள்) மீள்வாசிப்புக்கு உட்படுத்தி அதன்வழி பெற்ற கண்டடைவுகளை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பொதுவாக, மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் எழுத்துத் துறையில் எதிர்நோக்கிய சிக்கல்களும் சவால்களும் மிக அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. அவை பெரும்பாலும் தொழில்நுட்பம் தொடர்புடையவை. கையெழுத்துப் பிரதிகளை பாதுகாப்பதும் திருத்துவதும், மாற்றங்கள் செய்வதும் எவ்வளவு உழைப்பைக்கோரும் பணிகள் என்பதை இன்றைய கணினி உலக எழுத்தாளனால் எளிதில் உணரமுடியாது. கணினியில் சில நொடிகளில் செய்துமுடிக்கும் பணிகளைக் கையெழுத்து வேலையில் சில மணி நேரங்கள் செலவிடவேண்டிய சுமை ஏற்படும்.

மேலும் கணினி தரும் ‘தேடல்’ வசதிகளையும், வாசிப்பு வசதிகளையும் அன்றைய எழுத்தாளர்கள் அனுபவித்திருக்க முடியாது. மலேசிய எழுத்தாளர்கள் அன்றைய சூழலில் தங்கள் கைக்குக் கிடைக்கும் நூல்களையே வாசிக்கக்கூடிய நிலையில் இருந்தார்கள். தமிழகத்தில் மணிக்கொடி, எழுத்து போன்ற சிற்றிதழ்கள் சிறுதைகளில் நடத்திய பரிசோதனைகளும் தீவிர இலக்கிய விவாதங்களும் சர்ச்சைகளும் இங்கு உடனுக்குடன் கிடைக்காமலே இருந்தன. பின்னர், பைரோஜி நாராயணன், சித.நாராயணன், கு.அழகிரிசாமி, முருகு சுப்ரமணியம், இரா.தண்டாயுதம் போன்ற தமிழக இலக்கியத் தொடர்பு உள்ளவர்களாலேயே ஓரளவு மலேசிய சிறுகதையை வளர்த்துச் செல்ல தடம் அமைக்க முடிந்தது. ஆகவே, மலேசிய எழுத்துச் சூழலில் உள்ள சிக்கல்களும் பின்னடைவுகளும் ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவானதுதான்.

இச்சூழலில் முன்னோடி நவீன பெண் படைப்பாளிகளின் எழுத்தின் உள்ளீடுகளையும் விவாதங்களையும் கதைஉலக சிக்கல்களையும் இன்றைய வாசகர்கள் அறிந்து கொள்வது அவசியம். எஸ்.பி.பாமாவின் சிறுகதைகளைத் தவிர இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள மற்ற சிறுகதைகள் எழுதப்பட்டு குறைந்தது இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. ந. மகேஸ்வரியின் ‘உடன் பிறப்பு’ தமிழ் மலரில் 1968ல் வெளிவந்த சிறுகதை. பாவையின் ‘ஒற்றையாய் ஆடும் நாற்காலி’ தமிழ் நேசன் பவுன் பரிசு பெற்ற சிறுகதை. அதாவது 1970-ஆம் ஆண்டின் தொடக்கமாக இருக்கலாம். ஆகவே, இன்று இச்சிறுகதைகளை வாசிக்கும் இளைய தலைமுறை வாசகன் இவற்றில் இருந்து பெற்றுக்கொள்ளத்தக்க கூறுகள் யாவை என்பன குறித்த அலசலும் தேவையாகிறது. ஆகவே மலேசியாவில் நன்கு அறியப்பட்ட நான்கு மூத்த நவீன பெண் படைப்பாளிகளின் படைப்புகளை மீள்வாசிப்பு செய்வதன் வழி பல புதிய புரிதல்களையும் திறப்புகளையும் நாம் பெற முடியும்.

ந. மகேஸ்வரி

ந.மகேஸ்வரியின் கதைகளில் மிகச்சுலபமாக நுழைந்துவிட முடிகிறது. சிக்கலான கதைக் கட்டமைப்போ சொல் பயன்பாடோ இருப்பதில்லை. கோட்பாட்டு அடிப்படைகளையோ கலைந்த உத்திமுறைகளையோ அவர் எழுத்துகள் எட்டவில்லை. நேரடியான கதைசொல்லல் முறையிலேயே அவரின் கதைகள் எழுதப்பட்டுள்ளன. நேர்கூற்று முறையிலும் படர்கை முறையிலும் கதைகள் உள்ளன. ஆயினும் அவை அவற்றுக்கான அதிர்வுகளை அதிகம் ஏற்படுத்தவில்லை.

எளிய கதைக்களங்களை ஆதாரமாகக்கொண்டே இவர் கதைகளை வளர்க்கிறார். சராசரிப் பெண்கள் இயல்பாகப் பேசும் அல்லது சிந்திக்கும் அதேபோக்கில் இவரின் கதைகள் நகர்கின்றன. நாளிதழ்களையே தங்கள் இலக்கிய முகமாக நம்பும் வாசகப் பரப்புக்கென்று எழுதப்பட்ட கதைகள் இவை என்பது மிக தெளிவாக தெரிகிறது. தான் பார்த்த அல்லது கேட்ட ஒரு தகவலை ஒரு கதையாக நேரடியாக வாசகனுக்குச் சொல்லி ஒரு படிப்பினையையும் எச்சரிக்கையையும் செய்வது மட்டுமே இக்கதைகளின் அடிப்படை நோக்கமாக இருக்கின்றது.
இவரது கதைக் கரு பெரும்பாலும் சமூக அமைப்பில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் விழுமியங்களை மறுநிர்மானம் செய்வதாகவும் அவ்வப்போதைய நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாகப் பரபரப்பு அடையும் விவகாரங்களைச் சார்ந்ததாகவும் இருக்கிறது. அதற்கேற்ப பல கதைகளில் நாளிதழ்களும் நாளிதழ் செய்திகளும் கதையின் ஒரு பகுதியாக வருகின்றன. ‘காணாமல் போன கணவன்’, ‘கண்ணே இது கலியுகம்’, ‘பிள்ளைக் கனியமுதே’ போன்ற கதைகளை உதாரணமாக்கலாம்.

குடும்பத்தில் பெண் என்பவள், மனைவியாக, தாயாக, சந்திக்கும் சிக்கல்களும் ஆண்களின் (கணவன்) சுயநலம், பொறுப்பற்ற குணம் போன்றவையும் முக்கியமாகப் பேசப்படுகின்றன. ‘வீட்டிலே சும்மாதான்’, ‘ஓடிப்ஒபோனவன்’ என்று மேலும் பல கதைகள் உள்ளன. முதியவர்கள் பராமரிப்புக் குறித்த கதைகளும் உள்ளன.

இவரது ‘தாய்மைக்கு ஒரு தவம்’ என்னும் தொகுப்பின் முதல் கதை “குழத்தையெனும் தெய்வீகம்” இறுதி கதை ‘தாய்மைக்கு ஒரு தவம்’. ‘மகேஸ்வரியின் சிறுகதைகள்’ தொகுப்பின் முதல் கதை ‘அம்மா’. இறுதி கதை ‘அப்பா’ என்றும் தலைப்பிடப்பட்டிருப்பதில் இருந்து இவரின் படைப்பிலக்கிய உலகம் மையமிடும் இடத்தை சுலபமாக கூறிவிடமுடிகிறது. இவர் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தில் நேரடியாக சந்தித்த மாணவர்களின் புற அவலங்களையும் குடும்ப உதாசினங்களையும் சில கதைகளில் காணமுடிகிறது. ஆனாலும் அவையும் மாணவ அகச்சிக்கல்களைச் சித்தரிக்கும் முயற்சியை எடுக்காமல் படைப்பாளரின் கருணையையும் சமுதாய படிப்பினைகளையும் முன்வைக்கின்றன.

மேலும் இவர் ஒரு நவீன கதை சொல்லி அல்ல என்பதை மிக உறுதியாக நாம் சொல்லவேண்டியுள்ளது. நவீன கதையாடலுக்கான மொழியோ உத்திகளோ கட்டுடைப்புகளோ இவரிடம் இல்லை. மாறாக தீவிர பண்பாட்டு ஒழுக்கவாதத்தை முன்வைத்தே இவரது கதைகள் எழுதப்பட்டுள்ளன. சமய பண்டிகைகளைக் கொண்டாட வேண்டிய அவசியத்தையும், பக்திமார்கத்தின் புனித நிலையையும் இவரது கதைகள் வழியுறுத்துகின்றன. ‘குழந்தையெனும் தெய்வீகம்’, ‘பிரார்த்தனைகள்’, ‘திருவருள்’, ‘அம்மா’ போன்ற கதைகள் பக்திமார்க்கம் சார்ந்தவை. இவர் முன்வைக்கும் பெண்ணியமும் ‘சீதையை’ முன்மாதிரியாக கொண்ட பெண்ணின் புனித வடிவமாகவே அமைந்துள்ளது. இதற்கு ‘மனைத்தக்க மாண்புடையள் ஆகி’ போன்ற கதைகளை உதாரணமாக காட்டலாம்.  மலேசிய சூழலில் ந.மகேஸ்வரியின் சிந்தனைப் போக்கும் எழுத்து முறையும் மலாய் மொழியில் எழுதப்படும் இஸ்லாமிய சிந்தனைக் கதைகளுடன் ஒப்பிடத்தக்கவை.

மேலும் நாகரீகம் என்பதை மிகவும் ஆபத்தான ஒன்றாகவே இவர் பார்க்கிறார். நாகரீகம் என்பது குறிப்பாக பெண்களின் ஒழுக்க வாழ்க்கையைச் சிதைக்கும் என்பதோடு குடும்ப வாழ்வுக்கும் பல பின்னடைவுகளைக் கொண்டுவரும் என்பது இவரது கருத்தாகப் பல கதைகளில் வெளிப்படுகிறது. ‘விரல் அசைகிறது விபரீதம் விளைகிறது’, ‘உனக்காக ஒரு நெஞ்சம்’, ‘அந்தரங்கம் அவளோடு’, ‘நகருக்குள் நரகம்’ போன்ற கதைகளை எடுத்துக்காட்டாக சொல்லாம், முற்போக்கு கதைகளும் சமூக எழுச்சி மேடைப்பேச்சுகளும் உச்சத்தில் இருந்த 60-ஆம் ஆண்டுகளில் எழுதவந்த படைப்பாளியின் படைப்பில் முற்போக்கு சிந்தனையின் சாயல் முற்றிலும் இல்லாதது வியப்புதான்.

ஒரு படைப்பாளி சமூகத்தின் பல அடுக்கு மனிதர்களையும் தங்கள் கதைகளில் காட்டும் போது படைப்பாளி எந்தத் தரப்பில் இருந்து கதை சொல்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. அந்த வகையில் ந.மகேஸ்வரி எப்போதும் தன்னை மேலே நிறுத்திக் கொண்டு சமூகத்தையும் அதன் அவலத்தையும் குனிந்து பார்க்கும் நிலையில் இருக்கிறார். மாணவர்கள் முதல் குடிகாரர்கள் வரை அனைவரையும் தனது மேல் நிலை மனோபாவத்தோடே அணுகுகிறார். தீமை அல்லது அசிங்கம் என்று கருதுபவனவற்றை, “மனித மிருகங்கள்”, “பண்பற்ற நாளந்தர மனிதன்” “சீ, யாருக்குமே வெட்கமே கிடையாதோ” போன்ற வசைகளை உதிர்த்து தன் நிலைபாட்டை வாசகனுக்கு தெளிவாகப் புரியவைத்துவிடுகிறார். நவீன படைப்பாளிக்கு இருக்க வேண்டிய விளிம்புநிலை பார்வை இவரிடம் இல்லை. இவர் சமூகத்தின் மேட்டுக்குடி மனோபாவத்தோடுதான் கீழ் அடுக்கு மக்களைப் பார்க்கிறார்.

வாசிப்புக்கு மிக எளிய ந.மகேஸ்வரியின் கதைகள் மிகச்சுலபமாக வாசகனை உள்ளிழுத்துக் கொள்வது போலவே மிகச் சுலபமாக வெளியேற்றி விடுகின்றன. பெரும்பாலுமான கதைகளின் கருவும் அவை சொல்லப்பட்ட முறையும் ஒரு கட்டுரைக்கு உரிய தன்மையுள்ளவை என்பதால் வாசிக்க வாசிக்க கதை மனதில் இருந்து நழுவிக் கொண்டே இருக்கிறது. ஒரு கதையின் எல்லா கோணங்களும் விளாவாரியாக வாசகனுக்கு விளக்கப்படுகிறது. சில கதைகளின் முடிவுகளில் மட்டும் திருப்பம் பயன்படுத்தப்படுகிறது.  ‘காணமல் போன கணவன்’ கதையில் வீட்டை விட்டு சென்று ஒரு வருடம் ஆகிவிட்ட கணவன் தைப்பூசத்தன்று வீட்டுக்கு வருகிறான். மனைவியிடமும் பிள்ளைகளிடமும் பாசமாக இருக்கிறான். பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தைபூசத்திற்குச் செல்கிறான். மனைவியும் கணவன் திரும்பி வந்த மகிழ்ச்சியில் இருக்கிறாள். ஆனால் முடிவில் பிள்ளைகள் மட்டும் கையில் நொறுவையுடன் வீட்டுக்கு வருகின்றனர். விசாரித்ததில் அந்த ஆண் தன் பிள்ளைகளைப் பயன்படுத்தி பிச்சை எடுக்கவே திரும்பிவந்த உண்மை தெரிகிறது. இந்த திடீர் திருப்பம் அந்த ஆணின் கயமையை வெளிப்படுத்தவும் கதையை வழுவாக்கவும் உதவுகிறது. ந.மகேஸ்வரியின் வெகு சில கதைகள் மனதில் சின்னதாகச் சில நெருடல்களை ஏற்படுத்தி விட்டுச் செல்கின்றன.

அவ்வாரான கதைகளில் ஒன்று ‘ஆற்றங்கரையினிலே’. இக்கதை நாட்டுப்பற்றை அடிப்படையாக கொண்ட காதல் கதை என்றாலும் இதன் எழுத்து முறையில் சற்றே சுவையுண்டு. அதே நேரம் அழகிய காட்சிபடுத்தலும் கவர்கிறது. பி.ரம்லியின் மலாய் திரைப்பட காதல் காட்சிகள் போல் இருந்தாலும், 60-ஆம் ஆண்டு கம்பத்து மலாய் கதாப்பாத்திரங்களையும் அவர்களின் பொருளாதார வாழ்க்கையையும் ஓரளவு தொட்டுக் காட்டியிருப்பதால் இக்கதை சற்று தனித்துவம் பெறுகிறது. ஆனால் இக்கதை எழுதப்பட்டிருப்பது 1995-ஆம் ஆண்டில்.  ராணுவப் பணிக்குச் செல்லத் துணியும் இளைஞனை மாவீரனாக போற்றும் மனநிலையைக் கம்யூனிஸ்டு பயங்கரவாதம் அதிகரித்திருந்த வரலாற்றோடு சேர்த்து புரிந்து கொள்ளும் போது இக்கதை சிறப்பிடம் பெறும். ஆனால் இக்கதையில் எழுத்தாளர் கம்யூனிஸ்டு பயங்கரவாதம் பற்றிய தகவலை சேர்க்காமல் இருப்பது பெறும் குறையாகும்.

அதே போல் ‘சின்னஞ்சிறு குடிசையிலே’ என்னும் கதையில் எந்த வித ஆடம்பரமும் பிரச்சாரமும் இன்றி அன்பை மட்டும் அடிப்படையாக கொண்ட வாழ்வொன்றைச் சொல்கிறது, 1978-ல் எழுதப்பட்ட இந்த கதை மனதில் சிறியதொரு உரையாடலை நிகழ்த்திவிட்டுச் செல்கிறது. ஓ. ஹென்றியின் ‘கிருஸ்மஸ் பரிசு’ சிறுகதையின் சாயலில் எழுதப்பட்டுள்ள இக்கதை எழுதப்பட்ட காலத்தைக் கடந்து இன்றும் வாசிப்புக்குத் தக்கதாகவே இருக்கிறது.

கார் ஓட்டுனராக பணியாற்றும் ஒருவன் தனது வருமானத்தைச் சிக்கனமாக சேமிக்கும் அதே நேரம் வீட்டில் இருக்கும் தன் மனைவி ஆடம்பரமாக செலவு செய்வதாகத் தப்பாக நினைத்துக்கொள்கிறான். வீட்டில் ஒவ்வொரு வாரமும் இருக்கும் புது துணிகளைப் பார்த்து மனதுக்குள் சலித்துக்கொண்டாலும், வசதியான வீட்டில் இருந்து தன்னை விரும்பி மனைவியாக வந்தவள் என்பதால் ஏதும் பேசாமல் மெளனம் காக்கிறான். தீபாவளி நெருங்கும் நேரத்தில் அவன் மனைவி அதுவரை வீட்டில் இருந்த புதுத்துணிகள் அண்டை வீட்டார் கொடுத்து கைவேலைப்பாடுகள் போடச் சொன்னவை என்னும் ரகசியத்தையும் தீபாவளி செலவுக்குத் தையல் தொழிலில் செய்து தான் சேமித்திருக்கும் சொற்ப வருமானத்தையும் காட்டி அவனை இன்ப அதிர்ச்சிகுள்ளாக்குகிறாள். அவனும் தன் சேமிப்பில் இருக்கும் பணத்தை அவளிடம் தருகிறான். இருவருக்கும் மகிழ்ச்சி.  உடனே மறுநாள் நகருக்குச் சென்று வாங்கப்போகும் புதிய ஆடைகளைப் பற்றி அவர்கள் திட்டமிடுகின்றனர். மிகவும் நெருக்கமாக அவர்களின் இரவு கழிகிறது. இக்கதை ஒரு முழுமையான சிறுகதையாக வெற்றி பெற காரணமாவது, அதன் முடிவாக அமையும் இறுதி வாக்கியமே. ‘இத்தனையும் அந்தச் சின்னஞ்சிறு குடிசைக்குள்ளே’ என்ற வாக்கியம் வாசகனுக்கு அந்த தம்பதிகளின் ஆசைகளையும் அன்பையும் காட்டி அதற்கு முரணாக இருக்கும் அவர்களின் ஏழ்மையைச் சட்டென திருப்பிவிடுகிறது. அன்பு வாழ்க்கைக்கு ஏழ்மை தடையல்ல என்ற புரிதல் மிக மென்மையாக உணர்த்தப்படுகிறது.

புதுமைப்பித்தனின் பொன்னகரம் சிறுகதை மிகப்பெரிய அதிர்வை தந்ததற்கு முக்கிய பங்களிப்பது அக்கதையின் கடைசி வாக்கியமான “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே… இதுதானைய்யா பொன்னகரம்” என்ற வாக்கியம்தான். அந்த வாக்கியம் முழு கதையையும் வேறு திசையில் வாசகனை வாசிக்க வைத்துவிடுகிறது. அவ்வகையில் ந.மகேஸ்வரியின் ‘சின்னஞ்சிறு குடிசையிலே’ சிறுகதை சாதாராண சொற்களைக் கொண்டு வடிக்கப்பட்ட அழுத்தமான சிறுகதை.

ந. மகேஸ்வரி இரண்டு சிறுகதை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். 1970களின் கதைகள் தாய்மைக்கு ஒரு தவம் என்ற தொகுப்பாகவும், 80, 90களின் கதைகள் மகேஸ்வரியின் சிறுகதைகள் என்ற தொகுப்பாகவும் கொண்டுவந்துள்ளார். இதில், 1985 வெளியிடப்பட்ட ‘தாய்மைக்கு ஒரு தவம்’ தொகுப்பில் உள்ள கவனமும் நேர்த்தியும், கதைகளின் தரமும் 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட  தொகுப்பில் இல்லை. ‘மகேஸ்வரியின் சிறுகதை’ தொகுப்பு மிகவும் பலகீனமான கதைகளைக் கொண்டுள்ளது. 24 கதைகளில் பல கதைகள் தொகுப்புக்குத் தகுதியற்றவை.  1970களில் ந.மகேஸ்வரி சற்று விரிவான முயற்சியுடன் கதை எழுத முற்பட்டிருப்பதை அவரது பழைய தொகுப்பின் வழி உணரமுடிகிறது, ஆனால், 90களில் அவர் தன் கதைகளுக்கு நாளிதழ்களையே நம்பியிருக்கிறார். நாளிதழ்களில் இருந்து கிடைக்கும் தகவல்களையும் செய்திகளையும் கதையாக்கி நாளிதழ்களுக்கே அனுப்பி இலக்கிய நிறைவு பெற்றிருக்கிறார். ஆகவே அவரின் பெரும்பான்மை கதைகளும் நாளிதழ்கள் கட்டமைக்கும் வெகுஜன தரத்திலேயே இருக்கின்றன.

தொடரும்

மேற்கோள்

 

எம். எஸ். ஶ்ரீலஷ்மி. (மார்ச் 2015). பன்முக நோக்கில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் புதினங்கள் – ஓர் ஆய்வு. இணைப்பு: https://vallinam.com.my/version2/?p=1864.
பாலபாஸ்கரன். (டிசம்பர் 2010). முருகு சுப்ரமணியனும் தமிழ் முரசும் மலாயாச் சிறுகதை மன்னர்களும். இணைப்பு: http://balabaskaran24.blogspot.my/2010/12/blog-post_15.html
சை. பீர்முகம்மது. (1999). வேரும் வாழ்வும். கோலாலம்பூர்: முகில் எண்டர்பிரைசஸ்.
ம. திருமலை. (). கல்கி முத்திரைக் கதைகள்.
ம. நவீன் (தொகுப்பாசிரியர்). (2016). புனைவுநிலை உரைத்தல். சிலாங்கூர்: வல்லினம் பதிப்பகம்.
மா.  இராமையா. (1996). மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம். சேலம்: புரட்சிப் பண்ணை.
நா. மகேஸ்வரி. (ஜூன் 2007). மலேசியத் தமிழ் இலக்கியத் துறையில் பெண்கள். இணைப்பு: http://vallinam.com.my/issue1/essay3.html

1 comment for “நழுவிக் கொண்டே இருக்கும் ந.மகேஸ்வரியின் கதைகள்

  1. ஸ்ரீவிஜி
    November 7, 2017 at 5:44 pm

    என்னுடைய தோழி ஒருவளுக்கு ந.மகேஸ்வரியின் கதைகள் என்றால், பித்து. ஆஹா ஓஹோ என்பாள். விமர்சனம் அருமை. தொடருங்கள் பாண்டியன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...