Punniyavan 1 BWஆபீசிலிருந்து  தீம்பாருக்குள் நுழைந்து செம்மண் சாலையை அடைந்து, அரக்கப் பறக்க தார் சடக்குக்கு ஓடிவந்து சேர்வதற்குள்ளாகவே பத்து மணி பஸ் கண் பார்க்கக் கடந்து போய்க்கொண்டிருந்தது. எப்படியாவது நிறுத்திடவேண்டும் என்ற பதற்றத்தோடு கையசைத்து  ஓடி வந்தும்  பஸ் டிரைவர் சட்டை செய்யாமல் போய்விட்டிருந்தான். தன் கண்முன்னால் கடக்கும் பஸ்ஸை கரித்துக்கொட்டினான்  வேலைய்யா. தன்னை ஒரு புழுவென உணர்ந்த தருணங்களில் ஒன்று அது. இனி பன்னிரண்டு மணிக்குத்தான் அடுத்த பஸ். இதே பஸ்ஸில்தான் கூலிம் போய் அப்படியே மஹாங் போய் திரும்பவேண்டும். அவன் வந்த வேகத்தில் சாணத்தில் அமர்ந்திருந்த ஈக்கள் குபீரென பறந்து ‘ஙொய்’ என ஓசை எழுப்பி அடங்கின. பெரிய ஈக்கள். அவனை அதிகம் அருவருக்க வைக்கும் ஜந்து அவை. மலத்தில் அமர்ந்த காலோடு சோற்றிலும் வந்து அமரும். மினுமினுக்கும் பச்சை நிறம் குமட்டலை ஏற்படுத்தும். கொஞ்சம் தள்ளிப்போய் நின்றுகொண்டான்.

விடிகாலையில் வரக்காப்பி  ஊற்றிக் கொண்டதோடு சரி. பச்சைத் தண்ணீர் வாயில் படவில்லை. இப்போ ஏதும் வயிற்றுக்குப் போட்டால்தான் ஆயிற்று. அதெல்லாம் பெரிய விஷயமல்ல. வயிறு பசிக்குப் பழகிவிட்டது.  பஸ்ஸைப் பிடித்தாக வேண்டும். வெயில் காண்கூச ஏறிபோய்க்கிடந்தது. மர நிழலில் போய் நின்றால் பஸ் வரும்போது நிறுத்த முடியாது. ஈக்கள் கொடுத்த அருவருப்பில் வயிற்றில் ஒன்றும் இல்லாவிட்டாலும் வாந்தி வரும்போல இருந்தது.

***

“தீம்பாருக்குப் போவதற்கு முன் செக்ரோல் முடிக்க ஆபிசிலிருப்பேன் அப்போ வா, இப்போ வந்து ஓத்திரியம் குடுக்காத, மனேஜர் வர நேரமாச்சு,” என்று விரட்டி விட்டார் பெரிய கிராணி நேற்று.

இங்க வேலைக்கு ஆள் வேண்டுமென்று  கிராணி உத்ரவாதக் கடிதம் கொடுத்தால்தான், ரிஜீஸ்டரில் அங்கீகார முத்திரையிட்டுத் தருவார்கள். அதை வைத்துக்கொண்டுதான் இன்னொரு ஆறு மாசத்துக்கு வேலை செய்ய முடியும். அதனால் கிராணியிடம் கைகட்டி, வாய் பொத்தி, கூனிக் குறுகிக் எஸ்டேட்டில் வேலைக்கு ஆள் தேவை என்ற சிபாரிசு கடிதம் வாங்கியாக வேண்டும்

கிராணி, வேலைக்காட்டுக்குப் போய்விடும் முன்னர்,  ஆபிஸ் வாசலில் போய் கதியாய்க் கிடந்து, கிராணி பார்வையில் படுகிற மாதிரி நடந்து, எதையோ எடுப்பதுபோலவும், குனிந்து நிமிர்ந்து  இருப்பின் சமிக்ஞை  காட்டிய பின்னர்  அதோ இதோ என்று மணி ஒன்பதரையாகிவிட்டது.

கிராணி வேலய்யாவைக் கண்டுகொள்ளாமல் செக்ரோலேயே பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஐயா…” என்று போய் நின்றால் “ஏன் வேலய்யா, கணக்க முடிக்கிறன்னு கண்ணுக்குத் தெரியல… கொஞ்ச நேரம் நின்னா குடியா முழுகிபோடும்…” என்று கத்துவார். இது குடி முழுகுகிற சமாச்சாரமென அவருக்கும் தெரியும்.

ரிஜிஸ்டர் ஆபீசுக்கு தாமதமாகப் போனால் ‘ஏன் தாமதம், வேலை நேரம் முடிந்தது’ என்று கூறி சாப் குத்த மாட்டான். அதுக்காக லோ லோவென்று மறுநாளும் நாயைப்பால அலைய வேண்டும்.

“வேலய்யா வா… கிராணி கூப்பிட்டார்.” அப்போது ஆபிஸ் கடிகாரம் ஒன்பது முப்பத்தைந்தைக் காட்டியது.

“என்னா வேணும் வேலய்யா?” தெரியாத மாதிரி கேட்டார்.

“அய்யாதான் காலம்பற வரச்சொன்னீங்க. பெர்மிட்டுய்யா…”  ‘பெர்மிட்’ என்று சொல்லும்போது வார்த்தை நசுங்கிச் சிதைந்தே வெளிப்பட்டது.

“ஆயிரத்தெட்டு வேல… இப்போ வேலைக்கு ஆள் தேவப்படாதே… ஒனக்கு சூரா கொடுத்திட்டு நான் மானேஜர்கிட்ட ஓத்தாம்பட்டு வாங்க முடியாது வேலய்யா…”

“ஐயா…” என்று குனிந்து நெளிந்தான். குனிவதும் நெளிவதும் குழைவதும்  உடலுக்குப் புதிதல்ல. நாள்பட நாள்பட தன்னிச்சையாக நடக்கும் ஒன்றாகிக் கிடந்தது.

“ஒன்னோட பெரிய தொல்லையா போச்சு. சொன்னா வெளங்கிக்கிற ஜென்மமா இல்லியே நீ…”

“ஐயா புள்ள குட்டிங்க ஸ்கூலுக்கு போவணும், சாப்பிடணும், பாத்து செய்ங்கய்யா…” என்றான். மேலும் கைகட்டி அரை அடி குனிந்துகொண்டான். கைகள் மார்பில் இறுகி நீண்டு விரல் நுனிகள் அக்குளைத் தாண்டி புற முதுகைத் தொட்டுக்கொண்டிருந்தன. காலையில் குளித்தபோது தண்ணீர் புகுந்திருக்க வேண்டும். காதின் உள்ளே ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

“பாத்து செய்யுறதுக்கு பாக்கெட்லியா வச்சிருக்கேன்?”

கண்கள் சுவர்க் கடிகாரத்தைத் தொட்டுத் தொட்டுத் திரும்பியபடி இருந்தது. நகரும் வினாடி முள் ஒவ்வொரு முறையும் வேகம் கூட்டியிருந்தது. மணி ஒம்பது முப்பத்தஞ்சைத் தாண்டிக் கடந்து கொண்டிருந்தது. பஸ் முன்ன பின்ன வரும். பின்ன வந்தா தேவலாம் முன்ன வந்துட்டா…

“ஐயா…”

“குப்புச்சி வேல செய்றாளே…”

“ரெண்டு பேரு வேல செஞ்சே மாசக்கடசில கைமாத்து வாங்க வேண்டிருக்குய்யா… காப்பரட்டி கடையில் கடன் ஏறிக்கெடக்கு. கழுத்தச் சுத்திக் கடன்யா…”

“ஐயா நொய்யான்னா ஒன்னும் நடக்காது வேலய்யா…” குரலை உயர்த்தினார். அவர் வேலையாவின் முகத்தைப் பார்க்கவில்லை. செக்ரோலில் கண்கள் பதிந்தது போன்று இருந்தார்.

நேத்தே காரக்கோழி பெரட்டலும், கருப்பு பீர் பெரிய போத்தலும் வாங்கிக் கொடுத்திருக்கணும், இல்லன்னா எவளையாவது கூட்டிக் கொடுத்திருக்கணும். அதுக்குன்னு தொறந்து போட்டா திரியிறாளுங்க… கையில காசு இல்ல… பிலாஞ்சா போடுறதுக்கு நாலு நாளு இருக்கு. இவனுங்களுக்கு வாக்கரிசி போட்டாத்தான் ஏதும் நடக்கும்னு ஆயிடுச்சு… என்ற எண்ணத்தைச் சுருக்கி, “ஐயாவுக்கு ஏதும் செய்யணும், கண்டிப்பா ஒங்க நல்ல மனசுக்கு செய்யணும். சாப் குத்திட்டா கண்டிசனா செய்றன்யா…” என்றான். அப்போது தலையை வினோதமாக உதறி காதுகளில் புகுந்துள்ள ஈரத்தை அகற்ற முயன்றதை கிராணி குழப்பத்துடன் பார்த்தார்.

டிராயரைத் திறந்து, பழுப்பு நிறத்தில் ஒரு பாரத்தை  உருவி,   “பாஸ்போர்ட்ட எடு!”என்றார்.

வேலய்யா சிவப்பு அடையாளக் கார்டை எடுத்து பவ்வியமாக மேசையில் வைத்தான்.

“இந்தச் சனியன நீலமா மாத்தியிருந்தா, இங்க நெரந்தராமா வேல செய்லாமில்ல?”

“அவ்ளோ சுலுவா நீலம் கெடைக்க மாட்டேங்குதே ஐயா.”

“பேச்சுல காட்ற வீரத்த செயல்ல காட்டியிருந்தா மத்தவங்கமாரி ஒனக்கும் கெடச்சிருக்கலாம் இல்லியா?”

வேலய்யா ஒன்றும் பேசவில்லை. பெர்மிட் விஷயம் வாயை அடைத்தது. மேலும் காதுகளில் புகுந்திருந்த ஈரத்தின் சத்தம் இம்சை செய்தது.

 பாரத்தைப் பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, முத்திரையிட்டு, உரையில் போட்டுக் கொடுத்தார். உரையை வாங்கும்போது கை லேசாக நடுங்கிற்று. வெள்ளை வெளேரென்ற எஸ்டேட் முத்திரையிட்ட உரை.  தன் கையழுக்குப் பட்டு விடுமோ என்று கையை வியர்வை ஈரமில்லாமல் சட்டையில் தேய்த்துக் கொண்டான். பவ்யமாக வாங்கினான்.

“நல்லா கேட்டுக்கோ வேலையா, இதான் கடைசி தடவ. இனிமே ஐயான்னாலும் முடியாது நொய்யான்னாலும் முடியாது,”என்று எச்சரித்தார். ‘கடைசி’ என்ற சொல் விஷமுள்ளாய்த் தாக்கி அதிர வைத்தது.

ரப்பர் காட்டின் சின்னச் சின்ன முதலைகளாய் முட்டிக்கிடந்த மரவேர்களில் தப்பி,  கோடைகாலத்தில் காய்ந்து உதிர்ந்த இலைகள் உடைந்து சரசரக்க நடையை எட்டிப்போட்டு, ஒற்றையடிப் பாதையைக் கடந்து தார் சடக்குக்கு ஓடியும் பஸ் ஏமாற்றிவிட்டு போய்விட்டது. மேல் மூச்சு வாங்கியது. முதுகுப்பக்கம் நனைந்து ஒட்டிக்கொண்டது.

***

தொடர்ந்து ஈக்களின் சத்தம் பொறுக்க முடியாமல் ரப்பர் மர நிழலுக்குள் வந்தான். வீட்டுக்குப் போய்விட்டுத் திரும்ப வரலாமா என்ற எண்ணம் தோன்றியபோதே கைவிட்டான். வீட்டுக்குப் போய் ஒன்றும் ஆகப்போவதில்லை. சாலை நெளியும் பாம்பைப் போல படுத்துக் கிடந்தது.  கூரை  முளைத்தது போன்று மரக்கிளைகள் உயர்ந்து இலைகள் கோர்த்துக்  கோர்த்து மூடிக்கிடந்தது தலை உச்சியில். பிரைவேட் சாப்பு வரலாம். கட்டணம் இரட்டிப்பாகும். கூலிம் ரெஜிஸ்டர் ஆபீசை பிடித்துவிட வேண்டும். அல்லது தெரிந்தவரோ தெரியாதவரோ, யாரும் மோட்டார் சைக்கிளில் வரலாம். கையசைத்து வேண்டி, தொத்திக்கொண்டு இலக்கை அடைந்திட வேண்டும் என்ற நப்பாசை சாலையைக் கண்மாறாமல் பார்க்கச் செய்தது. ஏதும் வருவாதாய்த் தெரியவில்லை. அவ்வப்போது வாகன இயந்திர ஒலியில் கடக்கும் ஒன்றிரண்டு வாகனங்களுக்குக் கைகாட்டி அலுத்தது. வெயிலை மறைக்கும் இலைகளின் நிழல், தேமல்களாக சாலையிலும் ரப்பர்க் காட்டிலும் அசைந்து கிடந்ததைத் தவிர சலனமென்று ஏதும் இல்லை. ரப்பர் காட்டில் ஓடி வந்ததில் காதில் புகுந்த நீர் வற்றியிருக்க வேண்டும். சத்தம் இல்லை.

குதிக்காலிட்டு குந்தி ரோக்கொ டௌன் தாளை விரித்து புகையிலையைச் சேர்த்தான். உள்ளங்Punniyavan 2 BW கைகள் இரண்டையும் இணைத்துச் சுருட்டினான். மூன்றாவது முறையில் அது சிறிய கோரைப் பாயைப் போல சுருண்டு கொண்டது.  சாம்பல் நிற மயிரிழையாய் புகையிலை முனையில் எட்டிப்பார்த்தது. உதட்டில் வைத்த புகையிலை வாடை மெல்ல சிலிர்க்க வைத்தது. பசியைத் தள்ளிப் போடும் வாடை. தீப்பெட்டியை உரசி சுருட்டிய ரோக்கு முனையிலிட்டான். கங்கில் கொழுந்து கனன்று சிவக்கும் ஒற்றை நெருப்புக் கண்ணாகத் தோற்றம் கொண்டது. நெஞ்சு நிறையும் வரை உள்ளிழுத்தான். கங்கில் அணல் சிமிட்டிச் சிமிட்டிச் கனன்றது. நெஞ்சுக்குள் முதல் புகைக் கொத்து நுழைந்து நிறைந்துபோது பெரிய கிராணியோடு மல்லுக்கட்டிய மனவலி மெல்லக் கரைந்து கொண்டிருந்தது. வெயில் ஏற ஏற குபு குபுவென்று மேலேறிச் சீறி வந்த பசி பெட்டிப்பாம்பாய் சுருண்டு அடங்கியது. வயிற்றின் ஒத்திகை அது. இன்னும் சற்று நேரத்தில் அதன் உக்கிரம் தொடங்கிவிடும். மேலுமொரு ரோக்குத் தாளைச் சுற்றி இழுக்கவேண்டும். அடங்கிவிடும்.

சட்டைப்பையில் சிவப்பு அடையாளக் கார்டும், சில ஒற்றை வெள்ளி நோட்டுகளும் தடவியபோது தட்டுப்பட்டன. டௌனில் திருக்கை மீன் வாங்க வேண்டும். எலும்பில்லாதது, ஆக மலிவானது. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும். டௌனில் மட்டுமே வெட்டும் போது ரத்தம் கசியும் புதிய கடல் மீன்கள் பார்க்கக் கிடைக்கும். அப்போது மீன் குழம்பு வாடை மூக்கினுள் தொட்டு விட்டுச் சென்றது.  நாவில் சுவையூறியது.

பெற்றோர் ஊரில் பிறந்தவர்கள். பஞ்சம் பிழைக்க கங்காணி திட்டத்தில் மலாயா வந்தவர்கள். இருவருக்குமே குடியுரிமை இல்லை. அதனால் இவனுக்கும் சிவப்பு ஐ.சி.  ‘ஜி’ பாரம் பூர்த்தி செய்து, அதனை அரசியல் தலைவர்களிடம்  கையொப்பம் வாங்க வாசலில் காத்திருந்து, கருப்புக் குதிரை மாதிரி  வளர்ந்த அவர் வீட்டு ஆல்செஷன் விடாமல் குரைக்க, நாய்க்கும் டத்தோவுக்குமாய் சேர்ந்து பயந்து, கையொப்பத்துக்காகக் கதியாய் காத்து நின்று, அல்பமான பார்வையைக் சகித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி, பதிவிலாகாவுக்குப் போய் பதிவு செய்து, மறு கடிதத்துக்குக் காத்திருந்து, மலாய் வாய்மொழிச் சோதனைக்குப் பலமுறை ஆஜராகி, என்னவெல்லாம் கேட்டுத் தொலைப்பானோ என்று தயங்கிச் சுருங்கி, அப்படியே அதில் தேரினால்தான் நீல ஐ.சி. அதாவது பிரஜா உரிமை கிடைக்கும். நூற்றில் ஒருத்தருக்கு மட்டுமே பலிதமாகும் வாய்ப்பு அப்போது.

பெரும்பாலும் மலாய் வாய்மொழிச் சோதனைதான் படுகுழி.

“நாமா அப்பா?” என்ற கேள்விக்கு பதில் சொல்லி விடலாம். நாமா – நாமம் என நினைவில் வைத்துக்கொண்டால் பிரச்னை இல்லை. அடுத்தடுத்த அம்புகள்தான் கூர்மையானவை. பதில் தெரியாமல் விழிக்கும்போது அடுத்த முறை வா என்று இரக்கமே இல்லாமல் அனுப்பி வைத்துவிடுவார்கள். நடையாய் நடக்க வேண்டும். மீண்டும் தொடங்கி ஒரு சுற்று வரவேண்டும். அதுவரை சிவப்பு அடையாளம்தான்.

நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகள் வேலய்யாவுக்கு மிகக் கீழ்த்தரமானவையாக இருந்தன. ஒவ்வொரு முறையும் தொண்டையில் ஏதோ அடைத்துக்கொண்டது போலவே அவமானம் தாங்காமல் திரும்பிச்செல்வான். இறுதியாய் சென்றபோது,

“சுடா மாக்கான் கா?”  என்று கேட்டார்கள்.

“பிலாக்காங் மாக்கான்.” வேலய்யாவைப் பொறுத்தவரை ‘பிலாக்காங்’ என்பது அப்புறம் என்றே மனதில் பொருள்  இருந்தது.

“கித்தா ஓராங் டெப்பான் மாக்கான், ஒராங் இன்டியா மாக்கான் பெலாக்காங்கா?” (நாங்க வாயால உண்போம், இந்தியர்கள் பின்வழியாக உண்பீர்களா?) வாய்மொழிச் சோதனை அதிகாரிகள் கொல்லென்று சிரிக்க இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தோட்டத்துக்கு வந்து படித்தப் பையன்களிடம் விசாரித்தபோதுதான் மலாயில் உள்ள பேச்சுவழக்குச் சொல்லாடலின் குழப்பம் புரிந்தது. ஒரு மாதிரியான ஊமைவலி தாக்கியது. அன்று முழுவதும் சோறு இறங்கவில்லை. அப்புறம் சாப்பிடுவேன் என்பதை மலாயில் சொல்லிச் சொல்லிப் பார்த்துக்கொண்டான்.

கேட்கப்படுபவனுக்கு விளங்கக்கூடாது என்பதற்காகவும், உடன் இருக்கும் அதிகாரிகள்  சிரிக்கவேண்டும் என்பதற்காகவும், ‘உன் மனைவியோடு ஒரு மாதத்தில் எத்தனை முறை படுப்பாய்..?’ போன்ற கேலி வினாக்களால் வரும் அவமானங்களை வேலய்யா பல காலமாகப் பொறுத்தே வந்திருந்தான்.

அடுத்த பஸ் வந்ததும் ஏறிக்கொண்டான். இரு மருங்கிலும் குடை பிடித்தது போல ரப்பர் மரங்கள். கூலிம் நகரை ஒட்டிய சேரா தோட்டம், கேலாம்பாரு, சுங்கை கோப், கரஙான், டப்லின் என ஒரு  தோட்டம் விடாமல் மாறி மாறி  வேலை செய்தாயிற்று. எல்லாமே சிவப்பு அடையாளக் கார்டின் மகிமை. வேலைக்காக வேரோடு பெயர்வது, பழகிய மனிதர்களைத் துறப்பது, வாழ்ந்த நிலத்தை விட்டு விலகுவது வலி மிகுந்தவை. ஒவ்வொரு தோட்டக் கிராணியின் கைகால்களை பிடிக்கும் அவலம்தான். அவை உடைந்து மறையும் நுரைக் குமிழி வாழ்க்கை.

ஆபிஸ் போய்ச் சேர்ந்தபோது, பகல் உணவு நேரத்துக்கு அடைக்கப்பட்டுக் கிடந்தது. இரண்டு மணிக்குத்தான் கவுண்டர் சன்னல் திறக்கும். ஆபிஸ் வாசலிலேயே குதிக்காலிட்டுக் கிடந்தான். பசி தோன்றி இம்சித்துவிட்டு பின்னர் சாவகாசமாகச் சுருண்டு படுத்துக்கொண்டது. ‘சாப் குத்தி கொடுப்பானா?’ என்ற சின்ன அச்சம் பசியை மறக்கடித்திருக்கலாம்.

முதல் ஆளாக கிராணி கொடுத்த கடிதத்தை நீட்டினான். “கூப்பிடுவேன், கொஞ்ச நேரம் காத்திரு,” என்று பதில் வந்தது. வேறு தேதியில் வரச்சொல்லி விடுவார்களோ என அழைப்புக்குக் கால் கடுக்க நின்ற பின்னர், இரண்டு மணி நேரம் கழித்துதான் அழைப்பு வந்தது. ‘இந்த பாரத்தைப் பூர்த்தி செய்து கொண்டு வா’ என்றார் அதிகாரி. பழைய பாரம் சாப் குத்த இடமற்று அம்மைபோட்டு ஆறிய வடுக்களாய் நிறைந்துவிட்டிருந்தது.

ஒரு நிழல் மரத்துக்குக் கீழ் பெஞ்சு போட்டு அமர்ந்து வாயின் ஓரத்தில் சிகெரெட்டைக் கவ்வி, புகையைத் தன்னிச்சையாய் வெளிக்கிளப்பியவாறு இருந்தார் பெட்டிசன் ரைட்டர். மரங்கொத்தியாய்  வெள்ளித்தாளைக் கொத்தும் அச்செழுத்து அலகுகள் குதித்துக் குதித்து ஆடின. மர நிழல் அவனுக்கு மட்டுமே குடை விரிக்க, காத்திருப்பவர்களை வெயில் காவு கொண்டிருந்தது. அவனுக்கு முன்னால் ஐந்து பேர் பாரத்தைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். இவன் முறை வந்ததும் ஒரு வெள்ளியை வாங்கிக்கொண்டு அடையாளக் கார்டையும் பழைய பாரத்தையும் பார்த்து டைப் அடித்தான். மீன் வாங்க காசு மிஞ்சுமா என வேலய்யாவுக்குக் குழப்பம் வரவே செய்தது. சிகரெட் முனையில் சாம்பல் குருவி கழிவாய்த் தொங்கி உடைந்து விழும் தருவாயில் இருக்க, அது தன் பாரத்தில் விழுந்து இன்னொன்றை வாங்க வைத்துவிடுமோ என்ற அச்சம் வேறு. சரியாக சாம்பல் விடுபடும் நேரம் ரைட்டர் கண்சாடையால் எதையோ காட்டினார். கீழே சாம்பல் நிறைந்த அலுமினியக் குவளை இருந்தது. எடுத்துக்கொடுத்தான். கீழே குனியும்போதுதான் தெரிந்தது. காதில் புகுந்த ஈரம் இன்னும் காய்ந்திருக்கவில்லை. சத்தம் துல்லியமாகக் கேட்டது. அடித்து முடித்துச் சரக்கென்று அதனை இழுத்து, கையொப்பமிட்டு கொண்டுபோய் கொடுக்கச் சொன்னான். கருப்புப் பேனா யாரிடம் கிடைக்கும் என்று கண் பாய அவரே நீட்டி கோடிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி உதவினார். தெரிந்த தமிழில்தான் கையொப்பமிட்டான். வடிவம் மாறிய எழுத்துகள் மண் புழுவாய் வளைந்து சுருண்டிருந்தன.

பாரத்தை ஒப்படைத்து, உடலைச் சுருக்கிக்கொண்டு கைக்கட்டிக்கொண்டான். பெர்மிட் கையில் கிடைத்தபோதுதான் காற்றின் சுவாசம் இனிமையாக இருந்தது வேலய்யாவுக்கு. மீண்டும் பஸ் பிடித்து தோட்டத்தில் இறங்கியபோது அன்றைய சமையலுக்கு ஒன்றும் வாங்காமல் செல்வது பெரிய வருத்தமாய் இல்லை. ஆனால் காலையில் பார்த்த சாணத்தில் இருந்து பறந்த ஈக்களின் அருவருப்பான ரீங்காரம்தான் தன் காதுகளுக்குள் கேட்கிறதோ என்ற சந்தேகம் மட்டும் அவனை சட்டென நிம்மதி இழக்க வைத்தது.

 

2 comments for “

  1. segara
    December 10, 2017 at 3:44 pm

    அருமையான பதிவு. பிரஜாவுரிமைக்காக என் தந்தையார் பட்ட துயரங்களை நேரில் அனுபவித்தவன் நான். எனினும், கோ.புண்ணியவானின் ‘செலாஞ்சார் அம்பாட்’ படைப்பில் உள்ள சில பகுதிகள் அப்படியே கையாளப்பட்டுள்ளன.

  2. MUNIANDY RAJ
    December 11, 2017 at 11:03 am

    கதையின் ஓட்டமும் கருவும் மீண்டும் தோட்டப்புறத்திற்கே அழைத்துச் சென்றது போல் இருக்கிறது. சிவப்பு அடையாள அட்டையினால் நம்மினத்தவர் பட்ட துன்பங்களை அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...